16 பிப்ரவரி, 2010

பசலை நோய்!

தலைவன் போருக்கு போகும்போது தனிமையில் தலைவிக்கு ஏற்படும் நோய் பசலையாம். பத்தாம் வகுப்பின் போது அறிந்துகொண்ட விஷயம். அதற்கு முன்பு பசலை என்பதை ஒரு கீரையாகதான் தெரியும். இது ஒரு காதல்நோய் என்றுதான் இத்துணை காலமும் நினைத்தேன். காதலுக்கு மட்டுமல்ல, நட்புக்கும் இதே நோய் வரக்கூடும் என்பதை இப்போது அனுபவப்பூர்வமாக உணர்கிறேன்.

கடந்த இரண்டு ஆண்டுகாலமாக மிக நெருக்கமாக நட்பு பாராட்டிய தோழனை கடந்த இரண்டு நாட்களாக ‘மிஸ்’ செய்கிறேன். இன்னும் குறைந்தது இரண்டு வார காலத்துக்காவது இந்த இடைவெளி தற்காலிகமாக இருக்குமென்று சென்னை மற்றும் கோவை வானிலை ஆராய்ச்சி நிலையங்களால் கணிக்கப்படுகிறது. தோழன் தலைவியை தேடி கோவைக்குப் போயிருக்கிறான். நானோ சென்னையில் இடது உள்ளங்கையை சொறிந்து கொண்டிருக்கிறேன். ஒருவேளை இதுதான் பசலைநோயின் அறிகுறியோ என்னவோ தெரியவில்லை. லேபில் பசலைநோய்க்கு டெஸ்ட் எடுப்பார்களா என்பதும் உறுதியாக அறியமுடியவில்லை.

2008ஆம் ஆண்டில், ஏதோ ஒரு பொன்மாலைப் பொழுதில் மெரீனா பீச்சில் அதிஷாவை முதன்முறையாகப் பார்த்தேன். பார்த்ததுமே பச்சக்கென்று கவருகிற தோற்றமில்லை. ஹலோ, ஹாய் என்ற ஓரிரு வார்த்தைகளோடு கைப்பேசி எண்ணை பரிமாறிக் கொண்டதோடு சரி. பின்னர் தொலைபேசியில் சிலமுறை பேசிக்கொண்டிருக்கிறோம்.

எங்கள் இருவரையும் நெருக்கமான நண்பர்களாக்கிய பெருமை, இன்னொரு நெருங்கிய நண்பரான செந்தழல்ரவியையே சேரும். அவரது இல்லவிழா பெங்களூரில் நடந்தபோது, என்னையும் அதிஷாவையும் அழைத்திருந்தார். இரவுநேரப் பேருந்து பயணத்தின் போதுதான் இருவரும் மனந்திறந்து பல விஷயங்களையும் பேசிக்கொண்டோம். ‘ஐஸ்பிரேக்’ நிகழ்ந்த இரவு அது. கிட்டத்தட்ட என்னுடைய ஆல்டர் ஈகோ அதிஷா என்பதை அப்போதுதான் உணர்ந்தேன்.

இருவருமே மிக மோசமான நிலையிலிருந்து நடுத்தர உயரத்துக்கு வந்தவர்கள். உரிய வயதுக்கு முன்பாகவே - பதினாறு வயதில் - குடும்பச்சூழலால் வருமானம் நிமித்தம் வேலை செய்ய தள்ளப்பட்டோம். இருவருமே குருவி தலையில் பனங்காய் என்பதுபோல இருபத்திரண்டு, இருபத்தி மூன்று வயதுகளில் உயிரை அடகு வைத்து, பணத்தைப் புரட்டி, வியர்வை சிந்தி அவரவர் சகோதரிக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறோம். இதுமாதிரி ஒப்பிட்டுப் பார்க்க ஏராளமான கோ-இண்சிடெண்டுகள். ‘இவனும் நம்மளை மாதிரியே’ என்ற எண்ணமே எங்கள் நட்பை ஃபெவிகால் போட்டு ஒட்டவைக்க போதுமானதாக இருந்தது.

ரசனைகளில் நேரெதிர் என்பதை ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். நான் தமிழ் சினிமாவின் அத்தனை மொக்கைகளையும் பார்த்தாகவேண்டும் என்று சபதம் பூண்டவன். அவரோ அல்பசினோ, குவாண்டின் டொரண்டினோ, ரோஸாமான் என்று உளறிக் கொண்டிருப்பவர். எனக்கு கலைஞரை பிடிக்கும். அவருக்கு புரட்சித்தலைவி.

இருவரும் நட்பானதின் விளைவு. எனக்காக ‘மேகம்’ என்று சூப்பர்பெஸ்ட் மொக்கையை அவர் உதயம் தியேட்டரில் பார்க்க வேண்டியிருந்தது. அவருக்காக தேவி தியேட்டரில் ‘இன்க்ளோரியஸ் பாஸ்டர்ட்ஸ்’ பார்த்தேன். நட்புக்காக இதுவரை யாரிடமும் காம்ப்ரமைஸ் ஆகாத நான், முதன்முறையாக அதிஷாவோடு காம்ப்ரமைஸ் ஆகவேண்டியிருந்தது.

இருவருமே இப்போது ஒரே அலுவலகத்தில் பணியாற்றுகிறோம். வெளியிடங்களில் ‘இரட்டையர்களாக’வே அறியப்படுகிறோம். என்னை தனியாக எங்காவது யாராவது பார்த்தால், “அதிஷா வரலையா?” என்று கேட்பது சகஜமாகிவிட்டது. அவருக்கும் அப்படியே.

இப்போது இதையெல்லாம் இங்கே செண்டிமெண்டு தடவி, வேண்டாவெறுப்பாக எழுதித் தொலைப்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அந்த அதிஷாவுக்கு கல்யாணம். எல்லோரும் அவசியம் வந்துடுங்க.



திருமணம் கோவையில் நடைபெற உள்ளதால்  வெளியூரிலிருந்து வரும் நண்பர்கள் அதிஷாவை தொடர்புகொள்ள   : 9884881824

22 கருத்துகள்:

  1. //2007ஆம் ஆண்டில், ஏதோ ஒரு பொன்மாலைப் பொழுதில் மெரீனா பீச்சில் அதிஷாவை முதன்முறையாகப் பார்த்தேன். //

    அண்ணா அது 2008 ஆம் ஆண்டு.அந்த சரித்திர நிகழ்வின்போது நானும் உடன் இருந்தேன் :)

    பதிலளிநீக்கு
  2. ஓக்கே அப்துல்லா திருத்திடறேன் :-)

    பதிலளிநீக்கு
  3. அலுவலக வேலை காரணமாக நான் வருவது சிரமம் யுவா. அதிஷாவிடமும் இதை தெரியப்படுத்திவிட்டேன். என் சார்பாகவும் நீங்களே நேரில் வாழ்த்திவிடுங்கள்.

    தோழமையுடன்
    பைத்தியக்காரன்

    பதிலளிநீக்கு
  4. பதினேழாம் தேதி சேலத்துல மாநாடு

    பத்தொம்பதாம் தேதி ஊட்டில ஊர்வலம்

    பதனெட்டாம் தேதி நான் எங்க இருக்கேன் ?!?!?!?!

    ஆங் ! பதனெட்டாம் தேதி நான் டெல்லில இருக்கேன் . சரி விடுங்க உங்க நட்புக்காக டெல்லி புரோகிராம கேன்சல் பண்ணிடலாம் !

    அப்பறம் பிளவர்ஸ் எல்லாம் போட்டு ரெடியா வெய்ங்க!

    குஞ்சானி ! குஞ்சானி !

    பதிலளிநீக்கு
  5. லக்கி, நட்பை பகிர்ந்த விதம் அருமை. அண்ணே, வந்துடுங்கண்ணே என்ற முகம் கண்முன்னால் வந்தது. கொஞ்சம் முன்னதாக தெரிந்திருந்தால் வந்திருக்கலாம். மிஸ் பண்ணிவிட்டேன். அதிஷா திருமணத்திற்கு வாழ்த்துகள்.
    முன்கூட்டியே திட்டமிடாததால் திருமணத்திற்கு வர இயலவில்லை.
    சென்னையில் பதிவர்கள் சார்பில் ஒரு வரவேற்பு வேண்டுமானால் வைத்துவிடலாம்.

    பதிலளிநீக்கு
  6. உங்கள் நண்பரின் திருமணத்திற்கு நல் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. அதிஷாவுக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  8. மனமார்ந்த நல்வாழ்த்துகள்!
     
    அகநாழிகை சொன்னதுபோல  சென்னையில் பதிவர்கள் சார்பில் ஒரு வரவேற்பு வேண்டுமானால் வைத்துவிடலாம்.

    பதிலளிநீக்கு
  9. அதிஷாவுக்கு வாழ்த்துகள்!

    லக்கி பொண்ணு பொறந்தாச்சுன்னு போட்டுக் கொடுத்ததுக்கு அதிஷா இன்னும் பேச்சிலர் இல்லைன்னு போட்டுக்கொடுத்தாச்சில்லே. சரியாப் போச்சா?

    பதிலளிநீக்கு
  10. யுவா,

    அதிஷாவிற்கு வாழ்த்துக்கள்.

    உங்கள் நட்பை நீங்கள் வெளிப்படுத்திய விதம் அருமை.

    நேற்று பரிசல் இன்று அதிஷா.

    பொறாமையாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  11. அதிஷாவுக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  12. உங்கள் நட்பிற்கும், நண்பருக்கும் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  13. நண்பரின் திருமணத்திற்கு நல் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  14. தல,
    பசலை நோய் என்பது தலைவனை பிரிந்த தலைவிக்கு மட்டுமே வரும். அவர்களின் மார்பில் தான் இது தோன்றும்.

    இருந்தாலும் நட்பின் நிமித்தம் உங்களின் அருமையான பதிவு என்னை தொட்டு விட்டது. சில வேளைகளில் நண்பர்களை பிரியும்போது திடீரென்று கை உடைந்த மாதிரி தோன்றுவதை உணர ஆரம்பித்து விட்டீரோ?

    பதிலளிநீக்கு
  15. அதிஷாவுக்கு வாழ்த்துகள்!
    - சென்னைத்தமிழன்

    பதிலளிநீக்கு
  16. அதிஷாவுக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  17. //***அண்ணா அது 2008 ஆம் ஆண்டு.அந்த சரித்திர நிகழ்வின்போது நானும் உடன் இருந்தேன் :)***//

    அட, அப்ப நானும் அங்கு இருந்தேன். புகைப்பட ஆதாரம் :)

    பதிலளிநீக்கு
  18. வாழ்த்துக்கள் அதிஷா!

    அன்புடன்,
    -ரவிச்சந்திரன்

    பதிலளிநீக்கு
  19. வாழ்த்துக்கள் !

    நண்பர்க்கு நல்ல அறிமுகம்

    பதிலளிநீக்கு
  20. கோப்பெருஞ்சோழன்-பிசிராந்தையார் நட்பு போல(இதுல யாரு கோப் யாரு பிசி)தொடரட்டும்.

    திருமணத்திற்கு வர முடியவில்லை.
    மன்னிக்கவும்.ஏன் என்றால் அதிஷா யார் என்றே தெரியாது.

    பதிலளிநீக்கு