20 பிப்ரவரி, 2010

கீழே பார்க்கும் நட்சத்திரங்கள்!


‘ஏழு தலைமுறைக்கு சொத்து இருக்கு. படிப்பு எதுக்கு?’ என்று வசதி படைத்த மாணவர்களுக்கும், ‘சோத்துக்கே வழியில்லை, படிப்பு ஒரு கேடா?’ என்று ஏழை மாணவர்களுக்கும் அவரவர் நிலைக்கேற்ப கல்வியை பாதியில் கைவிட ஒருகாலத்தில் நியாயங்கள் கற்பிக்கப்பட்டன.

கல்வி கசந்த மாவட்டங்களாக பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு அறியப்பட்ட மாவட்டங்கள் தருமபுரியிலும், கிருஷ்ணகிரியிலும் இந்நிலை அதிகமாக இருந்தது. இம்மாவட்டங்கள் கல்வி வளர்ச்சியில் பின்தங்கியதால் ஒட்டுமொத்தமாக எல்லாத்துறைகளிலும் பின்தங்க வேண்டிய நிலையும் ஒரு காலத்தில் இருந்தது. பள்ளிகளில் இருந்து படிப்பை பாதியில் விடும் மாணவர்களின் சதவிகிதம், அப்போது மிக அதிகம் இங்கே.

மாநில அரசுக்கு இந்த நிலை காரமாக உறைத்தது. அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் முழுவீச்சில் முடுக்கிவிடப்பட்டன. மாவட்ட ஆட்சியர்களும், அரசு அதிகாரிகளும் ஒவ்வொரு கிராமத்துக்கும் சென்று களநிலைகளை ஆராயத் தொடங்கினர். பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு காண முயற்சித்தனர். ‘அனைவருக்கும் கல்வி’ இயக்கம் தன்னுடைய முழு ஆற்றலையும் இம்மாவட்டங்களில் செயல்படுத்தத் தொடங்கியது. யூனிசெஃப் நிறுவனம் கிட்டத்தட்ட இம்மாவட்டங்களை தத்தெடுத்துக் கொண்டது என்றே சொல்லலாம்.

பலதரப்பட்டவர்களின் முயற்சிகளுக்கு பலன் இல்லாமல் போகுமா? தர்மபுரியும், கிருஷ்ணகிரியும் இன்று கல்வி வளர்ச்சியில் அதிவேகமாக முன்னேறத் தொடங்கியிருக்கின்றன. ஏராளமான பொறியாளர்களையும், மருத்துவர்களையும் கடந்த பத்தாண்டுகளில் இம்மாவட்டங்கள் நாட்டுக்கு அர்ப்பணித்திருக்கின்றன.

இன்றைய நவீன உலகில் அதிசயங்கள் சகஜம். ஆனாலும் அதிசயங்களை நேரில் காணும் ஆவல் மட்டும் மனிதனுக்கு குறைவதேயில்லை. நடப்புக் காலத்தில் கல்வி விழிப்புணர்வு நடந்து கொண்டேயிருக்கும் இம்மாவட்டங்களில் ஏதேனும் ஒரு குக்கிராமப் பள்ளியை ‘திக்விஜயம்’ செய்து வாசகர்களுக்காக பார்வையிட ஆசைப்பட்டோம். பள்ளிகளின் பட்டியலில் இருந்து ஆசிரியர் நமக்கு தேர்ந்தெடுத்து தந்த பள்ளி ‘கொட்டுக்காரம்பட்டி நடுநிலைப்பள்ளி’.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஒன்றியத்தில் இருக்கிறது கொட்டுக்காரம்பட்டி. திருவண்ணாமலையில் இருந்து இருபுறம் அடர்ந்த வனங்களும், தூரத்தில் தெரியும் நீலமலைகளுமான சாலையில் சுமார் 50 கிலோ மீட்டர் பயணம் செய்தால், பாம்பாறு அணைக்கட்டுக்கு முன்பாக இடப்பக்கம் ஒரு சிறிய சாலை செல்லும். ஒரே ஒரு நகரப்பேருந்து மட்டுமே அத்திபூத்தாற்போல வந்து, செல்லும் அச்சாலையில் மூன்று, நான்கு கிலோ மீட்டர் நடந்துச் சென்றால் கொட்டுக்காரம்பட்டி.

வழியெங்கும் செங்கல் சூளைகள். ‘ஒருகாலத்தில் இச்சூளைகளில் ஏராளமான குழந்தைகள் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள். பள்ளிக்கு அக்குழந்தைகளை திரும்ப அழைத்துவருவதே பெரும்பாடாக இருந்தது. இப்போது கிட்டத்தட்ட சூளைகளில் குழந்தைத் தொழிலாளர்கள் என்ற நிலையை எங்கள் மாவட்டத்தில் இருந்து விரட்டியடித்து விட்டோம், தலையை அடகுவைத்தாவது குழந்தைகளுக்கு கல்வியை வழங்கவேண்டும் என்ற விழிப்புணர்வு எங்கள் மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது’ என்று கிராமவாசி ஒருவர் நமக்கு விளக்குகிறார்.

‘பளிச்’சென்று இருக்கிறது நடுநிலைப்பள்ளி. சுத்தமான மைதானம். பூந்தோட்டம். மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம்பிரித்து குப்பைத் தொட்டிகள் வைத்திருக்கிறார்கள். வகுப்பறை, மைதானம், தண்ணீர், கழிவறை, சத்துணவு கண்காணித்தல் என்று பள்ளியின் பராமரிப்புப் பணிகளை மாணவர்கள் தாங்களே குழு அமைத்துச் செய்கிறார்கள்.

பள்ளியின் பசுமைப்படை தோட்டவேலையை கவனித்துக் கொள்கிறது. அவ்வப்போது ஊரின் சுற்றுச்சூழல் தொடர்பான பணிகளையும் சிரமேற்கொண்டு செய்கிறார்கள். பள்ளியின் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் உடல்நலம், சுகாதாரம் தொடர்பான விஷயங்களை கவனித்துக் கொள்கிறது.

‘அனைவருக்கும் கல்வி’ திட்டம் மூலமாக வண்ண தொலைக்காட்சி மற்றும் மூன்று கணினிகள் கிடைத்திருக்கிறது. இணைய வசதி இல்லாததால், தலைமையாசிரியர் தன் சொந்தப்பணத்தில் ஒரு ‘டேட்டா கார்ட்’ மூலமாக இணைய வசதி செய்து கொடுத்திருக்கிறார். குக்கிராமத்தில் அமைந்திருக்கும் இந்தப் பள்ளிக்கு பிரத்யேகமாக ஒரு இணையத்தளம் நடத்தப்படுகிறது என்பது அடுத்த ஆச்சரியம். பள்ளியின் அன்றாட நடவடிக்கைகள் மற்றும் நிகழ்ச்சிகள் http://pumskottukarampatti.blogspot.com என்ற இணையத்தளத்தில் அவ்வப்போது பதிவேற்றப்படுகிறது. கல்வித்துறை அதிகாரிகள் பலரும் அடிக்கடி ‘விசிட்’ செய்யும் முக்கியமான இணையத்தளம் இது. பள்ளியின் நடவடிக்கைகளை கண்காணிக்க அவர்களுக்கு இது உதவுகிறது.

நூற்றி இருபத்தி மூன்று மாணவ, மாணவியர் படிக்கிறார்கள். ஐந்து ஆசிரியர்கள். ஒரு ஆசிரியப்பணி காலியிடம். நாற்பத்தி இரண்டு வயது இளைஞரான ராஜேந்திரன் இப்பள்ளியின் தலைமையாசிரியர். தமிழிலக்கிய ஆர்வலரான இவருக்கு இலக்கிய உலகில் வேறு ஒரு பெயரும் உண்டு. கவி செங்குட்டுவன்.

“ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக இங்கே தலைமையாசிரியராகப் பொறுப்பேற்றேன். புதராக மண்டிக்கிடந்த பள்ளியின் சூழலை மாற்றியமைப்பது எனக்கு சவாலாக இருந்தது. மாணவர்களின், ஊர்மக்களின் ஒத்துழைப்போடு என்னால் முடிந்த பணிகளை செய்தேன். அரசு அதிகாரிகளுக்கு மனுபோட்டு நல்ல வகுப்பறைகள் கட்டினேன்.

நம் பள்ளி என்ற உணர்வு ஒவ்வொரு மாணவனுக்கும் இருப்பதால், காலை எட்டரை மணிக்கே வந்து, பள்ளி தொடர்பான அனைத்துப் பணிகளையும் அவனே செய்ய ஆரம்பித்து விடுகிறான். ஆரம்பத்தில் வழிகாட்டியதோடு சரி. அவனவன் பொறுப்பை அவனே உணர்ந்து செம்மையாக செய்கிறான். மகிழ்ச்சியோடு வேடிக்கைப் பார்க்கிறேன்!” என்று தனக்கு கிடைக்க வேண்டிய பாராட்டுகளையும், மாணவர்களுக்கு பகிர்ந்து கொடுக்கிறார்.

எல்லா அரசு தலைமையாசிரியர்களைப் போல, இவரும் செயல்வழிக்கற்றல், படைப்பாற்றல் கல்விக்கு ஆதரவானவராக இருக்கிறார். “செயல்வழிக் கற்றலில் சிறப்பாக ஒருவன் செயல்பட்டுவிட்டால், படைப்பாற்றல் கல்வியில் எங்கோ போய்விடுவான். கல்வி கற்பது குறித்த ஆர்வம் மாணவர்களுக்கு இயல்பாகவே வந்துவிடும். அவனது கற்றல் ஆர்வத்தை அதன்பிறகு யாராலும் தடுத்து நிறுத்திவிட முடியாது” என்கிறார்.

யூனிசெப் நிறுவனம் சுகாதாரமான பள்ளிகளுக்கு நட்சத்திர அந்தஸ்து வழங்கி வருகிறது. அதிகபட்சமாக ஒரு பள்ளிக்கு பத்து நட்சத்திர அந்தஸ்து வழங்கப்படும். ஒரு அரசுப்பள்ளி நான்கு, ஐந்து புள்ளிகள் வாங்கினாலே சுகாதாரத்தில் ஓரளவு தன்னிறைவுப் பெற்ற பள்ளியாக எடுத்துக் கொள்ளலாம். கொட்டுக்காரம்பட்டி நடுநிலைப் பள்ளி கடந்த ஆண்டு பத்து நட்சத்திர அந்தஸ்தும், இவ்வாண்டு ஒன்பது நட்சத்திர அந்தஸ்தும் யூனிசெஃபிடம் இருந்து பெற்றிருக்கிறது. ஒரு கிராமப்புறப்பள்ளி எப்படி நடத்தப்பட வேண்டும் என்பதற்கு ஒரு மாதிரியாக நாம் கொட்டுக்காரம்பட்டி நடுநிலைப்பள்ளியை எடுத்துக் கொள்ளலாம்.

இப்பகுதியில் மக்களிடையே ஏற்பட்டிருக்கும் கல்வி விழிப்புணர்வு குறித்து தலைமையாசிரியர் ராஜேந்திரனிடம் பேசினோம். “கல்வியைப் பொறுத்தவரை எங்கள் மாவட்டம் ஒரு காலத்தில் கேலியாக பார்க்கப்பட்டது உண்மைதான். அரசும், பல்வேறு அமைப்புகளும் இணைந்து இந்நிலையை இன்று மாற்றியிருக்கின்றன. கடந்த தலைமுறையில் கல்விகற்ற என்னைப் போன்றவர்களும் எங்கள் மாவட்டத்து கல்வி வளர்ச்சிக்கு கடுமையாகப் பாடுபட்டு வருகிறோம். உதாரணமாக நான் படித்த ஊத்தங்கரை அரசினர் ஆண்கள் மேனிலைப் பள்ளியில் நடந்த விஷயத்தை சொல்கிறேன். அப்பள்ளியின் பொன்விழா பரிசாக முன்னாள் மாணவர்கள் இணைந்து ஒரு கோடி ரூபாய்க்கு ஒரு நூலகம் (தனிக்கட்டுரையாக காண்க) அமைத்துத் தந்திருக்கிறோம். எங்களது அடுத்த தலைமுறை எங்களைவிட உயர்வான கல்விவளர்ச்சியைப் பெறவேண்டும் என்ற அக்கறையே இதற்குக் காரணம்!” என்கிறார்.

பொதுவாக நாம் கவனித்தவகையில் 1989-90 காலக்கட்டத்தில், பத்தொன்பது, இருபது வயதுகளில் ஆசிரியராக ஏராளமான இளைஞர்கள் பணிநியமனம் பெற்றிருக்கிறார்கள். போதிய அனுபவம் பெற்று தலைமையாசிரியர்களாகப் பதவியேற்ற பல பள்ளிகளில் இதுபோன்ற வரவேற்கத்தக்க மகிழ்ச்சியான மாற்றங்கள் தொடர்ச்சியாக ஏற்படுத்தி வருகிறார்கள். புதியதலைமுறையின் முதல் இதழிலேயே நாம் எழுதிய, புதுக்கோட்டை மாவட்டத்தின் புதுமைப்பள்ளியான மாங்குடி நடுநிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் ஜோதிமணியும் கூட இளைஞர்தான் என்பது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.

புதிய தலைமுறை இளைஞர்கள், முற்போக்கான மாற்றங்களின் மூலமாக புரட்சியை படைக்கவல்லவர்கள் என்ற கூற்று அடுத்தடுத்து மெய்ப்பிக்கப்பட்டே வருகிறது. தமிழக பள்ளிகளில் இப்போது ஆசிரியப்பணிக்கு ஏராளமான காலியிடங்கள் இருப்பதாக, நாம் செல்லும் இடங்களிலெல்லாம் அறியமுடிகிறது. இருபதாண்டுகளுக்கு முன்பு இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கியதைப் போல, இப்போதும் உடனடியாக அப்பணிகளுக்கு இளைஞர்களை அரசு நியமிக்க வேண்டும். அப்படி நியமிக்கும் பட்சத்தில் அடுத்த இருபதாண்டுகளில் தமிழ்நாடு முழுக்க நூற்றுக்கணக்கான நட்சத்திரப் பள்ளிகளை நாம் பெற்றிருப்போம் என்பது உறுதி.

(நன்றி : புதிய தலைமுறை)

2 கருத்துகள்:

  1. // ‘தலையை அடகுவைத்தாவது குழந்தைகளுக்கு கல்வியை வழங்கவேண்டும் என்ற விழிப்புணர்வு எங்கள் மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது’ என்று கிராமவாசி ஒருவர் நமக்கு விளக்குகிறார். //
    MAAARVELLOUS…….!!!!!
    // “செயல்வழிக் கற்றலில் சிறப்பாக ஒருவன் செயல்பட்டுவிட்டால், படைப்பாற்றல் கல்வியில் எங்கோ போய்விடுவான். கல்வி கற்பது குறித்த ஆர்வம் மாணவர்களுக்கு இயல்பாகவே வந்துவிடும். அவனது கற்றல் ஆர்வத்தை அதன்பிறகு யாராலும் தடுத்து நிறுத்திவிட முடியாது” //
    GREAT PERCEPTION......ITS VERY TRUE!!
    // புதிய தலைமுறை இளைஞர்கள், முற்போக்கான மாற்றங்களின் மூலமாக புரட்சியை படைக்கவல்லவர்கள் என்ற கூற்று அடுத்தடுத்து மெய்ப்பிக்கப்பட்டே வருகிறது.உடனடியாக அப்பணிகளுக்கு இளைஞர்களை அரசு நியமிக்க வேண்டும். அப்படி நியமிக்கும் பட்சத்தில் அடுத்த இருபதாண்டுகளில் தமிழ்நாடு முழுக்க நூற்றுக்கணக்கான நட்சத்திரப் பள்ளிகளை நாம் பெற்றிருப்போம் என்பது உறுதி.//
    KANAVU MEIPPADA VENDUM !!!

    பதிலளிநீக்கு
  2. முனைவர் மு. இளங்கோவன் ( http://muelangovan.blogspot.com/ ) மூலம், கவி செங்குட்டுவன் பற்றி அறிந்திருக்கிறேன். உங்கள் கட்டுரை வாயிலாக, அவர்தம் சீரிய பணியை உலகறியச் செய்துள்ளீர். ஆக்கப்பூர்வ எழுத்து!

    பதிலளிநீக்கு