18 ஜனவரி, 2011

அஜால் குஜால் Undie Party


ஐரோப்பாவே அரண்டு போய் கிடக்கிறது.

குளிர்காலம் இவ்வளவு சூடாக ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் இதுவரை தொடங்கியதே இல்லை.

தேசிகுவல் என்பது ஸ்பெயினைச் சேர்ந்த ஓர் ஆயத்த ஆடை நிறுவனம். தேசிகுவல் என்ற ஸ்பானிய சொல்லுக்கு 'அது இது இல்லை' என்று பொருளாம். 1984ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் உடை விஷயத்தில் கொஞ்சம் 'தாராளமான' வடிவமைப்புகளை வழங்குவதில் கில்லாடி.

ஐரோப்பா முழுக்க நன்கு கால் விரித்துவிட்ட இந்நிறுவனம், ஆசியாவிலும் எட்டிப் பார்க்கத் தொடங்கியிருக்கிறது. முன்னதாக சில காலம் முன்பு அமெரிக்காவில் காலூன்றத் திட்டமிட்டது. அமெரிக்காவில் ஏற்கனவே பழம் தின்று கொட்டை போட்ட நிறுவனங்கள் ஏராளம். என்ன செய்து இளசுகளை கவரலாம் என்று நகம் கடித்து யோசிக்கத் தொடங்கினார்கள் தேசிகுவல் அதிகாரிகள்.

அஜால் குஜாலான ஆசாமி யாரோ ஒருவரது சிந்தையில் திடீரென பல்பு எரிந்தது. Undie Party என்றொரு ஆண்மீக ஐடியாவைப் பிடித்தார். Undies என்ற சொல்லுக்கு பெண்களின் கீழாடை என்று பொருள். அமெரிக்காவில் Undie Party சக்கைப்போடு போட, ஐரோப்பாவிலும் இக்கலாச்சாரம் திகுதிகுவென பரவி வருகிறது. அமெரிக்கர்கள் மறுபடியும் எப்போ பார்ட்டி? எப்போ பார்ட்டி? என்று ஏங்கிக் கொண்டிருக்கிறார்களாம்.

Undie Party என்பது என்ன?

இந்த பார்ட்டியில் கலந்துகொள்ளும் முதல் நூறு பேருக்கு தேசிகுவல் இலவசமாக ஆடைகளை அளிக்கும். அவர்கள் அறிவிக்கும் தேதியில், அறிவிக்கும் கடைக்கு வந்து திருப்பதி க்யூ மாதிரி வரிசையாக நிற்கவேண்டும். First come, First gift அடிப்படையில் பார்ட்டி நடக்கும். பார்ட்டியில் கலந்துகொள்ள ஒரே ஒரு நிபந்தனை உண்டு. ஆணாக இருப்பின் ஜட்டியோ அல்லது ட்ரவுசரோ மட்டுமே அணிந்து வரவேண்டும். பெண்களுக்கு கொஞ்சம் கூடுதல் சலுகை உண்டு. கீழாடையோடு, மார்க்கச்சையும் அணிந்து வரலாம்.

100 பேருக்குதான் இலவச ஆடை தரமுடியுமென்றாலும் தங்களுக்கும் 'டோக்கன்' (நம்மூர் இலவச டிவிக்கு கொடுப்பது மாதிரி கொடுக்கிறார்கள்) கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்று ஆயிரக்கணக்கில் மக்கள் 'ஆய் டிரெஸ்' போட்டுக்கொண்டு குவிந்துவிட Undie party நடந்த நகரங்களில் எல்லாம் திருவிழாக்கோலம் தானாம். பற்களை கிடுகிடுக்க வைக்கும் ஐரோப்பா குளிரிலும் அனல் பறக்கிறதாம். பார்ட்டியில் பங்குபெற ஐநூறு பேர் வந்தால்.. பார்வையாளர்கள் பத்தாயிரக் கணக்கில் குவிகிறார்களாம். ஆபிஸுக்கு லீவ் போட்டுவிட்டெல்லாம் நிறைய பேர் வந்து விடுவதால், விரைவில் அரசு பொதுவிடுமுறையாக Undie party தினம் அறிவிக்கப்படலாம். கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறையினரும் பார்ட்டி கோலாகலங்களில் தங்களையே மெய்மறந்துவிடுகிறார்கள். 

ஐரோப்பாவின் இளசுகள் இப்போது தங்கள் ஊரிலும் தேசிகுவல் கடை திறக்காதா? Undie party நடக்காதா என்று ஏங்க ஆரம்பித்து விட்டார்கள். இந்தியாவுக்கு இக்கலாச்சாரம் வந்து, சரவணா ஸ்டோர்ஸில் இப்படி ஒரு பார்ட்டி நடந்துவிடுமோ என்று இனம்புரியாத இன்பமான பீதி இப்போதே நமக்கு தோன்ற ஆரம்பித்து விட்டது. ரங்கநாதன் தெரு நல்ல நாளிலேயே நாயகம். இம்மாதிரி ஒரு பார்ட்டி நடந்தால் என்ன கதிக்கு ஆளாகும்? பாலியல் பசுமைக்கு பெயர்போன ஐரோப்பாவே Undie காய்ச்சலில் ஆடிப்போயிருக்கிறது. காய்ந்துபோன தேசமான இந்தியாவில் இது எடுபடாதா என்ன?

13 ஜனவரி, 2011

மானமுள்ள ஒரே கவிஞன்!

தோழர்களே!

கவிஞர் காத்துவாயன் (முன்பு குமுதத்தில் கவிதை எழுதியவரா என்று தெரியாது) அவர்கள் சென்னை சங்கமம் நிகழ்ச்சி தொடர்பாக நமது லக்கிலுக் ஆன்லைன் டாட் காமுக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். இதற்கு முன்பாக சி.என்.என். டாட் காம், பி.பி.சி. டாட் காம் என்று பல டாட் காம்களுக்கு இதே கடிதத்தை எழுதி அவர்கள் பிரசுரிக்காமல் துப்பி திருப்பி அனுப்பிவிட்டதால் கடைசியாக தூர்தர்ஷன் டாட் காமுக்கு அனுப்பியிருக்கிறார். அங்கும் இந்த கடிதத்தை ஒத்துக் கொள்ளாததால் கடைசியாக நமக்கு அனுப்பி பிரசுரிக்க சொல்லி கேட்டிருக்கிறார். கவிஞர் காத்துவாயனுக்கு லக்கிலுக் ஆன்லைன், அவரது விடா முயற்சியைப் பாராட்டி, தனது வீரவணக்கத்தை செலுத்துகிறது.

இனி காத்துவாயனின் கடிதம் :


அன்புக்குரியவர்களே!

வணக்கம்.

கடந்த சில வருடங்களாக சென்னை சங்கமத்தில் கவிதை சங்கமம் ஒன்று நடக்கும். அவர்கள் கூப்பிடாமல் நானே போய் அங்கே யார் கையிலாவது காலிலாவது விழுந்து கவிதை வாசிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறேன். என்னை ஊர் உலகம் கவிஞன் என்று ஒப்புக் கொள்கிறதோ இல்லையோ, நான் ஒப்புக் கொள்கிறேன். எனவே அதே இறுமாப்போடு அவர்கள் கூப்பிட்டாலும், கூப்பிடாவிட்டாலும், கண்டாலும், கண்டுகொள்ளாவிட்டாலும் என் பணி கவிதை பாடி கிடப்பதே என்று பாடி வந்திருக்கிறேன்.

இந்த ஆண்டும் என்னை யாரும் அழைக்கவில்லை. கலந்துகொள்ள ஆர்வம் இருந்தாலும் சென்னை வரை வந்து போக காசு இல்லை. எனவே ஸ்பெக்ட்ரம் ஊழலை கண்டித்து நான் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை என்பதாய் நீங்கள் புரிந்துகொள்ளுமாறு வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன். நன்றாக கேட்டுக் கொள்ளுங்கள் மக்களே. இதை நான் சுயவிளம்பரத்துக்காக செய்வதாக யாரும் நினைத்துவிட வேண்டாம். இதை என் பதிவில் போட்டிருப்பதாலோ, ஃபேஸ்புக்கில், ட்விட்டரில், கிடைக்கும் கேப்பில் எல்லாம் போட்டிருப்பதாலோ நீங்கள் அப்படி நினைத்துவிட வேண்டாம்.

நான் புறக்கணிப்பதால் சென்னை சங்கமத்திற்கு எந்தவிதமான தடங்கலும் இல்லை. நான் புறக்கணிக்கா விட்டாலும் ஒன்றும் சீரும் சிறப்புமாக நடந்தேறிவிடப் போவதில்லை. வழக்கம்போல நான் கவிதை எழுதி என்னுடைய வலைப்பூவில் பதிந்து அதை நானேதான் படித்துக் கொண்டிருக்கப் போகிறேன். யாரும் என் கவிதைகளை படித்து புரிந்து பின்னூட்டம் போடப்போவதில்லை. இருந்தாலும் இதை ஒரு எதிர்ப்பாக நீங்களெல்லாம் பதிவு செய்துக்கொண்டு, என்னை மனச்சாட்சியும் மானமும் உள்ள தமிழனாக, கவிஞனாக போற்றவேணுமாய் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி.

அன்புடன்
மானமுள்ள கவிஞர் காத்துவாயன்


அன்பிற்குரிய கவிஞர் காத்துவாயர் அவர்களே!

இனி உங்கள் பெயரை 'வாயன்' என்று 'ன்' போட்டு எவனாவது மரியாதைக்குறைவாக எழுதினால் அவனுடைய மென்னியை முறிக்க லக்கிலுக் ஆன்லைன் கொலைவெறிப்படை தயாராக இருக்கிறது. நமது லக்கிலுக் ஆன்லைன் தளத்தில் உருப்படியாக எதையும் இதுவரை பிரசுரித்ததில்லை. இனியும் பிரசுரிக்கும் எண்ணமும் இல்லை. உருப்படாத இந்த வலைப்பூவில் உங்களுடைய உருப்படாத கவிதைகளை இட சித்தமாக இருக்கிறோம். பின்னூட்டங்களைப் பற்றி கவலைப்படாதீர்கள். நாமே வெவ்வேறு பெயர்களில் பாராட்டியும், திட்டியும் எழுதி கணக்கு காட்டிக் கொள்ளலாம். உங்களுக்கு கவிதை எழுத பணம் மட்டும் கொடுக்க இயலாது. உங்கள் கவிதைகளை படிக்கும் துன்பகரமான உணர்வுகளுக்கு நீங்கள்தான் லக்கிலுக் ஆன்லைனுக்கு ஏதோ பார்த்து போட்டு கொடுக்க வேண்டும்.

12 ஜனவரி, 2011

சென்னைப் புத்தகக் காட்சி - சில பரிந்துரைகள்

புத்தகக்காட்சிக்கு செல்லும் நண்பர்கள், ஏதாவது புத்தகங்களை பரிந்துரையுங்களேன் என்று கேட்கிறார்கள். என்னமாதிரியான ஒரு வறட்சியான இலக்கியச் சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதற்கு மிகச்சரியான உதாரணம் இது. பின்னே, இம்சை அரசன் வடிவேலுவிடம் பார்க்க வேண்டிய உலகப் படங்கள் பட்டியலை கேட்கலாமா? நாம் அவ்வளவு ஒர்த் இல்லை சார். 'சென்னையில் ஃபிகர் வெட்ட ஏற்ற இடங்கள் யாது யாது' என்று கேட்டால் டக், டக்கென்று லிஸ்ட்டை எடுத்து விடலாம். எனக்குப் பிடித்த இலக்கியவாதி பதலக்கூர் சீனிவாசலு என்று பலமுறை சொல்லியிருக்கிறேன். அதற்குப் பிறகும் இதுமாதிரி ஆடம் டீஸிங் பண்ணிக் கொண்டிருந்தால் என்னத்தைச் செய்வது?

இருந்தாலும், நம் சிற்றறிவுக்கு எட்டிய சில பரிந்துரைகள் :

புத்தகக் காட்சிக்குள் நேரே நுழைந்து விடாதீர்கள். பச்சையப்பா கல்லூரியை ஒட்டிய பிளாட்பாரத்தில் நிறைய புத்தகங்கள் கிடைக்கின்றன. 'உள்ளே' நூறு, நூற்றி ஐம்பதுக்கு விற்கப்படும் புத்தகங்களை இங்கே வெறும் இருபது, முப்பதுக்கு புத்தம் புதுசாக வாங்க முடியும். உதா : அருளன் எழுதிய லங்காராணி. Haunted house என்கிற வித்தியாச வடிவமைப்பு கொண்ட ஐரோப்பிய குழந்தைகள் புத்தகம் ஒன்றினை வெறும் முப்பது ரூபாய்க்கு வாங்கினேன். லேண்ட்மார்க்கில் இதன் ரேட் ஐநூறுக்கும் மேலாக இருக்கும். உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் 'பைண்டிங்' செய்யப்பட்ட பழைய காமிக்ஸ்கள் கூட கிடைக்கும். பிரேம்-ரமேஷின் நாவல் ஒன்று இங்கே சல்லிசாக கிடைத்தது. உள்ளே அதன் விலை நூற்றி இருபதோ, நூற்றி ஐம்பதோ. ஒரு முன்னூறு ரூபாய்க்கு பர்ச்சேஸ் செய்ய முடிந்தால், குறைந்தபட்சம் பத்து புத்தகங்கள் உங்கள் பையில் நிச்சயம்.

கண்காட்சிக்கே நுழைவுக் கட்டணம் ரூ.5 (இந்த வார புதிய தலைமுறையின் விலை ரூ.10. அதில் இலவச கூப்பன் கொடுத்திருக்கிறார்கள்). ஆனால் டூ-வீலர் பார்க்கிங்குக்கு ரூ.10. டூ-வீலர் விடும்போது டோக்கன் வாங்க வேண்டாம். ரிடர்னில் கேட்டால் பத்து ரூபாய் நோட்டு ஒன்றினைக் கொடுக்கலாம். கொஞ்சம் தில்லு இருப்பவர்கள் கைச்சின்னம் மாதிரி கை-யை காட்டினாலேயே போதும். ஏதோ பாஸ் இருக்கிறது என்று நினைத்து கண்டுகொள்ளாமல் விட்டு விடுகிறார்கள். அல்லது 9 மணிக்கு மேல் வண்டியை எடுத்து வந்தால் டோக்கன் வாங்க ஆளே இருக்காது. இந்த 10 ரூபாயை மிச்சம் செய்தால், பாரதி புத்தகாலயத்தில் இரண்டு புத்தகம் கூடுதலாக வாங்க முடியும்.

தினத்தந்தியின் வரலாற்றுச் சுவடுகளை நுழைந்ததுமே வாங்கிவிடுவது உத்தமம். 375 ரூ மதிப்புள்ள புத்தகத்தை கலைஞர் புண்ணியத்தால் ரூ.300க்கு விற்றுக் கொண்டிருக்கிறார்கள். பத்து சதவிகித புத்தகக்காட்சி தள்ளுபடி போக ரூ.270/-க்கு கனமான, ஹார்ட் பவுண்டிங் அட்டை போடப்பட்ட பொக்கிஷம் கிடைக்கிறது. பிரேமா பிரசுரத்தில் மதனகாமராஜன் கதை, விக்கிரமாதித்யன் கதை போன்ற உருப்படியான நூல்கள் எளிமையான தமிழில் கிடைக்கும். இங்கே 1950களின் கிளாசிக் மர்மநாவல்களும் உண்டு. அரு.ராமநாதனின் நூல்கள் நிஜமாகவே முக்கியமானவை.

வானதியில் வாண்டுமாமா நூல்கள் நிறைய கிடைக்கும். மர்மமாளிகையில் பலே பாலு செமத்தியான காமிக்ஸ் கலெக்‌ஷன் (விலை ரூ.150). சாண்டில்யனின் வாழ்க்கை வரலாறு கிடைத்தால் வாங்கி வைத்துக் கொள்ளலாம். மணிமேகலையிலும் கூட அப்புசாமி காமிக்ஸ் கிடைக்கும். பூம்புகாரில் பழைய புஷ்பாதங்கதுரை மற்றும் பட்டுக்கோட்டை பிரபாகர் நூல்கள் சல்லிசான விலையில் கிடைக்கிறது. உதாரணம் : சிறைக் கதைகள், ரூ.15.90. மீனாட்சி நிலையத்தில் குமரிப் பதிப்பகம் வெளியிட்ட சுஜாதாவின் சில நூல்களை (உதா : விக்ரம்) பத்து, பண்ணிரெண்டு ரூபாய்க்கு வாங்க முடிந்தது. இதே விலையில் மேலாண்மை பொன்னுச்சாமியின் அந்தக் காலத்து சிறுகதைத் தொகுப்புகளையும் இங்கே வாங்கலாம்.

சாகித்திய அகாதமியில் நிறைய இலக்கிய நூல்கள் குறைந்த விலையில் கிடைக்கும். வாசிக்க தம் இருப்பவர்கள் வாங்கிக் கொள்ளலாம். இருபத்தைந்து ரூபாய் புத்தகங்களை கூட (இந்த சைஸ் புத்தகங்கள் மற்ற பதிப்பகங்களில் மினிமம் ரூ.75) ஐம்பது சதவிகித தள்ளுபடியில் தள்ளி விடுகிறார்கள். வாங்கத்தான் ஆளில்லை. இராமாயணம், மகாபாரதம் வாங்கியே ஆகவேண்டுமென்றால் ராஜாஜி எழுதியவற்றை வாங்கலாம் (வானதி என்று நினைவு). மலிவு விலையில் வேண்டுமானால் விஜயபாரதத்தில் சித்பவானந்தர் எழுத்தில் வாங்கி வைத்துக் கொள்ளலாம் (ஈச் ரூ.25 ஒன்லி). சத்திய சோதனை, அக்னிச் சிறகுகள் எல்லாம் ரூ.30 ரேஞ்சில் பல ஸ்டால்களில் கிடைக்கிறது.

எந்த ஒரு புத்தகத்தையுமே வாங்குமுன் ஒன்றுக்கு நான்கு முறை யோசியுங்கள். கடந்த பத்தாண்டுகளில் லட்ச ரூபாய்க்கு மேலாக புத்தகங்கள் வாங்கியிருக்கிறேன். அவற்றில் இருபத்தைந்து சதவிகித புத்தகங்களை முழுமையாக வாசித்திருந்தாலே அதிகம். தீபாவளிக்கு பட்டாசு வாங்கினாலாவது வெடித்துத் தீர்க்கிறோம். புத்தகங்களை என்ன செய்வது? நீங்கள் படித்தே ஆகவேண்டும் என்று நினைக்கின்ற புத்தகங்களை வாங்கலாம். ஒரு எழுத்தாளர் ரொம்ப பிரபலமாக இருக்கிறார் என்று நினைத்து அவரது புத்தகங்களை வாங்குவது மடத்தனம். சாம்பிளாக அவரது ஓரிரு சிறுகதைகளை படித்துப் பார்த்து, உங்களுக்கு 'செட்' ஆனால் மட்டும், அவரது நூல்களை வாங்கலாம். துறைசார்ந்த நூல்கள் வாங்கும்போதும் கவனம் தேவை. நீங்கள் ஏதோ ஒரு கம்பெனியில் குமாஸ்தாவாக குப்பைக் கொட்டிக் கொண்டிருக்கும் பட்சத்தில், யுவகிருஷ்ணா எழுதிய 'சுண்டி இழுக்கும் விளம்பர உலகம்' வாங்கினீர்களேயானால், உங்களைப் போன்ற அம்மாஞ்சி உலகத்திலேயே கிடையாது. நண்பர்கள் எழுதினார்கள், நண்பர்கள் பரிந்துரைத்தார்கள் என்று முகதாட்சண்யத்துக்காக புத்தகம் வாங்குவதை தவிருங்கள். வாசிப்பு முக்கியம்தான். அதைவிட உங்களுடைய ஒவ்வொரும் காசும், உங்களுக்கு ரொம்ப முக்கியம். நான் கவிதைகளையே படிப்பதில்லை. பாரதியார் கவிதைகளில் தொடங்கி, நிறைய கவிதைத் தொகுப்புகளை காரணமேயில்லாமல் கடந்தகாலங்களில் காசுகொடுத்து வாங்கி வைத்திருக்கிறேன். இது எனக்கு தேவையா? உங்களுக்கு எதை படிக்க முடியுமோ, அதை வாங்கினா போதும் சார்.

ஓக்கே, பத்து நூல்கள் பரிந்துரை. நான் சொல்வதற்காக இவற்றை நீங்கள் வாங்கியாக வேண்டும் என்று எந்த அவசியமுமில்லை. இந்த நூல்களை நான் வாசித்திருக்கிறேன் என்பதைத் தவிர்த்து வேறெந்த சிறப்புக் காரணமும் இந்தப் பரிந்துரைக்கு இல்லை. உங்கள் பர்ஸுக்கு பெரியதாக வேட்டு வைத்துவிடக்கூடாது என்கிற பாச உணர்வும் இந்த பரிந்துரையின் பின்னால் ஒளிந்திருக்கிறது. இது எல்லாமே கொஞ்சம் உருப்படியான புத்தகங்கள் என்பது என்னுடைய தனிப்பட்ட எண்ணமும் கூட. இந்தப் புத்தகங்களை ஒன்றுக்கும் மேற்பட்ட முறையும் வாசிக்க முடியும் என்பதால் 'துட்டுக்கேத்த தோசை' என்கிற வகையிலும் எடுத்துக் கொள்ளலாம்.

1. என் சரித்திரம் - உ.வே.சாமிநாதைய்யர்

2. பாரதியார் கதைகள், கட்டுரைகள்

3. என் கதை - நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை

4. எஸ்.ஏ.பி - ஜ.ரா.சு, புனிதன், ரா.கி.ர

5. ஜெயமோகன் குறுநாவல்கள்

6. கூனன் தோப்பு & சாய்வு நாற்காலி - தோப்பில் முகமது மீரான்

7. மதுமிதா சொன்ன பாம்புக் கதைகள் - சாரு நிவேதிதா

8. பின் கதைச் சுருக்கம் - பா.ராகவன்

9. கே.பி.டி. சிரிப்பு ராஜ சோழன் - கிரேஸி மோகன்

10. சுகுணாவின் காலைப்பொழுது - மனோஜ்



11 ஜனவரி, 2011

சீமான்!

நாற்பது கோடியாரின் பாணியில் அம்மாவின் கூடாரத்துக்கு செந்தமிழன் சீமான் வந்திருக்கிறார். அம்மாவின் ரூல்ஸ் & ரெகுலேஷன்ஸ் ஏற்கனவே அங்கிருப்பவர்களுக்கு தெரியும். ஆனானப்பட்ட தான்னா பான்னாவே ஒரு நாளைக்கு நூற்றியிட்டு முறை கொடநாடிருக்கும் திசை நோக்கி நெடுஞ்சாண்கிடையாக விழுந்து எழுந்துக் கொண்டிருக்கிறாராம். செந்தமிழனுக்கும் யாராவது இதையெல்லாம் சொல்லிக் கொடுக்க வேண்டுமில்லையா?

தினமும் 'தண்டால்' எடுத்துப் பழகுவது உத்தமம் செந்தமிழரே. டப்பென்று அம்மாவை எங்காவது பார்த்தால் விழுந்து எழ சிரமப்பட வேண்டியதில்லை அல்லவா? முன்னாள் அமைச்சர் பாண்டுரங்கனைப் பாருங்கள். எவ்வளவு பெரிய மீசை வைத்திருந்தாலும், இந்த மாதிரி விஷயங்களுக்கெல்லாம் சங்கோஜமா படுகிறார்?

திருப்பி அடிப்பேன், கையை முறுக்குவேன், காலை முறுக்குவேன் என்றெல்லாம் இனிமேல் சின்னப்பிள்ளைகள் மாதிரி சொல்லிக் கொண்டிருக்கப்படாது. தப்பு. தப்பு. அம்மாவுக்கு அறிக்கை எழுதிக் கொடுப்பவர்கள் இனி சீமானுக்கும் அவ்வப்பொழுது எழுதிக் கொடுப்பார்கள். அதை மேடையிலோ, பத்திரிகையாளர் முன்னிலையிலோ அப்படியே ஒப்பித்தால் போதுமானது. என்றாவது திடீரென காலைச்செய்திகளில் 'தீயசக்திக்கு சீமான் எச்சரிக்கை!' என்று தலைப்பிட்டு எழுதப்பட்டிருக்கும். அதை நாம் தான் சொன்னோமா என்றெல்லாம் ஆராய்ச்சி செய்யப்படாது. ஏற்கனவே வைகோ மற்றும் கம்யூனிஸ்ட்டு கோஷ்டிகள் இதைத்தான் பின்பற்றிக் கொண்டிருக்கிறார்கள். உங்களுக்காக நீங்கள் சிந்திக்கத் தேவையில்லை. அந்த வேலையை எல்லாம் அம்மாவுக்கு அறிக்கை எழுதித்தருபவர் பார்த்துக் கொள்வார்.

அதென்ன சார் அசிங்கமா கருப்புச்சட்டை? ஓ.பி.எஸ்.ஸோ, ஜெயக்குமாரோ, இப்படியா சட்டை போடுகிறார்கள்? வெள்ளை வெளேரென்று 'பளிச்'சுனு இருக்க வேண்டாமா? நீங்கள் சினிமாக்காரர் இரட்டை இலை சின்னம் பொறித்த பச்சை சட்டை போடலாம். சேகர்பாபு மாதிரி சபரிமலைக்கு மாலைகூட போட்டுக்கலாம்.

அசடு மாதிரி பெரியார், எம்.ஜி.ஆருன்னு முன்னைமாதிரி பேசிக்கிட்டு திரியாதிங்க. வைகோவை பாருங்க. அம்மாவை தவிர வேற யாரை பத்தியாவது பேசுறாரா?

முன்பெல்லாம் நீங்கள் வெறும் சினிமாக்காரர். யாராவது ஸ்டில் போட்டோகிராபரை வைத்து பிரபாகரன் மாதிரி, சேகுவேரா மாதிரி, அமெரிக்க சுதந்திரச்சிலை மாதிரியெல்லாம் போஸ் கொடுத்து ஊர் முழுக்க போஸ்டர் ஒட்டினீர்கள். இனிமே அது மாதிரி ஒட்டுனீங்கன்னா உங்க வாலை அம்மா ஒட்ட நறுக்கிடுவாங்க. பவ்யமா அம்மாவுக்கு பின்னாடி கையை கட்டிக்கிட்டு நிக்கிற மாதிரி கிராஃபிக்ஸில் ஒரு போட்டோவை உருவாக்கி வெச்சுக்கங்க. அம்மா பிறந்தநாளுக்கு போஸ்டர் அடிக்கவும், விளம்பரம் கொடுக்கவும் உதவும். அம்மா பிறந்தநாள் என்றதுமே நினைவு வருகிறது. நீங்களும் அலகு குத்தி தேர் இழுக்கணும் சாமியோவ். பேக்கு பத்திரம்.

இனிமேல் மேடையில் பேசும்போது புலி, கிலியென்று தெரியாமல் கூட பேசி அம்மாவை சீற்றப்படுத்தி விடாதீர்கள் சீமான். ஈழத்தாய் இதையெல்லாம் விரும்புவதில்லை. உங்களுக்கும், வைகோ மற்றும் நெடுமாறனுக்கும் மட்டும் தெரிந்த "பிரபாகரன் உயிரோடு இருக்கிறார்" ரகசியத்தை அம்மாவிடமோ, சின்னம்மாவிடமோ சொல்லிவிடாதீர்கள். மறுபடியும் இந்தியாவுக்கு கொண்டு வந்து தூக்கில் போடணும்னு ஈழத்தாய் தீர்மானம் போடவேண்டியிருக்கும். அம்மாவைப் பொறுத்தவரை "ஈழமா? அது எங்கே இருக்கு?". நீங்கபாட்டுக்கு ஈழம், கீழம்னு எதையாவது உளறி கிளறி தள்ளிடப் போறீங்க. அப்புறம் ஆத்தா 'ஆடிட்டர் ட்ரீட்மெண்ட்' எடுத்துடுவாங்க.

கடைசியா ஒண்ணு. தினமும் காலையில் எழுந்ததுமே 1008 வாட்டி 'அம்மாவே சரணம்' எழுதிடுங்க. ஆட்டம் பழகிடும். ஆரம்பத்தில் கம்யூனிஸ்டுகளுக்கும் கஷ்டமாதான் இருந்தது. இப்போ அடிச்சு ஆடுறதில்லையா?

புலியெல்லாம் பூனை ஆகிற காலமிது. நீங்கள் வெறும் எலிதானே? தேய்ந்து கட்டெறும்பாகிப் போனதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. அம்மா காலில் விழும் உங்கள் தன்மான அரசியலுக்கு வாழ்த்துகள்.

10 ஜனவரி, 2011

கொண்டாட்டமான சமகாலம்!

நீங்கள் எப்போதாவது யோசித்ததுண்டா?

ஒரு பொதுநிகழ்ச்சிக்கு வருகிறீர்கள். உங்களிடம் யாரும் கையெழுத்து வாங்குவதில்லை. உங்களைப் பார்க்க முட்டி மோதுவதில்லை. உங்கள் படைப்புகளை பாராட்டி ரத்தக் கையெழுத்திட்டு கடிதம் எழுதுவதில்லை.

ஏன்?

ஏனெனில் நீங்கள் பேயோன் இல்லை. பேயோனைப் போல பிரபலமில்லை.

பேயோனுக்கு மட்டும் ஏனித்தனை பிரபலம்?

இந்தப் பதிவை நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் சமகால வேளையில், என்னுடைய கள்ளக்காதலியை நான் முத்தமிட்டுக் கொண்டிருக்கலாம். சிகரெட் சாம்பலை தட்டிக் கொண்டிருக்கலாம். மதுக்கடையில் மதிமயங்கி கிடக்கலாம். இன்னும் இப்படியே சில இத்யாதி இத்யாதி 'லாம்'கள். பேயோனோ நோபல் பரிசுக்கான இலக்கியத்தைப் படைத்துக் கொண்டிருப்பார். குழந்தைகளுக்காக சிந்தித்துக் கொண்டிருப்பார். வண்ணத்துப்பூச்சிகளுக்காக வருத்தப்பட்டுக் கொண்டிருப்பார். அவர் படைப்பது அனைத்துமே இலக்கியம்தான். குலதெய்வம் கோயிலில் கூட இலக்கியங்களைதான் படையலிடுகிறார்.

அசமகால இலக்கியவெளியில் திருவள்ளுவர் புகழ்பெற்ற துண்டிலக்கியவாதி. சமகாலத்தில் துண்டிலக்கியம் படைப்பதில் யாரும் விருப்பம் காட்டுவதில்லை. இரண்டாயிரம் ஆண்டுகளாக திருவள்ளுவருக்கு இலக்கிய வாரிசு யாரும் அமையவில்லை. சூனியமாக இருக்கும் இந்த வெளியில் தன்னுடைய இடத்தை துண்டு போட்டு பிடித்திருப்பவர் ஒசாகாவில் வசிக்கும் பேயோன். அவரது முதல் சமகால படைப்பான 'பேயோன் 1000' தமிழின் முக்கியமான நூல்களில் ஒன்று என பேயோனே எழுதியிருக்கிறார். இரண்டாயிரம் ஆண்டுகால தமிழிலக்கிய வரலாற்றில் ட்விட்டர் எனப்படும் சமூகவலைப்பதிவு இணையத்தளத்தில் பதியப்பட்ட துண்டிலக்கியங்கள் அச்சுவடிவம் பெறுவது முதன்முறையாக சாத்தியமானது 'பேயோன் 1000' மூலமாக மட்டுமே.

சிலபல நாவல்களை எழுதியிருப்பதாக சொல்கிறார். இதுவரை யாரும் வாசித்ததில்லை. பின்நவீனத்துவ சூழல் கோட்பாட்டின்படி ஆசிரியன் மட்டும் மரிப்பதில்லை. படைப்பும், படைப்பை வாசித்தோ அல்லது கேள்விப்பட்டோ வாசகர்களும் மரித்துவிடுகிறார்கள். பேயோனின் நாவல்களை கண்டவர் விண்டிலர். விண்டவர் கண்டிலர். அவரது நாவல்களை இன்னமும் அவரே வாசிக்கவில்லை என்பதுதான் பேருண்மை. திரைப்பட வசனகர்த்தாவாகவும், பாடலாசிரியராகவும் அவர் பணியாற்றுவதாக அவரது படைப்புகள் வாயிலாக அறிந்துகொள்ள முடிகிறது. ரஜினிசாரை எழுத்தில் குறிப்பிடும்போது ரஜினிசார் என்று குறிப்பிடுகிறார். எனவே நிச்சயமாக சினிமாக்காரராகதான் இவர் இருக்க முடியும். சமகால இலக்கியத்தையும், சமகால திரைப்படத்தையும் தனது இருதோள்களின் வழியாக ஹெர்குலிஸ் மாதிரி தூக்கி சுமப்பதால் சமகாலத்தில் தமிழின் தவிர்க்க முடியாத கலைஞர் ஆகிறார் பேயோன்.

ஆண்டு தொடக்கத்தில் ஒருமுறை பேயோன் சொன்னார் "இந்த ஆண்டிலும் தேதிகள் தவிர எதுவும் மாறப் போவதில்லை". ஆண்டு முடிவில் அவரது தீர்க்கதரிசனத்தை உணர்ந்தேன்.

பேயோனின் படைப்புகள் உயர்தனித்துவம் கொண்டவை. தனித்துவம் கொண்ட படைப்புகள் என்பதால் தனியாக அமர்ந்து வாசிப்பது உசிதம். கூட்டமான இடத்தில் அமர்ந்து வாசித்தால் கூட்டத்தில் குழப்பம் வரலாம். வன்முறை வெடிக்கலாம். சமகால இலக்கிய தீவிர முன்னெடுப்புகளை முனையும் தீவிரவாதியின் படைப்புகளை வாசிப்பதால் இதுபோன்ற இயற்கை-செயற்கை சீற்றங்கள் நிகழலாம். சில பின்நவீனத்துவ எழுத்தாளர்களை வாசிக்க ஆணுறை அவசியம். பேயோனை வாசிக்க தலைக்கவசம் மட்டுமே போதுமானது.

பேயோனின் பத்திகள் சைக்கிள் அகர்பத்திகளை விட சிறந்தது. சமகால இதழியலின் சர்வநாடியையும் உணர்ந்தவர் பேயோன். அதனால்தான் சமகால பத்தி எழுத்தாளர்கள் பலரும் பேயோனைப் போன்ற பிரபலத்தை அனுபவிக்க முடிவதில்லை. குறைந்த உழைப்பில் நிரைந்த வருமானம் கிடைப்பதால் பேயோன் பத்தியும் எழுதுகிறார். க்ரியாவின் தமிழ் அகராதி என்ற நூலுக்கு அவர் எழுதிய மதிப்புரை வாசகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றது. 495 ரூபாய் விலையுள்ள 1328 பக்கங்கள் கொண்ட அந்நூலில் கதை இல்லை என்பதை கண்டறிந்து சொன்னவர் பேயோன் ஒருவர் மட்டுமே.

பேயோனைக் குறித்து நான் இவ்வளவு எழுதியும், "யார் பேயோன்?" என்கிற அபத்தமான கேள்வி உங்களுக்குள் எழலாம். மாசடைந்துப்போன கார்ப்பரேட் இலக்கியச் சூழலில், போலிகள் மிகுந்து புகழும், பணமும் குவிக்கும் காலக்கட்டத்தில் பேயோன் விளைவு தவிர்க்க இயலாதது. உங்களுக்குள்ளும், எனக்குள்ளும் கூட ஒரு பேயோன் உண்டு. பேயோன் என்பது தனிநபரல்ல. அது ஒரு இலக்கிய இயக்கம்.

அமரத்துவம் பெற்ற தனித்துவ பேயோனின் சமகால படைப்புகள் :

1. பேயோன் 1000 (ரூ. 60)
2. திசை காட்டிப் பறவை (ரூ.100)

இருநூல்களும் சமகால பதிப்பகமான 'ஆழி'யில் கிடைக்கும். சமகால முகவரி : 12, முதல் பிரதான சாலை, யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை-600 024. தொலைபேசி : 044-23722939. வலை : www.aazhipublishers.com

பேயோனுக்கு அறிமுகம் தேவையில்லை. அறிமுகம் வேண்டுவோர் சமகால சமூக வலைப்பின்னல் இணையத்தளமான ட்விட்டரில் அவரை தொடரலாம் : http://twitter.com/writerpayon. பேயோனின் சமகால மின்னஞ்சல் முகவரி : writerpayon@gmail.com  சமகால இணையத்தளம் : www.writerpayon.com

சமகால சென்னை புத்தகக்காட்சியிலும் பேயோனின் சமகால படைப்புகளை ஸ்டால் எண் 340, 341-ல் வாங்கலாம்.