15 அக்டோபர், 2009
டுக்.. டுக்.. டுக்...
சென்னை-28 திரைப்படத்தின் கிரிக்கெட் பட்டாளம் மாதிரி கலாட்டாவாக இருக்கிறது இந்த இளமை டீம். நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த என்.ஜி.ஓ. அமைப்பு நடத்திய போட்டி ஒன்றில் வெற்றிவாகை சூடிய தெம்பு ஒவ்வொருவரின் முகத்திலும் பளிச்சிடுகிறது. இப்போது இவர்கள் தான் எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத்தின் செல்லப் பசங்க. ஆட்டோப் பசங்க.
“மீடியாக்காரங்க போட்டோவுக்கு போஸ் கொடுத்தே டயர்ட் ஆயிட்டேம்பா” என்று டீம்லீடர் அங்கூர் சிணுங்க, மற்றவர்கள் ரவுண்டு கட்டி ஜாலியாக முதுகில் குத்துகிறார்கள்.
பல்கலைக் கழகத்தின் ஆட்டோமொபைல் ஷெட் பளிச்சென்று, பக்காவாக இருக்கிறது. ஷெட்டில் இருப்பவர்கள் யார் கையிலும் க்ரீஸ் கறை பேருக்கு கூட இல்லை. தரை சுத்தமோ சுத்தம். சம்மணமிட்டு அமர்ந்து சோறு சாப்பிடலாம். “ஹலோ இது ஆட்டோமொபைல் ஷெட்டா? இல்லைன்னா கம்ப்யூட்டர் லேபா?” என்று கேட்டால், “ஷெட்டுன்னு எல்லாம் சொல்லக்கூடாது. இதையும் லேப்புன்னு தான் சொல்லணும்” என்று சீரியஸாக அட்வைஸ் செய்கிறார்கள்.
ஆங்காங்கே நின்று கொண்டிருக்கும் வினோத வடிவ வாகனங்களைப் பார்க்கும்போது ஏதோ சயன்ஸ் பிக்ஷன் ஹாலிவுட் படங்களுக்கு மாடல் தயாரிக்கிறார்களோ என்று சந்தேகம் வருகிறது. விசித்திரமாக காட்சியளித்த குட்டிவிமானம் இருந்த ஒன்றைப் பார்த்து, “இதிலே உட்கார்ந்துட்டு எத்தனை பேர் பறக்கலாம்?” என்றால், “உங்க ஊருலே காரெல்லாம் கூட பறக்குமா?” என்று கலாய்க்கிறார்கள். விரைவில் இவர்கள் கால இயந்திரம் கூட தயாரித்து விடுவார்கள் போலிருக்கிறது.
ஓர் ஓரமாக அமைதியாக கவர்ச்சியான சாக்லேட் வண்ணத்தில் நிற்கிறது அந்த ‘டுக் டுக்..’
“அதென்னங்க பேரு டுக் டுக்?”
“பாரின்லே எல்லாம் ஆட்டோன்னு சொல்ல மாட்டாங்க. ‘டுக் டுக்’னு தான் சொல்வாங்க. ரோட்டுலே ஆட்டோ ஓடுறப்போ வர்ற சவுண்டை கவனிச்சிங்கன்னா தெரியும். ‘டுக்.. டுக்.. டுக்..’னு ஒரு ரிதம் பேக்கிரவுண்ட்லே நைசா ஓடிக்கிட்டே இருக்கும்” நீலக்கலரில் உடை அணிந்திருந்த ஒருவர் அக்கறையாக நமக்கு விவரிக்க, டீமில் இருந்த பரத், “ஏய் யாருய்யா நீயி? உன்னை நம்ம ப்ராஜக்ட்டுலே நான் பார்த்ததே இல்லையே?” என்று மிரட்டுகிறார்.
“சாரி பாஸ். நான் வேற ப்ராஜக்ட்டுலே இருக்கிறேன். சும்மா எட்டிப் பார்த்து ஒரு கருத்து சொல்ல்லாமேன்னு வந்தேன்” என்று சொல்லிவிட்டு அவசரமாக அந்த கருத்து கந்தசாமி எஸ்கேப் ஆனார்.
“பாய்ஸ் விளையாட்டு போதும். சீரியஸாப் பேசுவோம்” என்று ஒருவழியாக அங்கூர் சீரியஸ் மூடுக்கு வர, குழுவினர் வலிய வரவழைத்துக் கொண்ட சீரியஸ் முகபாவத்தோடு வரிசையாக அட்டென்ஷனில் நிற்கிறார்கள். எட்டு பேர் கொண்ட டீம் இது. அங்கூர், சூரஜ், பரத், புனீத், சத்யா, அபய், மிருத்யுஞ்சய், சாஹித் – இவர்கள் தான் இந்த வெற்றிக் கூட்டணி.
“என்வியூ (Enviu) என்ற நெதர்லாந்து என்.ஜி.ஓ ஒரு போட்டி நடத்துறதா கேள்விப்பட்டோம். அதாவது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத ஆட்டோவை உருவாக்குறது சம்பந்தமான போட்டி அது. போன வருஷம் போட்டியிலே கலந்துக்க விண்ணப்பிச்சோம்.
அப்புறமா ஜூலை மாசம் வேலையை தொடங்கினோம். எங்களோட ப்ளான் என்னன்னா, ஏற்கனவே இருக்கிற இன்ஜினை லேசா மாத்தி சுற்றுச்சூழலுக்கு பங்கம் வராம பாத்துக்கிறதுதான். புதுசா ஏதாவது பண்ணோம்னா ஏற்கனவே ஓடிக்கிட்டிருக்கிற ஆயிரக்கணக்கான ஆட்டோ டிரைவர்கள் உடனடியா மாறமாட்டாங்க. அதுவுமில்லாம நாங்க எடுத்த சர்வேல ஒரு விஷயம் புரிஞ்சது.
ஆட்டோக்காரர்கள் பெரும்பாலானவர்களுக்கு சுற்றுச்சூழல் பற்றிய பெரிய விழிப்புணர்வு இல்லை. ஆனா மைலேஜ் கிடைச்சுதுன்னா மாற்றத்தை ஏத்துக்க தயாரா இருந்தாங்க. பெட்ரோல் விக்கிற விலைக்கு அவங்களுக்கு மைலேஜ் தான் முக்கியமான பிரச்சினையா படுது. எனவே எங்க பிராஜக்ட் சுற்றுச்சூழலுக்கும் பங்கம் வராம, பெட்ரோலும் கையை கடிக்காத கண்டுபிடிப்பை நோக்கி பயணிக்க ஆரம்பிச்சது. ஏற்கனவே இருக்குற செட்டப்புலே மாற்றம் வேணும். ஆனா அது ரொம்ப சுளுவா இருக்கணும்னு முடிவு பண்ணோம்.
ஏற்கனவே இருக்கிற ஆட்டோவோட செட்டப்புலே சின்ன சின்ன மாற்றங்கள் தான் பண்ணினோம். கார்பரேட்டர்லே இருக்கிற ஜெட்டை மாத்தி, டூவீலரோட ஜெட்டை பொருத்தினோம். கார்பரேட்டருக்கு வர்ற பெட்ரோல் அளவை கம்மி பண்ணினோம். இதனாலே மைலேஜ் கிடைக்கும். சைலன்ஸர்லே வெளிவரும் புகையும் கம்மியா இருக்கும். ஆனா ஏர் ஃபில்டர் ரொம்ப ஹீட் ஆகி பிக்கப் குறைஞ்சது. இந்தப் பிரச்சினையை சமாளிக்க ஏர் ஃபில்டருக்கு ஒரு கூலர் செட்டப் பண்ணி அட்ஜஸ்ட் பண்ணினோம்.
ஈஸியா சொல்லிட்டோமே தவிர, இதெல்லாம் நடக்க ஒருவருஷம் இரவு, பகல் பாராத உழைப்பும், சிந்தனையும் தேவைப்பட்டது. இப்போ ரெடியாயிட்ட இந்த ஆட்டோவைப் பார்த்தீங்கன்னா மற்ற ஆட்டோக்களை விட இதில் கார்பன் மோனாக்ஸைடு கம்மியா வெளிவரும். அதாவது 3%லேருந்து 0.3%க்கு குறைஞ்சிருக்கு. அதுபோலவே ஹைட்ரோ கார்பனும் 60 ppm அளவிலே இருந்து, 26 ppm அளவுக்கு குறைஞ்சிருக்கு. இதுக்கெல்லாம் மேல மைலேஜ் 40% அதிகரிச்சிருக்கும்.
ஏற்கனவே ஓடிக்கிட்டிருக்கிற ஒரு ஆட்டோவில் இந்த மாற்றங்களை செய்ய வெறும் ஆறாயிரம் ரூபாய் செலவு பண்ணா போதும். இந்த காசை ரெண்டே மாசத்துலே ஒரு ஆட்டோ டிரைவர் சம்பாதிச்சிட முடியும். அதுக்கு மேலே ஆட்டோக்கள் ’காசு மேலே காசு வந்துன்னு’ சம்பாதிச்சு கொட்டும்”
டீம் ஆட்கள் எட்டு பேரும் மாற்றி, மாற்றி தங்கள் ‘டுக் டுக்’கின் வரலாற்றை விவரிக்கிறார்கள். உஷாராக இது ஆட்டோக்காரர்களுக்கு பொருளாதார ஆதாயம் கொடுக்கக் கூடியது என்பதை திரும்ப திரும்ப வலியுறுத்தி சொல்கிறார்கள்.
“எங்க கண்டுபிடிப்பு என்வியூ நடத்திய ‘ஹைப்ரிட் டுக் டுக்’ போட்டியின் ஃபோர் ஸ்ட்ரோக் பிரிவில் முதல் பரிசு வாங்கிடிச்சி. இந்தியாவிலிருந்தும், நெதர்லாந்தில் இருந்தும் ஏழு டீம் கலந்துக்கிட்டாங்க. இந்த கண்டுபிடிப்பு ஆட்டோ வரலாற்றில் ஒரு மைல்கல்லுன்னு கூட சொல்லலாம்.
பேடண்ட் ரைட்ஸ் மாதிரியான மற்ற நடைமுறைகள் நடந்துக்கிட்டிருக்கு. மிக விரைவில் இது மார்க்கெட்டுக்கு வரும். ஆட்டோ டிரைவர்களுக்கு வரப்பிரசாதமா அமையும்” என்று சிம்பிளாக முடித்துக் கொண்டார்கள்.
முதல் பரிசு பத்தாயிரம் யூரோவாம் (இந்திய மதிப்பில் ரூபாய் ஆறு இலட்சத்து எழுபதாயிரம்). தயவுசெஞ்சி ட்ரீட் கொடுங்க பாய்ஸ்!!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
அங்கூர், சூரஜ், பரத், புனீத், சத்யா, அபய், மிருத்யுஞ்சய், சாஹித் – இவர்கள் தான் இந்த வெற்றிக் கூட்டணி.-----
பதிலளிநீக்குwhere the heck is tamil people in this ? is it SRM delhi ?
and then
பதிலளிநீக்கு“பாரின்லே எல்லாம் ஆட்டோன்னு சொல்ல மாட்டாங்க. ‘டுக் டுக்’னு தான் சொல்வாங்க. ரோட்டுலே ஆட்டோ ஓடுறப்போ வர்ற சவுண்டை கவனிச்சிங்கன்னா தெரியும்.
funny.
Its in Thailand, People call this Tuk Tuk.
http://en.wikipedia.org/wiki/File:Thailand_chiangmai_tuk_tuk_police.jpg
பதிலளிநீக்குNetherlands
பதிலளிநீக்குSince 2007, tuk-tuks have been active in The Netherlands, starting with Amsterdam. They now operate in Amsterdam, The Hague, Zandvoort, Bergen op Zoom, the popular beach resort Renesse and Rotterdam. All of the tuk-tuks in The Netherlands are imported from Thailand. They are fitted with CNG engines and have passed the EURO-4 rules
எஸ்.ஆர்.எம். ம்...ம்... :)
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் பாய்ஸ்.
புள்ளைங்க கலக்கிட்டாங்க :)
பதிலளிநீக்கு