10 ஜனவரி, 2011

கொண்டாட்டமான சமகாலம்!

நீங்கள் எப்போதாவது யோசித்ததுண்டா?

ஒரு பொதுநிகழ்ச்சிக்கு வருகிறீர்கள். உங்களிடம் யாரும் கையெழுத்து வாங்குவதில்லை. உங்களைப் பார்க்க முட்டி மோதுவதில்லை. உங்கள் படைப்புகளை பாராட்டி ரத்தக் கையெழுத்திட்டு கடிதம் எழுதுவதில்லை.

ஏன்?

ஏனெனில் நீங்கள் பேயோன் இல்லை. பேயோனைப் போல பிரபலமில்லை.

பேயோனுக்கு மட்டும் ஏனித்தனை பிரபலம்?

இந்தப் பதிவை நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் சமகால வேளையில், என்னுடைய கள்ளக்காதலியை நான் முத்தமிட்டுக் கொண்டிருக்கலாம். சிகரெட் சாம்பலை தட்டிக் கொண்டிருக்கலாம். மதுக்கடையில் மதிமயங்கி கிடக்கலாம். இன்னும் இப்படியே சில இத்யாதி இத்யாதி 'லாம்'கள். பேயோனோ நோபல் பரிசுக்கான இலக்கியத்தைப் படைத்துக் கொண்டிருப்பார். குழந்தைகளுக்காக சிந்தித்துக் கொண்டிருப்பார். வண்ணத்துப்பூச்சிகளுக்காக வருத்தப்பட்டுக் கொண்டிருப்பார். அவர் படைப்பது அனைத்துமே இலக்கியம்தான். குலதெய்வம் கோயிலில் கூட இலக்கியங்களைதான் படையலிடுகிறார்.

அசமகால இலக்கியவெளியில் திருவள்ளுவர் புகழ்பெற்ற துண்டிலக்கியவாதி. சமகாலத்தில் துண்டிலக்கியம் படைப்பதில் யாரும் விருப்பம் காட்டுவதில்லை. இரண்டாயிரம் ஆண்டுகளாக திருவள்ளுவருக்கு இலக்கிய வாரிசு யாரும் அமையவில்லை. சூனியமாக இருக்கும் இந்த வெளியில் தன்னுடைய இடத்தை துண்டு போட்டு பிடித்திருப்பவர் ஒசாகாவில் வசிக்கும் பேயோன். அவரது முதல் சமகால படைப்பான 'பேயோன் 1000' தமிழின் முக்கியமான நூல்களில் ஒன்று என பேயோனே எழுதியிருக்கிறார். இரண்டாயிரம் ஆண்டுகால தமிழிலக்கிய வரலாற்றில் ட்விட்டர் எனப்படும் சமூகவலைப்பதிவு இணையத்தளத்தில் பதியப்பட்ட துண்டிலக்கியங்கள் அச்சுவடிவம் பெறுவது முதன்முறையாக சாத்தியமானது 'பேயோன் 1000' மூலமாக மட்டுமே.

சிலபல நாவல்களை எழுதியிருப்பதாக சொல்கிறார். இதுவரை யாரும் வாசித்ததில்லை. பின்நவீனத்துவ சூழல் கோட்பாட்டின்படி ஆசிரியன் மட்டும் மரிப்பதில்லை. படைப்பும், படைப்பை வாசித்தோ அல்லது கேள்விப்பட்டோ வாசகர்களும் மரித்துவிடுகிறார்கள். பேயோனின் நாவல்களை கண்டவர் விண்டிலர். விண்டவர் கண்டிலர். அவரது நாவல்களை இன்னமும் அவரே வாசிக்கவில்லை என்பதுதான் பேருண்மை. திரைப்பட வசனகர்த்தாவாகவும், பாடலாசிரியராகவும் அவர் பணியாற்றுவதாக அவரது படைப்புகள் வாயிலாக அறிந்துகொள்ள முடிகிறது. ரஜினிசாரை எழுத்தில் குறிப்பிடும்போது ரஜினிசார் என்று குறிப்பிடுகிறார். எனவே நிச்சயமாக சினிமாக்காரராகதான் இவர் இருக்க முடியும். சமகால இலக்கியத்தையும், சமகால திரைப்படத்தையும் தனது இருதோள்களின் வழியாக ஹெர்குலிஸ் மாதிரி தூக்கி சுமப்பதால் சமகாலத்தில் தமிழின் தவிர்க்க முடியாத கலைஞர் ஆகிறார் பேயோன்.

ஆண்டு தொடக்கத்தில் ஒருமுறை பேயோன் சொன்னார் "இந்த ஆண்டிலும் தேதிகள் தவிர எதுவும் மாறப் போவதில்லை". ஆண்டு முடிவில் அவரது தீர்க்கதரிசனத்தை உணர்ந்தேன்.

பேயோனின் படைப்புகள் உயர்தனித்துவம் கொண்டவை. தனித்துவம் கொண்ட படைப்புகள் என்பதால் தனியாக அமர்ந்து வாசிப்பது உசிதம். கூட்டமான இடத்தில் அமர்ந்து வாசித்தால் கூட்டத்தில் குழப்பம் வரலாம். வன்முறை வெடிக்கலாம். சமகால இலக்கிய தீவிர முன்னெடுப்புகளை முனையும் தீவிரவாதியின் படைப்புகளை வாசிப்பதால் இதுபோன்ற இயற்கை-செயற்கை சீற்றங்கள் நிகழலாம். சில பின்நவீனத்துவ எழுத்தாளர்களை வாசிக்க ஆணுறை அவசியம். பேயோனை வாசிக்க தலைக்கவசம் மட்டுமே போதுமானது.

பேயோனின் பத்திகள் சைக்கிள் அகர்பத்திகளை விட சிறந்தது. சமகால இதழியலின் சர்வநாடியையும் உணர்ந்தவர் பேயோன். அதனால்தான் சமகால பத்தி எழுத்தாளர்கள் பலரும் பேயோனைப் போன்ற பிரபலத்தை அனுபவிக்க முடிவதில்லை. குறைந்த உழைப்பில் நிரைந்த வருமானம் கிடைப்பதால் பேயோன் பத்தியும் எழுதுகிறார். க்ரியாவின் தமிழ் அகராதி என்ற நூலுக்கு அவர் எழுதிய மதிப்புரை வாசகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றது. 495 ரூபாய் விலையுள்ள 1328 பக்கங்கள் கொண்ட அந்நூலில் கதை இல்லை என்பதை கண்டறிந்து சொன்னவர் பேயோன் ஒருவர் மட்டுமே.

பேயோனைக் குறித்து நான் இவ்வளவு எழுதியும், "யார் பேயோன்?" என்கிற அபத்தமான கேள்வி உங்களுக்குள் எழலாம். மாசடைந்துப்போன கார்ப்பரேட் இலக்கியச் சூழலில், போலிகள் மிகுந்து புகழும், பணமும் குவிக்கும் காலக்கட்டத்தில் பேயோன் விளைவு தவிர்க்க இயலாதது. உங்களுக்குள்ளும், எனக்குள்ளும் கூட ஒரு பேயோன் உண்டு. பேயோன் என்பது தனிநபரல்ல. அது ஒரு இலக்கிய இயக்கம்.

அமரத்துவம் பெற்ற தனித்துவ பேயோனின் சமகால படைப்புகள் :

1. பேயோன் 1000 (ரூ. 60)
2. திசை காட்டிப் பறவை (ரூ.100)

இருநூல்களும் சமகால பதிப்பகமான 'ஆழி'யில் கிடைக்கும். சமகால முகவரி : 12, முதல் பிரதான சாலை, யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை-600 024. தொலைபேசி : 044-23722939. வலை : www.aazhipublishers.com

பேயோனுக்கு அறிமுகம் தேவையில்லை. அறிமுகம் வேண்டுவோர் சமகால சமூக வலைப்பின்னல் இணையத்தளமான ட்விட்டரில் அவரை தொடரலாம் : http://twitter.com/writerpayon. பேயோனின் சமகால மின்னஞ்சல் முகவரி : writerpayon@gmail.com  சமகால இணையத்தளம் : www.writerpayon.com

சமகால சென்னை புத்தகக்காட்சியிலும் பேயோனின் சமகால படைப்புகளை ஸ்டால் எண் 340, 341-ல் வாங்கலாம்.

13 கருத்துகள்:

  1. பெயரில்லா6:11 PM, ஜனவரி 10, 2011

    தேறுமா தேறாதா? நிக்கரை அவிழ்த்துவிடும் எழுத்து என்றாலும் முடிவு இல்லையே

    பதிலளிநீக்கு
  2. உங்கள் விமர்சனை சமகால அமர்க்களம்

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா7:16 PM, ஜனவரி 10, 2011

    "சில பின்நவீனத்துவ எழுத்தாளர்களை வாசிக்க ஆணுறை அவசியம்."
    யார சொல்றீங்க?

    பதிலளிநீக்கு
  4. மிக்க நன்றி யு கி

    புத்தக கண்காட்சியில் வாங்க வேண்டிய 10 புத்தகங்கள் சொல்லுங்கள்.

    அல்லது உங்களுக்கு பிடித்த அல்லது வாங்கிய 10 புத்தகங்கள் பற்றி அவசியம் எழதவும்.

    மயிலாடுதுறை சிவா...

    பதிலளிநீக்கு
  5. சமகாலத்தில் அவரைப்பற்றிய இதுபோன்று விமர்சனத்தை பேயோனே எதிர்பார்த்திருக்க மாட்டார்..!! :-))

    பதிலளிநீக்கு
  6. நல்ல உள்குத்து பதிவு. ஏன் இந்த கொலை வெறி என்று தான் புரியவில்லை !!

    பதிலளிநீக்கு
  7. பேயோனைப் பற்றிய விவரத்திற்கு நன்றி

    ஆமா பேயோன் யார்? பா.ரா.வா? டவுட்டு!

    பதிலளிநீக்கு
  8. உங்களின் அறிமுகத்திற்கு நன்றி. பேயோனின் வலைதளம் சென்றேன். அவரின் கவிதைகள் ஒவ்வொன்றும் அற்புதம்.

    பதிலளிநீக்கு
  9. //துண்டிலக்கியம்// வார்த்தைப் பிரயோகத்தை ரசித்தேன்!

    பதிலளிநீக்கு
  10. //தொலைபேசி : 044-23722939. வலை : www.aazhipublishers.com//

    சமகால தொலைபேசி : 044-23722939. சமகாலவலை : www.aazhipublishers.com !

    அன்புடன்
    வெங்கட்ரமணன்

    பதிலளிநீக்கு