அண்ணாசாலை சாந்தி தியேட்டரை கடக்கும் வேளையில் திடீரென வண்டி மக்கர் செய்தது. பஞ்சரா என்ன ஏதுவென்று ஓரம் கட்டி சோதிப்பதற்குள் ‘விபத்து’. என்ன நடந்தது என்று திலீப்புக்கு இப்போது கூட தெரியாது. வண்டி எதன் மீதோ இடித்த சத்தம் மட்டுமே அவரது காதில் கடைசியாக கேட்டது.
சினிமாவில் விபத்தில் அடிபட்டவர்கள் கேட்பதைப் போலவே “நான் எங்கே இருக்கிறேன்?” என்று கேட்டவாறே கண் விழித்தார் திலீப். புன்னகையோடு அவர் எதிரில் நின்றுகொண்டிருந்தவர் கமல்ஹாசன். சினிமா நடிகரல்ல, இவர் வேறு. 24 வயதாகும் இளைஞர். சென்னையில் ஒரு பி.பி.ஓ. நிறுவனத்தில் பணிபுரிகிறார்.
திலீப்பைப் போல விபத்துக்களில் அடிபடுபவர்களை உடனடியாக காப்பாற்றி, அருகிலிருக்கும் ஏதாவது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி செய்வது முதல், அடிபட்டவரின் குடும்பத்துக்கு தகவல் தெரிவிப்பது வரையிலான பணிகளை தன்னுடைய கடமையாக செய்துவருகிறார் கமல். இவரைப் போலவே இவருடைய நண்பர்களும் இச்சேவையில் தம்மை இணைத்துக்கொள்ள, ‘சேஞ்ச் இந்தியா’ என்ற பெயரில் ஒரு அமைப்பு உருவாகியிருக்கிறது.
எப்படி இந்த எண்ணம் வந்தது?
சேவை செய்யவேண்டுமென்ற உந்துதல் இத்தலைமுறையில் எல்லோருக்குமே இருக்கிறது. இதை ‘கலாம் எஃபெக்ட்’ என்ற பிரத்யேக சொல்லாடலோடு சொல்கிறார் கமல். இவரும், இவருடைய நண்பர்களும் தங்களது பிறந்தநாளை ஆதரவற்றோர் இல்லங்களில் கொண்டாடி வந்திருக்கிறார்கள். ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவி, மருத்துவத் தேவைக்கு உதவி என்று வழக்கமான உதவிகள்.
கமல் ஒருமுறை வண்டியில் வந்துகொண்டிருந்தார். அப்போது சாலையோரத்தில் ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். பயங்கர இரத்த இழப்பு. வேடிக்கை பார்க்க நல்ல கூட்டம். வலியில் முனகிக் கொண்டிருந்த அந்தப் பெண்மணியை ஒரு ஆட்டோவில் ஏற்றி அருகிலிருந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதலுதவி செய்தார் கமல்.
மருத்துவம் பார்த்த டாக்டர், கமலை அழைத்து “தம்பி சரியான நேரத்துலே இந்த அம்மாவை கொண்டு வந்து சேர்த்தீங்க. இன்னும் கொஞ்சம் ரத்தம் வீணாகியிருந்தா இவங்க உயிரே போயிருக்கும். இந்த நேரத்தை ‘கோல்டன் ஹவர்’னு சொல்லுவோம். அதாவது குறிப்பிட்ட நேரத்துக்குள் முதலுதவி கொடுத்தால் உயிரைக் காப்பாற்றிவிடலாம்னு சொல்ற அந்த பொன்னான நேரம். துரதிருஷ்டவசமா கோல்டன் ஹவர்க்குள் முதலுதவி செய்யப்படாதவர்கள்தான் விபத்துக்களில் அதிகமா மரணமடையுறாங்க”.
டாக்டர் சொன்ன ‘கோல்டன் ஹவர்’ கமலுக்குள் ரீங்காரமிட்டுக் கொண்டே இருந்தது. யாராவது விபத்தில் அடிபட்டு சாலை ஓரத்தில் கிடந்தால், அதிகபட்சமாக 108-க்கு தொலைபேசி ஆம்புலன்ஸை கூப்பிடுவோம். சென்னை போன்ற போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரங்களில் ஆம்புலன்ஸ் வர நேரமாகலாம். அதற்குள்ளாக அடிபட்டவருக்கு ரத்த இழப்பு அதிகமாகி, கோல்டன் ஹவரை தாண்டிவிட்டால்?
மரணம். ஒரு உயிர் மண்ணைவிட்டுப் பிரியும். அந்த உயிரை நம்பிய குடும்பம் நடுத்தெருவில் நிற்கலாம். குழந்தைகள் ஆதரவற்றுப் போகலாம். விபத்தை வெறுமனே வேடிக்கைப் பார்ப்பவர்கள் எவ்வளவு பெரிய சமூகக் குற்றவாளிகள்?
அன்றிலிருந்து தன்னுடைய நண்பர்களிடம் கோல்டன் ஹவரின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்க ஆரம்பித்தார் கமல். ஆங்காங்கே நடந்த விபத்துகளின்போது, அடிபட்டவர்களை அருகிலிருக்கும் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று முதலுதவி அளிக்க ஆரம்பித்தார்கள். இதுவரை இவர்களால் காப்பாற்றப்பட்டவர்கள் 300 பேர். “குறித்துவைத்துக் கொள்ளுங்கள். இந்த முன்னூறு பேரில் ஒருவர் கூட மரணமடைந்தது இல்லை. சரியான நேரத்துக்கு சிகிச்சை கிடைத்தால் விபத்தில் உயிரிழப்பு என்ற விஷயமே இருக்காது” என்கிறார் கமல்.
கமல்ஹாசன் குறிப்பிடுவது போல ‘கோல்டன் ஹவர்’ என்பது மிக மிக முக்கியமானது. விபத்துக்களில் மட்டுமல்ல, திடீரென ஏற்படும் ஹார்ட் அட்டாக் போன்ற விஷயங்களின் போதும் கூட, சரியான நேரத்தில் சிகிச்சை கிடைத்தால் உயிரைக் காப்பாற்றி விடலாம். மருத்துவமனைகளில் இதுபோல யாராவது உயிரிழக்கும்போது, “அரை மணி நேரத்துக்கு முன்னாடி கொண்டுவந்திருந்தா பொழைச்சிருப்பார்!” என்று மருத்துவர் சொல்கிறார் இல்லையா? அந்த அரைமணி நேரத்துக்கு முன்னால் தான் இறந்தவரின் ‘கோல்டன் ஹவர்’ இருந்திருக்கும். இந்த விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்பட்டால் பல உயிரிழப்புகளை மருத்துவர்களால் தடுத்து நிறுத்த முடியும்.
வித்தியாசமான அனுபவங்களும் இவர்களுக்கு நேர்ந்ததுண்டு. ஒருமுறை ஒருவர் குடித்துவிட்டு வேகமாக வண்டி ஓட்டி விபத்துக்குள்ளாகி இருக்கிறார். ரத்தம் சொட்ட, சொட்ட மயங்கிக் கிடந்தவரை சுற்றி பெரியக் கூட்டம். “குடிச்சிட்டு வண்டி ஓட்டினா இப்படித்தான்!” என்று விபத்துக்கு வேடிக்கையாளர்கள் நியாயம் கற்பித்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். அங்கிருந்த போக்குவரத்துக் காவலரும் கூட என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தார். அந்த வழியாக வந்த கமல் உடனடியாக அடிபட்டவரை அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உயிர் பிழைக்க வைத்திருக்கிறார்.
இதுபோன்ற மீட்புப் பணிகளின் போது, பெரும்பாலும் ஆட்டோக்காரர்கள் காசு வாங்குவதில்லையாம். பொதுவாக அரசு மருத்துவமனைக்குதான் முதலுதவிக்கு எடுத்துச் செல்கிறார்கள். அருகில் அரசு மருத்துவமனை இல்லாதபட்சத்தில் மட்டுமே தனியார் மருத்துவமனைக்கு போகிறார்கள். முதலுதவி செய்ய அதிகபட்சமாக ஐநூறு ரூபாய் வரை மட்டுமே தனியார் மருத்துவமனையில் ஆகுமாம். ஆம். கோல்டன் ஹவரின்போது ஒரு உயிரின் விலை வெறும் ஐநூறு ரூபாய்தான். எனவே சேஞ்ச் இந்தியா தோழர்கள் தங்கள் மணிபர்ஸில் எப்போதுமே ஒன்று அல்லது இரண்டு ஐநூறு ரூபாய்தாள்களை முதலுதவிக்கென்றே வைத்திருக்கிறார்கள்.
“இந்த சேவையைப் பற்றி கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் விபத்து மாதிரியான விஷயங்களில் போலிஸ் தொல்லை அதிகமாக இருக்குமே? கோர்ட்டு - கேஸூ என்று இழுப்பார்களே?” என்ற எண்ணம் உங்களுக்குத் தோன்றலாம். போலிஸ்காரர்களைப் பொறுத்தவரை யாரையுமே தொந்தரவு செய்வது அவர்களது இயல்பல்ல. ஒரு உயிரைக் காப்பாற்றினால் போலிஸ் என்ன, எல்லோருமே உங்களை பாராட்டத்தான் செய்வார்கள்.
அதிகபட்சமாக இதுபோன்ற விபத்து மீட்பாளர்களிடம் பெயரையும், முகவரியையும் மட்டும் போலிஸ் கேட்டு வாங்கிக் கொள்ளும். அவர்கள் கேட்கும் தோரணை வேண்டுமானால் கொஞ்சம் பயமுறுத்தலாம். மற்றபடி காவலர்கள் மக்களின் தோழர்களே. தப்பு செய்யாதவர்களை போலிஸ் எதுவுமே செய்யாது. இதை நாம் சொல்லவில்லை. கமலும், அவரது நண்பர்களும் சொல்கிறார்கள்.
தனியார் மருத்துவமனைகளிலும் போலிஸ் கேஸ் என்றால் முதலுதவி செய்யமாட்டார்கள் என்றொரு பொய்யான கருத்தாக்கம் நம்மிடையே நிலவுகிறது. அப்படியெல்லாம் இல்லை. கோல்டன் ஹவரில் கொண்டுவரப்படும் எந்த நபரையுமே உயிர்பிழைக்க வைக்கத்தான் ஒரு மருத்துவர் முயற்சிப்பார். முதலுதவிக்குப் பின்னரே என்ன ஏதுவென்று மற்ற விஷயங்களை விசாரிப்பார்கள். அதிகபட்சமாக ‘போலிஸுக்கு சொல்லிட்டீங்களா?’ என்றுதான் கேட்கிறார்கள்.
விபத்துக்களில் அடிபட்டவர்களை காப்பாற்ற முடியாததற்கு நேரத்தைதான் நிறையபேர் காரணமாக குறிப்பிடுகிறார்கள். “பத்து மணிக்கெல்லாம் ஆபிஸ் போகணும். ஒருத்தரை ஆஸ்பிட்டல்லே சேர்த்துட்டு, அவங்க வீட்டுக்கு இன்ஃபார்ம் பண்ணிட்டு, போலிஸுக்கும் தகவல் சொல்லிட்டு ஆபிஸ் போக மதியம் ஆகிவிடுமே? லேட்டானா மேனேஜர் திட்டமாட்டாரா?” - பொதுவாக எழும் கேள்வி இது. மேனேஜர் நிச்சயமாக திட்டமாட்டார்.
மாறாக இதுபோல ஒருவரின் உயிரைக் காப்பாற்றிவிட்டு அலுவலகத்துக்கு சென்றுப் பாருங்கள். அலுவலகமே எழுந்து நின்று உங்களை கைத்தட்டி வரவேற்கும். சேஞ்ச் இந்தியா தோழர்களின் அனுபவம் இது. அதுவுமில்லாமல் தார்மீகரீதியாகப் பார்க்கப் போனாலும் ஒரு உயிரைவிட நம்முடைய வேலை பெரியதா என்ன?
எல்லாவற்றுக்குமே அரசையே சார்ந்திராமல், சமூகத்துக்கு தங்களாலான சேவைகளை, தங்களுக்கு தெரிந்த வழியில் செய்துக் கொண்டிருக்கும் கமலும், அவருடைய நண்பர்களுமே இன்றைய இளைய இந்தியாவைப் பிரதிபலிக்கக்கூடிய சரியான பிம்பங்கள். “இளைஞர்களுக்கு சமூக அக்கறை கிடையாது. பொழுதுபோக்குகளில் நாட்டமுடையவர்கள். சுயநலவாதிகள்” என்றெல்லாம் பழைய பஞ்சாங்கத்தை புரட்டிப் பார்த்து சொல்லிக் கொண்டிருப்பவர்கள், இவ்விளைஞர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியது ஏராளம்.
நீங்களும் முயற்சிக்கலாமே?
சென்னை பெருநகரில் கமலும், அவரது நண்பர்களும் இத்தகைய விபத்துமீட்பு பணிகளை செய்து வருகிறார்கள். இதற்கென்று அமைப்பெல்லாம் வைத்துக் கொள்ளாமலேயே தனி மனிதர்கள் ஒவ்வொருவரும் இந்த விஷயத்தை முன்னெடுத்து செய்ய வேண்டும் என்பது அவர்களின் ஆதங்கம். எந்த விஷயத்துக்குமே தனிமனித விழிப்புணர்வு ஒரு சமூகத்தில் ஏற்பட நீண்ட காலமாகும் என்பதால்தான் குழுவாக அமைந்து பணியாற்ற வேண்டியிருக்கிறது.
மற்ற நகரங்களிலும் இளைஞர்கள் சேஞ்ச் இந்தியாவை முன்னுதாரணமாக்கி விபத்துக்களில் அடிபடுபவர்களின் உயிர்களை காப்பாற்றலாம் இல்லையா?
இதுபற்றிய சந்தேகங்கள் ஏதாவது இருந்தால் கமல்ஹாசனையே தொடர்புகொண்டு பேசலாம். அவரது எண் : 9841567893. மின்னஞ்சல் : changeindia@live.com / b.kamalhasan@live.com
(நன்றி : புதிய தலைமுறை)