20 அக்டோபர், 2010

வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!

1996ல் வை.கோபால்சாமியை விளாத்திக்குளம் தொகுதியில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தவர் கே.ரவிசங்கர். எம்.எல்.ஏ., ஆனபோது இவரது வயது 27 மட்டுமே. வைகோவை வென்றதால் திமுகவின் எதிர்கால நம்பிக்கை அரசியல்வாதியாக தென்மாவட்டங்களில் பார்க்கப்பட்டார். இவரைமாதிரி 'சிறுசு'களை களமிறக்கி 'பெருசு'களை வீழ்த்துவது என்பது திமுகவுக்கு புதியதல்ல.

1991ல் தென்சென்னை தொகுதியின் நாடாளுமன்ற வேட்பாளராக நிறுத்தப்பட்டவர் டாக்டர் ஸ்ரீதரன். இவர் யாரென்று தொகுதி மக்களுக்கு மட்டுமல்ல. அதிமுகவினருக்கே அப்போது தெரியாது. 90ஆம் ஆண்டு லாரி விபத்தொன்றில் ஜெயலலிதா படுகாயம் அடைந்தபோது, அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர் என்று தொகுதி அதிமுக புள்ளிகள் கிசுகிசுத்துக் கொள்வார்கள். எதிர்த்து நின்ற திமுக வேட்பாளர் பலம் பொருந்திய டி.ஆர்.பாலு. ராஜீவ் படுகொலை அலையால் எதிர்பாராவிதமாக ஸ்ரீதரன் எம்.பி. ஆனார். பாலு, தென்சென்னையில் ஒருமுறை தோற்றவர் என்று சொன்னால் இன்று யாருமே நம்பக்கூட மாட்டார்கள்.

ஓவர்நைட் ஸ்டார்களான இருவரும் பிற்பாடு என்ன ஆனார்கள்?

ரவிசங்கருக்கு 2001ல் மீண்டும் போட்டியிட கழகம் அவருக்கு வாய்ப்பளிக்கவில்லை. அதே தேர்தலில் திமுகவும் ஆட்சியை இழந்தது. 2002ஆம் ஆண்டு ரவிசங்கர் அ.தி.மு.கவில் சேர்ந்தார். ஓரிரு வருடங்கள் கழித்து இலங்கைக்கு போதை மருந்து கடத்தியதாக கூறி காபிபோசா சட்டத்தில் அவர்மீது வழக்கு தொடரப்பட்டது. பின்னர் பல லட்ச ரூபாய் மோசடி வழக்கிலும் கைது செய்யப்பட்டார். வழக்கு நடந்து கொண்டிருந்தபோதே போலிஸ் காவலில் இருந்து தப்பி, கடந்த ஆறு ஏழு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார். நேற்று ரவிசங்கர் ஒரு கொள்ளைக் குற்றத்துக்காக சென்னையில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

ஸ்ரீதரன் எம்.பி.யாக பெரியளவில் சோபிக்கவில்லை. கட்சிக்காரர்களோடும் 'டச்சிங்கில்' இல்லை. இன்றைய பதர்சயீத் மாதிரி அன்றைய ஸ்ரீதரனை சொல்லலாம். பிற்பாடு ஒருநாள் அவர் சிங்கப்பூரிலிருந்து திருட்டுத்தனமாக ஹார்ட் டிஸ்க் கடத்தியதாக சொல்லி விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டார். கொஞ்சநாள் சுப்பிரமணியசாமியோடு சேர்ந்து ஜனதாக் கட்சிக் கூட்டங்களில் தலைகாட்டினார். இன்று எங்கிருக்கிறாரோ தெரியவில்லை.

பதவியிலிருக்கும்போது வாழ்ந்த படோடபமான வாழ்வை பதவியிழந்த பிறகும் தொடர வேண்டியதாகிறது. இருக்கும்போதே இருப்பை பெருக்கிக் கொண்டவர்கள், இல்லாதபோதும் சமாளித்துக் கொள்கிறார்கள். ஏமாளிகளாய் வாழ்ந்தவர்கள், பதவியிறங்கியபிறகு திருடர்களாகவும், கொள்ளைக்காரர்களாகவும் மாறித் தொலைக்க வேண்டியிருக்கிறது. அரசியலை ஊழியமாகக் கொண்டவன் நல்லவனாகவோ, கெட்டவனாகவோ, வல்லவனாகவோ வாழ்வது சூழலைப் பொறுத்தது.

சினிமா நட்சத்திரங்களின் வாழ்வு மாதிரிதான் அரசியல்வாதிகளின் வாழ்க்கையும். வாயுள்ள பிள்ளை பிழைக்கும்.

15 கருத்துகள்:

  1. நீங்களும் பிழைச்சுக்குவீங்க லக்கி,, எப்படி ஒரு சப்பை கட்டு, அதில் ஒருத்த இதில் ஒருத்தர்.

    பதிலளிநீக்கு
  2. vaayulla pillaiyaanaalum,kaiyulla pillannaalum thiruttuththanam pannal ennaikku irunthaalum maattikkum.aiyo paavam avanga!vera vazhi illama lifestylukkaaka ippadi seykiraarkal enra thoni sariyalla. uppai saappittavan thanni kudichchuththaan avanum.

    பதிலளிநீக்கு
  3. ரவிசங்கர் : ஆஹா இப்படி ஆகிவிட்டதே இவரின் நிலைமை.
    Anyway பதவியில் இருந்தாலும் இதைத்தான் செய்துக் கொண்டிருந்திருப்பாரோ?

    அதிமுக முன்னாள்கள் பலரும் கல்லூரி/பல்கலைக் கழக வேந்தர்களாகிவிட்டர்கள்.
    திமுக முன்னாள்களின் நிலைமை இப்படியா?

    பதிலளிநீக்கு
  4. உண்மை தான், அரசியல் சினிமா மற்றும் எந்த பிரபல தொழில்களிலும் வாய் உள்ளது பிழைத்துக் கொள்ளும். இல்லாட்டி ஒன்னு முதலமைச்சர் ஆகி இருக்குமா? இல்ல சூப்பர் ஸ்டார் தான் ஆகியிருக்குமா என்ன?

    பதிலளிநீக்கு
  5. நல்ல அனாலிசிஸ் லக்கி. காமராஜரை தோற்கடித்த சீனிவாசனும் பெரிதாக சோபிக்கவி(டவி)ல்லை என்று ஞாபகம். ஆ.வி.யில் 'மந்திரி தந்திரி' என்று அமைச்சர்களின் பெர்பாமன்ஸ் ரிவ்யு மாதிரி ஒரு தொடர் வருது. நான் அதை பார்க்கும் கோணம் வேறு. நாமெல்லாம் ஒண்ணுமில்லாத ஆபீஸ் ப்ரோமோஷன் பாலிடிக்ஸ்க்கே டரியல் ஆகிறோம். இவர்கள் எந்த அளவுக்கு முட்டி மோதி இந்த நிலைமைக்கு வந்திருக்கிறார்கள் என்று பார்க்கும்போது அரசியல் மிக மிக கஷ்டமான தொழிலே என தோன்றுகிறது.

    இன்னும் சிலர் ரிவர்சாக இருக்கிறார்கள். மிக மிக shaky ஆரம்பம் இருந்து பின்னர் சுதாரித்து செட்டில் ஆகிறார்கள். திமுகவில் ஆதிசங்கர் என்று ஒருவர் கலைஞரால் குங்கும பொட்டுக்காக மிக மோசமாக, ஓப்பனாக விமரிசிக்கப்பட்டார். அவர் career அவ்ளோ தான்னு நினைத்தேன். அப்போ அவர் வேலூர் மாவட்டத்தில் ஒன்றியமோ, வட்ட செயலாளரோ? இன்று MP , MLA என்று பல பதவிகளை மிக சீக்கிரம் பார்த்துவிட்டார்.

    பதிலளிநீக்கு
  6. 'கை நீட்டும் பிள்ளை பிழைக்கும்'

    பதிலளிநீக்கு
  7. அவர்கள் பிழைத்துக்கொள்வார்கள். நாம் என்னாவது?

    பதிலளிநீக்கு
  8. நல்ல கட்டுரை, ஆனா பாவம் டாக்டர் ஸ்ரீதரன் இப்போ அம்மா கட்சியிலேயே சேர்ந்துட்டுருங்கோ.

    பதிலளிநீக்கு
  9. //இருக்கும் போதே பெருக்கிக் கொண்டால், இல்லாதபோது சமாளித்துக் கொள்ளலாம்.//
    எல்லோரும் கடைப்பிடிக்கவேண்டிய ஒன்று.

    அதுசரி...அந்த ரவியா... இந்த ரவி...? சரியாப் போச்சி போங்க. ரெண்டு எடத்திலேயும் ஒரே தொழில்தானா?
    -தோழன் மபா

    பதிலளிநீக்கு
  10. ஜெயிச்சாலும் தோற்றாலும்
    திருட்டே தாரகமந்திரம்

    பதிலளிநீக்கு
  11. தற்போது உள்ள எம்.எல்.ஏ.க்கள் சட்ட அங்கீராத்தோடு, ஜனநாயகம் என்கிற கேலிக்கூத்தோடு செய்யும் செயலைத்தான் ரவிசங்கரும் செய்திருக்கிறார்.

    ஒரு வேளை தற்போது அவர் எம்.எல்.ஏ.வாக இருந்திருந்தால் இப்படி செய்யவேண்டிய நிலை ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. (பிற பல வாய்ப்புகள் உள்ளதால்).

    பல எம்.எல்.ஏ.க்கள் 10% கமிஷன் பெற்றுக்கொண்டுதான் தமது மேம்பாட்டு நிதியை விடுவிக்கின்றனர்.

    தூத்துக்குடியில் பெரியசாமி, கீதா ஜீவன், அனிதா மற்றும் ராஜா போன்ற தாதாக்கள் உருவாகிவிட்டதின் அடையாளமாக சாதாரண ஆள்மாறாட்ட கொள்ளைக்கு கூட ஒரு முன்னாள் எம்.எல்.ஏ. சென்னைக்கு வரவேண்டிய துர்ரதிஷ்டம் இரவிசங்கருக்கு வந்திருக்க வேண்டிய அவசியமில்லைதான்.

    பதிலளிநீக்கு
  12. ஊடங்களில் ரவிசங்கரை ஜெ.கட்சிகாரர் என யாரும் சொல்லவில்லையே?

    இந்த குற்றத்தையும் ஆளும் கட்சி கணக்கில் சேர்க்கவா?

    எம்.பி.ஏ. படித்த ரவிசங்கர்... வைகோவை 800 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோற்க்கடித்தார், அது நடக்காமல் வைகோ வெற்றி பெற்றிருந்தால்,

    வைகோ இன்று ஜெவின் போயஸ் தோட்ட வீட்டு சொரி நாயாக திரிய வேண்டி இருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போய் இருக்கலாம்... பாவம் வைகோ...

    டாக்டர் ஸ்ரீதரன்... காவிரி நடுவர் மன்ற அமைக்க முரசொலி மாறன் தலைமையில் வி.பி.சிங் அவர்களிடம் மனு கொடுக்க வைஜெயந்திமாலா சென்ற ஒரே காரணத்தால்... ராஜிவை வீட்டு கூப்பிட்டு விருந்து வைத்து தென் சென்னையில் வைஜெயந்திமாலா சீட் கொடுக்க கூடாது என... ஜெ... பிடுங்கி டாக்டர் ஸ்ரீதரனுக்கு சீட் கொடுத்தார்...

    டாக்டர் ஸ்ரீதரன் 1994 டிசம்பரில் மின்னனு பொருள் கடந்த குற்றத்தில் கைது செய்யப்பட்டார்.

    பதிலளிநீக்கு
  13. Dr. R.S.ஸ்ரீதர் அந்த வழக்கில் நிரபராதி என்று விடுவிக்கப்பட்ட தீர்ப்பைப் பற்றி நீங்கள் கேள்விப்படவில்லையா?

    பதிலளிநீக்கு