15 ஆகஸ்ட், 2009

பொக்கிஷம்!


தமிழ் சினிமாவை இவர்தான் தாங்கிப் பிடிக்கப் போகிறாராம். எவனுக்குமே படமெடுக்கத் தெரியாது. இவருக்கு மட்டும்தான் சர்வதேசத் தரத்தில் படம் எடுக்கத் தெரியுமாம். இவர் ஒருவர் தான் மேதாவி. மற்றவெனெல்லாம் வெத்து என்று கர்வமாகப் பேசித்திரியும் சேரனுக்கு அடுத்தடுத்து ஆப்பு அடித்துவிட்டார்கள் தமிழ் ரசிகர்கள்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மாயக்கண்ணாடி. இப்போது பொக்கிஷம். பாவம், தயாரிப்பாளர் ஜபக்கின் லுங்கிதான் ஒட்டுமொத்தமாக உருவப்பட்டிருக்கிறது. பெரிய இயக்குனர் நடித்து, இரண்டு ஆண்டுகளாக பிரேம் பை பிரேமாக செதுக்கப்பட்டிருக்கும் படம் முதல்நாளே தியேட்டர்களில் காத்தாடுகிறது. படம் ஆரம்பித்ததில் இருந்தே ரசிகர்கள் ஒரு காட்சியைக் கூட சகித்துக் கொள்ள முடியாமல் நெளிந்துக்கொண்டே இருக்கிறார்கள். இடைவேளையில் படத்தின் கோராமை தாங்காமல் ஓடியவர்களை பார்த்திருக்கிறோம். இடைவேளைக்கு முன்பே துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று பதறியடித்துக் கொண்டு ஓடுகிறார்கள்.

சேரன் தன் காதலி பத்மபிரியாவுக்கு கடிதம் எழுதுகிறார். பத்மபிரியா பதிலுக்கு கடிதம் எழுதுகிறார். அந்த பதில் கடிதத்துக்கு சேரன் இன்னொரு பதில் கடிதம் எழுதுகிறார். பதில் கடிதத்துக்கு மறுபடியும் பதில். ஒவ்வொரு கடிதக் கருமத்தையும் முழுமையாக சேரனும், பத்மபிரியாவும் படிக்கிறார்கள். இப்படியாக ஒரு இருபது, முப்பது கடிதம் முழுமையாக படிக்கப்படுகிறது. இதுதான் படம். ஐம்பது ரூபாய் கொடுத்து படம் பார்க்க தியேட்டருக்கு வருபவர்கள் எல்லாரும் கேணைப்பசங்கள் என்று படமெடுக்கும் போதே சேரன் முடிவெடுத்து விட்டார் போலிருக்கிறது.

இந்த கருமாந்திரப் படத்துக்கு எதற்கு கல்கத்தா, எதற்கு 70 காலக்கட்டம், எதற்கு கம்யூனிஸ்ட், எதற்கு முஸ்லிம், எதற்கு மலேசியா என்று புரியாமலேயே சீத்தலைச் சாத்தனார் மாதிரி தலையை பிய்த்துக் கொண்டு சாக வேண்டியிருக்கிறது. தயாரிப்பாளரின் பணத்தில் சேரன் மஞ்சக் குளிக்க மலேசியா என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.

இந்தப் படம் பார்க்கும் எந்தத் தயாரிப்பாளரும், 'சேரனை வைத்து இனி படமெடுக்க மாட்டேன்' என்று ஏ.வி.எம். பிள்ளையார் கோயிலில் சத்தியமாக சத்தியம் செய்வார்கள். 'ஆட்டோகிராப்' வெளிவந்தபோது உலகத்தரத்தில் ஒரு தமிழ்படம் என்று தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடிய தமிழ்ரசிகர்கள் ஒவ்வொருவரின் முகத்திலும் அடுத்தடுத்து காறி உமிழ்ந்துக் கொண்டு வருகிறார் சேரன். சேரனுக்கு இப்போது உடனடித் தேவை இன்னொரு ‘வெற்றிக் கொடி கட்டு', ஆட்டோகிராப் பார்ட்-3 அல்ல என்பதை யாராவது அவருக்கு எடுத்துச் சொன்னாலும் ஆணவமும், அகம்பாவமும் நிறைந்த அவரது மனசின் ஈகோவுக்கு முன்பாக எடுபடப் போவதில்லை.

இந்தப் படம் பார்க்கும் துர்பாக்கிய நிலை ஏற்படுவதை விட, பன்றிக்காய்ச்சல் வந்து செத்துப் போகலாம். படத்தை முழுவதுமாகப் பார்ப்பவர்களை ஆம்புலன்ஸில் அள்ளிப் போட்டுக் கொண்டுப் போகிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

13 ஆகஸ்ட், 2009

பாலச்சந்தர், பாலுமகேந்திரா, மகேந்திரன்!


எழுத்தாளர் ஞாநியின் ‘கோலம் குறுந்தகடு இயக்கம்’ பற்றி இந்தவார குமுதத்தில் வாசித்திருப்பீர்கள். படங்கள் எடுக்கப்பட்டு திரையரங்குகளில் திரையிடாமல் நேரடியாக மக்களுக்கு குறுந்தகடு வாயிலாக (துட்டு வாங்கிக் கொண்டுதான்) அனுப்பும் இயக்கம் இது. இந்த இயக்கத்தின் தொடக்கம் இன்று மாலை சரியாக 6.30 மணிக்கு (13-08-09) சென்னை பிலிம் சேம்பர் அரங்கில் நடைபெறுகிறது.

இயக்குனர்கள் கே.பாலச்சந்தர், பாலுமகேந்திரா மற்றும் மகேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு பேசுகிறார்கள். அனைவரும் நண்பர்களோடு வரலாம் என்று ஞாநி அறிவித்திருக்கிறார்.

ஞாநியின் விழாக்களில் கவர்ச்சிகர அம்சமாக அவருடைய டிசைனர் பைஜாமா உடையலங்காரத்தை முக்கியமாக குறிப்பிடலாம். எங்கேயாவது ரெடிமேடாக கிடைக்கிறதா? இல்லை அவருக்கென்று ஆர்டர் செய்து தைக்கிறாரா என்று நேரில் விசாரித்துத் தெரிந்துகொள்ளலாம்.

கோகுலாஷ்டமி கும்பிடாத புண்ணியவான்கள் வந்துசேரலாம். சென்னை பிலிம் சேம்பர் அரங்கு, அண்ணா மேம்பாலத்துக்கு கீழே இருக்கிறது.

12 ஆகஸ்ட், 2009

சும்மா டைம்பாஸ்!

பன்றிக் காய்ச்சல் - ஊடகங்கள்!

பாரதிக்கு வயது 20. கடந்த மார்ச் மாதம் தான் திருமணம் நடந்தது. கணவர் மாடசாமி. மடிப்பாக்கத்தில் மளிகைக்கடை வைத்திருக்கிறார். ஆடிமாசத்துக்காக தாய்வீட்டுக்கு வந்த பாரதிக்கு திடீர் காய்ச்சல். உள்ளூர் மருத்துவர்களிடம் சிகிச்சைப் பெற்றும் காய்ச்சல் சரியாகவில்லை. சீரியஸான நிலையில் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பன்றிக்காய்ச்சலுக்கான சோதனை அவருக்கு செய்யப்பட்டது. சோதனை முடிவுகளுக்கு முன்பே பாரதி பரிதாபமாக மரித்துப் போனார்.

மடிப்பாக்கம் பகுதியில் தீயென பரவியது பாரதியின் மரணச்செய்தி. ஏற்கனவே கடந்த சில நாட்களாக செய்தித்தாள்களிலும், வார இதழ்களிலும், தொலைக்காட்சி சேனல்களிலும் பார்த்துப் பதறிய பன்றிக்காய்ச்சல் தங்கள் ஊருக்கும் வந்துவிட்டதோ என்று அஞ்சி நடுங்கினார்கள். இடையில் வேளச்சேரியில் ஒரு குழந்தை பன்றிக்காய்ச்சலுக்கு பலியானது நாளிதழ்களின் தலைப்புச் செய்தியானது.

தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்தினார்கள். மெடிக்கல் ஷாப்களில் விற்கப்படும் ‘மாஸ்க்’ வாங்கி அணிய ஆரம்பித்தார்கள். இன்று மடிப்பாக்கம், வேளச்சேரி சுற்றுவட்டாரங்களில் எந்த மெடிக்கல் ஷாப்பிலும் ‘மாஸ்க்’ ஸ்டாக் இல்லை. தென்சென்னையில் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. ”எதுக்கும் உஷாரா இருந்தோப்பமே?” என்று கிங் இன்ஸ்ட்டிட்யூடில் வரிசையில் நின்று பன்றிக்காய்ச்சலுக்கான பரிசோதனையை செய்துக் கொள்கிறார்கள். மொத்தமாக பரிசோதனைக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வருவதால் பரிசோதகர்களே திணறிப் போயிருக்கிறார்கள்.

பாரதிக்கு எடுக்கப்பட்ட சோதனை முடிவுகள் இப்போது வெளிவந்திருக்கிறது. அவருக்கு பன்றிக்காய்ச்சல் இல்லையாம்.

* - * - * - * - * - * - * - * - *

பன்றிக்காய்ச்சல் காரணமாக ஊரே பிணக்காடாகி விட்டது போன்ற பீதியை ஊடகங்கள் கிளப்பி வருகின்றன. நூற்றி பத்து கோடி பேர் வசிக்கும் நாட்டில் ஆயிரத்துக்கு ஏழு பேர் இறப்பதும், புதியதாக இருபத்து மூன்று பேர் பிறப்பதும் இயல்பாக நடந்து வரும் விஷயம். ஆயிரத்துக்கு ஏழு பேர் என்றால் நூற்றி பத்து கோடிக்கு எத்தனை பேர் இறக்கிறார்கள் என்று கணக்குப் போட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள். மரணங்களும், பிறப்புகளும் நம் நாட்டுக்கு புதியதல்ல.

சுனாமி பேரிடரின் போது நம் பத்திரிகைகள் நடந்துகொண்ட விதம் உலகுக்கே முன்னுதாரணம். ஆனால் இப்போது பன்றிக்காய்ச்சல் போன்ற அசாதாரண சூழலில் நடக்கும் ஒவ்வொரு சாதாரண மரணமும் கூட ஊடகங்களால் பெரிதுப்படுத்தப்பட்டு உயிரோடு இருப்பவர்களை வதைத்துக் கொண்டிருக்கிறது. இதற்கு உதாரணம்தான் மேலே கண்ட பாரதியின் மரணம். மரணம் கொடுமையானதுதான். ஒவ்வொரு மரணத்தின் போதும் அவர்களது குடும்பத்தார் கதறியழுவது சகஜமாக நடப்பதுதான். இதையெல்லாம் படம் பிடித்து டிவியில் போட்டு, பத்திரிகைகளில் படமாக்கி, பல கோடி பேரை அச்சமடையச் செய்வது நம் ஊடகங்களின் இன்றைய டிரெண்ட் ஆக இருக்கிறது. ’மும்பை 26/11’ சம்பவத்தின் போதே நம் ஊடகங்களின் யோக்கியதை சந்தி சிரித்தது.

போலியோ மருந்து போடப்படும் தினங்களிலும் இதுபோலவே பொறுப்பின்றி ஊடகங்கள் நடந்துகொள்வதால் பல்லாயிரம் குழந்தைகளுக்கு அந்தச் சொட்டுமருந்து போடப்படாமல் போவது கடந்த சில வருடங்களாக நடந்து வருகிறது. ஒவ்வொரு தினமும் தமிழகத்தில் குறைந்தது நான்கு அல்லது ஐந்து குழந்தைகளாவது மரித்துப் போகிறது. போலியோ சொட்டு மருந்து போடப்படும் தினத்திலும் இது தவிர்க்க இயலாதது. ஆனால் சொட்டு மருந்து போட்டுக் கொண்டதால் நான்கு குழந்தைகள் பலி என்று டிவியில் ஸ்க்ரோல் ஓட்டுவதாலும், மாலைச் செய்திகளில் குழந்தையின் பெற்றோர் கதறியழும் படத்தை அச்சிடுவதாலும் ஏற்படும் விளைவுகள் என்ன?

மக்களுக்கு செய்திகளை கொண்டு சேர்ப்பது அவசியமென்றாலும், வீணான வதந்திகளையும் இலவசமாக கொண்டு சேர்க்கும் பொறுப்பற்றத் தனத்தையும் நம் ஊடகங்கள் செய்துவருகிறது. இதுபோன்ற அசாதாரணச் சூழல்களில் பணியாற்றி, பாடுபட்டு வரும் அரசுக்கும், அரசின் ஊழியர்களுக்கும் இவை சிக்கலையும், சோர்வையும், சங்கடத்தையும் ஏற்படுத்தும்.

குறிப்பாக, பிராந்திய மொழி ஊடகங்களிடமே இந்த ’பரபரப்பு’ தொற்றுநோய் அதிகமாக இருப்பதாக தெரிகிறது. தேசிய அளவில் செயல்படும் ஆங்கில ஊடகங்கள் ஓரளவுக்கு பரவாயில்லை. நிபுணர்களின் கருத்துகள், தவிர்க்கும் முறைகள் என்று கொஞ்சம் ஆழமாக செய்திகளை வெளியிடுகிறார்கள். இன்று காலை ஒரு தமிழ் நாளிதழில் பன்றிக்காய்ச்சல் குறித்து ஒரு ஜோசியர் சொன்னதை கட்டம் கட்டி வெளியிடப்பட்டதைப் பார்த்து தலையில் அடித்துக் கொண்டேன். விரோதி வருடம் பிறந்தபோதே, அவர் ஒரு உபன்யாசத்தில் இதை கோட்டிட்டுக் காட்டியிருந்தாராம். பன்றிக்காய்ச்சல் வருவதைத் தடுக்க சிவ வழிபாடு செய்யவேண்டுமாம். சிவன் கோயிலில் கூட்டம் கூட்டமாக மக்கள் கூடப்போகிறார்கள். யாராவது பன்றிக்காய்ச்சல் வந்தவரும் அந்தக் கூட்டத்துக்கு வந்து வழிபட்டுச் சென்றால், முடிந்தது ஜோலி.

உலகளவில் ஊடகங்களிடம் இரண்டு பாணி உண்டு. ஒன்று பிபிசி பாணி. மற்றொன்று சி.என்.என் பாணி. நடந்ததை நடந்ததாக சொல்லுவது பிபிசி பாணி. நடந்த விஷயங்களை வைத்து என்னவெல்லாம் இனி நடக்கும் என்று யூகித்து செய்து வெளியிட்டு, சென்சேஷனல் ஆக்குவது சி.என்.என். பாணி. பன்றிக்காய்ச்சல் போன்ற நோய் பரவும் காலங்களிலும், பேரிடர் சமயங்களில் மட்டுமாவது பிபிசி பாணியை நம் ஊடகங்கள் பாவித்தால் தேவலை.

11 ஆகஸ்ட், 2009

டாப் 10 தமிழ் வலைப்பூக்கள்!


இப்பொழுது போட்டி முடிவில் வென்றால் கூட ‘நான் ஏன் வென்றேன்?’ என்று காரணம் விசாரிக்கிறார்கள். எனவே, தமிழ்ப்பதிவுகளில் டாப் 10 சொல்லுமுன், அதற்கான நியாயங்கற்பித்தல் பட்டியல்:

இன்றைய தேதியில் யாருடைய பதிவு அனேக இணைய வாசகர்களால் மொயக்கப்படுகிறது?

எவர் எழுதினால் தமிழ்மணம் துவங்கி ட்விட்டர் வரை இரத்த பீஜனாக ரணகளமாகும்?

உயிர்மை போன்ற இலக்கிய குறு பத்திரிகை அளவிலும் சரி; குமுதம் போன்ற பெரு சஞ்சிகை வாசகர் ரேஞ்சிலும் சரி… ரீச் உண்டா?

அலெக்ஸா தர வரிசை எண் கணிதம்.

கூகிள் பேஜ் ரேங்க் என்ன?

பத்ரியின் பக்கவாட்டு பட்டியலில் பெயர் பெற்றிருக்கிறாரா?

கூகிள் ரீடரில் எவ்வளவு பேர் சந்தாதாரர் ஆகியிருக்கிறார்? செய்தியோடையை ப்ளாக்லைன்ஸ் மூலம் வாசிக்கும் எண்ணிக்கை எவ்வளவு?

‘புதுசு… கண்ணா… புதுசு’ மட்டுமில்லாமல், பச்பச்சென்று பார்த்ததும் கொள்ளை கொள்வதில் மேகன் ஃபாக்சாக எவர் உள்ளார்?

போன புல்லட் பாய்ன்ட்டிற்கு நேர் எதிராக கே பாலச்சந்தர் போல் வயசான காலத்திலும் சின்னத்திரை, மேடை நாடகம் என்று பழைய காவேரியை பாடில்ட் வாட்டர் ஆக்குபவரா?
என்னுடைய இதயத்தில் இடம் உண்டா?

டாப் 10 வலைப்பதிவுகளை காண இங்கே அழுத்தி அமுக்கவும்!