29 அக்டோபர், 2009

தகவல் கேளுங்கள்!


வெளிப்படையான, விரைவான அரசு நிர்வாகம் நடக்க என்ன தேவை? மாற்றம் தேவை என்று ஒரே வரியில் சொல்வீர்கள். மாற்றம் நிகழ அடிப்படையான விஷயம் தகவல் பரிமாற்றம். இதனால் தான் அரசுக்கும், மக்களுக்குமிடையே தகவல் பாலமாக தகவல் பெறும் உரிமைச் சட்டம் செயல்படுகிறது.

பிறப்பு - இறப்பு சான்றிதழ், ரேஷன்கார்டு, கல்விக்கடன், தொழிற்கடன், பத்திரப்பதிவு என்று மக்களை இழுத்தடிக்கும் எல்லா விஷயங்கள் குறித்தும் அரசிடமிருந்து நாம் இச்சட்டத்தின் மூலம் தகவல் பெறலாம். ஊராட்சி மன்றத்தில் தொடங்கி ரேஷன்கடை, மருத்துவமனைகள், பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் போன்றவற்றின் வரவு-செலவு கணக்குகள் மற்றும் செயல்பாடுகள் குறித்த விவரங்களை அறிந்துக் கொள்ளலாம். தகவல்கள் அறிந்துகொள்வதே தீர்வுக்கான சரியான பாதை.

தெருவிளக்கு, சாக்கடை, பாலங்கள், சாலைகள் போன்ற கட்டமைப்பு வசதிகள் தொடர்பான விஷயங்களை தெரிந்து வைத்துக் கொள்ளலாம். மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள், செயல்பாடுகள் எதை குறித்தும் இச்சட்டம் மூலமாக நாம் கேள்வியை எழுப்ப முடியும்.

மக்களின் தேவைக்காக அரசை செயல்பட வைக்க, மக்களின் உரிமைகளையும், பங்கேற்பையும் உறுதிசெய்யவும் இச்சட்டம் கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்தின் வாயிலாக அரசு தொடர்பான நிறுவன அலுவலகங்களின் ஆவணங்களில் இருக்கும் தகவல்களின் நகலினை கேட்டுப் பெற முடியும். எந்த ஒரு பொது அதிகாரத்திடமிருந்தும் தகவலை ஒரு குடிமகன் கேட்டுப்பெற இச்சட்டம் வகை செய்கிறது.

நமது அரசும், அரசு நிறுவன்ங்கள் குறித்த தகவல்களும் ஒன்றும் தனியார் சொத்தல்ல. மக்கள் சொத்து. எனவே யார் வேண்டுமானாலும் எதைப்பற்றி வேண்டுமானாலும் கேட்கமுடியும் என்பதுதான் இச்சட்ட்த்தின் சிறப்பே. ‘உனக்கு தொடர்பில்லாத துறை, நீ ஏன் கேட்கிறாய்?’ என்று யாரும் பதிலுக்கு கேட்டுவிட முடியாது. ‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்!’ என்ற பதத்துக்கு உண்மையான பொருள்தரும் சட்டம் இது.

இச்சட்ட்த்தின் அடிப்படையில் ஒருவர் எப்படி கேள்விகள் கேட்கமுடியும்?

இதற்கென தனியாக வரையறுக்கப்பட்ட படிவம் எதுவுமில்லை. ஒரு முழு வெள்ளைத்தாளில் உங்களது பெயர், முகவரி ஆகியவற்றை குறிப்பிட்டு “தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் கீழாக கீழ்க்காணும் தகவலைப் பெற விரும்புகிறேன்” என்று எழுதிவிட்டு, எத்தனை கேள்விகள் வேண்டுமானாலும் கேட்கலாம். இதற்கான கட்டணம் ரூபாய் பத்து மட்டுமே. நீதிமன்ற வில்லையாகவோ (Court Fee Stamp) அல்லது வரைவோலையாகவோ (Demand Draft) கட்டணம் செலுத்தப்பட வேண்டும். மத்திய அரசு நிறுவனங்களுக்கு அஞ்சல் ஆணை (Postal Order) மற்றும் வரைவோலையாக மட்டுமே அனுப்ப வேண்டும். வறுமைக்கோட்டிற்கு கீழே இருப்பவர்கள் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியத் தேவையில்லை.

சரி, மனுவும், கட்டணமும் ரெடி. அடுத்து யாருக்கு அனுப்பவேண்டும்?

அரசு தொடர்பான ஒவ்வொரு அலுவலகத்திலும் பொதுத்தகவல் அதிகாரி ஒருவர் கட்டாயம் இருப்பார். அவரிடம் நேரில் சமர்ப்பிக்கலாம். இல்லையேல் பதிவுத் தபாலிலும் அனுப்பலாம். நீங்கள் சரியான துறைக்கு அனுப்பாமல் தவறான துறைக்கு அனுப்பிவிட்டாலும் கவலை கொள்ளத் தேவையில்லை. மனுவைப் பெற்ற சம்பந்தப்பட்ட அதிகாரி, அதை சரியான துறைக்கு அவரே அனுப்பி வைப்பார். மனுதாரருக்கும் சரியான துறைக்கு திருப்பி அனுப்பி வைத்தது பற்றிய தகவலை தெரிவித்து விடுவார். எனினும் இதனால் காலவிரயம் ஏற்படக்கூடும்.

மனுவைப் பெற்றுக் கொண்ட துறை, மனு கிடைக்கப் பெற்ற நாளில் இருந்து முப்பது நாட்களுக்குள் பதில் கொடுத்தாக வேண்டும் என்பது சட்டம். இக்காலக்கெடுவுக்குள் பதில் கிடைக்காத பட்சத்தில் சம்மந்தப்பட்ட அலுவலகத்தின் மேல்முறையீட்டு பொதுத்தகவல் அதிகாரிக்கு அதே மனுவை மீண்டும் சமர்ப்பிக்க வேண்டும். இவராலும் முப்பது நாட்களுக்குள்ளாக பதில் அளிக்க இயலவில்லை எனில் மாநிலத் தலைமை ஆணையத்திற்கு விண்ணப்பிக்கலாம். தகவல் அளிக்காத அதிகாரிகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூபாய் இருநூற்றி ஐம்பது வீதம், ரூபாய் இருபத்தி ஐந்தாயிரம் வரை ஆணையம் அபராதம் விதிக்கும். உங்கள் மனுவுக்கான பதில் விரைவில் கிடைக்கும் ஏற்பாட்டையும் ஆணையம் செய்யும்.

இந்தியாவின் இறையாண்மை குறித்த தகவல்கள், வெளியே தெரிந்தால் அயல்நாட்டு உறவைப் பாதிக்கும் என அரசாங்கம் இரகசியமாக காக்கும் விவரங்கள், மற்றவர்களின் தொழில் ரகசியங்கள், பொதுநலனுக்கு தொடர்பில்லாத அடுத்தவரின் அந்தரங்கம், முக்கியமான சில புலன்விசாரணை அமைப்புகள் குறித்த விஷயங்கள் போன்றவை குறித்த தகவல்களுக்கு மட்டுமே பதில்கள் மறுக்கப்படலாம். ஆயினும் ஆணையமே இத்தகவல்களுக்கு பதில் அளிக்கலாமா கூடாதா என்று முடிவெடுக்கக் கூடிய அதிகாரத்தைப் பெற்றிருக்கிறது.

உங்கள் வீட்டில் அடிக்கடி மின்தடையா? துவரம்பருப்பு விலை ஏன் விண்ணை எட்டிவிட்டது? உங்கள் தெரு சாலைகள் ஒழுங்காக பராமரிக்கப் படுவதில்லையா? அருகிலிருக்கும் அரசு பள்ளிக்கு இன்னமும் ஏன் சுற்றுச்சுவர் கட்டப்படவில்லை? ஏனென்று உடனே இச்சட்டத்தின் கீழ் மனு போட்டு பதில் கேளுங்கள். கேள்வி எழுப்புவது உங்கள் உரிமை. பதில் அளிக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை!

10 கருத்துகள்:

  1. அருமையான, உருப்படியான பதிவு. எளிமையான வார்த்தைகளால் RIA பற்றி எழுதி இருக்கிறிர்கள். நன்றி.
    பத்து ரூபாய் கட்டணத்தை நேரடியாக ரூபாயாக வழங்க முடியாதா ?

    பதிலளிநீக்கு
  2. எம்.எஸ்.கே.

    பொதுவாகவே அரசுத்துறை சார்ந்தப் பணிகளுக்கு, நடைமுறை சார்ந்த சிக்கல்கள் காரணமாக நேரடியாக பணம் கட்ட இயலாது.

    பதிலளிநீக்கு
  3. ”வறுமைக்கோட்டிற்கு கீழே இருப்பவர்கள் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியத் தேவையில்லை....”

    வறுமைக் கோட்டிற்கு கீழ் இருப்பவர்களுக்கு தங்களுக்கு இப்படி ஒரு உரிமை இருக்கிறது என்பது தெரியுமா என்பதே தெரியவில்லை. அப்படியே தெரிந்து ஒருவர் தகவல் பெற விரும்பினாலும், கட்டணத்திலிருந்து விலக்கு பெற ஏதேனும் ஆதாரம் கொடுக்க வேண்டுமா?

    பதிலளிநீக்கு
  4. வழக்கமான லக்கி லுக்கின் நடையை காணோம்

    பதிலளிநீக்கு
  5. //வறுமைக் கோட்டிற்கு கீழ் இருப்பவர்களுக்கு தங்களுக்கு இப்படி ஒரு உரிமை இருக்கிறது என்பது தெரியுமா என்பதே தெரியவில்லை. அப்படியே தெரிந்து ஒருவர் தகவல் பெற விரும்பினாலும், கட்டணத்திலிருந்து விலக்கு பெற ஏதேனும் ஆதாரம் கொடுக்க வேண்டுமா?//

    வறுமைக் கோட்டுக்கு கீழே இருப்பதற்கு இப்போதைய ஆதாரம் ரேஷன் கார்டுதான். அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை பெறக்கூடிய பச்சை ரேஷன் கார்டுகளை வைத்திருப்பவர்கள் வறுமைக் கோட்டுக்கு கீழே இருப்பவர்களாக கருதப்படுகிறார்கள். வருமானத்தின் அடிப்படையிலேயே வறுமைக்கோடு வரையப்படுகிறது.

    பதிலளிநீக்கு
  6. பயன் தரக்கூடிய சுட்டிகளுக்கு நன்றி வெங்கட்ரமணன்.

    பதிலளிநீக்கு
  7. பயனுள்ள தகவல்கள். இது நமக்குத் தெரிந்திருந்தும் பயன்படுத்தப் படாமல் இருந்த சட்டம். பதிவர்களாகிய நாமாவது தெரியாதவர்களுக்கு கொண்டுசெல்ல வேண்டும்....

    அருமை நண்பரே. வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  8. சமுதாயத்தின் மீதான உங்கள் ஒவ்வொரு குடிமகனின் கோபம்....

    இதையெல்லாம் நாம் சொன்னாலும் அரசாங்கம் திருந்தாது

    பதிலளிநீக்கு
  9. தகவலுக்கு நன்றி.

    ஏதேனும் உதாரணங்களும் கொடுத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமோ எனத் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு