19 அக்டோபர், 2010

குட்டிக்கதை!

ஜனவரி 30. தீண்டாமை எதிர்ப்பு தினம்.

அந்தக் கல்லூரியில் 'பெல்' அடிக்கப்படுகிறது. அடித்தவுடனேயே மாணவர்கள் அவரவர் வகுப்பறையில் எழுந்து நின்று தீண்டாமை எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும்.

வகுப்பறையே எழுந்து நின்று உரக்க உறுதிமொழி எடுக்க, அந்த மாணவன் மட்டும் நக்கலாக உட்கார்ந்திருக்கிறான். அவனைக் கண்ட பேராசிரியருக்கு கோபம். நேரடியாக மாணவனை முறைத்துக் கொள்ளவும் பயம் அல்லது தயக்கம். ஏனெனில் அம்மாணவன் வேறொரு பேராசிரியரால் அரசியல்மயப் படுத்தப்பட்டு வருபவன். இவருடைய கோபம் முழுக்க இப்போது அந்தப் பேராசிரியரின் மீது திரும்பியது.

நேராகப் பேராசிரியரிடம் சென்றாவர், "சார் ஸ்டூடண்ட்ஸ் எல்லாரும் உங்களாலேதான் கெட்டுப் போறாங்க. பாருங்க அந்தப் பையன் தீண்டாமை எதிர்ப்பு தினமும் அதுமுமா என்ன காரியம் பண்ணி வெச்சிருக்கான்?" பொரிந்துத் தள்ளினார்.

பேராசிரியர் அமைதியோடு, "பையனை கூப்பிட்டு விசாரிக்கிறேன்!" என்று அவரை சமாதானப்படுத்துகிறார்.

மாணவனை அழைத்துக் கேட்டார். "ஏன் அப்படி செஞ்சே?"

"என்னா சார் அநியாயமா இருக்கு? நான் எதுக்கு தீண்டாமை எதிர்ப்பு உறுதிமொழி எடுக்கணும். நான் யார் மேலே தீண்டாமையை கடைப்பிடிச்சேன். ஒரு தலித் என்பதால் என் மேல்தான் மத்தவனுங்க தீண்டாமையை பிரயோகிப்பானுங்க. அப்படியிருக்கையில் உறுதிமொழி எடுக்கச் சொல்லுறது என்னை கிண்டல் பண்ணுற மாதிரி இல்லை இருக்கு?"

இருபது ஆண்டுகளுக்கு முன்பு நிஜமாகவே நடந்த சம்பவம் இது. மாணவன் : தை.கந்தசாமி. பேராசிரியர் : அ.மார்க்ஸ்

நேற்று 'அ.மார்க்ஸ் - சில மதிப்பீடுகள்' நூல் வெளியீட்டின் போது, அ.மார்க்ஸ் மேடையில் சொன்னது. மிக நெகிழ்ச்சியான நிகழ்வுகள் நிறைந்ததாக அம்மேடை இருந்தது.

அ. மார்க்ஸ் கலைஞர் மாதிரி. அவருடைய எதிரிகள் மட்டுமல்ல. நண்பர்களும் அவரோடு பல விஷயங்களில் முரண்படுகிறார்கள். ஆயினும் தமிழ் அறிவுச்சூழலில் கடந்த முப்பதாண்டுகளாக தொடர்ச்சியாக ஓய்வின்றி உழைத்து வரும் ஒரு சிலரில் அவரும் ஒருவர். தை.கந்தசாமி மாதிரி அவரால் அரசியல்மயப்படுத்தப்பட்டு வெளிப்பட்டவர்கள் குறைந்தது ஆயிரம் பேராவது இருப்பார்கள். இஸ்லாமியர் குறித்த இந்தியப் பொதுப்புத்தியில் இருந்து நான் வெளிவர பேராசிரியர் அ.மார்க்ஸின் எழுத்துகளே முக்கியக் காரணம்.

மணிவிழா காணும் பேராசிரியருக்கு வாழ்த்துகள்.

6 கருத்துகள்:

  1. அ. மார்க்ஸ் அவர்களுக்கு இனிய மண நாள் வாழ்த்துக்கள்.

    கந்தசாமி அவர்களின் பதில் அபாரம்.

    பதிலளிநீக்கு
  2. அ.மார்க்ஸ் மணிவிழா(?)வில் என் மணவிழா புகைப்படத்தைப் போட்டதற்கு நன்றி. அவர் தை.கந்தசாமி அல்ல, தய்.கந்தசாமி.

    பதிலளிநீக்கு
  3. நான் +2 படிக்கையில், கிளார்க் கையில் ஒரு notebook உடன் வருவார்.
    உடனே வகுப்பாசிரியர் FC எல்லாம் எந்திரி என கூற, கிளார்க் 7 என குறிப்பு எழுதுவார், பின்பு BC , MBC , SC , ST என போகும்.
    என்ன ரோமத்துக்கு, சாதிகள் இல்லையடி பாப்பா ன்னு , கத்து குடுக்கரானுன்களோ தெரியலை.
    அதுலயும் , கழுத்துல தங்க சங்கிலி போட்ட குண்டு பையன்( கஸ்டம்ஸ் இன்ஸ்பெக்டர் புள்ள), SC ன்னு எந்திரிக்கும் போது,
    வயித்தெரிச்சலா இருக்கும்.

    பதிலளிநீக்கு
  4. //இஸ்லாமியர் குறித்த இந்தியப் பொதுப்புத்தியில் இருந்து நான் வெளிவர பேராசிரியர் அ.மார்க்ஸின் எழுத்துகளே முக்கியக் காரணம்.//

    இதைப் பார்க்கவும்.
    http://www.darulislamfamily.com/di/index.php?option=com_content&view=article&id=60:dawood-shah-tamil&catid=1:latest-news&Itemid=50

    பதிலளிநீக்கு
  5. suguna
    இது மணிவிழாதானா ? பெரியாரிய அம்பேத்காரிய காந்திய க்ராம்ஸ்கிய பாரம்பரியத்தில் மணிவிழா சரியான ஒன்றா

    பதிலளிநீக்கு
  6. தமிழ் சிந்தனை உலகில் அ.மார்க்ஸ் அவர்களின் பங்கு சால சிறந்தது.எனது மனபூர்வமான வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு