14 மார்ச், 2011

அமெரிக்கா வேண்டாம்.. அவினாசி போதும்!

நாம் வரவேற்பறையில் காத்துக் கொண்டிருந்தபோது, அவரை சந்திக்க ஊர்ப்பெரியவர்கள் சிலரும் நம்மோடு காத்திருந்தார்கள். அவர் வணக்கம் கூறியவாரே வந்தார்.

"வணக்கம் அம்மா. கோயில் நன்கொடை விஷயமா பார்க்க வந்தோம்!" பெரியவர்களில் ஒருவர் மெதுவாக ஆரம்பித்தார்.

அவசரமாக அவர் இடைமறித்து, "கோயில்களுக்கு நன்கொடை தராமல் இருப்பதை கொள்கையாகவே வெச்சுருக்கேன். உங்க ஊர் பள்ளிக்கு எது வேணும்னாலும் கேளுங்க. அரசாங்கத்திடம் இருந்து எவ்வளவு கிடைக்குமோ வாங்கித் தருகிறேன். பத்தலைன்னா என் சொந்தக் காசையும் கூட செலவளிக்கிறேன்" என்று நாகரிகமாக மறுக்கிறார்.

அவர், அவினாசி ஒன்றியத்தலைவி சாந்திபாபு. கோவை மண்டலத்தில் அரசியலில் ஈடுபட்டிருக்கும் பெண்களில் முக்கியமானவர். வயது 32. உள்ளாட்சி மன்றங்களில் மைக்கும், நாற்காலிகளும் பறக்க, சூடாக சபைக்கூட்டங்கள் நடக்கும் காலமிது. சாந்திபாபு தலைமை வகிக்கும் ஒன்றியக்குழு கூட்டங்களில் இதுவரை ஒரு சலசலப்பு கூட எழுந்ததில்லை. "அவ்வளவு பாந்தமா அம்மா கூட்டத்தை நடத்துவாங்க" என்று சிலிர்க்கிறார் ஊராட்சி ஒன்றியக்குழு அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர்.

சாந்தியின் சொந்த ஊர் அவிநாசி அருகில் நம்பியாம்பாளையம். நடுத்தரக் குடும்பம். படிப்பில் கில்லி. +2வில் பள்ளியில் முதலிடம். பின்னர் கம்ப்யூட்டர் அறிவியலில் பி.ஈ. பட்டம் பெற்றார். தூரத்து உறவினரான பாபுவை காதலித்து வந்தார் சாந்தி. பி.ஈ. படித்த பெண்ணை, +2 படித்த பாபுவுக்கு கொடுக்க பெற்றோருக்கு விருப்பமில்லை. நீண்டகாலப் போராட்டத்துக்குப் பிறகு இருவீட்டார் சம்மதத்தோடு காதல் வென்றது. 'உங்கள் மகள் பி.ஈ. தானே.. என்னுடைய மனைவி எம்.ஈ-யாக இருக்கவேண்டும்' என்று வைராக்கியத்தோடு, மனைவியை மேற்படிப்பு படிக்கவைத்தார் பாபு. தனியார் பொறியியற் கல்லூரி ஒன்றில் அப்போது விரிவுரையாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார் சாந்தி பாபு.

எம்.ஈ (சாஃப்ட்வேர் என்ஜீனியரிங்) இறுதியாண்டு படிக்கும்போது சர்வதேச அளவில் நடந்த கருத்தரங்கில் ஆய்வுக்கட்டுரை ஒன்றினை சமர்ப்பிக்கும் வாய்ப்பும் இவருக்கு கிடைத்தது. இவரது ஆய்வுக்கட்டுரையை கண்ட அமெரிக்க நிறுவனம் ஒன்று, மூன்று லட்ச ரூபாய் சம்பளத்துக்கு தங்கள் நிறுவனத்துக்கு பணிபுரியவருமாறு இவரை அழைத்தது. "அமெரிக்கா வேண்டாம். என்னுடைய அவினாசியே போதும்" என்று வாசல்தேடி வந்த வாய்ப்பை கம்பீரமாக மறுத்தார் சாந்திபாபு.

அமெரிக்க வாய்ப்பை மறுத்தவருக்கு அவினாசி வாய்ப்பு கேட்காமலேயே கிடைத்தது. சொந்த ஊரான நம்பியாண்டம்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினருக்கான தேர்தலில் நின்று வென்றார். இது அவினாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது. பின்னர் அவினாசி ஊராட்சி ஒன்றியத் தலைவியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இருநூற்று இருபத்தியாறு குக்கிராமங்கள் அடங்கிய முப்பத்தியோரு ஊராட்சி மன்றங்களை இப்போது நிர்வகித்து வருகிறார் சாந்திபாபு. இப்பதவிக்கு வரும்போது இவரது வயது இருபத்தி எட்டு. இந்தியாவிலேயே இவ்வளவு இளம்வயதில் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவியாக பதவியேற்றது இவர் மட்டும்தான்.

ஊராட்சி ஒன்றியப் பள்ளிகள், சத்துணவுக்கூடம், அங்கன்வாடி மையம், ஆரம்ப சுகாதார நிலையம், ஊராட்சி அலுவலகம், கூட்டுறவு அங்காடி, நியாயவிலைக்கடை என்று எங்காவது திடீரென அதிரடி விசிட் அடித்து சோதனை செய்வது இவரது வழக்கம். கையும் களவுமாக சிலர் மாட்டியதும் உண்டு. 'இல்லாதவருக்கு இலவச கைப்பேசி' என்றொரு திட்டத்தினை மத்திய அரசு அமலாக்கி வருகிறது தெரியுமா? தமிழகத்திலேயே அவினாசி ஒன்றியத்தில்தான் முதன்முறையாக இது அமலுக்கு வந்திருக்கிறது. அவினாசி ஒன்றியக்குழு கட்டிடம் சுமார் ஒன்றரைக் கோடி செலவில் கட்டப்பட்டு வருவதும் இவரது சாதனைகளில் குறிப்பிடத்தக்க ஒன்று. தொழில் கடன், கல்விக் கடன் என்று தன்னை நாடி வரும் ஒன்றிய மக்களுக்கு சாந்திபாபு ஒரு கலங்கரை விளக்கம்.

சமூகக்கல்வி மற்றும் முன்னேற்ற மையம் சார்பாக உள்ளாட்சி பெண் பிரதிநிதிகளுக்கும், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கும் அவ்வப்போது விழிப்புணர்வு முகாம் நடத்தி வருகிறார்.

தன்னுடைய வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு ரத்ததானம் குறித்து அடிக்கடி அறிவுறுத்துகிறார். மாணவ மாணவியருக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்பதற்காக கணவரோடு சேர்ந்து, தன்னுடைய உடலையும் கோவை மருத்துவக் கல்லூரிக்கு தானமாக தந்திருக்கிறார்.

திறம்பட செயல்படும் இவரைப்பற்றி மாவட்ட ஆட்சியர் மற்றவர்களிடம் விசாரித்துப் பார்த்திருக்கிறார். அப்போதுதான் சாந்திபாபுவின் கல்வி பின்புலம் தெரிய வந்திருக்கிறது. கற்ற கல்வி வீணாகக்கூடாது என்று அறிவுறுத்திய மாவட்ட ஆட்சியர், விரிவுரையாளர் பணியையும் தொடரவேண்டும் என்று சாந்திபாபுவைக் கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து கருமத்தம்பட்டியிலுள்ள தமிழ்நாடு பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராக பணிக்குச் சேர்ந்தார். இளங்கலை கம்ப்யூட்டர் அறிவியல் மாணவர்களுக்கு 'டேட்டா மைனிங்' பாடம் நடத்தி வருகிறார்.

குடும்பத்தலைவி, பஞ்சாயத்து யூனியன் தலைவி, கல்லூரி விரிவுரையாளர், மகளிர் சுய உதவிக்குழுக்களின் ஆலோசகர் – இத்தனை பொறுப்புகளையும் எப்படி சமாளிக்கிறீர்கள் சாந்தி?

"இது மட்டுமல்ல. டேட்டா மைனிங் துறையில் பி.எச்.டி. முடித்து டாக்டர் பட்டமும் பெற இருக்கிறேன். காலையில்தானே கல்லூரி? மாலை சும்மாதானே இருக்கிறது. மாலை மட்டுமல்ல. சனி, ஞாயிறு வாரயிறுதிகளும் எனக்கு விடுமுறைதான். இவ்வளவு நேரம் கிடைக்கிறதே? இந்தப் பணிகளை செய்ய இது போதாதா? உண்மையை சொல்ல வேண்டுமானால் எனக்கு இன்னும் கூட நிறைய நேரம் மீதமிருக்கிறது" என்று சொல்லி சிரிக்கிறார்.

சாந்தி – பாபு தம்பதியினருக்கு இரண்டு வயதில் கலைநிதி என்று ஒரு மகன் உண்டு. திருமணம் ஆகி எட்டு வருடங்கள் ஆகிவிட்டாலும் இன்னமும் கூட்டுக் குடும்பம்தான். சாந்திபாபுவின் வெற்றி ரகசியம் இப்போது புரிகிறதா? கணவரின் - புகுந்த வீட்டின் ஆதரவு இருந்தால், எந்த மருமகளும் ஊருக்கே தலைவி ஆகலாம்.

(நன்றி : புதிய தலைமுறை)

11 மார்ச், 2011

புரட்சி பாரதம்!

நீங்கள் வழக்கமாக செய்தித்தாள் படிக்கிறவராக இருந்தால்.. இரண்டு, மூன்று நாட்களுக்கு முன்பாக இந்தப் பெயரை வாசித்திருப்பீர்கள். 'புரட்சி பாரதம்'. "திமுக கூட்டணியிலிருந்து புரட்சி பாரதம் விலகல்!" என்று சிங்கிள் காலத்திலோ, டபுள் காலத்திலோ நிச்சயம் வாசித்திருப்பீர்கள். தேர்தல் பரபரப்பு மிகுந்த இந்த சூழலில் கூட்டணியிலிருந்து ஒரு கட்சி விலகுவது என்பது மக்களுக்கு ஆச்சரியத்தையோ, அதிர்ச்சியையோ, மகிழ்ச்சியையோ, வருத்தத்தையோ தந்திருக்க வேண்டும். துரதிருஷ்டவசமாக 'புரட்சி பாரதம்' விவகாரத்தில் இதில் ஓர் உணர்ச்சி கூட யாருக்குமே ஏற்படவில்லை. இக்கட்சி தங்கள் கூட்டணியில் இருந்து விலகி, தனித்துப் போட்டியிடுவது குறித்து கலைஞருக்காவது தெரிந்திருக்குமா என்றுகூட தெரியவில்லை.

1991ல் அம்மா ஆட்சிக்கு வந்த காலக்கட்டத்தில் அரக்கோணம் பக்கமாக போய்வந்தவர்களுக்கு தெரிந்திருக்கும். வாழப்பாடியார், வீரப்பாண்டியார் ஸ்டைலில் "மூர்த்தியார்" என்ற பெயர் சுவர்களில் மெகா சைஸில் எழுதப்பட்டிருக்கும். இந்த 'யார்' என முடியும் பெயர்களுக்கு ஓர் ஒற்றுமை உண்டு. ஊர் பெயரை மையப்படுத்தி பெயர் வைத்திருப்பர்களுக்குதான் இந்த 'யார்' அந்தஸ்து கிடைக்கும். உதாரணம் மதுராந்தகத்தார். முதன் முதலாக தனது பெயருக்குப் பின்னால் 'யார்' சேர்த்து கூடுதல் மரியாதையை ஏற்படுத்திக் கொண்டவர் பூவை மூர்த்தியார்தான். இவர் ஏன் பூவையார் என்று போட்டுக் கொள்ளாமல், மூர்த்தியார் என்று போட்டுக் கொள்கிறார் என்று அப்போது ஆச்சரியப்பட்டிருக்கிறேன். இப்போது சுவரொட்டிகளில் 'ராசாத்தியார்' லெவலுக்கு வந்துவிட்டதால், அது ஒன்றும் பெரிய பிரச்சினையாக தெரியவில்லை.

பா.ம.க. அரசியல் கட்சியாக உருவெடுத்து விஸ்வரூபமாக வடமாவட்டங்களில் வளர்ந்து வந்த காலக்கட்டம் அது. 'அந்த' சாதிக்காரர்கள் ஒன்று சேருகிறார்கள் என்றதுமே, அப்பகுதியில் பெரும்பான்மையானவர்களாக வசித்து வந்த தலித் மக்கள், தங்களுக்கும் ஒரு அமைப்பினை எதிர்நோக்கி இருந்தார்கள். தங்களுக்குள் ஒரு தலைவன் தோன்ற மாட்டானா என்று ஏங்கிப் போய் கிடந்தார்கள். அம்மக்களது விருப்பத்தைப் புரிந்துகொண்டு திடீரென்ற களத்தில் குதித்தவர் பூவை மூர்த்தியார். புரட்சியாளர் அம்பேத்கர் பாணியில் இவரும் வக்கீல். எப்போதும் கோட்டு, சூட்டு போட்டு ஜம்மென்றிருப்பார். அரசியலுக்கு வாகான, களையான கருப்பு முகம்.

94 அல்லது 95 என்று நினைவு. புரட்சியாளர் பூவை மூர்த்தியார் தனது 'புரட்சி பாரதம்' கட்சியினை பெரும் கூட்டம் கூட்டி, அரக்கோணத்தில் துவக்கினார். துவக்கி வைத்தவர் புண்ணியவதி புரட்சித்தலைவி என்று சொன்னால் நீங்கள் இப்போது நம்பித்தான் ஆகவேண்டும். பா.ம.க.வுக்கு 'செக்' வைக்க அம்மாவுக்கு கிடைத்த ஆயுதம் புரட்சி பாரதம். பொதுவாகவே இன்றுவரை தலித் மக்களின் விருப்பத்துக்குரிய கட்சியாக அதிமுகதான் இருக்கிறது. எனவே புரட்சி பாரதத்தை, புரட்சித்தலைவி ஆதரவோடு மூர்த்தியார் தொடங்கியது பொருத்தமானதுதான். திமுக, அதிமுக கட்சிகளே இங்கில்லையோ என்று நினைக்குமளவுக்கு அரக்கோணம் சுற்று வட்டார கிராமங்களில் புரட்சி பாரதத்தின் நீலக்கொடி பறந்தது.

96 தேர்தலில் புரட்சி பாரதம் ஆதரித்த அதிமுக படுதோல்வி அடைந்தது. ஏனெனில் அப்பகுதியில் பா.ம.க.வுக்கு இணையான செல்வாக்கு பெற்றிருந்த ஜெகத்ரட்சகன் திமுக அணியில் நின்றார். மாநில அளவில் வீசிய அதிமுக எதிர்ப்பலையும் முக்கியமான காரணம். இந்த தோல்விக்குப் பிறகு புரட்சி பாரதத்தின் 'மவுசு' கொஞ்சம் ஸ்ருதி குறைந்தே காணப்பட்டது. இடையில் 98-99 பாராளுமன்றத் தேர்தல்களில் பா.ம.க.வின் செல்வாக்கும் அசுரபலம் பெற்றது. ஜெகத்ரட்சகனும் திமுகவில் இணைந்து பணியாற்ற ஆரம்பித்தார்.

இதற்கிடையே பூவை மூர்த்தியாரின் தொழில்கள் குறித்து வெவ்வேறு விதமான பேச்சுகளும் கெட்டவிதமாக நிலவ ஆரம்பித்தன. குறிப்பாக சென்னையின் ஒரு பிரபலமான 'சாதி' பிரமுகரோடு இணைந்து, பெட்ரோல் கலப்படத் தொழிலில் அவர் கொடிகட்டிப் பறந்ததாக செய்திகள். 'கட்டைப் பஞ்சாயத்து' இன்னொரு முக்கியத் தொழில். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி புள்ளிகளே பூவையாருக்கு அஞ்சும் காலமும் இருந்தது.

இதெல்லாம் மூர்த்தியாரின் திடீர் மரணம் வரை நீடித்தது. ஒரு நாள் காலை செய்தித்தாளை திறந்துப் பார்த்தபோது, மூர்த்தியார் மாரடைப்பில் காலமாகி விட்டதாக அறிந்துகொள்ள முடிந்தது. புரட்சி பாரதத்தின் அடுத்தத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் அவரது தம்பி ஜெகன். தனது பெயரை ஜெகன் மூர்த்தியார் என்று மாற்றிக்கொண்டு, அண்ணன் பாணியில் அரசியல் நடத்த தொடங்கினார். ஒரே ஒரு வித்தியாசம், அண்ணன் அதிமுக ஆதரவாளர். தம்பி, திமுக ஆதரவாளர்.

கடந்த 2006 தேர்தலில், அரக்கோணம் தொகுதி, திமுக கூட்டணியில் புரட்சி பாரதத்துக்கு ஒதுக்கப்பட்டது. உதயசூரியன் சின்னத்தில் நின்று ஜெகன் மூர்த்தியார், சட்டமன்ற உறுப்பினர் ஆனார். கலைஞர் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய அடையார் டெலிபோன் எக்சேஞ்ச் கூட்டத்தில், புரட்சி பாரதம் கட்சியைச் சேர்ந்த அப்பகுதி புள்ளி (வயது 21 அல்லது 22 இருக்கும்) கொச்சையான முறையில் ஜெ.வைத் திட்டியதை (அது பேயி, பிசாசு, யாருக்கும் அடங்காது. ஓட்டு போட்டீங்கன்னா செத்தீங்க) கலைஞர் மேடையில் பலமாக சிரித்தவாறே பார்த்துக் கொண்டிருந்தது நினைவுக்கு வருகிறது.

ஐந்து ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றக் கூடிய வாய்ப்பு கிடைத்தும், அதை சரியாக ஜெகன் மூர்த்தியார் பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டார் என்றே சொல்லவேண்டும். இடையில் இப்பகுதியில் பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றிய பா.ம.க.வின் வேலு, தன் பெயரை வலுவாக தொகுதியில் நிலைநாட்டி இருக்கிறார். குறிப்பிடத்தகுந்த பணிகளை செய்திருக்கிறார். உண்மையை சொல்ல வேண்டுமானால் இன்று புரட்சி பாரதம், ஒரு காலி பெருங்காய டப்பா.

இந்த தேர்தலிலும் தனக்கு திமுக கூட்டணியில் சீட்டு கிடைக்குமென்று ஜெகன் நம்பிக் கொண்டிருந்தார். அத்தொகுதியை பா.ம.க.வுக்கு கொடுக்கும் எண்ணம் திமுகவுக்கு இருப்பதாக தெரிகிறது. அல்லது ஜெகனை நிறுத்தினால் வெல்ல வாய்ப்பில்லை என்றும் திமுக தலைமை உணர்ந்திருக்கலாம். திமுக தொகுதி பங்கீட்டுக் குழுவிடம் பேசிவிட்டு வெளியே வந்த ஜெகன் இறுக்கமாகவே இருந்திருக்கிறார்.

இப்போது தெளிவாக அறிவித்து விட்டார். "புரட்சி பாரதம், சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும்"

எனக்குத் தெரிந்து, இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் கட்சிகள் இரண்டுதான். ஒன்று பா.ஜ.க. மற்றொன்று புரட்சி பாரதம். டெபாசிட் தேறுவதே கடினம் என்று தெரிந்தும், சுயமரியாதையோடு தனித்து நின்று அக்னிப்பரிட்சை மேற்கொள்ளவிருக்கும் இக்கட்சிகளை ஒரு வகையில் பாராட்டலாம். மற்றொரு வகையில் பரிதாபப் படலாம்.

10 மார்ச், 2011

விளையாட்டு விஷயமா இது?

கிரிக்கெட் இந்தியாவின் மதம். வீரர்கள் இந்தியர்களின் கடவுளர்கள். அதெல்லாம் சரி. கடவுளின் சொந்த தேசத்தை அழித்து கிரிக்கெட் விளையாட வேண்டுமா என்று சர்ச்சை எழுந்திருக்கிறது கேரளாவில்.

கேரளாவைப் பொறுத்தவரை, அங்கிருப்பவர்களுக்கு கிரிக்கெட் ஆர்வம் பெரியதாக கிடையாது. கால்பந்து, தடகளம் என்று கலக்குபவர்கள். எனவேதான் இந்திய கிரிக்கெட் அணியிலும் கூட கேரள வீரர்கள் எப்போதாவது அரிதாக இடம்பெறுவார்கள். கொச்சியில் ஒரு மைதானம் உண்டு. ஜவஹர்லால் சர்வதேச மைதானம். அது கால்பந்து விளையாட கட்டப்பட்ட மைதானம். அவ்வப்போது கிரிக்கெட் போட்டிகளும் இங்கே நடத்தப்படுகிறது. இது கொச்சி பெருநகர வளர்ச்சி மையத்தோடு இணைந்து கேரள அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டது.

கேரளாவில் கிரிக்கெட் அசோசியேஷன் உண்டு. ஆனால் இந்தியாவிலேயே சொந்தமாக கிரிக்கெட் மைதானம் இல்லாமல் இயங்கும் ஒரே அசோசியேஷன் அதுதான்.

இதெல்லாம் சமீபக்காலம் வரைதான். ஆடிக்காற்றில் அம்மியே பறக்குமாம். ஐ.பி.எல் மோகத்தில் கேரளாவும் வீழ்ந்து விட்டது. சமீபத்தில் ஐ.பி.எல். போட்டிகளுக்கு கூடுதல் அணிகள் சேர்க்கப்பட்டபோது, புதியதாக சேர்ந்த அணி கொச்சி அணி. சொந்த அணி, சொந்த ஊரில் விளையாடினால்தான் ஐ.பி.எல்.லில் கூடுதலாக கல்லா கட்ட முடியும். இந்தச் சூழலில் கேரள கிரிக்கெட் அசோசியேஷன் சுறுசுறுப்பானது. சர்வதேசப் போட்டிகளை நடத்தக்கூடிய நவீன சொந்த மைதானம் என்கிற தன் கனவினை நனவாக்க முன்வந்தது.

மைதானம் அமைக்க தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் எடகொச்சி. தெற்கு கொச்சியின் ஓரத்தில் அமைந்த பழமையான ஊர். தேசிய நெடுஞ்சாலை 47 நரம்பாய் ஊடுருவிச் செல்லும் இடம். அரபிக்கடல் உள்வாங்கி நிலத்துக்குள் நுழையும் (Backwater) இயற்கை எழில் கொஞ்சும் பகுதி. அரிதான மாங்குரோவ் காடுகள் நிறைந்த பூமி. தெற்கு ரயில்வே நிலையத்துக்கும், வடக்கு ரயில்வே நிலையத்துக்கும் இடைப்பட்ட கல்லூர் ஜங்ஷனில் கே.சி.ஏ. கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட திட்டமிடப்பட்டது. 50,000 பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கும் வசதி. பகல் இரவு போட்டிகளும் நடத்தும் வண்ணம் மின்விளக்கொளி என்று ஆடம்பரம் தூள் பறந்தது. 2012ஆம் ஆண்டு இந்த மைதானம் தயாராகிவிடும் என கேரள கிரிக்கெட் அசோசியேஷனின் செயலாளர் டி.சி.மேத்யூ அறிவித்திருந்தார். உலகளவில் புகழ்பெற்ற கிரிக்கெட் மைதானங்களான அடிலைட், ஜோகனஸ்பர்க், மொகாலி, ஹைதராபாத் ஆகியவற்றின் வடிவமைப்பினை இம்மைதானத்தில் கொண்டுவர அவர் ஆர்வமாக இருந்தார்.

கேரளாவின் எதிர்க்கட்சிகள் கூட இந்த திட்டத்தை ஆதரிக்கும் நிலையில், எதிர்பாராத இடத்தில் இருந்து இந்த மைதானம் இங்கே அமைக்கப்பட எதிர்ப்பு கிளம்பியது. சுற்றுச்சூழ ஆர்வலர்கள், கேரளாவின் இயற்கை அழகை சிதைத்து விளையாட்டு கேளிக்கைக்கு முன்னுரிமை கொடுப்பதாக போர்க்கொடி எழுப்பினார்கள். வேம்பநாடு ஏரியின் ஒரு பகுதியும் கூட மைதானத்துக்குள் அடகு வைக்கப்பட்டு விடுமாம்.

பூமி, நீதி மற்றும் ஜனநாயக மக்கள் அமைப்பின் (People's movement for Earth, Justice and Democracy) தலைவர் சி.ஆர். நீலகண்டன், "இந்த மைதானம் குறைந்தபட்சம் ஐந்து சுற்றுச்சூழல் விதிகளுக்கு எதிரானது. கடலோர ஒழுங்குமுறை வழிகாட்டுதல்கள், கேரள நெல்வயல் மற்றும் சதுப்புநில பாதுகாப்பு சட்டம், பல்லுயிர் பெருக்கச் சட்டம், நிலச்சீர்த்திருத்தச் சட்டம் மற்றும் வனச்சட்டங்களை மீறி அமைக்கப்படுகிறது. எனவே இத்திட்டத்தை கைவிட வேண்டும்" என்று கோரினார்.

கொச்சியில் ஏற்கனவே ஜவஹர்லால்நேரு மைதானம் இருக்கையில், நகருக்கு வெளியே புதிய மைதானம் தேவையற்றது என்பதும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் ஆதங்கம். பூமி வெப்பமடைதல், மீன்வளம் குறைதல், உணவுப்பொருள் உற்பத்திக்குறைவு என்று ஏற்கனவே பல பிரச்சினைகளை சந்தித்து வரும் சூழலில், மாங்குரோவ் இயற்கைக் காடுகளை, விளையாட்டுக்காக அழிப்பது இயற்கைக்கு விரோதமானது என்பதும் அவர்களது அச்சம்.

சுமார் 350 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் இந்த மைதானம், எடகொச்சியின் சுற்றுலா மற்றும் அதைச்சார்ந்த வளர்ச்சிகளுக்கு உதவும் என்பது மைதானத்தை வரவேற்போரின் வாதம். "இந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்களே இப்படித்தான், மரத்தை வெட்டக்கூடாது, செடியை பிடுங்கக்கூடாது என்று வளர்ச்சித் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுகிறார்கள்" என்பது அவர்கள் சலிப்பு.

மைதானத்துக்கு தேவைப்படும் 24 ஏக்கர் நிலம் மட்டுமல்லாமல், ஏராளமான ஹெக்டேர் விளைநிலங்களும், இயற்கைச் செல்வங்களும் சாலை, கட்டிடங்கள், மேம்பாலங்கள், வாகனம் நிறுத்தும் பகுதி ஆகியவற்றுக்காக அழிக்கப்படும் என்பது சுற்றுச்சூழலாளர்களின் வாதம்.

இந்நிலையில் சுற்றுச்சூழல் அமைச்சகம், கேரள கிரிக்கெட் அசோசியேஷனுக்கு இது தொடர்பாக ஒரு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. கடந்தாண்டு செப்டம்பர் 3 வாக்கில், மாங்குரோவ் காடுகள் அடங்கிய பேக்வாட்டர் பகுதிகள் இங்கே இருந்ததாகவும், அவை செப்டம்பர் 22 வாக்கில் மைதானம் அமைக்கப்பட அழிக்கப்பட்டதாகவும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் பெங்களூர் மண்டல அலுவலகம் குற்றம் சாட்டியது. இது குறித்த விரிவான விசாரணையை கேரள வனத்துறையும் மேற்கொண்டது. கேரள கிரிக்கெட் அசோசியேஷனோ, இங்கே மாங்குரோவ் காடுகள் எதுவுமில்லை, அவற்றை நாங்கள் அழிக்கவுமில்லை என்று வாதிட்டு வருகிறது. இதற்கு ஆதாரமாக 2005ஆம் ஆண்டு இப்பகுதியில் சேட்டிலைட் மூலமாக எடுக்கப்பட்ட கூகிள் மேப் படத்தை முன்வைக்கிறது.

"உதயம்பேரூர் என்கிற இடத்தில் மைதானம் அமைக்க முன்பு கேரள கிரிக்கெட் அசோசியேஷன் திட்டமிட்டது. கையகப்படுத்த வேண்டிய நிலத்துக்கு பத்து லட்ச ரூபாய் முன்பணமும் கொடுக்கப்பட்டது. இந்திய கிரிக்கெட் கண்ட்ரோல் போர்டும் அந்த இடத்தில் மைதானம் அமைக்க ஒப்புதலை தந்தது. ஆனால் அந்த இடத்தை விட்டு, விட்டு குறிப்பாக இந்த இடத்தில் ஏன் மைதானம் அமைக்க அவர்கள் அடம் பிடிக்கிறார்கள் என்பதுதான் மர்மமாக இருக்கிறது" என்கிறார் சி.ஆர்.நீலகண்டன்.

சமீபத்தில் திருவனந்தபுரத்தில் தென்னக வன அமைச்சர்கள் மாநாடு நடந்தது. இம்மாநாட்டுக்கு வந்த மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், "கேரளாவின் எல்லாக் கட்சிகளும் இந்த விஷயத்தில் ஒற்றுமையாக இருக்கிறது. காடுகளை அழித்து கிரிக்கெட் மைதானம் அமைக்கும் முன்பு நாமே நம்மை ஒரு கேள்வி கேட்டுக் கொள்ள வேண்டும். நமக்கு எது முக்கியம், மாங்குரோவ் காடுகளா அல்லது கிரிக்கெட்டா?" என்று பிரச்சினையை சூடாக்கினார்.

இதற்கிடையே மைதானப் பணிகளை துவக்குவதற்கு முன்பாக தேவையான சுற்றுச்சூழல் ஒப்புதல்களை கேரள கிரிக்கெட் அசோசியேஷன் பெற்றிருக்கவில்லை என்பது இப்போது தெரியவந்திருக்கிறது. இதனால், வனபாதுகாப்புச் சட்டம் (1986) செக்‌ஷன் 5 படி நடவடிக்கை எடுக்கப்படலாம். கேரள கடலோர நிர்வாக அமைப்பு (KSCZMA), பணிகளை நிறுத்தச் சொல்லி உத்தரவிடுமாறு மாவட்ட ஆட்சியாளரை கேட்டுக் கொண்டிருக்கிறது. சுற்றுச்சூழலுக்கு இங்கே ஏற்பட்ட சேதாரத்தை கணக்கிட்டு, அவற்றை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு செல்வது குறித்த ஒரு திட்டத்தை விரைவில் கேரள முதல்வருக்கு கொடுக்கவும் இந்த அமைப்பு பணியாற்றி வருகிறது.

கடைசியாக, கேரள உயர்நீதிமன்றமும் மைதானத்தின் பணிகளை முன்னெடுக்க தடை விதித்திருக்கிறது. கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் தடையில்லாச் சான்று பெற்றபின் தான் பணிகளை தொடங்கவேண்டும் என்று தனது தீர்ப்பில் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. 2012ல் சொந்தமாக ஒரு மைதானம் என்கிற கேரள கிரிக்கெட் அசோசியேஷனின் கனவு, கானல்நீராகதான் மாறும் போலிருக்கிறது.

மாங்குரோவ் காடுகள் இயற்கையே தென்னக மாநிலங்களுக்கு அளித்திருக்கும் பாதுகாப்பு கவசம். சுனாமி வந்தபோது கூட, மாங்குரோவ் காடுகள் சூழ்ந்த பகுதிகள் பெருத்தளவில் பாதிப்புக்கு உள்ளாகவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. விளையாட்டுக்காக கூட கவசத்தை உடைக்கலாமா என்பதுதான் நம் முன்பாக இப்போது முன்வைக்கப்பட்டிருக்கும் கேள்வி.

 

எக்ஸ்ட்ரா நியூஸ் :

அழிந்துவரும் மாங்குரோவ் காடுகள்!

மனித ஆக்கிரமிப்பின் காரணமாக சமீபகாலமாக மாங்குரோவ் காடுகளுக்கு கேரளாவில் மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. மங்கலவனம், பனங்காடு, கும்பாளம், நேட்டூர், பனம்புகாடு, முலுவுகாடு, கும்பாலங்கி, கண்ணமாலி, செல்லானம் போன்ற பகுதிகளில் இருந்து முற்றிலுமாக இக்காடுகள் காணாமல் போயிருக்கின்றன. குடியிருப்புகள், சாலைகள் அமைப்பது போன்ற காரணங்களுக்காக இவை அப்புறப்படுத்தப்படுகின்றன.

1991ஆம் ஆண்டில் கொச்சியில் மட்டுமே 260 ஹெக்டேர் அளவுக்கு மாங்குரோவ் காடுகள் இருந்ததாக வன தகவல் அமைப்பின் குறிப்பில் அறியமுடிகிறது. இப்போது இம்மாவட்டத்தில் அப்படியொரு தகவலே எடுக்கமுடியாத அளவுக்கு இக்காடுகள் அழிக்கப்பட்டிருக்கின்றன.

வெளிநாடுகளில் இருந்து இனப்பெருக்கத்துக்காக கொச்சிக்கு வரும் அரியவகைப் பறவைகளின் வருகை குறைந்திருக்கிறது. மீன் உள்ளிட்ட நீர்வாழ் உயிரினங்களின் வருகையும் அருகி வருகிறது என்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கவலையான பார்வை.

(நன்றி : புதிய தலைமுறை)

4 மார்ச், 2011

பள்ளிக் குழந்தைகளை பாதுகாக்க எஸ் க்யூப்!

நீங்களும், உங்கள் துணைவியாரும் காலையிலேயே உங்கள் குழந்தையை பள்ளி வாகனத்தில் ஏற்றிவிட்டு பணிக்குச் சென்று விடுகிறீர்கள். குழந்தை ஒழுங்காக பள்ளிக்குச் சென்று சேர்ந்ததா, பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்துவிட்டதா? என்கிற அச்சம் அடிக்கடி அடிவயிற்றிலிருந்து பந்தாக எழும்பி நெஞ்சுக்கு வரும் அல்லவா?

அண்மையில் கோவையில் இரண்டு குழந்தைகள் கடத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்குப் பிறகு பணிக்குச் செல்லும் பெற்றோருக்கு அடிக்கடி இந்த அச்சம் எழும்புவதுண்டு.

பெற்றோர்களுக்கு உதவும் வண்ணம் 'பள்ளிக் குழந்தைகளை பாதுகாப்பது எப்படி?' என்கிற அட்டைப்படக் கட்டுரையை, நவம்பர் 18, 2010 இதழில் புதிய தலைமுறை வெளியிட்டிருந்தது. அக்கட்டுரையில் நாம் சில தீர்வுகளையும், காவல்துறையின் யோசனைகளையும், அரசு சொல்லும் வழிமுறைகளையும் குறிப்பிட்டிருந்தோம்.

அந்தக் கட்டுரையை வாசித்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த இளைஞர் பிரசன்னபாபு, மென்பொருள் வாயிலாக ஒரு நல்ல தீர்வினைக் கண்டிருக்கிறார். இருபத்தாறு வயதான சுற்றுச்சூழல் ஆர்வலரான பிரசன்னபாபு, சென்னை சிறுசேரியில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றுகிறார்.

தனது மென்பொருள் கண்டுபிடிப்புக்கு எஸ் க்யூப் (Student Security System) என்று பெயரிட்டிருக்கிறார். இரவு, பகல் பாராத மூன்றுமாத உழைப்பிற்குப் பிறகு இது சாத்தியமாகியிருக்கிறது. பள்ளிக்குச் செல்லும் உங்கள் குழந்தையின் ஒவ்வொரு அசைவையும் குறுஞ்செய்திகளாக (SMS) பெற்றோரின் கைப்பேசிக்கு எஸ் க்யூப் அனுப்பி வைக்கும்.

எஸ் க்யூப் எப்படி பணியாற்றும்?

- பள்ளி வேனோ அல்லது பேருந்தோ குழந்தைகளை ஏற்றிச் செல்ல காலையில் பள்ளி வளாகத்தில் இருந்து கிளம்பும்போது பெற்றோருக்கு ஒரு குறுஞ்செய்தி வரும். இதில் சம்பந்தப்பட்ட வேன்/பஸ்ஸின் பதிவு எண், ஓட்டுனர் பெயர், உங்கள் வீட்டுக்கு அருகில் எத்தனை மணிக்கு வரும் போன்ற செய்திகள் அடங்கியிருக்கும்.

- பள்ளியில் முதல் பாட நேரத்தில் அட்டெண்டன்ஸ் எடுக்கப்பட்டவுடனேயே, உங்கள் குழந்தை வகுப்பறையை அடைந்துவிட்டது குறித்த குறுஞ்செய்தி ஒன்று வரும். ஒருவேளை குழந்தை விடுப்பு எடுத்திருந்தாலும், அதுவும் குறுஞ்செய்தியாக பெற்றோருக்கு கிடைக்கும்.

- காலையில் முதல் பாட வகுப்புக்கு வந்த குழந்தை, மதியம் உணவு நேரத்திற்குப் பிறகான பாட வகுப்புக்கு வந்திருக்காவிட்டால், பெற்றோர், ஆசிரியர், தலைமை ஆசிரியர் ஆகியோருக்கு உடனே குறுஞ்செய்தி சென்றுவிடும்.

- மாலையில் பள்ளி முடிந்து வேனிலோ, பஸ்ஸிலோ குழந்தை ஏறியவுடன் காலையில் வந்ததைப் போன்றே வாகனத்தின் பதிவு எண், ஓட்டுனர் பெயர், உங்கள் வீட்டுக்கு வாகனம் வந்தடையும் நேரம் ஆகியவை குறுஞ்செய்தியாக வந்து சேர்ந்துவிடும்.

- மாலைநேரத்தில் பள்ளியில் சிறப்பு வகுப்பு (Special Class) ஏதேனிலும் குழந்தை கலந்துகொண்டால், அதுகுறித்த அறிவிப்பும் கிடைத்துவிடும்.

- குழந்தையின் பள்ளி தொடர்பான அசைவு ஒவ்வொன்றும், உங்கள் கைப்பேசிக்கே வந்துவிடுவதால் நீங்கள் நிம்மதியாக உங்கள் பணியினை பார்க்க இயலும். இந்த நடைமுறையில் எங்காவது 'ஓட்டை' விழுந்திருந்தாலும், உடனடியாக தேவைப்படும் நடவடிக்கைகளை எடுக்க இயலும்.

இந்த ஏற்பாடு பள்ளியை கட் அடித்துவிட்டு சினிமாவுக்கு செல்லும் மாணவர்களுக்கு மட்டுமே பாதகமானது.

இந்த திட்டத்தை செயல்படுத்த என்னென்ன தேவை?

பள்ளியில் இணைய வசதியோடு கூடிய கணினிகள் இருப்பது அவசியம். ஒவ்வொரு வகுப்பறைக்கும் இல்லாவிட்டாலும், தலைமை ஆசிரியரின் அறையில் மட்டுமாவது இருந்தால் போதும். அட்டெண்டன்ஸ் விவரங்கள் கணினியில் ஒருவரால் மிகச்சுலபமான முறையில் ஏற்றப்பட வேண்டும். அதுபோலவே பள்ளி வளாகத்திலிருந்து கிளம்பும் வேன்/பஸ் விவரங்களையும் கணினிக்கு அளிக்க வேண்டும்.

ஆயிரம் மாணவ/மாணவியர் படிக்கும் பள்ளியில் இந்த மென்பொருளை நிறுவ தோராயமாக 50,000 ரூபாய் செலவாகும். அதன்பிறகு வருடாவருடம் 10,000 ரூபாய் செலவழித்தால் போதும். பராமரிப்பு, கண்காணிப்புச் செலவுகள் மிக மிகக்குறைவாகவே ஆகும். குழந்தைகளின் பாதுகாப்பு என்று எடுத்துக் கொள்ளும்போது, கல்வியில் புழங்கும் பண பரிவர்த்தனைகளை ஒப்பிடும்போது இந்தச் செலவு ஒரு சதவிகிதம் கூட இருக்காது.

எப்படி செயல்படுத்தலாம்?

தங்கள் மாணவர்களின் நலனில் அக்கறையுள்ள, ஆர்வமுள்ள பள்ளிகள் தாமாக முன்வந்துச் செய்யலாம்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளி நிர்வாகத்துக்கு, இந்த ஏற்பாட்டினை நிறுவித்தரச் சொல்லி கேட்கலாம்.
அரசே மாநிலம் தழுவிய அளவில் அரசுப்பள்ளிகளில் இந்த வசதியை ஏற்படுத்தலாம். தனியார் பள்ளிகளிலும் இம்முறையை கட்டாயமாக்கச் சொல்லி கேட்டுக் கொள்ளலாம்.

இந்த எஸ் க்யூப் தொழில்நுட்பத்தை எப்படி வேண்டுமானாலும், ஒவ்வொரு பள்ளிக்கும் பொருந்தும் வகையில் மாற்றி அமைத்துக் கொள்ள முடியும். உறைவிடப் பள்ளிகளுக்கும் ஏற்றதுபோலவும் செய்துத் தரலாம். உதாரணத்துக்கு உங்கள் குழந்தை ஊட்டியில் ஓர் உறைவிடப் பள்ளியில் படிப்பதாக வைத்துக் கொள்வோம். நீங்கள் லண்டனிலோ, நியூயார்க்கிலோ இருந்தாலும், உங்கள் குழந்தையின் பள்ளி நடவடிக்கைகள் குறுஞ்செய்திகளாக உங்களுக்கு வந்து சேரும்.

"ஒவ்வொரு சமூகப் பிரச்சினைக்குமே ஏதாவது ஒரு தீர்வினை யோசித்துப் பார்ப்பது எனது வழக்கம். புதிய தலைமுறையில் இந்தப் பிரச்சினையைப் பற்றி வாசித்ததுமே, நான் புழங்கும் துறைசார்ந்த அறிவின் மூலமாக என்ன செய்யமுடியும் என்று யோசித்தே, இதற்கான தீர்வு காணும் முயற்சியில் இறங்கினேன். மூன்று மாத கடின உழைப்புக்குப் பின், இப்போது இந்த மென்பொருள் உடனடியாக எந்தப் பள்ளியிலும் நிறுவக்கூடிய நிலையில் தயாராக இருக்கிறது" என்கிறார் பிரசன்னபாபு.

ஓய்வு பெற்றுவிட்ட தந்தை, படித்துக் கொண்டிருக்கும் தம்பி என்கிற குடும்பச்சூழலில் இவர் மட்டுமே இப்போது இவரது குடும்பத்தில் சம்பாதித்துக் கொண்டிருக்கும் உறுப்பினர். எனவே அவருடைய பணியைப் பாதிக்காத அளவில் பகலில் அலுவலகத்துக்குச் சென்று, இரவுகளிலும், ஓய்வுநேரங்களிலும் இத்திட்டம் குறித்த ஆராய்ச்சிகளிலும், முன்னெடுப்புகளிலும் தனது உழைப்பினைச் செலுத்தியிருக்கிறார்.

ஊடகத்தில் சுட்டப்பட்ட ஒரு செய்தியை வாசித்தோம், அறிந்தோம் என்று வெறுமனே வாசிப்பளவில் நின்றுவிடாமல் நமது வாசகர்கள், தீர்வுக்காகவும் நம்முடன் கைகோர்க்கிறார்கள். பிரசன்னபாபு போன்ற இளைஞர்கள்தான் புதிய தலைமுறையின் அடையாளம்.

பிரசன்னபாபுவை தொடர்புகொள்ள : prasanakpm84@gmail.com

(நன்றி : புதிய தலைமுறை)

28 பிப்ரவரி, 2011

இண்டர்நெட்டில் பிரபலங்கள்!

ஏ.ஆர்.ரகுமான், ஹாலிவுட் நடிகை ஷரன்ஸ்டோனுடன் டின்னர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.

சச்சின் டெண்டுல்கர் குடும்பத்தோடும், நண்பர்களுடனும் வார இறுதியை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்.

த்ரிஷா மைசூரில் படப்பிடிப்புக்கு போயிருக்கிறார்.

மு.க. ஸ்டாலினுக்கு சேலத்தில் ஒரு அரசு நிகழ்ச்சி.

சுஷ்மா ஸ்வரராஜ், நாகப்பட்டினத்துக்கு வருகிறார்.

பிரபலங்களைப் பற்றிய சின்னச் சின்ன செய்திகளைக் கூட தெரிந்து வைத்துக் கொள்வதில் சாமானியர்களுக்குதான் எவ்வளவு ஆவல்? முன்பெல்லாம் இந்தச் செய்திகளை தெரிந்துகொள்ள ஊடகங்களைதான் சார்ந்திருக்க வேண்டும். தகவல் தொழில்நுட்பப் புரட்சி பிரபலங்களுக்கும், சாமானியர்களுக்கும் இடையிலான இடைவெளியை அடித்து நொறுக்கிக் கொண்டிருக்கிறது. ட்விட்டர், ஃபேஸ்புக், ஆர்குட், வலைப்பூக்கள் (Blogs) என இணையம் எல்லோருக்குமான வலையை விரித்து வைத்திருக்கிறது.

முன்பெல்லாம் ஒரு நடிகரோ, அரசியல் பிரபலமோ ஏதேனும் பத்திரிகைப் பேட்டியில் சொல்லியிருந்த கருத்து ஒருவருக்குப் பிடித்திருந்தால் அல்லது மாற்றுக் கருத்து இருந்தால் பத்திரிகைக்கு 'வாசகர் கடிதம்' எழுதி தெரிவிக்க முடியும். இல்லையேல் அந்தப் பிரபலத்தின் முகவரியை எப்பாடுபட்டாவது கண்டுபிடித்து கடிதம் எழுதுவார்கள். அந்தக் காலமெல்லாம் இப்போது மலையேறிப் போயாச்சி! நாகார்ஜூனா நடிக்கும் புதுப்படத்தின் பெயர் உங்களுக்குப் பிடிக்கவில்லையா? ட்விட்டரில் நுழைந்து 'பெயரை மாற்றித் தொலையுங்களேன்' என்று நேரடியாக சொல்லிவிடலாம்.

ஹாலிவுட், அமெரிக்கா, ஐரோப்பாவென்று பார்க்கப் போனால் பிரபலமாக இருக்கும் ஒருவர் நிச்சயமாக ஃபேஸ்புக்கிலோ, ட்விட்டரிலோ, மைஸ்பேஸ் தளத்திலோ, ஆர்குட்டிலோ கட்டாயம் இருப்பார். அல்லது வலைப்பூவாவது எழுதுவார். அமெரிக்க அதிபர் ஒபாமா, ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் ஆகியோரையெல்லாம் அடிக்கடி ட்விட்டரில் காணலாம்.

இப்போது இந்திய பிரபலங்களும் இணையத்தை பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள். சினிமா நட்சத்திரங்கள், தங்கள் ரசிகர்களோடு நேரிடையாக உரையாடுகிறார்கள். எழுத்தாளர்கள் தங்கள் வாசகர்களோடு பேசுகிறார்கள். அரசியல்வாதிகள் மக்களோடு பழகுகிறார்கள். முன்பெல்லாம் இந்த இரு தரப்புக்கும் இடையே ஓர் 'ஊடகம்' தேவையாக இருந்தது.

இந்திய அளவில் அமிதாப் பச்சன், அமீர்கான், சல்மான்கான், லாலுபிரசாத் யாதவ், சசிதரூர், சச்சின் டெண்டுல்கர், ஏ.ஆர்.ரஹ்மான், விஜய் மல்லையா என்று ஏராளமான பிரபலங்கள் இணைய வலைப்பின்னல்களில் தங்களை இணைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்திய சினிமாவின் உச்சநட்சத்திரங்களான் 'கான்'கள் இங்கே கருத்தால் அடித்துக் கொள்வதும் கூடுதல் சுவாரஸ்யம்.

தமிழக அளவில் பார்க்கப் போனால் பிரபலமான சினிமா நட்சத்திரங்கள்தான் அதிகளவில் இணையத்தில் புழங்குகிறார்கள். நரேன் கார்த்திகேயன், முரளிவிஜய் போன்ற விளையாட்டு வீரர்கள் சிலரும் உண்டு. துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.வி.சேகர், ரவிக்குமார் போன்ற சிலரைத் தவிர்த்துப் பார்த்தோமானால், அரசியல் பிரபலங்களுக்கு இன்னமும் இக்கலாச்சாரம் பெரியளவில் சென்று சேரவில்லை. மாறாக தமிழ் எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் போன்று எழுத்து சார்ந்து இயங்குபவர்கள் பெரும்பாலானோர் ட்விட்டர், ஃபேஸ்புக், வலைப்பூவென்று எங்காவது ஓரிடத்தை கெட்டியாகப் பிடித்து வைத்திருக்கிறார்கள்.

தயாநிதி அழகிரி, வெங்கட்பிரபு, மாதவன், சிம்பு, ஜீவா, வெற்றிமாறன், தனுஷ், பிரகாஷ்ராஜ், யுவன்ஷங்கர்ராஜா, ஸ்ருதிஹாசன், சுசித்ரா, ஸ்ரேயா, நமிதா, பி.சி.ஸ்ரீராம், சுப்பிரமணியன்சாமி, விஸ்வநாதன் ஆனந்த், இந்திரா பார்த்தசாரதி, மனுஷ்யபுத்திரன், பா.ராகவன், சாருநிவேதிதா, ஜெயமோகன், ஞாநி, நாஞ்சில்நாடன், ஹிந்து ராம், புதிய தலைமுறை மாலன், குமுதம் ப்ரியா கல்யாணராமன், ஆனந்தவிகடன் ரா.கண்ணன் என்று பலதளங்களில் முக்கியமான ஆட்கள் பலரையும் நீங்கள் ஏதோ ஒரு சமூக வலைப்பின்னல் தளத்தில் நண்பராக்கிக் கொண்டு உரையாட முடியும்.

பிரபலங்கள் ஏன் இந்த விஷயத்தில் ஆர்வம் காட்டுகிறார்கள்?

ட்விட்டர், ஃபேஸ்புக் மாதிரியான இணையத்தில் புழங்குவது மிக எளிதானது. சாமானியர்களோடு தொடர்பில் இருக்க முடிகிறது. தங்கள் தொடர்பான சம்பவங்கள், சந்தித்த மனிதர்கள், தனிப்பட்ட கருத்துகளை எல்லோரிடமும் 'பிரபலப் பூச்சு' இல்லாமல் பகிர்ந்துகொள்ள முடிகிறது. மனதில் தோன்றியதை எழுதியவுடனேயே பலருக்கும் போய்ச் சேருகிறது. தினமும் என்ன செய்துக் கொண்டிருக்கிறார்கள் என்கிற விவரத்தை, தங்களை அபிமானமாக கருதுபவர்களுக்கு சொல்லிக்கொண்டே இருக்க முடிகிறது.  மற்றவர்களின் கருத்தையும் உடனுக்குடன் அறிய முடிகிறது. மொபைல் போன் மூலமாகவே ட்விட்டர் போன்ற இணையத் தளங்களில் இயங்கலாம். புகைப்படங்களையும் பகிர்ந்துகொள்ளலாம்.

"சமத்துவமான சமூகம் உருவாக இளைஞர்கள் தோள் கொடுக்கவேண்டும். உங்களோடு நானும் சேர்ந்து தோள் கொடுப்பேன்" என்று தமிழகத்தின் துணைமுதல்வரான மு.க.ஸ்டாலின் தன்னுடைய வலைப்பூவில் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். 2008ஆம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக இந்த வலைப்பூ மூலமாக தனது கட்சிக்காரர்களுடனும், மக்களோடும் மு.க.ஸ்டாலின் உரையாடல் நிகழ்த்தி வருகிறார். (http://mkstalin.net/blog)

மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினரான எஸ்.வி.சேகர் தன்னுடைய வலைப்பூவில் இவ்வாறாக எழுதியிருக்கிறார். "பொதுமக்களுக்கும், சட்டமன்ற உறுப்பினருக்குமான வெளிப்படையான விவாதங்களை ஊக்குவிக்கவும், அவற்றை ஆவணப்படுத்தவும் இந்த வலைப்பூ உருவாக்கப்பட்டிருக்கிறது. தங்களது சட்டமன்ற உறுப்பினரோடு சேர்ந்து, தொகுதிமக்களும் தங்களது குரலை உயர்த்திச் சொல்லவும் இது பயன்படும்". (http://mylaporemla.blogspot.com)

இணையத்தில் இயங்கும் தமிழர்கள் பலருக்கும் தங்களது பிராந்தியப் பிரச்சினையை வட இந்திய ஊடகங்களும், பிரபலங்களும் கண்டுகொள்வதில்லை என்று ஒரு குறை உண்டு. சமீபத்தில் நாகப்பட்டினத்தில் நடந்த மீனவர் படுகொலையின் போது 'ட்விட்டர்' தளத்தின் மூலமாக தொடர்ச்சியான பிரச்சாரத்தை மேற்கொண்டு, பாரதிய ஜனதா கட்சியின் பாராளுமன்றத் தலைவர் சுஷ்மாஸ்வரராஜையே அசைத்துவிட்டார்கள். ட்விட்டரில் இந்திய அளவில் ஐந்து நாட்களுக்கு மீனவர் பிரச்சினையை ( #tnfisherman என்கிற அடையாளத்தில்) இவர்கள் முதலிடத்தில் வைத்திருந்தார்கள். இதற்குப் பிறகே வட இந்திய ஊடகப் புள்ளிகள் இதைக் கவனித்து தமிழக மீனவர் பிரச்சினை குறித்த செய்திகளை முக்கியத்துவம் கொடுத்து ஒளிபரப்பினார்கள்.

பெங்களூரைச் சேர்ந்த இளம் எழுத்தாளரான சரவணகார்த்திகேயன், தனது முதல் நூலுக்கான பதிப்பாளரையே, இதுபோன்ற சமூகத்தளம் ஒன்றில்தான் கண்டறிந்ததாக சொல்கிறார். 'சந்திராயன்' என்கிற அந்த நூல், கடந்தாண்டு சிறந்த அறிவியல் நூலுக்கான தமிழக அரசின் பரிசினை வென்றது.

இதெல்லாம் லாபங்கள். சில பாதகங்களும் நிச்சயமாக உண்டு. உதாரணத்துக்கு முன்னாள் வெளியுறத்துறை இணையமைச்சர் சசிதரூரை சொல்லலாம். யதார்த்தமாக தனது மனதுக்குப் பட்டதை 'ட்விட்டர்' இணையத்தளத்தில் இவர் சொல்லிவிட, ஒரு அமைச்சரே எப்படி இப்படிப் பேசலாம் என்று சர்ச்சை கச்சைக் கட்டிக் கொண்டது. அவரது சொந்தக் கட்சியினரே அவரை விமர்சிக்க ஆரம்பித்தனர். வேறு வழியின்றி, தான் சொன்னது 'ஜோக்' என்று கட்சித்தலைமையிடமும், ஆட்சித்தலைமையிடமும் சொல்லித் தப்பித்தார். அமெரிக்க அதிபர் ஒபாமா ட்விட்டரில் கருத்தெழுவதை கண்டு, இவரும் ட்விட்டருக்கு வந்தாராம்.

இதேபோல பின்னணிப் பாடகி சின்மயி சொன்ன ஒரு கருத்தும் கூட, ட்விட்டரில் சில நாட்களுக்குப் புயலை கிளப்பியது. பலரும் அவரோடு மல்லுக்கட்டினர்.

பிரபலங்கள் சொல்லும் சாதாரண கருத்துகளைக் கூட சீரியஸாக மற்றவர்கள் எடுத்துக் கொள்கிறார்கள். தங்களுக்கு உவப்பில்லாத் கருத்து சொன்னவர் ஒரு பிரபலமென்று தெரிந்தால், இரட்டை மடங்கு உக்கிரத்தோடு சண்டைக்கோழிகளாய் மாறிப் போகிறார்கள். இதனாலேயே பிரபலங்கள், தாங்கள் சொல்லவரும் ஒவ்வொரு வார்த்தையையும் ஒன்றுக்கு நான்கு முறை நன்றாக சோதித்துவிட்டே பயன்படுத்த வேண்டியதாகிறது.

எது எப்படியிருந்தாலும் பிரபலங்களுக்கு தங்களது 'பிரபலம்' எனும் முகமூடி ஒரு கூடுதல் சுமை. ரஜினிகாந்த் ஒவ்வொரு படத்தையும் முடித்துவிட்டு, இமயமலைக்குச் சென்று சாதாரணர்களில் ஒருவராக மாறி இயல்படைவதை இதற்கு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். பிரபல கழற்றிவைத்துவிட்டு சாதாரணமாக உரையாட ஒரு வெளி இவர்களுக்கு தேவை. இணையம் அத்தகைய இடமாக இருக்கிறது.

எக்ஸ்ட்ரா மேட்டர் : இணைய தளங்களில் சில பிரபலங்கள் சம்பந்தமில்லாமல் உளறுவார்கள். என்ன ஏதுவென்று கொஞ்சம் ஆராய்ந்துப் பார்த்தால்தான் தெரியும். பிரபலங்கள் பெயரில் யாராவது 'குறும்பர்கள்' விளையாடியிருப்பார்கள். மன்மோகன்சிங், சோனியாகாந்தி பெயர்களில் கூட யாராவது கும்மி அடிப்பது உண்டு. குறிப்பாக இளம் நடிகைகள் பெயரில் கணக்கு துவக்கி விளையாடுவது அதிகமாக நடக்கும்.

அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா பெயரில் ஒரு குறும்பர் யாரோ 'ட்விட்டர்' தளத்தில் கொஞ்சம் ஓவராகவே விளையாடி விட்டார். கட்சிக்காரர்கள் 'அம்மா'வின் காதுக்கு விஷயத்தைக் கொண்டு சென்றவுடன், அவர் டென்ஷன் ஆகி ஒரு அறிக்கை கூட விட்டிருக்கிறார். ட்விட்டர் தளத்தில் தான் எழுதுவதில்லை என்றும், தன் பெயரை யாராவது தவறாகப் பயன்படுத்தினால் சைபர்-க்ரைம் மூலமாக நடவடிக்கை எடுப்பேன் என்றும் ஜெயலலிதா அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

பிரபலங்களாக இருந்தாலே தொல்லைதான். எனவே பிரபலங்களே! உங்கள் பெயரில் யாராவது போலிக்கணக்கு துவக்குவதற்கு முன்பாக, நீங்களே நேரடியாக இணைய குளத்தில் குதித்து விடுவதுதான் உத்தமம்!

(நன்றி : புதிய தலைமுறை)