15 அக்டோபர், 2010

பிருந்தாவனம்!

ரசிகர்கள் விசிலடித்து திரையரங்கின் திரை கிழிகிறது என்று சொன்னால் நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும். நம்பாதவர்கள் மோட்சம் தியேட்டரின் திரையைக் காணலாம். Una my love போன்ற சீனே இல்லாத பிட்டுப் படங்களை போட்டுக் கொண்டிருந்த தியேட்டர் இது. எந்திரன் ஃபீவரின் போது ஆலையில்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை என்பதைப் போல எந்திரனை தெலுங்கில் ரிலீஸ் செய்தார்கள். கும்மிய கூட்டத்தைக் கண்ட திரையரங்கு நிர்வாகம், தெலுங்குப் படங்களுக்கு சென்னையில் இருக்கும் மவுஸை கண்டுகொண்டது. அடுத்தடுத்து அதிரடியாக தெலுங்கு ரிலீஸ். போனவாரம் கலேஜா. இந்தவாரம் பிருந்தாவனம். கீழ்ப்பாக்கத்தில் வியாழன் என்றாலே இப்போது திருவிழாதான்.

தேவுடுகாரின் தேவுடுகார பேரன் ஹீரோ. டைட்டிலிலேயே தேவுடுகாரின் பழைய 'மிஸ்ஸியம்மா' பாட்டு வண்ணம் சேர்க்கப்பட்டு ஓடுகிறது. அப்போது விசில் அடிக்கத் தொடங்கும் ரசிகர்கள், க்ளைமேக்ஸில் பேரனோடு கிராபிக்ஸில் தேவுடுகாரு கொஞ்சுவது வரை ஓயாமல் அடிக்கிறார்கள். தொண்டை என்னத்துக்கு ஆவது?

ஓபனிங் காட்சியில் நீச்சல்குளத்தில் இருந்து 'சுறா' மாதிரி ஹீரோ பாய்ந்துவருவதை காணும்போதே 'பகீர்' என்கிறது. நல்லவேளையாக அடுத்தடுத்த காட்சிகளில் வயிற்றுக்குள்ளிருந்து எழும்பிய திகில் பந்து அதுவாகவே காணாமல் போகிறது. ஏனோ தெரியவில்லை. ஜூனியர் என்.டி.ஆர். செய்யும் சேஷ்டைகள் எல்லாம் சூப்பராக தெரிகிறது. அதையே அட்சரம் பிசகாமல் தமிழில் இளையதளபதி செய்தால் மொக்கையாகப் போகிறது.

படம் முழுக்க பஞ்ச் டயலாக்குகள். வசனகர்த்தா தீயை உருக்கி மையாக நிரப்பி எழுதியிருப்பார் போல. ஜூனியர் என்.டி.ஆர் நடப்பது, திரும்புவது, பார்ப்பது என்று அவருடைய நடவடிக்கைகளை எப்படி வித்தியாசப்படுத்தலாம் என்று சிந்தித்ததிலேயே இயக்குனரின் ஹேர்ஸ்டைல், சோ ராமசாமியின் தலை மாதிரி ஆகிவிட்டிருக்கும். இனிமேல் ஜூ.என்.டி.ஆர் படங்களுக்கு ரசூல் பூக்குட்டியை வைத்துதான் ஒலிப்பதிவு செய்யவேண்டும். பின்னணி இசையில் அவ்வளவு ஆடம்பரம். தாங்கமுடியலை தேவுடா.

கதை கலக்கல் மசாலா. சமந்தாவும், ஜூ.என்.டி.ஆரும் காதலர்கள். சமந்தாவின் தோழி காஜல் அகர்வாலுக்கு ஊரில் அவசரக் கல்யாணம் ஏற்பாடு செய்யப்படுகிறது. காஜலுக்கோ யூ.எஸ். சென்று படிக்க ஆசை. கல்யாணத்தை நிறுத்த அவரது பாய்பிரெண்டாக ஜூ.என்.டி.ஆரை அவரது காதலியே 'ஏற்பாடு' செய்கிறார். ஒரு கட்டத்தில் காஜல் நிஜமாகவே லவ் செய்ய ஆரம்பித்து விடுகிறார். இதனால் விளையும் இடியாப்பச் சிக்கல்களை கிளைமேக்ஸில் அவிழ்க்க முயற்சித்திருக்கிறார்கள். ஹீரோவின் பெயர் கிருஷ்ணா. எனவே க்ளைமேக்ஸ் என்னவென்று நீங்களே யூகித்துக் கொள்ளலாம்.

இந்தி தேசியப் படங்களில் இந்தியர்கள்-பாகிஸ்தானியர்கள் ஒற்றுமை வலியுறுத்தப்படுவது வழக்கம். இது ஆந்திரத் தேசியப் படமென்பதால் தெலுங்கானா - ஆந்திரப் பிரதேச ஒற்றுமை மறைமுகமாக வலியுறுத்தப் படுகிறது. தனிப்பட்ட மனிதர்கள் சிலரின் ஈகோவால் ஊர் பிரிந்து சண்டையிட வேண்டுமா என்ற அடிப்படைக் கேள்வியை எழுப்பி, இரண்டு ஊரை சேர்த்து வைக்கிறார் ஹீரோ. இந்த ஒற்றுமையின் விளைவாக 'பிருந்தாவனம்' எவ்வளவு மகிழ்ச்சியடைகிறது என்பதை சிலாகிப்போடு சொல்லுகிறது படம். பிருந்தாவனம் எனும் வீடு ஆந்திரப் பிரதேசத்தின் குறியீடு என்று எடுத்துக் கொள்ளலாம்.

வழக்கமான ஜூனியர் என்.டி.ஆர். ஃபைட்டிங்கில் இரத்தவெறியுடனான ஆக்ரோஷம். சுறுசுறுப்பான அதிவேக டேன்ஸூலு. அப்பாவிமுக ரொமான்ஸூலு. "நீதாண்டா ஒரிஜினல் வாரிசு" என்பது மாதிரி ஜூ.என்.டி.ஆருக்கு மட்டுமே பொருந்தக் கூடிய தீவிர குடும்ப அரசியல் டயலாக்குகளுக்கு பஞ்சமேயில்லை. சமந்தாவின் அழகு அபாரமானது. தேவகன்னியர்களை ஒத்தது. குளோசப்புகளில் காணும்போது அவரது அழகான ஆரஞ்சு சுளை உதட்டைப் பிடித்து கொஞ்சத் தோன்றுகிறது. எந்த உடை அணிந்தாலும், இவரால் அந்த உடைகளுக்கு அழகு கூடுகிறது. இவ்வளவு 'யூத்'தான படத்துக்கு சோகமூஞ்சியான காஜல் ஏன் இன்னொரு ஹீரோயின் என்றுதான் புரியவில்லை. அவரது தொப்புளைத் தவிர்த்து அவரிடம் வேறென்ன ஸ்பெஷாலிட்டி என்பதும் தெரியவில்லை.

படத்தின் முதல் பாதி பரபரப்பு. இரண்டாம் பாதி முழுக்க நகைச்சுவை. பட்டையைக் கிளப்பும் பாடல்கள் என, பிருந்தாவனம் - சரியான விகிதத்தில் மசாலா, காரம் தூக்கலாக சமைக்கப்பட்ட ஆந்திரா மெஸ் ஸ்பெஷல் மீல்ஸ்.

10 கருத்துகள்:

  1. சமந்தா படம் போடாமையை வன்மையாக கண்டிக்கிறேன்.. பின்னாடி கமெண்ட் போடுபவர்கள் இதை வழிமொழிவார்களாக..

    பதிலளிநீக்கு
  2. நானும் பார்க்கனும். ஆமாம் காஜல் நடிப்பு எப்படி, மகதீராவில் வெலுத்து வாங்கியிருந்தார். இதில் மொக்கையோ!. அதைப் பற்றி சொல்லவே இல்லையே!

    பதிலளிநீக்கு
  3. //சமந்தா படம் போடாமையை வன்மையாக கண்டிக்கிறேன்//

    பதிலளிநீக்கு
  4. சமந்தா படம் போடாமையை வன்மையாக கண்டிக்கிறேன்.. பின்னாடி கமெண்ட் போடுபவர்கள் இதை வழிமொழிவார்களாக..

    பதிலளிநீக்கு
  5. என் டெஸ்க்டாப்பையும் மனதையும் அலங்கரிக்கும் சமந்தா-வின் படம் இங்கு இடம்பெறாதது மிகவும் வேதனையளிக்கிறது.. கண்டனத்திற்குரியது.. :)

    பதிலளிநீக்கு
  6. இனி தொடர்ந்து தெலுகு படங்களுக்கு விமர்சனம் எழுதி விழிப்புணர்வு உண்டாக்கவும்!

    பதிலளிநீக்கு
  7. அன்வர் (மலையாளம்) படம் விமர்சனம் படிக்க கிடைக்குமா?

    பதிலளிநீக்கு
  8. vaalzhga ungal thondu.. valarga ungal ...

    பதிலளிநீக்கு
  9. தேங்க்ஸ் தல ! படம் எப்படி என்று யாரிடமாவது கேட்கலாம் என்று இருந்தேன் ! ஆனா இந்த கதைய எங்கயோ கேட்டது மாதிரி இருக்குது ! அப்புறம் நீங்களும் நம்ம ராகம் என்று அறியும் பொது சந்தோசமா இருக்குது ! அப்புறம் மோட்சத்தில சவுண்ட் சூப்பர்ன்னு சொன்ன சீக்கிரமா பயபுள்ளைக கேக்க மாட்டேன்ராநுவ ! க்லேஜா பாத்தேன் ..ஒகே ரகம்! ஆனா மகேஷ் ரசிகர்கள் வந்து விசிலடிச்சு கலக்கிட்டாயிங்க !மோட்சத்தில டாய்லெட்டும் காண்டீனும் சரி பண்ணினால் பேமிலி கூட்டம் வர வாய்ப்பிருக்கு !

    பதிலளிநீக்கு
  10. வம்புக்குப் போகாத அனானி8:43 AM, அக்டோபர் 24, 2010

    முதல் முறையா உங்க மசாலா பட விமர்சனம் சரியாகவே இருந்திச்சு.

    பதிலளிநீக்கு