19 ஜனவரி, 2011

சென்னைக்கு அருகே நெல்லை!

ஊரைச் சுற்றியும் பச்சை பசேல் மலைகள். நுழையும்போதே சில்லென்று முகத்தில் அறைகிறது குளிர் காற்று. தேநீர்க்கடை சட்டசபைகளில் 'எலேய், காந்தியை கூட சுட்டுட்டாங்களாமே?' என்று புராதன அரசியலை நெல்லைத் தமிழில் பேசும் வெள்ளந்தி மனிதர்கள். பள்ளி இடைவேளையில் 'பாண்டி' விளையாடும் மாணவிகள். ஆடு, மாடு, கோழி, டிராக்டர் என்று தமிழ் கலாச்சார கிராம அடையாளங்களை அச்சு அசலாக சுமந்து நிற்கும் இந்த ஊர், சென்னைக்கு வெகு அருகில் அமைந்திருக்கிறது என்று சொன்னால் கொஞ்சம் ஆச்சரியமாகதான் இருக்கும். அதுவும் சென்னை விமான நிலையத்திலிருந்து கூப்பிடுதூரத்தில் இருக்கிறது திரிசூலம்.

விமான நிலையத்துக்கு நேரெதிரே, ரயில்நிலையத்தை கடந்து உள்ளே நுழைந்தால் நெல்லை மாவட்ட கிராமம் ஒன்றுக்குள் நுழைந்த அனுபவம் உங்களுக்கு சர்வ நிச்சயம். இருசக்கர வாகனங்கள், செல்போன் போன்ற அத்தியாவசிய நவீனங்களைத் தவிர்த்து பார்த்தால், நகருக்கு அருகிலிருக்கும் சுவடு இங்கே சற்றும் தெரியாது. அவ்வப்போது ரயில், விமானச் சத்தங்களைத் தவிர்த்து வேறெந்த சந்தடியும் இங்கில்லை.

சென்னை கடற்கரை – தாம்பரம் மின்ரயில் மார்க்கத்தில் பயணித்தவர்கள் ஒரு விஷயத்தை உணர்ந்திருக்கலாம். எல்லா ரயில் நிலையங்களுக்கும் அருகே கான்க்ரீட் காடுகளாய் 'அபார்ட்மெண்ட்கள்' ஏகத்துக்கும் முளைத்திருக்கும். திரிசூலம் ரயில் நிலையம் மட்டும் இதற்கு விதிவிலக்கு. இன்னமும் அபார்ட்மெண்ட் கலாச்சாரம் எட்டிப் பார்க்காத இயற்கை எழில் மிகுந்த ஊர் இது.

"முதன்முதலாக இங்கே நுழைபவர்களுக்கு வேண்டுமானால் ஆச்சரியமாக இருக்கலாம். நான் இந்த ஊருக்கு வந்து பதினைந்து வருடங்களுக்கு மேலாகிறது. இங்கேயே வசிப்பதால் முன்பை விட நிறைய மாற்றங்களை காண்கிறேன். துறைமுகப் பணியாளர் குடியிருப்பு வந்திருக்கிறது. அரசு ஊழியர்கள் நிறையப்பேர் புதியதாக குடியேறி இருக்கிறார்கள். பெண்கள் முன்பெல்லாம் வீட்டுக்குள் அடைந்திருப்பார்கள். அல்லது கல் உடைக்கும் பணிக்கு போவார்கள். இப்போது அவர்கள் ஊரைத்தாண்டி ஏற்றுமதி ஆயத்த ஆடை தொழிற்சாலைகளுக்கு வேலை செய்யப் போகிறார்கள். எங்கள் ஊரும் மாறிவருகிறது – அதேநேரம் வளர்ந்து வருகிறது என்பதுதான் உண்மை" என்கிறார் திலகவதி ராமச்சந்திரன். இவர்தான் திரிசூலம் ஊராட்சிமன்றத் தலைவி. குடிநீர், கான்க்ரீட் சாலைகள், மின்விளக்குகள் என்று அடிப்படைத் தேவைகளில் 100 சதவிகிதம், இக்கிராமம் தன்னிறைவு பெற்றிருப்பதாகவும் அவர் தெரிவிக்கிறார்.

குவாரிகள் நிறைய இயங்குவதால் கிராமத்தவர்களில் நிறைய பேர் கல் உடைக்கும் வேலைக்குச் செல்கிறார்கள். இந்த வேலையை செய்யவே மூன்று தலைமுறைக்கு முன்பாக நெல்லை மாவட்டத்தில் இருந்து வந்து குடியேறியவர்கள் இங்கு அதிகம். 75 சதவிகிதத்துக்கும் மேற்பட்டவர்கள் இவர்கள்தான். 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 5997 பேர் திரிசூலத்தில் வசிக்கிறார்கள். இப்போது மக்கள்தொகை நான்கு, ஐந்து மடங்கு அதிகரித்திருக்கலாம் என்று ஊராட்சி உதவியாளர் சுப்பையா சொல்கிறார்.

ஊரின் மத்தியில் அமைந்திருக்கும் கோயில்தான் இந்த ஊரின் பெயருக்கே காரணம். திரிசூலநாதர் கோயில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட புராதனமான கோயில். ஊர்ப்பெரியவர்கள் சிலர், இக்கோயில் அதைவிடப் பழமையானது. 1500 வருடப் பாரம்பரியம் கொண்டது. குலோத்துங்கச் சோழனால் புனரமைப்புதான் செய்யப்பட்டது என்று சொல்கிறார்கள். 'வாழும் கலை' ரவிசங்கர் சென்னை வரும்போதெல்லாம், விமான நிலையத்திலிருந்து நேரே இக்கோயிலுக்கு வந்துவிடுவாராம்.

ஊரைத்தவிர்த்துப் பார்த்தால் திரிசூலம் ஒரு டூரிஸ்ட் பாயிண்ட். சென்னைவாசிகள் பணிச்சுமையில் இருந்து வார இறுதிகளில் 'ரிலாக்ஸ்' ஆக ஏதுவான இடம். பெரும்பாலான தமிழ்ப்பட க்ளைமேக்ஸ்களில் திரிசூலம் மலைகளை நீங்கள் கண்டிருக்கலாம். மலையிலிருந்து காரை உருட்டிவிட வேண்டுமா? மலைமுகட்டில் தொங்கும் நாயகியை, நாயகன் வில்லன்களோடு சண்டையிட்டு காப்பாற்ற வேண்டுமா? வேறு வழியே இல்லை. சினிமாக்காரர்கள் இங்குதான் வந்தாக வேண்டும்.

சினிமாக்காரர்கள் மட்டுமல்ல. பேச்சாளர்களும் திரிசூலம் மலைக்கு படையெடுக்கிறார்கள். 'மேடை பயம்' (Stage fear) போக்க இங்குதான் பயிற்சி எடுக்கிறார்கள். மலை உச்சிக்குச் சென்று ஏதேனும் பாறைமுகடுகளில் நின்று கொள்கிறார்கள். எதிரே 180 டிகிரி கோணத்தில் தெரியும் சென்னை மாநகரை, லட்சக்கணக்கான மக்கள் திரண்டிருப்பதாய் நினைத்து, "கலைஞர் அவர்களே", "புரட்சித்தலைவி அவர்களே" என்று கத்திப்பேசி பேச்சுப்பயிற்சி பயில்கிறார்கள். டிரைனிங்கில் இருக்கும் மதப்பிரசங்கர்களும் இதே டெக்னிக்கை பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

சென்னையில் வசிக்கும் மலையேற்ற வீரர்களுக்கும் திரிசூலம் முக்கியமான பயிற்சி பாயிண்ட். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் இங்கே மலையேற்றம் செய்ய வசதிகளை செய்து கொடுக்கிறார்கள்.

மலை மீதிருந்து சென்னை விமான நிலையத்தை முழுமையாக பறவைப் பார்வையில் பார்த்து மகிழ முடியும். விமானங்கள் மேலெழும்புவதையும், கீழிறங்குவதையும் உயரமான ஓரிடத்தில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருப்பதே அலாதியான அனுபவம். ரயில், சாலை, விமானம் என்று, சென்னையின் மூன்றுவித போக்குவரத்துப் பரிமாணங்களை இங்கிருந்தே காணலாம். நன்கு வெயில் அடிக்கும்போது கிழக்கு நோக்கி உற்றுப் பார்த்தால் கடல்கூட தெரியும்.

மலையுச்சியில் ஒரு மிகப்பழமையான மசூதி இடிபாடடைந்த நிலையில் இருக்கிறது. இருப்பினும் இங்கே மிலாதுநபி பெருவிழா விமரிசையாக நடைபெறுவதாக ஊர்க்காரர்கள் சொல்கிறார்கள். ஒரு முருகர் கோயிலும் உண்டு. சுற்றுலாப் பயணிகள் சென்று வர வசதியாக மலையுச்சிக்கு கான்க்ரீட் பாதை அமைக்கப்பட்டிருக்கிறது. கார்களும், வேன்களும் கூட இப்பாதையில் செல்ல முடியும். மின்விளக்கு வசதி இல்லாததால் மாலை 5.00 மணிக்குப் பிறகு இம்மலை மீது இருப்பது பாதுகாப்பானதல்ல.

இது மாதிரியான 'மசாலா' அம்சங்களை தவிர்த்துப் பார்த்தால், பாதுகாப்பு அடிப்படையிலும் திரிசூலம் மலையின் பங்கு முக்கியமானது. ஸ்கை மார்ஷல் படையினர் சென்னை விமான நிலையத்தை இங்கிருந்து தொலைநோக்கி மூலமாக கண்காணிக்கிறார்கள். ஓடுபாதையில் ஏதேனும் விஷமம் செய்யப்பட்டிருந்தால் கூட இங்கிருந்தே கண்டுபிடித்து விட முடியுமாம்.

இன்னொரு வகையிலும் திரிசூலம் சென்னையின் தவிர்க்க முடியாத ஒரு இடத்தைப் பெறுகிறது. சென்னையின் மிக உயரமான இடம் திரிசூலம் மலை. தாழ்வான இடம் இங்கிருக்கும் குவாரி பகுதிகள். அண்ணா பல்கலைக் கழகத்தின் தொலையுணர்வு மையம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்ட செய்தி இது.

இனிமேல் சென்னையில் வசிக்கும் நெல்லைக்காரர்கள், ஊர் ஏக்கம் வந்தால் ஒரு நடை திரிசூலத்துக்கு போய்விட்டு வந்துவிடலாம். நெல்லையையே கண்ணால் பார்க்காதவர்களும் வந்துப் பார்க்கலாம். தவறில்லை. பாஸ்போர்ட், விசாவெல்லாம் கேட்கமாட்டார்கள்.

(நன்றி : புதிய தலைமுறை)

8 கருத்துகள்:

  1. சென்னைக்கருகே இந்த இடங்கள்லாம் எப்படிய்யா கண்டுபிடிக்கிற.வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. //இன்னமும் அபார்ட்மெண்ட் கலாச்சாரம் எட்டிப் பார்க்காத இயற்கை எழில் மிகுந்த ஊர் இது.//
    இவ்வளவு விவரங்களைத் தேடி எழுதியிருக்கீங்க, பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  3. எனக்கு இது புதிய தகவல். விவரங்களுடன் தெளிவான கட்டுரை. நன்றி லக்கி.

    பதிலளிநீக்கு
  4. அட நெல்லைக்காரனான எனக்கு இது இன்று ஒரு தகவல்! ஒரு தடவை போய் பார்த்துட்டு வரேன்!

    அன்புடன்,
    சுவாசிகா
    http://ksaw.me

    பதிலளிநீக்கு
  5. Wow...lucky..its very nice info..may be the very firstuseful info in ur blog...:)

    பதிலளிநீக்கு
  6. நான் நிறைய தடவை திரிசூலம் . கோயிலுக்கு போயிருக்கேன். நீங்க சொன்ன மாதிரி அது ஒன்னும் வயலும் வயல் சார்ந்த இடம் மாதிரி தெரியலை. ஒரு கிராமம் மாதிரி இருந்தது

    பதிலளிநீக்கு
  7. அருகாமையில் இருந்தும் ஒரு தபா கூட மேலப் போய் பாத்ததில்லை. இம்முறை லிஸ்ட்டில் ஏத்தியாச்சு.

    பதிலளிநீக்கு
  8. பசுமையான நெல்லை போன்ற அழகிய ஊர் என்று சொல்லி நெல்லையை பெருமை படுத்தியதுக்கு மகிழ்கிறேன்.

    பதிலளிநீக்கு