29 ஏப்ரல், 2010

டீச்சரம்மா!

சிறுவயதில் வீட்டில் டீச்சர் விளையாட்டு விளையாடியிருப்பீர்கள். பசங்க எப்பவுமே பசங்கதான். முதலில் பிறந்துவிட்ட காரணத்தால் அக்காக்கள்தான் இந்த விளையாட்டில் எப்பவுமே டீச்சர். பத்து, பண்ணிரெண்டு வயசு அக்காக்கள் கையில் குச்சியோடு பாடம் நடத்த, மருண்ட மான்களை போல முழித்துக் கொண்டிருந்த அனுபவம் அனைவருக்குமே உண்டு.

பீகாரின் உள்ளடங்கிய கிராமமான குசும்பாராவில், ஒரு மாமரத்துக்கு அடியில் இதுபோன்ற காட்சி இப்போது தினமும் நடந்து வருகிறது. நான்கு முதல் பத்து வயதுக்குட்பட்ட ஐம்பது குழந்தைகள் மரத்தடியில் குழுமியிருக்க பண்ணிரெண்டு வயது டீச்சரம்மா பாரதிகுமாரி வகுப்பு எடுத்துக் கொண்டிருக்கிறார்.

நம் டீச்சர் விளையாட்டுக்கும், பாரதியின் வகுப்புக்கும் ஒரே ஒரு வித்தியாசம் உண்டு. இவர் நிஜமாகவே வகுப்பெடுக்கிறார். விளையாட்டல்ல. இவரிடம் கல்வி கற்ற குழந்தைகள் இப்போது ஏ, பி, சி எழுதுகிறார்கள். இந்தியில் சரளமாக வாக்கியங்களை எழுதுகிறார்கள். பாரதியின் வகுப்பு மட்டும் இல்லையென்றால், இந்தியாவின் கல்வி அறிவற்றவர்களின் பட்டியலில் இந்த ஐம்பது குழந்தைகளும் எதிர்காலத்தில் இடம்பெறுவார்கள்.

யார் இந்த பாரதி?

பண்ணிரெண்டு வருடங்களுக்கு முன்பாக ஒரு ரயில்நிலைய வாசலில் அனாதரவாக விடப்பட்டிருந்த ஒரு பெண் குழந்தையை எடுத்து வளர்க்க ஆரம்பித்தார் விவசாயக்கூலித் தொழிலாளியான ராம்பதி. இவரது கிராமமான குசும்பரா பீகாரிலிருந்து 87 மைல் தொலைவில் இருக்கிறது. பெரும்பாலான குடும்பங்கள் தலித் குடும்பங்கள்.

மாவோயிஸ்ட்டுகள் செல்வாக்கு பெற்ற பகுதி இது. கடந்த நான்கு மாதங்களில் மட்டுமே இங்கே முப்பதுக்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் இதர அரசு கட்டடங்கள் அரசுக்கும், போராளிகளுக்கும் இடையே நடைபெறும் மோதலில் சிதைக்கப்பட்டிருக்கின்றன என்றால் பாருங்களேன்.

பள்ளிக்கு கட்டிடம் இல்லை. பள்ளியை நடத்த அலுவலர்களுக்கும், பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப பெற்றோரும் அச்சப்படும் கலவர சூழல். ராம்பதியின் வளர்ப்பு மகள் பாரதிகுமாரி இப்படியான ஒரு சூழலில்தான் டீச்சர் ஆகிறார்.

பால்ய விவாகம் அங்கே சகஜம். எனவே பெண்கள் படிக்க அனுமதிக்கப்படுவதில்லை. ராம்பதி கொஞ்சம் முற்போக்கு எண்ணம் கொண்டவர். தன்னுடைய மகள் படித்து டீச்சர் வேலைக்கு போகவேண்டும் என்ற ஆவல் கொண்டவர். எனவே மகள் எவ்வளவு படிக்க வேண்டும் என்று நினைக்கிறாளோ அவ்வளவு படிக்கட்டும் என்று பெருந்தன்மை காட்டுகிறார். பாரதிகுமாரியால் ஊருக்கே கல்வி கிடைக்கிறது என்பதில் அவருக்கு பெருமையும் கூட.

குசும்பாராவில் இருந்து இரண்டு மைல் தொலைவில் இருக்கும் அகோதிகோலா என்ற ஊர்ப்பள்ளியில் பாரதி படிக்கிறார். பத்து மணியில் இருந்து மூன்று மணி வரை பள்ளி. பள்ளியில் தான் கற்றதை மற்றவருக்கும் சொல்லிக் கொடுப்பதை மனமுவந்து விரும்பியே செய்கிறார். பாரதி என்ற பெயருக்கான குணமே இப்படித்தான் இருக்கும் போலிருக்கிறது.

எதிர்காலத்தில் பாரதிகுமாரி என்னவாக விரும்புகிறார், வேறென்ன? டீச்சர் ஆகத்தான் விரும்புகிறாராம்.

மாவோயிஸ்டுகள் பூமியிலிருந்து ஒரு மாணவியின் குரல் கல்விக்காக ஓங்கி ஒலிப்பது பொருத்தமானதுதான் இல்லையா?

5 கருத்துகள்:

  1. //////எதிர்காலத்தில் பாரதிகுமாரி என்னவாக விரும்புகிறார், வேறென்ன? டீச்சர் ஆகத்தான் விரும்புகிறாராம்.//////////

    பாரதிகுமாரி அவர்களின் எண்ணம் வெற்றியடைய என் வாழ்த்துக்கள் .

    பதிலளிநீக்கு
  2. மனிதர்களின் போரட்ட குணத்திற்கு இவர் சான்று...

    பதிலளிநீக்கு
  3. Lucky,paarattapadai vendiya pen.if a school can function at 2 mile away from her village but no school at her place means that's not due to maoist , it is the failure of the govt to provide education at all places .kusumbara vila education spoil panna mudinja maoist ku akothi kola pogamudiyatha? Naduvila kaipull kodu potu irukka?

    பதிலளிநீக்கு
  4. நல்ல தகவல்.பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு