28 பிப்ரவரி, 2010

இருள்நீக்கும் இந்தியச்சுடர்!


இருளை கண்டு நீங்கள் பயப்படலாம். இருளின் தன்மையும் இதுதான். இதிலிருந்து தப்பிக்க விடியும் வரை காத்திருப்பதுதான் ஒரே வழி. இவ்விதி இரவின் இருளுக்குப் பொருந்தும்.

வாழ்க்கை இருளுக்கு?

இருளின் இன்னொரு பெயர் குறைந்த வெளிச்சம் என்று சொல்லுவதெல்லாம் கவிதைக்கு வேண்டுமானால் அழகாக இருக்கலாம். விடியுமென்று காத்திருந்து மண்ணோடு மண்ணாகிப் போனவர்கள் பல்லாயிரம் பேர். என்றாவது ஒருநாள் என் வாழ்க்கை அதுவாகவே விடியும் என்று காத்திருப்பது மூடநம்பிக்கை. முனைப்பான முயற்சிகள் மட்டுமே உங்கள் விடியலை விரைவாக்கும்.

அதுவரை வெளிச்சத்துக்கு ஒரு மெழுகுவர்த்தியாவது துணைக்கு வேண்டும் அல்லவா? பல ஆயிரம் பேருக்கு விடியும் வரை மெழுகுவர்த்தி வெளிச்சம் தந்து காத்து வரும் பணியைதான் செய்துவருகிறது இந்தியச் சுடர்.

சுடர் முதலில் எங்கே தோன்றியது?

உதயகுமார் என்ற இளைஞரும், அவருடைய நண்பர்களும் அப்போது சென்னை பச்சையப்பா கல்லூரி மாணவர்கள். கிராமங்களில் இருந்து நகருக்கு படிப்பு நிமித்தமாக வந்தவர்கள். பெரும்பாலானவர்கள் அவரவர் குடும்பத்தில் முதல் தலைமுறையாக பட்டம் படிப்பவர்கள்.

இந்த கல்விக்காக தாங்கள் அடைந்த சிரமங்களை அவ்வப்போது பேசிக்கொள்வார்கள். போதுமான அறிவும், திறனும் இருந்தும் கூட பட்டப்படிப்பு படிக்க வாய்ப்பில்லாமல், பணிபுரிய சென்ற தங்களுடைய சகபள்ளித் தோழர்களை நினைவு கூர்ந்து கொள்வார்கள்.

“சரி. எப்படியோ அடித்துப் பிடித்து நமக்கு இந்த வாய்ப்பு கிடைத்துவிட்டது. நம்முடைய அடுத்த தலைமுறைக்கு?” அக்கறையோடு அவர்களுக்குள் எழுந்த இந்த கேள்விக்கு விடை தேடிக்கொண்டிருந்தார்கள்.

கல்லூரி முடிந்ததும், திசைக்கொரு பறவைகளாய் பறந்தார்கள். தகவல் தொழில்நுட்பத்துறை விஸ்வரூபம் எடுத்து நின்ற காலம் அது. பெரும்பாலானவர்களுக்கு அதே துறையில் நல்ல சம்பளத்தோடு வேலை கிடைத்தது. தொலைபேசியிலும், நேரிலும் அவ்வப்போது சந்தித்து விவாதிக்கும்போது தங்களுடைய முந்தைய கேள்விக்கு இப்போது அவர்களிடம் பதில் இருந்தது. ஏனெனில் இப்போது இவர்கள் பொருளாதாரத் தன்னிறைவு பெற்றிருந்தார்கள். தங்கள் வருமானத்தின் ஒரு பகுதியை இயலாதவர்களுக்கு தந்து உதவும் மனமும் அவர்களிடம் இருந்தது.

இப்படித்தான் 2004ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ‘இந்தியச் சுடர்’ நிறுவனம் பிறந்தது. கிராமங்களில் இருந்து வந்தவர்கள் மீண்டும் கிராமங்களுக்கே சென்று, தாங்கள் அடைந்த முன்னேற்றத்தை, தங்களுக்குப் பிறகு வருபவர்களும் பெறவேண்டும் என்ற நோக்கத்தோடு ஏற்றிய சுடர் இது. உயர்ந்த நோக்கங்கள் தங்களை தாங்களே நிறைவேற்றிக் கொள்ளும் திறன் படைத்தவை.

தொடங்கப்படும்போது இந்தியச்சுடர் தமக்குள்ளாக எடுத்துக்கொண்ட உறுதிமொழிகள் இவை :

- வலிமையான இந்தியாவை உருவாக்க கல்வியை பரவலாக்குவது.

- ஆதரவற்ற மற்றும் ஏழை குழந்தைகளுக்கு எட்டாக்கனியாக இருக்கும் கல்வியை அவர்கள் எட்டுமாறு வகை செய்து தருவது.

- குழந்தைகளின் திறனை சமூக-கலாச்சார மேம்பாட்டு நிகழ்வுகளின் மூலமாக அதிகரிப்பது.

- சுய ஒழுக்கம் மிகுந்த சமுதாயத்தை உருவாக்கும் பணியை குழந்தைகளிடமிருந்தே துவங்குவது.

இந்த உறுதிமொழிகளை அரசுசாராத ஒரு அமைப்பு எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமென்ன, அதுவும் குறிப்பாக கல்வி குறித்த அக்கறையோடு? இங்குதான் இன்றைய கள யதார்த்தம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டியிருக்கிறது. சுதந்திரம் பெற்று அறுபத்து மூன்று வருடங்களாக தன்னாட்சி செய்துவந்தும் இந்தியாவின் நிலை கீழ்க்கண்டவாறுதான் இருக்கிறது.

- 65.4% மக்களுக்கு மட்டுமே எழுதப் படிக்கத் தெரியும். சுமார் முப்பத்தைந்து கோடி பேருக்கு எழுத்து, படிப்பு வாசனையே இல்லை.

- ஏழ்மை காரணமாக ஆயிரம் குழந்தைகளில் எண்பத்தி இரண்டு குழந்தைகள் பள்ளிக்கு அனுப்பப்பட வேண்டிய வயதில் பணிக்கு அனுப்பப் படுகிறார்கள்.

- 2,390 லட்சம் பேருக்கு வெறும் ஐந்து லட்சம் பள்ளிகளே இருக்கின்றன.

- பதினான்கு சதவிகிதம் பள்ளிகளுக்கு முறையான கட்டிடம் இல்லை.

- முப்பத்தியெட்டு சதவிகிதம் பள்ளிகளுக்கு கரும்பலகை கூட இல்லை.

- முப்பது சதவிகிதம் பள்ளிகள் ஒரே ஒரு ஆசிரியரோடு இயங்கி வருகின்றன.

- ஐம்பத்தியெட்டு சதவிகிதம் பள்ளிகளில் குடிநீர் வசதி இல்லை.

- பள்ளிக்கு வரும் குழந்தைகளில் எழுபது சதவிகிதம் பேர் பதினான்கு-பதினைந்து வயதுகளில் பள்ளிக்கு செல்வதை நிறுத்தி விடுகிறார்கள்.

இந்த புள்ளி விவரத்தைப் பார்த்ததுமே, நாம் செய்யக்கூடிய விஷயம் இரண்டே இரண்டாகதான் இருக்க முடியும். ஒன்று நம் அரசுகளை திட்டித் தீர்த்துவிட்டு, மாலை முதல் காட்சி சினிமா பார்க்கப் போய்விடலாம். இரண்டாவது, அரசினை மட்டுமே முழுமையாக எதிர்பாராமல் இந்நிலை மாற நம்மாலான அதிகபட்ச பங்கினை தந்திட உறுதியேற்கலாம். இந்தியச் சுடர் இளைஞர்கள் இரண்டாவது உறுதியை ஏற்றார்கள்.

ஆறுவிதமான திட்டங்களை தீட்டினார்கள்.

ஆசிரியர்களை பணிக்கு அமர்த்துதல் : கிராமப்புறப் பள்ளிகள் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்கள் ஆகியவற்றுக்கு ஆசிரியர்களை தங்கள் செலவில் நியமிப்பது. டியூஷன் மையங்களை உருவாக்கி, ஆசிரியர்களை நியமித்து மாணவர்களுக்கு பிரத்யேக கல்வி அளிப்பது.

கல்வி கருவிகளை வழங்குதல் : பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், பள்ளிப்பை, சீருடை, மிதியணி உள்ளிட்ட செலவு பிடிக்கும் விஷயங்களின் சுமையை, ஏழைப் பெற்றோர்களிடமிருந்து நிறுவனம் தாங்கள் சுமக்கத் தொடங்குவது.

சுயமுனைப்பு பயிற்சி : சுயமுனைப்பு நிகழ்ச்சிகள், கலாசார நிகழ்ச்சிகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், குவிஸ், ஆசிரியர் பயிற்சி போன்ற நிகழ்ச்சிகளை தேவைப்படும் பகுதிகளில் தொடர்ச்சியாக நிகழ்த்துவது.

மாணவர்களை தத்தெடுத்தல் : ஒரு ஆண்டு முழுவதும் ஒரு மாணவனுக்கு ஆகும் கல்விச்செலவு மொத்தத்தையும் தத்தெடுத்தல்.

கணிப்பொறி பயிற்சி : கணிப்பொறி மையங்களை நிறுவி இலவச கணிப்பொறி பயிற்சியை மாணவர்களுக்கு வழங்குதல்.

நூலகம் : நூலகமற்ற பள்ளிகளில் நூலகங்களை உருவாக்குதல்.

இந்த திட்டங்களை நிறைவேற்ற இந்தியச் சுடரை, அரசு பதிவுபெற்ற நிறுவனமாக மாற்றி, அறங்காவலர்களை நியமித்தார்கள். கிராமங்களுக்கு, ஆதரவற்றோர் இல்லங்களுக்கு, அரசுப்பள்ளிகளுக்கு படையெடுத்தார்கள். யாருக்கு, எங்கே உதவி தேவைப்படுகிறது என்று கண்டறிந்தார்கள்.

உறுப்பினர்களிடையே நிதி பெற்று உதவினார்கள். மேலும் தேவைப்பட்ட நிதிகளை வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் மூலமாக சேகரித்தார்கள். ஆரம்பத்தில் எழுபது பேர் உறுப்பினர்களாக இருந்த அமைப்பு இன்று எண்ணூறுக்கும் மேற்பட்டவர்களாக வளர்ந்திருக்கிறது. உதவி பெறும் மாணவர்களின் எண்ணிக்கையும் ஆண்டுக்கு ஆண்டு பெருகியே வருகிறது.

தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட அமைப்பு இன்று பாண்டிச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மேற்கு வங்காளம், மணிப்பூர், மத்தியப் பிரதேசம் என்று மற்ற மாநிலங்களுக்கும் கிளைபரப்பு கல்விச்சேவையை வழங்கி வருகிறது.

கடந்த ஆறு வருடங்களில் இருபத்தி ஆறு ஆயிரம் மாணவர்கள் வாழ்வில் இந்தியச் சுடர் வெளிச்சம் ஏற்றியிருக்கிறது. முப்பத்தி நான்கு லட்ச ரூபாய் அளவிற்கு நிதி திரட்டி கல்விக்காக செலவழித்திருக்கிறார்கள்.

செலவு விஷயத்தில் சவுதி அரேபிய சட்டங்களுக்கு நிகரான கறார்த்தன்மை இருப்பதில் இந்தியச் சுடர் மற்ற அரசுசாரா நிறுவனங்களிடம் இருந்து வேறுபடுகிறது. திரட்டப்படும் நிதியின் ஒவ்வொரு காசும், பயனாளிக்கு போய்ச்சேர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். இதுவரை இந்நிறுவனத்தின் நிர்வாகச்செலவு முழுவதையுமே உறுப்பினர்களே தங்களுக்குள் பகிர்ந்து கொள்கிறார்கள். பயணப்படியோ, வேறு படிகளோ இதில் பணியாற்றுபவர்களுக்கு இல்லை. ஒரு திட்டம் தொடர்பாக, ஒரு உறுப்பினர் மணிப்பூருக்கு செல்ல வேண்டுமானால் அவரது சொந்த செலவில்தான் செல்ல வேண்டும். நிறுவனம் தனது நிதியிலிருந்து பணம் தராது.

“கொஞ்சம் கஷ்டமான விஷயம்தான் இது. ஆனாலும் எங்களுக்கு வேறு வழியில்லை. நாங்கள் திரட்டும் ஒவ்வொரு காசும், யாருக்காக தரப்படுகிறதோ, அவருக்கு போய்சேர வேண்டும் என்பதால் இந்த கடுமையை கடைப்பிடிக்க வேண்டியிருக்கிறது” என்கிறார் அறங்காவலர்களில் ஒருவரான சற்குணன். இந்த ‘சொந்தச்செலவில் சேவை’ திட்டத்துக்கு இதுவரை உறுப்பினர்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்ற கூடுதல் தகவலை தருகிறார் இன்னொரு அறங்காவலரான சிவநாராயணன்.

இந்தியச் சுடர் உறுப்பினர்கள் தயாரித்திருக்கும் ‘உயர்கல்வி வழிகாட்டி’ என்ற பதினாறு பக்கநூல் அவர்களது குறிப்பிடத்தகுந்த முக்கியமான சாதனை. மேல்நிலை பள்ளிக்கல்வி முடித்த ஒவ்வொரு மாணவனுக்கும் ஏற்படும் குழப்பங்களை போக்குகிறது. உயர்கல்வி குறித்த எல்லா வாய்ப்புகளையும் சுருக்கமாக, எளிமையாக அலசி ஆராய்கிறது. இந்நூலை இலவசமாகவே தேவைப்படும் மாணவர்களுக்கு வழங்கி வருகிறார்கள்.

“கல்வியால் முன்னேறியவர்கள், அடுத்த தலைமுறையின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். ஆதரவற்ற குழந்தைகளுக்கும், அரசுப்பள்ளி மாணவர்களுக்கும் இந்த கல்விச்சேவையில் முன்னுரிமை வழங்கி வருகிறோம். கல்விக்காக ஆகும் செலவினை தடைக்கல்லாக நினைக்காமல் எங்களிடம் மாணவர்கள் வரலாம். எங்களால் இயன்றதைச் செய்கிறோம்” என்று வாக்கு கொடுக்கிறார் இந்நிறுவனத்தின் நிறுவனரான உதயகுமார்.

அரசின் கையை எதிர்பார்க்காமல், தன் கையே மற்றவர்களுக்கு உதவும் என்று களமிறங்கியிருக்கும் இந்த இளைஞர்கள், கல்விப்புரட்சிக்கான விதையை விதைத்து வருகிறார்கள். எதிர்கால சமூகம் கனியை ருசிக்கும் என்று நம்பலாம்.

யாரோ ஒருவருக்கு விளக்கேற்றினால், நீங்கள் செல்லவேண்டிய பாதையும் ஒளிமயமாகிறது!

இந்தியச் சுடர் தொடர்புக்கு :
இணையம் : www.indiasudar.org
மின்னஞ்சல் : admin@indiasudar.org
வி.உதயகுமார், தலைமை நிர்வாகி : 9886733607
டி.சற்குணன், நிர்வாகி : 9884153800

(நன்றி : புதிய தலைமுறை)

6 கருத்துகள்:

  1. வழக்கம் போல் மற்றோரு நம்பிக்கை துளிர் விடும் பதிவு...

    வாழ்த்துக்கள் யுகி!

    மயிலாடுதுறை சிவா...

    பதிலளிநீக்கு
  2. நிஜமாகவே உங்கள் பணி போற்றுதலுக்குரியது யுவா... 'கொட்டுக்காரம்பட்டி நடுநிலைப்பள்ளி',‘சேஞ்ச் இந்தியா’,‘உதவும் நண்பர்கள்’- 'ஆலத்தூர் காந்தி', 'நம்ம ஊரு ஆர்க்கிமிடீஸ்', 'முர்ஸிதாபாத் பாபர் அலி', 'ஏஸ் சாஃப்ட் ஸ்கில்ஸ்'-இளங்கோ, 'நல்லோர் வட்டம்'-பாலசுப்பிரமணியன், 'சேவாலயா', ஜி.ஏ. ஜான், சூளகிரி-சாமுவேல், நந்தகுமார், ஐ.ஆர்.எஸ், எம்.எஸ்.சாமிநாதன் பவுண்டேஷன்-பரசுராமன், மாங்குடி தலைமை ஆசிரியர் ஜோதிமணி, ஆட்டோ ராமர், இந்தியச் சுடர்..... மனிதத்தையும், நம்பிக்கையையும் வெளிச்சம் போட்டுக் காட்டும் நற்பணிக்கு ஒரு ரெட் சல்யூட்

    பதிலளிநீக்கு
  3. அருமை. உங்களின் நற்பணி தொடர வாழ்த்துக்கள் நண்பரே! நன்றி!

    பதிலளிநீக்கு
  4. உலகில் எத்தனை பேருக்கு இந்த போதும் என்ற மனம் வரும்...
    இப்போது இவர்கள் பொருளாதாரத் தன்னிறைவு பெற்றிருந்தார்கள். தங்கள் வருமானத்தின் ஒரு பகுதியை இயலாதவர்களுக்கு தந்து உதவும் மனமும் அவர்களிடம் இருந்தது.

    வாழ்த்துக்கள் நண்பர்களே.

    பதிலளிநீக்கு