12 அக்டோபர், 2010

விதை புதுசு! விளைச்சல் அமோகம்!!

பிரகாஷ்சிங் ரகுவன்ஷி. ஒரு சிறு விவசாயி. வாரணாசிக்கு அருகில் தாண்டியா என்ற பகுதியைச் சார்ந்தவர். உத்தரப்பிரதேச மாநிலம். விதையை விதைத்தோமா, அறுவடை செய்தோமா என்றில்லாமல் பிரகாஷ்சிங்குக்கு ஒரு தேசிய இலட்சியம் இருந்தது. தான் பிறந்த நாடு உணவுப் பாதுகாப்போடு விளங்க வேண்டும். உணவு பற்றாக்குறையால் ஒரு உயிர் கூட இங்கே பறிபோகக் கூடாது.

சிறுவயதில் பிரகாஷ் ஒரு சூட்டிகையான மாணவன். கல்வியில், விளையாட்டில் அவர்தான் நெம்பர் ஒன். ஒன்பதாவது வகுப்பு படிக்கும்போது அவருக்கு காய்ச்சல் வந்தது. காய்ச்சலுக்கு மருத்துவர்களால் கொடுக்கப்பட்ட மருந்து அவரது உடலுக்கு ஒத்துக் கொள்ளவில்லை. அலர்ஜி ஏற்பட்டு உடல்முழுக்க ஏகப்பட்ட உபாதைகள். கிட்டத்தட்ட கண்பார்வை பறிபோயிற்று.

பல்வேறு சிகிச்சைகளுக்குப் பிறகு ஓரளவுக்கு பார்வை திரும்பியது. ஆனாலும் இன்றும் கூட அவருக்கு பார்வை குறைபாடு இருக்கிறது. வாய்ப்பகுதி பாதிக்கப்பட்ட நிலையில்தான் வாழ்கிறார். "வலிகளோடு வாழ பழகிக் கொண்டேன்" என்கிறார் பிரகாஷ். வீட்டை விட்டு வெளியில் செல்லும்போது கண்கூசுகிறது என்பதால், எப்போதும் கருப்புக் கண்ணாடி அணிந்திருக்கிறார். வெயில் தலையில் படும்போது ஏற்படும் எரிச்சல் சொல்லி மாளாது. எனவே தலையை தொப்பி அல்லது துண்டு போட்டு மூடிக்கொண்டுதான் வீட்டை விட்டு வெளியே வரமுடியும்.

அப்போது ஏற்பட்ட பாதிப்பிலிருந்து அவரால் மீளவே முடியாது என்று எல்லோரும் நினைத்தார்கள். திரும்பவும் பள்ளிக்கு திரும்பமுடியாத அளவுக்கு உடல்நிலை மோசம்தான்.

பிரகாஷின் அப்பா ஆரம்பப்பள்ளி ஆசிரியர். சிறுவிவசாயியும் கூட. பள்ளிக்கு செல்ல முடியாத காலங்களில் அப்பாவின் விவசாய நிலத்துக்கு சென்று பொழுதை போக்குவார். இயற்கையை நேசிக்கும் மனம் அவருக்கு இயற்கையாகவே வாய்த்திருந்தது. பச்சை வயல்களை பார்ப்பதிலும், குளுமையான வாசனையான வயற்காற்றை ரசிப்பதிலும் பிரகாஷின் காலம் கழிந்தது.

அடிக்கடி வயலுக்கு சென்று வந்ததில் சில விஷயங்களை அவரால் அவதானிக்க முடிந்தது. ஆரம்பத்தில் செழிப்பாக வளரும் பயிரைக் கண்டு, விளைச்சலை அனுமானிக்க முடியும். ஆனால் எங்கோ தப்பு நடந்து கொண்டிருந்தது. தொடர்ச்சியாக விளைச்சல் என்னவோ சுமார்தான். தொடர்ச்சியாக இதை கவனித்து வந்ததில் பிரகாஷுக்கு விவசாயம் குறித்த ஆர்வம் அதிகரித்தது. பிரச்சினை விவசாயியின் உழைப்பிலோ, நிலத்திலோ இல்லை. விதைக்கப்படும் விதைகளில்தான் என்று கண்டறிந்தார்.

சோதனை முறையில் ஒரு சிறிய நிலத்தில் ஒரே பயிரின் பல்வேறு வகை விதைகளை விதைத்து ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தார். ஓராண்டு ஆய்வுக்குப் பிறகு நல்ல விளைச்சலைக் கொடுக்கக்கூடிய விதைரகத்தை தானே உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை வந்தது. விவசாயம் தொடர்பான கண்காட்சிகளில் பங்கு கொண்டார். நிறைய விஞ்ஞானிகளையும், வேளாண்மை தொடர்பான அரசு அதிகாரிகளையும் சந்தித்து விவசாயம் தொடர்பான தனது அறிவினை வளர்த்துக் கொண்டார்.

பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்துவந்த பேராசிரியர் மகாதிம்சிங், புதுரக விதைகளை இவர் கண்டறிய பின்னணியில் இருந்து ஊக்குவித்து வந்தார். தான் கண்டறிந்த புதுவகை விதைகளுக்கு பெரும்பாலும் 'குத்ரத்' என்றே பெயர்வைத்தார் பிரகாஷ். இச்சொல்லுக்கு இயற்கை என்று பொருள். கரிஷ்மா என்ற பெயரையும் சில விதைரகங்களுக்கு சூட்டியிருக்கிறார்.

'குத்ரத்' வகை விதைகளின் சிறப்பு என்ன?

நெல், கோதுமை, காய்கறிகள் என்று எல்லாவகைகளுக்கும் புதுவகை விதைகளை பிரகாஷ் கண்டறிந்திருக்கிறார். இவற்றின் சிறப்பு அமோக விளைச்சல். உதாரணத்துக்கு ஒரு ஏக்கரில் பயிரிடப்படும் குத்ரத் நெல், 25 முதல் 30 குவிண்டால் வரை விளைச்சலை கொடுக்கும். கோதுமை விதை, 18 முதல் 20 குவிண்டால் வரையிலான விளைச்சலை தரும். சாதாரணமாக விவசாயிகள் பயன்படுத்தி வரும் விதைகளைவிட கிட்டத்தட்ட 40 சதவிகிதம் அதிகமான விளைச்சலை குத்ரத் தருகிறது. இத்தனைக்கும் ரசாயனக் கலப்பில்லாத முழுக்க இயற்கை விவசாய முறையிலான விதைகள் இவை. கோதுமையில் மட்டும் 80 ரகங்கள், நெல்லில் 25 ரகங்கள், இன்னமும் மற்ற விவசாயப் பொருட்கள் பலவற்றுக்கும் ஏராளமான விதைரகங்களை உருவாக்கியிருக்கிறார்.

கண்டுபிடிப்போடு முடிந்துவிடுவதில்லை பிரகாஷின் பணி. தான் கண்டறிந்த விதைகளை, 14 மாநிலங்களுக்கு பயணித்து சுமார் 20 லட்சம் விவசாயிகளுக்கு இலவசமாகவே வழங்கியிருக்கிறார். பனாரஸுக்கு அருகிலிருக்கும் தனது 15 ஏக்கர் நிலத்தில் வேளாண்மை குறித்த பயிற்சிகளையும் விவசாயிகளுக்கு வழங்குகிறார். நம் பாரம்பரிய விதை வகைகளை பாதுகாப்பதும், பரவலாக்குவதும் அவரது முக்கிய நோக்கம்.

ஆகமதாபாத்தைச் சேர்ந்த தேசிய கண்டுபிடிப்பு நிறுவனம் இவரது முயற்சிகளுக்கு பெரியளவில் ஒத்துழைப்பு தந்துவருகிறது. ஆராய்ச்சிகளுக்கு பணரீதியிலான உதவி மற்றும் நாடு முழுக்க இருக்கும் விவசாயிகளை சந்திக்க பயணவசதி என்று இந்நிறுவனம் இவருக்கு உதவிவருகிறது.

பிரகாஷ்சிங்குக்கு 3 மகன்கள், 3 மகள்கள். மகள்கள் அனைவரும் நன்கு படித்திருக்கிறார்கள். அப்பாவோடு சேர்ந்து விவசாய விழிப்புணர்வுப் பணிகளில் தங்களையும் ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

தேசிய அளவிலான கண்டுபிடிப்புகளுக்கான விருதினை இருமுறை வென்றிருக்கிறார். ஒருமுறை முன்னாள் ஜனாதிபதி டாக்டர் கலாமிடமும், ஒருமுறை தற்போதைய குடியரசுத்தலைவர் பிரதீபா பாட்டிலிடமும் இவ்விருதுகளை பெற்றார்.

ஒருமுறை புனேவுக்கு இவரது விதைரகங்களோடு விவசாயிகளை சந்திக்க சென்றார். அங்கிருந்த ஒரு விவசாயி, "ஷிர்டி சாயிபாபாவே உங்களை இங்கே எங்களை வாழவைக்க வரவழைத்தாக நினைக்கிறேன்" என்றாராம்.

"இதைவிட பெரிய பேறு எனக்கென்ன வேண்டும்" என்கிறார் பிரகாஷ்.

 
பிரகாஷ்சிங் கண்டறிந்த விதைரகங்களின் மாதிரியை (100 கிராம், 500 கிராம் பாக்கெட்டுகளில்), அவருக்கு கடிதம் எழுதி பெறலாம். அவரது முகவரி :
Praksh Singh Raghuvanshi 
Village Tadia, Post Jakhini, Dist. Varanasi, U.P. 
Mobile: 09956 941993
E-mail : kudaratraghuvanshi@hotmail.com.

(நன்றி : புதிய தலைமுறை)

2 கருத்துகள்:

  1. 'எம்.எஸ்.சுவாமிநாதன்'களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்! இவர் மாதிரியான ஆட்களை விட்டுவிட்டு அரசாங்கம் ஏன் 'மான்சாண்டோ'க்களின் பின்னே திரிகின்றது?

    பதிலளிநீக்கு
  2. .
    லக்கி,
    உங்களின் அரசியல் தொடர்புகளைப்பயன்படுத்தி இதுபோன்ற‌வர்களை தமிழ்நாட்டின் லைம்லட்டிற்கு கொண்டுவர ஏன்முயற்சிக்கக்கூடாது?

    இவர்கள் கொண்டாடப்படவேண்டியவர்கள் மற்றும் இல்லை. அங்கீகரிக்கப்படவேண்டியவர்கள். தமிழ்நாட்டிற்கு அவசியம் தேவை.

    .

    பதிலளிநீக்கு