12 பிப்ரவரி, 2010

கலையும், கல்வியும் சங்கமம்!


‘தத்தை தாம் தித்தைதாம்’ என்று அலங்காரமாய் அடவுச் சொல் கட்டுகள் முழங்கிக் கொண்டிருக்கின்றன. சலங்கையணிந்த பல ஜோடி கால்களின் ‘ஜல் ஜல்’ சத்தம் ஏற்படுத்தும் ஜூகல்பந்தி ஒருபுறம். ‘தட் தட்’டென தட்டுக்கழியின் தாளச்சத்தம் சீரான இடைவெளியில் தொடர்ச்சியாக ஒலிக்கிறது. வீணையின் நாதம், வயலின் இசை, மிருதங்க ராஜாங்கம், தபதபவென முழங்கும் தபேலா, ‘ங்கொய்’யென காதில் ரீங்காரமிடும் ஹார்மோனியம் – நம் பாரம்பரியக் கலைகள் மொத்தமாக சங்கமிக்கிறது கலைக்காவிரியில்.

கலைக்காவிரி என்று சொன்னால் பலருக்கும் தெரியாது. கண்ணதாசனின் ‘இயேசு காவியம்’ என்று சொன்னால் தெரியுமில்லையா? 1982ல் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரால் வெளியிடப்பட்ட இந்த இலக்கியத்தை தமிழ் கூறும் நல்லுலக்த்துக்கு வழங்கிய கலை நிறுவனம் இந்த கலைக்காவிரி.

ஆரம்பத்தில் கலைக்குழுவாக செயல்பட்ட கலைக்காவிரி இசையிலும், நடனத்திலும் நவீன வடிவங்களை முயற்சித்துப் பார்த்த முன்னோடி நிறுவனம். ஆயிரத்து ஐநூறு மேடைகள் கண்ட பெருமை கலைக்காவிரிக்கு உண்டு. போப்பாண்டவர் முன்பாக கூட இந்திய பாரம்பரிய கலையை நடத்திக்காட்டி நாட்டுக்கு பெருமை சேர்த்த குழு இது. கடந்த 2000ஆம் ஆண்டு தமிழக அரசால் சிறந்த கலைநிறுவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பு செய்யப்பட்டது.

“நாங்கள் வெறும் கலைக்குழு மட்டுமல்ல. கலைக்கல்லூரியும் கூட. தமிழ்நாட்டிலேயே நடனம், இசை இரண்டிற்கும் இணைந்து இளங்கலை பட்டப்பட்டிப்பு வழங்கும் முதல் நுண்கலைக் கல்லூரி நாங்கள் மட்டுமே. இக்கல்லூரியில் +2 படித்தவர்களுக்கு மூன்று ஆண்டுகள் பட்டப்பயிற்சியும், பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஐந்தாண்டு ஒருங்கிணைந்த பட்டப்பயிற்சியும் அளிக்கிறோம்” என்கிறார் கல்லூரியின் முதல்வர் டாக்டர் மார்கரெட் பாஸ்டின்.

“நடனத்துக்குப் பட்டமா?” ஆச்சரியத்தோடு கலைக்காவிரிக்குள் நுழைந்தோம். ஆச்சரியங்கள் தொடர்ந்தது. திருச்சி பென்வெல்ஸ் சாலையில் குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைதியாக வீற்றிருக்கிறது கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி. 1977ல் கலைக்கல்லூரி தொடங்கியதிலிருந்தே அங்கே பணியாற்றும் தபேலா கலைஞரான திரவியம் நம்மை அழைத்துச் சென்று கல்லூரியை சுட்டிக் காட்டுகிறார். படிக்கட்டுகளில் தாவித்தாவி ஏறும் இந்த இளைஞருக்கும், தமிழக முதல்வருக்கும் ஒரே வயதாம்.

“மனிதனுக்கும், கடவுளுக்கும் பொதுவான ஒரே விஷயம் கலைதான். அதனால்தான் மதம் கூட இசை, நடனமென்று கலைவடிவிலான வழிபாட்டை கொண்டிருக்கிறது. வாழ்க்கையை சோர்வின்றி வாழ கொண்டாட்டம் தேவை. கலையை தவிர வேறு எதை நாம் பெரியதாக கொண்டாடிவிட முடியும்? அதனால்தான் எங்கள் நிறுவனர் ஜார்ஜ் அடிகளார் கலைகளுக்கு முக்கியத்துவம் அளித்தார்” - திரவியம் இடையிடையே தத்துவமழை பொழிகிறார். எதிர்ப்படும் மாணவியர்கள் “குட்மார்னிங் டாடி” என்று அவரைப் பார்த்து வணக்கம் வைக்கிறார்கள். “இங்கே படிக்குற எல்லாருமே என் குழந்தைங்க. என்னை டாடின்னு தான் கூப்பிடுவாங்க” என்கிறார்.

பரதநாட்டியம், வயலின் என்று வகுப்புகள் நடக்கும் ஒவ்வொரு வகுப்பறையாக அவர் சுற்றிக் காட்டிக் கொண்டே வர, ஒரு வகுப்பறையில் கல்லூரி முதல்வரே வாய்ப்பாட்டு வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார். இக்கல்லூரியின் வகுப்புச்சூழல் அலாதியானது. தலையணை சைஸ் புத்தகங்களும், நோட்டுக்களுமாகதான் இதுவரை நாம் கல்லூரியை பார்த்திருக்கிறோம். நாட்டிய உடை, வேட்டி, சட்டை, சலங்கைகள், வயலின், ஹார்மோனியம், வீணை என்று பார்ப்பது வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது. கண்டிப்பு என்கிற விஷயம் நிர்வாகத்திடம் கிஞ்சித்தும் இல்லை. “நாங்கள் கண்டிக்கக்கூடிய வாய்ப்பை எங்கள் மாணவர்கள் எங்களுக்கு வழங்குவதில்லை!” என்று சிரித்துக் கொண்டே சொன்னார் முதல்வர்.

மாணவ மாணவியர்களில் பெரும்பாலானவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். நிறைய பேர் பொருளாதார நலிவுற்ற குடும்பத்தில் இருந்து வந்தவர்கள். கல்வி, வேலைக்கும், சம்பாதியத்துக்கும் கருவியாக பார்க்கப்படும் இன்றைய சமூகத்தில், கலையார்வத்தோடு இங்கே பயில வருபவர்கள் நம்மை நிரம்பவே ஆச்சரியப்படுத்துகிறார்கள். வெளி மாநிலங்களிலிருந்தும், வெளி நாடுகளிலிருந்தும் கூட கலைக்கல்வி பயில தாகத்துடன் கலைக்காவிரிக்கு படையெடுப்பவர்கள் ஏராளம்.

கல்லூரியின் சூழல் இருக்கட்டும், மற்ற விஷயங்கள் என்னென்ன? விளக்க முன்வருகிறார் நிர்வாகப் பணியாளரான விண்சென்ட் தனராஜ்.

பயிற்சித் திட்டம் : பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் கூட இந்த கல்லூரியில் பயிலலாம். ஐந்து ஆண்டுகள் படிப்பு முடிந்ததும், ஒருங்கிணைந்த நுண்கலைப் பட்டம் (Integrated Bachelor of Fine Arts) வழங்கப்படுகிறது. நடனம், இசை என்று கலந்துகட்டி வழங்கப்படும் கல்வி இது.
+2 முடித்தவர்கள் பரதத்திலும், இசையிலும் (வாய்ப்பாட்டு, வயலின், வீணை, மிருதங்கம்) இளநுண்கலைப் பட்டம் (Bachelor of Fine Arts) பயிலலாம். இப்பட்டப் படிப்பு மூன்று ஆண்டுகள் பயில வேண்டும்.

பட்டதாரி மாணவர்கள் நேரடியாக பரதம், இசை துறைகளில் முதுகலைப் பட்டத்துக்கு (Master of Fine Arts) படிக்கலாம். முதுநுண்கலைப் பட்டத்துக்கு இரண்டு ஆண்டுகள் பயில வேண்டும். முதுநுண்கலை முடித்த மாணவர்கள் பரதத்தில் முனைவர் ஆய்வும் (P.hd) இங்கேயே செய்யலாம்.

மேற்கண்ட பட்டங்களை திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் வழங்குகிறது.


நாட்டியத்துக்கு தொலைதூரக் கல்வி : நாட்டியத்தை தொலைதூரத்தில் கற்பிக்க முடியுமா என்று கேட்டால் ‘ஆம்’ என்று தைரியமாக சொல்லலாம். உலகிலேயே பரதநாட்டியத்துக்கு தொலைதூரக் கல்வி மையம் அமைத்த முதல் கல்லூரி கலைக்காவிரி. திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் வணிக மேம்பாட்டு மையத்தோடு இணைந்து இக்கல்வி நடத்தப்படுகிறது.
வேறு படிப்பு படிப்பவர்களும் பரதத்தை படிக்க இந்த வளாகம் கடந்த பரதநாட்டிய பட்டப்படிப்புத் திட்டம் உதவுகிறது. நம் நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது ஜெர்மனி, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, இங்கிலாந்து, கனடா, இலங்கை ஆகிய நாடுகளிலிருந்தும் ஏராளமான பேர் இக்கல்வியை கற்கிறார்கள்.

நேரிடையாக ஒரு ஆசிரியர் இருந்து சொல்லிக் கொடுக்க வேண்டிய பரதத்தை எப்படி தொலைதூரக்கல்வியாக கற்பிக்க முடியும்?

இங்கேதான் தொழில்நுட்பம் கலைக்காவிரிக்கு கைகொடுக்கிறது. பாடங்கள் டி.வி.டி.யில் பதிவு செய்யப்பட்டு மாணவர்களுக்கு அனுப்பப்படுகிறது. அதன் மூலம் பயிற்சி பெறுபவர்கள், தாங்கள் பெற்ற பயிற்சிகளை வாரயிறுதிகளில் நேரடியாக அந்தந்த நகரங்களிலும், நாடுகளிலும் அமைந்திருக்கும் கலைக்காவிரி பயிற்சி மையங்களில் நேரடியாக சரிசெய்துக் கொள்ளலாம்.
ஏற்கனவே பரதம் பயின்றவர்கள் பலரும் கூட அங்கீகாரச் சான்றிதழுக்காக இக்கல்வியை கற்கிறார்கள். இதுவரை இம்முறையில் 85 பேர் டிப்ளமோவும், 25 பேர் இளநுண்கலைப் பட்டமும், 65 பேர் முதுநுண்கலைப் பட்டமும் வாங்கியிருக்கிறார்கள்.

எப்படி சேருவது?

வழக்கமான கல்லூரிகளைப் போலவே ஜூன்மாதம் தான் இங்கேயும் கல்வியாண்டு தொடங்குகிறது. நுண்கலை போதிக்கும் கல்லூரி என்பதால் ஒரு வகுப்புக்கு அதிகபட்சமாக 20 பேர் மட்டுமே சேர்த்துக் கொள்ளப் படுவார்கள். இப்போது சுமார் 150 மாணவர்கள் பயில்கிறார்கள். நிறுவனங்களில் பணியாற்றுபவர்களும், வேறு கல்லூரிகளில் படிப்பவர்களும் நுண்கலை பயில வசதியாக மாலை வகுப்புகளும் உண்டு.

மிகக்குறைந்த அளவிலான மாணவர்களே சேர்த்துக் கொள்ளப்படுவதால் இக்கல்லூரி, மாணவர் நுழைவு அழைப்புக்கான விளம்பரங்கள் எதையும் நாளிதழ்களில் வெளியிடுவதில்லை. கல்வியாண்டு தொடங்கப் படுவதற்கு முன்பே கல்லூரியை அணுகுவதுதான் ஒரேவழி. www.kalaikavirifineart.com என்ற இணையத்தள முகவரியில் மேலதிக விவரங்கள் கிடைக்கும். அல்லது 0431-2460678 / 2412340 எண்களை தொடர்புகொண்டு பேசலாம்.

வேலைவாய்ப்புகள் என்னென்ன?

நாட்டியமும், இசையும் படித்தால் என்ன வேலை கிடைத்துவிடப் போகிறது என்று நினைக்கிறீர்களா? உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள்.

பள்ளிகளில் இசை, நடனத்துக்கு இப்போதெல்லாம் ஆசிரியர்கள் நியமிக்கப் படுகிறார்கள். நல்ல சம்பளமும் கொடுக்கிறார்கள். நுண்கலைப் பட்டம் பெற்றவர்களுக்கு இங்கே முன்னுரிமை வழங்கப்படுகிறது.

சுயவேலைவாய்ப்பு அதிகம். சொந்தமாக நடனப்பள்ளிகளோ, இசைப்பள்ளிகளோ அமைக்கலாம். மாலைநேர வகுப்புகள் நடத்தினாலே ஆயிரங்களை சுலபமாக அள்ளலாம்.
வெளிநாடுகளில் நம் கலைகளுக்கு பெருத்த மரியாதை வழங்கப்படுவதால், இங்கே பயில்பவர்கள் நிறைய பேர் வெளிநாடுகளுக்கும் பறக்கிறார்கள். நுண்கலை பயில்பவர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.

சென்னைப் போன்ற நகரங்களில் நடத்தப்படும் நிறுவனங்களில் கூட நாட்டியத்துக்கும், இசைக்கும் ஒருங்கிணைந்த பட்டம் இல்லை. அதிலும் பார்க்கப்போனால் மற்ற இடங்களில் பட்டயம் (Diploma) தான் வழங்கப்படுகிறது. கலைக்காவிரியில் மட்டுமே நுண்கலைகளுக்கு பட்டம் வழங்கப்படுகிறது என்பதில் இக்கல்லூரி தனித்து சிறப்படைகிறது.

“எங்களது நோக்கம், லட்சியம், குறிக்கோள் அனைத்துமே இக்கல்லூரியை வெகுவிரைவில் நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக தகுதி உயர்த்துவதுதான்!” என்கிறார்கள் கலைக்காவிரியினர்.
‘தமிழகத்தில் பாரம்பரியக் கலைகளுக்கு மட்டுமேயான ஒரு பல்கலைக்கழகம்!’ – நினைத்துப் பார்க்கவே இனிப்பாக இருக்கிறது இல்லையா?

(நன்றி : புதியதலைமுறை)

2 கருத்துகள்:

  1. நீங்கள் பதியும் பதிவு இதுவரை கேள்விபடாத விசயங்களாக இருக்கிறது
    தொடர்ந்து பதியவும்

    வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  2. குற்றாலத்தில் வைத்து, வெறும் 16 நாட்களில், ஒரேமூச்சில் படைக்கப்பட்டதுதான் 'இயேசு காவியம்'. அதற்கு மூலமாய் விளங்கிய "கலைக்காவிரி" பற்றி, மேலும் பல பயனுள்ள தகவல்களை இப்பதிவின்மூலம் அறியமுடிந்தது. நன்றி!

    பதிலளிநீக்கு