எனக்கு அந்த கான்செப்ட் கொஞ்சம் ஆவலை அதிகமாகவே தூண்டியது. எங்கள் ஊர் ஈஸ்வரன் கோயிலில் வேம்பும், ஆலமரமும் பின்னி பிணைந்திருக்கும். அதில் ஒன்று ஒட்டுண்ணித் தாவரமா என்று கேட்டேன். அப்படியில்லை வேம்பும், ஆலும் தனித்தனியாகவே ஸ்டார்ச் தயாரித்துக் கொள்ளும், இடப்பற்றாக்குறையால் பின்னி பிணைந்து வளர்ந்திருக்கும் என்றார். அப்போ ஒட்டுண்ணித் தாவரம்னா எதுவென்று கேட்டபோது "கஸ்கூட்டா" (cuscuta) என்று ஒன்று இருக்கிறது என்றார். பெயரைக் கேட்டதுமே வித்தியாசமாக இருந்ததால் அச்செடியை நான் பார்க்க இயலுமா என்று கேட்டேன். கொண்டுவர முயற்சிக்கிறேன் என்றார் ஆசிரியர்.
நானே கஸ்கூட்டாவைப் பற்றி மறந்துவிட்டேன். சில மாதங்கள் கழித்து எங்கிருந்தோ ஒரு கற்றை கஸ்கூட்டாவை பிடித்து வந்தார் சைன்ஸ் மாஸ்டர். பசுமஞ்சள் நிறத்தில் நரம்பு போல இருந்தது. அதற்கு வேரோ, இலைகளோ கிடையாது. அச்செடியை என்னிடம் கொடுத்தவர் கொஞ்ச நேரம் பார்த்துட்டு அப்படியே வெய்யிலில் போட்டுடு. ஏதாவது செடி கொடி மீது போட்டுடாதே என்று எச்சரித்தார். அப்படிப் ஏதாவது செடி மீதோ, மரம் மீதோ படரவிட்டால் சிலகாலத்தில் அச்சேடியையோ, மரத்தையோ உறிஞ்சி கஸ்கூட்டா மட்டுமே உயிர்வாழும் என்றார்.கஸ்கூட்டா அப்படி என்னதான் செய்துவிடும் என்று பார்க்கலாம் என்று நினைத்து அந்த கற்றையை எடுத்துச் சென்று எங்கள் தெருவில் இருந்த ஒரு நொச்சிலி மரத்தின் மீது ஏறி போட்டு வைத்தேன். ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை சென்று கஸ்கூட்டா ஏதாவது மாயம் செய்கிறதா என்று பார்த்தேன். அன்று மாலை 7 மணியளவில் கடைசியாக பார்த்தபோது கொஞ்சம் வாடினாற்போல இருந்தது. மாஸ்டர் சொன்னதெல்லாம் ரீல் என்று நினனத்துக் கொண்டேன். கஸ்கூட்டாவை அப்போதைக்கு மறந்துவிட்டேன்.
ஒருவாரம் கழித்து யதேச்சையாக அந்த நொச்சிலி மரத்தை பார்த்தபோது கொஞ்சம் ஆச்சரியாமாக இருந்தது. நான் போட்ட ஒரு கற்றை கஸ்கூட்டா கொஞ்சம் வேகமாக வளர்ந்து புதர்போல காட்சியளித்தது. அதைப் பார்க்க செடி போல இல்லாமல் இடியாப்பச் சிக்கல்களாய் தன் நரம்புகளை வளர்த்து வித்தியாசமானதாக காட்சி அளித்தது. அதிலிருந்து ஒரு பெரிய நரம்பை இழுத்து குட்டியாக ஐந்து மோதிரங்கள் செய்து விரலில் அணிந்துகொண்டேன். கையில் சில சுற்று சுற்றி திருப்பதி கயிறு போல அணிந்துகொண்டேன். அந்த கோலத்திலேயே பள்ளிக்குச் செல்ல மற்ற மாணவர்கள் அது என்னவென்று வித்தியாசமாக கேட்டார்கள். "கஸ்கூட்டா.. நானே வளர்க்கிறேன்!" என்று பெருமையாக சொன்னேன்."எனக்கொண்ணு கொடு! எனக்கொண்ணு கொடு" என்று சில மாணவர்கள் நான் கஸ்கூட்டாவில் செய்த மோதிரத்தை கேட்டு வாங்கிக் கொண்டார்கள். செல்வம் மட்டும் நான் வளர்க்கும் கஸ்கூட்டாவை பார்க்க மாலை வருவதாக சொன்னான். அன்று மாலை வந்த செல்வன் நொச்சிலி மரத்தில் வளர்ந்திருந்த கஸ்கூட்டாவை பார்த்து ஆச்சரியப்பட்டான். அவனும் வளர்க்க விரும்புவதாக சொல்லி கொஞ்சம் கஸ்கூட்டாவை பறித்துக் கொண்டு "எப்படி வளர்ப்பது?" என்று என்னிடம் ஆலோசனையும் கேட்டுச் சென்றான்.
ஒருமாத காலத்தில் கஸ்கூட்டாவின் வளர்ச்சி அபாரவளர்ச்சியாக இருந்தது. ஜெயமோகனின் டார்த்தீனியம் போல அந்த கஸ்கூட்டா நொச்சிலி மரத்தை முழுவதுமாக ஆக்கிரமித்திருந்தது. நொச்சிலி இலைகளே வெளியே தெரியவில்லை அல்லது அம்மரத்தில் இருந்த இலைகளையெல்லாம் கஸ்கூட்டா சாப்பிட்டுவிட்டிருந்தது. மரம் என்பதற்கு அடையாளமாக ஒரு கட்டையை நட்டுவைத்தது போல அந்த நொச்சிலி மரம் குற்றுயிரும், குலையுயிருமாக கிடந்தது. எங்கள் தெருவை கடப்பவர்கள் எல்லாம் கஸ்கூட்டாவை ஆச்சரியமாக பார்ப்பார்கள். அது என்ன செடியென்று கேட்பார்கள். கஸ்கூட்டா என்று பெருமையாக பதில் சொன்னால் ஒன்றும் புரியாமல் போய்விடுவார்கள். சில பேர் அது குரோட்டன்ஸில் ஒரு வகை என்று நினைத்து சிலவற்றை பறித்துச் சென்று அவர்கள் வீடுகளிலும் வளர்க்க ஆரம்பித்தார்கள்.என்னிடம் கஸ்கூட்டாவை கடன் வாங்கிப் போன செல்வமும் அவர்கள் வீட்டருகில் இருந்த பீப்பி மரத்தில் (அதை சித்தகத்தி மரம் என்று ஒருவர் கூறுவார்) கஸ்கூட்டா பண்ணையை வளர்க்க ஆரம்பித்திருந்தான். கஸ்கூட்டா வளரவேண்டும் என்ற ஆர்வத்தில் அவன் தண்ணியெல்லாம் ஊற்றினானாம். ஒன்றுமேயில்லாமல் அசுரத்தனமாக வளரும் கஸ்கூட்டா செல்வத்தின் பறிவான கவனிப்பில் நன்றாகவே வளர்ந்தது. ஒரு மாதகாலத்திலேயே பீப்பி மரத்திலிருந்த பீப்பி பூக்கள் முற்றிலுமாக உதிர்ந்துவிட்டது என்னை சோகத்தில் ஆழ்த்தியது. பீப்பி பூவின் காம்பினை நம் இதழ்களில் வைத்து ஊதினால் நாதஸ்வரம் போன்ற ஓசையை எழுப்பும். அந்த பூவுக்கு நல்ல மணமும் உண்டு.
இவ்வாறாக எங்கள் பகுதியில் பல வீடுகளில், பல மரங்களில் கஸ்கூட்டா தன் அபாயமுகத்தை காட்டாமல் பாசமும், பரிவுமாக வளர்க்கப்பட்டது. நொச்சிலி மரத்தில் வளர்ந்த கஸ்கூட்டா முழுவதுமாக அம்மரத்தை சாகடித்து வளர இடமில்லாமல் பக்கத்திலிருந்த புதர்களையும், புல்வெளிகளையும் கூட தன் கோரப்பசிக்கு இரையாக்கிக் கொண்டது. வீடுகளில் கஸ்கூட்டா வளர்த்தவர்களெல்லாம் தாங்கள் ஆசையாக வளர்த்த மாங்கன்று, செம்பருத்திச் செடிகளை இழக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார்கள்.
ஆகாயத் தாமரையின் ஒரு செடியை தெளிவான நீர் இருக்கும் ஒரு நீர்நிலையில் விட்டால் வெகுவிரைவில் அந்த நீர்நிலை முழுவதையும் தன் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்து விடும். அதுபோலவே கடற்பாரை (சில பேர் காட்டாமணக்கு என்று இதை சொல்கிறார்கள்) என்று சொல்லக்கூடிய ஒரு செடிவகையும். அதுபோல கிட்டத்தட்ட ஒரே ஆண்டில் எங்கள் பகுதி முழுவதையும் கஸ்கூட்டா தன் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்து தன்னாட்சியை நிறுவியது. கொஞ்சம் லேட்டாக முழித்துக் கொண்ட ஊராட்சி நிர்வாகம் அதன்பின்னர் கஸ்கூட்டா இருந்த இடங்களையெல்லாம் கண்டறிந்து அவற்றை எரித்து அழித்தது. அதன்மூலமாக எங்கள் பகுதியில் பசுமை காக்கப்பட்டது. கஸ்கூட்டாவை பார்த்து கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது.நீங்கள் யாராவது, எங்கேயாவது கஸ்கூட்டாவை பார்த்திருக்கிறீர்களா? இப்போதும் அது எங்கேயாவது இருக்கிறதா?
கஸ்கூட்டா குறித்த விக்கிப்பீடியா சுட்டியை இங்கே சுட்டிப் பாருங்கள்!



