9 அக்டோபர், 2009

இடாகினிப் பேய்களும், நடைப்பிணங்களும்...

இடாகினி என்பது தமிழ் சொல்லா? இடாகினி என்ற வார்த்தைக்கு சத்தியமாக என்ன பொருள் என்பது புரியவில்லை. ஆனாலும் மோகிணி என்று சொல்லுவதைப் போல இடாகினி என்று சொல்லுவதும் கவர்ச்சியாக, நாக்குக்கு இதமாக இருக்கிறது. இடாகினி இடாகினி என்று சொல்லிப் பாருங்கள். கேட்பவர்களின் காதுகளில் நிச்சயம் தேன் ஒழுகும். என்ன ஒரு அழகான வார்த்தை.

கோபிகிருஷ்ணனின் வாழ்க்கை அவரது எழுத்தைப் போலில்லாமல் துயரமானதாக இருந்திருக்கக்கூடும். துயரமும், கொண்டாட்டமும் பொருளாதாரத்தை முன்னிறுத்தியே அமைகிறது. ஒரு அரசுசாரா சேவை நிறுவனத்தில் 750 ரூபாய் சம்பளத்தில் கோபிகிருஷ்ணன் என்னத்தை பெரியதாக கொண்டாடியிருக்க முடியும்? சிகரெட்டும், குடிப்பழக்கமும் இல்லாது இருந்திருந்தால் அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பாரோவென்று நினைக்கத் தோன்றுகிறது.

ஆனால் அவரது எழுத்து கொண்டாட்டம் நிறைந்தது. மற்றவர்களை எந்தளவுக்கு எள்ளல் செய்கிறாரோ, அதே அளவு சுயஎள்ளலும் செய்துகொள்கிறார். அடுத்தவர்களை வெறுக்கும் அளவுக்கு தன்னையும் வெறுத்துக் கொள்கிறார். அடுத்தவர்களை புகழும் அளவுக்கு தன்னையும் புகழ்ந்து கொண்டிருக்கிறார். அடுத்தவர்களை திட்டும் அளவுக்கு தன்னையும்... இப்படியே சொல்லிக்கொண்டு போகலாம். கோபிகிருஷ்ணனுக்கு வாய்த்த மனம் எல்லோருக்கும் வாய்ப்பது அரிது.

‘இடாகினிப் பேய்களும், நடைப்பிணங்களும், உதிரி இடைத்தரகர்களும்!’ - குறுநாவலில் தலைப்பே ஒருவரி கதை மாதிரிதானிருக்கிறது. தலைப்பைப் பார்த்து மிரளாதே என்று முதல் பத்தியிலேயே நட்போடு ஆலோசனை கூறுகிறார். 28-09-1989 முதல் 24-03-1997 வரையிலான ஒரு மனிதரின் டயரிக்குறிப்புதான் இக்குறுநாவல். நாவலை எழுதுவதற்கான நியாயங்களாக கோபி குறிப்பிடுவதில் முக்கியமானது சமூகப்பணித்துறையில் பல கறுப்பு ஆடுகள் நுழைந்து கொண்டிருப்பது. மற்றொன்று, இந்த... என்ன சொல்வார்கள் அதை.. ஆம் கலாச்சாரம். இந்தக் கலாச்சாரம் என்ற வார்த்தை நெருடலாக இருப்பது மட்டுமின்றி இயல்பான உணர்வுகள் மீது ஒடுக்குமுறையை திணிக்கிறது. இப்படியே எழுதிக் கொண்டு போகிறார். கோபிகிருஷ்ணனின் புகைப்படம் எதையும் பார்த்ததில்லை நான். இந்நாவலை வைத்து அவரது உருவத்துக்கு என் மனதில் ஒரு பிம்பம் வரைந்து வைத்திருக்கிறேன். அனேகமாக அசோகமித்திரன் உடல்வாகோடு கூடிய பிம்பம் அது.

நாவல் முழுக்க ஆங்காங்கே இறைந்து கிடக்கும் கோபியின் சுயபிரகடனங்களும் சுவாரஸ்யமானவை. ‘நான் நல்லவனா, கெட்டவனா என்பது பிரச்சினை இல்லை. இந்த அடைகள் தேவை இல்லாதவை. நான் வரம்புகள் அற்றவன். ஆனால் ஒன்றை நிச்சயம் சொல்லியாக வேண்டும். நீங்கள் எனக்கு கொடுக்கும் சுதந்திரங்களை தவிர்த்து வேறு சுதந்திரங்களை நான் என்றைக்கும் எடுத்துக் கொள்ளமாட்டேன்’

நந்தன் இதழில் வெளிவந்திருந்த தந்தை பெரியாரின் கூற்று ஒன்றினை வாசித்தபோது இந்நாவலுக்கான அவசியம் கோபிக்கு ஏற்பட்டிருக்கிறது. ’நாட்டில் யோக்கியமான, உண்மையான பொதுத்தொண்டு ஸ்தாபனமே இல்லாமல் போய்விட்டது. எந்த ஸ்தாபனமும் யாரோ குறிப்பிட்ட ஒரு சிலர் பிழைக்க வேண்டும் என்பதல்லாமல் பொது மக்கள் நலனுக்காக ஏற்படவில்லை’. இந்தக் கூற்றை வாசிக்கும்போது அது எல்லா நிறுவனங்களுக்குமே பொருந்துகிறது. இதுவரை மதங்கள் உலகுக்கு தந்த எல்லா தீர்க்கதரிசிகளை விடவும் சிறந்தவர் தந்தை பெரியார்.

கோபி பணிபுரிந்த அலுவலகம், அது அமைந்திருந்த சாலை, கட்டிடம், அறைகள், வராண்டா என்று விஸ்தாரமாக அஃறிணைகளில் தொடங்கி அவ்வலுவலகத்தில் பணியாற்றிய ஒவ்வொரு ஊழியரைப் பற்றியுமான அறிமுகத்தை தமிழ் வாசகனுக்கும், வாசகிக்கும் கொடுக்கிறார். ஹாலிவுட் படங்களில் கையாளப்படும் உத்தி இது. ஒரு படத்தின் இரண்டு மணி நேரத்தை மூன்று பாகங்களாகப் பிரித்துக் கொண்டு முதல் பாகத்தில் முழுக்க முழுக்க கேரக்டர் எஸ்டாபிளேஷன். அடுத்த பாகத்தில் கேரக்டர்களுக்கிடையேயான சிக்கலை, பிரச்சினைகளை உருவாக்குவது. மூன்றாவது பாகத்தில் சிக்கு எடுத்து சுபம். இடாகினி இந்த ஃபார்முலாவில் அச்சுபிசகாமல் பயணிக்கிறது. க்ளைமேக்ஸ் மட்டும் ஆண்ட்டி-க்ளைமேக்ஸ்.

இன்று இணையத்தில் சாத்தியமாகியிருக்கும் ஹைப்பர்-லிங்க் முறையை ப்ரிண்ட் மீடியத்தில் பரிசோதித்து இந்நாவலில் வெற்றி கண்டிருக்கிறார் கோபி. ‘இணைப்பு-1ல் அந்தப் பரிசோதனை ஓர் அற்புதமான உளவியல் ஆவணம் என்று குறிப்பிடப்பட்டிருப்பது, புது எழுத்துவில் வெளியாகி மானிட வாழ்வு தரும் ஆனந்தம் தொகுப்பில் இடம்பெற்றுள்ள இலியும் வழியும் புறப்பாடும் தெறிப்பும் என்ற படைப்பு ஆகும். இதை இணைப்பு 1-அ என்று வைத்துக் கொள்ளலாம்’ என்ற ரேஞ்சுக்கு நாவல் முழுக்க ஒன்பது இணைப்புகள். நல்லவேளையாக அவற்றை புது எழுத்துவிலோ, கணையாழியிலோ, கோபியின் தொகுப்புகளிலோ தேடிப்படிக்கும் அசாதாரமாண வேலையை வைக்காமல் நூலின் பிற்பகுதியிலேயே பதிப்பகத்தார் இணைத்திருக்கிறார்கள்.

இதை புனைவு என்றோ, என் சொந்தக்கதை என்றோ எப்படி உனக்குத் தோன்றுகிறதோ அப்படி எடுத்துக்கொள் என வாசகனுக்கு சுதந்திரத்தை அவர் தந்துவிட்டாலும், அந்த சுதந்திரத்தை எடுத்துக்கொள்ள வாசகன் தயாரில்லை. இதைப் புனைவு என்று யாருமே நினைக்கமுடியாத அளவுக்கு அனுபவித்தால் மட்டுமே எழுதியிருக்கக்கூடிய உயிரோட்டமான எழுத்துகள். இப்படைப்பின் நாயகன் கோபி என்றால், நாயகி அவரோடு பணிபுரிந்த விக்டோரியா சமாதானம். மெல்லிய ரொமான்ஸும் உண்டு. சமாதானம் குறித்து எழுதும்போது கோபியின் பேனா நிறைய ஜொள்ளு விடுகிறது. பெண்களுக்கு ஏதாவது பரிசளிக்க வேண்டுமென்றால் பேண்டீஸும், ப்ராவும்தான் கோபியின் சாய்ஸ்.

நூலாசிரியரின் பலமே புரியும்படி எழுதுவது. தமிழில் வன்மையான வார்த்தைகள் நிறைய உண்டென்றாலும் வாசிக்கும் எல்லோருக்கும் புரியும் வார்த்தைகளையே பயன்படுத்துகிறார். சிற்றிலக்கியம் என்ற பெயரில் வாசகனுக்கு பூச்சாண்டி காட்டவில்லை. இவ்வகையிலும் கோபியையும், சாருவையும் நிறைய ஒப்பிட முடிகிறது. நண்பர் என்ற அடிப்படையில் சாருவுக்கு கோபியின் இன்ஃப்ளூயன்ஸ் எழுத்தில் நிறைய இருக்கக்கூடும் என யூகிக்கிறேன். கோபியின் இடாகினியும், சாருவின் ராஸலீலாவும் பணிசார்ந்த அனுபவங்கள் என்ற அடிப்படையில் ஒரே தளத்தில் இயங்கும் படைப்புகள். இருவருமே குமாஸ்தாப்பணியை திறம்பட செய்தவர்கள். அப்பணியை வெறுத்தவர்கள். நரகத்தில் இருந்ததைப் போல உணர்ந்தவர்கள் பணியில் இருந்து வெளிவந்ததை விடுதலையாக கொண்டாடியவர்கள். அதே நேரத்தில் இவர்களது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த அந்தரங்க வெளிப்பாடு வாசகனுக்கு கிசுகிசு படிக்கும் போதையையும் ஏற்றுகிறது.

நூல் சொல்லும் கதையைப் பற்றி அதிகம் பேச விரும்பவில்லை. படிக்க விரும்புபவர்களுக்கு அது ஸ்பாய்லர் ஆகிவிடும். ஆனால் மாறுபட்ட சுகமான வாசிப்பனுபவத்துக்கு இடாகினி நிச்சய உத்தரவாதம் அளிக்கிறாள் என்று மட்டும் உத்தரவாதம் அளிக்க இயலும்.


நூலின் பெயர் : இடாகினிப் பேய்களும், நடைப்பிணங்களும், உதிரி இடைத்தரகர்களும்!

நூல் ஆசிரியர் : கோபிகிருஷ்ணன்

விலை : ரூ.40/-

பக்கங்கள் : 128

வெளியீடு : தமிழினி,
342, டி.டி.கே. சாலை, சென்னை-14


கோபிகிருஷ்ணனின் பிற படைப்புகள் :

1) ’ஒவ்வாத உணர்வுகள்’ (சிறுகதைகள்) 1986 - சிட்டாடல் வெளியீடு

2) ’உணர்வுகள் உறங்குவதில்லை’ (குறுநாவல்கள்) 1989 - சரவணபாலு பதிப்பகம்

3) சஃபி, லதா ராமகிருஷ்ணன் - இவர்களுடன் இணைந்து எழுதிய ’கொஞ்சம் அவர்களைப் பற்றி.. மனோதத்துவம் ஓர் அறிமுகம்’ (கட்டுரைகள்) 1992 - சவுத் ஏஷியன் புக்ஸ்

4) சஃபியுடன் இணைந்து எழுதிய ‘சமூகப்பணி, அ-சமூகப்பணி, எதிர்-சமூகப்பணி’ (ஒரு நீண்ட கட்டுரை) 1992 - முன்றில் வெளியீடு

5) ‘உள்ளேயிருந்து சில குரல்கள்’ (மனநோய்கள் குறித்த புத்தகம்) 1993 - முன்றில் வெளியீடு

6) ’முடியாத சமன்’ (சிறுகதைகள்) 1998 - ஸ்நேகா வெளியீடு

7) ‘டேபிள் டென்னிஸ்’ (குறுநாவல்) 1999 - தமிழினி

8) ‘தூயோன்’ (சிறுகதைகள்) 2000 - தமிழினி

9) ‘மானிட வாழ்வு தரும் ஆனந்தம்’ (சிறுகதைகள்) 2001 - தமிழினி

3 கருத்துகள்:

  1. புத்தகத்தைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டும் அறிமுக உரை. நல்ல நூல்களை அறிமுகப்படுத்துவதற்கு நன்றி. “எஸ்டாப்ளேஷன்” என்ற வார்த்தையே இல்லை என்று நினைக்கிறேன். establish என்ற வார்த்தையின் noun form establishment. Character establishment என்பது பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  2. நன்றி சகா. இதைப் படித்தபின் இந்நூலைப் பற்றி நான் ஒரு பதிவு எழுதினேன். இன்னும் வெளியிடவில்லை. அப்படி ஒன்றும் எனக்கு பிடிக்கவில்லை. புரியாமல் இல்லை. ஆனால் ஒருவரைப் பற்றி விவரிக்கும்போது பெரும்பாலும் ஒரே மாதிரியான வார்த்தைகளையே ஆசிரியர் கையாள்கிறார். “நேர்த்தியாக உடை அணிவது, பீடி பிடிப்பார்” என்பது போன்றது.

    மேலும், தேவையில்லாத பாத்திரஙக்ளைப் பற்றியும் அதே அளவில் விவரிப்பதால் ஆரம்பத்திலே பேர் மறந்து போய் குழப்பம் வந்தது.. அதனால்தான் இந்தப் பதிவை தேடினேன்..

    மொத்தத்தில் கோபி, எனக்கானவர் இல்லை என்பதை மட்டுமே இடாகினி எனக்கு சொல்லிவ்ட்டுப் போனாள்..

    மீண்டும் நன்றி சகா

    பதிலளிநீக்கு