8 ஏப்ரல், 2010

கொடுக்குறதை கொடுத்தாதான்...


ஒரு ஊர்லே ஒரு மருமவ இருந்தாளாம். மாமியாக்காரி எதை சொன்னாலும் புரிஞ்சுக்காம வேற ஏதாவது செய்வாளாம். அது மாதிரி நேரத்துலே மாமியாக்காரி தொடப்பத்தை எடுத்து நல்லா நாலு வாங்குவாளாம். தொடப்ப அடி பட்டதுக்கு அப்புறமா தான் மாமியாக்காரி சொன்னதை கரீக்ட்டா செய்வாளாம் மருமவ.

”தெனமும் சாயங்காலம் விளக்கு வெக்குறதுக்கு முன்னாடி போய் தண்ணி புடிச்சிக்கிட்டு வாடி”ன்னு மாமியாக்காரி சொன்னா மருமவ வெளக்கு வெச்சதுக்கப்புறமா தான் கொடத்தை கையிலே எடுப்பாளாம். அதனால தெனமும் வெளக்கு வெக்குறதுக்கு முன்னாடி மாமியாக்காரி தொடப்பத்தை எடுத்து நல்லா விளாசி விட்டுருவாளாம். தொடப்பக்கட்ட அடி வாங்குனதுக்கு அப்புறமா தான் தண்ணி புடிக்க மருமவ கொடத்தை எடுக்குறது வழக்கம்.

ஒரு முறை மருமவளோட அம்மா வீட்டுலேர்ந்து ஏதோ சீர் செய்ய வந்திருந்தாங்களாம். அவங்க வந்தது சாயங்கால நேரம். மாமியாக்காரி கிட்டே சீர்வரிசையை கொடுத்து “எம்பொண்ணு நல்லா நடந்துக்கறாளா”ன்னு கேட்டாங்களாம். மருமவளப் பத்தி அவங்க வீட்டுக்கே கம்ப்ளையண்ட் பண்ணக்கூடாதுன்னு “ரொம்ப நல்லா நடந்துக்கறா என் மருமவ”ன்னு மாமியாக்காரி பெருந்தன்மையா சொல்லியிருக்கா. அவங்க வீட்டு மனுஷா முன்னாடி “போம்மா, வாம்மா”ன்னு மருமவளை கவுரதையாவும் மாமியாக்காரி நடத்தியிருக்கா.

விளக்கு வெக்குற நேரம் வந்துருக்கு.

”மருமவளே வெளக்கு வெக்கிற நேரம் வந்தாச்சு. போயி தண்ணி புடிச்சாந்துரும்மா”ன்னு மாமியாக்காரி தன்மையா சொல்லியிருக்கா.

கொடத்தை இடுப்புலே வெச்சிக்கிட்டு வந்த மருமவ, மாமியாக்காரி முன்னாடியும், தன் வீட்டுக்காரங்க முன்னாடியும் முறைச்சிக்கிட்டு நின்னுக்கிட்டிருந்தாளாம்.

மருமவளோட அம்மா, “ஏண்டி அத்தை தான் சொல்றாங்க இல்லை. போயி தண்ணி புடிச்சிக்கிட்டு வாடி”ன்னு சொல்லியிருக்காங்க.

ஒடனே மருமவ, “அத்தை! நீங்க கொடுக்குறதை கொடுத்தா தான் நான் தண்ணி மொண்டாருவேன்”ன்னு சொன்னாளாம்.

மாமியாக்காரிக்கு தர்மசங்கடமாப் போச்சி. “சீக்கிரமா போயி தண்ணி மொண்டாந்துரும்மா. அம்மா, அப்பாவெல்லாம் வந்துருக்காங்க இல்லே”ன்னு பாசமா சொன்னாளாம்.

மறுபடியும் மருமவ, “கொடுக்குறதை கொடுங்க அத்தே. தண்ணி மொண்டாறேன்”னு அடமா சொன்னாளாம்.

உடனே மருமவளோட அம்மா, “ஏன் சம்பந்தி, என் பொண்ணுக்கு ஏதோ பாசமா கொடுப்பீங்களாமே? அதை கொடுங்க, அவ தண்ணி மொண்டாந்துருவா”ன்னு வெவரம் புரியாம வெள்ளந்தியா சொல்லியிருக்காங்க.

நெலைமை கட்டுமீறி போவறதை பார்த்த மாமியாக்காரி வேற வழியில்லாம தொடப்பக்கட்டைய எடுத்து மருமவள நாலு வாங்கு வாங்கினாளாம். அதுக்கப்புறமா தான் மருமவ தண்ணி மொண்டார போனாளாம். மருமவ வீட்டிலேர்ந்து வந்தவங்க வாயடைச்சிப் போனாங்களாம்.

கதை சொல்லும் நீதி : கொடுக்குறதை கொடுத்தா தான் ஆலமரத்துப் பிசாசு அடங்குமாம்.

7 ஏப்ரல், 2010

கஸ்கூட்டா!

அப்போது ஆறாம் வகுப்பு படித்துகொண்டிருந்ததாக நினைவு. அறிவியல் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர் ஒட்டுண்ணித் தாவரங்களை பற்றி சொல்லிக் கொண்டிருந்தார். ஒட்டுண்ணித் தாவரங்கள் ஸ்டார்ச் (ஸ்காட்ச் அல்ல) தயாரிக்க சோம்பேறித்தனம் பட்டுக்கொண்டு மற்றொரு தாவரங்கள் தயாரிக்கும் ஸ்டார்ச்சினை உறிஞ்சி உயிர் வாழும் என்றார்.

எனக்கு அந்த கான்செப்ட் கொஞ்சம் ஆவலை அதிகமாகவே தூண்டியது. எங்கள் ஊர் ஈஸ்வரன் கோயிலில் வேம்பும், ஆலமரமும் பின்னி பிணைந்திருக்கும். அதில் ஒன்று ஒட்டுண்ணித் தாவரமா என்று கேட்டேன். அப்படியில்லை வேம்பும், ஆலும் தனித்தனியாகவே ஸ்டார்ச் தயாரித்துக் கொள்ளும், இடப்பற்றாக்குறையால் பின்னி பிணைந்து வளர்ந்திருக்கும் என்றார். அப்போ ஒட்டுண்ணித் தாவரம்னா எதுவென்று கேட்டபோது "கஸ்கூட்டா" (cuscuta) என்று ஒன்று இருக்கிறது என்றார். பெயரைக் கேட்டதுமே வித்தியாசமாக இருந்ததால் அச்செடியை நான் பார்க்க இயலுமா என்று கேட்டேன். கொண்டுவர முயற்சிக்கிறேன் என்றார் ஆசிரியர்.

நானே கஸ்கூட்டாவைப் பற்றி மறந்துவிட்டேன். சில மாதங்கள் கழித்து எங்கிருந்தோ ஒரு கற்றை கஸ்கூட்டாவை பிடித்து வந்தார் சைன்ஸ் மாஸ்டர். பசுமஞ்சள் நிறத்தில் நரம்பு போல இருந்தது. அதற்கு வேரோ, இலைகளோ கிடையாது. அச்செடியை என்னிடம் கொடுத்தவர் கொஞ்ச நேரம் பார்த்துட்டு அப்படியே வெய்யிலில் போட்டுடு. ஏதாவது செடி கொடி மீது போட்டுடாதே என்று எச்சரித்தார். அப்படிப் ஏதாவது செடி மீதோ, மரம் மீதோ படரவிட்டால் சிலகாலத்தில் அச்சேடியையோ, மரத்தையோ உறிஞ்சி கஸ்கூட்டா மட்டுமே உயிர்வாழும் என்றார்.

கஸ்கூட்டா அப்படி என்னதான் செய்துவிடும் என்று பார்க்கலாம் என்று நினைத்து அந்த கற்றையை எடுத்துச் சென்று எங்கள் தெருவில் இருந்த ஒரு நொச்சிலி மரத்தின் மீது ஏறி போட்டு வைத்தேன். ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை சென்று கஸ்கூட்டா ஏதாவது மாயம் செய்கிறதா என்று பார்த்தேன். அன்று மாலை 7 மணியளவில் கடைசியாக பார்த்தபோது கொஞ்சம் வாடினாற்போல இருந்தது. மாஸ்டர் சொன்னதெல்லாம் ரீல் என்று நினனத்துக் கொண்டேன். கஸ்கூட்டாவை அப்போதைக்கு மறந்துவிட்டேன்.

ஒருவாரம் கழித்து யதேச்சையாக அந்த நொச்சிலி மரத்தை பார்த்தபோது கொஞ்சம் ஆச்சரியாமாக இருந்தது. நான் போட்ட ஒரு கற்றை கஸ்கூட்டா கொஞ்சம் வேகமாக வளர்ந்து புதர்போல காட்சியளித்தது. அதைப் பார்க்க செடி போல இல்லாமல் இடியாப்பச் சிக்கல்களாய் தன் நரம்புகளை வளர்த்து வித்தியாசமானதாக காட்சி அளித்தது. அதிலிருந்து ஒரு பெரிய நரம்பை இழுத்து குட்டியாக ஐந்து மோதிரங்கள் செய்து விரலில் அணிந்துகொண்டேன். கையில் சில சுற்று சுற்றி திருப்பதி கயிறு போல அணிந்துகொண்டேன். அந்த கோலத்திலேயே பள்ளிக்குச் செல்ல மற்ற மாணவர்கள் அது என்னவென்று வித்தியாசமாக கேட்டார்கள். "கஸ்கூட்டா.. நானே வளர்க்கிறேன்!" என்று பெருமையாக சொன்னேன்.

"எனக்கொண்ணு கொடு! எனக்கொண்ணு கொடு" என்று சில மாணவர்கள் நான் கஸ்கூட்டாவில் செய்த மோதிரத்தை கேட்டு வாங்கிக் கொண்டார்கள். செல்வம் மட்டும் நான் வளர்க்கும் கஸ்கூட்டாவை பார்க்க மாலை வருவதாக சொன்னான். அன்று மாலை வந்த செல்வன் நொச்சிலி மரத்தில் வளர்ந்திருந்த கஸ்கூட்டாவை பார்த்து ஆச்சரியப்பட்டான். அவனும் வளர்க்க விரும்புவதாக சொல்லி கொஞ்சம் கஸ்கூட்டாவை பறித்துக் கொண்டு "எப்படி வளர்ப்பது?" என்று என்னிடம் ஆலோசனையும் கேட்டுச் சென்றான்.

ஒருமாத காலத்தில் கஸ்கூட்டாவின் வளர்ச்சி அபாரவளர்ச்சியாக இருந்தது. ஜெயமோகனின் டார்த்தீனியம் போல அந்த கஸ்கூட்டா நொச்சிலி மரத்தை முழுவதுமாக ஆக்கிரமித்திருந்தது. நொச்சிலி இலைகளே வெளியே தெரியவில்லை அல்லது அம்மரத்தில் இருந்த இலைகளையெல்லாம் கஸ்கூட்டா சாப்பிட்டுவிட்டிருந்தது. மரம் என்பதற்கு அடையாளமாக ஒரு கட்டையை நட்டுவைத்தது போல அந்த நொச்சிலி மரம் குற்றுயிரும், குலையுயிருமாக கிடந்தது. எங்கள் தெருவை கடப்பவர்கள் எல்லாம் கஸ்கூட்டாவை ஆச்சரியமாக பார்ப்பார்கள். அது என்ன செடியென்று கேட்பார்கள். கஸ்கூட்டா என்று பெருமையாக பதில் சொன்னால் ஒன்றும் புரியாமல் போய்விடுவார்கள். சில பேர் அது குரோட்டன்ஸில் ஒரு வகை என்று நினைத்து சிலவற்றை பறித்துச் சென்று அவர்கள் வீடுகளிலும் வளர்க்க ஆரம்பித்தார்கள்.

என்னிடம் கஸ்கூட்டாவை கடன் வாங்கிப் போன செல்வமும் அவர்கள் வீட்டருகில் இருந்த பீப்பி மரத்தில் (அதை சித்தகத்தி மரம் என்று ஒருவர் கூறுவார்) கஸ்கூட்டா பண்ணையை வளர்க்க ஆரம்பித்திருந்தான். கஸ்கூட்டா வளரவேண்டும் என்ற ஆர்வத்தில் அவன் தண்ணியெல்லாம் ஊற்றினானாம். ஒன்றுமேயில்லாமல் அசுரத்தனமாக வளரும் கஸ்கூட்டா செல்வத்தின் பறிவான கவனிப்பில் நன்றாகவே வளர்ந்தது. ஒரு மாதகாலத்திலேயே பீப்பி மரத்திலிருந்த பீப்பி பூக்கள் முற்றிலுமாக உதிர்ந்துவிட்டது என்னை சோகத்தில் ஆழ்த்தியது. பீப்பி பூவின் காம்பினை நம் இதழ்களில் வைத்து ஊதினால் நாதஸ்வரம் போன்ற ஓசையை எழுப்பும். அந்த பூவுக்கு நல்ல மணமும் உண்டு.

இவ்வாறாக எங்கள் பகுதியில் பல வீடுகளில், பல மரங்களில் கஸ்கூட்டா தன் அபாயமுகத்தை காட்டாமல் பாசமும், பரிவுமாக வளர்க்கப்பட்டது. நொச்சிலி மரத்தில் வளர்ந்த கஸ்கூட்டா முழுவதுமாக அம்மரத்தை சாகடித்து வளர இடமில்லாமல் பக்கத்திலிருந்த புதர்களையும், புல்வெளிகளையும் கூட தன் கோரப்பசிக்கு இரையாக்கிக் கொண்டது. வீடுகளில் கஸ்கூட்டா வளர்த்தவர்களெல்லாம் தாங்கள் ஆசையாக வளர்த்த மாங்கன்று, செம்பருத்திச் செடிகளை இழக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார்கள்.

ஆகாயத் தாமரையின் ஒரு செடியை தெளிவான நீர் இருக்கும் ஒரு நீர்நிலையில் விட்டால் வெகுவிரைவில் அந்த நீர்நிலை முழுவதையும் தன் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்து விடும். அதுபோலவே கடற்பாரை (சில பேர் காட்டாமணக்கு என்று இதை சொல்கிறார்கள்) என்று சொல்லக்கூடிய ஒரு செடிவகையும். அதுபோல கிட்டத்தட்ட ஒரே ஆண்டில் எங்கள் பகுதி முழுவதையும் கஸ்கூட்டா தன் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்து தன்னாட்சியை நிறுவியது. கொஞ்சம் லேட்டாக முழித்துக் கொண்ட ஊராட்சி நிர்வாகம் அதன்பின்னர் கஸ்கூட்டா இருந்த இடங்களையெல்லாம் கண்டறிந்து அவற்றை எரித்து அழித்தது. அதன்மூலமாக எங்கள் பகுதியில் பசுமை காக்கப்பட்டது. கஸ்கூட்டாவை பார்த்து கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது.

நீங்கள் யாராவது, எங்கேயாவது கஸ்கூட்டாவை பார்த்திருக்கிறீர்களா? இப்போதும் அது எங்கேயாவது இருக்கிறதா?

கஸ்கூட்டா குறித்த விக்கிப்பீடியா சுட்டியை இங்கே சுட்டிப் பாருங்கள்!

6 ஏப்ரல், 2010

ஏப்ரல் 10 - வாயாடிகள் வரலாம்!

அங்காடி தெரு, பையா, கலைஞர், பெண்ணாகரம், பாமக, சங்கம், சுவிங்கம், உலகப்படம், உள்ளூர் படம், மொக்கைப் பதிவர்கள், எழுத்தாளர்கள், எழுத்தாளர் ஆக ஆசைப்படுபவர்கள், சுகுணா திவாகர், தண்டோரா, பராக் ஒபாமா, ஐ.பி.எல், சச்சின் டெண்டுல்கர், யூசுப் பதான், சானியா மிர்ஸா, நித்தியானந்தர், சாருநிவேதிதா, ஜெயமோகன், தமிழ்ப்படம், கோவா, சுறா, விஜய், அஜீத், அசல்...

பேசவா நமக்கு விஷயம் இல்லை?

எதுவேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும் ஆந்திரா மெஸ் மீல்ஸ் மாதிரி அன்லிமிட்டெட் ஆக பேசிக்கொண்டேயிருக்கலாம். இங்கே தலைவர் இல்லை. செயலாளர் இல்லை. மேடை இல்லை. மைக் இல்லை. எனவே யார் வேண்டுமானாலும் யாரிடம் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் தயக்கமே இல்லாமல் லொடலொடக்கலாம். கூடுதல் கவர்ச்சி அம்சமாக சந்திப்புக்கு பின்னான ஸ்பெஷல் டீக்கடை சந்திப்பும் நடக்கும்.

எனவே தைரியமாக முகமூடியின்றி, திறந்தமனதோடு வாருங்கள்.

மேட்டர் என்ன?

கெரகம். வேறென்ன?

பதிவர்சந்திப்பு!

எங்கே?

அரசு இலவசமாக அனுமதிப்பதால் மெரீனா கடற்கரை காந்தி சிலைக்கு அருகில்.

எப்போது?

நல்ல ராகுகாலத்திலா என்று தெரியாது. ஆனாலும் எந்நேரமும் நமக்கு நல்ல நேரம்தான். மாலை 5.30 மணி முதல் 7.30 மணி வரை.

தேதியை சொல்ல மறந்துவிட்டோம். நோட் பண்ணிக்குங்க.

ஏப்ரல் 10, சனிக்கிழமை. முன்னர் ஏப்ரல் 11 என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஞாநி மற்றும் பாஸ்கர்சக்தி இணைந்து நடத்தும் கேணியும் அதே நேரத்தில் நடைபெறும் என்பதால் ஒருநாள் முன்னதாக நடைபெறுகிறது.

மேலதிக விவரங்களுக்கு :
பாலபாரதி @ 99402 03132

ஆர்வமுள்ள, ஆர்வமில்லாத பதிவர்கள்/வாசகர்கள்/வி.ஐ.பி.க்கள் வரலாம். யாரும் தனியாக வெத்தலைப்பாக்கு வைத்தெல்லாம் அழைக்கப்பட மாட்டார்கள். அழைக்கப்படுவது ரஜினிகாந்தாகவே இருந்தாலும் இந்தப் பதிவு மட்டும்தான் அழைப்பு. சந்திப்புக்கு வர எண்ணியவர்கள் மற்றும் சந்திப்பில் ஆர்வம் கொண்டவர்கள் இந்த அறிவிப்பினை அவரவர் பதிவில் போட்டால் எண்ணி மூன்றே நாளில் மூன்று கோடி ரூபாய் லாட்டரி அடிக்கும் என்று இமயமலையில் நித்யயோகத்தில் இருக்கும் நித்தியானந்தர் திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார்.

பதிவர்கள் பயன்பெற ஒரு நீதிமொழி : வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!

5 ஏப்ரல், 2010

வண்ணத்துப் பூச்சி!



ண்ணத்துப்பூச்சி நிரம்பவும் குழம்பியிருந்தாள். ரோபோட்களால் நிர்வகிக்கப்படும் உலகின் சிறப்பு பிரஜை அவள். கி.பி. 2108ல் மனிதர்கள் என்ற பெயரில் வாழும் உயிரினங்கள் அனைத்துமே சிறப்புப் பிரஜைகளாக சிறப்புச் சலுகைகளோடு வாழ்ந்து வந்தார்கள். 2050ஆம் ஆண்டு வாக்கில் உயிர்கொல்லி ஆயுதங்களால் நாடுகள் தங்களுக்குள் போரிட்டு உலகை பாலைவனமாக்கியிருந்தனர்.

மனிதர்கள் வேதியியல் ரசாயன ஆயுதங்களை ஒருவர் மீது ஒருவராக பிரயோகித்து மடிந்ததால் நீமா என்ற கணினி உலகை காக்க தன்னை உலகதிபராக அறிவித்துக் கொண்டது. ஐந்தேகால் கோடி ரோபோட் வீரர்கள் அக்கணினியின் ஆணைக்கு கட்டுப்பட்டிருந்ததால் இது நீமாவுக்கு சாத்தியமானது. அந்த கொடூரமான வேதியியல் போருக்கு பின் மிஞ்சிய மனிதர்கள் ஆயிரம் பேர் மட்டுமே. தாவரங்கள் உட்பட உயிரினங்கள் இன்று உலகில் எதுவுமே மிஞ்சவில்லை. உலகின் மேற்பரப்பில் H2O என்று அழைக்கப்பட்ட நீரில்லை. நீண்ட மணற்பரப்பும், ஆங்காங்கே பாறைக்குவியல்களும் தான் இன்றைய உலகம்.

உயிர்பிழைத்த ஆயிரம் பேரின் சந்ததிகள் இன்று மூவாயிரம் பேர்களாக உயர்ந்திருக்கிறார்கள். பூமிக்கு அடியில் முப்பது கிலோ மீட்டர் ஆழத்தில் அவர்களுக்காக சிறப்புக் குடியிருப்புகளை ரோபோட்கள் மூலமாக உருவாக்கியிருந்தது நீமா. அங்கே செயற்கை முறையில் ஆக்ஸிஜன் தயாரிக்கப்பட்டது. மின்னணு தொழில்நுட்பத்தில் விவசாயம் நடந்தது. வயல்களில் தண்ணீருக்குப் பதிலாக மின்சாரம் பாய்ச்சப்பட்டு தானியங்கள் விளைந்தது. தானியங்களை கேப்ஸ்யூல்களாக மாற்றி உணவாக உண்டனர் மனிதர்கள்.


ண்ணத்துப்பூச்சி நிரம்பவும் குழம்பியிருந்தாள். அவனுக்கு மட்டும் இது எப்படி சாத்தியம்? கடந்த அரைநூற்றாண்டாக மனிதர்கள் பூமிக்கு அடியில் பாதுகாப்பாக வாழ்ந்து வருகிறார்கள். பக்கத்து அறையில் இருப்பவரை தொடர்புகொள்ள கூட மூளையில் பதிக்கப்பட்ட எலெக்ட்ரிக் சிந்தலைஸர்களை தான் பயன்படுத்த முடியும். அதுவும் தெரிந்தவராக இருந்தால் மட்டுமே பேசமுடியும். யாரிடம் பேசவேண்டுமென்றாலும் பிரஜா பாஸ்வேர்டு உபயோகிக்க வேண்டும். கேயாஸ் என்ற பெயரில் என்னைத் தொடர்பு கொண்டவன் எந்த பாஸ்வேர்டும் சொன்னதாக தெரியவில்லை. அவனது அலைவரிசையை ஆய்ந்ததில் அவன் உலகத்தை சேர்ந்தவனாகவும் இருக்க வாய்ப்பில்லை. நீமாவின் ஆணைத்தொடர்களை ஹாக் செய்தால் மட்டுமே சாத்தியமாகும் இந்த வேலையை அவன் எப்படி செய்தான், ஏன் செய்தான்?

குழம்பிப் போனவளின் மூளையில் சிகப்பு விளக்கெரிந்தது. அய்யோ சிகப்பு விளக்கெறிந்தால் அது நீமாவாயிற்றே? நீமா யாராவது பிரஜையிடம் பேசினாலே ஏதோ ஒரு வம்புதான் என்று தெரிந்துகொள்ளலாம். பாஸ்வேர்டு ஒத்துப்போனதுமே தன்னோடு பேச நீமாவுக்கு அனுமதி அளித்தாள் வண்ணத்துப் பூச்சி.

“வணக்கம் நீமா. பிரஜை எண் 2007 பேசுகிறேன். என்னுடைய உலகப்பெயர் வண்ணத்துப்பூச்சி!”

“வணக்கம் வண்ணத்துப்பூச்சி. கடந்த இருவார உலக தகவல் பரிமாற்றங்களை ஆராய்ந்ததில் நான் கொஞ்சம் குழம்பிப் போயிருக்கிறேன்”

“நீமா நானும் குழப்பத்தில் இருக்கிறேன்”

“புரிகிறது வண்ணம். வண்ணம் என்று கூப்பிடலாம் இல்லையா? எனக்கு நேர்ந்த குழப்பத்துக்கு காரணம் உங்களுடன் தகவல் பரிமாற்றம் செய்த ஏதோ ஒன்றுதான்!”

“அது ஏதோ ஒன்று என்கிறீர்களா? என்னிடம் மனிதன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டான்”

“மனிதனாகவும் இருக்கலாம். ஆனால் நம் உலகைச் சார்ந்தவன் அல்ல. வெளிக்கிரகத்தை சார்ந்தவனாக இருக்கலாம். ஒளிக்கற்றையாக வந்த தகவல் உலக எல்லையை அடைந்ததுமே ரேடியோ எல்லையாக மாறியிருக்கிறது”

“வேற்றுக்கிரக வாசியாக இருக்கும்பட்சத்தில் உலகின் நிர்வாகப் பொறுப்பில் இருக்கும் நீமாவை தொடர்பு கொள்ளாமல் என்னை தொடர்பு கொண்டது ஏன்?”

“அதுதான் எனக்கும் புரியவில்லை வண்ணம். உங்களை எச்சரிக்கைப்படுத்தவே தொடர்பு கொண்டேன்”

“எச்சரிக்கைக்கு நன்றி. தங்கள் பொன்னான நொடிகள் என்னால் வீணானது குறித்து வருத்தம்”

“அதெல்லாம் ஒன்றுமில்லை. வணக்கம்”


ண்ணத்துப்பூச்சி நிரம்பவும் குழம்பியிருந்தாள். மீண்டும் கருநீல வண்ணத்தில் மூளைக்குள் விளக்கெறிந்தது. நிச்சயமாக அதுதான், இல்லை அவன் தான். பிரஜா பாஸ்வேர்டு இல்லாமலேயே தகவல் தொடர்பு ஏற்பட்டது.
“வணக்கம் வண்ணத்துப்பூச்சி, நலமா?”

“நலமிருக்கட்டும். நீ யார்?”

“நாம் இருவரும் சந்திக்கும்போது சொல்கிறேனே?”

“நாம் இருவரும் சந்திக்கப் போகிறோமா?”

“ஆமாம். அதற்காகவே எட்டு ஒளியாண்டுகள் தொலைவில் இருந்து பல்லாயிரம் வருடங்களாக பயணம் செய்து வந்து கொண்டிருக்கிறேன்”

“பத்தொன்பது வயதே ஆன என்னை சந்திக்க பல்லாயிரம் வருடப் பயணமா?”

“உன்னை பத்தொன்பது வயதில் நான் சந்தித்தாக வேண்டும் என்பது பல லட்சம் வருடங்களுக்கு முன்பே விதிக்கப்பட்ட முடிவு”

“அதுதான் ஏனென்று கேட்கிறேன். இங்கே உலகத்தில் மூவாயிரம் மனிதர்கள் இருக்கிறார்கள். ஐந்து கோடிக்கும் மேற்பட்ட ரோபோட்கள் இருக்கிறது. என்னை மட்டும் ஏன் நீ சந்திக்க வேண்டும்!”

“காரணத்தை நேரில் சொல்கிறேனே? இன்னும் பத்து நிமிடத்தில் நீ கதிர்வீச்சு பாதுகாப்பு ஆடை அணிந்து பூமியின் மேற்பரப்புக்கு வா. மேற்பரப்புக்கு நீ வந்தவுடன் அங்கிருந்து 45 டிகிரி தென்மேற்காக 40 மணிநேர நடை தொலைவில் ஒரு கரும்பாறை இருக்கும். அங்கு உனக்காக நான் காத்திருப்பேன்”

“நோ கேயாஸ். நீ உலகுக்குள் வர முடியாது. நாம் பேசுவதை நீமா கேட்டுக் கொண்டிருக்கிறார். நீ உலக எல்லைக்குள் நுழைந்ததுமே ரோபோட்களால் அழிக்கப்படுவாய்”

“உங்களை விட பன்மடங்கு தொழில்நுட்பத்தில் உயர்ந்தவர்கள் நாங்கள் வண்ணத்துப்பூச்சி. நீமா இப்போது செயலிழந்து கிடக்கிறார். அவரால் ரோபோட்களுக்கு ஆணை பிறப்பிக்க முடியாது. நாம் இருவரும் சந்தித்து பேசியபின்னர், அவரை மீண்டும் செயல்படுத்தி விடுவேன்!”

நீமாவையே செயலிழக்கச் செய்துவிட்டான் என்றதுமே கோபம் வந்தது வண்ணத்துப்பூச்சிக்கு. ஆனாலும் ஏனோ அவனை பார்த்துவிட வேண்டும் என்று முடிவு செய்தாள். கதிர்வீச்சு பாதுகாப்பு உடை அணிந்து பூமியின் மேற்பரப்புக்கு செல்ல தயாரானாள்.


ண்ணத்துப்பூச்சி நிரம்பவும் குழம்பியிருந்தாள். ஒரு டன் எடையாவது இருக்கும் அந்த கரும்பாறைக்கு அருகில் அவன் நின்றிருந்தான், அவனும் அச்சு அசலாக மனிதனாக தானிருந்தான். கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் வெண்மையான மணல், ஓசோன் படலமில்லாததால் உக்கிரமாக தாக்கிய சூரிய ஒளி மணலின் வெண்மையை மேலும் வெண்மையாக்கியது.

“சொல் கேயாஸ். நீ யார்? உலகை அழிக்க வந்தவனா? நீமாவை எப்படி செயலிழக்கச் செய்தாய்!”

“தவறாகப் பேசாதே வண்ணத்துப்பூச்சி. நீமாவை செயலிழக்கச் செய்வது என் நோக்கமல்ல. உன்னை சந்திப்பது தான் என் நோக்கம்!”

“என்னை சந்தித்து?”

“காதலிக்கப் போகிறேன், கல்யாணம் செய்துகொள்ளப் போகிறேன்”

“முட்டாள் போல பேசாதே, கல்யாணம் என்ற சொல்லே அறுபது ஆண்டுகளாக உலகில் இல்லை”

“இல்லாமல் போன ஒன்றை மீண்டும் தொடங்குவது தான் என் நோக்கம்”

“அதுதான் ஏனென்று கேட்கிறேன்? குறிப்பாக என்னை நாடிவந்தது ஏன்?”

“ஏனென்றால் உன்னுடைய பெயர் ஆண்டாள்!”

“ஆண்டாளா? என்னுடைய பிரஜாபெயர் வண்ணத்துப்பூச்சி!”

“அதெல்லாம் எனக்குத் தெரியாது. உன்னை எனக்கு ஆண்டாளாக தான் தெரியும்!”

“எப்படி?”

“இதோ இப்படி?” ஒரு எலெக்ட்ரிக் சிப்பை அவளிடம் தந்தான்.

“இதில் எல்லாமே பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்று எங்கள் கிரகத்தில் சொல்லி அனுப்பினார்கள். என் பெயர் ரங்கராஜன் நம்பியாம்!”

“இந்த சிப்பில் என்ன இருக்கிறது!”

“பதிவு செய்யப்பட்ட மூன்றுமணி நேர காட்சிகள் இருக்கிறது. இதில் தமிழ் என்ற மொழியில் 'தசாவதாரம்' என்று எழுதப்பட்டிருக்கிறதாம். இதை கண்டதுமே நீ என்னை காதலிப்பாய் என்று சொல்லி அனுப்பினார்கள்!”

அவர்கள் அருகில் இருந்த கரும்பாறை சிற்பத்தின் முகத்தில் மர்ம சிரிப்பு பூத்தது. ஆயிரத்து எட்டுநூறு ஆண்டுகளுக்கு முன்பாக கடலில் வீசப்பட்ட கோவிந்தராஜ பெருமாள் சிலை அது.

3 ஏப்ரல், 2010

பையா!

நீண்டதூர பஸ்/கார்/பைக் பயணம் உங்களுக்கு பிடிக்குமா? சன்னல்வழியாக முகத்தில் மோதி முடி கலைக்கும் சில்லென்ற காற்றை ரசிப்பீர்களா? விர்ரூம்.. விர்ரூம்.. என்று விறுவிறுக்கும் தேசியச்சாலை பரபரப்பை விரும்புவீர்களா? எல்லா கேள்விகளுக்கும் ‘யெஸ்'ஸென்று பதில் சொல்லக் கூடியவராக இருந்தால் உங்களுக்கும் ‘பையா'வை பிடிக்கும்.

போனவாரம் ஒரு அழுமூஞ்சிப் படத்தை பார்த்ததிலிருந்து மூட் அவுட். நல்லவேளையாக இந்த வாரம் ‘பையா' ரிலீஸ் ஆகி, இப்போதுதான் கொஞ்சம் feel good.

அயனுக்குப் பிறகு தமிழில் வந்திருக்கும் அட்டகாசமான மசாலா மாஸ். ஸ்லோவாக தொடங்கி தமன்னாவுக்கு காரில் கார்த்தி லிஃப்ட் கொடுத்ததுமே படம் டாப்கியரில் பரபரக்கிறது. க்ளைமேக்ஸ் வரை பரபரப்புக்கு இரண்டரை மணிநேர கேரண்டி. இண்டர்வெல் ப்ளாக்குக்கும் ஒரு குட்டி க்ளைமேக்ஸ். சரசரவென்று நான்கைந்து சேஸிங் சீன்கள். இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங், கலை என்று தொழில்நுட்பக் கலைஞர்கள் வியர்வை சிந்தி பையாவை சகலகலா வல்லவனாக்கி இருக்கிறார்கள். பீமாவில் கோட்டை விட்ட லிங்குசாமி மறுபடியும் ‘ரன்'ன ஆரம்பித்துவிட்டார்.

நா.முத்துக்குமார் - யுவன்ஷங்கர் ராஜா கூட்டணிக்கு ஏன் என் சொத்து மொத்தத்தையும் எழுதிவைக்கக் கூடாது என்று யோசிக்க ஆரம்பித்திருக்கிறேன். பாடல்கள் அத்தனையும் தேன் தேன் தித்தித்தேன்.

பக்காவான மசாலா படத்தில் நடிப்பது கார்த்திக்கு இதுதான் முதன்முறை. ஆரம்பத்தில் பப்பிள்கம் போட்டுக் கொண்டு அசமஞ்சமாக வருபவர் சீட் பெல்ட் மாட்டியதுமே சீட்டி அடிக்க வைக்கிறார். ‘என் கண்மணி' பாட்டு பாடிக்கொண்டே அனாயசமாக ஸ்டியரிங்கை பிடிப்பது அசத்தல். தமன்னாவைப் பார்க்கும்போது கண்களில் காதலை காட்டுவதைவிட, வில்லன்களை ரிவர்வியூ மிர்ரரில் பார்க்கும்போது காட்டும் வெறிதான் சுவாரஸ்யம். அண்ணனுக்கு அயன். தம்பிக்கு பையா. பல காட்சிகளில் சூர்யா படம் பார்த்துக் கொண்டிருக்கிறோமா என்பது போன்ற பிரமை. அப்பாவையும், அண்ணனையும் தோற்றத்தில் அடிக்கடி ஞாபகப்படுத்துகிறார். Fineயா.

தமன்னா வாவ். சில காட்சிகளில் அட்டு ஃபிகராகவும், பல காட்சிகளில் பேரழகியாகவும் ஒருவரே தெரிவது என்ன மாயமென்று தெரியவில்லை. தொப்புளைத் தவிர்த்து வேறு குறிப்பிடத்தக்க கவர்ச்சி அம்சம் இவரிடம் இல்லையென்பதால் ஒரு பாட்டில் தொப்புளையே பிரதானமாக்கி லைட்டிங் செய்து, கோணங்கள் வைத்து.. ச்சே பாராட்ட தமிழில் வார்த்தைகள் குறைவு. அதிலும் அதே பாடல்காட்சி முடியும்போது கார்த்தியோடு திரும்பி நடந்து கொண்டிருக்கிறார். இடுப்பு பகுதியில் குட்டியூண்டாக திரையில் தெரியும் டயரை பாய்ந்துப் போய் கிள்ளிவிடலாமா என்று விரல்கள் பரபரக்கிறது.

கார்த்தி, தமன்னாவை தவிர்த்து முக்கிய பாத்திரமாக நடித்திருப்பது அந்த கருப்பு கலர் கார். மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி படத்தில் பஸ் எப்படி ஒரு பாத்திரமோ அதுபோல பையாவில் இந்த கார். சகதியில் முன்டயர் இறங்கிவிடும் காட்சியில் கார்த்தி, தமன்னாவை விட கார் அற்புதமாக நடித்திருக்கிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

தமன்னாவுக்கு சித்தி மூலம் வில்லன்களால் பிரச்சினை. ஆனால் கார்த்திக்கும் இன்னொரு தரப்பு மும்பை வில்லன்களால் பிரச்சினையென்றதுமே ‘பாட்ஷா.. பாட்ஷா..' என்று ரசிகர்கள் மனசுக்குள்ளேயே தீம் மியூசிக் போடுகிறார்கள். துரதிருஷ்டவசமாக சண்டைக்கோழி ரேஞ்சுக்கு சப்பை ப்ளாஷ்பேக். எல்லா சண்டையிலுமே ஹீரோதான் ஜெயிப்பார் என்று தெரிந்தாலும், சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்ட விதமும், இசையும் ஜிவ்வென்று நம் நாடிநரம்புகளை முறுக்கேற்றுகிறது.

சினிமா விமர்சனம் என்றால் ஏதாவது குறியீடு கண்டுபிடிக்க வேண்டுமாமே? ம்ம்... ஆங்... ஹீரோயின் பெயர் சாரு. இப்படம் கொண்டாட்ட பாபிலோன் தொங்கும் தோட்டம் என்பதற்கு இதைவிட வேறென்ன பெரிய குறியீடு வேண்டும்?

பையா - அநியாயத்துக்கு அழகாக இருக்கிறான்!