முதல் பாகம் : துப்பாக்கிக் குழாயில் அரசியல் அதிகாரம்!
“எங்கு பார்த்தாலும் ஊழல். ஊழலற்ற எதுவுமே இந்த நாட்டில் இல்லை. நாட்டையே சுரண்டி கொள்ளையடிக்க தான் எல்லோருமே விரும்புகிறார்கள். இந்த கொடுமைகளுக்கு தீர்வாக சுரண்டல்வாதிகள் சிலரையாவது பொதுமக்கள் முன்னிலையில் தூக்கில் தொங்க விடவேண்டும். அப்போது தான் மற்றவர்களுக்கு அது பாடமாக இருக்கும்” உணர்ச்சிக் கொந்தளிப்போடு இந்த வார்த்தைகளை உச்சரித்தவர் ஒரு நக்சல்பாரி அல்ல. இந்தியாவின் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய காட்ஜு. ஆயிரம் கோடி ரூபாய் ஊழலில் சம்பந்தப்பட்ட பீகாரைச் சேர்ந்த பிராஜ் பூஷன் பிரசாத் என்பவர் பெயில் கேட்ட வழக்கின்போது காட்ஜு சொன்ன வார்த்தைகள் இவை. தன்னையே ஒரு கணம் மறந்துவிட்டு நீதிபதி சொன்ன கருத்தாக கூட இருக்கலாம். ஆனால் இந்தக் கருத்து நியாயமானதா, இல்லையா என்பதை நம் ஒவ்வொருவர் மனச்சாட்சியையும் கேட்டுப் பார்த்துக்கொள்ள வேண்டும். உச்சநீதிமன்ற நீதிபதியே உணர்ச்சிவசப்பட்டு சொன்ன இந்த கருத்தை தான் நக்சல்பாரிகள் சிரமேற்கொண்டு செய்து வருகின்றனர். மாவோயிஸ்டுகளின் ஜன் அதாலத் (மக்கள் நீதிமன்றங்கள்) வலியுறுத்துவதும் இதுபோன்ற தீர்ப்பை தான்.
மேற்கு வங்கத்தின் வடகிழக்கு முனையில் இருக்கும் மிகச்சிறிய கிராமம் நக்சல்பாரி. இமயமலையின் அடிவாரத்தில் இருக்கிறது. டார்ஜிலிங் மாவட்டம், சிலிகுரி வட்டம். ஆயிரக்கணக்கான இந்திய கிராமங்களைப் போலவே இங்கும் விவசாயிகளிடம் நிலப் பிரபுக்கள் சுரண்டி கொழுத்துக் கொண்டிருந்தார்கள். அடக்குமுறை கொடுமைகளை எதிர்த்து வாய் பேச இயலா ஊமைகளாக உழைப்பாளிகள் வாழ்ந்தார்கள்.
இரத்தத்தையும், தியாகத்தையும் தோய்த்தெடுத்து எழுதப்படும் செங்கொடியின் வீரவரலாறு தொடங்கியது இங்கேதான். ‘துப்பாக்கி முனையில் அரசியல் அதிகாரம் பிறக்கிறது' என்ற மார்க்சிய லெனினிய மாசேதுங் சிந்தனைகளை உயர்த்திப் பிடித்து நக்சல்பாரி உழவர்களின் ஆயுதமேந்திய புரட்சி வெடித்தது. உழவர்கள் மட்டுமன்றி சிலிகுரி மாவட்டத்தின் தேயிலைத் தொழிலாளர்களும் இந்தப் புரட்சியின் போது வீறுகொண்டு எழுந்தார்கள்.
1967ஆம் ஆண்டு ‘கிராமப்புற புரட்சியின் மூலமாக அதிகாரத்தை கையகப்படுத்துதல்' எனும் கருத்தாக்கத்தை மையப்புள்ளியாக வைத்து சாரு மஜூம்தார் என்ற நாற்பத்தொன்பது வயது கம்யூனிஸ்ட்டு தலைவர் தன்னுடைய நண்பரான கானு சன்யால் என்பவரோடு இணைந்து நக்சல்பாரி இயக்கத்தை கட்டமைக்கிறார். நக்சல்பாரி கிராமத்தில் இந்த எழுச்சிக்கான விதை விதைக்கப்பட்டதால் இவர்கள் பிற்பாடு நக்சல்பாரிகள் என்று அழைக்கப்பட்டனர்.
அப்போது அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் வெடித்த நக்சல்பாரிகளின் புரட்சி பல நிலைகளை தாண்டி நீறுபூத்த நெருப்பாக இன்று இந்திய மாநிலங்களில் கனன்று கொண்டிருக்கிறது. நக்சல்பாரிகளின் புரட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரிவினைக்கும் அடிகோலியது. மேற்கு வங்கத்தில் ஆண்டுகொண்டிருந்த கம்யூனிஸ்ட் கூட்டணி அரசு கம்யூனிஸ்டுகளை பிரதிநிதித்துவப் படுத்தாமல் மத்தியில் ஆண்டுகொண்டிருந்த காங்கிரஸ் கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்ற மிகப்பெரிய குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து கட்சியிலிருந்து ஒதுக்கப்பட்ட புரட்சியாளர்கள் நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டார்கள். தங்கள் தரப்புக்கு ஆதரவு திரட்டினார்கள்.
“பெரும் நில முதலாளிகளிடமிருந்து நிலங்களை பிடுங்கி ஏழைகள் பங்கிட்டு கொள்ள வேண்டும். ஏழைகளே நேரடி நடவடிக்கைகளில் இறங்கி தங்களுக்கான நிலத்தை எடுத்துக் கொள்வார்கள்” என்று திடீரென சாரு மஜூம்தார் அறிவிக்க நாடே கலங்கிப் போனது. மேற்கு வங்காளத்தில் கூட்டணி ஆட்சிப் பொறுப்பினை ஏற்றிருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), தன் கட்சியில் இரண்டாம் கட்டத் தலைவராக இருந்த ஒருவர் இதுபோன்று அறிவிப்பார் என்று எதிர்பார்க்கவில்லை. ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர்களுக்கு சிக்கலை அளித்தாலும் தீவிர கம்யூனிஸ்டுகள் சாருவின் அறிவிப்பை வரவேற்றார்கள். நக்சல்பாரிகளின் எழுச்சி இந்திய மக்கள் புரட்சியை வெடிக்கச் செய்யும் என்று நம்பினார்கள். மேற்கு வங்காளத்தில் இளையதலைமுறையினர் பலர் சாருவை பின்பற்றிச் செல்ல தங்கள் குடும்பங்களை துறந்தார்கள்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அப்போது பலமாக இருந்த உத்தரப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், பீகார், ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்த திடீர் புரட்சியாளர்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இவர்கள் ஒன்றிணைந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிரான கலகக்காரர்களாக செயல்பட்டார்கள். கட்சியின் கொள்கைகளை விளக்க தேசப்ரதி, லிபரேஷன், லோக்யுத் ஆகிய பத்திரிகைகள் தொடங்கப்பட்டன.
ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஆயுதமேந்திய கிராமக்குழுக்களை உருவாக்கினார்கள். நிலப்பிரபுக்களின் பட்டாக்களையும், அவர்களிடம் தாங்கள் அடகுவைத்திருந்த கடன்பத்திரங்களையும் கைப்பற்றி கொளுத்தினார்கள். ஜன் அதாலத் என்று அழைக்கப்படும் மக்கள் நீதிமன்றங்களை அமைத்து வர்க்க எதிரிகளை கூண்டிலேற்றி விசாரித்து கடுமையான தண்டனைகளை வழங்கினார்கள். கொடுங்கோல் ஆட்சி புரிந்த நிலப்பிரபுக்களுக்கு உச்சபட்ச தண்டனையான தூக்குத் தண்டனை மக்கள் நீதிமன்றங்களில் வழங்கப்பட்டது.
சீன கம்யூனிஸ்ட் கட்சி சாரு மஜூம்தாரின் அறிவிப்பினை கொண்டாடியது. ‘வசந்தத்தின் இடிமுழுக்கம்' என்று பெயரிட்டு மகிழ்ந்தது. சீன கம்யூனிஸ்டுகள் கொண்டாடினாலும் அதை இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) வரவேற்கவில்லை. நக்சல்பாரிகளை அடக்கும் முயற்சியில் அங்கே ஆளும் கம்யூனிஸ்ட்டு கட்சி அரசு இயந்திரத்தை பயன்படுத்தியது. நக்சல்பாரிகளை கண்டு ஆளும் கட்சிகள் “பயங்கரவாதம்” என்று குரலெழுப்பத் தொடங்கினார்கள். நக்சல்பாரிகளோ தாங்கள் நடத்துவது தங்களது உரிமைப்போர் என்று நியாயப்படுத்தினார்கள். அறுவடை செய்யப்பட்ட தானியங்கள் விவசாயிகளுக்கு சமமாக பங்கிடப்பட்டது. வயல்கள் தோறும் செங்கொடி பறந்தது.
(புரட்சி தொடர்ந்து மலரும்)
interesting one
பதிலளிநீக்குநல்ல வரலாற்றுச் செய்திகள். முறையாக விசாரிக்கப்பட்ட குற்றங்களுக்கு, தண்டனை கடுமையாக இருக்க வேண்டும் என்பது என் கருத்து.
பதிலளிநீக்குஇது போன்ற புரட்சி குழுக்கள் தேவை தான் போலும்.
அருமை நண்பரே. வாழ்க வளமுடன்.