5 அக்டோபர், 2009

3டி தில்லாலங்கடி!


3டி படமென்றாலே நமக்கெல்லாம் உடனடியாக ‘மைடியர் குட்டிச்சாத்தான்’ நினைவுக்கு வந்துவிடும். படம் பார்த்தவர்களின் முகத்துக்கு நேராக கோன் ஐஸ் நீட்டியதும், படம் பார்த்தவர்கள் தம்மை மறந்து கோன் ஐஸை வாங்க காற்றில் கைநீட்டி ஏமாந்ததும் இனிப்பான மலரும் நினைவுகள் அல்லவா?

3டி படங்களைப் பார்க்க சிறப்புக் கண்ணாடி தேவை. இதை தியேட்டர்களில் பார்வையாளர்களுக்கு வினியோகிப்பதும், திரும்பப் பெறுவதும் சிக்கலான மற்றும் நேரத்தை விழுங்கும் காரியமென்பதால் தியேட்டர் ஊழியர்களிடையே 3டி படங்களுக்கு பெரிய வரவேற்பு இல்லை. அதுவுமின்றி நம்மூரில் 3டி படங்களுக்கான சாத்தியமென்பதே மந்திர மாயாஜால, புராணப்படங்களுக்கு தான் என்பதாலும் தொடர்ந்து 3டி படங்களை பெரும் பொருட்செலவில் தயாரிக்க தயாரிப்பாளர்களும் தயாராக இல்லை. சில சிறப்பு கேமிராக்களை வைத்து 3 பரிமாணங்களில் படமாக்க வேண்டியிருந்த்தால் தயாரிப்பு செலவு, சாதாரணப் படங்களை விட இருமடங்கு அதிகமாகியது என்பதும் மற்றொரு காரணம்.

இருபத்தைந்து ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழில் 3டி மறுமலர்ச்சி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகப்பிரகாசமாக காணப்படுகிறது. இடைபட்ட காலக்கட்டத்தில் தொழில்நுட்பம் நாலு கால் பாய்ச்சலில் அல்ல, நாலாயிரம் கால் பாய்ச்சலில் முன்னேறியிருக்கிறது. அனிமேஷன் முறையில் உருவாக்கப்படும் 3டி ஹாலிவுட் படங்கள் உலகெங்கும் குழந்தைகளை மட்டுமன்றி பெரியவர்களையும் கட்டிப் போட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த 3டி படங்களை காண சிறப்புக் கண்ணாடியெல்லாம் தேவையில்லை. ஆனால் கோன் ஐஸ் உங்கள் முகத்துக்கு நேராக நீட்டப்படும் எஃபெக்ட் எல்லாம் கிடைக்காது என்றாலும், அதைவிட சிறப்பான அனுபவம் அரங்கில் கிடைக்கிறது.

திரையரங்குகளும் இந்த 3டி அனிமேஷன் படங்களை திரையிட தகுந்தவாறு தங்களது அரங்க உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வைத்திருக்கின்றன. சென்னை சத்யம் சினிமாஸ் திரையரங்க வளாகத்தில் 3டி அனிமேஷன் திரைப்படங்களை மட்டுமே திரையிட தனி அரங்கு இருக்கிறது. ஒலி, ஒளி துல்லியத்தோடு 3டி படங்களை ரசிக்கும் ரசிகர்கள் எப்போதுமே இந்த அரங்குக்கு ‘ஹவுஸ்ஃபுல்’ போர்டு மாட்ட வைக்கிறார்கள் என்று மகிழ்ச்சியோடு சொல்கிறார்கள் இந்த தியேட்டர் நிர்வாகத்தினர்.

ஃபைண்டிங் நிமோ, ரேட்டட்டைல், ஐஸ் ஏஜ், மான்ஸ்டர்ஸ், கார்ஸ், வால்-ஈ, தி இன்க்ரிடிபிள்ஸ், குங்பூ பாண்டா போன்று 3டி அனிமேஷனில் உருவாக்கப்பட்ட ஏராளமான படங்கள் யாரும் எதிர்பாராத பிரம்மாண்ட வெற்றிகளை கண்டது. மனிதர்களை படமாக்கி உருவாக்கும் வழக்கமான படங்களுக்கு ஆகும் செலவை விட பன்மடங்கு செலவினை 3டி படங்களுக்கு செய்யவேண்டியிருக்கிறது. செய்தாலும் லாபம் உத்தரவாதம் என்ற நிலையில் ஹாலிவுட் ஸ்டுடியோக்கள் அடுத்தடுத்து 3டி படங்களை மும்முரமாக உருவாக்கி வருகின்றன.

3டி அனிமேஷனில் ஒரு வசதி என்னவென்றால் விலங்குகளை பேசவைக்கலாம். ஹீரோவை அனாவசியமாக பறக்க வைக்கலாம். ஆயிரம் பேரை அடிக்க வைக்கலாம். யாருமே லாஜிக்கலாக ஏனென்று கேட்கமாட்டார்கள். எனவே திரைக்கதை ஆசிரியர் தன் கற்பனைக்குதிரையை இஷ்டத்துக்கு தட்டிவிட்டு வேலை வாங்கலாம். ஃபைண்டிங் நிமோ படத்தில் மீன் தான் ஹீரோ. குங்ஃபூ பாண்டா படத்தில் கரடி தான் ஹீரோ. இவையெல்லாம் மனிதர்களைப் போலவே பேசுகின்றன, பாடுகின்றன, ஆடுகின்றன, பஞ்ச் டயலாக் பேசுகின்றன. அவற்றுக்கும் செண்டிமெண்ட் உண்டு.

சமீபகாலமாக இப்படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டும் வெளியிடப்படுகிறது. ஆங்கிலத்தில் வந்தபோது பெருநகரங்களில் மட்டுமே ரசிக்கப்பட்டுக் கொண்டிருந்த இப்படங்கள் இப்போது தமிழ்நாடு முழுவதும் எல்லாத் தரப்பினராலும் நன்கு வரவேற்கப்படுகிறது. அழுகாச்சி, நம்பமுடியாத சாகசங்கள், அரசியல் பஞ்ச் டயலாக் என்று சில ஆண்டுகளாக வந்த தமிழ் சினிமாப்படங்களை பார்த்து நொந்துப் புண்ணாகிப்போன உள்ளங்களுக்கு ஆங்கில டப்பிங் படங்கள் புனுகு பூசுகின்றன. குறிப்பாக 3டி அனிமேஷன் படங்களை குழந்தைகள், குடும்பத்தோடு ரசிக்க இயலுகிறது.

மக்களின் இந்த எதிர்பார்ப்புகளை புரிந்துகொண்டவர்கள் இப்போது இந்தியாவிலும் 3டி அனிமேஷன் படங்களை உருவாக்கத் தயாராகிவிட்டார்கள். கால்ஷீட் பிரச்சினை, பாரின் லொகேஷன்கள் தொந்தரவு இல்லாமல் அனிமேஷன் ஸ்டுடியோக்களில் இலகுவாக படமாக்கமுடிகிறது. நினைத்த விஷயத்தை எந்தவித காம்ப்ரமைஸுக்கும் இடம் கொடுக்காமல் ஒரு இயக்குனரால் எடுக்க முடிகிறது என்றால், இன்றைய தேதியில் அது 3டி அனிமேஷன் படங்களுக்கே சாத்தியம்.

இந்தியாவின் முதல் 3டி படம் என்று விளம்பரப்படுத்தப்பட்டு சில மாதங்களுக்கு முன்பாக ‘இனிமே நாங்கதான்’ என்ற படம் தமிழில் வெளிவந்தது. மாயபிம்பம் என்ற நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கினார் வெங்கிபிரபு. இயக்குனர் ஷங்கர் படங்களுக்கெல்லாம் அனிமேஷன் செய்து தேசிய விருது பெற்றாரே? அதே வெங்கிதான். இளையராஜா இசையமைத்தார். வாலி பாடல்கள் எழுதியிருந்தார். முழுக்க முழுக்க இப்படம் சென்னையிலேயே உருவாக்கப்பட்டது. இப்படம் குழந்தைகளை கவர்ந்தாலும், எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. காரணம், கதை. அரதப்பழசான பஞ்சதந்திரப் பாணியிலான கதையாக அமைந்துவிட்டதால் பெரியவர்களின் ஆதரவை பெறமுடியவில்லை. இருப்பினும் 96 நிமிடத்திற்கு எடுக்கப்பட்ட இந்த முழுநீளப்படம், தமிழில் அடுத்தடுத்து 3டி படங்கள் வெளிவர இப்படம் முன்னோடியாக அமைந்துவிட்டது.

இப்போது இந்தியா முழுவதும் 3டி அனிமேஷன் படங்களை உருவாக்க பலரும் முயற்சித்து வருகிறார்கள். தமிழில் ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் ‘சுல்தான் தி வாரியர்’ என்ற திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். இதில் ரஜினியின் உருவத்தையே கம்ப்யூட்டரில் உருவாக்கி சுல்தானாக உலவ விட்டிருக்கிறார். சவுந்தர்யாவின் ஆக்கர் ஸ்டுடியோஸ் நிறுவனம், அயல்நாட்டு அனிமேஷன் பணியாளர்களை பணிக்கு அமர்த்தி இரவுப்பகலாக இத்திரைப்படத்தை உருவாக்கி வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ரஜினி ரசிகர்களிடம் மட்டுமன்றி பொதுவாக எல்லாத் தரப்பினரிடமும் இப்படத்துக்கான எதிர்ப்பார்ப்பு ஏகத்துக்கும் இருக்கிறது. பல கோடி செலவில் உருவாக்கப்படும் இப்படம் வெற்றி கண்டால், தமிழில் 3டி அனிமேஷன் படங்கள் வரிசையாக அணிவகுத்து வரும்.

ஏற்கனவே இந்திய மொழிகளில் நிறைய 3டி அனிமேஷன் படங்கள் உருவாக்கப்பட்டு வந்துகொண்டிருக்கின்றன. இவையெல்லாம் பெரும்பாலும் பாலகணேஷ், அனுமன், கடோத்கஜன் என்று புராண கதாபாத்திரங்களை நாயகர்களாக கொண்ட படங்கள். 3டி அனிமேஷனில் குழந்தைகளுக்கான படங்களை தான் உருவாக்க முடியும் என்று இந்தியாவில் கருதுகிறார்கள். குழந்தைகள் புராணங்களையும், கடவுளர்களையும் தான் ரசிப்பார்கள் என்ற மூடநம்பிக்கையும் இங்கே அதிகமாக இருக்கிறது. ‘சுல்தான் தி வாரியர்’ போன்று மசாலா நோக்கில் எடுக்கப்படும் அனிமேஷன் படங்கள் வெற்றி பெறுமானால், இந்த ட்ரெண்ட் மாறும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

11 கருத்துகள்:

  1. ஹாலிவுட் அனிமேஷன் படங்கள் 3d-இல் இன்றும் கண்ணாடியோடு தான் கண்பிக்கபடுகிறது. உதாரணத்துக்கு, ராடடுய், குங்க்பு (ஆமா, ஆச்சரிய குறி எப்படி போடறது) பாண்டா போன்ற படங்கள் சில தியேட்டர்களில் கண்ணாடியோடு நீங்கள் சொல்லும் கோன் ஐஸ் எபெக்ட்-ஓடும் பார்க்கலாம். சாதரணமாகவும் (அதே படத்தை dvd-இல் பார்ப்பது போல) திரையிடப்ப்டுகிறது. இப்போது வரும் அனிமேஷன் பொம்மைகள் மொழுக்கென்று இருப்பதாலேயே அவை 3d ஆகிவிடாது. கண்ணாடி போட்டால் தான் 3d. கிராபிக்ஸ் சார்ந்த கம்பெனியில் குப்பை கொட்டும் அனுபவத்தை வைத்து இதை சொல்கிறேன். சொல்ல வந்த விஷயம் அஷ்டே வாத்தியாரே.

    பதிலளிநீக்கு
  2. நல்ல பதிவு கிருஷ்ணா... உங்க ப்ரொபைல் போட்டோ கூட 3D மாதிரி தெரியுதே.... நிஜமாவா....??

    பதிலளிநீக்கு
  3. அருமையான பதிவு...

    //3டி அனிமேஷனில் குழந்தைகளுக்கான படங்களை தான் உருவாக்க முடியும் என்று இந்தியாவில் கருதுகிறார்கள். குழந்தைகள் புராணங்களையும், கடவுளர்களையும் தான் ரசிப்பார்கள் என்ற மூடநம்பிக்கையும் இங்கே அதிகமாக இருக்கிறது. ‘சுல்தான் தி வாரியர்’ போன்று மசாலா நோக்கில் எடுக்கப்படும் அனிமேஷன் படங்கள் வெற்றி பெறுமானால், இந்த ட்ரெண்ட் மாறும் என்ற நம்பிக்கை இருக்கிறது.//

    உங்கள் நம்பிக்கை தான் பலரின் எதிர்பார்ப்பு.. இந்த மாற்றம் வந்தால் நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  4. தலைவரே நீங்க சொல்லும் 3டி படத்துக்கும், கார்டூன் 3டி படத்திற்கும் வித்யாசம் இருக்கிறது.. அது வேறு இது வேறு..

    பதிலளிநீக்கு
  5. கேபிள் சங்கர், நட்ராஜ்!

    3வது பாராகிராப்பை திரும்பவும் படிக்கவும் :-)

    இப்பதிவு 3டி அனிமேஷன் படங்கள் பற்றியது! நானும் 3டி மேக்ஸ், மாயாவெல்லாம் கத்துக்கிட்டிருக்கேங்க :-)

    பதிலளிநீக்கு
  6. கொஞ்சம் குழம்பி விட்டேன், உங்கள் பின்னூட்டம் பார்த்த பின்புதான் சொல்ல வருவது புரிந்தது.

    இப்போது 3டி(கண்ணாடி அணிந்து பார்ப்பது) படங்கள் சத்யம் திரையரங்கில் அதிகம் காண்பிக்கப்படுகின்றன. Journey to the center of the earth ல் ஆரம்பித்தது, தொடர்ந்து அந்த மாதிரி படங்களாகவே வருகிறது. இதில் நீங்கள் சொன்ன இரண்டாவது 3D Animation படங்களும் அடங்கும். இந்தக் கண்ணாடி, பழைய சிவப்பு-நீலம் வண்ணக் கலவையில் இல்லை, இது வேறு மாதிரி இருக்கிறது (சாதாரண கூலிங்கிலாஸ் மாதிரி, ஆனால் கொஞ்சம் பெரியது). தற்போது 3 படங்கள் ஓடுகின்றன, அதில் 2 அனிமேசன் படங்கள்.

    நீங்கள் சொன்னைவைகளில் வால் இ, குங்பூ பாண்டா, பைண்டிங் நிமோ அட்டகாசமான படங்கள்.

    பதிவு அருமை.

    பதிலளிநீக்கு
  7. Hi,
    I don't think there is any link between the 3d films like my dear kuttichathan and 3d animation.
    Initially animation characters were 2D like old tom and jerry cartoons but recent animation films like nemo are 3D.
    We can compare these 3D animation films with our ordinary tamil movies (All movies are 3 dimensional)

    I re read the 3rd para but i think ur view is very much wrong.

    Regards,
    Natarajan k r

    பதிலளிநீக்கு
  8. லக்கி, மைடியர் குட்டிச்சாத்தான் போன்ற 3D படங்களைப் பற்றி எழுதத் தொடங்கி, பின்னர் பாண்டா 3D படங்களைப் பற்றிச் சொல்வதால் படிப்பவர்கள் குழப்பம் அடையலாம். ஏன்னா, நாங்க எல்லாம் மாயாவெல்லாம் படிக்கலை ;-)

    பதிலளிநீக்கு
  9. //ஃபைண்டிங் நிமோ, ரேட்டட்டைல், ஐஸ் ஏஜ், மான்ஸ்டர்ஸ், கார்ஸ், வால்-ஈ, தி இன்க்ரிடிபிள்ஸ், குங்பூ பாண்டா போன்று 3டி அனிமேஷனில் உருவாக்கப்பட்ட ஏராளமான படங்கள் யாரும் எதிர்பாராத பிரம்மாண்ட வெற்றிகளை கண்டது.//

    செம காமெடி சார் நீங்க... இதெல்லாம் எதிர்பாராம வெற்றியடைந்த படங்களா?

    பதிலளிநீக்கு