8 பிப்ரவரி, 2010

கோட்டை விட்ட டோனி, சுனாமியாய் கில்லி!!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக ஐ.பி.எல் 20-20 போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்ட நேரம் அது. ஒரு கிரிக்கெட் அறிவிலியான என்னை ஐ.பி.எல். குறித்து ஏதாவது எழுதித் தரும்படி ஒரு தமிழ் இணையத்தளம் கேட்டுக் கொண்டது. கிரிக்கெட்டைப் பற்றி தொழில்நுட்பரீதியாக தெரியாது என்று மறுத்தும், நண்பரான இணையத்தள நிர்வாகி தொடர்ச்சியாக என்னை வற்புறுத்தினார். குமுதம் பாணியில் நான் அப்போதைக்கு அடித்துவிட்ட உட்டாலக்கடி சரக்கு இது. இரண்டு ஆண்டுகள் கழித்து வாசிக்கும்போதுதான் எனக்கே கொஞ்சம் சுவாரஸ்யமாக இருப்பதைப் போல படுகிறது!

ஐ.பி.எல். 20-20 போட்டிகள் பரபரப்பான கட்டத்தை அடைந்திருப்பதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் போட்டிகள் நடைபெறும் தினங்களில் தலைநகர் சென்னை ஈயடிக்கிறது. வெயிலுக்காக பல்லாயிரக்கணக்கானோர் கடற்கரைக்கு மாலை வேளைகளில் படையெடுப்பது வழக்கம். ஆனால் போட்டி நடைபெறும் தினங்களில் மொத்தக்கூட்டமும் சேப்பாக்கம் மைதானத்துக்கு படையெடுத்து விடுகிறது. திரையரங்குகளில் மாலைக்காட்சிகளில் கூட்டம் சேருவதில்லை. தசாவதாரம் படத்தின் வெளியீடு கூட 20-20 போட்டிகளால் தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள்.

போட்டி நாட்களில் படப்பிடிப்பு எதுவும் இல்லாத திரை நட்சத்திரங்கள் தவறாமல் சேப்பாக்கத்தில் ஆஜராகிவிடுகிறார்கள். இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாது சினிமா ரசிகர்களும் தங்கள் அபிமான நட்சத்திரங்களை காண மைதானத்துக்கு வந்துவிடுகிறார்கள். கிரிக்கெட் ரசிகர்களுக்கும், சினிமா நட்சத்திரங்களுக்கும் இடையே சிறுசிறு மோதல்களும், தள்ளுமுல்லுகளும் நடக்கிறது.

நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஹைதராபாத்தின் டெக்கான் சார்ஜர்ஸ் அணியோடு மோதியது. நேற்று மதியம் போட்டியைக் காண நமீதா வருகிறார் என்ற செய்தி நகரில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இச்செய்தியைக் கேள்விப்பட்ட பணியில் இருக்கும் அரசு மற்றும் தனியார் அலுவலர்கள் பலரும் அவசர அவசரமாக அலுவலங்களில் பொய்க்காரணம் சொல்லி பர்மிஷன் போட்டு சேப்பாக்கத்தை நோக்கி படையெடுத்தனர். நமீதா ரசிகர்கள் நூற்றுக்கணக்கானோர் சேப்பாக்கம் மைதானத்தின் முகப்பில் கூடி நமீதா வாழ்க என்று கோஷமிட்டுக் கொண்டிருந்தனர். துரதிருஷ்டவசமாக நமீதா ரசிகர்கள் பலருக்கும் மைதானத்துக்குள் செல்ல டிக்கெட் கிடைக்கவில்லை. இவர்களில் பலர் விரக்தி அடைந்து போட்டி முடியும் வரை மைதானத்தை சுற்றி சுற்றி வந்துகொண்டிருந்தார்கள்.

இதற்கிடையே ஜேம்ஸ்பாண்டு படநாயகி தோற்றத்தில் பெரும் ஆரவாரத்துக்கிடையே போட்டி தொடங்கும் நேரத்துக்கு சற்றுமுன்னர் நமீதா வந்தார். போட்டியை கவர் செய்ய வந்திருந்த கேமிராமேன்கள் சிலரும் நமீதா ரசிகர்கள் போலிருக்கிறது. போட்டியின் முக்கியமான கட்டங்களை கவர் செய்யாமல் அடிக்கடி நமீதாவை கவர் செய்துகொண்டிருந்தார்கள். நமீதாவின் அதிரடி ஆடையை கண்டு பயந்துவிட்டதாலோ என்னவோ சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனியும், அவரது குழுவினரும் நேற்று சொதப்பி விட்டார்கள். ரன் குவிக்க திணறிய அணி, பவுலிங் செய்யும்போது வள்ளல்களாக மாறி ரன்களை வாரி இறைத்தார்கள்.

டோனி குழுவினர் சோர்ந்துப்போனதை கண்ட டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் கேப்டன் கில்லி என்ற கில்கிறிஸ்ட் வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டார். அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன் ஆக களமிறங்கிய அவர் சிக்ஸர்களும், பவுண்டரிகளுமாக விளாசி சென்னை அணியை சேதாரத்துக்குள்ளாக்கினார். சென்னை அணியினர் ஓரிரு பவுண்டரிகள் அடித்தபோதும் கைத்தட்டி உற்சாகப்படுத்திய நமீதா, ஹைதராபாத் அணியினர் சிக்ஸர்கள் விளாசியபோதும் ஆரவாரம் செய்தார். இதனால் நமீதா எந்த அணியை ஆதரித்தார் என்பது தெரியாமல் ரசிகர்கள் குழம்பினர். இருப்பினும் நமீதா கைத்தட்டும் போதெல்லாம் தாங்களும் கைத்தட்டி, விசிலடித்து கொண்டாட்டமாக இருந்தனர். இறுதியில் கம்பீரமாக டெக்கான் சார்ஜர்ஸ் அணியினர் வெற்றி பெற்றனர்.

தொடர்ந்து நான்கு ஆட்டங்கள் வென்று முதலிடத்தில் இருந்த சென்னை அணி, அதன் பின்னர் ஆடிய மூன்று ஆட்டங்களில் தொடர்ந்து தோல்வியை தழுவியதால் சென்னை ரசிகர்கள் வெறுத்துப் போயிருக்கிறார்கள். சென்னை அணியின் விளம்பரத் தூதர்களாக இளைய தளபதி விஜய்யும், நயன்தாராவும் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பாக நியமிக்கப்பட்டனர். நயன்தாராவை இடையில் அப்பொறுப்பில் இருந்து நீக்கியதால் தான் சென்னை அணி தொடர்ந்து தோல்விகளை சந்திக்கிறது என்ற புதிய கண்டுபிடிப்பை நேற்று மைதானத்தில் போட்டியைப் பார்த்து தலையில் துண்டு போட்டுக்கொண்ட நயன்தாரா ரசிகர் ஒருவர் கண்டறிந்து எல்லோரிடமும் சத்தமாக சொல்லிக் கொண்டிருந்தார்.


இதற்கிடையே ஆரம்பத்தில் தோற்றுக் கொண்டிருந்த பஞ்சாப் கிங்ஸ் அணியினர் திடீரென எழுச்சிப்பெற்று தொடர்ந்து வெற்றிகளை குவித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு அந்த அணியின் உரிமையாளரான ப்ரீத்தி ஜிந்தாவே காரணம் என்கிறார்கள். பஞ்சாப் போட்டி நடக்கும் மைதானங்களுக்கு அந்த அணியின் சீருடையுடன் செல்லும் ப்ரீத்தி, போட்டி நேரம் முழுவதும் அணியினரை உற்சாகப்படுத்தி வருகிறாராம்.

தன் அணி போட்டியில் வெற்றி பெற்றால் அணியினரை மேற்கத்திய பாணியில் கட்டி அணைத்து வாழ்த்து தெரிவிக்கிறார் ப்ரீத்தி ஜிந்தா. இதனால் உத்வேகம் அடையும் பஞ்சாப் கேப்டன் யுவராஜ் மற்றும் அவரது அணியினர் ஆவேசமாக ஆடி இப்போது வெற்றிகளைத் தொடர்ந்து குவிக்கிறார்கள் என்று ஒரு கிரிக்கெட் ரசிகர் சொன்னார்.

இத்தொடரில் தொடர்வெற்றிகளை குவித்து முதலிடத்தில் இருந்தாலும் மற்ற அணிகளுக்கு இருப்பது போன்ற நட்சத்திர ஆதரவும், சலுகையும் தன் அணிக்கு இல்லாததால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளரும், கேப்டனுமான ஷேன்வார்னே நொந்துப் போய் இருக்கிறாராம்.

6 பிப்ரவரி, 2010

சென்னையில் 108க்கு ஒரு மாற்று!

எதிர்பாராமல் ஏதாவது நடந்தால்தான், அதற்குப் பெயர் விபத்து. இளைஞரான திலீப்புக்கு இருசக்கரவாகனம் ஓட்டுவது இலகுவானது மட்டுமல்ல, ரொம்ப பிடித்தமானதும் கூட. பல வருடங்களாக பைக் ஓட்டிவரும் அவர், ஒருமுறை கூட விபத்தை சந்தித்ததில்லை. இத்தனைக்கும் அன்று அலுவலகத்துக்கு நேரத்துக்கு செல்ல வேண்டிய அவசியமிருந்தும் மிதமான வேகத்தில்தான் ஓட்டிக் கொண்டிருந்தார்.

அண்ணாசாலை சாந்தி தியேட்டரை கடக்கும் வேளையில் திடீரென வண்டி மக்கர் செய்தது. பஞ்சரா என்ன ஏதுவென்று ஓரம் கட்டி சோதிப்பதற்குள் ‘விபத்து’. என்ன நடந்தது என்று திலீப்புக்கு இப்போது கூட தெரியாது. வண்டி எதன் மீதோ இடித்த சத்தம் மட்டுமே அவரது காதில் கடைசியாக கேட்டது.

சினிமாவில் விபத்தில் அடிபட்டவர்கள் கேட்பதைப் போலவே “நான் எங்கே இருக்கிறேன்?” என்று கேட்டவாறே கண் விழித்தார் திலீப். புன்னகையோடு அவர் எதிரில் நின்றுகொண்டிருந்தவர் கமல்ஹாசன். சினிமா நடிகரல்ல, இவர் வேறு. 24 வயதாகும் இளைஞர். சென்னையில் ஒரு பி.பி.ஓ. நிறுவனத்தில் பணிபுரிகிறார்.

திலீப்பைப் போல விபத்துக்களில் அடிபடுபவர்களை உடனடியாக காப்பாற்றி, அருகிலிருக்கும் ஏதாவது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி செய்வது முதல், அடிபட்டவரின் குடும்பத்துக்கு தகவல் தெரிவிப்பது வரையிலான பணிகளை தன்னுடைய கடமையாக செய்துவருகிறார் கமல். இவரைப் போலவே இவருடைய நண்பர்களும் இச்சேவையில் தம்மை இணைத்துக்கொள்ள, ‘சேஞ்ச் இந்தியா’ என்ற பெயரில் ஒரு அமைப்பு உருவாகியிருக்கிறது.

சுமார் ஐம்பது பேர் இவ்வமைப்பில் தங்களை உறுப்பினர்களாய் இணைத்துக்கொண்டு, விபத்துக்களில் அடிபடுபவர்களுக்கு முதலுதவிச் சேவை வழங்கி வருகிறார்கள். இதுவரை விபத்துகளில் அடிபட்ட சுமார் முன்னூறு பேருக்கு இவர்கள் உதவியிருக்கிறார்கள்.

எப்படி இந்த எண்ணம் வந்தது?

சேவை செய்யவேண்டுமென்ற உந்துதல் இத்தலைமுறையில் எல்லோருக்குமே இருக்கிறது. இதை ‘கலாம் எஃபெக்ட்’ என்ற பிரத்யேக சொல்லாடலோடு சொல்கிறார் கமல். இவரும், இவருடைய நண்பர்களும் தங்களது பிறந்தநாளை ஆதரவற்றோர் இல்லங்களில் கொண்டாடி வந்திருக்கிறார்கள். ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவி, மருத்துவத் தேவைக்கு உதவி என்று வழக்கமான உதவிகள்.

கமல் ஒருமுறை வண்டியில் வந்துகொண்டிருந்தார். அப்போது சாலையோரத்தில் ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். பயங்கர இரத்த இழப்பு. வேடிக்கை பார்க்க நல்ல கூட்டம். வலியில் முனகிக் கொண்டிருந்த அந்தப் பெண்மணியை ஒரு ஆட்டோவில் ஏற்றி அருகிலிருந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதலுதவி செய்தார் கமல்.

மருத்துவம் பார்த்த டாக்டர், கமலை அழைத்து “தம்பி சரியான நேரத்துலே இந்த அம்மாவை கொண்டு வந்து சேர்த்தீங்க. இன்னும் கொஞ்சம் ரத்தம் வீணாகியிருந்தா இவங்க உயிரே போயிருக்கும். இந்த நேரத்தை ‘கோல்டன் ஹவர்’னு சொல்லுவோம். அதாவது குறிப்பிட்ட நேரத்துக்குள் முதலுதவி கொடுத்தால் உயிரைக் காப்பாற்றிவிடலாம்னு சொல்ற அந்த பொன்னான நேரம். துரதிருஷ்டவசமா கோல்டன் ஹவர்க்குள் முதலுதவி செய்யப்படாதவர்கள்தான் விபத்துக்களில் அதிகமா மரணமடையுறாங்க”.

டாக்டர் சொன்ன ‘கோல்டன் ஹவர்’ கமலுக்குள் ரீங்காரமிட்டுக் கொண்டே இருந்தது. யாராவது விபத்தில் அடிபட்டு சாலை ஓரத்தில் கிடந்தால், அதிகபட்சமாக 108-க்கு தொலைபேசி ஆம்புலன்ஸை கூப்பிடுவோம். சென்னை போன்ற போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரங்களில் ஆம்புலன்ஸ் வர நேரமாகலாம். அதற்குள்ளாக அடிபட்டவருக்கு ரத்த இழப்பு அதிகமாகி, கோல்டன் ஹவரை தாண்டிவிட்டால்?

மரணம். ஒரு உயிர் மண்ணைவிட்டுப் பிரியும். அந்த உயிரை நம்பிய குடும்பம் நடுத்தெருவில் நிற்கலாம். குழந்தைகள் ஆதரவற்றுப் போகலாம். விபத்தை வெறுமனே வேடிக்கைப் பார்ப்பவர்கள் எவ்வளவு பெரிய சமூகக் குற்றவாளிகள்?

அன்றிலிருந்து தன்னுடைய நண்பர்களிடம் கோல்டன் ஹவரின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்க ஆரம்பித்தார் கமல். ஆங்காங்கே நடந்த விபத்துகளின்போது, அடிபட்டவர்களை அருகிலிருக்கும் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று முதலுதவி அளிக்க ஆரம்பித்தார்கள். இதுவரை இவர்களால் காப்பாற்றப்பட்டவர்கள் 300 பேர். “குறித்துவைத்துக் கொள்ளுங்கள். இந்த முன்னூறு பேரில் ஒருவர் கூட மரணமடைந்தது இல்லை. சரியான நேரத்துக்கு சிகிச்சை கிடைத்தால் விபத்தில் உயிரிழப்பு என்ற விஷயமே இருக்காது” என்கிறார் கமல்.

கமல்ஹாசன் குறிப்பிடுவது போல ‘கோல்டன் ஹவர்’ என்பது மிக மிக முக்கியமானது. விபத்துக்களில் மட்டுமல்ல, திடீரென ஏற்படும் ஹார்ட் அட்டாக் போன்ற விஷயங்களின் போதும் கூட, சரியான நேரத்தில் சிகிச்சை கிடைத்தால் உயிரைக் காப்பாற்றி விடலாம். மருத்துவமனைகளில் இதுபோல யாராவது உயிரிழக்கும்போது, “அரை மணி நேரத்துக்கு முன்னாடி கொண்டுவந்திருந்தா பொழைச்சிருப்பார்!” என்று மருத்துவர் சொல்கிறார் இல்லையா? அந்த அரைமணி நேரத்துக்கு முன்னால் தான் இறந்தவரின் ‘கோல்டன் ஹவர்’ இருந்திருக்கும். இந்த விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்பட்டால் பல உயிரிழப்புகளை மருத்துவர்களால் தடுத்து நிறுத்த முடியும்.

வித்தியாசமான அனுபவங்களும் இவர்களுக்கு நேர்ந்ததுண்டு. ஒருமுறை ஒருவர் குடித்துவிட்டு வேகமாக வண்டி ஓட்டி விபத்துக்குள்ளாகி இருக்கிறார். ரத்தம் சொட்ட, சொட்ட மயங்கிக் கிடந்தவரை சுற்றி பெரியக் கூட்டம். “குடிச்சிட்டு வண்டி ஓட்டினா இப்படித்தான்!” என்று விபத்துக்கு வேடிக்கையாளர்கள் நியாயம் கற்பித்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். அங்கிருந்த போக்குவரத்துக் காவலரும் கூட என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தார். அந்த வழியாக வந்த கமல் உடனடியாக அடிபட்டவரை அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உயிர் பிழைக்க வைத்திருக்கிறார்.

இதுபோன்ற மீட்புப் பணிகளின் போது, பெரும்பாலும் ஆட்டோக்காரர்கள் காசு வாங்குவதில்லையாம். பொதுவாக அரசு மருத்துவமனைக்குதான் முதலுதவிக்கு எடுத்துச் செல்கிறார்கள். அருகில் அரசு மருத்துவமனை இல்லாதபட்சத்தில் மட்டுமே தனியார் மருத்துவமனைக்கு போகிறார்கள். முதலுதவி செய்ய அதிகபட்சமாக ஐநூறு ரூபாய் வரை மட்டுமே தனியார் மருத்துவமனையில் ஆகுமாம். ஆம். கோல்டன் ஹவரின்போது ஒரு உயிரின் விலை வெறும் ஐநூறு ரூபாய்தான். எனவே சேஞ்ச் இந்தியா தோழர்கள் தங்கள் மணிபர்ஸில் எப்போதுமே ஒன்று அல்லது இரண்டு ஐநூறு ரூபாய்தாள்களை முதலுதவிக்கென்றே வைத்திருக்கிறார்கள்.

“இந்த சேவையைப் பற்றி கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் விபத்து மாதிரியான விஷயங்களில் போலிஸ் தொல்லை அதிகமாக இருக்குமே? கோர்ட்டு - கேஸூ என்று இழுப்பார்களே?” என்ற எண்ணம் உங்களுக்குத் தோன்றலாம். போலிஸ்காரர்களைப் பொறுத்தவரை யாரையுமே தொந்தரவு செய்வது அவர்களது இயல்பல்ல. ஒரு உயிரைக் காப்பாற்றினால் போலிஸ் என்ன, எல்லோருமே உங்களை பாராட்டத்தான் செய்வார்கள்.

அதிகபட்சமாக இதுபோன்ற விபத்து மீட்பாளர்களிடம் பெயரையும், முகவரியையும் மட்டும் போலிஸ் கேட்டு வாங்கிக் கொள்ளும். அவர்கள் கேட்கும் தோரணை வேண்டுமானால் கொஞ்சம் பயமுறுத்தலாம். மற்றபடி காவலர்கள் மக்களின் தோழர்களே. தப்பு செய்யாதவர்களை போலிஸ் எதுவுமே செய்யாது. இதை நாம் சொல்லவில்லை. கமலும், அவரது நண்பர்களும் சொல்கிறார்கள்.

தனியார் மருத்துவமனைகளிலும் போலிஸ் கேஸ் என்றால் முதலுதவி செய்யமாட்டார்கள் என்றொரு பொய்யான கருத்தாக்கம் நம்மிடையே நிலவுகிறது. அப்படியெல்லாம் இல்லை. கோல்டன் ஹவரில் கொண்டுவரப்படும் எந்த நபரையுமே உயிர்பிழைக்க வைக்கத்தான் ஒரு மருத்துவர் முயற்சிப்பார். முதலுதவிக்குப் பின்னரே என்ன ஏதுவென்று மற்ற விஷயங்களை விசாரிப்பார்கள். அதிகபட்சமாக ‘போலிஸுக்கு சொல்லிட்டீங்களா?’ என்றுதான் கேட்கிறார்கள்.

விபத்துக்களில் அடிபட்டவர்களை காப்பாற்ற முடியாததற்கு நேரத்தைதான் நிறையபேர் காரணமாக குறிப்பிடுகிறார்கள். “பத்து மணிக்கெல்லாம் ஆபிஸ் போகணும். ஒருத்தரை ஆஸ்பிட்டல்லே சேர்த்துட்டு, அவங்க வீட்டுக்கு இன்ஃபார்ம் பண்ணிட்டு, போலிஸுக்கும் தகவல் சொல்லிட்டு ஆபிஸ் போக மதியம் ஆகிவிடுமே? லேட்டானா மேனேஜர் திட்டமாட்டாரா?” - பொதுவாக எழும் கேள்வி இது. மேனேஜர் நிச்சயமாக திட்டமாட்டார்.

மாறாக இதுபோல ஒருவரின் உயிரைக் காப்பாற்றிவிட்டு அலுவலகத்துக்கு சென்றுப் பாருங்கள். அலுவலகமே எழுந்து நின்று உங்களை கைத்தட்டி வரவேற்கும். சேஞ்ச் இந்தியா தோழர்களின் அனுபவம் இது. அதுவுமில்லாமல் தார்மீகரீதியாகப் பார்க்கப் போனாலும் ஒரு உயிரைவிட நம்முடைய வேலை பெரியதா என்ன?

எல்லாவற்றுக்குமே அரசையே சார்ந்திராமல், சமூகத்துக்கு தங்களாலான சேவைகளை, தங்களுக்கு தெரிந்த வழியில் செய்துக் கொண்டிருக்கும் கமலும், அவருடைய நண்பர்களுமே இன்றைய இளைய இந்தியாவைப் பிரதிபலிக்கக்கூடிய சரியான பிம்பங்கள். “இளைஞர்களுக்கு சமூக அக்கறை கிடையாது. பொழுதுபோக்குகளில் நாட்டமுடையவர்கள். சுயநலவாதிகள்” என்றெல்லாம் பழைய பஞ்சாங்கத்தை புரட்டிப் பார்த்து சொல்லிக் கொண்டிருப்பவர்கள், இவ்விளைஞர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியது ஏராளம்.

நீங்களும் முயற்சிக்கலாமே?

சென்னை பெருநகரில் கமலும், அவரது நண்பர்களும் இத்தகைய விபத்துமீட்பு பணிகளை செய்து வருகிறார்கள். இதற்கென்று அமைப்பெல்லாம் வைத்துக் கொள்ளாமலேயே தனி மனிதர்கள் ஒவ்வொருவரும் இந்த விஷயத்தை முன்னெடுத்து செய்ய வேண்டும் என்பது அவர்களின் ஆதங்கம். எந்த விஷயத்துக்குமே தனிமனித விழிப்புணர்வு ஒரு சமூகத்தில் ஏற்பட நீண்ட காலமாகும் என்பதால்தான் குழுவாக அமைந்து பணியாற்ற வேண்டியிருக்கிறது.
மற்ற நகரங்களிலும் இளைஞர்கள் சேஞ்ச் இந்தியாவை முன்னுதாரணமாக்கி விபத்துக்களில் அடிபடுபவர்களின் உயிர்களை காப்பாற்றலாம் இல்லையா?

இதுபற்றிய சந்தேகங்கள் ஏதாவது இருந்தால் கமல்ஹாசனையே தொடர்புகொண்டு பேசலாம். அவரது எண் : 9841567893. மின்னஞ்சல் : changeindia@live.com / b.kamalhasan@live.com

(நன்றி : புதிய தலைமுறை)

5 பிப்ரவரி, 2010

கேமிரா ஜாக்கிரதை!

பின் ஹோல் கேமிரா (Pinhole Camera) பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

அதை டெக்னிக்கலாக விளக்குவது எனக்கு கொஞ்சம் சிரமமான விஷயம். நாம் எதிர்பாராத இடங்களில், எதிர்பாராத வடிவங்களுக்குள் அதை வைத்து நமக்குத் தெரியாமலேயே படமெடுக்க முடியும் என்றவகையில் புரிந்துகொண்டால் போதும். நமக்கு தெரியாமலேயே நம்மை படம்பிடிப்பதை ‘கேண்டிட் கேமிரா’ என்கிறார்கள். பலருக்கு இது வெறித்தனமான பொழுதுபோக்கும் கூட.

இந்த வகை கேமிராக்களில் ரொம்பவும் அட்வான்ஸான தொழில்நுட்பம் எந்த காலத்திலேயோ வந்துவிட்டது. பத்திரிகையாளர்கள் சட்டைப் பாக்கெட்டில் செருகி வைத்திருக்கும் பேனாவில் கூட கேமிரா உண்டு. சமீபத்தில் ஜூனியர் விகடன் இதழ் இந்த கேமிராவை பயன்படுத்தி, ஒரு பரபரப்பு ஸ்டோரி எழுதியது கூட உங்களுக்கு நினைவிலிருக்கலாம்.

இப்போது மின்னஞ்சல்களில் சுற்றிக்கொண்டிருக்கும் ஒரு மடல் பகீர வைக்கிறது.

மிகப்பெரிய சில ஷாப்பிங்மால்களில் பெண்கள் உடைமாற்றிப் பார்க்கும் ‘டிரையல் ரூம்களில்’ இதுபோன்ற பின் ஹோல் கேமிரா மூலமாக படம் பிடிக்கிறார்களாம். இது நிர்வாகத்துக்குத் தெரிந்து நடக்கிறதா அல்லது அங்கு பணியாற்றும் வக்கிரமனதுக்காரர்கள் யாராவது செய்கிறார்களா என்பது பற்றி உறுதியாகத் தெரியவில்லை.

‘பெரிய சந்தை’ ஒன்றில் சமீபத்தில் படம் பிடித்ததாக கூறி ஒரு எம்.எம்.எஸ். சுற்றிக் கொண்டிருக்கிறதாம். ‘வாடிக்கையாளர் நிறுத்தத்தில்’ கூட இதுபோன்ற கசமுசா ஒருமுறை நடந்திருப்பதாகவும் வதந்தி உலவுகிறது. அயல்நாடுகளில் பெரிய ஷாப்பிங் மால்கள் பலவற்றிலும் நடப்பதாக கட்டுரைகள் வாசித்திருக்கிறேன். ’டூவே மிர்ரர்’ போன்றவை அங்கே சகஜமாக இருந்ததாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன்.

நம்மூருக்கும் இந்த கலாச்சாரம் வந்துவிட்டது என்பது நட்சத்திர ஓட்டல் குளியலறையில் நடிகை படம் பிடிக்கப்பட்டதாக சொல்லப்பட்ட சம்பவத்தின்போதே உறுதியாகிவிட்டது.

டிரையல் ரூம்களில் ஆண்களை படம் பிடித்து ஒன்றும் ஆகப்போவதில்லை. ஆனால் பெண்கள் இனி கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது. பெரிய ஷாப்பிங் மால்களில் இதுபோன்ற கசமுசாக்கள் நடக்க வாய்ப்பில்லாத வண்ணம் காவல்துறையும் முடுக்கி விடப்பட வேண்டியது அவசியமாகிறது.

தமிழ் பத்திரிகைகளுக்கு சமீபகாலமாக கவர்ஸ்டோரி பஞ்சம் ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது. இந்த மேட்டரை பயன்படுத்திக் கொள்ளலாம்.

4 பிப்ரவரி, 2010

கோவா!


அந்த காலத்தில் சுந்தர்ராஜன் படம் இயக்கும் ஸ்டைலைப் பற்றி சினிமாப்பெருசுகள் சிலாகிப்பதுண்டு. படப்பிடிப்புத் தளத்துக்கு போய்விட்டு யூனிட் ஆட்களோடு கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருப்பாராம். தலையில் போட்ட துண்டோடு தயாரிப்பாளர் வந்து, “நிலத்தை அடமானம் வெச்சி காசை போட்டிருக்கேன். ஏதாவது சீன் ஷூட் பண்ணு அப்பு!” என்று கெஞ்சியபிறகே, உட்கார்ந்து ‘சீன்’ எழுதுவாராம். இப்படியெல்லாம் சுந்தர்ராஜன் எழுதிய படங்கள் பலவும் வெள்ளிவிழா கண்டவை என்பது குறிப்பிடத்தக்கது. விஜயகாந்த் என்ற ஆக்‌ஷன் ஹீரோவை, பெண்களுக்கு பிடித்த நூன்ஷோ ஹீரோவாக்கியதும் அவர்தான். மோகனை வெள்ளிவிழா நாயகன் ஆக்கியதும் அவர்தான்!

ஷூட்டிங்குக்கு போய் கிரிக்கெட் விளையாடுபவர்கள் எல்லாம் சுந்தர்ராஜன் ஆகிவிடமுடியாது என்பதற்கு வெங்கட்பிரபு நல்ல உதாரணம். தனக்கு சுத்தமாக சரக்கில்லை என்பதை சுத்தபத்தமாக நிரூபித்திருக்கிறார். எந்தவித முன் திட்டமும் இல்லாமல்தான் அவர் ’கோவா’வுக்கு ஹாலிடே போயிருக்கிறார் என்பதை பத்து ரூபாய் கொடுத்து முதல் வரிசையில் உட்கார்ந்து படம் பார்க்கும் பாமரன் கூட உணர்கிறான்.

தமிழ்பட ஸ்ஃபூபாக வரும் முதல் அரைமணிநேரக் காட்சிகள் மட்டுமே சுமார். ஜோக் என்ற பெயரில் கடி கடியென ஒவ்வொரு கேரக்டராக கடிக்க, ரசிகர்கள் சிரிப்பார்கள் என்று நினைத்து எடுத்த இயக்குனரை நினைத்து பாவமாக சிரித்துத் தொலைக்க வேண்டியிருக்கிறது. துண்டு, துண்டாக எடுத்தக் காட்சிகளை எடிட்டிங்கில் கோர்த்துக் கொள்ளலாம் என்று இயக்குனர் நினைத்திருக்கலாம். இதற்குப் பதிலாக ஃபியாவுக்கு ஒரு துண்டாவது வாங்கிக் கொடுத்திருக்கலாம். அம்மணியின் இடுப்புக்குக் கீழே உடை தொடர்பான வறுமை தலைவிரித்து ஆடுகிறது.

இளையராஜா பாடும் பாடலைத் தவிர்த்து, வேறெந்த காட்சியிலும் இசை யுவன்ஷங்கர்ராஜா என்பதற்கு எந்த அடையாளமும் இல்லை. துள்ள வைக்கவில்லை, துவளவைக்கிறார். ரசிக்கும் வகையில் படமாக்கப்பட்டிருந்தாலும் சம்பத் சம்பந்தப்பட்ட ஹோமோசெக்ஸ் காட்சிகளுக்கு தியேட்டர்களில் நெளிகிறார்கள். நடிப்பில் சம்பத்தும், அவரது பார்ட்னரும் மட்டுமே தேறுகிறார்கள். தம்பி பிரேம்ஜிக்கு அண்ணன் வெங்கட்பிரபு கொடுக்கும் ஓவர் பில்டப் காட்சிகள் கடுப்போ கடுப்பு.

அந்த ஃபாரின் ஃபிகர் அழகாக இருக்கிறார். ஃபியாவின் கண்கள் ஷார்ப்னராய் நம் இதய பென்சிலை சீவுகிறது. பிளாக்கில் டிக்கெட் வாங்கி பார்த்ததற்கு இதைத் தவிர்த்து உருப்படியாக வேறெந்தப் பயனுமில்லை. ரஜினியின் மகள் சவுந்தர்யாவின் முதல் தயாரிப்பே குப்பையாக வந்திருக்கிறது. துரதிருஷ்டவசமாக இந்த குப்பையை கொண்டு மின்சாரம் என்ன சம்சாரம் கூட தயாரிக்க முடியாது.

என்னுடைய ஆச்சரியமெல்லாம் என்னவென்றால், கறாரான விமர்சனத்தையும், நியாயமான நிராகரிப்பையும் எனக்கு கற்றுத்தந்த எழுத்துலக சூப்பர் ஸ்டார் இதை உலகளவிலான படமாக எப்படி ஏற்றுக்கொண்டார் என்பதே. இப்படம் கீழ்த்தட்டு இளைஞர்களை எந்தக் காரணமுமின்றி ஒட்டுமொத்தமாக நிராகரிக்கிறது. மேல்த்தட்டு இளைஞர்களையும் கொஞ்சம் கூட பிரதிபலிக்கவில்லை என்பதே சோகம்.

என் உயிருக்கு உயிரான தமிழ் உடன்பிறப்புகளின் காலில் விழுந்து கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன். GOவாதே!

07.02.10 - படம் பார்க்க இலவச டிக்கெட்!


ஓசியில் யாராவது உங்களுக்காக பிரத்யேகமாக படம் போட்டு காட்டும் வாய்ப்பு என்பது உங்கள் வாழ்க்கையில் எப்போதாவது அரிதாகதான் நிகழும். யாராவது இளிச்சவாயர் மாட்டினால் மட்டுமே இது சாத்தியம். ‘உரையாடல்' அமைப்பு மிக்க மகிழ்ச்சியோடு அந்த இளிச்சவாய் பட்டத்தை ஏற்றுக் கொள்கிறது. வரும் ஞாயிறு உங்களுக்காக இலவசமாக கிழக்கு மொட்டை மாடி அரங்கில் ஒரு ஆங்கிலப்படம் திரையிடப்படுகிறது. யார் வேண்டுமானாலும் வரலாம். படம் பார்க்கலாம். வீட்டில் இருந்து வரும்போது ஒரு தலையணையையும், பாயையும் நீங்கள் கொண்டு வருவதாக இருந்தால் படுத்துக்கொண்டே படம் பார்க்கும் வசதியும் கிழக்கு அரங்கில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. நாமறிந்த அளவில் உலகில் இதுவரை எந்த அரங்கிலுமே இப்படிப்பட்ட வசதி இல்லை.

பெயர்: The Beautiful Country

மொழி : ஆங்கிலம்

வெளியான ஆண்டு: 2004

பட நேரம் : 125 நிமிடங்கள்

நாள் : 07.02.10, ஞாயிற்றுக்கிழமை
நேரம் : மாலை 5.30 மணி
இடம் : கிழக்கு பதிப்பகம் மொட்டைமாடி, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை.

அனைவரும், ஆர்வமுள்ள தங்கள் இஷ்டமித்திர பந்துக்கள் மற்றும் பேட்டுகளோடு வருமாறு கேட்டுக் கொள்கிறோம். படத்தின் போஸ்டரைப் பார்த்தால் ‘பிட்’ பிட்டாக சூப்பராக இருக்கும் என்று தோன்றுகிறது.

தொடர்புள்ள சுட்டிகள்:

http://naayakan.blogspot.com/2010/02/blog-post_04.html

http://en.wikipedia.org/wiki/The_Beautiful_Country

http://www.imdb.com/title/tt0273108/