இரண்டாம் பாகம் : வசந்தத்தின் இடிமுழக்கம்!
மூன்றாம் பாகம் : இடியுடன் கூடிய மழை!

ஆயினும் நக்சல்பாரிகளின் எழுச்சி இந்திய அரசுக்கு ஒரு அபாயமணியை அடித்தது. நக்சல் குழுக்கள் தோன்றுவதற்கு என்ன காரணம், அவர்களுக்கு மக்கள் ஆதரவளிக்க என்ன காரணம் என்றறிய மத்திய அரசு ஒரு குழுவினை அமைத்தது. ஏழை விவசாயிகள், பழங்குடியினர் மற்றும் ஒடுக்கப்பட்டோர் நம் தேசத்தில் சரிசமமாக நடத்தப்படவில்லை. சட்டமும் கூட அவர்களை காப்பாற்ற இயலவில்லை என்ற அவலநிலையை பட்டவர்த்தனமாக அந்த குழு போட்டுடைத்தது. குழுவின் பரிந்துரைகளைப் பார்த்த பின்னரும் கூட அரசு இந்த பிரச்சினை தோன்றுவதற்கான காரணத்தை முளையிலேயே கிள்ளி எறிவதை விட்டுவிட்டு நக்சல்களை அடக்குவதிலேயே முழுக்கவனத்தை செலுத்தியது.
ஆந்திராவில் முன்நின்ற முன்னணியினரான பஞ்சாத்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஆறு நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். இதையடுத்து கட்சியின் முன்னணி தலைவர்களாகிய சுப்பாராவ் பாணிக்ரஹி, நிர்மலா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டவர்களுக்கும் இதுதான் கதி. கொல்கத்தாவில் இயங்கிய தேசப்ரதி பத்திரிகை அலுவலகம் காவல்துறையினரால் சூறையாடப்பட்டு கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
ஸ்ரீகாகுளம் புரட்சியில் முன்நின்ற வெம்படாபு சத்யநாராயணா, அடிபாட்லா கைலாசம் ஆகியோர் கைதுசெய்யப்பட்டு காவல்துறையினரால் கொல்லப்பட்டார்கள். இதையடுத்து ஸ்ரீகாகுளம் புரட்சி ஒடுக்கப்பட்டது. தமிழகத்தில் நக்சல்பாரிகளின் கட்சியை கட்டமைத்த அப்பு போலிசாரோடு நடந்த மோதல் ஒன்றில் கொல்லப்பட்டதாக தெரிகிறது. இவர் மரணமடைந்தது கூட மறைக்கப்பட்டு சில நாட்கள் கழித்தே இறந்த செய்தி வெளியானதாக சொல்கிறார்கள்.
வங்காளதேசப் போரில் வெற்றி கண்ட இந்திய ராணுவம் அதே வேகத்தில் நக்சல்களை நசுக்கவும் ஈடுபடுத்தப்பட்டது. நூற்றுக்கணக்கானோர் சண்டையிட்டு மாண்டார்கள். ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு சிறைக்கம்பிகளுக்கு பின்னால் அடைக்கப்பட்டனர். சரோஜ் தத்தா என்ற கட்சியின் மத்திய குழு உறுப்பினர் போலிசாரால் ரகசியமாக கடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியது. கொல்கத்தாவுக்கு அருகில் காசிப்பூர்-பாராநகர் பகுதியில் 150 நக்சலைட்டுகள் 1971 ஆகஸ்ட் 12 மற்றும் 13 ஆகிய இருதேதிகளில் கொல்லப்பட்டனர்.
எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக நக்சல் நாயகன் சாரு மஜூம்தார் கொல்லப்பட்டது நக்சல்பாரி இயக்கத்தின் தலையில் பெரிய இடியாக இறங்கியது. ஜூலை 1972ல் கொல்கத்தாவில் போலிசாரால் பிடிக்கப்பட்ட சாரு மஜூம்தார் பண்ணிரண்டு நாட்கள் காவல்துறை விசாரணைக்குப் பின்னர் கொல்லப்பட்டார். கைது செய்யப்பட்டவர்கள் சட்டப்படி நீதிமன்றங்களில் நிறுத்தப்பட்டு விசாரணை செய்யப்படாமல் கொல்லப்பட்டது நாடெங்கிலும் இருந்த சிந்தனையாளர்கள் மனங்களை கொதிக்க வைத்தது.
தலைவர்களையும், இயக்க முன்னணியினரையும் இழந்து வந்த நக்சல்பாரி இயக்கத்துக்கு 1975ல் எமர்ஜென்சி ரூபத்தில் தீர்க்கமுடியாத பிரச்சினை ஏற்பட்டது. ஜனநாயக முறையில் இயங்கிக் கொண்டிருந்த அரசியல் கட்சித் தலைவர்கள் கூட சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட நேரமது, நக்சல்பாரிகளை சும்மாவா விடுவார்கள்?
நக்சல்பாரி தலைவர்களையும், தொண்டர்களையும் தேடித்தேடி சிறைகளில் தள்ளினார்கள். காவல்துறையின் சித்திரவதைகளை அறிந்த பலரும் தப்பி ஓடி தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார்கள். இதே காலக்கட்டத்தில் தான் பீகாரின் போஜ்பூர் மற்றும் பாட்னா மாவட்டங்களில் ஆயுதம் தாங்கிய போராட்டம் மும்முரமாக இருந்தது. போஜ்பூரில் காவல்துறையுடனான துப்பாக்கிச் சண்டையில் நக்சல்பாரி கட்சியின் அப்போதைய பொதுச்செயலாளர் ஜவஹர் என்கிற சுப்ரதா தத் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு இறந்ததாக காவல்துறை தெரிவித்தது. எமர்ஜென்ஸி இருந்த காலக்கட்டத்தில் நக்சல்கள் ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட்டு விடுவார்கள் என்ற தோற்றம் இருந்தது.
1977ல் காங்கிரஸ் அல்லாத கூட்டணி அரசு மத்தியில் ஏற்பட்டது. தேசிய அளவில் பல மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்தியதின் பேரில் சிறையில் இருந்த நக்சல் தலைவர்களையும், தொண்டர்களையும் விடுதலை செய்தது. 80களின் ஆரம்பத்தில் இக்கட்சி அழித்தொழிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை கைவிட்டு கலாச்சார அமைப்பாகவும், மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் அமைப்பாகவும் மாற்றம் பெற்றது. இக்கட்சி நேரடியாக ஆயுதம் ஏந்துவதில் ஈடுபடாவிட்டாலும் மக்களை ஆயுதவழிப் போராட்டத்துக்கு ஆதரவாக மாற்றியது என்பதை மறுக்க இயலாது.
கருத்து வேறுபாடுகளாலும், சித்தாந்த மோதல்களாலும் பல குழுக்கள் பிற்பாடு தோன்றினாலும் அவை அனைத்திற்குமே வேர் 1967ல் மலர்ந்த நக்சல்பாரி புரட்சி தான். இப்போதும் கூட ஆந்திரப்பிரதேசத்தில் செல்வாக்காக இருக்கும் மக்கள் போர்க்குழு (People's War Group), பீகாரில் கோலோச்சும் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் அமைப்பு (Maoist Communist Centre) ஆகியவை இன்னமும் கொரில்லா போர்முறையை பின்பற்றி வருகின்றன. இவ்வமைப்புகள் அவரவர் செல்வாக்காக இருக்கும் பகுதிகளில் காவல்துறை, அரசுநிர்வாகம், நிலப்பிரபுக்கள், தொழில் முதலாளிகள் ஆகியோரை எதிர்த்து ஆயுதவழியில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த இருபதாண்டுகளில் அடிக்கடி செய்திகளில் தலைகாட்டிய நக்சல் குழுக்கள் இவை இரண்டும். இவை தவிர்த்து மக்கள் கொரில்லா படை, மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) நவசக்தி என்று பல நக்சல் குழுக்களும் உண்டு.
கடந்த நாற்பதாண்டுகளில் நக்சல் குழுக்கள் பிராந்திய செல்வாக்கோடு இந்திய அரசுக்கு பெரும் தலைவலியாக இன்று வளர்ந்து நிற்கிறது. நக்சல் குழுக்கள் தீவிரவாதிகள் என்பதையும் தாண்டி புரட்சியாளர்களாக, மாவோயிஸ்ட் சிந்தனையாளர்களாக உலகளவில் இன்று அங்கீகரிக்கப்பட்டு விட்டனர். மக்கள் போர்க்குழு, மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் அமைப்பு ஆகியவை நேபாளம், வங்காளதேசம், பூடான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் இருக்கும் இவர்களது கருத்தினை ஒத்த கிளர்ச்சியாளர்களோடு ஒருங்கிணைந்து தெற்காசிய மாவோயிஸ்ட் கட்சிகளின் கூட்டமைப்பு என்ற அமைப்பினை ஏற்படுத்தி சர்வதேச அளவில் செயல்படுகிறார்கள். அதுமட்டுமன்றி இந்த அமைப்புகள் எல்லாமே சர்வதேசப் புரட்சியாளர் இயக்கம் என்ற உலகளாவிய இயக்கத்திலும் உறுப்பினர்களாக இருக்கின்றன.
(புயலும், மழையும் புரட்சி வடிவில் தொடரும்)