7 அக்டோபர், 2010

மீண்டும் தாய் மடியில்...

தயவுசெய்து நம்புங்கள். மேக்கப் போட்டு தினமும் வேலைக்கு செல்ல ஆரம்பிக்கும்போது கீதாவுக்கு வயது 9. தினமும் அதிகாலை 2 மணி வரை பணிபுரிய வேண்டியிருக்கும். "அந்த வயதிலேயே வாழ்க்கை மீது எந்தப் பிடிப்பும் இல்லாமல், மரணம் சீக்கிரம் வராதா என்று எதிர்ப்பார்த்து வாழ்ந்த கொடுமையான நாட்கள் அவை" என்று இப்போது சொல்கிறார் கீதா.

அவர் செய்துக்கொண்டிருந்த தொழில் : பாலியல்.

நேபாளத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்த கீதாவுக்கு இப்போது வயது 26. தூரத்து உறவினர் ஒருவர் மூலமாக இந்தியாவில் பாலியல் தொழிலில் ஈடுபட்டிருக்கும் தரகர் ஒருவருக்கு 9 வயதில் விற்கப்பட்டார். கண்பார்வையற்ற அவரது தாயாரிடம், அவரது மகள் ஒரு எக்ஸ்போர்ட் கம்பெனியில் வேலை பார்த்து வருவதாக பொய் சொல்லப்பட்டிருந்தது.

"தினமும் நிறைய வாடிக்கையாளர்கள். ஒத்துழைக்க மறுத்தால், எங்களை காசு கொடுத்து வாங்கியவர் ஆபாசமாக திட்டுவார். இரும்புத்தடி கொண்டு அடிப்பார். போதிய உணவில்லை. தூக்கமில்லை. ஐந்து ஆண்டுகள் அந்த நரகத்தில் வாழ்ந்தேன்" என்கிறார் கீதா. பதினான்கு வயதிருக்கும் போது ஒரு போலிஸ் அதிகாரியால் மீட்கப்பட்டு, காத்மாண்டுவில் இருக்கும் ஒரு மறுவாழ்வு இல்லத்துக்கு அனுப்பப்பட்டார் இவர்.

இது கீதாவின் கதை மட்டுமல்ல. அமெரிக்க உள்துறை அமைச்சகத்தின் ஒரு கணக்கெடுப்பு சொல்கிறது. நேபாளத்தில் இருந்து ஆண்டுக்கு 10,000 முதல் 15,000 பெண்கள் வரை நைச்சியமாக ஏமாற்றப்பட்டு, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு பாலியல் தொழில் செய்ய முறைகேடாக அனுப்பப்படுகிறார்கள்.

நேபாளக் கிராமங்களில் கல்வியறிவற்ற பெற்றோர்கள், தரகர்களால் ஏமாற்றப் படுகிறார்கள். தங்கள் மகள் வெளியூரில் நல்ல வேலை பார்த்து கைநிறைய சம்பாதிப்பதாக நம்பி ஏமாறுகிறார்கள். இந்த மனிதக் கடத்தல் தரகர்களுக்கு பல வருடங்களாக இது ஒரு நல்ல லாபம் தரத்தக்க தொழில்.

61 வயதான அனுராதா கொய்ராலா இந்த இழிதொழிலை ஒழித்துக் கட்டும் பணியில் தீவிரமாக இருக்கிறார். 1993ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இவரது 'மைத்தி – நேபாள்' அமைப்பு இதுவரை 12,000த்துக்கும் மேற்பட்ட நேபாளப் பெண்களை பாலியல் தொழில் படுகுழியில் இருந்து காப்பாற்றியிருக்கிறது. காப்பாற்றப்பட்ட பெண்கள் பலரையும் அவரவர் பெற்றோர்வசம் ஒப்படைக்கிறது. ஆதரவில்லாத பெண்களுக்கு இவ்வமைப்பின் மறுவாழ்வு நிலையமே தஞ்சம்.

'மைத்தி' என்ற நேபாளச் சொல்லுக்கு 'தாய்' என்பது பொருள். எவ்வளவு பொருத்தமான பெயர் இல்லையா?

கொய்ராலாவின் சொந்தக் கதையும் சோகக்கதைதான். டீனேஜ் வயதில் ஒரு முறைகேடான உறவால் கடுமையாக பாதிக்கப்பட்டவர் இவர். அப்போது ஒரு ஆரம்பப்பள்ளியில் ஆங்கிலம் போதித்துக் கொண்டிருந்தார். தினம் தினம் அடி உதைதான். அந்த உறவிடம் இருந்து தப்பிக்க முயற்சித்து மூன்று முறை தோற்றார். யாரிடம் போய் இதையெல்லாம் புகார் தெரிவிப்பது, யார் நம்மைக் காப்பாற்றுவார்கள் என்று திக்குத் தெரியாமல் தவித்தார்.

எப்படியோ அந்த உறவிடமிருந்து விடுதலை பெற்றபிறகு, அதுவரை தான் ஆசிரியத் தொழிலில் சம்பாதித்திருந்த பணத்தைக் கொண்டு ஒரு சிறிய கடை தொடங்கினார். சமூகத்தால் வஞ்சிக்கப்பட்ட தன்னைப் போன்ற பெண்களையே பணிக்கும் அமர்த்தினார்.

1990களின் தொடக்கத்தில் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் பலரும் கொய்ராலாவைத் தொடர்புகொள்ள 'மைத்தி' உருவானது. பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பது, தேவைப்பட்டால் சட்டரீதியான பாதுகாப்பு வழங்குவது, பாலியல் தொழிலில் சிக்கிக் கொண்ட அப்பாவிப் பெண்களுக்கு மறுவாழ்வு என்று மைத்தி தனது செயற்பாடுகளை உருவாக்கிக் கொண்டது.

காவல் துறையினர் துணைகொண்டு பாலியல் விடுதிகளை சோதனை செய்து பெண்களை மீட்பது, இந்திய-நேபாள எல்லையில் ரோந்து மூலமாக நடக்கும் மனித வணிகத்தை தடுப்பது போன்ற பணிகளில் மைத்தி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

பதினேழு ஆண்டுகள் கழிந்த நிலையில் இன்று மைத்திக்கு கிளைகள் இந்தியாவிலும், நேபாளத்திலும் ஏராளமாக உண்டு. மறுவாழ்வு முகாம், காத்மாண்டுவில் மட்டுமே இருக்கிறது. நம்பிக்கை மொத்தத்தையும் இழந்து, நோய்கண்டு, சிறுகுழந்தைகளோடு அல்லது கர்ப்பமடைந்த நிலையில் என்று பாலியல் முகாமிலிருந்து வெளியே வரும் பெண்கள் பலரும் நிச்சயமற்ற எதிர்காலத்தோடு வாழ வழியின்றி நிர்க்கதியாக தவிக்கிறார்கள். குறிப்பாக மனரீதியாக உடைந்துப்போயிருக்கிறார்கள்.

இதுபோல மறுவாழ்வு மையத்துக்கு வரும் பெண்களிடம் மைத்தி ஒரு கேள்வியையும் கேட்பதில்லை. அவர்கள் சரியான மனநிலைக்கு வரும் வரை காத்திருக்கிறது. அவர்கள் பாடலாம், ஆடலாம், நடக்கலாம், யாரிடமாவது பேசலாம். மொத்தத்தில் கூண்டில் வளர்க்கப்பட்ட கிளி, சிறகு விரித்து வானத்தில் பறப்பதற்கு ஒப்பான சுதந்திரத்தை மைத்தியில் பெறலாம். ஒரு தாய் தனது குழந்தை எப்படி இருக்க வேண்டுமென்று விரும்புகிறாளோ, அதுபோன்றுதான் பாதிக்கப்பட்ட பெண்கள் சுதந்திரமாக வாழவேண்டும், சிந்திக்க வேண்டும் என்று மைத்தி விரும்புகிறது.

பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட பெண்களையும், குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களையும், ஆதரவில்லாத குழந்தைகளையும்கூட மைத்தி ஏற்றுக் கொள்கிறது. "யார் வேண்டுமானாலும் எங்களிடம் வரலாம். யாரையுமே வேண்டாமென்று என்னால் சொல்லவே முடியாது" என்கிறார் அனுராதா கொய்ராலா.

பழைய துயர வாழ்க்கையில் இருந்து மீட்கப்படுவதோடு யாருடைய துயரமும் முடிந்துவிடுவதில்லை. அவர்களுக்கு மறுவாழ்வு தருவது என்பது மீட்பினை விடவும் சிரமமான காரியம். மருத்துவ மற்றும் உளவியல் சிகிச்சை, பழைய தொழிலில் ஏதேனும் வழக்குகள் இருந்தால் சட்டரீதியிலான அறிவுரை மற்றும் கோர்ட் நடைமுறைகள் என்று அனைத்துமே அவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.

மீட்கப்படும் பெண்களில் சிலரை மட்டுமே அவர்களது குடும்பம் ஏற்றுக் கொள்கிறது. எச்.ஐ.வி/எய்ட்ஸ் மற்றும் இதர பாலியல் நோய்களால் பாதிக்கப்படுபவர்களின் நிலை பரிதாபமானது. இவர்களுக்காகவே ஒரு சிறப்பு முகாம் மைத்தியில் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

இன்று இங்கே கிட்டத்தட்ட 400 பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் மறுவாழ்வு வழங்கப்படுகிறது. நிறைய ஆசிரியர்களும், மருத்துவர்களும், பணியாளர்களும் இவர்களுக்கு சேவை செய்ய தேவைப்படுகிறார்கள். இங்கே பணிபுரியும் பணியாளர்களில் பலரும் 'மறுவாழ்வு' பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உலகம் முழுக்க இருந்து, இன்று மைத்திக்கு குவிந்துவரும் நிதியால் இவ்வமைப்பு இயங்க முடிகிறது.

'மறுவாழ்வு பெற்ற பெண்கள் ஒவ்வொருவரும், பொருளாதாரரீதியாக தத்தமது சொந்தக் காலில் நிற்கவேண்டும்' என்பதையே இவ்வமைப்பு தனது குறிக்கோளாக கொண்டிருக்கிறது. இங்கு வரும் பெண்கள் எந்தத் துறையில் பணியாற்ற விரும்புகிறார்களோ, அந்தத் துறையில் போதுமான பயிற்சியளித்து, வேலைவாய்ப்பினை பெற உதவுகிறார்கள். ஒரு பெண் பொருளாதாரரீதியாக நிமிர்ந்து நின்றாலே, அவளது கடந்த காலம் என்னவென்பதை எல்லாம் சமூகம் நோண்டிப் பார்ப்பதில்லை.

அனுராதா கொய்ராலாவும், மறுவாழ்வு வாழும் சுமார் ஐம்பது பெண்களும் அடிக்கடி சமூகப் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுகிறார்கள். பாலியல் கடத்தல் குறித்து நகர்ப்புற விளிம்புநிலை மக்கள் வாழும் பகுதிகள் மற்றும் கிராமங்களில் விழிப்புணர்வு முகாம்கள் அவ்வப்போது நடத்தி வருகிறார்கள். அதுமட்டுமன்றி இந்திய – நேபாள் எல்லையில் ரோந்து நடத்தி, கடத்தப்படும் குழந்தைகளில்.. ஒரு நாளைக்கு நான்கு பேரையாவது மீட்கிறார்கள்.

"இந்த கடத்தல் தொழிலை தடுக்கும் பெண்கள் அனைவருமே முன்பு கடத்தப்பட்டவர்கள். அவ்வாறு கடத்தப்படும் குழந்தைகள் என்ன பாடு படுவார்கள் என்பதை நன்கு உணர்ந்தவர்கள். நான் சொல்லாமலேயே இந்தப் பணியை மனமுவந்து அவர்கள் செய்கிறார்கள்" என்று பெருமிதப்படுகிறார் கொய்ராலா.

கொய்ராலாவின் சமூகப் பணிகளுக்காக உயரிய சர்வதேச விருதான Peace Abbey Courage of Conscience Award விருது பெற்றிருக்கிறார். சி.என்.என். இணையத்தளம், ஆண்டின் சிறந்த மனிதர்களுள் ஒருவராக இவரது பெயரை முன்மொழிந்திருக்கிறது. பட்டங்கள், பதவிகள் இவற்றைப் பற்றிய உவப்பு எதுவுமின்றி தொடர்கிறது கொய்ராலாவின் சேவை.

கட்டுரையின் தொடக்கத்தில் வந்த கீதாவை மீட்டு, மறுவாழ்வு வழங்கியிருப்பது மைத்தியே. இப்போது மைத்தியின் சமூக விழிப்புணர்வு முகாம்களில் கீதா ஒரு முக்கியமான பொறுப்பினை வகிக்கிறார். "தொலைந்துப் போன என் வாழ்வினை எனக்கு திரும்பப் பெற்றுத் தந்திருப்பவர் அனுராதா. மிச்சமிருக்கும் வாழ்வினை என்னைப் போல பாதிக்கப்பட்டவர்களுக்காக வாழ்வேன்" என்று உருக்கமாக சொல்கிறார்.

மற்றவர்களுக்காக வாழ்வதுதானே வாழ்வு?

6 கருத்துகள்:

  1. நல்ல பதிவு, மைத்தியின் சேவை பாராட்டப்பட வேண்டியது. இருந்தாலும் இன்னொரு கீதா உருவாக கூடாது என பிராத்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. அனுராதாவின் சேவை பாரட்டுக்குரியது..

    பதிலளிநீக்கு
  3. என் கருத்தும் இதுதான் . நல்ல பதிவு, மைத்தியின் சேவை பாராட்டப்பட வேண்டியது. இருந்தாலும் இன்னொரு கீதா உருவாக கூடாது என பிராத்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. உங்க சமூக அக்கறையுள்ள பதிவுகளுக்கு ஒரு சல்யூட் லக்கி!
    ஆமா இப்பல்லாம் ரொம்ப சீரியஸ் ஆகிட்டிங்க?

    பதிலளிநீக்கு
  5. அருமையான, தேவையான கட்டுரை

    பதிலளிநீக்கு