2 ஏப்ரல், 2010

இரு சோறு பதம்!

செங்குத்தாக 90 டிகிரி கோணத்தில் சூரியன் மண்டையைப் பிளந்துக் கொண்டிருந்தது. சைதாப்பேட்டை பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட்டுக் கொண்டிருந்தபோது பசி வயிற்றைக் கிள்ளியது. அருகிலிருந்த சிறு சந்தில் ஏதாவது ஓட்டல் இருக்கிறதா என்று தேடிக்கொண்டு வண்டியை விட்டோம். பூக்காரத் தெரு.

‘மனித நேயம் உணவு விடுதி’ என்ற பெயரே மனதில் பச்சக்கென்று பசை போட்டு ஒட்டிக்கொள்ள, யோசிக்காமல் உள்ளே நுழைந்தோம். சாப்பாடு வெறும் பதினைந்து ரூபாய். சாம்பார் சாதம், தக்காளி சாதம் என்று கலவை சாப்பாடு வெறும் ஆறு ரூபாய் மட்டுமே. காலை டிஃபனும் இதே விலைதான். ஆச்சரியமாக அண்ணாந்துப் பார்த்தோம்.

சுவரில் படத்தில் காட்டப்பட்டிருக்கும் அறிவிப்புப் பலகை ஒட்டப்பட்டிருந்தது. விலையேற்றத்தால் ஏற்றிய விலையை, விலை சற்று குறைந்ததால் குறைத்திருக்கிறோம் என்று எழுதியிருக்கிறார்கள். இதென்ன கலாட்டாவென்று ஓட்டலின் முதலாளியைத் தேடிப் போய்ப் பார்த்தோம்.

கிருஷ்ணமூர்த்தி, வயது 60. இப்பகுதியிலேயே பல வருடங்களாக பிரிண்டிங் பிரஸ் வைத்து நடத்திக் கொண்டிருந்தார். மூன்று ஆண்டுகளாக இந்த உணவு விடுதியை நடத்தி வருகிறார். கேமிராவை கையில் எடுத்ததுமே, “போட்டோவெல்லாம் வேண்டாமே தம்பி!” என்று கூச்சமாக மறுக்கிறார்.

சைதை தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ சா.துரைசாமி மனிதநேய அறக்கட்டளை என்ற அமைப்பை நிறுவி, நிறைய சேவைகள் செய்துவருகிறார். அவரது சேவைகளால் ஈர்க்கப்பட்ட கிருஷ்ணமூர்த்தியும் ‘மனித நேயம்’ என்ற பெயரையே தனது உணவகத்துக்கும் சூட்டியிருக்கிறார்.

“இந்த உணவு விடுதியை ஆரம்பிச்ச நோக்கமே அஞ்சு ரூபாய்க்கு ஒரு ஆளோட ஒரு வேளை பசியை ஆத்தணுங்கிறதுக்காகதான். ஆனா உணவு தயாரிக்க தேவைப்படுற பொருட்களோட விலைவாசி ஆகாசத்துக்கு போயிடிச்சி. அஞ்சு ரூபாய்க்கு கொடுக்க முடியலையேங்கிறது எனக்கு இப்பவும் கஷ்டமாதான் இருக்கு.

ரெண்டு மூணு மாசத்துக்கு முன்னாடி விலையேற்றத்தை சுத்தமா சமாளிக்க முடியலை. அஞ்சு ரூபாய்க்கு கொடுத்திட்டிருந்த டிஃபனையும், கலவை சாப்பாட்டையும் கனத்த மனசோடு, ரெண்டு ரூபாய் விலை ஏத்தி கொடுக்க வேண்டியதாயிடிச்சி. இப்போ கொஞ்சம் விலைவாசி குறைஞ்சிருக்கதாலே ஒரு ரூபாய் குறைச்சி கொடுக்கறோம்”

“நெஜமாவே விலைவாசி குறைஞ்சி இருக்குன்னு நினைக்கறீங்களா?”

“ஆமாம் தம்பி. முன்னாடி வெங்காயம் ஒரு மூட்டை ஆயிரத்தி இருநூறு ரூபாய்க்கு எடுத்தோம். இப்போ எழுநூறு ரூபாய்க்கு கிடைக்குதில்லே? விலைவாசி ஏறிடிச்சின்னு காரணம் காட்டி விலையை ஏத்தினோமுன்னா, குறையுறப்பவும் விலையை குறைக்கிறதுதானே நியாயம்?”

கிருஷ்ணமூர்த்தியின் நியாயம் நியாயமானதுதான் இல்லையா?



மறுநாள், சென்னை எல்டாம்ஸ் சாலை வழியாக சென்றுக் கொண்டிருந்தோம். அதே வேளை, அதே பசி.

பார்வதி ஹால் அருகே அந்த தெருவோர சாப்பாட்டுக் கடையை கண்டோம். மரத்தால் ஆன பிரத்யேக ஸ்டேண்டு ஸ்கூட்டர் மேல் வைக்கப்பட்டிருக்கிறது. டிஃபன் கேரியர்களும், பிளாஸ்டிக் தட்டுகளும், பாலித்தீன் பேப்பர்களும் அடுக்கப்பட்டிருக்கிறது.

அப்பகுதி கட்டடங்களில் கூலி வேலை செய்பவர்கள், வாட்ச்மேன்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் என்று பலருக்கும் இதுதான் ஃபைவ் ஸ்டார் ஓட்டல். மீன்குழம்பு + ஒரு குழம்பு மீன், சாம்பார், ரசம், பொறியல், ஊறுகாய் என்று பதினைந்தே ரூபாய்க்கு தரமான வீட்டு சாப்பாடு. வேகவைத்து, காரம் போட்டு பொறிக்கப்பட்ட முட்டை மட்டும் எக்ஸ்ட்ரா காஸ்ட்.

இந்த மொபைல் ஓட்டலை நடத்தும் ஜி.ஏ.ஜானுக்கு வயது 61. மாநகர காவல்துறையில் காவலராக வேலைபார்த்துவிட்டு ஓய்வு பெற்றவர். அரசு அலுவலக குமாஸ்தா போன்ற சாமானியத் தோற்றம். இஸ்திரி செய்யப்பட்ட சட்டை, பேண்ட்.

துணைக்கு ஆளின்றி, அவரே சுறுசுறுப்பாக சப்ளை செய்கிறார். கனிவான உபசரிப்பு. “அண்ணே அஞ்சு ரூவா கொறையுது!” என்றால், “பரவாயில்லை தம்பி. நாளைக்கு கொடு!” என்கிறார். யாசகம் கேட்கும் பெண் ஒருத்தி குழந்தையோடு வர, இலவசமாக ஒரு சாப்பாடு பார்சல்.

இரண்டரை மணியளவில் பிசினஸை முடித்துவிட்டு கொஞ்சம் ஓய்வுக்காக ஒதுங்கியவரிடம் பேச்சு கொடுத்தோம். கிருஷ்ணமூர்த்தியைப் போலவே ஜானும் தன்னை புகைப்படம் எடுக்க வேண்டாமென்று கேட்டுக் கொள்கிறார்.

“ரிடையர் ஆனவங்க சும்மா வீட்டில் உட்காராம, இதுமாதிரி சின்ன சின்ன வேலை செஞ்சிக்கிட்டிருந்தா உடம்பும் நல்லாருக்கும், மனசும் நல்லாருக்கும், அன்றாட செலவுகளுக்கும் தாராளமா பணம் கிடைக்கும்.

நான் செக்யூரிட்டி ஏஜென்ஸி வெச்சி நடத்துறேன். எங்கிட்டேயே ஒரு பத்து பேர் வேலை பார்க்குறாங்க. அவங்களுக்கெல்லாம் சாப்பாடு நானே தயார் பண்ணி கொண்டு போய் கொடுப்பேன். ஒருநாள் இதே மாதிரி நடைபாதை கடை ஒன்றில் கடைக்காரனுக்கும், கஸ்டமருக்கும் சின்னப் பிரச்சினை. போலிஸ்காரனா இருந்தவனாச்சே? என்ன பிரச்சினைன்னு போயி கேட்டேன்.

கஸ்டமர் ஒரு வாட்ச்மேன். சாப்பிட்டுட்டு பார்த்தா அவர் பாக்கெட்டுலே ஒரு ரூபா குறையுது. கடைக்காரன் கிட்டே நாளைக்கு தர்றேன்னு சொல்லியிருக்கான். உடனே வெச்சாதான் ஆச்சின்னு கடைக்காரன் சண்டை போட்டுக்கிட்டிருக்கான். ‘தம்பி. சாப்பிட்டுட்டு போறவங்க வயிறும், மனசும் நிறைஞ்சிப் போகணும். நாளைக்குதான் அந்த ஒரு ரூபாயை வாங்கிக்குங்களேன்’ன்னு நான் அட்வைஸ் பண்ணேன். உடனே கடைக்காரன், ‘அவன் கொடுக்காட்டி நீ கொடு’ன்னு கேட்டான். ரெண்டு ரூபாயை கொடுத்துட்டு வந்தேன்.

அப்போதான் என் மனசுக்குள்ளே தோணுச்சி. போயும், போயும் வயித்துப் பசி ஆத்துற சாப்பாட்டை கூட தொழிலா பார்க்குறானுங்களேன்னு. ஏழை, எளியவர்களோட பசியை ஆத்தணும். எனக்கும் பொழுதுபோகணும். நியாயமான விலைக்கு நல்ல சாப்பாட்டை கொடுக்கிறேன். இங்கே சாப்பிடறவங்க என்னை வாழ்த்துறாங்க. நல்ல மரியாதை கொடுக்குறாங்க. இதுபோதும். எங்கிட்டே செக்யூரிட்டியா வேலை பார்க்குறங்கவங்களுக்கு எப்படியும் சமைக்கணும். அவங்களுக்கு தயார் செய்யுறதோட சேர்த்து முப்பது பேருக்கு எக்ஸ்ட்ராவா தயார் பண்ணுறேன் அவ்வளவுதான்.

வாட்ச்மேன் வேலை பார்க்குற ஒருத்தரோட ஒரு நாள் சராசரி வருமானம் 70 ரூபாய். இதில் நாற்பது ரூபாயை மதிய சாப்பாட்டுக்கு செலவழிச்சா, அத்தொழிலாளியோட வாழ்க்கைத்தரம் எப்படி இருக்கும்? யோசிச்சுப் பாருங்க. தோராயமா ஒரு நாளைக்கு இந்த சேவையாலே எனக்கு இருநூறு ரூபாய் லாபம் கிடைக்குது. அதோடு சேர்த்து மனநிம்மதியும். இது போதாதா?”

போலிஸ் மொழியிலேயே தனது அடுத்த தலைமுறையினருக்கு அறிவுரையும் சொல்கிறார். “வாழ்க்கை ஒரு நீச்சலுங்க. நீந்தத் தெரியாதவன் குற்றங்களில் ஈடுபட்டு ஜெயிலுக்கு போறான். எனக்கு நீச்சல் தெரியுது. நல்லா நீந்துறேன்”

சேவையாக செய்யப்பட வேண்டிய உணவுத்தொழில் வணிகமயமாகிவிட்ட இச்சூழலில் சாமானியர்களான கிருஷ்ணமூர்த்தி, ஜான் போன்றவர்கள் நமக்கு நம்பிக்கை தருகிறார்கள்.

(நன்றி : புதிய தலைமுறை)

18 கருத்துகள்:

  1. இந்த மாதிரி செய்திகளை படிக்கும் போதுதான் வாழ்க்கை மேல இன்னும் நம்பிக்கை வருது !!!
    நியூஸ் தந்ததிற்க்கு நன்றி தலைவா !!!

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா12:57 PM, ஏப்ரல் 02, 2010

    நல்ல தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா1:11 PM, ஏப்ரல் 02, 2010

    காலம் மனித நேயத்தை முற்றிலுமாக மனிதர்களிடம் இருந்து பிடுங்கி, பணத்தின் பின்னே ஒவ்வொருவரையும் ஓட வைத்தாலும் , சிலர் அந்த ஓட்டத்தில் இருந்து விலகி அன்பிற்கும், நம்பிகைக்குமான தாகத்தை தணிக்கிறார்கள். அவர்களை அடையாளம் காட்டிவரும் உங்களுக்கு எனது நன்றிகள். வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. இவர்கள் மனித நேயம்.

    'ஒரு பானை சோற்றுக்கு இரு சோறு பதம்'

    -தோழன் மபா

    பதிலளிநீக்கு
  5. Hats off! nice to know that we are living among such good hearted ppl.
    So inspiring!

    பதிலளிநீக்கு
  6. எல்டாம்ஸ் ரோடு ஜான் பத்தி ஏற்கனவே எழுதிட்டீங்கன்னு நெனைக்கிறேன், பூக்காரத்தெரு மனிதநேயம் உணவு விடுதி மேட்டர் இப்பத்தான் கேள்விப் படறேன், அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    பதிலளிநீக்கு
  7. புண்ணியம் செய்யும் இந்த பெருமக்கள் பல்லாண்டு வாழட்டும்.

    பதிலளிநீக்கு
  8. பெயரில்லா2:17 PM, ஏப்ரல் 03, 2010

    Sir,
    I have been wondering when I go and eat in the Shastri Bhavan Government run canteen where the mid day meals for the Central Government Employees is mere INR15/-. The Minimum salary that a central Government employee getting is INR 18000/- I am NOT AGAINST giving subsidized cooked food to central government employees. But the farmer who is producing food grains is forced to take mid day meal at a cost exceeding INR 15/-. In Palayamkottai there are messes which give decent mid day food for INR 18/- to all. When this is possible, established restaurant are selling meals at a cost INR 40/-
    Ruling Congress must come forward and consider giving cooked food at nominal coast in all villages and towns. This is 'FOOD SECURITY'. State Government run mid day meals centres, dedicated persons like the man you have seen at Saidai and elsewhere who are running eateries, temples, churches and mosques. can be consider as outlets for giving cooked food at subsidised cost.
    Please note the food is not of FREE OF COST, BUT at a nominal, affordable subsidised rate)
    This will give assurance for the families in the villages [towns, and metros too]at least one time healthy food. This is food security.
    Yuva krishna must popularise it. One the other day when I was visiting ASANDOSS at Taramani I was told that subsidised meals at INR 30/- is given to IT people who are getting whiff of money as their monthly pay. Then
    WHY not THE POOR FARMER

    பதிலளிநீக்கு
  9. பகிர்வுக்கு நன்றி. மனிதம் வளர்க்கும் இதுபோன்ற செய்திகளை அதிகம் வெளியிடுங்கள்.

    பதிலளிநீக்கு
  10. நன்றி யுவா.

    with your permission.. மனித நேய உணவு விடுதி புகைப்படத்தை முகப்புத்தகத்தில் இடுகிறேன்.

    பதிலளிநீக்கு
  11. 2007 இல் நான் திருவல்லிகேணியில் இருந்த போது, நான் தங்கியிருக்கும் மேன்ஷனிற்கு இதே போல் ஒருவர் டிபன் கொண்டு வந்து தருவார். பூரி, இட்லி, பொங்கல் போன்ற டிபன் ஐட்டங்களை வெறும் ஐந்து ரூபாய்க்கு தருவார். 10 ரூபாய்க்கு வாங்கினால் வயிறு நிறைந்து விடும். வேலை கிடைக்காமல் சுற்றி கொண்டிருந்த எனக்கு அதுவே வரப்பிரசதமாக இருந்தது.

    இது போன்ற ஆபத்பாந்தவன்கள் ஆங்காங்கு இருக்க போய் தான் பல பேரின் வயிறு நிறைகிறது... நல்ல பதிவு லக்கி...

    பதிலளிநீக்கு
  12. மிக நல்ல பதிவு ... இத்தகையவர்கள் நிச்சயம் ஊக்குவிக்கப் படவேண்டும் .... தலைப்பும் அருமை ...

    பதிலளிநீக்கு
  13. நல்ல, நன்மை பயக்கும் கட்டுரை

    நீங்கள் ஒரு மனித நேயம் மிக்கவர் .

    பதிலளிநீக்கு
  14. பெயரில்லா11:43 AM, ஏப்ரல் 13, 2010

    very great. Long Live People like this.

    பதிலளிநீக்கு
  15. நியூஸ் தந்ததிற்க்கு நன்றி

    பதிலளிநீக்கு