3 பிப்ரவரி, 2010
மறுப்பாளனின் நினைவடுக்குகளிலிருந்து...
06-09-1980, காஷ்மீர் விமான நிலையம். காலை நேரம். விமானத்துக்கு காத்திருக்கும் கும்பலில் இரண்டே இரண்டு பேர் சென்னைவாசிகள். ஒருவர் ரஜினிகாந்த். இன்னொருவர் இயக்குனரும், தயாரிப்பாளருமான முக்தா சீனிவாசன். விமானத்தில் இருவருக்கும் அடுத்தடுத்த சீட் கிடைத்தது.
பட்டன் போடாத சீனிவாசனின் சட்டைக்குள்ளாக ஊடுருவிப் பார்க்கிறார் ரஜினிகாந்த்.
“என்ன ரஜினி இப்படி ஆச்சரியமாப் பார்க்கறீங்க?”
“ஒண்ணுமில்லே. உங்களுக்கு பூணூல் இல்லையே?”
“இல்லை”
இதையடுத்து இருவருக்கும் ஆன்மீக தர்க்கம் தொடங்குகிறது. மதம், சாதி, உறவு இத்யாதிகளை மறுக்கிறார் சீனிவாசன். பூர்வஜென்மம், ஜீவாத்மா, பரமாத்மா குறித்த தன்னுடைய நம்பிக்கைகளை அடுக்குகிறார் ரஜினிகாந்த்.
டெல்லியை நெருங்கும் வேளையிலே விவாதங்களால் எந்தப் பயனுமில்லை. இருவரும் அவரவர் நிலையிலிருந்து ஒரு மில்லி மீட்டர் கூட விலகவில்லை. முப்பது ஆண்டுகள் கழிந்த நிலையில் ரஜினி இன்னமும் அதே நிலையில் இருப்பதாகவே தெரிகிறது. அப்போது தன்னை மறுப்பாளனாக சொல்லிக்கொண்ட சீனிவாசனும் அப்போது இருந்தபடியே இப்போதும் இருக்கிறாரா என்று தெரியவில்லை.
சிறுவயதில் எனக்கு அதிகம் படிக்க கிடைத்த பத்திரிகைகள் முரசொலியும், துக்ளக்கும். துக்ளக்கில் முக்தாவின் திரைப்பட வரலாற்றினை விரும்பி வாசித்து வந்தேன். 1940களின் இறுதியில் தமிழ் சினிமாத்துறைக்கு வந்தவர். தொண்ணூறுகள் வரையிலும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தவர். கிட்டத்தட்ட ஐம்பதாண்டு தமிழ் திரையுலக வரலாற்றை அருகில் இருந்து கண்டவர். எளிய மொழியில் சுவாரஸ்யமாக, தன்னுடைய அனுபவங்களைக் கோர்த்து எழுதுவார்.
எளிமையான தமிழில் எழுதுபவர் என்ற காரணத்துக்காகவே சீனிவாசனை எனக்கு நிரம்ப பிடித்திருந்தது. அவர் நிறைய சிவாஜி படங்களை இயக்கியவர் என்பதால், அவரது படங்களை பார்த்த நினைவு இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக நாயகனை தயாரித்ததின் மூலமாக தமிழ் திரையுலகை தேசிய நீரோட்டத்துக்குள் நுழைத்தவர்.
சமீபத்தில் புத்தகக்காட்சியில் முக்தா வி.சீனிவாசன் என்ற பெயரை பார்த்ததுமே அந்த நூலை கையில் எடுத்தேன். ‘கலைஞர்களோடு நான்’
எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெய்சங்கர், ரஜினி, சிவகுமார், கமல், பாக்யராஜ், சோ, சவுகார் ஜானகி, சுஜாதா, ஜெயலலிதா, ஸ்ரீப்ரியா, மனோரமா ஆகியோருடனான அவரது அனுபவங்களை சம்பவச் சான்றுகளோடும், அவரது டிரேட்மார்க் எளிமையோடும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
நூல் முழுக்க சுவாரஸ்யமான பத்திகளுக்கு பஞ்சமேயில்லை.
சினிமா பைத்தியம் படம் காமராஜருக்கு பிரத்யேகமாக போட்டு காட்டப்படுகிறது. படம் முடித்து வெளியே வந்தவரிடம் கமல்ஹாசனை அறிமுகப்படுத்துகிறார்கள். கமலிடம் நலம் விசாரித்துவிட்டு காமராஜர் சொல்கிறார். “பரமக்குடி பக்கம் போனால் கமலின் அப்பா சீனிவாசன் வீட்டில் சாப்பிடுவதுதான் வழக்கம்!”. கமலின் அப்பா ஒரு வக்கீல், தேசியவாதி என்பது தெரியும். அரசியல் தலைவர்களோடு நெருங்கிய தொடர்பில் இருந்தார் என்பதை கமல் கூட இதுவரை எங்கும் பதிவு செய்ததாக தெரியவில்லை.
ஜெயலலிதா குறித்த அத்தியாயம் ஆச்சரியங்கள் நிரம்பியது. ‘காத்திருக்கிறோம் ஜெயலலிதா’ என்று தலைப்பிட்டு எழுதியிருக்கிறார். ”சினிமாத்துறையில் 100க்கு 90 பேர் அந்தத் தொழிலை தவிர வேறு எதற்கும் தகுதியற்றவர்கள். அவர்களால் சினிமாவைத் தவிர வேறு எங்கும் குப்பை கொட்ட முடியாது. சில அபூர்வமான விதிவிலக்குகள் உண்டு. தமிழ்த் திரைப்பட நடிகைகள் மூவர் அந்த விதிவிலக்குக்கு யோக்கியதை உள்ளவர்கள். அவர்கள் அரசியலுக்கு சென்றிருந்தால் மந்திரிகள் ஆகியிருக்க முடியும். வெளிநாட்டுத் தூதுவர்கள் ஆகியிருக்க முடியும். அந்த மூவரில் ஒருவர் ஜெயலலிதா!” என்று எழுதுகிறார்.
இந்த குறிப்பிட்ட கட்டுரை தினமணி கதிர் 13-2-1981 இதழில் வெளிவந்திருக்கிறது. ஜெயலலிதாவின் அரசியல் பிரவேசம் 1982, கடலூர் அதிமுக மாநாட்டில் நடந்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்க ஒன்று. அரசியலுக்கு வந்து ஒன்பதே ஆண்டில் முதல்வர் ஆகி அவர் சாதனை படைத்ததும் மறக்க முடியாத வரலாறு. ஜெயலலிதா தவிர்த்து அவர் குறிப்பிட்டிருந்த மற்ற இரண்டு நடிகைகள் யார் தெரியுமா? சவுகார் ஜானகி, லட்சுமி.
”கடந்த கால நிகழ்ச்சிகளை திரும்பிப் பார்ப்பதில் ஒரு சுகம் கிடைக்கிறது. அந்த சுகத்தை அனுபவிக்கும் வாய்ப்பு வாசகர்களால் கிடைக்கிறது” என்று முன்னுரையில் எழுதியிருக்கிறார் சீனிவாசன். அவர் எழுதி முப்பது ஆண்டுகள் கழித்து வாசிக்கும்போது, அவருக்கு கிடைத்த அதே சுகம் இன்றும் வாசிப்பவனுக்கு அட்சரம் பிசகாமல் கிடைக்கிறது.
நூல் : கலைஞர்களோடு நான்
பக்கங்கள் : 96
விலை : ரூ.7.50
வெளியீடு : பாரதி பதிப்பகம்,
108, உஸ்மான் சாலை,
தியாகராய நகர், சென்னை-17.
குறிப்பு : 1986ல் வெளிவந்த நூல். பிரதிகள் பதிப்பகத்தில் இன்னும் கிடைக்குமா என்பது சந்தேகமே.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
விரைவில் வாங்கவேண்டும்.
பதிலளிநீக்கு//விலை : ரூ.7.50 ????//
பதிலளிநீக்கு!!!!!!!!!!!!!!!
நன்றி லக்கி!! நான் லக்கி!
பதிலளிநீக்குபக்கங்கள் : 96
பதிலளிநீக்குவிலை : ரூ.7.50//
நகலெடுத்தால் கூட அதிகம் ஆகுமே லக்கி ? ஏன் இவ்வளவு கம்மியாக விற்க வேண்டும் ?
7.50 thaana Lucky?
பதிலளிநீக்கு1998 ல் என்று நினைக்கிறேன். பாண்டிபஜார் வானதி பதிப்பகத்தில் ஒருமுறை, திரு.முக்தா அவர்களைக் காணநேர்ந்தபோது, எடிட்டர் எஸ்.ஏ.பி பற்றிய குறிப்புகள் சிலவற்றுக்கு விளக்கங்கள் வேண்டி அவரை அணுகினேன். எதையோ கூறமுற்பட்டவர், கணநேர யோசனைக்குப்பின், 'பிறகு வந்து சந்தியுங்கள்' என்றுகூறி சென்றுவிட்டார்!
பதிலளிநீக்குமேற்குறிப்பிட்ட நூலும், அவரது இன்னபிற ஆக்கங்களும் 'காந்தளக'த்தில் கிடைக்கக்கூடும்.
அப்போது தன்னை மறுப்பாளனாக சொல்லிக்கொண்ட சீனிவாசனும் அப்போது இருந்தபடியே இப்போதும் இருக்கிறாரா என்று தெரியவில்லை.
பதிலளிநீக்குமாற்றம் மட்டுமே உலகில் மாறாதது.
நண்பர்களே!
பதிலளிநீக்கு1986ல் வெளிவந்த முதல் பதிப்பு என்பதால் அந்த விலை. அதே விலை கொடுத்துதான் புத்தகக்காட்சியில் வாங்கினேன்.
அடுத்த பதிப்பு வந்ததா என்று தெரியாது!
very interesting post lucky...Lucky Returns !!! (after a long spell of a bit boring articles )...welcome back !!
பதிலளிநீக்குமிக எளிமையானவர் முக்தா! விகடனில் வெளியாகும் ‘பொக்கிஷம்’ பகுதியைத் தவறாமல் படித்து வருபவர். தன்னிடம் ஏதேனும் அபூர்வ போட்டோ இருந்தால் உடனே அதைத் தபாலில் விகடனுக்கு அனுப்பிவிட்டு, என்னைப் போனில் தொடர்பு கொண்டு, ‘... படம் அனுப்பியிருக்கேன். பயன்படுமான்னு பாருங்க’ என்பார். பிரதிபலன் எதிர்பார்க்கவே மாட்டார். அவரைப் பற்றிய பதிவு அருமை! சில மாதங்களுக்கு முன் ஜெயலலிதா தானே வலிய நேரில் சென்று சந்தித்துப் பேசிய ஒரு சிலருள் முக்தாவும் ஒருவர்!
பதிலளிநீக்குvery nice one.
பதிலளிநீக்குரவிபிரகாஷ் சார்!
பதிலளிநீக்குதகவலுக்கு நன்றி. அவர் காங்கிரஸ்காரராக இருந்தாலும் அவரை சந்தித்து ஒருமுறை உரையாற்ற விரும்புகிறேன் :-)