30 அக்டோபர், 2009

இடியுடன் கூடிய மழை!

முதல் பாகம் : துப்பாக்கிக் குழாயில் அரசியல் அதிகாரம்!
இரண்டாம் பாகம் : வசந்தத்தின் இடிமுழக்கம்!

1967ல் மார்ச்சில் தொடங்கிய நக்சல்பாரி எழுச்சியை ஒடுக்க மாநில காவல்துறை பிரம்மப் பிரயத்தனம் செய்ய வேண்டியதாயிற்று. புரட்சியை தூண்டிவிட்ட தலைவர்களை கைதுசெய்ய அதே ஆண்டு மே 23ஆம் தேதி சென்ற காவல்துறையினர் நக்சல்பாரிகளால் கடுமையாக தாக்கப்பட்டார்கள். காவல்துறையினரே தாக்கப்பட்டதால் உச்சபட்ச வலுவோடு நக்சல்பாரிகளை ஒடுக்க சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டது. நக்சல்பாரிகள் மீது ஏவப்பட்ட அடக்குமுறை பச்சைவயல்களை செந்நிறமாக்கியது. மே 25ல் நக்சல்பாரி கிராமத்தில் ரத்த ஆறு ஓடியது. போலிஸ் துப்பாக்கிச் சூட்டில் ஆறு பெண்கள், இரண்டு குழந்தைகள் உட்பட பதினொன்று பேர் மாண்டார்கள். இரண்டு மாதங்கள் கடுமையாக போராடிய பின்னரே நக்சல்பாரி கிராமத்தை காவல்துறையினரால் கட்டுக்குள் கொண்டுவர முடிந்தது.

ஆனால் காவல்துறையால் நக்சல்பாரி கிராமத்தை மட்டுமே தற்காலிகமாக அடக்கமுடிந்தது. நக்சல்பாரி புரட்சி நாடு முழுவதும் பரவியது. தெற்கில் ஆந்திரா, கேரளா மாநிலங்களில் நக்சல்பாரிகள் காலூன்றினர். பீகார், உத்தரப் பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் நக்சல்களின் செங்கொடி பறக்க ஆரம்பித்தது.

நக்சல்பாரி புரட்சியால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்டது. சாரு மஜும்தாரும், கானு சன்யாலும் இணைந்து இந்திய கம்யூனிஸ்ட்டு புரட்சியாளர்கள் ஒருங்கிணைப்புக் குழுவினை தொடங்கினார்கள். நாடெங்கும் இருக்கும் கம்யூனிஸ்ட்டு ஆதரவாளர்கள் சாருவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் அணி திரளத் தொடங்கினார்கள். நக்சல்பாரிகளின் போராட்டம் வெறுமனே விளைநிலங்களுக்கான போராட்டமல்ல, அரசியல் அதிகாரத்தை கைப்பற்றும் போராட்டம் என்று அறிவித்து “உழுபவருக்கே நிலம், உழைப்பவருக்கே அதிகாரம்!” என்ற கோஷத்தை நாடெங்கும் ஒலிக்கச் செய்தார்கள் நக்சல்பாரிகள். இவர்களது வர்க்கப் போராட்டம் காட்டுத்தீயாய் நாடெங்கும் பரவியது.

ரஷ்யப் புரட்சியாளரான லெனினின் நூறாவது பிறந்ததினமான ஏப்ரல் 22ஆம் நாளில் 1969ஆம் வருடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) என்ற பெயரில் அரசியல் கட்சியாக உருவெடுத்தார்கள். சாரு மஜூம்தார் கட்சியின் மத்திய அமைப்பினுடைய செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கிறித்துவர்களுக்கு கிறிஸ்துமஸ் போல கம்யூனிஸ்டுகளுக்கு மே 1. அதே ஆண்டு மே ஒன்றாம் தேதி கொல்கத்தாவில் பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் கூடியது. கட்சியின் முன்னணித் தலைவரான கானு சன்யால் உறுதிமொழி எடுத்துக் கொண்டிருந்த நேரத்தில் மோதல் வெடித்தது. கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) தொண்டர்களுக்கும், கூடியிருந்தவர்களுக்கும் இடையே ஏற்பட்ட உரசல், ஆயுதங்களோடு மோதிக்கொள்ளும் அளவுக்கு உக்கிரமானது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருடனான தொடர்மோதலுக்கு அச்சாரம் இட்ட சம்பவம் இது.

நிலங்களை தாண்டி நக்சல்பாரிகளின் போராட்டம் தொழிற்சாலைகளுக்கு பரவியது. பாட்டாளிகள் பலரும் அணிதிரண்டார்கள். வேலை நிறுத்தம் செய்தால் கதவடைப்போம் என்று மிரட்டிய ஆலை அதிபர்கள் வயிற்றில் புளியை கரைத்தார்கள். நக்சல்பாரி தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் என்பதையும் தாண்டி முதலாளிகளை நோக்கிய முற்றுகைப் போராட்ட வழிமுறைகளை கையாண்டார்கள். முதலாளியை ஒரு அறையில் அடைத்து சுற்றி முற்றுகை இடுவதே இந்தப் போராட்டம். கிட்டத்தட்ட சிறைப்படுத்துதல். விவசாயிகளுக்கும், பாட்டாளிகளுக்கும் அரசியல் கற்றுத் தந்தார்கள் நக்சல்பாரிகள்.

இக்கட்சி நாடெங்கும் கொரில்லாக் குழுக்களை உருவாக்கியது. இந்த கொரில்லாக் குழுக்களின் முக்கியப் பணி ‘அழித்தொழிப்பு'. அழித்தொழிப்பு என்றால் என்னவென்று சாருவின் வார்த்தைகளிலேயே வாசித்தால் தான் புரியும். 1969ல் தமிழ்நாட்டுக்கு வந்த சாரு மஜூம்தார் தனது ஆதரவாளர்களிடையே பேசும்போது, “வர்க்க எதிரிகளை கொன்று குவித்து அவர்களது இரத்தத்தை மண்ணில் சிந்தச் செய்பவர்களே புரட்சியாளர்களாக வரலாற்றில் இடம்பெறுவார்கள். கிராமங்களில் கட்சியின் ரகசிய கொரில்லாக் குழுக்க அமைக்கப்பட வேண்டும். ஏழை எளியவர்களிடம் அதிக வட்டிக்கு கடன் கொடுத்து அவர்களின் சொத்துக்களை அபகரிப்பவர்கள், கொடுங்கோல் மனப்பான்மை கொண்ட நிலமுதலாளிகள் மற்றும் பள்ளி, கோயில் நிலங்களை அபகரித்து வயிறு வளர்ப்பவர்களை நம் குழு அழித்தொழிக்க வேண்டும். அழித்தொழிப்பு பணிகளை மிக விரைவாகவும் செய்யவேண்டும்”.

அழித்தொழிப்பு என்ற சொல்லுக்கு இப்போது அர்த்தம் புரிகிறதா? சட்டப்பூர்வமான மொழியில் சொல்வதாக இருந்தால் ‘கொலை' என்றும் சொல்லலாம். ஆயுத வழியிலான போராட்டங்களில் ஈடுபட்ட இக்கட்சி பாராளுமன்ற - சட்டமன்ற ஓட்டுவங்கி அரசியலை முற்றிலுமாக புறக்கணித்தது.

நக்சல்பாரிகளின் அழித்தொழிப்புப் பணிகளை முடக்க அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்தது. ஆங்காங்கே நக்சல்பாரிகளுக்கும், காவல்துறையினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச்சண்டை நடந்தது. பீகார் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நிலப்பிரபுக்களை, இடைத்தரகர்களை கொன்று அடகுவைக்கப்பட்ட விவசாயிகளின் விளைநிலங்களை மீட்டார்கள். பஞ்சாபில் போலிஸ் அதிகாரிகளும், பணக்கார நில உடமையாளர்களும் நக்சல்பாரிகளால் கொல்லப்படுவதற்காக குறிவைக்கப்பட்டனர். குறிப்பாக சொல்ல வேண்டுமானால் ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் என்ற பகுதியை தன்னாட்சி பெற்ற பகுதியாக நக்சல்பாரிகள் அறிவித்து ஆட்சி செய்தனர். மேற்கு வங்காளம், ஒரிஸ்ஸா உள்ளிட்ட மாநிலங்களில் பழங்குடியினத்தவரின் ஆதரவு நக்சல்பாரிகளுக்கு பெருமளவில் இருந்தது.

போராட்டங்களை வடிவமைத்து வழிநடத்திய நக்சல்பாரிகள் நாடெங்கும் காவல்துறையினரால் வேட்டையாடப் பட்டார்கள். உயிர் பிழைத்தவர்கள் குற்றுயிரும், குலையுயிருமாக நீதிமன்றங்களின் முன் நிறுத்தப்பட்டார்கள். “வர்க்க எதிரிகளை மக்கள் நலனுக்காக அழித்தொழித்தோம். எங்களுக்கு தூக்குத்தண்டனை கொடுங்கள்” என்று நீதிமன்றங்களில் கலகக்குரல் எழுப்பினார்கள். மக்களுக்கு காவல்துறை மீதிருந்த அச்சம் அகன்றது. சட்ட, பாராளுமன்ற, நீதிமன்றங்களின் மீது மக்களுக்கு இருந்த புனிதமாயை அகன்றது.

(புரட்சி தொடர்ந்து வெடிக்கும்)

1 கருத்து: