11 பிப்ரவரி, 2010

இலங்கை - சீனா ஆடும் தில்லாலங்கடி ஆட்டம்!


டெலிகிராப் இணையத்தில் பீட்டர் போஸ்டர் என்பவர் எழுதிய ஒரு கட்டுரையின் சுட்டியை தோழர் பிரகாஷ் மின்னுரையாடல் மூலமாக வழங்கியிருந்தார். முக்கியத்துவம் கருதி, அக்கட்டுரையை தமிழாக்கம் செய்யுமாறு நான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தமிழாக்கமும் செய்து தந்திருக்கிறார். தோழர்கள் பார்வைக்கு அக்கட்டுரை...

ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கை அரசாங்கம் மீண்டுமொருமுறை தன்னுடைய சகிப்புத்தன்மை இல்லாத வழக்கத்தினை காட்டி வருகிறது. விளைவு, சரத் பொன்சேகாவின் கைது. பொன்சேகா தனது ராணுவ ஜெனரல் பதவியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டு, தற்பொழுது நடந்த தேர்தலில் மகிந்தா ராஜபக்சேவிற்கு எதிராக நின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

டீன் நில்சன் என்பவர் பொன்சேகாவின் கைதை ஒட்டி நடந்த சம்பவங்களை இங்கே தொகுத்துள்ளார். பொன்சேகாவை ராணுவ வீரர்கள் விசாரணைக்கு அராஜகமாக இழுத்துச் சென்றிருக்கின்றனர். சமீபத்தில் இலங்கையில் நடந்த மிக மோசமான சம்பவம் இது. கடந்த நான்கு ஆண்டுகளாக இலங்கை ராஜபக்‌ஷே ஆட்சியின் கீழ் சர்வாதிகார நாடாக உருமாறி வருவதற்கு இது சரியான ஒரு உதாரணம்.

அரசாங்கத்துக்கு எதிரான குரல்கள் மோசமான முறையில் ஒடுக்கபட்டு வருகிறது. பத்திரிக்கையாளர்கள் இயங்குவதற்கு மிகவும் ஆபத்தான நாடாக இலங்கை மாறி வருகிறது. இதற்க்கு பிரபல பத்திரிக்கையாளர் லசந்தா விக்ரமதுங்கேவின் மரண சாசனமே தக்க எடுத்துக்காட்டு. அவரது மரணசாசனத்தை வாசிக்காதவர்கள் இங்கே வாசிக்கலாம்.

சரி. சீனாவிற்கும், இலங்கைக்கும் என்ன சம்பந்தம்? சீனாவின் மக்கள் ஜனநாயக சர்வாதிகார அரசு புதிதாக முளைத்திருக்கும் இலங்கையின் ’மக்கள் சர்வாதிகார’ அரசிற்கு பொருளாதார ரீதியில் ஆதரவுக்கரம் நீட்டி வருகிறது. இது உலகளாவிய ரீதியில் சீனாவின் மோசமான நிலைப்பாட்டை காட்டுகிறது.

பூகோள ரீதியில் இலங்கைக்கான முக்கியத்துவம் மிகச்சிறியதுதான். என்றாலும் கிழக்காசியாவில் ஜனநாயக நாடாக இருந்து வந்த இலங்கை இப்போது ஊழல் நிறைந்த எதேச்சாதிகார சர்வாதிகார நாடாக மாறி வருவது எல்லோருக்குமே மிகவும் கவலை அளிக்கக்கூடிய விஷயம்.

பல்லாண்டு காலமாக இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் சீனா தலையிடாமலேயே இருந்து வந்தது. இந்தியா சங்கடப்பட்டு விடக்கூடாது என்பதில் சீனா கவனமாக இருந்தது. ஆனால் 2007 ஆம் ஆண்டு ராஜபக்‌ஷேவின் பீஜிங் பயணத்தில் இருந்து இந்த நிலைப்பாடு கொஞ்சம் கொஞ்சமாக மாறத்தொடங்கியது . அப்பயணத்தின் விளைவாக பொருளாதார ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் சீனாவின் உதவிகளை இலங்கை பெறும் வாய்ப்பு தோன்றியது. இரு அரசாங்கங்களும் ’தீவிரவாதம், பிரிவினைவாதம், பயங்கரவாதம்’ ஆகியவற்றுக்கு எதிராக போராட ஒப்பந்தம் செய்து கொண்டன. இத்தகைய வார்த்தை பிரயோகங்களின் மூலமாகவே ராஜபக்‌ஷே சமீபத்தில் விடுதலை புலிகளுக்கு எதிரான போரை வெற்றிகரமாக முடித்துக் காட்டினார்.

சீன அரசிற்கு சொந்தமான China Harbour Engineering Company (CHEC) என்னும் கட்டுமான பெருநிறுவனம் ஒன்று தற்போது இலங்கையின் தென்மூலையில் உள்ள ஹம்பண்டோடாவில் புதிய துறைமுகம், விமான நிலையம் மற்றும் தலைநகர் கொழும்புவுடன் மற்றப் பாதைகளை இணைக்கும் ஒரு எக்ஸ்பிரஸ் பாதையையும் அமைத்து வருகிறது.

சில ஆப்ரிக்க நாடுகளுடன் ஏற்கனவே செய்து வருவதைப் போல, நேரடியாக ஈடுபடாமல் நாட்டுடைய ஆளுங்கட்சியின் கையை பலப்படுத்துவது என்ற உத்தியின் மூலமாகவே இதை சீனா செய்துவருகிறது. ஹம்பண்டோட்டா ராஜபக்‌ஷேவின் சொந்தத் தொகுதி என்பதையும் நாம் இங்கே நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் இலங்கைக்கு எதிரான கண்டனகள், இலங்கையின் மீது சரியான அழுத்தம் கொடுக்காமல் இருக்க, சீனாவின் பணம் மற்றும் மனிதத் தன்மையற்ற செயல்பாடுகளும் முக்கியக் காரணிகளாக இருக்கின்றன.

இலங்கை அரசின் சமீபக்கால போர்க் குற்றங்களை விசாரிக்க நடந்த ஐநா சபை விவாதத்தின் போதும் கூட அந்நாட்டின் புதிய நண்பரான ரஷ்யா இலங்கைக்கு ஆதரவுக்கரம் நீட்டியது. இப்போது இலங்கைக்கு ரஷ்யா 300 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு நிகரான ஆயுதம் கொடுப்பது பற்றியும் பேச்சு வார்த்தை மும்முரமடைந்திருக்கிறது. சீனாவின் பங்காளியான ஈரானும் மலிவு விலைக்கு எண்ணெய் மற்றும் சில பொருளாதார உதவிகளை இலங்கைக்கு செய்துத்தர முன்வந்திருக்கிறது .

பிரிட்டன், இலங்கைக்கு எதிராக குரல் கொடுப்பதோடு மட்டுமில்லாமல், பொருளாதார உதவிகளை ரத்தும் செய்து வருகிறது. ஆயினும் முன்பு கிடைத்து வந்த பிரிட்டனின் பொருளாதார உதவி சொற்பமானது என்பதால், இலங்கை உதறித்தள்ளிவிட்டு போய்க்கொண்டே இருக்கிறது. பெரியண்ணன் அமெரிக்காவோ அடிக்கடி, ’நிலைமை மோசம்’ என்று முணங்கிக்கொண்டே இருக்கிறதே ஒழிய, அதன் பங்கிற்கான ஆக்கப்பூர்வமான முயற்சிகள் எதையும் முன்னெடுக்கவில்லை.

கடந்த வாரம் ஐரோப்பிய கூட்டமைப்பு, மனித உரிமை மீறல்களை காரணம் காட்டி, இலங்கையுடனான வர்த்தகங்களை ரத்து செய்துள்ளது. எப்படியிருந்தாலும் இதை நடைமுறைப்படுத்தும் தாமதத்தை சீனாவின் பொருளுதவி ஈடுகட்டிவிடும் என்பதாக தெரிகிறது.

இப்பிரசினையில் சீனாவின் மூக்கு நுழைப்பைப் பற்றி நிருபர்கள் கேட்ட கேள்விக்கு, அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் மா சாவோக்சு, ”இலங்கை தனது சமூக ஸ்திரத்தன்மையை பேண வேண்டும்” என்று மட்டுமே சொல்லியிருக்கிறார். இவ்வகையில் எல்லாம்தான் வெள்ளை வேன்களுடன் பாசிஸம் புரிந்துவரும் ராஜபக்‌ஷே அரசிற்கு ஆதரவாக சீனா சப்பை கட்டு கட்டுகிறது.

இலங்கையில் நடக்கும் மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்த இந்த உலகம் விழித்துக்கொண்டால் மட்டுமே முடியும், ஆனால் அது நடக்குமா என்பது சந்தேகமே.

10 பிப்ரவரி, 2010

அசல் - ஜக்குபாய்


அஜித்துக்கு விடிவே கிடையாது போலிருக்கிறது. இன்னமும் பில்லா ஃபீவரிலேயே அலைகிறார். கிட்டத்தட்ட வரலாறு கெட்டப்பில் அப்பா கேரக்டர். பில்லா டைப்பில் மகன் கேரக்டர். இரட்டை வேடத்தில் நடித்ததால் வாலி ஹிட் ஆகவில்லை. அதில் கதையும் இருந்தது என்பதை யாராவது அஜித்துக்கு எடுத்துச் சொல்லலாம்.

சரண், அஜீத், யூகிசேது என்று மூன்று பேருடைய பெயர் டைட்டிலில் ‘கதை’ என்று வருகிறது. இல்லாத ஒரு சமாசாரத்துக்கு மூவரின் பெயரை போட்டிருப்பதை பின்நவீனத்துவம் என்று பாராட்டலாம். ’தல’ இணை இயக்கம் வேறு செய்திருக்கிறாராம். அவர் எதிர்காலத்தில் எதையும் இயக்கிவிடக்கூடாது என்று கர்த்தரிடம் ஜெபிப்பதை தவிர நமக்கு வேறுவழியில்லை.

படத்தில் அசலான சமாச்சாரம் அஜீத் மட்டுமே. இவ்வளவு மட்டமான படத்தில் கூட மிடுக்காக கவர்கிறார். சண்டைக்காட்சிகளில் சுறுசுறுப்பு. இருந்தாலும் யார் அடித்தாலும் தல அசராது அடித்துக் கொண்டேயிருக்கும் என்பது தெரிந்துவிடுவதால் விறுவிறுப்பு சுத்தமாக இல்லை. ஆனால் அங்கிள் தோற்றத்தில் இருக்கும் அஜித்தை, நான் பாவனாவாக இருக்கும் பட்சத்தில் காதலிப்பது என்ன, சைட் கூட அடிக்க மாட்டேன். இளைய தளபதிக்கு ஆண்டுக்கு ஆண்டு வயது குறைந்து கொண்டே போகிறது. தலைக்கோ வருடா வருடம் நான்கைந்து வயது கூடுகிறது.

அஜித் பஞ்ச் டயலாக் எதையும் பேசவில்லை என்பது ஆறுதல் என்றாலும், கண்ட கேரக்டர்களும் தல, கொல என்று அச்சுபிச்சாக பேசுவது அக்குறும்பு. மொட்டையடித்த சுரேஷ் ஸ்மார்ட்டாக இருக்கிறார். பிரபுவின் தமிழ் சினிமா உலக வாழ்க்கை ஆராயப்பட வேண்டிய ஒன்று. சின்னத்தம்பி மாதிரி எவர்க்ரீன் ஹிட் படத்தில் நடித்தவர், இப்படியெல்லாம் கூட பரிதாபமான கேரக்டர்களில் நடிக்கிறாரே என்று ஆச்சரியம் ஏற்படுகிறது. முன்பு காதலிக்க நேரமில்லை ரவிச்சந்திரன் இதுபோன்ற அக்கடா துக்கடா கேரக்டர்களில் ரஜினி படங்களில் நடிப்பார்.

துஷ்யந்தா பாட்டு சூப்பர். டொட்டடாய்ங்கும் கலக்கல். மற்றபடி பின்னணி இசை பில்லா-2007வையே மீண்டும் மீண்டும் ரீமேக்குகிறது. சமீரா ரெட்டி ஸ்டைலாக டிரெஸ் செய்கிறார். உயரமாக இருக்கிறார். பாவனாவுக்கும், சமீரா ரெட்டிக்கும் இடையேயான டெக்னிக்கல் டயலாக்ஸ் படமாக்கப்பட்ட காட்சிகளில் மட்டும் பழைய சரண் தெரிகிறார்.

சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பு, அஜித் நடிப்பு, சரண் இயக்கம் என்றெல்லாம் புரொஃபைல் பக்காவாக இருந்ததால் இந்தப் படத்துக்கான எதிர்ப்பார்ப்பு ஏக்குமாக்காக இருந்தது. ஓபனிங்கில் நல்ல கல்லா கட்டியிருக்கிறது. இருந்தாலும் அசல் தமிழ் சினிமாவுக்கு இன்னுமொரு அடாசு என்பதை ஒப்புக்கொண்டே ஆகவேண்டும்.

* - * - * - * - *

அசல் அடாசு ஆக்கிவிட்டாலும், ஜக்குபாய் மக்குபாயாக இல்லாமல் ஆச்சரியப்படுத்துகிறார். சமீபத்தில் பார்த்த தமிழ் மசாலாக்களில் உருப்படியான மசாலா. நீண்ட நெடிய காலமாக ஹிட்டே கொடுக்காத சரத் நடித்திருப்பது மட்டுமே இப்படத்துக்கு வசூல்ரீதியாக மைனஸ் பாயிண்டாக இருக்கலாம். ஒரு வேளை இதே கேரக்டரில் அஜித் நடித்திருந்தால் அசலான ஹிட்டை நிஜமாகவே அடித்திருக்கலாம்.

பட்டதாரி இளைஞராக விஜயகாந்த் நடித்துக் கொண்டிருக்கும் இந்த காலக்கட்டத்திலும் கூட, தன் வயதுக்கு ஏற்ற கேரக்டரை ஏற்று நடிக்க முன்வந்திருக்கும் சரத்குமாருக்கு, ஞாநி சார் ஒரு பூச்செண்டை ‘ஓ’ பக்கங்களில் வழங்கலாம். ஏற்றுக் கொண்ட பாத்திரத்துக்கு ஏற்ற சிரத்தையையும் முழுவீச்சில் தருகிறார் சரத்.

படத்தின் ஆரம்பக் காட்சிகள் கொஞ்சம் குளறுபடியாக இருந்தாலும், சரத் ஆஸ்திரேலியாவுக்கு ஃப்ளைட் ஏறியதில் இருந்து ஜெட் வேகத்தில் பயணிக்கிறது. ஆங்கிலப்பட விறுவிறுப்போடு அமைக்கப்பட்ட திரைக்கதைக்கு பாடல்கள்தான் ஸ்பீட் பிரேக்கர். ஸ்ரேயாவின் குழந்தமையான வேடம் புளித்தமாவு. ஜெனிலியா நடித்த எல்லாப் படத்திலும் அவர் இப்படித்தான் நடித்திருந்தார். ஜக்குபாயின் மகள் இண்டெலக்ச்சுவலாகவே இருந்திருக்கலாம்.

சரத்தோடு மோதுமளவுக்கு வில்லன் வெயிட்டாக இல்லை என்பதும் இன்னொரு மைனஸ். பெரிய இடைவெளிக்குப் பிறகு கவுண்டமணி. வயிறு வலிக்குமளவுக்கு சிரிக்க வைக்கவில்லையென்றாலும் தனது வழக்கமான நக்கல், நையாண்டியில் எந்த குறையும் வைக்கவில்லை. சிங்கல் ஈஸ் ஆல்வேஸ் சிங்கம்.

’இயக்கம் : கே.எஸ்.ரவிக்குமார்’ என்று டைட்டில் போட்டிருந்தால் போதும். எதைப் பற்றியும் யோசிக்காமல் டிக்கெட் வாங்கிக்கொண்டு தியேட்டருக்குள் நுழைந்துவிடலாம் என்ற நம்பிக்கையை மீண்டும் மீண்டும் தக்கவைத்துக் கொள்கிறார் கே.எஸ்.ஆர்.

8 பிப்ரவரி, 2010

கோட்டை விட்ட டோனி, சுனாமியாய் கில்லி!!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக ஐ.பி.எல் 20-20 போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்ட நேரம் அது. ஒரு கிரிக்கெட் அறிவிலியான என்னை ஐ.பி.எல். குறித்து ஏதாவது எழுதித் தரும்படி ஒரு தமிழ் இணையத்தளம் கேட்டுக் கொண்டது. கிரிக்கெட்டைப் பற்றி தொழில்நுட்பரீதியாக தெரியாது என்று மறுத்தும், நண்பரான இணையத்தள நிர்வாகி தொடர்ச்சியாக என்னை வற்புறுத்தினார். குமுதம் பாணியில் நான் அப்போதைக்கு அடித்துவிட்ட உட்டாலக்கடி சரக்கு இது. இரண்டு ஆண்டுகள் கழித்து வாசிக்கும்போதுதான் எனக்கே கொஞ்சம் சுவாரஸ்யமாக இருப்பதைப் போல படுகிறது!

ஐ.பி.எல். 20-20 போட்டிகள் பரபரப்பான கட்டத்தை அடைந்திருப்பதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் போட்டிகள் நடைபெறும் தினங்களில் தலைநகர் சென்னை ஈயடிக்கிறது. வெயிலுக்காக பல்லாயிரக்கணக்கானோர் கடற்கரைக்கு மாலை வேளைகளில் படையெடுப்பது வழக்கம். ஆனால் போட்டி நடைபெறும் தினங்களில் மொத்தக்கூட்டமும் சேப்பாக்கம் மைதானத்துக்கு படையெடுத்து விடுகிறது. திரையரங்குகளில் மாலைக்காட்சிகளில் கூட்டம் சேருவதில்லை. தசாவதாரம் படத்தின் வெளியீடு கூட 20-20 போட்டிகளால் தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள்.

போட்டி நாட்களில் படப்பிடிப்பு எதுவும் இல்லாத திரை நட்சத்திரங்கள் தவறாமல் சேப்பாக்கத்தில் ஆஜராகிவிடுகிறார்கள். இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாது சினிமா ரசிகர்களும் தங்கள் அபிமான நட்சத்திரங்களை காண மைதானத்துக்கு வந்துவிடுகிறார்கள். கிரிக்கெட் ரசிகர்களுக்கும், சினிமா நட்சத்திரங்களுக்கும் இடையே சிறுசிறு மோதல்களும், தள்ளுமுல்லுகளும் நடக்கிறது.

நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஹைதராபாத்தின் டெக்கான் சார்ஜர்ஸ் அணியோடு மோதியது. நேற்று மதியம் போட்டியைக் காண நமீதா வருகிறார் என்ற செய்தி நகரில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இச்செய்தியைக் கேள்விப்பட்ட பணியில் இருக்கும் அரசு மற்றும் தனியார் அலுவலர்கள் பலரும் அவசர அவசரமாக அலுவலங்களில் பொய்க்காரணம் சொல்லி பர்மிஷன் போட்டு சேப்பாக்கத்தை நோக்கி படையெடுத்தனர். நமீதா ரசிகர்கள் நூற்றுக்கணக்கானோர் சேப்பாக்கம் மைதானத்தின் முகப்பில் கூடி நமீதா வாழ்க என்று கோஷமிட்டுக் கொண்டிருந்தனர். துரதிருஷ்டவசமாக நமீதா ரசிகர்கள் பலருக்கும் மைதானத்துக்குள் செல்ல டிக்கெட் கிடைக்கவில்லை. இவர்களில் பலர் விரக்தி அடைந்து போட்டி முடியும் வரை மைதானத்தை சுற்றி சுற்றி வந்துகொண்டிருந்தார்கள்.

இதற்கிடையே ஜேம்ஸ்பாண்டு படநாயகி தோற்றத்தில் பெரும் ஆரவாரத்துக்கிடையே போட்டி தொடங்கும் நேரத்துக்கு சற்றுமுன்னர் நமீதா வந்தார். போட்டியை கவர் செய்ய வந்திருந்த கேமிராமேன்கள் சிலரும் நமீதா ரசிகர்கள் போலிருக்கிறது. போட்டியின் முக்கியமான கட்டங்களை கவர் செய்யாமல் அடிக்கடி நமீதாவை கவர் செய்துகொண்டிருந்தார்கள். நமீதாவின் அதிரடி ஆடையை கண்டு பயந்துவிட்டதாலோ என்னவோ சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனியும், அவரது குழுவினரும் நேற்று சொதப்பி விட்டார்கள். ரன் குவிக்க திணறிய அணி, பவுலிங் செய்யும்போது வள்ளல்களாக மாறி ரன்களை வாரி இறைத்தார்கள்.

டோனி குழுவினர் சோர்ந்துப்போனதை கண்ட டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் கேப்டன் கில்லி என்ற கில்கிறிஸ்ட் வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டார். அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன் ஆக களமிறங்கிய அவர் சிக்ஸர்களும், பவுண்டரிகளுமாக விளாசி சென்னை அணியை சேதாரத்துக்குள்ளாக்கினார். சென்னை அணியினர் ஓரிரு பவுண்டரிகள் அடித்தபோதும் கைத்தட்டி உற்சாகப்படுத்திய நமீதா, ஹைதராபாத் அணியினர் சிக்ஸர்கள் விளாசியபோதும் ஆரவாரம் செய்தார். இதனால் நமீதா எந்த அணியை ஆதரித்தார் என்பது தெரியாமல் ரசிகர்கள் குழம்பினர். இருப்பினும் நமீதா கைத்தட்டும் போதெல்லாம் தாங்களும் கைத்தட்டி, விசிலடித்து கொண்டாட்டமாக இருந்தனர். இறுதியில் கம்பீரமாக டெக்கான் சார்ஜர்ஸ் அணியினர் வெற்றி பெற்றனர்.

தொடர்ந்து நான்கு ஆட்டங்கள் வென்று முதலிடத்தில் இருந்த சென்னை அணி, அதன் பின்னர் ஆடிய மூன்று ஆட்டங்களில் தொடர்ந்து தோல்வியை தழுவியதால் சென்னை ரசிகர்கள் வெறுத்துப் போயிருக்கிறார்கள். சென்னை அணியின் விளம்பரத் தூதர்களாக இளைய தளபதி விஜய்யும், நயன்தாராவும் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பாக நியமிக்கப்பட்டனர். நயன்தாராவை இடையில் அப்பொறுப்பில் இருந்து நீக்கியதால் தான் சென்னை அணி தொடர்ந்து தோல்விகளை சந்திக்கிறது என்ற புதிய கண்டுபிடிப்பை நேற்று மைதானத்தில் போட்டியைப் பார்த்து தலையில் துண்டு போட்டுக்கொண்ட நயன்தாரா ரசிகர் ஒருவர் கண்டறிந்து எல்லோரிடமும் சத்தமாக சொல்லிக் கொண்டிருந்தார்.


இதற்கிடையே ஆரம்பத்தில் தோற்றுக் கொண்டிருந்த பஞ்சாப் கிங்ஸ் அணியினர் திடீரென எழுச்சிப்பெற்று தொடர்ந்து வெற்றிகளை குவித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு அந்த அணியின் உரிமையாளரான ப்ரீத்தி ஜிந்தாவே காரணம் என்கிறார்கள். பஞ்சாப் போட்டி நடக்கும் மைதானங்களுக்கு அந்த அணியின் சீருடையுடன் செல்லும் ப்ரீத்தி, போட்டி நேரம் முழுவதும் அணியினரை உற்சாகப்படுத்தி வருகிறாராம்.

தன் அணி போட்டியில் வெற்றி பெற்றால் அணியினரை மேற்கத்திய பாணியில் கட்டி அணைத்து வாழ்த்து தெரிவிக்கிறார் ப்ரீத்தி ஜிந்தா. இதனால் உத்வேகம் அடையும் பஞ்சாப் கேப்டன் யுவராஜ் மற்றும் அவரது அணியினர் ஆவேசமாக ஆடி இப்போது வெற்றிகளைத் தொடர்ந்து குவிக்கிறார்கள் என்று ஒரு கிரிக்கெட் ரசிகர் சொன்னார்.

இத்தொடரில் தொடர்வெற்றிகளை குவித்து முதலிடத்தில் இருந்தாலும் மற்ற அணிகளுக்கு இருப்பது போன்ற நட்சத்திர ஆதரவும், சலுகையும் தன் அணிக்கு இல்லாததால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளரும், கேப்டனுமான ஷேன்வார்னே நொந்துப் போய் இருக்கிறாராம்.

6 பிப்ரவரி, 2010

சென்னையில் 108க்கு ஒரு மாற்று!

எதிர்பாராமல் ஏதாவது நடந்தால்தான், அதற்குப் பெயர் விபத்து. இளைஞரான திலீப்புக்கு இருசக்கரவாகனம் ஓட்டுவது இலகுவானது மட்டுமல்ல, ரொம்ப பிடித்தமானதும் கூட. பல வருடங்களாக பைக் ஓட்டிவரும் அவர், ஒருமுறை கூட விபத்தை சந்தித்ததில்லை. இத்தனைக்கும் அன்று அலுவலகத்துக்கு நேரத்துக்கு செல்ல வேண்டிய அவசியமிருந்தும் மிதமான வேகத்தில்தான் ஓட்டிக் கொண்டிருந்தார்.

அண்ணாசாலை சாந்தி தியேட்டரை கடக்கும் வேளையில் திடீரென வண்டி மக்கர் செய்தது. பஞ்சரா என்ன ஏதுவென்று ஓரம் கட்டி சோதிப்பதற்குள் ‘விபத்து’. என்ன நடந்தது என்று திலீப்புக்கு இப்போது கூட தெரியாது. வண்டி எதன் மீதோ இடித்த சத்தம் மட்டுமே அவரது காதில் கடைசியாக கேட்டது.

சினிமாவில் விபத்தில் அடிபட்டவர்கள் கேட்பதைப் போலவே “நான் எங்கே இருக்கிறேன்?” என்று கேட்டவாறே கண் விழித்தார் திலீப். புன்னகையோடு அவர் எதிரில் நின்றுகொண்டிருந்தவர் கமல்ஹாசன். சினிமா நடிகரல்ல, இவர் வேறு. 24 வயதாகும் இளைஞர். சென்னையில் ஒரு பி.பி.ஓ. நிறுவனத்தில் பணிபுரிகிறார்.

திலீப்பைப் போல விபத்துக்களில் அடிபடுபவர்களை உடனடியாக காப்பாற்றி, அருகிலிருக்கும் ஏதாவது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி செய்வது முதல், அடிபட்டவரின் குடும்பத்துக்கு தகவல் தெரிவிப்பது வரையிலான பணிகளை தன்னுடைய கடமையாக செய்துவருகிறார் கமல். இவரைப் போலவே இவருடைய நண்பர்களும் இச்சேவையில் தம்மை இணைத்துக்கொள்ள, ‘சேஞ்ச் இந்தியா’ என்ற பெயரில் ஒரு அமைப்பு உருவாகியிருக்கிறது.

சுமார் ஐம்பது பேர் இவ்வமைப்பில் தங்களை உறுப்பினர்களாய் இணைத்துக்கொண்டு, விபத்துக்களில் அடிபடுபவர்களுக்கு முதலுதவிச் சேவை வழங்கி வருகிறார்கள். இதுவரை விபத்துகளில் அடிபட்ட சுமார் முன்னூறு பேருக்கு இவர்கள் உதவியிருக்கிறார்கள்.

எப்படி இந்த எண்ணம் வந்தது?

சேவை செய்யவேண்டுமென்ற உந்துதல் இத்தலைமுறையில் எல்லோருக்குமே இருக்கிறது. இதை ‘கலாம் எஃபெக்ட்’ என்ற பிரத்யேக சொல்லாடலோடு சொல்கிறார் கமல். இவரும், இவருடைய நண்பர்களும் தங்களது பிறந்தநாளை ஆதரவற்றோர் இல்லங்களில் கொண்டாடி வந்திருக்கிறார்கள். ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவி, மருத்துவத் தேவைக்கு உதவி என்று வழக்கமான உதவிகள்.

கமல் ஒருமுறை வண்டியில் வந்துகொண்டிருந்தார். அப்போது சாலையோரத்தில் ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். பயங்கர இரத்த இழப்பு. வேடிக்கை பார்க்க நல்ல கூட்டம். வலியில் முனகிக் கொண்டிருந்த அந்தப் பெண்மணியை ஒரு ஆட்டோவில் ஏற்றி அருகிலிருந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதலுதவி செய்தார் கமல்.

மருத்துவம் பார்த்த டாக்டர், கமலை அழைத்து “தம்பி சரியான நேரத்துலே இந்த அம்மாவை கொண்டு வந்து சேர்த்தீங்க. இன்னும் கொஞ்சம் ரத்தம் வீணாகியிருந்தா இவங்க உயிரே போயிருக்கும். இந்த நேரத்தை ‘கோல்டன் ஹவர்’னு சொல்லுவோம். அதாவது குறிப்பிட்ட நேரத்துக்குள் முதலுதவி கொடுத்தால் உயிரைக் காப்பாற்றிவிடலாம்னு சொல்ற அந்த பொன்னான நேரம். துரதிருஷ்டவசமா கோல்டன் ஹவர்க்குள் முதலுதவி செய்யப்படாதவர்கள்தான் விபத்துக்களில் அதிகமா மரணமடையுறாங்க”.

டாக்டர் சொன்ன ‘கோல்டன் ஹவர்’ கமலுக்குள் ரீங்காரமிட்டுக் கொண்டே இருந்தது. யாராவது விபத்தில் அடிபட்டு சாலை ஓரத்தில் கிடந்தால், அதிகபட்சமாக 108-க்கு தொலைபேசி ஆம்புலன்ஸை கூப்பிடுவோம். சென்னை போன்ற போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரங்களில் ஆம்புலன்ஸ் வர நேரமாகலாம். அதற்குள்ளாக அடிபட்டவருக்கு ரத்த இழப்பு அதிகமாகி, கோல்டன் ஹவரை தாண்டிவிட்டால்?

மரணம். ஒரு உயிர் மண்ணைவிட்டுப் பிரியும். அந்த உயிரை நம்பிய குடும்பம் நடுத்தெருவில் நிற்கலாம். குழந்தைகள் ஆதரவற்றுப் போகலாம். விபத்தை வெறுமனே வேடிக்கைப் பார்ப்பவர்கள் எவ்வளவு பெரிய சமூகக் குற்றவாளிகள்?

அன்றிலிருந்து தன்னுடைய நண்பர்களிடம் கோல்டன் ஹவரின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்க ஆரம்பித்தார் கமல். ஆங்காங்கே நடந்த விபத்துகளின்போது, அடிபட்டவர்களை அருகிலிருக்கும் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று முதலுதவி அளிக்க ஆரம்பித்தார்கள். இதுவரை இவர்களால் காப்பாற்றப்பட்டவர்கள் 300 பேர். “குறித்துவைத்துக் கொள்ளுங்கள். இந்த முன்னூறு பேரில் ஒருவர் கூட மரணமடைந்தது இல்லை. சரியான நேரத்துக்கு சிகிச்சை கிடைத்தால் விபத்தில் உயிரிழப்பு என்ற விஷயமே இருக்காது” என்கிறார் கமல்.

கமல்ஹாசன் குறிப்பிடுவது போல ‘கோல்டன் ஹவர்’ என்பது மிக மிக முக்கியமானது. விபத்துக்களில் மட்டுமல்ல, திடீரென ஏற்படும் ஹார்ட் அட்டாக் போன்ற விஷயங்களின் போதும் கூட, சரியான நேரத்தில் சிகிச்சை கிடைத்தால் உயிரைக் காப்பாற்றி விடலாம். மருத்துவமனைகளில் இதுபோல யாராவது உயிரிழக்கும்போது, “அரை மணி நேரத்துக்கு முன்னாடி கொண்டுவந்திருந்தா பொழைச்சிருப்பார்!” என்று மருத்துவர் சொல்கிறார் இல்லையா? அந்த அரைமணி நேரத்துக்கு முன்னால் தான் இறந்தவரின் ‘கோல்டன் ஹவர்’ இருந்திருக்கும். இந்த விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்பட்டால் பல உயிரிழப்புகளை மருத்துவர்களால் தடுத்து நிறுத்த முடியும்.

வித்தியாசமான அனுபவங்களும் இவர்களுக்கு நேர்ந்ததுண்டு. ஒருமுறை ஒருவர் குடித்துவிட்டு வேகமாக வண்டி ஓட்டி விபத்துக்குள்ளாகி இருக்கிறார். ரத்தம் சொட்ட, சொட்ட மயங்கிக் கிடந்தவரை சுற்றி பெரியக் கூட்டம். “குடிச்சிட்டு வண்டி ஓட்டினா இப்படித்தான்!” என்று விபத்துக்கு வேடிக்கையாளர்கள் நியாயம் கற்பித்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். அங்கிருந்த போக்குவரத்துக் காவலரும் கூட என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தார். அந்த வழியாக வந்த கமல் உடனடியாக அடிபட்டவரை அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உயிர் பிழைக்க வைத்திருக்கிறார்.

இதுபோன்ற மீட்புப் பணிகளின் போது, பெரும்பாலும் ஆட்டோக்காரர்கள் காசு வாங்குவதில்லையாம். பொதுவாக அரசு மருத்துவமனைக்குதான் முதலுதவிக்கு எடுத்துச் செல்கிறார்கள். அருகில் அரசு மருத்துவமனை இல்லாதபட்சத்தில் மட்டுமே தனியார் மருத்துவமனைக்கு போகிறார்கள். முதலுதவி செய்ய அதிகபட்சமாக ஐநூறு ரூபாய் வரை மட்டுமே தனியார் மருத்துவமனையில் ஆகுமாம். ஆம். கோல்டன் ஹவரின்போது ஒரு உயிரின் விலை வெறும் ஐநூறு ரூபாய்தான். எனவே சேஞ்ச் இந்தியா தோழர்கள் தங்கள் மணிபர்ஸில் எப்போதுமே ஒன்று அல்லது இரண்டு ஐநூறு ரூபாய்தாள்களை முதலுதவிக்கென்றே வைத்திருக்கிறார்கள்.

“இந்த சேவையைப் பற்றி கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் விபத்து மாதிரியான விஷயங்களில் போலிஸ் தொல்லை அதிகமாக இருக்குமே? கோர்ட்டு - கேஸூ என்று இழுப்பார்களே?” என்ற எண்ணம் உங்களுக்குத் தோன்றலாம். போலிஸ்காரர்களைப் பொறுத்தவரை யாரையுமே தொந்தரவு செய்வது அவர்களது இயல்பல்ல. ஒரு உயிரைக் காப்பாற்றினால் போலிஸ் என்ன, எல்லோருமே உங்களை பாராட்டத்தான் செய்வார்கள்.

அதிகபட்சமாக இதுபோன்ற விபத்து மீட்பாளர்களிடம் பெயரையும், முகவரியையும் மட்டும் போலிஸ் கேட்டு வாங்கிக் கொள்ளும். அவர்கள் கேட்கும் தோரணை வேண்டுமானால் கொஞ்சம் பயமுறுத்தலாம். மற்றபடி காவலர்கள் மக்களின் தோழர்களே. தப்பு செய்யாதவர்களை போலிஸ் எதுவுமே செய்யாது. இதை நாம் சொல்லவில்லை. கமலும், அவரது நண்பர்களும் சொல்கிறார்கள்.

தனியார் மருத்துவமனைகளிலும் போலிஸ் கேஸ் என்றால் முதலுதவி செய்யமாட்டார்கள் என்றொரு பொய்யான கருத்தாக்கம் நம்மிடையே நிலவுகிறது. அப்படியெல்லாம் இல்லை. கோல்டன் ஹவரில் கொண்டுவரப்படும் எந்த நபரையுமே உயிர்பிழைக்க வைக்கத்தான் ஒரு மருத்துவர் முயற்சிப்பார். முதலுதவிக்குப் பின்னரே என்ன ஏதுவென்று மற்ற விஷயங்களை விசாரிப்பார்கள். அதிகபட்சமாக ‘போலிஸுக்கு சொல்லிட்டீங்களா?’ என்றுதான் கேட்கிறார்கள்.

விபத்துக்களில் அடிபட்டவர்களை காப்பாற்ற முடியாததற்கு நேரத்தைதான் நிறையபேர் காரணமாக குறிப்பிடுகிறார்கள். “பத்து மணிக்கெல்லாம் ஆபிஸ் போகணும். ஒருத்தரை ஆஸ்பிட்டல்லே சேர்த்துட்டு, அவங்க வீட்டுக்கு இன்ஃபார்ம் பண்ணிட்டு, போலிஸுக்கும் தகவல் சொல்லிட்டு ஆபிஸ் போக மதியம் ஆகிவிடுமே? லேட்டானா மேனேஜர் திட்டமாட்டாரா?” - பொதுவாக எழும் கேள்வி இது. மேனேஜர் நிச்சயமாக திட்டமாட்டார்.

மாறாக இதுபோல ஒருவரின் உயிரைக் காப்பாற்றிவிட்டு அலுவலகத்துக்கு சென்றுப் பாருங்கள். அலுவலகமே எழுந்து நின்று உங்களை கைத்தட்டி வரவேற்கும். சேஞ்ச் இந்தியா தோழர்களின் அனுபவம் இது. அதுவுமில்லாமல் தார்மீகரீதியாகப் பார்க்கப் போனாலும் ஒரு உயிரைவிட நம்முடைய வேலை பெரியதா என்ன?

எல்லாவற்றுக்குமே அரசையே சார்ந்திராமல், சமூகத்துக்கு தங்களாலான சேவைகளை, தங்களுக்கு தெரிந்த வழியில் செய்துக் கொண்டிருக்கும் கமலும், அவருடைய நண்பர்களுமே இன்றைய இளைய இந்தியாவைப் பிரதிபலிக்கக்கூடிய சரியான பிம்பங்கள். “இளைஞர்களுக்கு சமூக அக்கறை கிடையாது. பொழுதுபோக்குகளில் நாட்டமுடையவர்கள். சுயநலவாதிகள்” என்றெல்லாம் பழைய பஞ்சாங்கத்தை புரட்டிப் பார்த்து சொல்லிக் கொண்டிருப்பவர்கள், இவ்விளைஞர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியது ஏராளம்.

நீங்களும் முயற்சிக்கலாமே?

சென்னை பெருநகரில் கமலும், அவரது நண்பர்களும் இத்தகைய விபத்துமீட்பு பணிகளை செய்து வருகிறார்கள். இதற்கென்று அமைப்பெல்லாம் வைத்துக் கொள்ளாமலேயே தனி மனிதர்கள் ஒவ்வொருவரும் இந்த விஷயத்தை முன்னெடுத்து செய்ய வேண்டும் என்பது அவர்களின் ஆதங்கம். எந்த விஷயத்துக்குமே தனிமனித விழிப்புணர்வு ஒரு சமூகத்தில் ஏற்பட நீண்ட காலமாகும் என்பதால்தான் குழுவாக அமைந்து பணியாற்ற வேண்டியிருக்கிறது.
மற்ற நகரங்களிலும் இளைஞர்கள் சேஞ்ச் இந்தியாவை முன்னுதாரணமாக்கி விபத்துக்களில் அடிபடுபவர்களின் உயிர்களை காப்பாற்றலாம் இல்லையா?

இதுபற்றிய சந்தேகங்கள் ஏதாவது இருந்தால் கமல்ஹாசனையே தொடர்புகொண்டு பேசலாம். அவரது எண் : 9841567893. மின்னஞ்சல் : changeindia@live.com / b.kamalhasan@live.com

(நன்றி : புதிய தலைமுறை)

5 பிப்ரவரி, 2010

கேமிரா ஜாக்கிரதை!

பின் ஹோல் கேமிரா (Pinhole Camera) பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

அதை டெக்னிக்கலாக விளக்குவது எனக்கு கொஞ்சம் சிரமமான விஷயம். நாம் எதிர்பாராத இடங்களில், எதிர்பாராத வடிவங்களுக்குள் அதை வைத்து நமக்குத் தெரியாமலேயே படமெடுக்க முடியும் என்றவகையில் புரிந்துகொண்டால் போதும். நமக்கு தெரியாமலேயே நம்மை படம்பிடிப்பதை ‘கேண்டிட் கேமிரா’ என்கிறார்கள். பலருக்கு இது வெறித்தனமான பொழுதுபோக்கும் கூட.

இந்த வகை கேமிராக்களில் ரொம்பவும் அட்வான்ஸான தொழில்நுட்பம் எந்த காலத்திலேயோ வந்துவிட்டது. பத்திரிகையாளர்கள் சட்டைப் பாக்கெட்டில் செருகி வைத்திருக்கும் பேனாவில் கூட கேமிரா உண்டு. சமீபத்தில் ஜூனியர் விகடன் இதழ் இந்த கேமிராவை பயன்படுத்தி, ஒரு பரபரப்பு ஸ்டோரி எழுதியது கூட உங்களுக்கு நினைவிலிருக்கலாம்.

இப்போது மின்னஞ்சல்களில் சுற்றிக்கொண்டிருக்கும் ஒரு மடல் பகீர வைக்கிறது.

மிகப்பெரிய சில ஷாப்பிங்மால்களில் பெண்கள் உடைமாற்றிப் பார்க்கும் ‘டிரையல் ரூம்களில்’ இதுபோன்ற பின் ஹோல் கேமிரா மூலமாக படம் பிடிக்கிறார்களாம். இது நிர்வாகத்துக்குத் தெரிந்து நடக்கிறதா அல்லது அங்கு பணியாற்றும் வக்கிரமனதுக்காரர்கள் யாராவது செய்கிறார்களா என்பது பற்றி உறுதியாகத் தெரியவில்லை.

‘பெரிய சந்தை’ ஒன்றில் சமீபத்தில் படம் பிடித்ததாக கூறி ஒரு எம்.எம்.எஸ். சுற்றிக் கொண்டிருக்கிறதாம். ‘வாடிக்கையாளர் நிறுத்தத்தில்’ கூட இதுபோன்ற கசமுசா ஒருமுறை நடந்திருப்பதாகவும் வதந்தி உலவுகிறது. அயல்நாடுகளில் பெரிய ஷாப்பிங் மால்கள் பலவற்றிலும் நடப்பதாக கட்டுரைகள் வாசித்திருக்கிறேன். ’டூவே மிர்ரர்’ போன்றவை அங்கே சகஜமாக இருந்ததாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன்.

நம்மூருக்கும் இந்த கலாச்சாரம் வந்துவிட்டது என்பது நட்சத்திர ஓட்டல் குளியலறையில் நடிகை படம் பிடிக்கப்பட்டதாக சொல்லப்பட்ட சம்பவத்தின்போதே உறுதியாகிவிட்டது.

டிரையல் ரூம்களில் ஆண்களை படம் பிடித்து ஒன்றும் ஆகப்போவதில்லை. ஆனால் பெண்கள் இனி கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது. பெரிய ஷாப்பிங் மால்களில் இதுபோன்ற கசமுசாக்கள் நடக்க வாய்ப்பில்லாத வண்ணம் காவல்துறையும் முடுக்கி விடப்பட வேண்டியது அவசியமாகிறது.

தமிழ் பத்திரிகைகளுக்கு சமீபகாலமாக கவர்ஸ்டோரி பஞ்சம் ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது. இந்த மேட்டரை பயன்படுத்திக் கொள்ளலாம்.