சென்னையைச் சேர்ந்த இருபத்தெட்டு வயது கல்யாணியின் சொத்து வறுமை மட்டுமே. கணவருக்கு நிரந்தரமான வேலை இல்லை. இரண்டு குழந்தைகளை காப்பாற்ற வேண்டும். அவர்களை படிக்கவைக்க வேண்டும். வேறு வழியில்லை. நான்கைந்து வீடுகளில் பத்து பாத்திரம் தேய்த்து குடும்பத்திற்கு கூடுதல் வருமானம் சேர்க்கிறார் கல்யாணி.
அவருக்கு ஒரு கனவு உண்டு. தனது பெரிய மகனை கலெக்டர் ஆக்க வேண்டும். இளைய மகனை போலிஸ் அதிகாரி ஆக்கவேண்டும். ஒரே வீட்டில் ஓர் ஐ.ஏ.எஸ், ஓர் ஐ.பி.எஸ். என்றிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?
முதல் கட்டமாக குழந்தைகளை படிக்கவைக்க வேண்டுமே? இரு குழந்தைகளுமே காண்வெண்டில் படிக்கிறார்கள். மாதாமாதம் பீஸ் கட்டவேண்டும். வருடத்துக்கு ஒருமுறை ஜூன்மாதத்தில் பெரிய செலவு இருக்கும். அப்போது வசந்தி தவித்துப் போய்விடுவார்.
தான் வேலை செய்யும் வீட்டு முதலாளிகளிடம் கடன் கேட்பார். தன்னுடைய சம்பளத்தில் மாதாமாதம் கழித்துக்கொள்ள சொல்வார். வருடத்துக்கு ஒருமுறை கல்யாணி வாங்கும் பணத்தை மாதாமாதம் கட்டிமுடிப்பதற்குள் அடுத்த ஜூன் வந்துவிடும். மீண்டும் கடன். கேட்டது கிடைக்காதபட்சத்தில் ஐந்து, பத்து வட்டிக்கு வெளியில்கூட பணம் வாங்க கல்யாணி அஞ்சுவதில்லை.
இது கல்யாணியின் கதை மட்டுமே அல்ல. கல்யாணிகளின் கதை. சென்னையில் வசிக்கும் ஏழை/நடுத்த குடும்பங்கள் ஒவ்வொன்றின் கதையும் இதுதான். பெயர்கள்தான் வேறு வேறு.
கல்வியின் அவசியத்தை இந்த தலைமுறை நன்கு உணர்ந்திருக்கிறது. எனவேதான் தனது அடுத்த தலைமுறைக்கு தலையை அடகுவைத்தாவது நல்ல கல்வியை வழங்கியாக வேண்டுமே என்று தன்னைத்தானே உடலாலும், மனதாலும் வருத்திக் கொள்கிறது.
ஏழைகளுக்கு கல்வி எட்டாக்கனியா என்ன?
அரசுப் பள்ளியிலோ, அருகிலிருக்கும் மாநகராட்சிப் பள்ளியிலோ ஏன் தன் குழந்தைகளை கல்யாணி சேர்க்கவில்லை?
“நானே கார்ப்பரேஷன் ஸ்கூல்லதான் படிச்சேன். என் புருஷனும் அங்குதான் படிச்சாரு. எங்க புள்ளைங்களாவது நல்ல ஸ்கூல்ல படிச்சு நல்ல நெலைமைக்கு வரணும்னு எங்களுக்கு ஆசை இருக்காதா? நல்லா கவனிச்சுப் பார்த்துட்டேன். நான் வேலை செய்யுற வீட்டுலே இருக்குற குழந்தைங்கள்லாம் காண்வெண்டுலேதான் படிக்குது. காண்வெண்டுலேதான் நல்ல படிப்பு கிடைக்குது” – கல்யாணி சொல்லக்கூடிய பதில் இதுதான்.
பலருக்கும் இருக்கும் மனத்தடை இதுதான். இது தவறென்றும் சொல்லிவிட முடியாது. அரசை நிர்வகிக்கும் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்ப்பதை கல்யாணியும் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறார்?’
மாநகராட்சிப் பள்ளிகளில் ஒழுங்கு கிடையாது. தேவையான வசதிகள் கிடையாது. ஆசிரியர்கள் சரியாக கல்வி போதிக்க மாட்டார்கள். இங்கு படிப்பவர்கள் யாரும் பெரிய படிப்பு படிப்பதில்லை – இதெல்லாம் பொதுப்புத்தியாக நம் மக்கள் மனதில் ஆணியாய் அடித்து ஆழமாய் வேரூன்றப்பட்டிருக்கிறது.
ஆனால் நிலைமை அப்படியல்ல என்பதுதான் இன்றைய நிஜம். கடந்த சில ஆண்டுகளில் சென்னை மாநகராட்சியால் நடத்தப்படும் பள்ளிகளின் வசதிகளும், கல்வித்தரமும் பன்மடங்கு உயர்ந்திருக்கிறது. இன்றைய தேதியில் பிரபலமான தனியார் பள்ளிகளோடு ஒப்பிடுகையில் மாநகராட்சிப் பள்ளிகளில் ஏற்படுத்தப் பட்டிருக்கும் வசதிகள் குறிப்பிடத் தகுந்தவை.
சென்னை மாநகராட்சியின் கல்வித்துறை 40 ஆரம்பப் பள்ளிகளோடு 1912ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இன்று 30 மேல்நிலை, 37 உயர்நிலை, 99 நடுநிலை, 116 ஆரம்பப் பள்ளி, 30 மழலையர் பள்ளி, ஓர் உருது உயர்நிலை மற்றும் ஒரு தெலுங்கு உயர்நிலை பள்ளிகள் என்று விழுதுகளை விரிவாய் வேரூன்றியிருக்கிறது. 1,05,882 மாணவ மாணவியர் கல்வி பயிலுகிறார்கள். 4,062 ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள்.
4 சமுதாய கல்லூரிகள் நடத்துகிறார்கள். ஒரு தொழிற்பயிற்சி நிலையமும் (ஐ.டி.ஐ) உண்டு. மாநகராட்சிப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் மட்டுமே இங்கே சேரமுடியும்.
சரி. கட்டணமெல்லாம் எப்படி?
அதிகபட்சமாக 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு கூட வருடத்துக்கு ரூ.148/- மட்டுமே செலவு ஆகும் என்பதை வைத்து மற்ற வகுப்புகளுக்கு ஆகும் கட்டணத்தை நீங்களே யூகித்துக் கொள்ளலாம். எட்டாம் வகுப்பு வரை முற்றிலும் இலவசக் கல்வியையே சென்னைப் பள்ளிகள் வழங்குகிறது. மிகக்குறைந்த கட்டணத்தில் ஸ்பெஷல் ட்யூஷனும் தேவைப்படும் மாணவர்களுக்கு நடத்தப்படுகிறது.
வேறென்ன வசதிகள்?
ஒன்று முதல் பண்ணிரெண்டு வகுப்பு வரை பாடப்புத்தகங்கள் முற்றிலும் இலவசம்.
மதிய உணவுத் திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் இலவசமாக சீருடை மற்றும் நோட்டுப் புத்தகங்கள், புத்தகப்பை, காலணி.
எஸ்.சி./எஸ்.டி, பி.சி./எம்.பி.சி பிரிவுகளைச் சேர்ந்த மாணவ/மாணவிகளுக்கு 11 மற்றும் 12 வகுப்புகளில் உதவித்தொகை. இதே பிரிவைச் சேர்ந்த மாணவிகளுக்கு இலவச சைக்கிள்.
இலவச பஸ் பாஸ்.
ஓவியம், நுண்கலைத்திறன் மற்றும் யோகா பயிற்றுவிக்கப்படுகிறது.
தடகளம் மற்றும் இதரவிளையாட்டுகளில் சிறப்புப் பயிற்சி வழங்கப்படுகிறது.
கணினி வழிக்கல்வி உண்டு. மாணவர்களுக்கு இண்டர்நெட் பரிச்சயம் படிக்கும்போதே ஏற்படுகிறது.
ஆளுமைத்திறன் மற்றும் ஆங்கிலப் பயிற்சி.
ஆண்டுதோறும் மாணவர்களுக்கு பல் மற்றும் கண் பரிசோதனை நடத்தப்பட்டு, தேவைப்படும் மாணவர்களுக்கு இலவசமாகவே கண்ணாடியும் வழங்கப்படுகிறது.
முறையான கட்டிடம், விளையாட்டு மைதானம், தீயணைப்புச் சாதனங்கள், ஒலிபெருக்கி, கணினி, மின்சார மணி, நவீன இருக்கைகள், மாணவ மாணவியர்களுக்கு சாய்வு நாற்காலிகள் என்று அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் அனைத்துமே உண்டு.
இதுபோன்ற வசதிகளை ஆயிரங்களில் கட்டணம் வாங்கும் தனியார் பள்ளிகளால் கூட தங்கள் மாணவர்களுக்கு தரமுடியுமா என்பது சந்தேகமே.
சரி, கட்டணமும் குறைவு. நிறைய வசதிகள் இலவசம். கல்வித்தரம் எப்படி?
ஒட்டுமொத்தமாக இப்பள்ளிகளில் கடந்த ஆண்டு பிளஸ் டூவில் 83 சதவிகிதமும், 10ஆம் வகுப்பில் 82 சதவிகிதமும் மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.
இனியும் நாம் மாநகராட்சிப் பள்ளி என்றே சொல்லிக் கொண்டிருக்கத் தேவையில்லை. ஏப்ரல் 8 முதல் இவை ‘சென்னைப் பள்ளிகள்’ என்ற பெயரில் அழைக்கப்படும் என்று மேயர் மா.சுப்பிரமணியனால் அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளுக்கு கடுமையான போட்டியைத் தரும் வகையில் ஏப்ரல் முதல் தேதியிலிருந்தே மாணவர் சேர்க்கையை சுறுசுறுப்பாக மாநகராட்சி தொடங்கியிருக்கிறது.
இந்த ஆண்டிலிருந்து வரவேற்கத்தக்க சில மாற்றங்களை சென்னைப் பள்ளிகளில் நாம் காணலாம்.
மாணவ மாணவியருக்கு மட்டுமல்ல. எல்லாப் பள்ளிகளுக்கும் யூனிஃபார்ம் உண்டாம். அதாவது சென்னைப் பள்ளிகள் அனைத்துமே ஒரே மாதிரியான வண்ணத்தில் அலங்கரிக்கப்படுமாம்.
நூலகங்கள் நவீனப்படுத்தப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள். வாரத்துக்கு மூன்றுநாட்களாவது குறைந்தபட்சம் அரைமணி நேரம் மாணவர்கள் நூலகத்தில் செலவழிக்க நேரம் வழங்கப்படுமாம். இலக்கியங்களில் தொடங்கி காமிக்ஸ் வரை தங்கள் பள்ளி நூலகங்களில் கிடைக்கும் என்று உறுதிகூறுகிறார்கள் மாநகராட்சி கல்வித்துறை அதிகாரிகள். கோடை விடுமுறைகளில் ஒரு சிறப்பு நூலகத்தை ஒவ்வொரு பள்ளியிலும் நடத்தலாம் என்றும் ஒரு ‘நச்’ ஐடியா மாநகராட்சிக்கு உண்டு.
மத்திய அரசு நடத்தும் கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளுக்கு இணையாக இன்னும் சில வருடங்களில் இந்த சென்னைப் பள்ளிகளை தரமுயர்த்துவதே தங்களது குறிக்கோள் என்று மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் லக்கானி சொல்கிறார்.
12ஆம் வகுப்பு வரை தங்களிடம் படித்த மாணவ/மாணவியர் உயர்கல்வி கற்கவும் மாநகராட்சியே ஊக்கத்தொகையும் தருகிறது. மருத்துவம், பொறியியல் போன்ற படிப்பினை தேர்ந்தெடுப்பவர்களுக்கு ரூ.25000, செவிலியர் ஆசிரியர் போன்ற பயிற்சிகளை தேர்ந்தெடுப்பவர்களுக்கு ரூ.5000, டிப்ளமோ படிப்பவர்களுக்கு ரூ.3000 என்று ஊக்கத்தொகை கொடுத்து வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறது மாநகராட்சி.
“எந்த மனத்தடையும் இன்றி குழந்தைகளை எங்கள் பள்ளிகளில் சேர்க்கலாம். கல்வித் தரத்திலும் வளர்ச்சிலும் தனியார் பள்ளிகளை விட சிறப்பாக எங்கள் பள்ளிகள் செயல்படுகின்றன. தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் கொடுத்துவிட்டு அவதிப்படும் பெற்றோர்களே, மாநகராட்சிப் பள்ளிகளுக்கு வாருங்கள்” என்று அழைப்பு விடுக்கிறார் சென்னை மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியன்.
கல்யாணிகள் இனி தங்கள் குழந்தைகளின் கல்வி பற்றி கவலைப்பட வேண்டியதில்லை அல்லவா?
(நன்றி : புதிய தலைமுறை)
26 ஏப்ரல், 2010
24 ஏப்ரல், 2010
ரெட்டச்சுழி!
“பெண்கள் திரையரங்குகளுக்கு வருவதேயில்லை” - பத்து வருடங்களாக தங்கள் படங்களின் தொடர்ச்சியான தோல்விகளுக்கு சினிமாக்காரர்கள் இதைத்தான் காரணமாக சொல்லி வருகிறார்கள். ‘ரெட்டச்சுழி’ மாதிரி படமெடுத்தா அவங்களா வந்துட்டு போறாங்க. ஷங்கரின் தயாரிப்பில் தரமான படங்கள்தான் வெளிவரும் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கும் படமிது.
அனேகமாக ‘பசங்க’ பார்த்துவிட்டு இயக்குனர் ஸ்கிரிப்ட் எழுதியிருப்பார் என்று நினைக்கிறேன். படம் முழுக்க ‘பசங்க’ ராஜ்ஜியம். குறிப்பாக பாலச்சந்தர், பாரதிராஜா என்று இரண்டு ‘பசங்க’ போட்டு தாக்கியிருக்கிறார்கள்.
சினிமாவில் அரசியல் பேசினால் சென்ஸார் பிரச்சினை, அடியாட்கள் பிரச்சினை. குட்டிப் பசங்களை வைத்து அரசியல் பேசுகிறார் தாமிரா. ஒரு குட்டிப் பாப்பாவுக்கு வசனகர்த்தா வைத்திருக்கும் பெயர் குஷ்பூ. புகுந்து விளையாடுகிறார்.
“குஷ்பூ நீ பேசாதே!”
“குஷ்பூ செருப்பு போட்டுக்கிட்டு கோயிலுக்கு வராதே!”
“குஷ்பூ நீ எதையாவது பேசினாலே பிரச்சினைதான்!”
இந்தியாவின் இருபெரும் தேசிய இயக்கங்கள் குறித்த தன்னுடைய நையாண்டி விமர்சன பூசணிக்காயை வசன சோற்றுக்குள் மறைக்க முயற்சிக்கிறார். காங்கிரஸ்காரர்களின் வறட்டுக் கவுரவத்தையும், கம்யூனிஸ்டுகளின் வெட்டி வீம்பையும் இரண்டு தாத்தா கதாபாத்திரங்கள் வாயிலாக வாழைப்பழத்துக்குள் கசப்பு மாத்திரை வைத்து பார்வையாளனுக்கு தருகிறார்.
“அவர் கட்சி ஆபிஸுக்கு போயே பத்து வருஷம் ஆவுது. அவருகிட்டே வந்து ராட்டையை காமிச்சிக்கிட்டு”
‘தோழர்’ என்ற பதத்தை பயன்படுத்தியிருக்கும் பாங்கு தோழர்களுக்கே கிச்சுகிச்சு மூட்டும்.
படம் தரும் ஸ்பெஷல் போனஸ், பாரதிராஜாவின் சிறுவயது ப்ளாஷ்பேக். அந்தக் காலத்து பாரதிராஜாவின் படக்காட்சிகள் மாதிரியே உல்டா அடித்து கொடுத்திருப்பது நல்ல நையாண்டி. இந்த விஷயம் புரியாதவர்கள் அதை அமெச்சூர்த்தனமாக படமாக்கப்பட்டதாக நினைக்க வாய்ப்பிருக்கிறது. தேவையில்லாத ஸ்லோமோஷன், ரியாக்சனே இல்லாத ரொமான்ஸ் என்று ‘மண்வாசனை’யை கிளறிவிடுகிறார் தாமிரா.
பாலச்சந்தரின் நடிப்பு சொல்லிக் கொள்ளும்படி எடுபடாததற்கு அவரது பெரிய மீசை ஒரு காரணமாக இருக்கலாம். ‘காதலா காதலா’ எம்.எஸ்.வி.யை பாடிலேங்குவேஜில் நினைவுபடுத்துகிறார். ஆனால் பழம்பெருமை பேசும் காங்கிரஸ் பெருசு என்று சொன்னால் கண்ணை மூடிக்கொண்டு நம்பலாம். எதிர்பாராவிதமாக பாரதிராஜா ஆச்சரியப்படுத்தியிருக்கிறார். அச்சு அசல் தோழர். பல காட்சிகளில் ‘முதல் மரியாதை’ சிவாஜியை மிமிக்ரி செய்திருக்கிறாரோ என்று தோன்றுகிறது.
ஹீரோ, ஹீரோயின் என்று பெயருக்கு ஒரு ஜோடி. அங்காடித் தெரு அஞ்சலி அழகுப் பொம்மையாக மட்டுமே வருகிறார். ‘உசிராப் புடிச்சிருக்கு தாத்தா’ என்று சொல்லும் காட்சியில் மட்டும் நடிப்பு லேசாக மிளிர்கிறது. ஆனால் அடுத்த நொடியே அந்த வசனத்துக்கு பாரதிராஜா காட்டும் நடிப்பில் அஞ்சலி காணாமல் போகிறார்.
இசையும், ஒளிப்பதிவும் இயக்குனருக்கு நல்ல பக்கபலம். பாடல்கள் ரொம்ப சுமாராக இருந்தாலும் கார்த்திக்ராஜாவின் பின்னணி இசையில் இளையராஜா வாசனை. செழியனின் கேமிரா ஒவ்வொரு ஃபிரேமையும் கவிதையாக்கி தருகிறது.
ரொம்ப கறாராக செலவழித்திருப்பார்கள் போலிருக்கிறது. இப்படத்துக்கு ஆன செலவில் ஒரு மெகாசீரியலின் ஏழு எபிசோடை கூட இன்றைய விலைவாசியில் எடுக்க முடியாது. இதனாலேயே நாடகத்தன்மை படம் முழுக்க ஊடாடிக் கொண்டிருப்பது படத்துக்கு பெரிய மைனஸ்.
நிச்சயமாக தமிழ் சினிமாவை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்திச் செல்லும் படம் இதுவல்ல. ஆடியன்ஸூக்கு அதிர்ச்சிக் கொடுத்து அழவைக்கும் காட்சிகள் எதுவுமே இல்லை. இப்படத்தை தெலுங்கில் டப்படித்தால் கூட டப்பாவுக்குள் புகுந்துவிடும். ஆனால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இரண்டரை மணிநேர க்ளீன் எண்டெர்டெயினர். விடுமுறையில் வீட்டுக்கு வந்திருக்கும் குழந்தைகளை அழைத்துக்கொண்ஊ குடும்பத்தோடு எந்த நெருடலும் இல்லாமல் ரசித்து சிரித்து மகிழலாம். வறண்டு போயிருக்கும் தமிழ் சினிமாவுக்கு இப்படம் கோடைமழை.
ரெட்டச்சுழி - ரகளை.
மேலே அஞ்சலியின் படம் மாறிவிட்டது என்பதை நண்பர் ஒருவர் சுட்டிக்காட்டி, சரியான இந்த ‘அஞ்சலி' படத்தை அனுப்பி வைத்திருக்கிறார். அவருக்கு எனது நன்றி!

23 ஏப்ரல், 2010
புத்தக தினம்!
இன்று உலக புத்தக தினமாம்.
ஏதோ மூன்று நான்கு புத்தகங்கள் எழுதியவன் என்ற முறையில் ‘வாசிப்புப் பழக்கம் ஏன் குறைகிறது?’ என்ற தலைப்பில் ஹலோ எஃப்.எம்.மில் இரண்டு நிமிடம் பேச சொன்னார்கள். நேற்று மாலை பதிப்புரிமை - காப்புரிமை கருத்தரங்கில் இருந்தபோது அவசர அவசரமாக ஏதோ போனில் உளறிவைத்தேன். என்ன சொன்னேன் என்பது அட்சர சுத்தமாக எனக்கே நினைவில்லை. சுமாராக எழுத தெரியுமென்றாலும், சுத்தமாக பேச தெரியாது என்பது என் பலவீனம். இனிமேல் ஹலோவோ, ஆஹாவோ, சூரியனோ, மிர்ச்சியோ கூப்பிட்டால் முதலில் எழுதி வைத்துக் கொண்டு, பின்னர் ஏற்ற இறக்கங்களோ கச்சிதமாகப் பேசிவிடவேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறேன். இன்று காலை ஒலிபரப்பானதாம். நான் கேட்கவில்லை.
ஆக்சுவலாக என்ன சொல்ல விரும்பினேன் என்பதை இங்கே பகிர்தலுக்காக எழுதி வைத்துக் கொள்கிறேன்.
வாசிப்புப் பழக்கம் குறைவதாக நான் நினைக்கவில்லை. வாசிப்புக்கான தளங்களின் வடிவம்தான் காலம் தோறும் மாறிக் கொண்டிருக்கிறது.
புத்தகங்களை எழுதுபவர்கள் ஏன் எழுதுகிறார்கள்? பணம், புகழ் இதையெல்லாம் தாண்டி தனக்குத் தெரிந்த, தன்னால் புனைய முடிந்த விஷயங்களை மற்றவர்களோடு பகிர்தல் என்பதுதான் அடிப்படை.
வாசிப்பு என்பதற்கான தேவை ஒரு வாசகருக்கு ஏன் ஏற்படுகிறது. பிரதிகளின் ஊடாக எதையோ பெறுதல். இங்கே பெறுதல் என்பது உத்தியோகப் பூர்வமானதாகவோ, கல்வியறிவு தொடர்பானதாகவோ, கேளிக்கை கொள்ளக் கூடியதாகவோ, சோகம் கொள்ளக் கூடியதாகவோ எந்த உணர்வின் அடிப்படையிலான அறிவாகவும் இருக்கலாம். புனைவாகவும் இருக்கலாம். அபுனைவாகவும் இருக்கலாம்.
எனவே வாசிப்பு பெறுதலின் அடிப்படையிலேயே பல நூற்றாண்டுகளாய் பல வடிவங்களில் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. ஓலைச்சுவடிகள், புத்தகங்களாய் உருமாற பல நூற்றாண்டு தேவைப்பட்டது. தொழிற்புரட்சியின் விளைவாக காகிதங்களின் உற்பத்தி பெருகி புத்தக வடிவில் அறிவு பகிரப்பட்டு, பல கோடி பேர்களால் பெறப்பட்டது. இந்நிலை கிட்டத்தட்ட இருநூற்றி ஐம்பது, முன்னூறு ஆண்டுகளாய் இருக்கிறது.
நவீனகால கண்டுபிடிப்புகளின் விளைவால் இப்போது ஓலை, காகிதம் தாண்டி மின் ஊடகங்களின் மூலமாக பகிர்தலும், பெறுதலும் நடைபெற்று வருகிறது. வானொலி, சினிமா, டிவி, இண்டர்நெட், மொபைல் போன் என்று இன்று ஏராளமான ஊடகங்கள் அறிவு பெறுதலை, பகிர்தலை சுலபமாக்கிக் கொண்டிருக்கின்றன.
24 மணி நேரமும் தொலைக்காட்சியில் செய்திகள் ஓடிக்கொண்டிருக்கிறது. எனவே செய்தித்தாளை வாசித்தேயாக வேண்டும் என்ற கட்டாயம் ஏதுமில்லை. வாசிக்கா விட்டாலும் பெரிய பாதிப்பில்லை. ஏனெனில் செய்தித்தாளில் எதை படிக்க வேண்டுமோ அதை செய்திகளில் பார்த்து/கேட்டு விடுகிறோம். புனைவுகளை மெகா சீரியலாகவும், மசாலா படங்களாகவும் பார்க்கிறோம். புத்தகம் வாசிக்காதவரை இன்று காணலாம். ஆனால் டிவி/சினிமா/ரேடியோ இவற்றில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தாதவர் கிட்டத்தட்ட இல்லவே இல்லை.
எனவே வாசிப்பு என்பது புத்தகம் தொடர்பானது மட்டுமில்லை என்று நான் எண்ணுவதால் வாசிப்புக்குறைவு என்ற வாதத்தை ஒப்புக்கொள்ள மாட்டேன். பகிர்தலும், பெறுதலும் தொடர்ந்து நடந்துகொண்டேதானிருக்கும். முன்பு காகிதத்தில் நடந்தது. இன்று ஒலி/ஒளி அலைகள் மூலமாக நடக்கிறது. இவ்வளவுதான் வித்தியாசம்.
தனிப்பட்ட முறையில் என்னுடைய தேர்வு என்பது அச்சில் வாசிப்பதுதான் என்பதையும் இங்கே பின்குறிப்பாக சொல்லிக் கொள்கிறேன்.

21 ஏப்ரல், 2010
ஆடிட்டர் ஆக ஆசையா?
ஒரு சின்ன புள்ளி விபரம். இன்றைய இந்தியாவுக்கு குறைந்தபட்சம் ஏழு லட்சம் ஆடிட்டர்கள் தேவை. ஆனால் இருப்பதோ கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் பேர் மட்டுமே. ஆண்டுதோறும் புதியதாக பத்தாயிரம் ஆடிட்டர்கள் வந்தாலும், ஐந்தாயிரம் ஆடிட்டர்கள் ஓய்வு பெற்றுக்கொண்டே இருக்கிறார்கள். எனவே என்றைக்குமே இந்த வேலைக்கு தேவை இருந்துகொண்டேயிருக்கும் என்பது நிச்சயம்.
ஆடிட்டர் ஆக சி.ஏ., (Chartered Accountant) தேர்வு எழுதியிருக்க வேண்டும். நம் நாட்டில் இத்தேர்வினை நடத்தும் அமைப்பு ஐசிஏஐ என்று அழைக்கப்படும் இன்ஸ்டிடியூட் ஆஃப் சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட்ஸ் ஆஃப் இந்தியா. சார்ட்டர்ட் அக்கவுண்ட் சட்டம் 1949ன் படி இந்திய பாராளுமன்றத்தால் உருவாக்கப்பட்ட அமைப்பு இது. தேர்வுகள் நடத்தவும், ஆடிட்டர் லைசென்ஸ்கள் வழங்கவும் அங்கீகரிக்கப்பட்ட ஒரே அமைப்பு இதுமட்டுமே. உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான தொழிற்முறை கணக்குப் பணியாளர்களை வைத்திருக்கும் அமைப்புகளில் இதற்கு இரண்டாவது இடம்.
கம்பெனி சட்டம் 1956 மற்றும் வருமானவரிச் சட்டம் 1961ன் படி நிறுவனங்களின் கணக்கு வழக்கு ஆடிட்டர்களால் பரிசோதிக்கப்பட்டு சான்றிதழ் அளிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆடிட்டர் சான்றிதழ் இல்லாத தணிக்கை அறிக்கைகள் அரசால் அங்கீகரிக்கப்படாது. எனவே ‘ஆடிட்டர்’ என்பவரின் பணி இந்தியாவின் இன்றியமையாத பணிகளில் ஒன்று. இவ்வளவு முக்கியமான பணி அது என்பதால்தான் சி.ஏ., தேர்வு என்பது இந்தியாவின் கடினமான தேர்வுகளில் ஒன்றாக இருக்கிறது.
சரி. ஒருவர் ஆடிட்டர் ஆக என்ன தகுதி? என்னென்ன தேர்வுகள் எழுதவேண்டும்? தோராயமாக எவ்வளவு செலவாகும்?
சென்னை மயிலாப்பூரில் முப்பது வருடங்களாக இத்தேர்வுக்கு பயிற்சி வழங்கிவரும் நிறுவனம் ஒன்றினை நடத்தி வரும் ஆர்.நாகராஜன் விளக்கமளிக்கிறார். இவர் ஐசிஏஐ அமைப்பின் தென்மண்டல தலைவராகவும் இருந்தவர்.
நீங்கள் ஆடிட்டர் ஆக முடிவெடுத்துவிட்டால் மூன்று கட்டங்களை கடந்தாக வேண்டும். பத்தாம் வகுப்பு முடித்ததுமே ஒருவர் ஐசிஏஐ அமைப்பில் தனது பெயரை தேர்வுகளுக்காக பதிந்துவிடலாம். ஆனாலும் முதல்கட்டத் தேர்வினை எழுத பண்ணிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதியிருக்க வேண்டும் என்பது விதி. பத்தாம் வகுப்பு முடித்த மாணவன் தனது மேல்நிலைக் கல்வியை தொடர்ந்துகொண்டே முதல்கட்டத் தேர்வுக்கும் தன்னை தயார் செய்துக் கொள்ளலாம்.
முதல் கட்டமாக நடத்தப்படும் தேர்வு பொதுவானது. மாணவர்கள் இத்தேர்வினை எதிர்கொள்ள போதுமான அறிவோடு இருக்கிறார்களா என்று அறிவதற்காக நடத்தப்படுவது. சி.பி.டி. என்று அழைக்கப்படும் Common Proficiency Test இது. ஒரு கேள்விக்கு நான்கு பதில்கள் கொடுக்கப்பட்டு, சரியான பதிலை தேர்வு செய்யும் முறையில் இது நடத்தப்படும். மொத்தம் 200 கேள்விகள். சரியான ஒவ்வொரு பதிலுக்கும் ஒரு மதிப்பெண். ஒவ்வொரு தவறான விடைக்கும் 0.25 மதிப்பெண் கழிக்கப்படும். குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண் பெற்றவரே அடுத்தக்கட்டத்துக்கு நகர தகுதி பெற்றவர்கள் ஆவார்கள்.
அடுத்தகட்டமாக நடைபெறும் தேர்வு ஐ.பி.சி.சி. என்று அழைக்கப்படும் Integrated professional competence course. முதல்கட்டத் தேர்வு ஒரு வாசல் என்று எடுத்துக் கொண்டோமானால், இந்த இரண்டாம் கட்டம்தான் உண்மையில் ஒரு ஆடிட்டரை உருவாக்கக்கூடிய காலக்கட்ட்த்தினை கொண்டிருக்கிறது. சி.பி.டி. முடிந்து ஒன்பதுமாத காலம் இத்தேர்வுக்காக தயார் செய்துகொள்ள அவகாசம் வழங்கப்படுகிறது. இதற்கிடையே நூறு மணி நேரம் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான பயிற்சியும், முப்பத்தைந்து மணிநேர முனைப்புப் பயிற்சியும் (Orientation programme) ஐ.சி.ஏ.ஐ. நிறுவனத்தால் வழங்கப்படும்.
ஐ.பி.சி.சி. தேர்வில் மொத்தம் ஏழு பாடங்கள். ஒவ்வொரு பாடத்துக்கும் 100 மதிப்பெண்கள். குறைந்தபட்சம் 40 மதிப்பெண்கள் பெற்றவர்களே தேர்ச்சியடைந்தவர்களாக மதிப்பிடப் படுவார்கள். ஏழு பாடங்களும், இரண்டு பிரிவுகளாக பிரித்து தேர்வுகள் நடத்தப்படும். ஒவ்வொரு பாடத்திலும் 40 மதிப்பெண் எடுத்திருந்தாலும் கூட, ஒவ்வொரு பிரிவிலும் குறைந்தபட்சம் 50% மதிப்பெண் இலக்கை எடுத்திருக்க வேண்டும்.
இத்தேர்வில் தேறிவிட்டதுமே, நேரடி களப்பயிற்சிக்கு யாராவது ஆடிட்டர்களிடம் பணிக்கு சேரவேண்டும். அல்லது நிறுவனங்களிலும் கணக்கியல் தொடர்பான பணிகளில் சேரலாம். இந்த பயிற்சிக் காலத்தில் சம்பந்தப்பட்ட நிர்வாகம் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும். அந்நிறுவனங்கள் எவ்வளவு வழங்கவேண்டும் என்பதற்கான குறைந்தபட்ச அளவுகோல்கள் அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
இரண்டாம் கட்டத்தேர்வு மற்றும் மூன்று வருட நேரடிப் பணிப்பயிற்சி முடிந்தவர்களே இறுதித் தேர்வு எழுதலாம். பணிப் பயிற்சியில் இருக்கும் கடைசி ஆறு மாதங்களிலேயே இறுதித் தேர்வினை எழுதமுடியும். இறுதித் தேர்வின் ஒரு கட்டமாக பொது நிர்வாகம் மற்றும் திறன் வெளிப்படுத்தும் பயிற்சி ஒன்றையும் முடித்தாக வேண்டும்.
அதன் பின்னரே சி.ஏ. என்று அழைக்கப்படும் Chartered Accountant தேர்வு. இதுவும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நடத்தப்படும். ஒரு பிரிவுக்கு நான்கு என்ற அடிப்படையில் மொத்தம் எட்டு பாடங்கள். 40 சதவிகித மதிப்பெண்கள் பெற்றாலே தனிப்பாடத்தில் தேர்ச்சி என்றாலும், ஒவ்வொரு பிரிவிலும் ஒட்டுமொத்தமாக 50 சதவிகித மதிப்பெண்கள் எடுத்தாக வேண்டும்.
ஓக்கே. இப்போது நீங்களும் ஆடிட்டர்தான்.
மிகச்சுலபமாக ‘ஆடிட்டர்’ என்று சொல்லிவிட்டாலும், இந்த நான்கு வருடக் காலம் என்பது ஒவ்வொரு சி.ஏ. மாணவனுக்கும் மிகக்கடுமையானது. இன்றியமையாத ஒரு பணிக்கு தேர்ந்தெடுக்கப்படப் போகும் மாணவன் என்பதால் பாடத்திட்டம் மிக நுணுக்கமானதாகவும், சிரமமானதாகவும் இருக்கும். கவனச்சிதறல் இன்றி கற்பவர்கள் மட்டுமே வெற்றிக்கனியை ருசிக்க முடியும். ஆடிட்டர் ஆகிவிட்டால் அதன்பிறகு சமூகத்தில் கிடைக்கும் மதிப்பு, வருமானம் இவற்றைப் பற்றியெல்லாம் நாம் சொல்லவே வேண்டியதில்லை. ஏற்கனவே எல்லோருக்குமே தெரியும்.
சி.ஏ. வரை போகமுடியாது. கணக்காளனாக வேலை பார்க்க ஏதாவது படிப்பு ஐ.சி.ஏ.ஐ.யில் இருக்கிறதா என்று கேட்டீர்களேயானால், அதற்கும் ஒரு படிப்பு இருக்கிறது. முதல்கட்டத் தேர்வினை முடித்தவர்கள், இரண்டாம் கட்டத்தில் ஐ.பி.சி.சி. தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக அக்கவுண்டிங் டெக்னிஷியன் கோர்ஸ் (ஏடிசி) என்பதையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
+2வுக்குப் பிறகு, கல்லூரியில் வேறு ஏதாவது படித்துக்கொண்டே சி.ஏ., தேர்வு எழுதலாம் என்று சிலர் நினைக்கலாம். அதுபோல எழுதமுடியாது. இரண்டாம் கட்டத்தில் மூன்றுவருட நேரிடைப் பயிற்சி இருக்கிறது இல்லையா? அந்த மூன்று ஆண்டுகள் பயிற்சி எடுக்கும் அலுவலக நேரம் முழுவதிலும், சம்பந்தப்பட்ட மாணவர் பணியாற்ற வேண்டும் என்பது ஐ.சி.ஏ.ஐ.யின் விதி.
எனவே ஏதேனும் பட்டம் படித்துக் கொண்டே சி.ஏ., தேர்வினையும் எழுதவேண்டும் என்று நினைப்பவர்கள், தபால் வழியில் பட்டம் பெறுவதே சரியான முறையாக இருக்கும். இல்லையெனில் பட்டம் முடித்தபிறகு சி.ஏ., தேர்வுக்கு படிக்கலாம். +2 முடித்த ஒருவர் வழக்கமான வழியில் தேர்வுகளையும், பயிற்சிகளையும் முடித்தால் 21 வயதில் ஐ.சி.ஏ.ஐ.யால் அங்கீகரிக்கப்பட்ட ஆடிட்டர் ஆகிவிடலாம்.
சரி, செலவு எவ்வளவு ஆகும்?
மொத்தமாக இந்த நான்கு வருட காலத்தில் தேர்வுக்கட்டணம், பயிற்சிக் கட்டணம் எல்லாம் சேர்த்து இன்றைய நிலையில் நாற்பத்தைந்து ஆயிரம் வரை செலவாகும். இதையும் கூட நேரடிப் பயிற்சிக் காலத்தில் பெறும் ஊக்கத்தொகை மூலமாக சரிகட்டி விடலாம். தனியாக கோச்சிங் சென்டர்களில் சேர்ந்து படிப்பவர்கள் கூடுதலாக எழுபதாயிரம் ரூபாய் வரை செலவழிக்க வேண்டியிருக்கும்.
இந்திய ஆடிட்டர்களுக்கு உலகளவில் நல்ல மதிப்பு உண்டு. இங்கே சி.ஏ., படித்தவர்கள் வளைகுடா நாடுகளில் பெரிய நிறுவனங்களில், இலட்சக்கணக்கான ரூபாய் சம்பளத்தில் பணிக்கு சேர்த்துக்கொள்ளப் படுகிறார்கள். இக்கல்வி பற்றிய மேலதிகத் தகவல்களை http://www.icai.org என்கிற ஐ.சி.ஏ.ஐ. அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையத்தள முகவரியில் அறிந்து கொள்ளலாம்.
நீங்களும் ஆடிட்டராக வாழ்த்துகள்!

20 ஏப்ரல், 2010
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)