5 அக்டோபர், 2009

3டி தில்லாலங்கடி!


3டி படமென்றாலே நமக்கெல்லாம் உடனடியாக ‘மைடியர் குட்டிச்சாத்தான்’ நினைவுக்கு வந்துவிடும். படம் பார்த்தவர்களின் முகத்துக்கு நேராக கோன் ஐஸ் நீட்டியதும், படம் பார்த்தவர்கள் தம்மை மறந்து கோன் ஐஸை வாங்க காற்றில் கைநீட்டி ஏமாந்ததும் இனிப்பான மலரும் நினைவுகள் அல்லவா?

3டி படங்களைப் பார்க்க சிறப்புக் கண்ணாடி தேவை. இதை தியேட்டர்களில் பார்வையாளர்களுக்கு வினியோகிப்பதும், திரும்பப் பெறுவதும் சிக்கலான மற்றும் நேரத்தை விழுங்கும் காரியமென்பதால் தியேட்டர் ஊழியர்களிடையே 3டி படங்களுக்கு பெரிய வரவேற்பு இல்லை. அதுவுமின்றி நம்மூரில் 3டி படங்களுக்கான சாத்தியமென்பதே மந்திர மாயாஜால, புராணப்படங்களுக்கு தான் என்பதாலும் தொடர்ந்து 3டி படங்களை பெரும் பொருட்செலவில் தயாரிக்க தயாரிப்பாளர்களும் தயாராக இல்லை. சில சிறப்பு கேமிராக்களை வைத்து 3 பரிமாணங்களில் படமாக்க வேண்டியிருந்த்தால் தயாரிப்பு செலவு, சாதாரணப் படங்களை விட இருமடங்கு அதிகமாகியது என்பதும் மற்றொரு காரணம்.

இருபத்தைந்து ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழில் 3டி மறுமலர்ச்சி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகப்பிரகாசமாக காணப்படுகிறது. இடைபட்ட காலக்கட்டத்தில் தொழில்நுட்பம் நாலு கால் பாய்ச்சலில் அல்ல, நாலாயிரம் கால் பாய்ச்சலில் முன்னேறியிருக்கிறது. அனிமேஷன் முறையில் உருவாக்கப்படும் 3டி ஹாலிவுட் படங்கள் உலகெங்கும் குழந்தைகளை மட்டுமன்றி பெரியவர்களையும் கட்டிப் போட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த 3டி படங்களை காண சிறப்புக் கண்ணாடியெல்லாம் தேவையில்லை. ஆனால் கோன் ஐஸ் உங்கள் முகத்துக்கு நேராக நீட்டப்படும் எஃபெக்ட் எல்லாம் கிடைக்காது என்றாலும், அதைவிட சிறப்பான அனுபவம் அரங்கில் கிடைக்கிறது.

திரையரங்குகளும் இந்த 3டி அனிமேஷன் படங்களை திரையிட தகுந்தவாறு தங்களது அரங்க உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வைத்திருக்கின்றன. சென்னை சத்யம் சினிமாஸ் திரையரங்க வளாகத்தில் 3டி அனிமேஷன் திரைப்படங்களை மட்டுமே திரையிட தனி அரங்கு இருக்கிறது. ஒலி, ஒளி துல்லியத்தோடு 3டி படங்களை ரசிக்கும் ரசிகர்கள் எப்போதுமே இந்த அரங்குக்கு ‘ஹவுஸ்ஃபுல்’ போர்டு மாட்ட வைக்கிறார்கள் என்று மகிழ்ச்சியோடு சொல்கிறார்கள் இந்த தியேட்டர் நிர்வாகத்தினர்.

ஃபைண்டிங் நிமோ, ரேட்டட்டைல், ஐஸ் ஏஜ், மான்ஸ்டர்ஸ், கார்ஸ், வால்-ஈ, தி இன்க்ரிடிபிள்ஸ், குங்பூ பாண்டா போன்று 3டி அனிமேஷனில் உருவாக்கப்பட்ட ஏராளமான படங்கள் யாரும் எதிர்பாராத பிரம்மாண்ட வெற்றிகளை கண்டது. மனிதர்களை படமாக்கி உருவாக்கும் வழக்கமான படங்களுக்கு ஆகும் செலவை விட பன்மடங்கு செலவினை 3டி படங்களுக்கு செய்யவேண்டியிருக்கிறது. செய்தாலும் லாபம் உத்தரவாதம் என்ற நிலையில் ஹாலிவுட் ஸ்டுடியோக்கள் அடுத்தடுத்து 3டி படங்களை மும்முரமாக உருவாக்கி வருகின்றன.

3டி அனிமேஷனில் ஒரு வசதி என்னவென்றால் விலங்குகளை பேசவைக்கலாம். ஹீரோவை அனாவசியமாக பறக்க வைக்கலாம். ஆயிரம் பேரை அடிக்க வைக்கலாம். யாருமே லாஜிக்கலாக ஏனென்று கேட்கமாட்டார்கள். எனவே திரைக்கதை ஆசிரியர் தன் கற்பனைக்குதிரையை இஷ்டத்துக்கு தட்டிவிட்டு வேலை வாங்கலாம். ஃபைண்டிங் நிமோ படத்தில் மீன் தான் ஹீரோ. குங்ஃபூ பாண்டா படத்தில் கரடி தான் ஹீரோ. இவையெல்லாம் மனிதர்களைப் போலவே பேசுகின்றன, பாடுகின்றன, ஆடுகின்றன, பஞ்ச் டயலாக் பேசுகின்றன. அவற்றுக்கும் செண்டிமெண்ட் உண்டு.

சமீபகாலமாக இப்படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டும் வெளியிடப்படுகிறது. ஆங்கிலத்தில் வந்தபோது பெருநகரங்களில் மட்டுமே ரசிக்கப்பட்டுக் கொண்டிருந்த இப்படங்கள் இப்போது தமிழ்நாடு முழுவதும் எல்லாத் தரப்பினராலும் நன்கு வரவேற்கப்படுகிறது. அழுகாச்சி, நம்பமுடியாத சாகசங்கள், அரசியல் பஞ்ச் டயலாக் என்று சில ஆண்டுகளாக வந்த தமிழ் சினிமாப்படங்களை பார்த்து நொந்துப் புண்ணாகிப்போன உள்ளங்களுக்கு ஆங்கில டப்பிங் படங்கள் புனுகு பூசுகின்றன. குறிப்பாக 3டி அனிமேஷன் படங்களை குழந்தைகள், குடும்பத்தோடு ரசிக்க இயலுகிறது.

மக்களின் இந்த எதிர்பார்ப்புகளை புரிந்துகொண்டவர்கள் இப்போது இந்தியாவிலும் 3டி அனிமேஷன் படங்களை உருவாக்கத் தயாராகிவிட்டார்கள். கால்ஷீட் பிரச்சினை, பாரின் லொகேஷன்கள் தொந்தரவு இல்லாமல் அனிமேஷன் ஸ்டுடியோக்களில் இலகுவாக படமாக்கமுடிகிறது. நினைத்த விஷயத்தை எந்தவித காம்ப்ரமைஸுக்கும் இடம் கொடுக்காமல் ஒரு இயக்குனரால் எடுக்க முடிகிறது என்றால், இன்றைய தேதியில் அது 3டி அனிமேஷன் படங்களுக்கே சாத்தியம்.

இந்தியாவின் முதல் 3டி படம் என்று விளம்பரப்படுத்தப்பட்டு சில மாதங்களுக்கு முன்பாக ‘இனிமே நாங்கதான்’ என்ற படம் தமிழில் வெளிவந்தது. மாயபிம்பம் என்ற நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கினார் வெங்கிபிரபு. இயக்குனர் ஷங்கர் படங்களுக்கெல்லாம் அனிமேஷன் செய்து தேசிய விருது பெற்றாரே? அதே வெங்கிதான். இளையராஜா இசையமைத்தார். வாலி பாடல்கள் எழுதியிருந்தார். முழுக்க முழுக்க இப்படம் சென்னையிலேயே உருவாக்கப்பட்டது. இப்படம் குழந்தைகளை கவர்ந்தாலும், எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. காரணம், கதை. அரதப்பழசான பஞ்சதந்திரப் பாணியிலான கதையாக அமைந்துவிட்டதால் பெரியவர்களின் ஆதரவை பெறமுடியவில்லை. இருப்பினும் 96 நிமிடத்திற்கு எடுக்கப்பட்ட இந்த முழுநீளப்படம், தமிழில் அடுத்தடுத்து 3டி படங்கள் வெளிவர இப்படம் முன்னோடியாக அமைந்துவிட்டது.

இப்போது இந்தியா முழுவதும் 3டி அனிமேஷன் படங்களை உருவாக்க பலரும் முயற்சித்து வருகிறார்கள். தமிழில் ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் ‘சுல்தான் தி வாரியர்’ என்ற திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். இதில் ரஜினியின் உருவத்தையே கம்ப்யூட்டரில் உருவாக்கி சுல்தானாக உலவ விட்டிருக்கிறார். சவுந்தர்யாவின் ஆக்கர் ஸ்டுடியோஸ் நிறுவனம், அயல்நாட்டு அனிமேஷன் பணியாளர்களை பணிக்கு அமர்த்தி இரவுப்பகலாக இத்திரைப்படத்தை உருவாக்கி வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ரஜினி ரசிகர்களிடம் மட்டுமன்றி பொதுவாக எல்லாத் தரப்பினரிடமும் இப்படத்துக்கான எதிர்ப்பார்ப்பு ஏகத்துக்கும் இருக்கிறது. பல கோடி செலவில் உருவாக்கப்படும் இப்படம் வெற்றி கண்டால், தமிழில் 3டி அனிமேஷன் படங்கள் வரிசையாக அணிவகுத்து வரும்.

ஏற்கனவே இந்திய மொழிகளில் நிறைய 3டி அனிமேஷன் படங்கள் உருவாக்கப்பட்டு வந்துகொண்டிருக்கின்றன. இவையெல்லாம் பெரும்பாலும் பாலகணேஷ், அனுமன், கடோத்கஜன் என்று புராண கதாபாத்திரங்களை நாயகர்களாக கொண்ட படங்கள். 3டி அனிமேஷனில் குழந்தைகளுக்கான படங்களை தான் உருவாக்க முடியும் என்று இந்தியாவில் கருதுகிறார்கள். குழந்தைகள் புராணங்களையும், கடவுளர்களையும் தான் ரசிப்பார்கள் என்ற மூடநம்பிக்கையும் இங்கே அதிகமாக இருக்கிறது. ‘சுல்தான் தி வாரியர்’ போன்று மசாலா நோக்கில் எடுக்கப்படும் அனிமேஷன் படங்கள் வெற்றி பெறுமானால், இந்த ட்ரெண்ட் மாறும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

4 அக்டோபர், 2009

காலும் கை கொடுக்கும்!


டெர்ரி ஃபாக்ஸுக்கு அப்போது 18 வயது. தனக்கு கேன்சர் என்பதை நம்பவே முடியாமல் இருந்தார். அவரது காலில் தீராத கடுமையான வலி இருந்து வந்தது. அதற்கு காரணம், அவருக்கு நடந்த கார் விபத்து என்று நம்பிக் கொண்டிருந்தார். மருத்துவர்களோ கேன்சர் என்றார்கள். முழங்காலுக்கு கீழே காலை எடுத்தே ஆகவேண்டும், இல்லாவிட்டால் உயிருக்கு உலை வைத்துவிடும் என்று எச்சரித்தார்கள். விளையாட்டுத் துறையில் எவ்வளவோ சாதிக்க வேண்டிய கனவுகள் அவருக்கு இருந்தது. தன் தாய்நாடான கனடாவுக்கு தடகளத்துறையில் பதக்கங்களை குவிக்கும் லட்சியம் இருந்தது. லட்சியம் வெறும் கனவாகவே முடிந்துவிடுமோ என்று டெர்ரி மனம் வெதும்பினார்.

விளையாட்டுக் காதலரான டெர்ரி சிறுவயதில் கால்பந்து, ரக்பி, பேஸ்பால் மற்றும் டைவிங் ஆகிய விளையாட்டுகளில் தீவிர ஆர்வம் செலுத்தினார். பள்ளிப் பருவத்தில் கூடைப்பந்து மீது தீராத வெறி அவருக்கு இருந்தது. அப்போது ஐந்தடி உயரம் மட்டுமே இருந்த டெர்ரி அசாத்தியப் பயிற்சி மூலமாக சிறப்பான வீரராக திகழ்ந்தார். டெர்ரியின் தந்தை ரோலி ஃபாக்ஸ் ஒருமுறை தன் மகனைப் பற்றி குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது. “டெர்ரியை விட சிறந்த வீரர்கள் பலர் இருந்திருக்கலாம். அவர்கள் டெர்ரியை விட சிறப்பாக அவனோடு விளையாடியிருக்கலாம். ஆனாலும் வெற்றிக்கனியை சுவைக்கும் வரை டெர்ரி சோர்வடையாமல் விளையாடிக் கொண்டேயிருப்பான். அவன் வெற்றியின் சிகரத்தைத் தொடும் வரை எதிராளியும் அவனோடு விளையாடித்தான் ஆகவேண்டும்”. டீனேஜ் வயதுகளில் டைவிங் விளையாட்டுகளில் டெர்ரி வெற்றி மீது வெற்றி கண்டார்.

நவம்பர் 12, 1976. எதிர்பாராத அந்த கார் விபத்து. அரை டன் எடையை ஏற்றிவைத்திருந்த டிரக் ஒன்றின் மீது அவர் பயணித்த கார் மோதியது. டிரைவர் எந்த சேதாரமுமின்றி வெளியே வர, டெர்ரிக்கு மட்டும் வலது முழங்காலில் நல்ல அடி. ஆயினும் விரைவில் குணம்பெற்று வழக்கமான விளையாட்டுகளை விளையாடி வந்தார். அடுத்த ஆண்டு மீண்டும் அடிப்பட்ட இடத்திலேயே வலி அதிகமாக, மருத்துவர்கள் பரிசோதித்து ‘கேன்சர்’ என்றார்கள். டெர்ரியின் லட்சியங்களில் இடி விழுந்தது. தொடையில் தொடங்கி, முழங்காலுக்கு கீழாக காலை முற்றிலுமாக வெட்டி எறிவதைத்தவிர வேறு வழியே இல்லை.

கேன்சருக்கு போதிய மருத்துவமில்லை என்பதை டெர்ரி அறிந்தார். கேன்சர் ஆராய்ச்சிக்கு ஏராளமான பணம் செலவிடப்பட வேண்டியதின் அவசியத்தை உணர்ந்தார். ஒவ்வொரு கனடியரிடமும் ஒரு டாலர் வசூலித்து, கேன்சர் ஆராய்ச்சிக்காக மிகப்பெரிய தொகையை திரட்ட முன்வந்தார். கனடா முழுவதும் தொடர்ச்சியான மாரத்தான் ஓட்டம் ஓடி பணத்தை திரட்ட முடிவெடுத்தார். இந்த ஓட்டத்துக்கு ‘நம்பிக்கை ஓட்டம்’ என்று பெயரும் வைத்தார். இந்த இடத்தில் இன்னொன்றையும் சொல்ல வேண்டியிருக்கிறது. டெர்ரிக்கு இதயப்பிரச்சினையும் இருந்து வந்தது. அவர் ஓட்டத்தை தொடங்குவதற்கு ஒரு வாரம் முன்பாக இதயநிபுணர் ஒருவர் டெர்ரியை சந்தித்து, “தயவுசெய்து இந்த விபரீதமுயற்சியை எடுக்க வேண்டாம். இவ்வளவு பெரிய ஓட்டத்தை ஓடுமளவுக்கு உங்கள் இதயம் இடம் கொடுக்காது” என்று வேண்டுகோள் விடுத்தார். டெர்ரி சம்மதிக்கவில்லை. தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்தார்.

ஒட்டுமொத்தமாக எட்டாயிரம் கிலோ மீட்டர்கள் ஓட வேண்டியிருந்தது. மாரத்தான் மரபுப்படி ஒரு நாளைக்கு நாற்பத்தி ஐந்து கிலோ மீட்டர் தூரம் ஓடுவதின் அடிப்படையில் 185 நாட்களில் நாட்டையே ஓடிக்கடக்க திட்டமிட்டார் டெர்ரி. அதற்கு முன்பாக நியூயார்க் நகரில் நடந்த மாரத்தான் ஓட்டம் ஒன்றில் செயற்கைக்காலோடு ஒருவர் ஓடியதை அறிந்தபின்னரே, இந்த சிந்தனை டெர்ரிக்கு வந்திருந்தது.

1980, ஏப்ரல் 12ஆம் நாள் அட்லாண்டிக் கடற்கரை ஓரத்தில் தொடங்கிய அவரது ஓட்டத்தின் இலக்கு நாட்டின் மறுகரையில் இருந்த பசிபிக் கடற்கரை. செயற்கைக்காலோடு மிக நீண்ட, அதே நேரம் தொடர்ச்சியாக ஆறுமாதங்களுக்கு ஒருவர் தன்னலமின்றி, கேன்சர் ஆராய்ச்சிக்கு பணம் திரட்ட ஓடுகிறார் என்பதை கேள்விப்பட்ட கனடிய மக்கள் அவர் ஓடிய நகரங்களில் எல்லாம் பிரம்மாண்ட வரவேற்பு அளித்தார்கள். ஒவ்வொரு கனடியரும் தம் பங்காக ஒரு டாலரை கையளித்தார்கள்.

ஒட்டாவா, ஒண்டாரியோ நகரங்களை அவர் கடந்தபோது கிட்டத்தட்ட மூவாயிரம் கிலோ மீட்டரை கடந்திருந்தார். மக்களின் வரவேற்பு அவருக்கு மிகுந்த நம்பிக்கையை தந்திருந்தது. “நான் சாலையில் காணும் ஒவ்வொருவருமே எனக்கு நம்பிக்கை தருகிறார்கள். நல்லது நடக்க வேண்டும் என்ற நல்லெண்ணம் ஒவ்வொருவரிடமும் இருக்கிறது. இருபது ஆண்டுகளுக்கு முன்பாக இதுபோன்ற முயற்சியை யாராவது மேற்கொண்டிருந்தால் கேன்சர் நோயை குணப்படுத்தக்கூடிய மருத்துவமுறையை ஒருவேளை நாம் இப்போது கண்டறிந்திருக்கலாம்” என்று பேசினார்.

இதற்கிடையே கேன்சர் தன் வேலையை காட்ட ஆரம்பித்திருந்தது. ஃபாக்ஸின் நுரையீரலை தன் கோரப்பசிக்கு இரையாக்கிக் கொண்டது. அவரது இடது நுரையீரலில் எலுமிச்சைப்பழ அளவுக்கு கேன்சர் கட்டி உருவெடுத்திருந்தது. செப்டம்பர் 1, 1980ஆம் நாளன்று தனது தொடர்ச்சியான ஓட்டத்தை பாதியில் டெர்ரி பாக்ஸ் நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 143 நாட்களில் 5,373 கிலோ மீட்டர்களை அவர் கடந்திருந்தார். டெர்ரி பாக்ஸின் ஓட்டம் தடைப்பட்டதுமே நாடு முழுவதும் தன்னெழுச்சியாக மக்கள் மாரத்தான் போட்டிகள் ஆங்காங்கே நடத்தப்பட்டு பெரும் பணம் திரட்டப்பட்டது. டெர்ரி பாக்ஸ் தேசிய நாயகனாக போற்றப்பட்டார். ஒட்டுமொத்தமாக மக்களிடையே இரண்டரைக்கோடி டாலர்கள் திரட்டப்பட்டது. ஒரு கனடியரிடம் ஒரு டாலர் என்ற டெர்ரியின் கனவு நனவானது.

1981 ஜூன் 27ஆம் தேதி மருத்துவ சிகிச்சையில் இருந்த டெர்ரிக்கு நிமோனியா காய்ச்சல் தாக்கியது. அவர் கோமா நிலைக்கு சென்றார். மறுநாள், மிகச்சரியாக தனது 23வது பிறந்தநாளுக்கு ஒருமாதம் முன்பாக அவர் மரணமடைந்தார். நாட்டின் பிரதமரும், அவைகளும் அவருக்கு அஞ்சலி செலுத்தின. அவரது இறுதிமரண ஊர்வலம் நாடெங்கும் நேரலையாக ஒளிபரப்பானது. கோடிக்கணக்கான கனடியர்கள் கண்ணீர் சிந்தினர். அதே ஆண்டு டெர்ரி பெயரில் ஒரு அறக்கட்டளை ஒன்றினை உருவாக்கி வருடந்தோறும் ‘டெர்ரி பாக்ஸ் ஓட்டம்’ என்ற பெயரில் மாரத்தான் விழிப்புணர்வு ஓட்டங்களை நடத்தி, கேன்சர் ஆராய்ச்சிகளுக்கு நிதி பெற ஏற்பாடு செய்யப்பட்டது. முதன்முதலில் நடந்த கனடாவில் நடந்த ஓட்டத்தில் சுமார் மூன்று லட்சம் பேர் கலந்துகொண்டார்கள் என்று பதிவாகியிருக்கிறது.

கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் கழிந்த நிலையில், இன்று உலகம் முழுவதும் அறுபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் ‘டெர்ரி ஃபாக்ஸ் ஓட்டம்’ நடைபெறுகிறது. இந்த ஓட்டம் நடைபெறும் நாடுகளில் எல்லாம் டெர்ரியின் தாய்நாடான கனடாவின் தூதரகங்களை இணைந்து இந்த நிகழ்ச்சிகளை நடத்துகிறது.

சமீபத்தில் முதன்முறையாக சென்னையில் டெர்ரி ஃபாக்ஸ் ஓட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கானோர் புகையிலைக்கு எதிரான வாசகங்களை கையில் ஏந்தி கலந்துகொண்டார்கள். இனி வருடாவருடம் சென்னையிலும் இந்த ஓட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. நிறைய தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும், கல்லூரி மாணவர்களும் தன்னார்வத்தோடு கலந்து கொண்டு ஓடினர்.

இந்த ஓட்டத்தினை சென்னையில் நடத்த ஐடியா கொடுத்தவர் பதினேழு வயது பள்ளி மாணவர் ஆகாஷ் துபே. கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் ஆகாஷ் சென்னையில் சிகிச்சை பெற்று வருகிறார். “கேன்சர் சிகிச்சைக்காக எனக்கு ரத்தம் தேவைப்பட்ட போது, முகம் தெரியாத பலரும் தன்னார்வத்தோடு வந்து உதவினார்கள். சென்னையில் இப்படி ஒரு ஓட்டம் நடைபெறுவதே மக்களிடையே கேன்சர் குறித்த விழிப்புணர்வை பரவலாக்குவதற்காகதான்!”“ என்று சொன்னார் ஆகாஷ்.

கனட தூதரக அதிகாரி ஷான் வெட்டிக் கலந்துகொண்டு, இதுவரை டெர்ரி பாக்ஸ் ஓட்டங்கள் மூலமாக 300 மில்லியன் டாலர் அளவுக்கு கேன்சர் ஆராய்ச்சிக்கு நிதி திரட்டப்பட்டிருப்பதாக கூறினார். சென்னையில் திரட்டப்பட்ட நிதி டாடா மெமோரியல் சென்டரின் கேன்சர் ஆராய்ச்சிக்க்கு வழங்கப்படுகிறதாம்.

டெர்ரி பாக்ஸின் லட்சியம் வெறுமனே ஓடுவது மட்டுமல்ல. கேன்சரை உலகத்தை விட்டே ஓட்டுவது. அந்நிலை விரைவில் மருத்துவ ஆராய்ச்சிகள் மூலமாக மலரும் என நம்புவோம்.

(நன்றி : புதிய தலைமுறை)

3 அக்டோபர், 2009

மாங்குடி மாறிய கதை!


ஜோதிமணிக்கு வயது பத்தொன்பது. அரசுப்பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிக்கு சேர்ந்தார். விரும்பி சேர்ந்த வேலை இது. அவருக்கு ஒரு கனவு இருந்தது. அடிப்படையில் இருந்து எல்லாமே மாறவேண்டும். மாணவர்களின் தலையெழுத்து மாற்றி எழுதப்பட வேண்டும். ஆசிரியப் பணியில் மட்டுமே இது சாத்தியம்.

மாணவர்கள் சோர்வின்றி கல்வி கற்கவேண்டும். இதற்கு வாகான வகுப்பறைகள் வேண்டும். ஒவ்வொரு வகுப்பறையிலும் ஒரு தொலைக்காட்சி பெட்டி, சுவர்க் கடிகாரம், காலண்டர், குடிதண்ணீர் குழாய், முகம் பார்க்கும் கண்ணாடி, நகம் வெட்டும் நெயில் கட்டர், குப்பைக்கூடை, மாணவர்கள் தங்களுக்குள் கடிதப் பரிமாற்றம் செய்துகொள்ள அஞ்சல்பெட்டி, கம்ப்யூட்டர், சுகாதாரமான கழிப்பறை, விளையாட்டுப் பொருட்கள், பூங்கா... இப்படியெல்லாம் நீண்டுக்கொண்டே போனது ஜோதிமணியின் கனவு. மனது வைத்தால் இவை சாத்தியப்படக் கூடிய மிக எளிய விஷயங்களே என்று நம்பினார்.

கிட்ட்ததட்ட இருபது ஆண்டுகள் கழித்து கனவை நனவாக்க இவருக்கு ஒரு பொன்னான வாய்ப்பு கிடைக்கிறது. இப்போது மாங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு ஜோதிமணிதான் தலைமை ஆசிரியர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியிலிருந்து, பேராவூரணி செல்லும் சாலையில், சரியாக ஏழாவது கிலோ மீட்டரில், மெயின்ரோட்டில் இருந்து இடதுபுறம் திரும்பி ஒன்றரை கிலோ மீட்டர் நடந்தால் மாங்குடி.

எல்லா அரசுப்பள்ளிகளையும் போன்றுதான் மாங்குடி பள்ளியும் அப்போது இருந்தது. மாணவர்கள் கூட்டமாக, கத்திக்கொண்டே, ஒழுங்கில்லாமல் பள்ளிக்கு ஏனோதானோவென்று வந்து சென்றார்கள். தலைவாருவதில்லை. அழுக்கான ஒழுங்கற்ற உடை. பள்ளிக்கு சுற்றுச்சுவர் கிடையாது. கழிப்பறை கிடையாது. சீமை ஓடு வேய்ந்த சிறிய கட்டடங்கள். மாணவர்கள் கிட்டத்தட்ட இங்கே அடைக்கப்பட்டிருந்தார்கள் என்று சொல்லுவதே பொருத்தம்.
மாற்ற வேண்டும். எல்லாவற்றையும் மாற்றவேண்டும். எங்கிருந்து தொடங்குவது? முதலில் எதை மாற்றுவது? எதை செய்யவேண்டும் என்ற தெளிவு எல்லாருக்குமே இருக்கிறது. ஆனால் எந்த புள்ளியிலிருந்து தொடங்குவது என்பதில்தான் எல்லோருக்குமே குழப்பம். அந்தப் புள்ளி சீக்கிரமே ஜோதிமணிக்கு பிடிபட்டு விட்டது.

தலைவாராமல் பள்ளிக்கு வரும் மாணவிகளை சரிசெய்வதில் ஆரம்பித்தார். மாணவிகளை குறை சொல்லி என்ன பிரயோசனம்? பெற்றோர் தினமும் தலைவாரி அனுப்பினால் ஒழுங்காக வரப்போகிறார்கள். பெற்றோர்களை அழைத்துப் பேசினார். “பாருங்க இனிமே திங்கள் ரெட்டைசடைன்னா, செவ்வாய் ஒத்தசடை, புதன் மறுபடியும் இரட்டைசடை. இப்படி மாத்தி மாத்தி தலை பின்னிதான் குழந்தைகளை ஸ்கூலுக்கு அனுப்பணும்!” – இந்த ஐடியா நன்றாகவே ஒர்க் அவுட் ஆனது. மாறி, மாறி ஒற்றைசடை, இரட்டைசடை என்பதால் தினமும் தலைசீவியாக வேண்டிய கட்டாயம்.

அடுத்ததாக யூனிபார்ம். அரசு அளிப்பது வருடத்திற்கு ஒரே ஒரு செட். ஒருநாள் அணிந்து வந்ததை மறுநாள் அணியமுடியாது என்பதால், மாணவர்கள் இஷ்டத்துக்கும் கலர் உடை அணிந்து வந்தார்கள். சிலரது உடை கிழிந்திருக்கும். சிலரது உடை அழுக்காக இருக்கும். மாணவர்களுக்குள்ளே இதனால் ஒவ்வொருவரின் பொருளாதார அளவுகோல் என்னவென்பது தெளிவாய் தெரிந்தது. வசதிகுறைந்த மாணவர்கள் தாழ்வுமனப்பான்மையில் மனம் குன்றினர்.

அவ்வருட தீபாவளிக்கு முன்பாக ஒட்டுமொத்தமாக பெற்றோரை அழைத்து கூட்டம் போட்டார் ஜோதிமணி. “தீபாவளிக்கு எல்லோரும் பசங்களுக்கு எப்பாடு பட்டாவது துணி எடுத்துடுவீங்கன்னு தெரியும். ஆனா இந்தமுறை ஒரே ஒரு கண்டிஷன். எல்லாரும் யூனிபார்ம் தான் எடுக்கணும். ஏற்கனவே ஒரு செட் இருக்கு. இன்னொரு செட் வந்துடிச்சின்னா பசங்க எல்லா நாளும் யூனிஃபார்மிலே ஸ்கூலுக்கு வரலாமில்லே?”

பெற்றோர்கள் யோசித்தார்கள். இவர் வேறுமாதிரியான ஆசிரியர். நம் பிள்ளைகளுக்கு ஏதோ நல்லது செய்ய நினைக்கிறார். நாம் ஏன் குறுக்கே நிற்கவேண்டும்? ஜோதிமணி என்ன சொன்னாலும் தலையாட்டத் தயார் ஆனார்கள். குழந்தைகள் பழுக்கக் காய்ச்சிய இரும்புக்கம்பி மாதிரி. எப்படி வளைக்கிறோமோ அப்படி வளைகிறார்கள். ஜோதிமணி நல்லபடியாக வளைக்க ஆரம்பித்தார்.

இதெல்லாம் ஐந்து ஆண்டுகளுக்கு முந்தைய பழைய கதை...

இன்று, மாநில தொடக்கக் கல்வித்துறை 2007-08ஆம் ஆண்டின் சிறந்த பள்ளியாக மாங்குடி பள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டு விருது அளிக்கப்பட்டிருக்கிறது. பள்ளி சுகாதாரத்துக்கான யூனிசெஃப் அமைப்பின் பத்துநட்சத்திர விருதும் கூட. இன்னும் ஏராளமான அமைப்புகளின் விருதுகள் தலைமையாசிரியர் அறையை அலங்கரிக்கிறது. ‘கேம்பஸ்’ என்று சொல்லக்கூடிய ஒரு கல்லூரி வளாகத்துக்குள் இருக்கும் எல்லா வசதிகளுமே இந்த பள்ளிக்கு இப்போது உண்டு. முழுமையான சுற்றுச்சுவர், சுகாதாரமான கழிப்பிடம், இருச்சக்கர வாகனங்கள் நிறுத்த தனியாக பார்க்கிங், ஐந்தாம் வகுப்பிலிருந்து மாணவர்களுக்கு டெஸ்க், கம்ப்யூட்டர் லேப், நூலகம், அறிவியல் பரிசோதனைக் கூடம், ஒவ்வொரு வகுப்பறைக்கும் தனித்தனியாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்க்குழாய், வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி... இன்னும் என்னவெல்லாமோ...

வெறும் ஐந்தே ஆண்டுகளில் இதெல்லாம் எப்படி சாத்தியம்?

“இதெல்லாமே அரசு கொடுக்குறதை வெச்சிதாங்க பண்ணுறோம். எல்லா பள்ளிகளுக்கும் இதே வசதிகளை அரசு கொடுக்குது. அதை ஆசிரியர்கள் நாம எப்படி எடுத்து பயன்படுத்தறோம்கிறது முக்கியம்!” என்கிறார் ஜோதிமணி. நாற்பத்தின் மூன்று வயதான ஜோதிமணியின் பெயர் இவ்வருட நல்லாசிரியர் விருதுக்காக பரிந்துரைக்கப் பட்டிருப்பதாக சொல்கிறார்கள். முன்கூட்டிய வாழ்த்துகள் ஜோதிமணி சார்! (இது கட்டுரை எழுதும்போது இருந்த நிலை. கடந்த ஆசிரியர் தினத்தன்று ஜோதிமணிக்கு நல்லாசிரியர் விருது கிடைத்திருக்கிறது)

இவர் சொல்லுவதைப் போல இந்த மாற்றங்கள் எல்லோராலேயுமே சாத்தியப்படுத்தக் கூடியதுதான். என்ன.. ஜோதிமணிக்கு இருந்தது போல கொஞ்சம் கனவும், நிறைய மனசும் முதலீடாக தேவைப்படும்!

லைவ் ஃப்ரம் மாங்குடி!

எட்டாம் வகுப்பு படிக்கும் பதிமூன்று வயது விஜயகாந்துக்கு தனியாக ஈமெயில் ஐடி இருக்கிறது. “விஜய்97@ரீடிஃப்மெயில்.காம். நோட் பண்ணிக்குங்க சார்” என்கிறான். இவனுக்கு மட்டுமல்ல இங்கிருக்கும் எல்லா மாணவர்களுக்குமே ஈமெயில் ஐடி இருக்கிறது. கம்ப்யூட்டர் தண்ணி பட்ட பாடு. தலைமையாசிரியர் ஜோதிமணியிடம் இணைய இணைப்புக்கான டேட்டாகார்ட் இருக்கிறது. குறிப்பாக மாணவர்கள் இங்கே இணையத்தில் பார்ப்பது தமிழ் விக்கிபீடியா.

“தமிழ் விக்கிபீடியா ஸ்டூடண்ஸுக்கு ரொம்ப உபயோகமா இருக்குங்க. பாடப்புத்தகத்துலே நாங்க பாடம் நடத்தி முடிச்சதும் அந்தப் பாடம் சம்பந்தமா விக்கிபீடியாவில் அவங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தா பார்த்து தெரிஞ்சுக்குறாங்க. ஆசிரியர்களோட வேலைப்பளு இதனால குறையுது”

எல்லா மாணவர்களுக்கும் ஈ-கலப்பை மென்பொருள் பயன்படுத்தி தமிழில் டைப் அடிக்கத் தெரிகிறது. பவர்பாயிண்டில் வேகமாக இயங்குகிறார்கள். பேஜ்மேக்கரில் டிசைன் செய்கிறார்கள். பாடம் முடிந்ததும் பவர் பாயிண்டில் குழுவாக அசைன்மெண்ட் செய்யவேண்டும். ஒவ்வொரு குழுவிலும் மூன்று அல்லது நான்கு மாணவர்கள் இருக்கிறார்கள். வகுப்பு ஒன்றுக்கு ஆறு, ஏழு குழுக்கள் இருக்கின்றன. வாரத்துக்கு ஒருமுறை தாங்கள் செய்த அசைண்மெண்ட்களை மற்ற குழுவினர் மத்தியில் ப்ரசண்டேஷன் செய்யவேண்டும். இதற்காக எல்.சி.டி. புரொஜெக்டர் ஒன்றும், பெரிய திரை ஒன்றும் வாங்கி வைத்திருக்கிறார்கள். இதெல்லாம் பொதுவாக கல்லூரிகளில் இருக்கும் நடைமுறை.

குழு அசைண்மெண்ட் மட்டுமல்லாது ஒவ்வொரு மாணவனுக்கும் தனி அசைண்மெண்ட் உண்டு. முழுநீள வெள்ளைத்தாளில் ஆசிரியர் மூலமாக தான் கற்ற பாடத்தை எவ்வாறு உள்வாங்கிக் கொண்டோம் என்பதை எழுதியாக வேண்டும். ஒவ்வொரு அசைண்மெண்டும் தனித்தனி ஃபைல்களில் ஆவணப்படுத்தப் படுகிறது. தேர்வு நெருங்கும் நேரத்தில் இந்த ஃபைலை மாணவன் எடுத்துப் பார்த்து தன்னுடைய முன்னேற்றத்தை சுயமதிப்பீடு செய்துக் கொள்கிறான்.

நூலகம் இங்கே சிறப்பாக இயங்குகிறது. பிரிட்டானிகா தகவல் களஞ்சியம் போன்ற விலையுயர்ந்த நூல்களும் உண்டு. மாணவர்கள் ஓய்வுநேரத்தில் தங்களுக்கு வேண்டிய நூல்களை எடுத்துப் படித்துக் கொள்ளலாம். ஒவ்வொரு வகுப்பறையிலும் சிறியளவிலான நூலகம் தனியாக அமைந்திருக்கிறது.

இவற்றையெல்லாம் கையாள நிறைய பேர் தேவைப்படுகிறார்கள். ஆனால் பள்ளியில் இருக்கும் ஆசிரியர்களின் எண்ணிக்கை எட்டு மட்டுமே? எப்படி சமாளிக்கிறார்கள்?
“எல்லாத்தையும் பசங்களே பண்ணிடுறானுங்க சார். பள்ளியிலிருந்து எழுதப்படும் கடிதங்களில் ஆரம்பிச்சு, பள்ளியோட மாணவர்கள் வருகைப் பதிவேடுன்னு எல்லாத்தையும் மாணவர்களே கையாளுறாங்க. இங்கே படிக்கிற 241 மாணவர்களில் 200 பேர் ஏதோ ஒரு குழுவில் கட்டாயம் இருப்பாங்க. ஒவ்வொரு வேலைக்கும் ஒரு குழு.

உதாரணத்துக்கு குடிநீர் கண்காணிப்புக் குழு, சுகாதார கண்காணிப்புக் குழு, நூலகக் கண்காணிப்புக் குழுன்னு ஏராளமான குழுக்களா வேலைகளை பிரிச்சிக் கொடுத்திருக்கோம். ஒவ்வொருவருக்கும் பொறுப்பு இருக்குறதாலே, அந்தப் பொறுப்புக்கான கடமைகளை, நாங்க சொல்லாம அவங்களே எடுத்துப் பண்ணிடுறாங்க. ஒண்ணு, ரெண்டு முறை தவறு வரும். சின்னக் குழந்தைகள்தானே? ஆனா அதை நாங்க பெரிசுப் படுத்திக்குறது இல்லை. ஆனா இதனால ஒவ்வொரு மாணவனுக்கும் தலைமைப் பண்பு இயல்பாகவே வந்துடுது” என்கிறார் தலைமை ஆசிரியர் ஜோதிமணி.

தொண்ணூற்றி ஐந்தாம் ஆண்டு இங்கிருந்து போன முன்னாள் மாணவி ஒருவர் டி.சி. கேட்டு வருகிறார். ஒரு விண்ணப்பம் எழுதித்தரச் சொல்லி தலைமையாசிரியர் கேட்க, அவர் முழிக்கிறார். உடனே ஒரு மாணவனை அழைத்து, “தம்பி. இவங்களுக்கு ஒரு விண்ணப்பம் எழுதிக்கொடு” என்கிறார். வேறு எந்தக் கேள்வியும் கேட்காமல் ஒரு வெள்ளைத்தாளில் அழகாக விண்ணப்பம் எழுதிக் கொடுக்கிறான் மாணவன்.

“வெள்ளைத்தாளை கையாளத் தெரிஞ்சுடிச்சின்னா போதும். ஒருத்தன் எதை வேணும்னாலும் சாதிக்கலாம். இங்கே இதைத்தான் நாங்க கற்றுத் தருகிறோம். நாளைக்கு இவங்க வளர்ந்து, அலுவலகங்களில் வேலை பார்க்கும்போது எந்த்த் தயக்கமும் இல்லாம வேலை பார்ப்பாங்க. ஏன்னா எங்க அலுவலக வேலைகளையும் அவர்களே பகிர்ந்துக்கிட்டு அனுபவப் பட்டுடுறாங்க! விண்ணப்பங்களை பூர்த்தி செய்யுறது, தேர்வு மதிப்பெண் அட்டைகளை தயார் செய்யுறதுன்னு கம்ப்யூட்டர்லேயே பசங்க எல்லா வேலையையும் முடிச்சிட்டு அழகா பிரிண்ட் எடுத்துக் கொடுத்துடுவாங்க”

பள்ளிக்குள்ளேயே ஒரு போஸ்ட் ஆபிஸ் நடைபெறுவது சுவாரஸ்யமானது. ஒரு போஸ்ட் மாஸ்டர், இரண்டு போஸ்ட் மேன்கள் உண்டு. இவர்களும் மாணவர்கள்தான். இவர்கள் அஞ்சல்குழுவில் உறுப்பினர்களாக இருப்பவர்கள். நாலாம் வகுப்பு படிக்கும் மாணவன், எட்டாம் வகுப்பு படிக்கும் தன் அண்ணனுக்கு கடிதம் எழுதி, தன் வகுப்பில் இருக்கும் போஸ்ட் பாக்ஸில் போட்டுவிடலாம். அது போஸ்ட் மேன் மூலமாக சேகரிக்கப்பட்டு, போஸ்ட் மாஸ்டரால் ரப்பர் ஸ்டாம்ப் முத்திரை இடப்பட்டு சம்பந்தப்பட்ட மாணவனுக்கு போய்ச்சேர்ந்து விடுகிறது. ஆசிரியர்களையும் மாணவர்கள் தபால் மூலமாகவே தொடர்பு கொள்கிறார்கள். சாக்பீஸ் தீர்ந்துவிட்டது, வாங்கவேண்டுமென்றால் கரும்பலகைகள் கண்காணிப்புக் குழு, தலைமையாசிரியருக்கு ஒரு கடிதம் மூலமாக தன் தேவையை அனுப்பி வைக்கிறது. இந்த உள்பரிமாற்ற விஷயங்கள்’கடிதம் எழுதுவது’ குறித்த அச்சம் ஏதுமின்றி மாணவர்களை வளர்த்தெடுக்கும் என்கிறார்கள்.

சிறுசேமிப்புத் திட்டமும் உண்டு. மாணவர்கள் சேமித்துத் தரும் பணத்தை ‘ரிகரிங் டெபாசிட்’ ஆக முதலீடு செய்து, அவர்கள் பள்ளியை முடித்துச் செல்லும்போது மொத்தமாக தருகிறார்கள். இது அவர்களது மேல்கல்வித் தேவைகளுக்கு உதவுகிறது.
இந்தப் பள்ளிக்கென்றே தனிச்சின்னம் (Emblem) உருவாக்கியிருக்கிறார்கள். தினசரி காலை தேசியக்கொடியேற்றம் மற்றும் இறைவணக்கக் கூட்டம் நடக்கிறது. மாணவர்கள் சாப்பிடச் சென்றாலும் சரி, இடைவேளையில் கழிப்பறைக்குச் சென்றாலும் சரி. வரிசையாகவே செல்கிறார்கள். வரிசையாகவே வருகிறார்கள். தமிழ், ஆங்கிலம் இரண்டிலுமே இவர்களது கையெழுத்து மெச்சப்படக் கூடியதாக இருக்கிறது. இதற்குப் பின்னாலும் தலைமையாசிரியர் இருக்கிறார். பெங்களூரில் உள்ள மண்டல ஆங்கிலப் பயிற்சி நிறுவனத்தில் அவர் எடுத்துக் கொண்ட பயிற்சியின் விளைவாகவே, மாணவர்களுக்கு சிறந்த கையெழுத்துத் திறனை அளிக்க முடிகிறது. எல்லா மாணவர்களின் கையெழுத்தும் கிட்டத்தட்ட ஒன்றுபோலவே இருக்கிறது. ஒரே மாதிரியான மார்ஜின் விட்டு எழுதுகிறார்கள்.

ஓர் ஆண்டுக்கு மொத்தமாகவே மூன்று மூன்று நோட்டுப் புத்தகங்கள் மட்டுமே மாணவர்கள் வாங்க வேண்டியிருக்கிறது. இதற்கு மேல் நோட்டுப் புத்தகங்களில் எழுதியாகவேண்டிய அவசியம் இல்லவேயில்லை என்கிறார்கள் ஆசிரியர்கள். அசைன்மெண்டை வெள்ளை பாண்ட் பேப்பரில் எழுதுகிறார்கள். நோட்டுப் புத்தகங்கள் மற்றும் வெள்ளைத்தாள் ஆகியவற்றை தமிழ்நாடு அரசு பேப்பர் லிட் (TNPL) நிறுவனத்தில் வாங்குகிறார்கள்.

மதிய உணவு சாப்பிட வசதியாக கடப்பா கற்களால் அமைக்கப்பட்ட மேடைகள் உண்டு. ஒரே நேரத்தில் நூறு குழந்தைகள் இங்கு வரிசையாக அமர்ந்து சாப்பிடலாம். திறந்தவெளி கலையரங்கம் உண்டு. மூலிகைச்செடிகள் வளர்க்கப்பட்ட பூங்காவில் சறுக்குமரம், ஊஞ்சல் என்று குழந்தைகள் விளையாட இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அறிவியல் கூடம், தொழிற்கூடம் எல்லாம் கூட உண்டு. சென்னையில் இயங்கும் தமிழ்நாடு அறக்கட்டளை போன்ற அமைப்புகளின் பங்கு இப்பள்ளியின் அடிப்படைக் கட்டுமானத்தில் உண்டு என்கிறார்கள்.

ஒவ்வொரு வகுப்பறையிலும் டிவி இருக்கிறது. நூலக அறையில் சிடிக்களில் ஒளிபரப்பப்படும் படங்கள் எல்லா வகுப்பறைகளிலும் மாணவர்கள் பார்க்க இயலுகிறது. பாடம் முடிந்துவிட்டால் மாணவர்கள் டிவி பார்க்கலாம். சினிமாப் படங்களும் உண்டு. வீரபாண்டிய கட்டபொம்மன், பாரதி, காமராஜர் என்று தலைவர்களின் வரலாற்றுப் பட சிடிகளை நிறைய சேமித்து வைத்திருக்கிறார்கள். மதிய வேளையின் போது மாணவர்கள் சத்தம் போடுவதை நிறுத்த ஒலிபெருக்கியில் தேசபக்திப் பாடல்களை ஒலிபரப்புகிறார்கள்.

ஒரு வகுப்பில் கூட ‘பிரம்பு’ என்ற வஸ்துவையே பார்க்கமுடியவில்லை என்பது மற்றொரு ஆச்சரியம். ஆசிரியர்கள் முகத்தில் எப்போதும் கனிவு. “நாங்க சத்தம் போடுற மாதிரி மாணவர்கள் நடந்துக்கறதே இல்லை. எல்லாமே ஒரே ஒழுங்கில் செயல்படுறாங்க. இங்கே லாஸ்ட் பெஞ்ச் ஸ்டூடண்ட், ஆவரேஸ் ஸ்டூடண்ட்ஸெல்லாம் இல்லவேயில்லை. ஒவ்வொரு மாசமும் அவங்க அவங்க இடத்தை மாத்துவோம். எல்லோரும் ஒரே மாதிரி நல்லாவே படிக்குறாங்க. இங்க இருந்து போன பசங்க எஸ்.எஸ்.எல்.சியில் நானூறுக்கு மேல மார்க் வாங்குறாங்கன்னு கேள்விப்படுறப்போ மகிழ்ச்சியா இருக்கு” என்கிறார்கள் ஆசிரியர்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு அறிமுகப்படுத்தியிருக்கும் செயல்வழி கற்றல் முறை மற்றும் படைப்பாற்றல் கல்விமுறை மவுனமான கல்விப்புரட்சியை தமிழகத்தில் ஏற்படுத்தி வருகிறது என்கிறார் தலைமையாசிரியர். இதன் பலன்கள் இன்னும் சில வருடங்களில் தெரியும். இப்போதே நம் கல்விமுறையை பார்த்து, இதே முறையை பஞ்சாப், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்கள் அமல்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மாங்குடிப் பள்ளி இந்தியாவுக்கே ஒரு மாதிரி பள்ளி. தமிழகத்தின் அனைத்து அரசுப் பள்ளிகளும் மாங்குடிப் பள்ளியாய் மாறிவிட்டால் கல்வி வளர்ச்சியில் உலகிலேயே முதல்மாநிலமாக தமிழகம் திகழும் என்பது உறுதி.

(நன்றி : புதிய தலைமுறை)

1 அக்டோபர், 2009

டாஸ்மாக் ஞானி!


நேற்றிரவு தண்ணி அடித்து விட்டு பட்டினப்பாக்கம் டூ மந்தைவெளி ரோட்டில் பைக்கில் சென்று கொண்டு இருந்தான் டமாரு. ஐந்து நிமிடங்களுக்கு முன்பாகதான் வாந்தி எடுத்திருந்தான். மாவா போட்டிருந்ததால் அது கடைவாயில் ஒழுகி சட்டையை கறையாக்கி இருந்தது. ஏர்டெல் ஆபீஸை தாண்டியதுமே கொஞ்சம் இடதுபுறம் திரும்ப வேண்டி இருந்தது. மப்பு அதிகமானதால் க்ளர்ச்சுக்கு பதிலாக ப்ரேக்கையும், ப்ரேக்குக்கு பதிலாக ஹார்னும் அடித்து தலைகுப்புற விழுந்தான்.

அப்படியே ஓரக்கண்ணால் ரோட்டைப் பார்த்தான். பட்லிஸ் ஏதாவது பார்த்துவிட்டால் மானம் போய்விடும் என்ற பயம் வந்தது. 'கபாலீஸ்வரா' என்று போதையில் பினாத்திவிட்டு, தள்ளாடியபடியே எழுந்து, வண்டியை எட்டி உதைத்துவிட்டு தூக்கினான். மணி எட்டேமுக்காலை தாண்டி இருந்ததால் ரோட்டில் பட்லிஸ் நடமாட்டம் இல்லை. காய்கறி விற்றுக்கொண்டிருந்த சப்பை பட்லிஸ் மட்டும் அவனை சைட் அடித்தது. டமாரும் பதிலுக்கு திருப்பி சைட் அடித்தபோது அவன் அட்டு முகத்தை வெளிச்சத்தில் பார்த்த பட்லிஸ் தூவென காறி உமிழ்ந்தது. அவனது பேண்ட் பாக்கெட்டில் வாட்டர் கலந்து வைத்திருந்த குவார்ட்டர் பாட்டில் ஒன்று சாலையில் கிடந்தது.

எடுத்துக்கொண்டு திரும்பும்போது வேகமாக ஒரு தெருநாய் அவனை நோக்கி கொலைவெறியோடு ஓடிவருவதை பார்த்தான்.

நாய் ஓடிவந்த வேகத்தைப் பார்த்த டமாருக்கு, அது அவனது கிட்னியையே கவ்வி விடுமோ என்ற பயத்தை கொடுத்தது. எப்போதும் நாயை அடிக்க பாக்கெட்டில் கல் வைத்திருப்பது டமாருவின் பழக்கம். அன்று கல் ஸ்டாக் இல்லை. போதையில் வாய் குழற முண்டகக் கண்ணியம்மா என்று பினாத்திக்கொண்டே அருகில் இருந்த கல்லை எடுத்தான். கல்லை கண்டதும் நாயை காணோம். போதை சுத்தமாக இறங்கிவிட அருகிலிருந்த ஒயின்ஷாப்புக்கு மீண்டும் வண்டியை விட்டான் டமாரு.

பின்பு வண்டி ஓட்டும்போதுதான் எங்கெங்கு எல்லாம் அடிபட்டு இருக்கும் என்பதை உணரதொடங்கினான். கிண்ணியிலும், முட்டியிலும் லேசாக வலித்தது. போதை லைட்டாக இருந்தது. தனியாக சென்று கொண்டிருந்ததால் பாக்கெட்டில் அமுக்கி வைத்திருந்த மாவா பாக்கெட்டை பிரித்து வாயில் போட்டான். பேச்சு துணைக்கு யாரும் இல்லாததால் ‘நெஞ்சமுண்டு, நேர்மையுண்டு ஓடு ராஜா' என்று வாத்தியார் பாட்டை என்று முணுமுணுக்க தொடங்கினான். கொஞ்சமாக போதை ஏறியது.

“தண்ணி அடிச்சதால தான் கீழே விழுந்தேன்னு சொல்ல வரல. ஆனா தண்ணி அடிச்சா கீழே விழுந்துடுவேனோன்னு பயமாயிருக்கு” என்று அலைபாயுதே மாதவன் மாதிரி பினாத்த ஆரம்பித்தான். டமாரு காண்டாக இருக்கிற நேரங்களில அவனையும் மீறின ஒரு சக்தி, ஒரு தாகம் டாஸ்மாக்குக்கு அவனை அழைத்து செல்கிறது. ஒரு பீரோ, விஸ்கியோ அடித்து அந்த சக்தியை, அந்த தாகத்தை அந்த நேரத்துக்கு தணிக்கிறான்.

டமாரு எப்போதுமே இப்படித்தான். அவனைப் பொறுத்தவரை எப்போதும் டாஸ்மாக் திறந்திருக்கிறதா, மூடியிருக்கிறதா என்று ஒருநாளும் குழம்பியதில்லை. காந்தி ஜெயந்தி அன்றைக்கு கூட ஸ்டாக் வாங்கிவைத்து ரெடியாக இருப்பான். அதுக்காக அன்றைக்கும் ஒயின்ஷாப் ப்ளாக்கில் திறந்திருந்தால் அங்கும் ஒரு குவார்ட்டர் வாங்காமல் இருந்தது இல்லை. ஓசியில் யாராவது சரக்கு வாங்கி கொடுக்க கூப்பிட்டாலும் சரி, கூப்பிடாவிட்டாலும் சரி டமாரே அவர்களோடு போவது உண்டு. டமாரு விஸ்கிதான் சாப்பிடுவான், அதற்காக பீர் அடிப்பவர்களை பார்த்து போதை ஏறுமா என்று ஒருநாளும் அவன் கேட்டது இல்லை. ஒரு கட்டிங் வாங்கி மிக்ஸ் பண்ணி கொள்ளுங்கள் என்று சொல்வதும் இல்லை.

அவனுக்கு தோன்றினால் எப்போதாவது ஜோதி தியேட்டருக்கோ, போரூர் பானு தியேட்டருக்கோ தியேட்டருக்கோ அல்லது சாந்தி தியேட்டருக்கு பக்கத்தில் இருக்கும் காபரே கிளப்புக்கோ செல்வதுண்டு. சரக்கடித்தால் தான் போதை என்ற எண்ணம் வந்தால் மலைகளுக்கு மத்தியில் அமைந்துள்ள திருசூலம் டாஸ்மாக், கடல் ஓரத்தில் அமைந்திருக்கும் முனியம்மா சுண்டக்கஞ்சி ஷாப் போன்ற வித விதமான லொகேஷன்களுக்கு ஊறுகாயோடு சென்று விடுவான்.

சரக்குக்கு சைட் டிஷ் வாங்குவதை விட பக்கத்தில் குடிக்கும் குடிகாரர்களிடமிருந்து பொடிமாஸ்ஸோ, இரத்த வறுவலையோ ஆட்டையை போடுவது டமாரின் வழக்கம். ஆனால் பதிலுக்கு ஊறுகாய் கொடுத்து விடுவான். டாஸ்மாக்குக்கு சரக்கடிக்க போவது தப்பா இல்லையா என்று அவனை கேட்டால் தப்பில்லை என்றே சொல்லுவான். ஆனால் மிலிட்டரி சரக்கு வாங்கி வேறு ஒரு பாரில் போய் அந்த கடை சரக்கு வாங்காமல் உட்கார்ந்து அடித்தாலோ, அல்லது சரக்கடிக்காமல் பாரில் உட்கார்ந்து சைட் டிஷ் மட்டும் சாப்பிட்டாலோ அதை கண்டிக்கும் முதல் ஆளும் டமார்தான்.

''ரெண்டு ரவுண்ட் உள்ளப்போனா சுத்தியிருக்குறவன் பேசுற பேச்சுலேர்ந்து, உட்கார்ந்திருக்கிற இடம் வரைக்கும் எதுவுமே விளங்கப்போறதில்லை. இதுல என்ன கருமத்துக்கு 'நான் த்ரீ ஸ்டார் பார்லதான் குடிப்பேன்'னு சிலபேர் வீராப்பா இருக்கானுங்கன்னு தெரியலை. அதே சரக்கு... அதே பாட்டில்... விலை மட்டும் மூணு மடங்கு. அட மடப்பயலுகளா... நானாவது போதையேத்திக்கிட்டு என்னை மறக்குறேன். இவனுங்க போதையேத்தப் போகும்போதே உலகத்தை மறந்து போறானுங்களே.. காசை கரியாக்காதீங்கடா கசுமாளங்களா"

''சரக்கு அடிச்சா போதை வரும். இன்னும் எவ்வளவு அடிச்சாலும் ப்ளாட் ஆகமாட்டோம்ங்குற தன்னம்பிக்கை வரும். அடக்கம் வரும். இங்க்லீஸ் வரும்"

''இந்த ஊரு உலகமே உன்னை சந்தோஷமா இருக்க விடாம அமுக்குது. எவனுக்காச்சும் உன்னோட சந்தோஷத்தைப்பத்தி கவலை இருக்கா. எல்லாரும் அடுத்தவனை ஏறிமிதிச்சுக்கிட்டு 'போடா ங்கொய்யால'னு போறான். அப்புறம் என்னை ......த்துக்கு நீ உலகத்தைப்பத்தி கவலைப்படனும். தவிர உன்னை சந்தோஷமா இருக்கவிடாம செய்யிறதுதானே ஊரு, உலகத்தோட நோக்கம். நீயும் அழுதுகிட்டே இருந்தியன்னா அந்த நோக்கம் நிறைவேறிடும்ல... ஆகக்கூடி நான் சொல்ல வர்றது என்னன்னா, வாழ்க்கையைக் கொண்டாடு தலைவா. டாஸ்மாக் வாழ்க"

இதெல்லாம் டமாருவின் போதை நேரத்து தத்துவ தரிசனங்கள். தற்சமயம் டமாருவை தொடர்புகொள்ள வேண்டிய முகவரி, பச்சை போர்டு கடை, (அனிதா பார் எதிரில்) கடை எண் 887, திருவல்லிக்கேணி ஹை ரோடு.

நாய்க்காதலன்!


டமாருக்கு நாய்கள் என்றாலே ஆவாது. நைட்டு சரக்கடித்துவிட்டு போதையில் தள்ளாடிக்கொண்டு வரும்போது இருட்டில் தெருவில் தூங்கும் சொறிநாய்களை மிதித்துவிடுவான். ஒரு குடிகாரனுக்கு இதற்கு கூட உரிமையில்லையா என்ன? உயிரே போய்விட்டது போல அந்த நாய்கள் 'வாள் வாளென்று' கத்தி அதனாலேயே அவனுக்கு பலமுறை போதை தெளிந்துவிடும். மறுபடியும் போய் ஒரு கட்டிங் அடிக்க வேண்டும்.

இந்த மேட்டராலேயே நாய்கள் மீது கொலைவெறி ஏற்படும். எங்கு எந்த நாயைப் பார்த்தாலும் குறிபார்த்து கல்லால் அடிப்பதை டமாரு ஒரு வேண்டுதலாகவே செய்து வந்தான். கல்லை கண்டால் நாயைக் காணோம் என்ற பழமொழி நம்மாளுக்கு பொருந்தவே பொருந்தாது. நாயை அடிப்பதற்காகவே பாக்கெட்டில் ரெண்டு, மூன்று கல்லு எப்போதும் ஸ்டாக் வைத்திருப்பான். அதிலும் குறிப்பாக நடுரோட்டில் நாலு பேர் பார்க்க காதலிக்கும் நாய்களையும், தெருவோரத்தில் எதையாவது தின்னும் நாய்களையும் பார்த்தால் கூடுதல் ஆர்வத்தோடு அடிப்பான்.

டமாரும் ஒரு காலத்தில் நாய் வளர்த்தவன் தான். சூப்பர் ஸ்டாரின் தாய்வீடு படத்தைப் பார்த்தவன் அதுபோலவே ஒரு நாய் வளர்க்க ஆசைப்பட்டான். இராம. நாராயணன் படங்களில் நாய்கள் செய்யும் சாகசங்களை கண்டவன் நாய் இனத்தை நேசிக்க ஆரம்பித்தான். ஒரு கார்த்திகை மாத மழைநாள் இரவில் சாய்பாபா கோயில் வாசலில் ஒரு நாய் நாலு குட்டி போட்டது.

பெரிய நாய்க்கு தெரியாமல் ரகசியமாக ஒரு குட்டி நாயை அபேஸ் பண்ணிக் கொண்டு வந்து சீராட்டி, தாலாட்டி வளர்த்தான். காலையில் டீக்கடைக்கு போகும் போது நாலு பொறை வாங்கிப் போடுவான். ஊட்டில் தனக்கு போடப்படும் சோற்றில் ஒரு பங்கினை அந்த நாய்க்கும் போடுவான், அது கண்டதை தின்றுவிடக்கூடாது என்பதில் டமாரு குறியாக இருந்தான். பார்ப்பதற்கு ரொம்ப பரிதாபமாக சோனியாக அந்த நாய் தென்பட்டாலும் கம்பீரமாக, வெயிட்டாக டைகர் என்று பெயர் வைத்தான். டமாரின் காலையே டைகர் எப்போதும் சுற்றிக் கொண்டிருக்கும்.

டமாரின் பால்ய சிநேகிதன் முத்து. ஒரு முறை டமாரு வீட்டுக்கு வந்தவன் டைகரை பார்த்து ரொம்பவும் இம்ப்ரஸ் ஆகிவிட்டான். அவனோடு டைகர் நல்லவிதமாகவே விளையாடியது. "டமாரு பார்க்க நல்ல ஜாதி நாயா தெரியுது. நம்ம தெரு சொறிநாய்ங்க கூட ஏதாவது அஜாலு குஜாலு ஆயிடப்போவுது. கொஞ்சம் கேர்புல்லா இருந்துக்கோ" என்று அட்வைஸ் செய்தான்.

முத்து சொன்னது நியாயமாகவே டமாருக்கு பட்டது. நடுத்தெருவில் வேறொரு பொட்டை நாயோடு டைகரை இணைத்துப் பார்க்கவே டமாருக்கு குமட்டியது. அதற்கும் முத்து இன்னொரு ஐடியாவை எடுத்துவிட்டான், முத்து ஒரு ஐடியா மணி. "தோ பாரு டமாரு. நாயின்னா கொஞ்சம் முன்ன பின்ன தானிருக்கும். இப்போ டைகரு ஒழுக்கமா நடந்துக்கணும்னா நீ நெனைச்சியானா அதோட வாலை கொஞ்சம் வெட்டி உட்டுடணும்"

"இன்னாடா சொல்றே முத்து. வாலை வெட்டணுமா?"

"ஆமாண்டா. அய்யிரு வூடுங்கள்ல நீ பாத்ததில்லை. அவுங்கல்லாம் அப்படித்தான் செய்வாங்கோ."

முத்து சொன்னால் சரியாக தானிருக்கும் என்று டமாரு நம்பினான். தெருநாய்களோடு சேர்ந்து டைகர் கெட்டுப்போகாமலிருக்க இதுதான் வழியென்றால் அதை செய்துவிட வேண்டியதுதான் என்று டமாரு முடிவெடுத்தான். டைகரின் வாலை வெட்ட ஒரு சுபமுகூர்த்த சுபதினத்தை குறித்தான். லஸ் கார்னர் பாய் பேன்சி கடையில் பத்து ரூபாய் கொடுத்து ஷார்ப்பாக ஒரு கத்தி வாங்கினான்.

வீட்டில் யாருமில்லாத ஒரு நேரத்தில் நாலு பொறையை எடுத்து டைகரின் முன்னால் போட்டான். போனஸாக எக்ஸ்ட்ரா பொறை கிடைத்த சந்தோஷத்தில் டைகர் வாலை ஆட்டிக்கொண்டே பொறையை மொசுக் மொசுக்கென்று திங்க ஆரம்பிக்க, டமாரு கத்தியை எடுத்தான். அப்போது அவன் முகம் அந்த காலத்து நம்பியார் முகம் போல மாறிப்போனது. முகத்தில் சிகப்பு விளக்கு எரிந்ததைப் போல வில்லன் எஃபெக்ட்.

டைகர் ஆட்டிக் கொண்டிருந்த வாலை நீவி விட்டவன் அப்படியே இழுத்துப் பிடித்து சரக்கென்று கத்தியை போட்டான். கத்திப் பட்டதுமே டைகர் துள்ளிக் குதித்து பெருங்குரலெடுத்து குலைக்க ஆரம்பித்து விட்டது. வாலும் முழுமையாக அறுபடாமல் பாதியாக தொங்கிக் கொண்டிருக்க மேட்டரை சரியாக முடிக்காமல் விட்டுவிட்டோமே என்று கலங்கிவிட்டான் டமாரு.

எப்போதுமே முதலாளி விசுவாசத்தோடு நன்றியான பார்வையை டமாரு நோக்கி செலுத்தும் டைகர் அப்போது வெறிபிடித்த ஓநாயைப் போல ஆவேசமாக காட்சியளித்தது. பக்கத்தில் நெருங்கிய டமாரை சைக்கோ கொலைவெறியோடு பார்த்த டைகர் பாய்ந்து வந்து கண்ணிமைக்கும் நேரத்தில் அவனது கையை கடித்து, சத்தம் போட்டு குலைத்துக் கொண்டே குணா கமல் மாதிரி டமாரை ஆவேசமாக சுற்றி சுற்றி வந்தது. டமாருக்கு குலை நடுங்கிவிட்டது. சடாரென்று கதவை மூடிக்கொண்டு ஓடித்தப்பினான். வீட்டுக்குள் டைகர் வால் வலி தந்த வேதனையில் கோரமாக ஊளையிட்டுக் கொண்டிருந்தது.

டைகர் ரொம்ப ஸ்ட்ராங்காக கடிக்கவில்லையென்றாலும் லைட்டாக குமாரின் கை எரிந்தது. கை வலித்ததை விட தான் செல்லமாக வளர்த்த நாயை இப்படி சின்னாபின்னப் படுத்திவிட்டோமே என்றுதான் அதிகமாக வருத்தப்பட்டான். அன்றிரவு சோகம் தாங்காமல் எப்போதையும் விட கொஞ்சம் அதிகமாகவே குடித்தான். குடித்துவிட்டு வழக்கமாக அவன் போதையில் விழுந்து கிடக்கும் லஸ் கார்னர் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து உட்கார்ந்தான். கண் செருகிக்கொண்டே போனது.

யாரோ தன் முகத்துக்கு அருகே மூச்சு விடுவதைப் போல உணர்ந்தவன் ஒன்றரை கண்ணை லேசாக திறந்துப் பார்த்தான். டைகர். டைகரைப் பார்த்ததுமே உணர்ச்சிவசப்பட்ட டமாரு, தான் அதற்கு இவ்வளவு கொடுமை செய்தும் நன்றியோடு தன்னை தேடி வந்திருக்கிறதே என்ற உணர்ச்சிப் பெருக்கில் டைகரை கட்டியணைத்து முத்தம் தர முயன்றான்.

அவன் கன்னத்தில் தான் முத்தம் தர முயன்றான். அந்த நேரத்தில் டைகர் கொஞ்சம் முகத்தை திருப்பிவிட அதனது உதட்டில் முத்தமிட வேண்டிய நிலை வந்துவிட்டது டமாருக்கு. இவன் முத்தமிட்டமிட்டதுமே குடி நெடி தாங்காத டைகர் ஆவேசமாகி இவனது உதட்டை கடித்து குதறிவிட்டு, வந்த வழியே திரும்பி நிதானமாக ஓடியது. திரும்ப ஓடும்போது தான் கவனித்தான் டமாரு, வால் முழுமையாக இருந்தது. அய்யய்யோ டைகர்னு நெனைச்சின்னு வேற ஏதோ நாய்க்கு முத்தம் கொடுத்து உதட்டை கிழிச்சிக்கிட்டோமே என்று நொந்துப் போனான்.

டீயில் தொட்டு பொறையை சாப்பிடும்போது வாயில் போனது போக மீதி இருக்கும் பொறையின் ஷேப்பை பார்த்திருக்கிறீர்களா? ஒரு மாதிரியாக பிஞ்சிப்போய் அமீபா ஷேப்பில் இருக்கும். இப்பொது டமாரு குமாரின் உதடும் அதுபோல தான் ஒழுங்கற்ற ஒரு வடிவத்தில் இருந்தது. வாலை அறுக்க முயற்சித்த அன்றே டைகர் வீட்டை விட்டு ஓடிவிட்டிருந்தது. அது எங்கேயிருக்கிறது என்று தேடிக்கண்டுபிடிக்கிற மனநிலையில் டமாரு இல்லை.

கிட்டத்தட்ட டைகரை மறந்துவிட்ட நிலையில் ஒரு நாள் மாலை திருவள்ளுவர் சிலைக்கு எதிரேயிருந்த டாஸ்மாக்கில் சரக்கு அடிக்க டமாரு போனான். கடைக்கு எதிரே பாதிவால் அறுந்து ஒப்புக்குத் தொங்கிக்கொண்டிருந்த ஒரு நாய் இன்னொரு பெண் நாயுடன்.. ச்சே.. ச்சே.. எது நடக்கக்கூடாது என்று டமாரு நினைத்தானோ, அது அவன் கண் முன்பாகவே நடந்துகொண்டிருந்தது. எப்போதும் குவார்ட்டர் அடிக்கும் டமாரு அன்று வெறுப்பில் ஹாப் அடித்தான். நாயென்றாலே டமாரு குமாருக்கு வெறுப்பு வந்த கதை இதுதான்.

நேற்று இரவு மெலோடி தியேட்டரில் அடிமைப்பெண் பார்த்துவிட்டு வந்தான். சரக்கடிக்காததால் ஸ்டெடி என்று சொல்லிக் கொள்ளும் ரேஞ்சில் டமாரு இல்லை. தெருமுனைக்கு வந்தபோது எப்போதும் டமாருவை பார்த்து குரைக்கும் கருப்பு நாய் அவன் போதையில் இல்லை என்பதை தெரிந்துகொண்டு அன்று கொஞ்சம் ஓவராகவே குரைத்தது. சூ.. சூ.. என்று டமாரு விரட்டியும், ரெண்டு மூன்று கல்லெடுத்து அடித்தும் கூட அவனை கடிப்பதைப் போல அருகில் வந்து அச்சுறுத்தியது.

வாத்தியார் படம் பார்த்துவிட்டு வந்த வீரத்தாலோ, என்னவோ வாத்தியார் அடிமைப்பெண்ணில் சிங்கத்தை தலைக்கு மேல் தூக்கிப் போடுவதை சடாரென குனிந்து அந்த கருப்புநாயை தலைக்கு மேல் தூக்கி நான்கு சுற்று சுற்றி எங்கேயோ தூக்கிப் போட்டான். ஒரு இருபதடி தூரத்தில் போய் விழுந்திருக்கும் போலிருக்கிறது. வலியில் "அய்யய்யோ.. அம்மா!" என்று கத்தியது.

மறுநாள் காலை டமாரு ட்யூட்டிக்கு கிளம்பும்போது தெருமுனையில் சாவுமோளம் அடித்துக் கொண்டிருந்தது. "எது புட்டிக்கிச்சோ தெரியலையே?" என்ற கேள்வியோடு தெருவில் வந்தபின் தான் தெரிந்தது, அஞ்சலை ஆயா செத்துவிட்டதாம். நேற்று இரவு "அய்யய்யோ.. அம்மா!" என்று கத்தியது நாயல்ல என்பது டமாருக்கு இப்போதுதான் புரிந்தது.