4 பிப்ரவரி, 2011

பொதுக்கூட்டம்!


சிறுவனாக இருந்தபோது சென்னையில் கலைஞர் கலந்துகொள்ளும் எந்த கூட்டமாக இருந்தாலும் சரி. அப்பா என்னை கட்சிக்கொடி கட்டிய சைக்கிளில் உட்காரவைத்து அழைத்துப் போய்விடுவார். நான் கண்ட பெரும்பாலான கூட்டங்கள் சீரணி அரங்கில் நடந்தவை. சிலநேரம் சிந்தாதிரிப்பேட்டை, சைதாப்பேட்டை, அமைந்தகரை போன்ற இடங்களுக்கும் போய்வந்த ஞாபகம். வடசென்னையில் நடக்கும் கூட்டங்களுக்கு அப்பா மட்டும் போய்வருவார். பரங்கிமலை ஒன்றிய அளவில் நடக்கும் கூட்டங்களில் அப்பா பேசுவார். மைக் பிடித்து அவர் பேசுவதை பெருமையோடு பார்ப்பேன் (இன்றும் ஏராளமான பிளாக் & ஒயிட் புகைப்படச் சொத்துகளை பாதுகாத்து வருகிறேன்). மேடைப்பேச்சு முடிந்து இரவு வீடு திரும்புகையில், எதிர்க்கட்சியினரின் தாக்குதலுக்கும் உள்ளாகியிருக்கிறார். 86 உள்ளாட்சித் தேர்தலில் அப்பாவின் நண்பருக்கு (அதிமுக) மேடையேறி, மழலைக்குரலில் நான் பிரச்சாரமும் கூட செய்திருக்கிறேன்.

சிறுவயது கூட்டங்களின் நினைவு மங்கலாக நினைவுக்கு வருகிறது. தொண்டர்கள் சாரை சாரையாக சைக்கிளில் கருப்புச் சிவப்பு கொடியேந்தி வருவார்கள். திமுகவில் அப்போதெல்லாம் ஏராளமான பேச்சாளர்கள். குறைந்தது இருபது பேராவது பேசி முடித்தபின் தான் 'முக்கியத் தலைகள்' பேசும். கூட்டம் முடிய ஒன்று, ஒன்றரை ஆகிவிடும். நன்றியுரை வரை கூட்டம் கலையாமல், அப்படியே கட்டுக்கோப்பாக இருக்கும். திமுக கூட்டங்களில் 'பெண்கள்' அவ்வளவாக கலந்துகொள்ள மாட்டார்கள். 90 சதவிகிதம் ஆண்கள்தான். மாறாக அதிமுக பொதுக்கூட்டங்களில் கொடிவண்ண சேலையணிந்த மகளிர் கூட்டம் கும்மாளமாக கும்மும். மகளிரை கவரும் கலைநிகழ்ச்சிகள் பலவற்றையும் அதிமுகவினர் ஏற்பாடு செய்திருப்பார்கள் என்பது இதற்கு கூடுதல் காரணம். திமுகவில் வெறும் பேச்சு மட்டும்தான்.

கலைஞர் கலந்துகொள்ளும் கூட்டங்களுக்கு கட்சிக்காரர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் ஏராளமாக வருவார்கள். "என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்பே" என்ற கரகர குரலை கேட்டு கண்ணீர் விட்ட தொண்டர்களை கண்டிருக்கிறேன். அப்பாவும் கூட சினிமா டாக்டர் மாதிரி, கண்ணாடியை கழற்றி லேசாக கண்ணைத் துடைத்துக் கொள்வார். கலைஞர் பேச ஆரம்பித்ததுமே குறைந்தது மூன்று நிமிடங்களுக்கு கரகோஷம் அதிரும். வானவேடிக்கை, பட்டாசு சத்தத்தில் ஏரியாவே அலறும். சத்தத்தில் அவரால் பேச இயலாது. ஆனாலும் கடுமை காட்டாமல் பொறுமையாக சந்தடி அடங்க காத்திருப்பார். இந்த ஆரவாரமான நிமிடங்களில் இனமானப் பேராசிரியர் அவர்களேயில் தொடங்கி சைதைப் பகுதி பொருளாளர் அவர்களே வரைக்கும் 'அவர்களே' சொல்வதற்கான நேரமாக எடுத்துக் கொள்வார்.

பத்திரிகை புகைப்படக் கலைஞர்கள் அவரை குளோஸ்-அப் எடுக்க வாகாக, அவ்வப்போது அப்படியே 'ஸ்டில்' ஆகிவிடுவதும் அவரது வாடிக்கை. கூட்டத்தில் என்ன முக்கியமான பிரச்சினை என்பதை பேச்சின் ஆரம்பத்திலேயே வெளிப்படுத்திவிடுவார். அப்படி பேசினால்தான் அடுத்த நாள் காலை நாளிதழ்களில் செய்தி இடம்பெறும். அனாயசமாக ரெண்டு, ரெண்டரை மணி நேரம் பேசுவார். இடையில் சோடா, கீடா குடித்ததாக எனக்கு நினைவேயில்லை. பேச்சை முடிக்க 15 நிமிடம் இருக்கும்போது ஒரு 'க்ளூ' இருக்கும். அந்த 'க்ளூ' வாடிக்கையாக எதிரே இருக்கும் தொண்டர்களுக்குப் புரியும். கூட்டத்தில் இருக்கும் மகளிர், கூட்டம் முடிந்ததும் ஏற்படும் நெரிசலில் அவதிப்படாமல் இல்லம் திரும்ப உடனே கிளம்பிவிடுவார்கள்.

மறக்க முடியாத கூட்டமென்றால் சென்னையில் தேசியமுன்னணி தொடக்கவிழாதான். கடற்கரையெங்கும் மனித உடல்களால் ஏற்பட்ட கச கச நெரிசல். என்னை தோள் மீது தூக்கி வைத்து அழைத்துப்போனார் அப்பா. அன்று கண்ட எழுச்சியையும், எண்ணிக்கையையும் திரும்ப வாழ்நாளில் காணவே முடியாது என்று இருபது ஆண்டுகளாக நினைத்திருந்தேன். கடந்தாண்டு கோவையில் நடந்த செம்மொழி மாநாடு அக்குறையைப் போக்கியது.

மதுரை, தஞ்சை, கோவை, சேலம் என்று தமிழகத்தின் பெருநகரங்களில் வசிக்கும் திமுக நண்பர்கள் முன்பெல்லாம் சொல்வார்கள். "சென்னைக்கு வரும்போது தாய்வீட்டுக்குள்ளே நுழையுற எண்ணம் வருதப்பா!". அது உண்மைதான். 1959ல் மாநகராட்சியை திமுக கைப்பற்றியதிலிருந்தே சென்னை திமுகவின் கோட்டைதான். செயிண்ட் ஜார்ஜ் கோட்டை வேண்டுமானால் யாரிடமும் இருக்கலாம். எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்திலேயே சென்னை மட்டும் திமுகவிடம்தான் இருக்கும். இந்தப் பெருமையெல்லாம் 96 வரைக்கும்தான்.

90களின் தொடக்கத்தில் திமுக முகாமில் ஏகப்பட்ட குழப்பம். நானும் கொஞ்சம் வளர்ந்துவிட்டேன் என்பதால், அப்பாவின் உதவியில்லாமல் தனியாக சிந்திக்க ஆரம்பித்துவிட்டேன். திமுக கூட்டம் என்றில்லாமல், எந்த கூட்டமாக இருந்தாலும் ஆவலுடன் முன்வரிசையில் போய் உட்கார்ந்துக் கொள்வேன். திராவிடர் கழகத்தில் இணைந்து செயல்பட்டதால், அம்மா அனுதாபியாகவும் இருந்தேன் (அப்போது தி.க., அதிமுகவை ஆதரித்தது). ஆயினும் கொஞ்சநாளிலேயே அம்மாவின் பாசிஸ நடவடிக்கைகள் பிடிக்காமல் போய்விட்டது. திமுகவில் இருந்து வைகோ நீக்கப்பட்டபோது கொதித்துப் போனேன் (உள்ளகரம்-புழுதிவாக்கம் நகர கழகச் செயலாளராக இருந்த குபேரா.முனுசாமி அவர்களின் குடும்பத்தினர் ஒட்டுமொத்தமாக மதிமுகவுக்கு மாறியதும் ஒரு ஸ்பெஷல் காரணம்). சென்னையெங்கும் நடந்த மதிமுக பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு விடிய விடிய உணர்ச்சிவசப்பட்டு அழுதிருக்கிறேன். சென்னைக்கு வைகோ பாதயாத்திரையாக வந்தால் தாம்பரத்துக்கு அந்தப் பக்கமாக போய் வரவேற்று, பாதம் தேய தேய நகருக்கு நடந்துவருவேன். இந்நாட்களில் எல்லாம் வீட்டில் தினமும் அரசியல் சண்டைதான். அப்பா கலைஞருக்கும், நான் ஆரம்பத்தில் அம்மாவுக்கும், பிறகு வைகோவுக்குமாக சண்டை போட்டுக் கொண்டிருப்போம்.

95-96 காலக்கட்டத்தில் ஜூனியர் விகடன், நக்கீரன் இதழ்களையெல்லாம் தொடர்ச்சியாக வாசித்து, வாசித்து திமுக ஆதரவாளனாக முழுமையாக மாறிவிட்டேன். இடையில் வைகோவின் 'சப்பை'யான பல நடவடிக்கைகளும் (வெறுமனே செண்டிமெண்ட் அரசியல்) இதற்கு காரணம். தேர்தல் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டேன். சென்னை, காஞ்சி மாவட்டங்களில் நடைபெறும் பெரிய கூட்டங்கள் எதையுமே விட்டதில்லை. கலைஞருக்கு விஜயகாந்த் நடத்திய கடற்கரைப் பாராட்டுவிழாக் கூட்டம் பசுமையாக நினைவிருக்கிறது. ஒரு ஓட்டை எக்ஸ்ஃப்ளோரர் வண்டியில் த்ரிபிள்ஸ் போய், கல்யாணி ஹாஸ்பிடல் அருகே விழுந்து வாரி எழுந்து வந்தோம். இந்த காலக்கட்டம் வரையில் மட்டும், சிறுவயதிலிருந்து குறைந்தபட்சம் ஐநூறு, அறுநூறு கூட்டங்களுக்குப் போய்வந்திருப்பேன் என்று நினைக்கிறேன். திமுக, அதிமுக, மதிமுக, திக, பாஜக, ஜனதாதளமென்று கட்சி வேறுபாடெல்லாம் பார்த்ததில்லை. அயோத்தியா மண்டபம் உபன்யாசங்களுக்கு கூட மூன்று, நான்கு முறை சென்று வந்ததுண்டு.

இதற்குப் பிறகு காதல், கருமாந்திரமென்று திசை மாறித் தொலைத்துவிட்டதால் பொதுக்கூட்டங்களுக்கு போய்வரும் பழக்கம் வெகுவாக குறைந்தது. இதற்கேற்றாற்போல சீரணி அரங்கத்துக்கும் 'அம்மா' புண்ணியம் தேடிக்கொண்டார். நகரில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்த தோதான இடம் எதுவும் இப்போது சொல்லிக் கொள்ளும்படி இல்லை. அதே  சிந்தாதிரிப்பேட்டை, புல்லா ரெட்டி அவென்யூ, காரணீஸ்வரர் கோயில், சின்னமலை என்று மொக்கையான லொக்கேஷன்கள்தான் திரும்ப திரும்பவும்.

இடையில் மடிப்பாக்கத்தில் நடந்த சில கூட்டங்களில் பேசியிருக்கிறேன். இடஒதுக்கீட்டுக்காக திமுக நடத்திய பொதுவேலைநிறுத்தம் குறித்து விளக்கம் கூறி நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் ஆவேசமாகப் பேசினேன். அப்பாவின் அந்தக் காலத்து நண்பரான ஆர்.எஸ்.பாரதி, பெருமையோடு என்னைப் பாராட்டினார்.

கலைஞரின் 83வது பிறந்தாள் என்று நினைவு. சின்னமலையில் நடந்த பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் நினைவிருக்கிறது. பெரியார், அண்ணா ஆகியோரின் சிந்தனைகளையே இன்னமும் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறோம். கலைஞர் புதிய சிந்தனைகளை உருவாக்க வேண்டுமென வீரபாண்டியார் கர்ஜித்தார். அவ்வளவு சுவாரஸ்யமான கூட்டங்கள் எல்லாம் இப்போது எங்கே நடக்கின்றன? இப்போதெல்லாம் கண்டன ஆர்ப்பாட்டங்களும், மறியலும்தான் நடக்கிறது. பொதுக்கூட்டம் எங்கே நடக்கிறது?  இப்போதெல்லாம் டிவியும் பெருமளவு பயன்பாட்டுக்கு வந்துவிட்டதால், பெரிய கூட்டங்களை லைவ்வாகவே கலைஞர் செய்திகளிலும், ஜெயா நியூஸிலும், கேப்டன் டிவியிலும் பார்த்துக்கொள்ள முடிகிறது.

நேற்று திமுக பொதுக்குழு விளக்கக்கூட்டம் சைதையில் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. சைதை மாதிரி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் திமுகவினர் கிரிக்கெட் போட்டிதான் நடத்துவார்கள். இப்போது பொதுக்கூட்டம் நடத்துகிறார்கள் என்றதுமே ஆவலோடு விரைந்தேன். அடடா.. என்னே அற்புதம்? 96க்கு முந்தைய காலக்கட்டம் நினைவுக்கு வருகிறது. சாரை சாரையாக தொண்டர்கள். பெரிய மைதானம். பிரம்மாண்டமான மேடை. எதிரே மைதானம் முழுக்க மனிதத் தலைகள். குறைந்தபட்சம் 50,000 பேராவது கூடியிருப்பார்கள். ஆச்சரியப்படும் வகையில் மகளிர் கூட்டம் அதிகமாக இருந்தது. திமுக பழைய மேடைப்பேச்சு கலாச்சாரத்தை மீண்டும் வழக்கில் கொண்டு வருவதாக தோன்றுகிறது. ஏனெனில் ஊடகங்களில் பெரும்பாலானவை திமுகவுக்கு எதிராக மாறிவிட்ட சூழல் நிலவுகிறது. எனவே மக்களை இனி நேரடியாகவே சந்திக்க திமுக தலைமை முடிவெடுத்திருக்கலாம்.

ஜெ. அன்பழகன், சற்குணப் பாண்டியன், ஆற்காடு, தளபதி, பேராசிரியர் என்று அனைவரும் பேசி முடிக்க.. இரவு 9 மணிக்கு மைக்கைப் பிடித்தார் கலைஞர். "என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே!" கரகர குரலைக் கேட்டதுமே, அந்தக் காலத்தில் கேட்ட அதே கரகோஷத்தை பலவருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கேட்டேன். இந்தக் குரலை கேட்கவே கூடியிருந்த கூட்டம் மொத்தமும் எழுந்து நின்று, கைகளை விரித்து உதயசூரியன் சின்னத்தை மேடை நோக்கி காட்டியது. எனக்கு அருகில் அமர்ந்திருந்த 60 வயது மதிக்கத்தக்க உடன்பிறப்பு ஒருவர், துண்டு எடுத்து கண்களை துடைத்துக் கொண்டார். எனக்கு அப்பா ஞாபகம் வந்தது.

33 கருத்துகள்:

  1. RIGHT TIME, RIGHT MEETING, RIGHT POST,ME TOO HAVE SOME NOSTALGIC EXPERIENCES BY ATTENDING DMK MEETINGS WITH MY FATHER NEAR SHENOY NAGAR.PURASAI,AND SAIDAPET.(ALONE FOR ADMK MEETINGS,WITHOUT MY FATHER`S KNOWLEDGE)

    பதிலளிநீக்கு
  2. தாரையாய் தாரையாய் என் கண்ணில் 'கண்ணீர்'...

    பதிலளிநீக்கு
  3. இளமை பருவத்தில் இருந்தே அரசியலை நன்கு கவனித்து வருகிறீர்கள்...!

    // திமுக பழைய மேடைப்பேச்சு கலாச்சாரத்தை மீண்டும் வழக்கில் கொண்டு வருவதாக தோன்றுகிறது. ஏனெனில் ஊடகங்களில் பெரும்பாலானவை திமுகவுக்கு எதிராக மாறிவிட்ட சூழல் நிலவுகிறது. எனவே மக்களை இனி நேரடியாகவே சந்திக்க திமுக தலைமை முடிவெடுத்திருக்கலாம்.//

    இது முழுக்க முழுக்க உண்மை தான். அறிவு இருக்கிற எந்த அரசியல்வாதியும் இப்படி தான் சிந்திப்பார்கள்.

    //இடையில் வைகோவின் 'சப்பை'யான பல நடவடிக்கைகளும் (வெறுமனே செண்டிமெண்ட் அரசியல்) இதற்கு காரணம்//

    கல்லூரி படிக்கும் போது நானும்,நண்பர்களும்மிகவும் வருந்தி மதிமுக வில் சேர்ந்தோம். பின்னர் ஏண்டா சேர்ந்தோம் என்ற அளவிற்கு அவர் செய்து விட்டார். பாத யாத்திரை செய்த நேரத்தில் ஒட்டு மொத்த தமிழகம் அவரை கவனித்தது. சரியாக உபயோக படுத்த தவறி விட்டார்.

    ஒரு சின்ன டாகுமெண்டரி படம் பார்த்தது போல இருந்தது உங்கள் பதிவு.

    ( நீங்களும் வினவு ஆளா...! நானும் தான் ...)

    பதிலளிநீக்கு
  4. //1957ல் மாநகராட்சியை திமுக கைப்பற்றியதிலிருந்தே சென்னை தி
    திமுகவின் கோட்டைதான்.//

    1959 என்பதுதான் சரியான ஆண்டு.

    பதிலளிநீக்கு
  5. \\ 60 வயது மதிக்கத்தக்க உடன்பிறப்பு ஒருவர், துண்டு எடுத்து கண்களை துடைத்துக் கொண்டார். எனக்கு அப்பா ஞாபகம் வந்தது \\

    FOR ME TOO...........

    VERY NICELY WRITTEN POST........

    பதிலளிநீக்கு
  6. Because of the Oratorical Skills of Dravidian parties congress lost its influence in TN , Ex. : Kamarajar was defeated by Srinivasan ( Student Leader for Anti Hindi Movement )

    பதிலளிநீக்கு
  7. பல நினைவுகளை மீட்டெடுத்த பதிவு .நன்றி!

    பதிலளிநீக்கு
  8. I am probably older than you, Yuva. I remember the meeting in 1984. After the dismissal of NTR by the then AP governer (or Congress agent) Ram Lal. Farook Abdullah, Vajpai, Advani, George Fernandes, Biju Patnaik, CPM leaders NTR and then finally MK. NTR started in Tamil and then spoke in Telugu. Meeting went upto 2 am next day. But MK was supporting good peoples.

    KVB

    பதிலளிநீக்கு
  9. ’இன்னா’வின் நினைவுகள் மட்டுமில்லீங்க அவரைப் பத்தி எந்தப் பதிவு போட்டாலுமே உணர்வு ரீதியா அசைச்சுருது. ஒரு வேளை அடிமனசுல எழுதற பதிவுங்கிறதால இருக்கலாம்

    பதிலளிநீக்கு
  10. 60 வயது மதிக்கத்தக்க உடன்பிறப்பு ஒருவர், துண்டு எடுத்து கண்களை துடைத்துக் கொண்டார். எனக்கு அப்பா ஞாபகம் வந்தது

    # Good Story & Screenplay.. by Yuvakrishna

    2016 Election'la Ward Member Aagituveenga ?!!

    பதிலளிநீக்கு
  11. லக்கி..எனக்கு இன்னதென்று சொல்ல தெரியவில்லை. கலைஞர் "உடன்பிறப்பே" சொல்லும்போது உங்களுக்கு வரும் எஃபக்ட், எனக்கு இந்த பதிவை படிக்கும் போது வருகிறது. ஒரு கட்டுரையின் அழகே அதன் கடைசி வரி தான். இந்த கட்டுரையின் கிளைமாக்ஸ் வரியில் பிச்சு எடுத்துட்டீங்க..அதற்கு முன்னும் செம விறுவிறு..

    பு.த உங்கள் எழுத்தை ரொம்பவே செம்மைப்படுதியிருக்கிறது.

    பதிலளிநீக்கு
  12. லக்கி, நல்ல சிறுகதை போல உள்ளது உங்கள் இடுகை. இதையெல்லாம் பார்க்கும்போது வடிவேலு டயலாக் ஞாபகம் வருகிறது....

    '' இன்னுமாய்யா இந்த உலகம் என்ன நம்புது'' ''எல்லாம் அவங்க தலவிதி'' மீண்டும் மக்களை சந்திக்க திமுக முடிவெடுத்திருக்கிறது என்பதுதான் இதில் உச்சகட்ட கமெடி...

    பயமாதா இருக்கு லக்கி....
    இந்த உடன்பிறப்புகளையும்,
    கொடநாடு விசுவாசிங்களையும் பார்த்தா...

    பேசாம வடிவேலு ஏதோ விஜயகாந்துக்கு எதிரா கட்சி ஆரம்பிக்கபோரேன்னு சொன்னாரே...

    அதுலதான் நான் சேரலாம்னு இருக்கேன்....

    கைத்துண்ட எடுத்து கண்ணாடிய தொடைக்க வேணாம்பாருங்க.....

    உங்களுக்கு நகைச்சுவையா எழத நல்லா வருது லக்கி.... தொடருங்க.... வாழ்த்துகள்....

    - சென்னைத்தமிழன்

    பதிலளிநீக்கு
  13. Aim away from singara Chennai for more than 10yrs.
    You simply recharged my memory…..
    I have the same experience of yours exactly.....but still aim stronger supporter of DMK and aim proud of that..

    பதிலளிநீக்கு
  14. உங்கள் கட்சி விசுவாசம் பாராட்டத்தக்கது,யுவகிருஷ்ணா!
    திரு மு க அவர்கள் மிகப்பெரிய ஊழல் பேர்வழி,2G ஊழல் அது இது என்று இணையதளம் முழுவதும் சத்தம்.இது தி மு க வின் வெற்றியை சிறிதும் பாதிக்கப்போவதில்லை என்பது தெரிந்தாலும்,இவர்களுக்கு உங்கள் பதில் என்ன?மு.க ஒரு அப்பழுக்கற்ற தலைவர்,கரை படியா கரங்களுக்கு சொந்தக்காரர் என்பதை உலகிற்கு உணர்த்தும் வகையாக உங்கள் நெடும் பதிவு ஒன்றை விரைவில் எதிர்பார்க்கிறேன்
    நன்றி.

    பதிலளிநீக்கு
  15. புல்லட் என்கிற சகா :-)

    உங்களோட இந்த ஐடியை எனக்கு ஏற்கனவே தெரியும். புது ஐடி கிரியேட் செய்து பின்னூட்டம் பொடவும்!

    பதிலளிநீக்கு
  16. lucky, உங்களுடைய பதிவுகளை நீண்ட நாட்களாக படித்து வருகிறேன், ரசித்து வருகிறேன் என்றும் கூட சொல்லலாம்.. இவ்வளவு படித்த, விஷயம் தெரிந்த நீங்கள் ஏன் திமுக வையும், மு. க வையும் கண்மூடித்தனமாக ஆதரிக்கிறீர்கள் என்று புரிய வில்லை. நியாயமாக இருக்காத எந்த திறமையும் நீடிக்காது என்பது என் கருத்து.

    பதிலளிநீக்கு
  17. Very nice article Yuva. DMK is the only party having crowd pulling leaders. Though I have not satisfied with their government but I totally agree wit you on the mesmerising speach of MK. Sad thing id Jaya and Captain are not at all a good speaker but I'm wondering the crowd on their meetings :(

    பதிலளிநீக்கு
  18. யு கி

    உங்கள் இந்த பதிவை மிக மிக அருமை. உங்கள் கருத்தோடு ஒத்து போகிறேன்...

    நன்றி

    மயிலாடுதுறை சிவா....

    பதிலளிநீக்கு
  19. யுவ! நச்சென்று ஒரு பதிவு, மலரும் நினைவுகள் உங்களுக்கு மட்டுமல்ல, எனக்கும் சேர்த்துதான். அரசியலை 80 களில் இருந்து கவனித்துவருகிறேன். 1982 மயிலாடுதுறை இடைதேர்தலில் கலைஞரை மேடையில் பேசுவதை பார்க்க காத்திருந்தது நினைவிற்கு வருகிறது( 13 வயதில்) அந்த இடைதேர்தலில் தி.மு.க வின் முன்னணி நிலவரம் எனது மாமா குடும்பத்திற்கு பிடிக்காத சூழ்நிலையிலும், மகிழ்ந்தேன் என்பது சந்தோசம். சுத்து வட்டாரம் பெரும்பாலும் தி.மு.கவினராகவே இருந்ததும், என் அம்மாவே என்னை கடுமையாக கண்டித்தும், தீவிர தி.மு.க அனுதாபியாகவே இருந்ததும் நினைவிற்கு வருகிறது. 1986 (பஞ்சாயத்து) 1989 (சட்டமன்ற) தேர்தலில் தி.மு.கவின் வெற்றியை எப்படியெல்லாம் எப்படியெல்லாம் நண்பர்களோடு கொண்டாடினோம் என்பதும்( அம்மாவிற்கு தெரியாமல், அப்பா தீவிர தி.மு.க பலமுறை சிறைக்கு சென்றவர்) என்பதோடு, இப்போதும் தி,மு.க அனுதாபியாகவே இருப்பினும், நிகழ்கால நிகழ்வுகள் வருத்தமே அடைய வைத்தாலும், எம்.ஜி.ஆர் காலத்திலும் மாறாத தி.மு.க பற்று, இப்போதைய நடவடிக்ககைகள் சற்று தடுமாறவே செய்தாலும், ஒரு தி.மு.க அனுதாபியாக இக்கட்டுரை தேர்தலுக்கு முன் ஒரு தேறுதளாகவே இருக்கிறது. நன்றி - முருகவேல் ச ஆழ்வார்பேட்டை.18

    பதிலளிநீக்கு
  20. இத்தனை லட்சம் மக்கள் தனது பேச்சை கேட்டாலும், வீட்டில் இருப்புவர் யாரும் பேச்சை கேக்காததால் வந்த நிலைமை ரொம்பவும் கொடுமை. குடும்பத்தினர் செய்த தவறுக்காக, இன்று கட்சியை காங்கிரஸ் காலில் அடமானம் வைக்க வேண்டிய நிலை. இந்த தள்ளாத வயதிலும், காத்துக்கிடந்து கஷ்டப்பட வேண்டிய நிலை.

    எப்படி திமுகவின் தூணாக இவர் இருந்தாரோ, அதேபோல் திமுகவின் அழிவுக்கும் இவர் தான் காரனமாக இருப்பார் என்பது என் அனுமானம். காலம்தான் இதற்கு பதில் சொல்லும்.

    முதல்வர் ஆவதற்கு எல்லா தகுதியும் திறமையும் அனுபவமும் இருந்தாலும், ஸ்டாலினுக்கு அந்த பாக்கியம் கிடைக்காமல் போய்விடுமோ என்பது அவருக்கு மட்டுமல்ல, நமக்கும் நஷ்டமே. இன்றைய நிலையில் அவர் மட்டுமே முதல்வர் பதவிக்கு தகுதியான் ஒரே ஆள். அது நடக்காமல் போனால் அதற்கு ஒரே காரணம் அவரது அன்புத் தந்தைதான்.

    பதிலளிநீக்கு
  21. Dear Yuva,
    I like your posting.This is my first Comment: We know your are DMK supporter. But, we don't like these type of "STUPID POST " from you. Tamilnadu people know very well abot those bullshit DMK family and their activites. Pls try to avoid these type of brainwasing posts which make you down.

    Regards,
    Nithiyananthan.P

    பதிலளிநீக்கு
  22. இந்தக் கட்டுரையின் மூலம் என்னையும் சிறுவனாக்கியதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  23. dont be sentimental in election, because we have the choice to create the future of a state.

    பதிலளிநீக்கு
  24. அருமையான பதிவு லக்கி. உண்மையிலேயே ஆவணப்படம் பார்ப்பது போல் இருந்தது. 96 தேர்தல் என்று நினைக்கிறேன்.. வாக்காளர் பட்டியல் அறிவுப்பு கூட்டம் சேப்பாக்கத்தில் நடந்தது- வரிசையாக வாக்காளர் பட்டியலை படித்த கலைஞர், "கருணாநிதி எங்கே நிற்கிறார்?" என்று கேள்வி எழுப்பி சற்று இடைவெளி விட்டு "கருணாநிதி இங்கே நிற்கிறார்!" என்று தனக்கே உரிய பாணியில் சாமர்த்தியமாக முடித்த போது கூட்டம் ஆர்ப்பரித்து அடங்க நெடு நேரம் ஆனது.. பல நினைவுகளை தூண்டிய பதிவு. நம் திரைப்படங்கள் நம் அரசிய கூட்டங்கள் போன்ற சுவாரசிய நிகழ்வுகளை சரியாக படம் பிடிக்காமல் இருப்பது ("என் உயிர் தோழன்" நீங்கலாக) பெரிய இழப்பு.

    பதிலளிநீக்கு
  25. hmmm very nice article yuva. Gnabagan varuthe nu innoru murai yosikka thonuthu... Solomon. hello fm

    பதிலளிநீக்கு
  26. இதெல்லலாம் வச்சு நீங்க ஒரு நாவல் எழுதனும்! (காதல், கன்றாவியெல்லாம் சேர்த்துத்தான்!)

    பதிலளிநீக்கு
  27. பொதுவாக அரசியல் பின்ண்ணி உள்ள எல்லா குடும்பத்து பிள்ளைகளுக்கும் இத்தகைய நாஸ்டால்ஜியா இருக்கும்.இப்படி பேச்சுக்கலையை கவனிப்பதற்கு சென்று அந்த போதைக்கு அடிமைப்பட்டவர்கள்தான் நம்மில் பலர்.கலைஞரின் மேல் எவ்வளவு கருத்து வேறுபாடு இருந்தாலும் நம்மையெல்லாம் தன்னை கவனிக்க வைக்கும் ஆற்றல் அவருக்குண்டு.
    உங்கள் இந்த பதிவினைப்படிக்கும்போது உடன் பயணித்த அனுபவம் ஏற்படுவது உண்மைதான்.உங்கள் எழுத்தாற்றல் வளர்க.

    பதிலளிநீக்கு
  28. ஒரு காலத்தில் இளைஞர்கள் அனைவரும் திமுக அனுதாபிகள் தான் ஆனால் திமுக நல்ல முறையில்அதை பயன்படுத்தவில்லை

    பதிலளிநீக்கு