பாரதிக்கு வயது 20. கடந்த மார்ச் மாதம் தான் திருமணம் நடந்தது. கணவர் மாடசாமி. மடிப்பாக்கத்தில் மளிகைக்கடை வைத்திருக்கிறார். ஆடிமாசத்துக்காக தாய்வீட்டுக்கு வந்த பாரதிக்கு திடீர் காய்ச்சல். உள்ளூர் மருத்துவர்களிடம் சிகிச்சைப் பெற்றும் காய்ச்சல் சரியாகவில்லை. சீரியஸான நிலையில் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பன்றிக்காய்ச்சலுக்கான சோதனை அவருக்கு செய்யப்பட்டது. சோதனை முடிவுகளுக்கு முன்பே பாரதி பரிதாபமாக மரித்துப் போனார்.
மடிப்பாக்கம் பகுதியில் தீயென பரவியது பாரதியின் மரணச்செய்தி. ஏற்கனவே கடந்த சில நாட்களாக செய்தித்தாள்களிலும், வார இதழ்களிலும், தொலைக்காட்சி சேனல்களிலும் பார்த்துப் பதறிய பன்றிக்காய்ச்சல் தங்கள் ஊருக்கும் வந்துவிட்டதோ என்று அஞ்சி நடுங்கினார்கள். இடையில் வேளச்சேரியில் ஒரு குழந்தை பன்றிக்காய்ச்சலுக்கு பலியானது நாளிதழ்களின் தலைப்புச் செய்தியானது.
தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்தினார்கள். மெடிக்கல் ஷாப்களில் விற்கப்படும் ‘மாஸ்க்’ வாங்கி அணிய ஆரம்பித்தார்கள். இன்று மடிப்பாக்கம், வேளச்சேரி சுற்றுவட்டாரங்களில் எந்த மெடிக்கல் ஷாப்பிலும் ‘மாஸ்க்’ ஸ்டாக் இல்லை. தென்சென்னையில் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. ”எதுக்கும் உஷாரா இருந்தோப்பமே?” என்று கிங் இன்ஸ்ட்டிட்யூடில் வரிசையில் நின்று பன்றிக்காய்ச்சலுக்கான பரிசோதனையை செய்துக் கொள்கிறார்கள். மொத்தமாக பரிசோதனைக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வருவதால் பரிசோதகர்களே திணறிப் போயிருக்கிறார்கள்.
பாரதிக்கு எடுக்கப்பட்ட சோதனை முடிவுகள் இப்போது வெளிவந்திருக்கிறது. அவருக்கு பன்றிக்காய்ச்சல் இல்லையாம்.
* - * - * - * - * - * - * - * - *

பன்றிக்காய்ச்சல் காரணமாக ஊரே பிணக்காடாகி விட்டது போன்ற பீதியை ஊடகங்கள் கிளப்பி வருகின்றன. நூற்றி பத்து கோடி பேர் வசிக்கும் நாட்டில் ஆயிரத்துக்கு ஏழு பேர் இறப்பதும், புதியதாக இருபத்து மூன்று பேர் பிறப்பதும் இயல்பாக நடந்து வரும் விஷயம். ஆயிரத்துக்கு ஏழு பேர் என்றால் நூற்றி பத்து கோடிக்கு எத்தனை பேர் இறக்கிறார்கள் என்று கணக்குப் போட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள். மரணங்களும், பிறப்புகளும் நம் நாட்டுக்கு புதியதல்ல.
சுனாமி பேரிடரின் போது நம் பத்திரிகைகள் நடந்துகொண்ட விதம் உலகுக்கே முன்னுதாரணம். ஆனால் இப்போது பன்றிக்காய்ச்சல் போன்ற அசாதாரண சூழலில் நடக்கும் ஒவ்வொரு சாதாரண மரணமும் கூட ஊடகங்களால் பெரிதுப்படுத்தப்பட்டு உயிரோடு இருப்பவர்களை வதைத்துக் கொண்டிருக்கிறது. இதற்கு உதாரணம்தான் மேலே கண்ட பாரதியின் மரணம். மரணம் கொடுமையானதுதான். ஒவ்வொரு மரணத்தின் போதும் அவர்களது குடும்பத்தார் கதறியழுவது சகஜமாக நடப்பதுதான். இதையெல்லாம் படம் பிடித்து டிவியில் போட்டு, பத்திரிகைகளில் படமாக்கி, பல கோடி பேரை அச்சமடையச் செய்வது நம் ஊடகங்களின் இன்றைய டிரெண்ட் ஆக இருக்கிறது. ’மும்பை 26/11’ சம்பவத்தின் போதே நம் ஊடகங்களின் யோக்கியதை சந்தி சிரித்தது.
போலியோ மருந்து போடப்படும் தினங்களிலும் இதுபோலவே பொறுப்பின்றி ஊடகங்கள் நடந்துகொள்வதால் பல்லாயிரம் குழந்தைகளுக்கு அந்தச் சொட்டுமருந்து போடப்படாமல் போவது கடந்த சில வருடங்களாக நடந்து வருகிறது. ஒவ்வொரு தினமும் தமிழகத்தில் குறைந்தது நான்கு அல்லது ஐந்து குழந்தைகளாவது மரித்துப் போகிறது. போலியோ சொட்டு மருந்து போடப்படும் தினத்திலும் இது தவிர்க்க இயலாதது. ஆனால் சொட்டு மருந்து போட்டுக் கொண்டதால் நான்கு குழந்தைகள் பலி என்று டிவியில் ஸ்க்ரோல் ஓட்டுவதாலும், மாலைச் செய்திகளில் குழந்தையின் பெற்றோர் கதறியழும் படத்தை அச்சிடுவதாலும் ஏற்படும் விளைவுகள் என்ன?
மக்களுக்கு செய்திகளை கொண்டு சேர்ப்பது அவசியமென்றாலும், வீணான வதந்திகளையும் இலவசமாக கொண்டு சேர்க்கும் பொறுப்பற்றத் தனத்தையும் நம் ஊடகங்கள் செய்துவருகிறது. இதுபோன்ற அசாதாரணச் சூழல்களில் பணியாற்றி, பாடுபட்டு வரும் அரசுக்கும், அரசின் ஊழியர்களுக்கும் இவை சிக்கலையும், சோர்வையும், சங்கடத்தையும் ஏற்படுத்தும்.
குறிப்பாக, பிராந்திய மொழி ஊடகங்களிடமே இந்த ’பரபரப்பு’ தொற்றுநோய் அதிகமாக இருப்பதாக தெரிகிறது. தேசிய அளவில் செயல்படும் ஆங்கில ஊடகங்கள் ஓரளவுக்கு பரவாயில்லை. நிபுணர்களின் கருத்துகள், தவிர்க்கும் முறைகள் என்று கொஞ்சம் ஆழமாக செய்திகளை வெளியிடுகிறார்கள். இன்று காலை ஒரு தமிழ் நாளிதழில் பன்றிக்காய்ச்சல் குறித்து ஒரு ஜோசியர் சொன்னதை கட்டம் கட்டி வெளியிடப்பட்டதைப் பார்த்து தலையில் அடித்துக் கொண்டேன். விரோதி வருடம் பிறந்தபோதே, அவர் ஒரு உபன்யாசத்தில் இதை கோட்டிட்டுக் காட்டியிருந்தாராம். பன்றிக்காய்ச்சல் வருவதைத் தடுக்க சிவ வழிபாடு செய்யவேண்டுமாம். சிவன் கோயிலில் கூட்டம் கூட்டமாக மக்கள் கூடப்போகிறார்கள். யாராவது பன்றிக்காய்ச்சல் வந்தவரும் அந்தக் கூட்டத்துக்கு வந்து வழிபட்டுச் சென்றால், முடிந்தது ஜோலி.
உலகளவில் ஊடகங்களிடம் இரண்டு பாணி உண்டு. ஒன்று பிபிசி பாணி. மற்றொன்று சி.என்.என் பாணி. நடந்ததை நடந்ததாக சொல்லுவது பிபிசி பாணி. நடந்த விஷயங்களை வைத்து என்னவெல்லாம் இனி நடக்கும் என்று யூகித்து செய்து வெளியிட்டு, சென்சேஷனல் ஆக்குவது சி.என்.என். பாணி. பன்றிக்காய்ச்சல் போன்ற நோய் பரவும் காலங்களிலும், பேரிடர் சமயங்களில் மட்டுமாவது பிபிசி பாணியை நம் ஊடகங்கள் பாவித்தால் தேவலை.