25 அக்டோபர், 2010

ஏனிந்த விலை உயர்வு?



ரமேஷ் நாமக்கல்லைச் சேர்ந்த இளைஞர். இருபதுகளின் மத்தியில் வயது. தற்போது சென்னையில் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். சொல்லிக் கொள்ளும்படியான வருமானம். ரமேஷுக்கு ஒரு கனவு உண்டு. திருமணத்துக்கு முன்பாக, ஊரில் சொந்தமாக ஒரு வீடு கட்டிவிட வேண்டும்.

கட்டிடத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் பலரிடமும் ஆலோசனை கேட்டு, தனது கனவு வீட்டுக்கான 'பட்ஜெட்'டை நிர்ணயித்தார். குருவி மாதிரி சிறுக சிறுக பணத்தை சேமித்தார். இப்போது பணம் ரெடி. தனது கனவு வீட்டை ஊரில் கட்டவும் ஆரம்பித்தார். ஆசையோடு திட்டமிட்டு கட்ட ஆரம்பித்த வீடு, இன்று பாதியில் நிற்கிறது. பட்ஜெட் பற்றாக்குறை!

ஏன், ரமேஷ் 'நறுக்'கென்று திட்டமிட்டு போட்ட பட்ஜெட்டில் துண்டு விழுகிறது?

ஏனெனில், மூன்று மாதங்களுக்கு முன்பு தோராயமாக, சிமெண்ட் விலை ஒரு மூட்டைக்கு ரூ.160, கட்டுமானக் கம்பி விலை (ஒரு டன்னுக்கு) ரூ.32000, ஜல்லி (ஒரு யூனிட்) ரூ.2000, செங்கல் (கல் ஒன்று) ரூ.3.50-க்கு விற்கப்பட்டுக் கொண்டிருந்தது. இன்றைய தேதியில் இப்பொருட்களின் விலை முறையே ரூ.290, ரூ.39000, ரூ.2500, ரூ.5 என்று அதிரடியாக விலை ஏறியிருக்கிறது. (ஊருக்கு ஊர், பொருளுக்கு பொருள் விலை வேறுபடலாம்)

"வங்கிக் கடனுக்காக பேயா அலைஞ்சுக்கிட்டிருக்கேன் சார். பின்னே பத்து லட்சரூபாய்க்கு எஸ்டிமேட் போட்டு வேலையை ஆரம்பிச்சா, முடிக்கும்போது பண்ணிரெண்டு லட்சம் ஆகுமுன்னா, என்னை மாதிரி நடுத்தரவர்க்கம் என்னதான் சார் செய்யும்?" என்கிறார் ரமேஷ் வருத்தமாக.

நடுத்தர வர்க்கத்துக்கு வீடு என்பது கனவு. வீடு கட்டும் பலரும் சந்திக்கிற நெருக்கடி என்னவென்றால் கட்டுமானப் பணியாளர்களின் ஊதியம். தமிழகத்தில் சராசரியாக, ஒரு நாளைக்கு கொத்தனாருக்கு/மேஸ்திரிக்கு ரூ.350 முதல் 400, சித்தாள் கூலி பெண்களுக்கு ரூ.100 முதல் 120 – ஆண்களுக்கு ரூ.150 வரை வழங்க வேண்டியிருக்கிறது. இதனால் ஒரு வீடு உருவாவதில் கட்டுமானப் பொருட்களின் விலைக்கு நிகராக தொழிலாளர் ஊதியமும் செலவாகிறது. உள்கட்டமைப்பு வேகமாக வளர்ந்து வரும் காரணத்தால், கட்டுமானத் தொழிலாளர்கள் ஒரே நேரத்தில் பல இடங்களில் பணிபுரிய ஒப்புக் கொள்கிறார்கள். தேவைப்படும் நேரத்தில் வேலைக்கும் அவர்களால் வரமுடிவதில்லை. இப்படிப்பட்ட சிக்கலான சூழலில் கட்டுமானப் பொருட்களின் 'திடீர்' விலை உயர்வு நடுத்தர வர்க்கத்துக்கு சொந்த வீடு என்பது கனவில் மட்டுமே தோன்றக்கூடிய ஒரு காட்சிப் பொருளாகி விடும்.

அடுத்த ஐந்தாண்டு திட்டத்தில் நாட்டில், கட்டமைப்பு வசதிகளுக்கு மட்டும் 47 இலட்சம் கோடி ரூபாய் மத்திய அரசால் திட்டமிடப்பட்டிருக்கிறது. இதில் ஐம்பது சதவிகிதப் பணிகள் சிமெண்டைச் சார்ந்தது. கட்டுமானப் பொருட்களின் விலை இதுபோல விண்ணுக்கு உயர்ந்து கொண்டிருந்தால், அரசு திட்டமிட்ட அளவில் பாதிகூட நாட்டின் உள்கட்டமைப்பில் வளர்ச்சி பெறாது.

அண்டைமாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாட்டில்தான் இந்த விலையேற்றம் அதிகமாக இருக்கிறது. கடந்த சில வாரங்களில் மட்டும் சராசரியாக 20 சதவிகிதம் கூடுதல் விலை கொடுத்து கட்டுமானப் பொருட்களை வாங்க வேண்டியிருக்கிறது.

செந்தில்குமார், சென்னைப் புறநகரில் 'பில்டிங் காண்ட்ராக்ட்' தொழில் செய்து வருகிறார். இவரது பெரும்பாலான வாடிக்கையாளர்கள் நடுத்தரவர்க்கத்தினரே. சிறியளவிலான அப்பார்ட்மெண்டுகளையும், தனிவீடுகளையும் கட்டித்தரும் ஒப்பந்தக்காரர் இவர்.

"வீடு கட்ட ஆரம்பிக்கும்போது வாடிக்கையாளரோடு ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொள்வோம். குறிப்பிட்ட காலக்கெடுவில், குறிப்பிட்ட பணத்துக்கு வீட்டை முடித்துக் கொடுத்தாக வேண்டும். கட்டுமானப் பொருள் வாங்குவது, தொழிலாளர் கூலியெல்லாம் கணக்கு போட்டு ஓரளவு நியாயமான லாபம் வரும் வகையில் அந்த ஒப்பந்தம் இருக்கும்.

திடீரென்று இதுபோல விலை ஏறினால், எங்களைப் போன்ற சிறிய ஒப்பந்ததாரர்கள் நஷ்டத்துக்குதான் வேலை பார்க்க வேண்டும். திடீரென்று விலை ஏறிவிட்டது என்று சொல்லி, ஒப்பந்தத்தில் இருக்கும் பணத்தைவிட அதிகமாகவா வீட்டுச் சொந்தக்காரரிடம் கேட்கமுடியும்? கேட்டாலும் கொடுத்துவிடுவார்களா?

பெரிய வேலை எடுத்துச் செய்யும் காண்ட்ராக்டர்களுக்கு வேண்டுமானால் விலையேற்றத்தால் லாபத்தில் கொஞ்சம் சதவிகிதம் குறையும். எங்களைப் போன்றவர்களுக்கு கைகாசை போட்டு வீட்டை முடித்துத் தருவதைத் தவிர வேறுவழியில்லை. ஏன் தான் இதுபோல தாறுமாறாக ஏறித் தொலைக்கிறதோ தெரியவில்லை" என்கிறார் செந்தில்குமார்.

ஏனிந்த 'திடீர்' விலை உயர்வு?

செந்தில் குமாரை போலவே யாருக்கும் சரியான விடை தெரியவில்லை. பொதுமக்களில் பெரும்பாலானோர் தமிழகத்தில் வெற்றிகரமாக நடந்து வரும் 'கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தை' நோக்கி கைகாட்டுகிறார்கள். நடைபெறும் நிதியாண்டில் 1800 கோடி ரூபாய் செலவில் மூன்று லட்சம் குடிசை வீடுகள் கான்க்ரீட் இல்லங்களாக, அரசு மானியத்தில் உருவாகி வருகிறது. ஒரு இல்லத்துக்கு ரூ.60,000 கட்டுமானப் பொருட்கள் செலவுக்காக அரசால் வழங்கப்படும். அதைக்கொண்டு குடிசைவீட்டுக்காரர் தன் இல்லத்தை 'எப்படியோ' கட்டிமுடித்துக் கொள்ள வேண்டியதுதான். பெரும்பாலானோர் இத்திட்டத்தில் கூலிக்கு ஆள் வைக்காமல், தாங்களாகவே வீட்டை கட்டிமுடித்துக் கொள்கிறார்கள்.

பெரிய எண்ணிக்கையில் ஒரே நேரத்தில் சுமார் 1800 கோடி ரூபாய்க்கு கட்டுமானப் பொருட்கள் வாங்கப்படும்போது தட்டுப்பாடு ஏற்படுவது சகஜம்தான். தட்டுப்பாட்டின் எதிர்வினை என்பது விலையேற்றம் என்பது பொருளாதாரத்தின் அடிப்படை விதிகளில் ஒன்று. ஆனால், 'கலைஞர் வீட்டு வசதித் திட்டம்' விலையேற்றத்துக்கான ஒரு சிறு காரணிதானே தவிர, அதுமட்டுமே காரணமல்ல.

பெட்ரோல்-டீசல் விலை மழைக்கால பருவநிலை மாதிரி அடிக்கடி மாறிக்கொண்டே (99 சதவிகித நேரங்களில் விலையேறிக்கொண்டே) இருப்பதும் ஒரு காரணம். எந்த ஒரு தொழிலுமே போக்குவரத்தை நம்பியே இருக்க வேண்டியிருக்கிறது. சிமெண்ட், கல், செங்கல், ஜல்லி என்று எல்லாப் பொருட்களுமே உற்பத்தியாகும் இடத்திலிருந்து, மொத்த விற்பனையாளருக்கு செல்லும். அங்கிருந்து சில்லறை விற்பனையாளர்களுக்கு, பின்னர் அவர்களிடமிருந்து கட்டுமானம் நடக்கும் இடத்துக்கு என்று மாறிக்கொண்டேயிருக்கும். எனவே இத்தொழிலில் போக்குவரத்துக்கு தவிர்க்கவியலா இடம் இருக்கிறது. போக்குவரத்துக்கு பெரும்பாலும் லாரி பயன்படுத்தப் படுகிறது. எனவே நிலையில்லா பெட்ரோல்-டீசல் விலை நிலவரமும் விலையேற்றத்துக்கு இன்னுமொரு காரணம். இதுபோல சிறு சிறு காரணங்கள் ஏராளம். அவற்றில் பலவும் நியாயமானவையும் கூட.

முக்கியமான இன்னொரு காரணம் உண்டு.

இந்த 'பகீர்' விலையேற்றத்துக்கு சிமெண்ட் நிறுவனங்களே முழுக்க முழுக்க காரணம் என்று குற்றம் சாட்டுகிறார்கள் இந்திய கட்டிட வல்லுனர் சங்கத்தினர்.

இந்த சங்கத்தின் தென்னக மையத்தின் தலைவர் மு.மோகன் சொல்கிறார்.

"சிமெண்ட் விலை வரலாறு காணாத விதத்தில் 10 நாட்களில் இரண்டு மடங்காக உயர்ந்திருக்கிறது. இதையடுத்தே மற்ற கட்டுமானப் பொருட்களும் கூடவே கொஞ்சமாக விலையை கூட்டிக் கொண்டன. இதற்கு காரணம் சிமெண்ட் உற்பத்தியாளர்கள் கூட்டாக லாபக்கூட்டணி அமைத்திருக்கிறார்கள் என்று நாங்கள் கருதுகிறோம்.

கட்டமைப்பு வசதிகள் பெருகிவரும் சூழலில், வேண்டுமென்றே தட்டுப்பாட்டை உருவாக்கி லாபத்தை அதிகப்படுத்துகிறார்கள். சிமெண்டுக்கான மூலப்பொருளை அரசுதான் அவர்களுக்கு குறைந்த விலைக்கு தருகிறது. அரசின் தண்ணீர், மின்சாரம் ஆகியவற்றை கொண்டு உற்பத்தி செய்பவர்கள், விலையேற்றத்துக்கு அரசிடம் அனுமதி பெறுவதேயில்லை.

எனவே சிமெண்டை அத்தியாவசியப் பொருளாக அரசு அறிவித்து, விலை என்னவென்று அரசே நிர்ணயிக்க வேண்டுமென்று கோரியிருக்கிறோம்" என்று முடித்துக் கொண்டார்

வடமாநிலங்களில் கடுமையான மழை. தென்மாநிலங்களிலும் ஓரளவிற்கு மழை. எனவே நாட்டில் சிமெண்டின் பயன்பாடு தற்போது குறைவாகவே இருக்கிறது. சிமெண்ட் உற்பத்திக்கான மூலப் பொருட்களின் விலையும் உயரவில்லை. ஆயினும் சிமெண்டின் விலை இருமடங்காக உயர்கிறது என்பதை காணும்போது மோகனின் பேச்சில் இருக்கும் நியாயம் புரிகிறது. (சிமெண்ட் விலை நியாயமாக என்ன இருக்க வேண்டுமென்பதை பெட்டிச் செய்தியில் காண்க)

ஏற்கனவே மழைக்காலம். இந்த லட்சணத்தில் கட்டுமானப் பொருட்கள் விலையேற்றத்தால் கட்டுமானத் தொழிலாளர்கள் வேலையிழப்பது கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

கட்டுமானப் பொருட்களின் விலையேற்றம் என்பது செயற்கையானது – சில நிறுவனங்களின் லாபக்கணக்குக்காக ஏற்படுத்தப்படுகிறது - என்றால் அது கடுமையாக மக்களை பாதிக்கும் ஒரு செயல். Lime Stone என்பது நாட்டின் கனிமவளம். இதை மிகக்குறைந்த மதிப்புக்கு அரசிடமிருந்து பெற்று சிமெண்ட் தயாரிக்கும் நிறுவனங்கள், தங்கள் உற்பத்திப் பொருளை மட்டும் பன்மடங்கு விலைக்கு மக்களுக்கு விற்பது நியாயமல்ல.

தொழிற்சாலை அமைக்கக் கோரும்போது சிமெண்ட் நிறுவனங்கள் ஒப்புக்கொண்ட உற்பத்திறன் என்ன? அந்த உற்பத்தித் திறன் எல்லா நேரத்திலும் செயல்படுத்தப்படுகிறதா போன்ற விஷயங்களை அரசு கண்காணிக்க வேண்டும். போலியான தட்டுப்பாட்டை உருவாக்கி, கொள்ளை லாபம் சம்பாதிப்பதை தடுக்க வேண்டும்.

தேவைப்பட்டால் கட்டிட வல்லுனர் சங்கம் கோருவதைப் போல சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களை அத்தியாவசியப் பொருளாக அறிவித்து, அரசே விலை நிர்ணயம் செய்ய முன்வரவேண்டும்.

இல்லையேல், எத்தனை 'கலைஞர் வீட்டு வசதித் திட்டம்' கொண்டுவந்தாலும் வீடு என்பது பலருக்கும் கனவில் மட்டுமே சாத்தியமாகும் திட்டமாக போய்விடும்.


எக்ஸ்ட்ரா மேட்டர் :

சிமெண்ட் (டன் ஒன்றுக்கு) உற்பத்திச் செலவு (இலாபம் உட்பட) - 1275.00

VAT 12.5%- 159.00

சிமெண்ட் மீதான சுங்கவரி (தீர்வை உட்பட) - 408.00

லைம் ஸ்டோன் மீதான ராயல்டி மற்றும் தீர்வை - 69.00

பவர் டாரிஃப் - 22.00

மற்ற பொருட்களுக்கான விற்பனை வரி (Stores Spare, rawmaterials etc.)- 27.00

சுங்கவரி – Stores & Spares - 23.00

சேவைவரி, Sundries etc. - 5.00

பேக்கிங் செலவு - 106.00

போக்குவரத்து - 700.00

மொத்தம் (ஒரு டன்னுக்கு) - 2794.00

ஒரு டன் = 20 மூட்டை

எனவே ஒரு மூட்டை சிமெண்ட் விற்கப்பட வேண்டிய விலை ரூ.140 மட்டுமே. ரூ.290க்கு விற்கப்படுகிறது என்றால் மீதி 150 ரூபாய்க்கு சிமெண்ட் நிறுவனங்கள் என்ன கணக்கு வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

(நன்றி : புதிய தலைமுறை)

23 அக்டோபர், 2010

சிங்கத்தின் தீபாவளி ஸ்டார்ட்ஸ்...

இந்த தீபாவளிக்கு என்ன ஸ்பெஷல்?

3டி மேக்ஸ் புடவை..

மல்டி மசகலி சல்வார்..

குந்தன் ஒர்க் சுரிதார் மெட்டீரியல்..

காட்டன் மஸ்லின் சட்டை..

பொந்தூர் வேட்டி..

பிளாக்பெர்ரி பெர்ல்3ஜி9100..

ஸ்டேண்டர்ட் மார்க் பட்டாசுகள்..

பாசிப்பருப்பு அல்வா, முள்ளு முறுக்கு..

உங்கள் சாய்ஸ் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

ஆனால் காமிக்ஸ் ரசிகர்களின் பல்லாண்டுகால வனவாசம் இந்த தீபாவளியோடு முடிவுக்கு வருகிறது.

என்னது காமிக்ஸா? குழந்தைகள்லாம் படிக்குமே.. அதுவா? என்று முகம் சுளிக்கிறீர்களா?

வெயிட் பண்ணுங்க ஜெண்டில்மேன். உங்களுக்காக ஒரு தகவல்..

இன்றைய தேதியில் தமிழில் காமிக்ஸ் படிப்பவர்கள் அனைவரும் இருபது வயதுக்கு மேற்பட்டவர்களாகவே 80 சதவிகிதம் பேர் இருக்கிறார்கள் என்று ஏதோ ஒரு அமைப்பின் ஏதோ ஒரு கணக்கெடுப்பு கூறுகிறது.

இது நிச்சயமாக குழந்தைகள் சமாச்சாரம் அல்ல.

ஏனெனில்..

1960களின் இறுதியில் 'மாலைமதி காமிக்ஸ்' வெளிவந்து கொண்டிருந்தது. ஒரு இதழின் விலை 75 காசு. உங்கள் தாத்தாவோ, அப்பாவோ அந்த காலத்தில் வாங்கி பரண் மேல் போட்டு வைத்திருந்தார்களேயானால் தூசு தட்டி எடுத்து வையுங்கள். ஒரு இதழ் இன்று பிரிமீயம் ரேட்டில் 4000 ரூபாய் வரை விலை போக வாய்ப்புண்டு.

1987ல் வெளிவந்த லயன் காமிக்ஸ் தீபாவளி மலரின் விலை ரூ.10. இன்று அதனுடைய மதிப்பு ஆயிரம் மடங்கு மார்க்கெட்டில் உயர்ந்திருக்கிறது. ஏனெனில் சமீபத்தில் அந்தப் புத்தகத்தை ஒரு நண்பர் ரூ.10,000 கொடுத்து வாங்கியிருக்கிறார்.

நான் கூட சில ஆயிரங்களை கொட்டி, மிஸ்ஸாகிவிட்ட பழைய சில காமிக்ஸ்களை வாங்கி சேகரித்து வைத்திருக்கிறேன். உடனே சேல்ஸுக்கு கிடைக்குமா? படிக்க கிடைக்குமா? என்று பின்னூட்டம் போட்டு டார்ச்சர் செய்து தொலைக்காதீர்கள். காமிக்ஸ் விஷயத்தில் நான் ஒரு தீவிர சைக்கோ.

காமிக்ஸ் என்பது Passion சார்.. Passion.. ஸ்டேம்ப் கலெக்சன், காயின் கலெக்சன் மாதிரி..

70களிலும், 80களிலும் குழந்தைகளாக இருந்து ஒண்ணரை ரூபாய் இல்லாமல் காமிக்ஸ் வாங்க முடியாதவர்கள் இன்று லட்சம் லட்சமாக சம்பாதிக்கிறார்கள். தாங்கள் இழந்துவிட்ட பால்யகால ஒண்ணரை ரூபாய் பரவசத்தை இன்று ஆயிரங்களில், லட்சங்களில் வாங்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த நேற்றைய குழந்தைகள்.

கஷ்டப்பட்டு ஏதோ ஸ்டேட்டிஸ்டிக்ஸ் எல்லாம் அள்ளிவிட்டிருக்கோம். இப்போதாவது இது சீரியஸ் மேட்டர் என்று நம்புங்க ப்ளீஸ். ஏதோ பார்த்து போட்டு கொடுங்க சாமி.

ஓக்கே, கமிங் டூ த பாயிண்ட்..

மேலே நாம் குறிப்பிட்ட காமிக்ஸ் வெறியர்கள் சாதாரணமாகவே இரும்புக்கை மாயாவி, ஸ்பைடர் என்று வெறியாட்டம் ஆடக்கூடியவர்கள். நான்கைந்து தீபாவளிகளாக பெரியதாக 'ஸ்பெஷல்' எதுவும் இல்லாமல் முடங்கிக் கிடந்தவர்கள். இந்த தீபாவளிக்கு 854 பக்கங்களில், 200 ரூபாய் விலையில் இந்திய காமிக்ஸ் வரலாற்றிலேயே முதன் முறையாக 'லயன் ஜம்போ ஸ்பெஷல்' வெளிவருகிறது. கிட்டத்தட்ட 'எந்திரன்' ரிலீஸுக்கு இருந்த எதிர்ப்பார்ப்பு இந்த புக்குக்கும் இருக்கிறது என்றால் நம்புங்கள். 'தலைவா வா. தலைமையேற்க வா'வென்று காமிக்ஸ் ரசிகர்கள், லயன் காமிக்ஸ் ஆசிரியர் விஜயனுக்கு போஸ்டர் ஒட்டாததும், ஜம்போ ஸ்பெஷலுக்கு கட்டவுட் வைக்காததும்தான் பாக்கி.

854 பக்கமும் ஒரே கதைதான் என்பது இந்த ஸ்பெஷலின் ஸ்பெஷல். விஷ்ணுபுரத்தை மிஞ்சும் இந்த ஸ்பெஷலை கண்டால் ஜெயமோகன் நொந்துப் போவார். தீவிர காமிக்ஸ் ரசிகரான எஸ்.ராமகிருஷ்ணன் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுவார். எஸ்.ரா மட்டுமல்ல.. இயக்குனர் மிஸ்கின், நடிகர் பொன்வண்ணன் மாதிரி நிறைய வி.ஐ.பி. காமிக்ஸ் ரசிகர்கள் உண்டு.

ஆங்கிலத்தில் 'எக்ஸ்19' சீரியஸ் காமிக்ஸ் மிகப்பிரபலம். கிட்டத்தட்ட 20 ஆண்டுகாலம் தொடர்ச்சியாக தனித்தனி புத்தகங்களாக வந்து பெரும் வரவேற்பை பெற்றது. இந்த கதையிலிருந்துதான் 'வெற்றி விழா' திரைப்படத்தை பிரதாப் போத்தன் சுட்டார் என்று கூட கிசுகிசு உண்டு. கதையைப் படித்துப் பார்த்தால் அந்த கிசுகிசு உண்மைதான் என்றுகூட தோன்றும்.

கடற்கரையில் மயங்கிய நிலையில் விழுந்து கிடக்கிறான் ஹீரோ. முழித்ததும் தன் பெயர்கூட அவனுக்கு நினைவில்லை. தன் அடையாளத்தை தேடிப் புறப்பட்டவனுக்கு அடுத்தடுத்து பல அதிர்ச்சிகள். அவன் நல்லவனா கெட்டவனா கொலைகாரனா தேசத்துரோகியா கல்யாணமானவனா பொண்டாட்டி இருக்கிறாளா என்று குழம்பித் திரிய வேண்டிய சூழல். சில பேர் அவனை வரவேற்கிறார்கள். பலர் அவனை கொல்லத் துடிக்கிறார்கள். நினைவிழப்பதற்கு முன்பான வாழ்க்கையை தேடிச் செல்லும் நாயகனின் கதையில் சோகம், மகிழ்ச்சி, ஆக்‌ஷன் என்று எல்லா மசாலா செண்டிமெண்டுகளும் உண்டு. கட்டத்துக்கு கட்டம் ஒருவகையான இலக்கிய சோகம் இந்த கதை முழுக்க ஊடே வந்துகொண்டிருக்கும். ஒரு கட்டத்தில் 'சேது' படம் பார்க்கும் மனநிலை கூட தோன்றக்கூடும்.

ஓவியங்கள் ஒவ்வொன்றும் கல்வெட்டில் பொறிக்கப்பட வேண்டிய முத்துகள். இவ்வளவு சிறப்பான ஓவியங்களோடு உலகளவில் எந்த காமிக்ஸும் வந்ததில்லை என்று தாராளமாக பெட் கட்ட முடியும். ஒவ்வொரு கட்டத்திலும் ஓவியரின் துல்லியம், டீடெய்லிங் அபாரமாக அமைந்திருக்கும்.

ஆங்கிலத்தில் மொத்தம் 19 புத்தகங்களாக வெளிவந்தது.

தமிழில் 'இரத்தப் படலம்' என்று பெயரிட்டு மொழிமாற்றி லயன் காமிக்ஸ் வெளியிட்டு வந்தது. இப்போது ஒட்டுமொத்த 19 புத்தகங்களையும் ஒரே புத்தகமாக லயன் கொண்டு வருகிறது. இதுதான் லயன் ஜம்போ ஸ்பெஷல். 854 பக்கங்களில் காமிக்ஸ் என்று உலகளவில் இப்படியான ஒரு முயற்சி அனேகமாக இதுதான் முதல் தடவையாக இருக்கக்கூடும். ஆங்கிலத்திலேயே கூட ஒரே புத்தகமாக வந்ததில்லை. 19 புத்தகங்களையும் வாங்க ரூ.4000 வரை செலவு செய்ய வேண்டியிருக்கும்.

ஒரு சேல்ஸ்மேனின் லாவகத்தோடு இந்தப் பதிவினை எழுதி வருகிறேன். அனேகமாக இன்னேரம் இப்புத்தகத்தை வாங்கும் எண்ணம் உங்களுக்கு தோன்றியிருக்கலாம். சாரி ஜெண்டில்மேன். காமிக்ஸ் கலெக்டர்ஸ் ஸ்பெஷலான இந்தப் புத்தகம் கடைகளில் கிடைக்கவே கிடைக்காது.

வேறெப்படி வாங்குவது?

உடனடியாக ரூபாய் 230க்கு (புத்தகத்தின் விலை ரூ.200 + கூரியர் செலவு ரூ.30) மணி ஆர்டர் அல்லது "Prakash Publishers" என்ற பெயரில் காசோலை எடுத்து, Prakash Publishers, No 8/D-5, Chairman P.K.S.S.A Road, Amman Kovil Patti, Sivakasi, 626189 என்ற முகவரிக்கு அனுப்பலாம்.  04562 272649, 04562 320993 ஆகிய எண்களுக்கு (காலை 10.30 டூ மாலை 5.30) தொலைபேசியும் மேலதிக விவரங்களைப் பெறலாம்.

ஏற்கனவே 800 பிரதிகள் அட்வான்ஸ் புக்கிங் ஆகிவிட்டது. நிறைய பக்கங்கள் என்பதால் 'பைண்டிங்' செய்வது கொஞ்சம் சிரமம். எனவே 50, 50 புத்தகங்களாக தயார் செய்து முன்பதிவு செய்தவர்களுக்கு அனுப்பி வருகிறார்கள். முந்துவோருக்கு பிரதிகள் நிச்சயம் கிடைக்கும்.

ஜம்போ ஸ்பெஷலோடு லயன் காமிக்ஸாரின் தீபாவளி கொண்டாட்டம் முடிந்துவிடவில்லை. அடுத்தடுத்து அதிரடியாக சரக்குகளை இறக்க திட்டமிட்டிருக்கிறார்கள். அடுத்த மூன்று மாதங்களில் வெளிவர இருக்கும் புத்தகங்கள் : வெள்ளையாய் ஒரு வேதாளம் (சிக் பில்), சாத்தானின் தூதன் டாக்டர் செவன் (காரிகன்), காவல் கழுகு (டெக்ஸ் வில்லர்) ஆகியவை லயன் காமிக்ஸிலும், களிமண் மனிதர்கள் (இரும்புக் கை மாயாவி), கொலைகார கோமாளி (ஜானி நீரோ) ஆகியவை காமிக்ஸ் கிளாசிக்ஸ் பிராண்டிலும், விண்ணில் ஒரு குள்ளநரி (விங் கமாண்டர் ஜார்ஜ்), மரணத்தின் நிசப்தம் (ரிபோர்டர் ஜானி)  ஆகியவை முத்து காமிக்ஸ் பிராண்டிலும் வெளிவர இருக்கிறது. 75 ரூபாய் செலுத்தி மொத்தமாக இந்த 7 புத்தகங்களையும் கூட வாங்கிக் கொள்ளலாம்.

இந்த ஏழு புத்தகங்களுக்கு பிறகு தமிழ் காமிக்ஸுக்கு புத்துயிர் பாய்ச்சும் மிகப்பெரிய முயற்சி ஒன்று நடைபெறவிருக்கிறது. அது என்னவென்று ஜம்போ ஸ்பெஷலின் ஹாட்லைனில் ஆசிரியர் எஸ்.விஜயன் சொல்லியிருக்கிறார்.

ஹேப்பி தீபாவளி ஃபோக்ஸ்!

 காமிக்ஸ் குறித்த விரிவான, தொடர்ச்சியான தகவல்களுக்கு நண்பர் கிங்விஸ்வாவின் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பூவை வாசிக்கலாம்!

 

22 அக்டோபர், 2010

வீம்புக்காரத் தமிழர்!

1980களில் தமிழகம் முழுக்கவே கடுமையான தண்ணீர்த் தட்டுப்பாடு. கோடைக்காலத்தில் கிணறுகளில் தண்ணீர் சுரப்பதற்கான சுவடுகளே தெரியாது. அவர் ஒரு கடப்பாரை, ஒரு கூடை, ஒரு கயிறு இதை மட்டும் எடுத்துக்கொண்டு ஒரு குழி வெட்டத் தொடங்கினார். உண்மையில் தானே ஒரு ஆழமான கிணறு தோண்டி தன் வீட்டுக்குத் தேவையான நீர்த்தேவையை பூர்த்தி செய்வது அவரது திட்டம். விலங்கியல் முதுகலை பட்டதாரி ஆசிரியர், அவரே அவர் வீட்டில் கிணறு தோண்டிக் கொண்டிருக்கிறார் என்று கேட்டால் மற்றவர்கள் சிரிக்க மாட்டார்களா?

மூன்று அடிக்கு மூன்று அடி குழி ஆரம்பத்தில் ரெடி. கேட்டவர்களிடம் தென்னம்பிள்ளைக்கான குழி என்றார். குழியின் அளவு பெரியதாகி பள்ளமாய் தோன்றியது. இப்போது கேட்டவர்களிடம் கழிப்பறைக்கான குழி என்றார். இன்னும் பள்ளம் பெரியதாகி, ஓரளவுக்கு கிணறு போன்ற தோற்றம் கிடைக்க அவரால் உண்மையை மறைக்க இயலவில்லை. "நானே சொந்தமாய் கிணறு வெட்டுகிறேன்" என்று சொன்னபோது, அக்கம் பக்கம் சிரித்தது. வேலையற்ற வேலை என்று தலையில் அடித்துக் கொண்டது.

அவரோ விடாமல் தோண்டி, தோண்டி ஒருநாள் இலக்கை அடைந்தார். ஊரெல்லாம் வற்றிக் கிடக்க, அவர் தோண்டிய கிணற்றில் மட்டும் நீர் சுரந்துக் கொண்டே இருந்தது. கேலி பேசியவர்கள் குடத்தை எடுத்துக் கொண்டுவந்து நீர் பிடித்துச் சென்றார்கள்.

பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதியில் இவரை வீம்புக்கார மனுஷன் என்கிறார்கள். வீம்புக்கு வேறு சில பெயர்களும் தமிழில் உண்டு. தன்னம்பிக்கை. விடாமுயற்சி. சுறுசுறுப்பு.

அந்த மனிதர் பொள்ளாச்சி நசன். தமிழ்க்கனல் என்ற பெயரில் இலக்கிய வட்டாரங்களில் பிரபலம். "எந்த வேலையையும் என்னால் செய்ய முடியும் என்பதை நிரூபிக்கவே நான் கிணறு தோண்டினேன். அது நிச்சயமாக வெட்டி வீம்பு அல்ல. செய்யும் வேலையை நெஞ்சில் நிறுத்தி, தொடர்ச்சியாக எதைப்பற்றியும் கவலைப்படாமல், சோர்ந்துவிடாது இலக்கை அடையும் வரை இயங்கிக்கொண்டே இருந்தால் வெற்றி என்பதைத் தவிர வேறென்ன கிடைக்கும்?" என்கிறார் நசன். இப்போது 58 வயதாகிறது. 25 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆசிரியப்பணியை செம்மையாக செய்து, கடந்தாண்டு அந்தப் பணியில் இருந்து மட்டும் ஓய்வு பெற்றிருக்கிறார். தமிழார்வலரான இவருடைய தமிழ்ப்பணிகள் தொடர்கிறது.

இவருடைய உண்மையான பெயர் நடேசன். பெயரில் "டே" இருப்பது அவருக்கு மரியாதைக் குறைவாக பட்டதால், அதை நீக்கிவிட்டும் 'வெறும்' நசன் ஆகிவிட்டார். "பின்னே நாமளே நம்மை 'டேய்' போட்டு கூப்பிடறதை அனுமதிக்கமுடியுமா?" என்கிறார் வீம்புடன். மன்னிக்கவும், தன்னம்பிக்கையுடன். நசன் என்ற இந்தப் பெயர் சுயமரியாதை கொண்டது மட்டுமல்ல. தனித்துவமும் பிரபலமும் கூட கொண்டிருக்கிறது. 'நசன், பின்கோடு - 642 006' என்று அஞ்சலட்டையில் முகவரி எழுதி அனுப்பினாலே அவருக்கு சென்று சேர்ந்து விடுகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்?

கிணறு வெட்டுவது, பெயரில் 'டே'யை நீக்கியது என்றில்லாமல், இன்னும் ஏராளமான 'இண்டரெஸ்டிங்' விஷயங்கள் பொள்ளாச்சி நசனிடம் உண்டு.

1985ல் விடுதலைப்பறவை என்ற பெயரில் ஒரு சிறுபத்திரிகையை நடத்தினார். கவிதை, துணுக்கு, குறிப்பு என்று பல்சுவையான விஷயங்களை அவரே எழுதுவார். உருட்டச்சு இயந்திரம் ஒன்றினை (கிட்டத்தட்ட ஜெராக்ஸ் மாதிரி – ஆனால் ஜெராக்ஸ் அல்ல) அவரே உருவாக்கி, அதில் 100 பிரதிகள் அச்சடித்து கிடைத்த முகவரிக்கெல்லாம் தபாலில் அனுப்பி வைப்பார். இதுமாதிரி மொத்தம் 34 இதழ்கள் மாதந்தோறும் உருட்டி, உருட்டி ஊருக்கெல்லாம் அனுப்பி வைத்திருக்கிறார். விடுதலைப் பறவையில் தனக்கு வாசிக்க கிடைத்த சிற்றிதழ்களை எல்லாம் பட்டியலிட்டு அறிமுகப்படுத்துவார்.

இதைக்கண்ட நண்பர்கள் சிலர், அவரவருக்கு தெரிந்த சிற்றிதழ்களை இவருக்கு அறிமுகப்படுத்த, சிற்றிதழ்களை அறிமுகப்படுத்தவென்றே ஒரு பத்திரிகை தொடங்கினாலென்ன என்றொரு 'ஐடியா' இவருக்கு தோன்றியது. ஆரம்பித்து விட்டது அடுத்த திட்டம். இம்முறை உருட்டச்சுப் பத்திரிகையாக இல்லாமல், நேரடியாக அச்சுப் பத்திரிகையாக மலர்ந்தது 'சிற்றிதழ் செய்தி'. முதல் இரண்டு இதழ்கள் அச்சகம் ஒன்றில் அச்சடிக்கப்பட்டது.

மூன்றாவது இதழிலிருந்து இவரே ஒரு அச்சகம் தொடங்கி அச்சிட ஆரம்பித்தார். வழக்கம்போல முதலாளியும் இவரே. தொழிலாளியும் இவரே. அச்சகம் என்றால் பெரிய பிரிண்டிங் பிரஸ் என்று நினைத்து விடாதீர்கள். ஏழைக்கு ஏற்ற எள்ளுருண்டை என்பது மாதிரி, கையால் சுற்றும் 'டிரெடில்' மிஷின் ஒன்று. 20 கிலோ அலுமினிய அச்சு எழுத்துகள். 5 கிலோ தலைப்பு எழுத்துகள். அச்சுக்கோர்க்க பழகி இவரே ஒவ்வொரு எழுத்தாக எடுத்து கோர்த்து, பிழை திருத்தி, இயந்திரத்தில் ஏற்றி ஃபார்ம் தயாரிப்பார்.

மிஷினை கையால் சுற்றிவிட யாரையாவது உதவிக்கு வைத்துக் கொண்டு, தாளை வைத்து அச்சாக்கி எடுப்பார். சிற்றிதழ் செய்தி என்பது சிற்றிதழ்களின் தொடர்புக்காகவும், இணைப்பிற்காகவும் வெளிவந்த இதழ். ஆரம்பத்தில் இருமாத இதழாக வந்தது. பின்னர் இலக்கிய அபிமானிகளிடம் பெரியளவிலான வரவேற்பினைத் இதுபெற்ற போதிலும் நசனால் தொடர்ந்து நடத்த இயலவில்லை. ஏனெனில் ஒவ்வொரு இதழைத் தயாரிக்கவும் அச்சுக்கோர்த்து, பிழைத்திருத்தி, எழுத்துகளைப் பிரித்துப் போட்டு வேலை பார்த்ததால் அவரது கண்பார்வை மங்கத் தொடங்கியது. கண்ணாடி நிரந்தரம் ஆனது.

மொத்தம் 34 இதழ்கள் சிற்றிதழ்ச் செய்தி வந்திருக்கிறது. அவற்றில் கடைசி சில இதழ்கள் கணினியில் அச்சுக்கோர்க்கப்பட்டு, ஆஃப்செட் முறையில் அச்சானவை. அந்த வேலையையும் சொந்தமாக ஒரு கம்ப்யூட்டர் வாங்கி நசனே வடிவமைத்துச் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இடைப்பட்ட காலத்தில் நிறைய சிற்றிதழ்கள் இவருடைய சேகரிப்பில் சேர்ந்ததால் அவற்றை தமிழகம் முழுக்க ஆங்காங்கே கண்காட்சிகளாக வைத்து இலக்கிய ஆர்வலர்களை கவர்ந்தார். மொத்தம் 15 இடங்களில் கண்காட்சி நடத்தப்பட்டிருக்கிறது. மதுரைப் பல்கலைக் கழகத்தில் கண்காட்சி வைத்தபோது, சில தமிழ்சார்ந்த அறிவுஜீவிகள் 'விலங்கியல் படித்தவருக்கு தமிழில் என்ன வேலை?' என்று விசனப்பட, நம்மாளுக்கு மீண்டும் 'ரோஷம்' பொத்துக்கொண்டு வந்தது. உடனே தமிழ்முதுகலை படித்து, இரண்டே ஆண்டுகளில் முதல் வகுப்பு பட்டம் பெற்றார்.

1999 வரை சிற்றிதழ்ச் செய்தி இதழ் வெளிவந்தது. இக்காலக் கட்டம் வரை சுமார் 2700 வகையான சிற்றிதழ்கள் நசனின் சேகரிப்புக்கு கிடைத்தது. 1985க்குப் பிறகுவந்த கிட்டத்தட்டஎல்லா தமிழ்ச் சிற்றிதழ்களும் இன்று பொள்ளாச்சி நசனிடம் இருக்கிறது.

தமிழ்த்தேசிய சிந்தனையாளரான தோழர் தியாகு சென்னையில் ஒரு தாய்த்தமிழ்ப் பள்ளி தொடங்கினார். அந்தப் பள்ளியின் ஆசிரியர்களோடு பழகக்கூடிய வாய்ப்பு நசனுக்கு கிடைத்தது. தாய்மொழிக் கல்வியில் அடிப்படைக் கல்வியை கற்பது ஒரு மாணவனின் அறிவுக் கண்ணுக்கு திறவுகோலாக இருக்குமென்று உணர்ந்தார். திருப்பூர், பல்லடம், கோபியென எங்கெல்லாம் தாய்த்தமிழ்ப் பள்ளி இயங்குகிறதோ அங்கெல்லாம் சென்று எப்படி நடத்தப்படுகிறது என்று ஆராய்ந்தார். வழக்கம்போல இவரே ஒரு தாய்த்தமிழ்ப் பள்ளியை சூளேசுவரன் பட்டியில் தொடங்கி இன்றும் நடத்தி வருகிறார். சுமார் 140 குழந்தைகள் படிக்கிறார்கள்.

சோதனைமுறையில் இப்பள்ளியில் புதுமையான கற்பித்தல் முறை ஒன்றினை நடத்தி பெரும் வெற்றியும் கண்டார். வெறும் 32 அட்டைகளில் சில பாடங்களை உருவாக்கினார். இவற்றை மட்டுமே படிக்கும் மாணவர்கள், வெறும் மூன்றே மாதங்களில் தமிழ்ச் செய்தித்தாளை படிக்குமளவுக்கு தமிழில் தேறிவிடுகிறார்கள். இந்த கற்பித்தல் முறை கோவை மாவட்டம் முழுவதும் ஒருமுறை பயன்படுத்தப்பட்டு நல்ல வெற்றியும் கண்டது. தமிழே அறியாத ஒருவரும் மூன்று மாதங்களில் தமிழைப் படிக்கக்கூடிய அளவுக்கு இந்த பாடங்களை எளிமையாக, நுணுக்கமாக அமைத்திருக்கிறார் நசன்.

தன்னுடைய பல்லாண்டுகால சிற்றிதழ் சேகரிப்புகளையும், எளியவழித் தமிழ்க் கற்பித்தலையும் சொந்தமாக தமிழம்.நெட் (thamizham.net) என்ற இணையத் தளத்தை தொடங்கி அதில் மொத்தமாக பதிவேற்றி இருக்கிறார். இந்த இணையத்தளத்தில் ஆங்கிலவழி தமிழ் கற்பித்தலுக்கான இணைப்பு இருக்கிறது. 35 பாடங்களில் தமிழைக் கற்றுக் கொள்ளலாம். இவை தொடக்க நிலைப் பாடங்கள். மேற்கொண்டு தமிழைக் கற்றுக் கொள்ள வேண்டுமானால் அதற்கும் சி.டி. வடிவிலான பாடங்கள், படவடிவக் கோப்புகள், அட்டைகள் என்று நிறைய உருவாக்கி வைத்திருக்கிறார். இணையம், சி.டி. போன்றவற்றை அவை தொடர்பான எச்.டி.எம்.எல் போன்ற கணினி தொழில்நுட்பங்களை கற்று, வழக்கம்போல நசனே உருவாக்கியிருக்கிறார் என்பதை நாம் குறிப்பிடாமலேயே நீங்கள் இன்னேரம் யூகித்து விட்டிருப்பீர்கள்.

"என்னுடைய இளமைக்காலம் உணவுக்காக ஏங்கிய காலம். பெருங்காய மூட்டை சுமந்து என்னுடைய அப்பா எங்களை காப்பாற்றினார். 74ல் பட்டம் முடித்த எனக்கு 80ல்தான் வேலை கிடைத்தது. 25 ஆண்டுகள் முழுமையான ஆசிரிய வாழ்வை வாழ்ந்திருக்கிறேன். நல்ல மாணவர்களை கண்டறிந்து, அவர்களை வளர்த்தெடுக்கும் நிறைவு வேறு எந்தப் பணியிலுமே கிடைக்காது. நம் மாணவர்கள் நம்மை விடவும் சிறப்பாகவும், திறமையாகவும் இயங்குவது கொடுக்கும் நெகிழ்வுத்தன்மை வேறெங்கு கிடைக்கும். பணியிலிருந்து கிடைத்திருப்பது வயதுரீதியிலான ஓய்வு. என்னுடைய தமிழுக்கு ஏது ஓய்வு? அது தொடந்துகொண்டேயிருக்கும்" என்று நெகிழ்ச்சியாக முடிக்கிறார் நசன்.

என்றாவது, எங்காவது வீராப்பான ஒரு தமிழரை நீங்கள் காணக்கூடும். உற்றுப் பாருங்கள். ஒருவேளை அவர் பொள்ளாச்சி நசனாகவும் இருக்கக்கூடும்.

(நன்றி : புதிய தலைமுறை)

20 அக்டோபர், 2010

வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!

1996ல் வை.கோபால்சாமியை விளாத்திக்குளம் தொகுதியில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தவர் கே.ரவிசங்கர். எம்.எல்.ஏ., ஆனபோது இவரது வயது 27 மட்டுமே. வைகோவை வென்றதால் திமுகவின் எதிர்கால நம்பிக்கை அரசியல்வாதியாக தென்மாவட்டங்களில் பார்க்கப்பட்டார். இவரைமாதிரி 'சிறுசு'களை களமிறக்கி 'பெருசு'களை வீழ்த்துவது என்பது திமுகவுக்கு புதியதல்ல.

1991ல் தென்சென்னை தொகுதியின் நாடாளுமன்ற வேட்பாளராக நிறுத்தப்பட்டவர் டாக்டர் ஸ்ரீதரன். இவர் யாரென்று தொகுதி மக்களுக்கு மட்டுமல்ல. அதிமுகவினருக்கே அப்போது தெரியாது. 90ஆம் ஆண்டு லாரி விபத்தொன்றில் ஜெயலலிதா படுகாயம் அடைந்தபோது, அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர் என்று தொகுதி அதிமுக புள்ளிகள் கிசுகிசுத்துக் கொள்வார்கள். எதிர்த்து நின்ற திமுக வேட்பாளர் பலம் பொருந்திய டி.ஆர்.பாலு. ராஜீவ் படுகொலை அலையால் எதிர்பாராவிதமாக ஸ்ரீதரன் எம்.பி. ஆனார். பாலு, தென்சென்னையில் ஒருமுறை தோற்றவர் என்று சொன்னால் இன்று யாருமே நம்பக்கூட மாட்டார்கள்.

ஓவர்நைட் ஸ்டார்களான இருவரும் பிற்பாடு என்ன ஆனார்கள்?

ரவிசங்கருக்கு 2001ல் மீண்டும் போட்டியிட கழகம் அவருக்கு வாய்ப்பளிக்கவில்லை. அதே தேர்தலில் திமுகவும் ஆட்சியை இழந்தது. 2002ஆம் ஆண்டு ரவிசங்கர் அ.தி.மு.கவில் சேர்ந்தார். ஓரிரு வருடங்கள் கழித்து இலங்கைக்கு போதை மருந்து கடத்தியதாக கூறி காபிபோசா சட்டத்தில் அவர்மீது வழக்கு தொடரப்பட்டது. பின்னர் பல லட்ச ரூபாய் மோசடி வழக்கிலும் கைது செய்யப்பட்டார். வழக்கு நடந்து கொண்டிருந்தபோதே போலிஸ் காவலில் இருந்து தப்பி, கடந்த ஆறு ஏழு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார். நேற்று ரவிசங்கர் ஒரு கொள்ளைக் குற்றத்துக்காக சென்னையில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

ஸ்ரீதரன் எம்.பி.யாக பெரியளவில் சோபிக்கவில்லை. கட்சிக்காரர்களோடும் 'டச்சிங்கில்' இல்லை. இன்றைய பதர்சயீத் மாதிரி அன்றைய ஸ்ரீதரனை சொல்லலாம். பிற்பாடு ஒருநாள் அவர் சிங்கப்பூரிலிருந்து திருட்டுத்தனமாக ஹார்ட் டிஸ்க் கடத்தியதாக சொல்லி விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டார். கொஞ்சநாள் சுப்பிரமணியசாமியோடு சேர்ந்து ஜனதாக் கட்சிக் கூட்டங்களில் தலைகாட்டினார். இன்று எங்கிருக்கிறாரோ தெரியவில்லை.

பதவியிலிருக்கும்போது வாழ்ந்த படோடபமான வாழ்வை பதவியிழந்த பிறகும் தொடர வேண்டியதாகிறது. இருக்கும்போதே இருப்பை பெருக்கிக் கொண்டவர்கள், இல்லாதபோதும் சமாளித்துக் கொள்கிறார்கள். ஏமாளிகளாய் வாழ்ந்தவர்கள், பதவியிறங்கியபிறகு திருடர்களாகவும், கொள்ளைக்காரர்களாகவும் மாறித் தொலைக்க வேண்டியிருக்கிறது. அரசியலை ஊழியமாகக் கொண்டவன் நல்லவனாகவோ, கெட்டவனாகவோ, வல்லவனாகவோ வாழ்வது சூழலைப் பொறுத்தது.

சினிமா நட்சத்திரங்களின் வாழ்வு மாதிரிதான் அரசியல்வாதிகளின் வாழ்க்கையும். வாயுள்ள பிள்ளை பிழைக்கும்.

அ முதல் ஃ வரை இலவசமாய் இணையத்தில்..

தமிழ் இலக்கண நூல்கள், காப்பியங்கள், சமய இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், நெறிநூல்கள், கவிதை-உரைநடை நூல்கள், நாட்டுப்புற இலக்கியங்கள், சிறுவர் இலக்கியங்கள் என்று பல்வேறு பிரிவுகளில் சுமார் 400 புத்தகங்களை வாங்கினால் உங்களுக்கு எவ்வளவு செலவு ஆகும்? புத்தக அலமாரி தாங்குமா? சொந்தமாக வாங்க முடியவில்லை என்றாலும் நூலகத்துக்கு சென்று படித்தால், இவ்வளவற்றையும் படிக்க எவ்வளவு காலம் ஆகும்?

கவலையே வேண்டாம். இத்தனையும் உங்களுக்கு இலவசம். உங்கள் புத்தக அலமாரியில் இவற்றுக்கு இடஒதுக்கீடும் வேண்டாம். நூலகத்துக்கு பாதம் தேய நடக்கவும் வேண்டாம். உட்கார்ந்த இடத்திலிருந்தே உங்கள் கணினியில் இணைய இணைப்பை சொடுக்கினால் போதும். அத்தனையும் உங்கள் மவுஸின் கட்டுப்பாட்டில்.

அதிசயமாக இருக்கிறதா? தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் மின்நூலகத்தை இணையத்தில் திறந்தோமானால் இன்னும் நிறைய ஆச்சரியங்கள் காத்துக் கிடக்கின்றன. இந்நூலகம் மொத்தம் பல்வேறு செயல்பாடுகளை கொண்டு தனித்துவத்தோடு இயங்கி வருகிறது.

தமிழ் இலக்கண நூல்களில் தொல்காப்பியத்தில் தொடங்கி புறப்பொருள் வெண்பாமாலை, யாப்பருங்கலம் என்று அறுவகை இலக்கணம் வரை தமிழின் ஆதார இலக்கணநூல்கள் 20 தொகுக்கப்பட்டிருக்கின்றன. சங்க இலக்கியங்களில் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பாட்டும் தொகையும் ஆகியவை இடம்பெற்றிருக்கின்றன. திருக்குறள், நாலடியார் தொடங்கி அத்தனை பதிணென்கீழ்க்கணக்கு நூல்களும் நூலகத்தில் உண்டு.

சிலப்பதிகாரத்தில் தொடங்கி தமிழின் முக்கிய காப்பியங்கள் அனைத்தும் இணையத்தில் ஏற்றப்பட்டிருக்கிறது. இவை மட்டுமன்றி சமய இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், நெறிநூல்கள், சித்தர்பாடல்கள் என்று திகட்ட திகட்ட தமிழமுதம் வாரி வாரி வழங்கப்படுகிறது.

சங்க இலக்கியங்கள் ரோமன் வரிவடிவத்திலும் தனியாக வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

நான்கு அகராதிகள் தளத்தில் உண்டு. தமிழ் கலைக்களஞ்சியம் (என்சைக்ளோபீடியா) பத்து தொகுதிகள் கிடைக்கிறது. பல்வேறு துறைகளிலும் புழக்கத்தில் இருக்கும் புதிய கலைச்சொற்களை தொகுத்து கொடுக்கிறார்கள். தமிழ்த் தாத்தா உ.வே.சா. அவர்கள் தொகுத்த சுவடிகளை, சுவடிக் காட்சியகமாக கண்முண்ணே விரிகிறது. சுவடிகளை இணையத்தில் விளக்கங்களோடு வாசிக்கலாம்.

இவை மட்டுமல்லாது, பண்பாட்டுக் காட்சியகம் ஒன்றும் சிறப்பாக இங்கே இயங்குகிறது. இதில் திருத்தலங்கள், திருவிழாக்கள், கலைகள், வரலாற்றுச் சின்னங்கள், விளையாட்டுகள் என்று தமிழருக்கான பாரம்பரியப் பெருமைகள் அனைத்துமே ஒலி-ஒளி காட்சிகளாக சேகரிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ் குறித்தோ அல்லது தமிழர் குறித்தோ மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சிகள் செய்ய விரும்புபவர்களுக்கு தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் மின்நூலகம், போதும் போதுமென்று சொல்லக்கூடிய அளவுக்கு தகவல்களை அள்ளி வழங்குகிறது.

ஒருமுறை இந்நூலகத்துக்குள் நுழைந்துவிட்டால் தமிழ் நம்மை ஈர்த்து இங்கேயே உட்கார வைத்துவிடும். இந்நூலகத்தில் இருக்கும் நூல்களை ஒருங்குறியில் (Unicode) மாற்றிவரும் பணிகள் நடந்துவருவதால், சில நூல்களை வாசிக்க எழுத்துரு தேவைப்படும். எனவே முதன்முதலாக நூலகத்துக்குள் நுழையும்போது, தேவைப்படும் எழுத்துருவை உங்கள் கணினியில் நிறுவிவிடுவது நல்லது.

இதுவரை ஏறக்குறைய இரண்டு லட்சம் வருகைகளை பெற்றுள்ள இந்த நூலகத்துக்கு நீங்களும்தான் போய்ப் பாருங்களேன்.

இணைய முகவரி : http://www.tamilvu.org/library/libindex.htm

(நன்றி : புதிய தலைமுறை)