சிறுவயது கூட்டங்களின் நினைவு மங்கலாக நினைவுக்கு வருகிறது. தொண்டர்கள் சாரை சாரையாக சைக்கிளில் கருப்புச் சிவப்பு கொடியேந்தி வருவார்கள். திமுகவில் அப்போதெல்லாம் ஏராளமான பேச்சாளர்கள். குறைந்தது இருபது பேராவது பேசி முடித்தபின் தான் 'முக்கியத் தலைகள்' பேசும். கூட்டம் முடிய ஒன்று, ஒன்றரை ஆகிவிடும். நன்றியுரை வரை கூட்டம் கலையாமல், அப்படியே கட்டுக்கோப்பாக இருக்கும். திமுக கூட்டங்களில் 'பெண்கள்' அவ்வளவாக கலந்துகொள்ள மாட்டார்கள். 90 சதவிகிதம் ஆண்கள்தான். மாறாக அதிமுக பொதுக்கூட்டங்களில் கொடிவண்ண சேலையணிந்த மகளிர் கூட்டம் கும்மாளமாக கும்மும். மகளிரை கவரும் கலைநிகழ்ச்சிகள் பலவற்றையும் அதிமுகவினர் ஏற்பாடு செய்திருப்பார்கள் என்பது இதற்கு கூடுதல் காரணம். திமுகவில் வெறும் பேச்சு மட்டும்தான்.
கலைஞர் கலந்துகொள்ளும் கூட்டங்களுக்கு கட்சிக்காரர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் ஏராளமாக வருவார்கள். "என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்பே" என்ற கரகர குரலை கேட்டு கண்ணீர் விட்ட தொண்டர்களை கண்டிருக்கிறேன். அப்பாவும் கூட சினிமா டாக்டர் மாதிரி, கண்ணாடியை கழற்றி லேசாக கண்ணைத் துடைத்துக் கொள்வார். கலைஞர் பேச ஆரம்பித்ததுமே குறைந்தது மூன்று நிமிடங்களுக்கு கரகோஷம் அதிரும். வானவேடிக்கை, பட்டாசு சத்தத்தில் ஏரியாவே அலறும். சத்தத்தில் அவரால் பேச இயலாது. ஆனாலும் கடுமை காட்டாமல் பொறுமையாக சந்தடி அடங்க காத்திருப்பார். இந்த ஆரவாரமான நிமிடங்களில் இனமானப் பேராசிரியர் அவர்களேயில் தொடங்கி சைதைப் பகுதி பொருளாளர் அவர்களே வரைக்கும் 'அவர்களே' சொல்வதற்கான நேரமாக எடுத்துக் கொள்வார்.
பத்திரிகை புகைப்படக் கலைஞர்கள் அவரை குளோஸ்-அப் எடுக்க வாகாக, அவ்வப்போது அப்படியே 'ஸ்டில்' ஆகிவிடுவதும் அவரது வாடிக்கை. கூட்டத்தில் என்ன முக்கியமான பிரச்சினை என்பதை பேச்சின் ஆரம்பத்திலேயே வெளிப்படுத்திவிடுவார். அப்படி பேசினால்தான் அடுத்த நாள் காலை நாளிதழ்களில் செய்தி இடம்பெறும். அனாயசமாக ரெண்டு, ரெண்டரை மணி நேரம் பேசுவார். இடையில் சோடா, கீடா குடித்ததாக எனக்கு நினைவேயில்லை. பேச்சை முடிக்க 15 நிமிடம் இருக்கும்போது ஒரு 'க்ளூ' இருக்கும். அந்த 'க்ளூ' வாடிக்கையாக எதிரே இருக்கும் தொண்டர்களுக்குப் புரியும். கூட்டத்தில் இருக்கும் மகளிர், கூட்டம் முடிந்ததும் ஏற்படும் நெரிசலில் அவதிப்படாமல் இல்லம் திரும்ப உடனே கிளம்பிவிடுவார்கள்.
மறக்க முடியாத கூட்டமென்றால் சென்னையில் தேசியமுன்னணி தொடக்கவிழாதான். கடற்கரையெங்கும் மனித உடல்களால் ஏற்பட்ட கச கச நெரிசல். என்னை தோள் மீது தூக்கி வைத்து அழைத்துப்போனார் அப்பா. அன்று கண்ட எழுச்சியையும், எண்ணிக்கையையும் திரும்ப வாழ்நாளில் காணவே முடியாது என்று இருபது ஆண்டுகளாக நினைத்திருந்தேன். கடந்தாண்டு கோவையில் நடந்த செம்மொழி மாநாடு அக்குறையைப் போக்கியது.
மதுரை, தஞ்சை, கோவை, சேலம் என்று தமிழகத்தின் பெருநகரங்களில் வசிக்கும் திமுக நண்பர்கள் முன்பெல்லாம் சொல்வார்கள். "சென்னைக்கு வரும்போது தாய்வீட்டுக்குள்ளே நுழையுற எண்ணம் வருதப்பா!". அது உண்மைதான். 1959ல் மாநகராட்சியை திமுக கைப்பற்றியதிலிருந்தே சென்னை திமுகவின் கோட்டைதான். செயிண்ட் ஜார்ஜ் கோட்டை வேண்டுமானால் யாரிடமும் இருக்கலாம். எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்திலேயே சென்னை மட்டும் திமுகவிடம்தான் இருக்கும். இந்தப் பெருமையெல்லாம் 96 வரைக்கும்தான்.
90களின் தொடக்கத்தில் திமுக முகாமில் ஏகப்பட்ட குழப்பம். நானும் கொஞ்சம் வளர்ந்துவிட்டேன் என்பதால், அப்பாவின் உதவியில்லாமல் தனியாக சிந்திக்க ஆரம்பித்துவிட்டேன். திமுக கூட்டம் என்றில்லாமல், எந்த கூட்டமாக இருந்தாலும் ஆவலுடன் முன்வரிசையில் போய் உட்கார்ந்துக் கொள்வேன். திராவிடர் கழகத்தில் இணைந்து செயல்பட்டதால், அம்மா அனுதாபியாகவும் இருந்தேன் (அப்போது தி.க., அதிமுகவை ஆதரித்தது). ஆயினும் கொஞ்சநாளிலேயே அம்மாவின் பாசிஸ நடவடிக்கைகள் பிடிக்காமல் போய்விட்டது. திமுகவில் இருந்து வைகோ நீக்கப்பட்டபோது கொதித்துப் போனேன் (உள்ளகரம்-புழுதிவாக்கம் நகர கழகச் செயலாளராக இருந்த குபேரா.முனுசாமி அவர்களின் குடும்பத்தினர் ஒட்டுமொத்தமாக மதிமுகவுக்கு மாறியதும் ஒரு ஸ்பெஷல் காரணம்). சென்னையெங்கும் நடந்த மதிமுக பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு விடிய விடிய உணர்ச்சிவசப்பட்டு அழுதிருக்கிறேன். சென்னைக்கு வைகோ பாதயாத்திரையாக வந்தால் தாம்பரத்துக்கு அந்தப் பக்கமாக போய் வரவேற்று, பாதம் தேய தேய நகருக்கு நடந்துவருவேன். இந்நாட்களில் எல்லாம் வீட்டில் தினமும் அரசியல் சண்டைதான். அப்பா கலைஞருக்கும், நான் ஆரம்பத்தில் அம்மாவுக்கும், பிறகு வைகோவுக்குமாக சண்டை போட்டுக் கொண்டிருப்போம்.
95-96 காலக்கட்டத்தில் ஜூனியர் விகடன், நக்கீரன் இதழ்களையெல்லாம் தொடர்ச்சியாக வாசித்து, வாசித்து திமுக ஆதரவாளனாக முழுமையாக மாறிவிட்டேன். இடையில் வைகோவின் 'சப்பை'யான பல நடவடிக்கைகளும் (வெறுமனே செண்டிமெண்ட் அரசியல்) இதற்கு காரணம். தேர்தல் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டேன். சென்னை, காஞ்சி மாவட்டங்களில் நடைபெறும் பெரிய கூட்டங்கள் எதையுமே விட்டதில்லை. கலைஞருக்கு விஜயகாந்த் நடத்திய கடற்கரைப் பாராட்டுவிழாக் கூட்டம் பசுமையாக நினைவிருக்கிறது. ஒரு ஓட்டை எக்ஸ்ஃப்ளோரர் வண்டியில் த்ரிபிள்ஸ் போய், கல்யாணி ஹாஸ்பிடல் அருகே விழுந்து வாரி எழுந்து வந்தோம். இந்த காலக்கட்டம் வரையில் மட்டும், சிறுவயதிலிருந்து குறைந்தபட்சம் ஐநூறு, அறுநூறு கூட்டங்களுக்குப் போய்வந்திருப்பேன் என்று நினைக்கிறேன். திமுக, அதிமுக, மதிமுக, திக, பாஜக, ஜனதாதளமென்று கட்சி வேறுபாடெல்லாம் பார்த்ததில்லை. அயோத்தியா மண்டபம் உபன்யாசங்களுக்கு கூட மூன்று, நான்கு முறை சென்று வந்ததுண்டு.
இதற்குப் பிறகு காதல், கருமாந்திரமென்று திசை மாறித் தொலைத்துவிட்டதால் பொதுக்கூட்டங்களுக்கு போய்வரும் பழக்கம் வெகுவாக குறைந்தது. இதற்கேற்றாற்போல சீரணி அரங்கத்துக்கும் 'அம்மா' புண்ணியம் தேடிக்கொண்டார். நகரில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்த தோதான இடம் எதுவும் இப்போது சொல்லிக் கொள்ளும்படி இல்லை. அதே சிந்தாதிரிப்பேட்டை, புல்லா ரெட்டி அவென்யூ, காரணீஸ்வரர் கோயில், சின்னமலை என்று மொக்கையான லொக்கேஷன்கள்தான் திரும்ப திரும்பவும்.
இடையில் மடிப்பாக்கத்தில் நடந்த சில கூட்டங்களில் பேசியிருக்கிறேன். இடஒதுக்கீட்டுக்காக திமுக நடத்திய பொதுவேலைநிறுத்தம் குறித்து விளக்கம் கூறி நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் ஆவேசமாகப் பேசினேன். அப்பாவின் அந்தக் காலத்து நண்பரான ஆர்.எஸ்.பாரதி, பெருமையோடு என்னைப் பாராட்டினார்.
கலைஞரின் 83வது பிறந்தாள் என்று நினைவு. சின்னமலையில் நடந்த பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் நினைவிருக்கிறது. பெரியார், அண்ணா ஆகியோரின் சிந்தனைகளையே இன்னமும் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறோம். கலைஞர் புதிய சிந்தனைகளை உருவாக்க வேண்டுமென வீரபாண்டியார் கர்ஜித்தார். அவ்வளவு சுவாரஸ்யமான கூட்டங்கள் எல்லாம் இப்போது எங்கே நடக்கின்றன? இப்போதெல்லாம் கண்டன ஆர்ப்பாட்டங்களும், மறியலும்தான் நடக்கிறது. பொதுக்கூட்டம் எங்கே நடக்கிறது? இப்போதெல்லாம் டிவியும் பெருமளவு பயன்பாட்டுக்கு வந்துவிட்டதால், பெரிய கூட்டங்களை லைவ்வாகவே கலைஞர் செய்திகளிலும், ஜெயா நியூஸிலும், கேப்டன் டிவியிலும் பார்த்துக்கொள்ள முடிகிறது.
நேற்று திமுக பொதுக்குழு விளக்கக்கூட்டம் சைதையில் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. சைதை மாதிரி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் திமுகவினர் கிரிக்கெட் போட்டிதான் நடத்துவார்கள். இப்போது பொதுக்கூட்டம் நடத்துகிறார்கள் என்றதுமே ஆவலோடு விரைந்தேன். அடடா.. என்னே அற்புதம்? 96க்கு முந்தைய காலக்கட்டம் நினைவுக்கு வருகிறது. சாரை சாரையாக தொண்டர்கள். பெரிய மைதானம். பிரம்மாண்டமான மேடை. எதிரே மைதானம் முழுக்க மனிதத் தலைகள். குறைந்தபட்சம் 50,000 பேராவது கூடியிருப்பார்கள். ஆச்சரியப்படும் வகையில் மகளிர் கூட்டம் அதிகமாக இருந்தது. திமுக பழைய மேடைப்பேச்சு கலாச்சாரத்தை மீண்டும் வழக்கில் கொண்டு வருவதாக தோன்றுகிறது. ஏனெனில் ஊடகங்களில் பெரும்பாலானவை திமுகவுக்கு எதிராக மாறிவிட்ட சூழல் நிலவுகிறது. எனவே மக்களை இனி நேரடியாகவே சந்திக்க திமுக தலைமை முடிவெடுத்திருக்கலாம்.
ஜெ. அன்பழகன், சற்குணப் பாண்டியன், ஆற்காடு, தளபதி, பேராசிரியர் என்று அனைவரும் பேசி முடிக்க.. இரவு 9 மணிக்கு மைக்கைப் பிடித்தார் கலைஞர். "என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே!" கரகர குரலைக் கேட்டதுமே, அந்தக் காலத்தில் கேட்ட அதே கரகோஷத்தை பலவருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கேட்டேன். இந்தக் குரலை கேட்கவே கூடியிருந்த கூட்டம் மொத்தமும் எழுந்து நின்று, கைகளை விரித்து உதயசூரியன் சின்னத்தை மேடை நோக்கி காட்டியது. எனக்கு அருகில் அமர்ந்திருந்த 60 வயது மதிக்கத்தக்க உடன்பிறப்பு ஒருவர், துண்டு எடுத்து கண்களை துடைத்துக் கொண்டார். எனக்கு அப்பா ஞாபகம் வந்தது.