சுமார் 70 அடி உயரம் கொண்ட செல்போன் டவர் அது. 15 வருடங்களுக்கு முன்பாக நிறுவப்பட்டது. போதிய பரமாரிப்பு இல்லாததால், துருப்பிடித்து வலுவிழந்ததாக சொல்லப்படுகிறது. நல்ல வேளையாக இச்சம்பவத்தியில் உயிர்ச்சேதம் எதுவுமில்லை. இதுபோல செல்போன் டவர்கள் விழுவது நமக்கு புதிதுமல்ல. ஏற்கனவே சில இடங்களில் நடந்தும் இருக்கிறது.
இதையடுத்து சென்னை மாநகர காவல்துறை விழித்துக்கொண்டு சுறுசுறுப்பாக களத்தில் இறங்கியிருக்கிறது. இப்பிரச்சினையின் அனைத்து அம்சங்கள் தொடர்பாக செல்போன் நிறுவனங்களின் பிரதிநிதிகளோடு காவல்துறை ஆணையாளர் ஆலோசனை நடத்தியிருக்கிறார். முன்னதாக மாநில அளவிலான சட்டம், ஒழுங்கு நிலவரம் தொடர்பாக தலைமைச் செயலாளர் தலைமையில் நடந்த கூட்டம் ஒன்றினிலும் இப்பிரச்சினை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது என்றால் எவ்வளவு முக்கியமான பிரச்சினை இதுவென்று புரிந்துகொள்ளலாம்.
தமிழ்நாடு முழுவதும் ஏறத்தாழ 30,000 செல்போன் டவர்கள் இருக்கின்றன. சென்னை மாநகரில் மட்டுமே 8,000. இந்திய அளவில் 3,30,000 டவர்கள் இருக்கிறது. அடுத்த மூன்றாண்டுகளில் மட்டுமே 1,30,000 கூடுதல் டவர்கள் உருவாக்கப்படும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த பத்து, பதினைந்து ஆண்டுகளில் இப்படிப்பட்ட பெரிய எண்ணிக்கையில் இந்த கோபுரங்கள் உயர்ந்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை. ஏனெனில் நம் நாட்டில் செல்போனின் பயன்பாடு என்பது அசுரத்தன வளர்ச்சி கொண்டதும், அரசால் தவிர்க்க இயலாததாகவும் இருக்கிறது. கிட்டத்தட்ட 65 கோடி இணைப்புகள் இப்போது இருக்கிறது. மாதத்துக்கு ஒன்றரை கோடி எண்ணிக்கையிலான புதிய சிம்கார்டுகள் விற்கப்படுகின்றன. 100 சதவிகித மக்களிடமும் செல்போனை கொண்டுச் சேர்த்துவிட வேண்டும் என்ற இலக்கோடு செல்போன் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
செல்போன் டவரை தொழில்நுட்ப மொழியில் Base Transceiver Station (BTS) என்கிறார்கள். இரும்புக் கம்பிகளால் பிணைக்கப்பட்ட உயர்ந்த கோபுரம், ஆண்டெனா, டீசல் ஜெனரேட்டர், சில எலெக்ட்ரானிக் சமாச்சாரங்கள் – இவை பழுதுபடாமல் இயங்க குளிர்சாதன வசதி செய்யப்பட்ட ஒரு அறை. இவைதான் ஒரு பி.டி.எஸ். ஸ்டேஷன். செல்போன்களில் பரிமாறிக் கொள்ளப்படும் மின்காந்த அலைகளை வாங்கியும், அனுப்பும் பணிகளை இந்த ஸ்டேஷன் செவ்வனே செய்து வரும். உயரமான இடங்களில் அமைக்கப்படுவதன் மூலம் 'சிக்னல்'களை பக்காவாக புரிந்துகொண்டு செயல்படும்.
மத்தியத் தொலைத்தொடர்புத் துறையின் ஒயர்லெஸ் திட்டக்குழுவிடம் (Wireless Planning Committee) அனுமதி பெற்றே இத்தகைய ஸ்டேஷன்களை அமைக்க முடியும். இவற்றை அமைக்க சில விதிமுறைகளும் உண்டு. பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு அருகில் செல்போன் டவர்கள் அமைக்க அனுமதியில்லை. மக்கள் நெருக்கடி மிகுந்த குடியிருப்புப் பகுதிகளிலும் அமைக்க கூடாது. அருகில் ஏதேனும் கட்டடம் இருந்தால் அவற்றில் இருந்து 3 மீட்டர் தள்ளியே கோபுரம் அமைக்கப்பட வேண்டும். கோபுரம் இருக்கும் பகுதிக்கு பொதுமக்கள் யாரும் வராதவண்ணம் எச்சரிக்கைப் பலகைகள் அமைக்கப்பட வேண்டும். பாதுகாப்பு அடிப்படையில் இதுமாதிரியாக இன்னும் நிறைய விதிமுறைகள் இருக்கின்றன. செல்போன் டவர் கட்டுமானம் தொடர்பாகவும் கூட தொழில்நுட்ப வழிகாட்டுதல்களும், தொடர்ச்சியான பராமரிப்பு குறித்த ஆலோசனை விதிகளும் கூட உண்டு.
சர்வதேச ஆணையத்தின் விதிமுறைப்படி குடியிருப்பு மனைகளில் இருந்து 60 மீட்டர் தொலைவுக்கு அப்பால் மட்டுமே செல்போன் டவர்கள் அமைக்கப்பட வேண்டும். இது தொடர்பாக தகவல் தொழில்நுட்பத்துறை சில உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறது.
ஆனாலும், இவையெல்லாம் முறையாக கடைப்பிடிக்கப்படாத இடங்களில்தான் பிரச்சினை. முறையாக கடைப்பிடிக்கப்படுவது அபூர்வம் என்பதுதான் வேதனை. பொதுத்துறை செல்போன் நிறுவனமான பி.எஸ்.என்.எல். தான் விதிமுறைகளில் கொஞ்சம் கறாராக இருக்கிறது.
பொதுவாக ஒரு செல்போன் நிறுவனம், ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஸ்டேஷன் அமைக்க முடிவெடுத்தால், அங்கிருக்கும் ஏதாவது கட்டிட உரிமையாளரை தொடர்பு கொள்கிறது. குத்தகை அடிப்படையில் கிடைக்கும் இடத்தை வளைத்துப் போடுகிறது. வாடகைக்கு இடத்தைக் கொடுத்தால் கிடைக்கும் வருமானத்தை விடவும், பன்மடங்கு தொகை கூடுதலாக கிடைப்பதால் நகரங்களில் செல்போன் டவர் நம் இடத்தில் அமைக்கமாட்டார்களா என்று ஏங்குவோர் பெருகி வருகிறார்கள். செல்போன் டவருக்கு இடம் வாடகைக்கு விடப்படும் என்று குறிப்பிட்டு, பத்திரிகைகளில் விளம்பரம் தருமளவுக்கு நிலைமை இருக்கிறது.
கட்டிடங்களில் செல்போன் டவருக்கு இடம் கொடுக்கும் உரிமையாளர்களுக்கு தனி வரி வசூலிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு சென்னை மாநகராட்சி மன்றம் தீர்மானம் கூட நிறைவேற்றியது. ஆயினும் இதுபோன்ற டவர்களை அமைக்க சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் விதிகள் எதையும் விதிக்கவில்லை. மாநில அளவிலேயே இவற்றைக் கட்டுப்படுத்த முறையான சட்ட திட்டங்கள் இல்லை.
ஏதோ ஒரு இடம் கிடைத்தவுடன் ஒப்பந்த அடிப்படையில் டவர் கட்டுமானத்தில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்களிடம் டவர் அமைக்கும் பணியை செல்போன் நிறுவனங்கள் ஒப்படைக்கின்றன. பல செல்போன் நிறுவனங்கள் டவர் பராமரிப்பையும் கூட வெளியாட்களிடம் ஒப்படைப்பதுண்டு. இதுபோன்ற கட்டுமானத்தின் போது, போதிய பாதுகாப்பு சாதனங்களின்றி ஒப்பந்தப் பணியாளர்கள் பணிபுரிவதை சகஜமாக காண முடிகிறது. கடந்த ஆண்டு ஜெயங்கொண்டம் அருகே டவர் அமைத்துக் கொண்டிருந்தபோதே, அது சரிந்ததில் இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் கூட நடந்தது.
அலட்சியம்தான் அனைத்துக்கும் காரணமாக இருக்கிறது. விதிமுறை மீறல்கள் என்பது செல்போன் டவர் விஷயத்தில் மிகத்தாராளமாக நடக்கிறது. தமிழக நகரங்களில் இருக்கும் செல்போன் டவர்களை குத்துமதிப்பாக பார்த்தாலே எந்த விதிக்கும் பொருந்தாவகையில் அமைக்கப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளலாம். ஆயிரம் விளக்குப் பகுதி புகழ் பெற்ற அப்போலோ மருத்துவமனை அருகிலேயே கூட ஒரு செல்போன் டவர் உயர்ந்து நிற்கிறது. விதிமுறைகள் என்பது வெறும் பேச்சளவில்தான் இருக்கிறது. கட்டிடங்களின் உயரத்தில் போதுமான வலுவின்றி ஏனோதானோவென்று முளைத்துவிட்ட கோபுரங்களை கண்டாலே வயிற்றில் அமிலம் சுரக்கிறது. கோபுர தரிசனம் கோடி புண்ணியமென்று யார் சொன்னது?
பராமரிப்பின்றி சாய்வது, அதனால் ஏற்படும் விபத்துகள் என்று கண்ணுக்குத் தெரிந்த பாதிப்புகள் ஒருபுறமிருக்க மருத்துவரீதியான கதிர்வீச்சு அபாயம்தான் இன்னும் மோசமானது. சமீபகாலமாக அரசு நிறுவனங்கள், ஊடகங்கள், பொதுநலனில் அக்கறை கொண்ட தனியார் நிறுவனங்கள் பலவும் உடல்ரீதியாக இந்த டவர்களில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சு ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகளை கவலையோடு பார்க்கிறார்கள்.
குடியிருப்புப் பகுதிகளில் செல்போன் டவர்கள் அமைக்கப்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு கூட ஒன்று தொடுக்கப்பட்டது. இதையடுத்து தமிழகம் முழுவதுமிருக்கும் செல்போன் டவர்களில் வெளிப்படும் கதிர்வீச்சு குறித்து ஆய்வு நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிட்டது. அந்தப் பணியும் சத்தமின்றி நடைபெற்று வருகிறது.
"இடைவிடாமல் செல்போன் உபயோகிப்பதும், செல்போன் டவர்களுக்கு அருகில் வசிப்பதும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். பெண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும். இக்கதிர்வீச்சால் நரம்புக் கோளாறுகள் மனிதர்களுக்கு உருவாகும் என்பது வெளிநாடுகளில் ஆய்வுகளோடு நிரூபிக்கப் பட்டிருக்கிறது" என்கிறார் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் எம்.வி.கோட்டா.
டெல்லியில் விஜயாபட் என்ற பெண்மணிக்கு மூளைக்கட்டி நோய் ஏற்பட்டது. இந்நோய் அவருக்கு ஏற்பட காரணம், அவர் வசித்த பகுதி செல்போன் டவர் ஒன்றுக்கு நெருக்கமாக இருந்ததுதான் என்பதை மருத்துவர்கள் உறுதி செய்திருக்கிறார்கள். புற்றுநோய், இதயக்கோளாறு, ஆண்மைக்குறைவு, சர்க்கரை நோய், நினைவாற்றல் பாதிப்பு, மனநோய் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் இந்த கதிர்வீச்சால் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
செல்போன் டவர்கள் வெளிப்படுத்தும் மின்காந்த கதிர்வீச்சு 50 மீட்டர் தொலைவுக்கு மைனஸ் 30 டி.பி. அளவு இருக்கலாம் என்று ஒரு நிர்ணயம் இருக்கிறது. இந்த அளவையும் விட குறையும் பட்சத்தில் அது ஆபத்தானது. சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட சில ஆய்வுகளில் இந்தியாவின் பல நகரங்களில் செல்போன் டவர்களில் மைனஸ் 12, மைனஸ் 10 டி.பி. அளவுகளுக்கு கதிர்வீச்சு இருக்கும் அபாயம் தெரிய வந்திருக்கிறது.
இதையடுத்தே செல்போன் நிறுவனங்கள் அனைத்தும் தங்கள் டவர்களில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சு அளவு நிர்ணயிக்கப்பட்ட அளவுகளுக்குள் இருக்கிறது என்பதற்கான சான்றிதழை, கதிர்வீச்சு அளவீடு நிலையத்தில் இருந்து பெறவேண்டும். இச்சான்றிதழை நவம்பர் 15ஆம் தேதிக்குள் தொலைத்தொடர்பு அமலாக்கம், மனிதவள மற்றும் கண்காணிப்பு அமைப்பிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. அவ்வாறு சான்றிதழ் சமர்ப்பிக்கப்படாத செல்போன் டவர்களுக்கு தலா ஐந்து லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படுமென்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
சென்னையிலேயே கூட தமிழக முதல்வர் கலைஞர் வசிக்கும் பகுதி, கதிர்வீச்சு காரணமாக பாதுகாப்பற்ற பகுதியாக இருப்பதாக டெஹல்கா பத்திரிகை கோஜெண்ட் என்ற நிறுவனத்தோடு இணைந்து நடத்திய ஓர் ஆய்வில் தெரியவந்திருக்கிறது. அதே நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஜெயல்லிதா வசிக்கும் பகுதி கதிர்வீச்சு அபாயமற்ற பகுதியாக அந்த ஆய்வில் தெரிய வந்திருப்பது ஒரு சுவையான ஆச்சரியம்.
சரி. ராஜா அண்ணாமலைபுரம் டவர் சாய்ந்த விஷயத்துக்கு வருவோம். இதுபோல அவ்வப்பொழுது எழும் பிரச்சினைகளுக்காக செல்போன் நிறுவன பிரதிநிதிகள் மற்றும் போலிஸ் அதிகாரிகள் பங்கேற்கும் கூட்டுக்குழு ஒன்றினை அமைக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. பார்வை மங்கிக் கொண்டிருக்கும் போதாவது சூரிய நமஸ்காரம் செய்ய முன்வந்திருப்பதை பாராட்டித்தான் ஆகவேண்டும்.
இது மட்டுமன்றி, செல்போன் டவர் அமைப்பது தொடர்பான விதிமுறைகளை அரசு உருவாக்கி, அவை முறையாக செயல்படுத்தப் படுகிறதா என்பதை உள்ளாட்சிகள் கண்காணிக்கும் வகையில் சட்டம் ஏதேனும் கொண்டுவரலாம். விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்டிருக்கும் செல்போன் டவர்களை, தயவுதாட்சணியமின்றி நீக்கிவிடவும் அரசு முன்வரவேண்டும்.
ஆங்காங்கே ஒன்றிரண்டாக சரியும் கோபுரங்களின் ஆபத்தைதான் நாம் நேரடியாக பார்க்கிறோம். நமக்கு அருகிலேயே, கண்களுக்கு தட்டுப்படாமல் நம் உடலை சரித்துக் கொண்டிருக்கும் டவர்கள் கம்பீரமாக நிமிர்ந்துதான் நிற்கின்றன.
(நன்றி : புதிய தலைமுறை)
விழிப்புணர்வூட்டும் பதிவு!
பதிலளிநீக்கு