"வணக்கம் அம்மா. கோயில் நன்கொடை விஷயமா பார்க்க வந்தோம்!" பெரியவர்களில் ஒருவர் மெதுவாக ஆரம்பித்தார்.
அவசரமாக அவர் இடைமறித்து, "கோயில்களுக்கு நன்கொடை தராமல் இருப்பதை கொள்கையாகவே வெச்சுருக்கேன். உங்க ஊர் பள்ளிக்கு எது வேணும்னாலும் கேளுங்க. அரசாங்கத்திடம் இருந்து எவ்வளவு கிடைக்குமோ வாங்கித் தருகிறேன். பத்தலைன்னா என் சொந்தக் காசையும் கூட செலவளிக்கிறேன்" என்று நாகரிகமாக மறுக்கிறார்.
அவர், அவினாசி ஒன்றியத்தலைவி சாந்திபாபு. கோவை மண்டலத்தில் அரசியலில் ஈடுபட்டிருக்கும் பெண்களில் முக்கியமானவர். வயது 32. உள்ளாட்சி மன்றங்களில் மைக்கும், நாற்காலிகளும் பறக்க, சூடாக சபைக்கூட்டங்கள் நடக்கும் காலமிது. சாந்திபாபு தலைமை வகிக்கும் ஒன்றியக்குழு கூட்டங்களில் இதுவரை ஒரு சலசலப்பு கூட எழுந்ததில்லை. "அவ்வளவு பாந்தமா அம்மா கூட்டத்தை நடத்துவாங்க" என்று சிலிர்க்கிறார் ஊராட்சி ஒன்றியக்குழு அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர்.
சாந்தியின் சொந்த ஊர் அவிநாசி அருகில் நம்பியாம்பாளையம். நடுத்தரக் குடும்பம். படிப்பில் கில்லி. +2வில் பள்ளியில் முதலிடம். பின்னர் கம்ப்யூட்டர் அறிவியலில் பி.ஈ. பட்டம் பெற்றார். தூரத்து உறவினரான பாபுவை காதலித்து வந்தார் சாந்தி. பி.ஈ. படித்த பெண்ணை, +2 படித்த பாபுவுக்கு கொடுக்க பெற்றோருக்கு விருப்பமில்லை. நீண்டகாலப் போராட்டத்துக்குப் பிறகு இருவீட்டார் சம்மதத்தோடு காதல் வென்றது. 'உங்கள் மகள் பி.ஈ. தானே.. என்னுடைய மனைவி எம்.ஈ-யாக இருக்கவேண்டும்' என்று வைராக்கியத்தோடு, மனைவியை மேற்படிப்பு படிக்கவைத்தார் பாபு. தனியார் பொறியியற் கல்லூரி ஒன்றில் அப்போது விரிவுரையாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார் சாந்தி பாபு.
எம்.ஈ (சாஃப்ட்வேர் என்ஜீனியரிங்) இறுதியாண்டு படிக்கும்போது சர்வதேச அளவில் நடந்த கருத்தரங்கில் ஆய்வுக்கட்டுரை ஒன்றினை சமர்ப்பிக்கும் வாய்ப்பும் இவருக்கு கிடைத்தது. இவரது ஆய்வுக்கட்டுரையை கண்ட அமெரிக்க நிறுவனம் ஒன்று, மூன்று லட்ச ரூபாய் சம்பளத்துக்கு தங்கள் நிறுவனத்துக்கு பணிபுரியவருமாறு இவரை அழைத்தது. "அமெரிக்கா வேண்டாம். என்னுடைய அவினாசியே போதும்" என்று வாசல்தேடி வந்த வாய்ப்பை கம்பீரமாக மறுத்தார் சாந்திபாபு.
அமெரிக்க வாய்ப்பை மறுத்தவருக்கு அவினாசி வாய்ப்பு கேட்காமலேயே கிடைத்தது. சொந்த ஊரான நம்பியாண்டம்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினருக்கான தேர்தலில் நின்று வென்றார். இது அவினாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது. பின்னர் அவினாசி ஊராட்சி ஒன்றியத் தலைவியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இருநூற்று இருபத்தியாறு குக்கிராமங்கள் அடங்கிய முப்பத்தியோரு ஊராட்சி மன்றங்களை இப்போது நிர்வகித்து வருகிறார் சாந்திபாபு. இப்பதவிக்கு வரும்போது இவரது வயது இருபத்தி எட்டு. இந்தியாவிலேயே இவ்வளவு இளம்வயதில் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவியாக பதவியேற்றது இவர் மட்டும்தான்.
ஊராட்சி ஒன்றியப் பள்ளிகள், சத்துணவுக்கூடம், அங்கன்வாடி மையம், ஆரம்ப சுகாதார நிலையம், ஊராட்சி அலுவலகம், கூட்டுறவு அங்காடி, நியாயவிலைக்கடை என்று எங்காவது திடீரென அதிரடி விசிட் அடித்து சோதனை செய்வது இவரது வழக்கம். கையும் களவுமாக சிலர் மாட்டியதும் உண்டு. 'இல்லாதவருக்கு இலவச கைப்பேசி' என்றொரு திட்டத்தினை மத்திய அரசு அமலாக்கி வருகிறது தெரியுமா? தமிழகத்திலேயே அவினாசி ஒன்றியத்தில்தான் முதன்முறையாக இது அமலுக்கு வந்திருக்கிறது. அவினாசி ஒன்றியக்குழு கட்டிடம் சுமார் ஒன்றரைக் கோடி செலவில் கட்டப்பட்டு வருவதும் இவரது சாதனைகளில் குறிப்பிடத்தக்க ஒன்று. தொழில் கடன், கல்விக் கடன் என்று தன்னை நாடி வரும் ஒன்றிய மக்களுக்கு சாந்திபாபு ஒரு கலங்கரை விளக்கம்.
சமூகக்கல்வி மற்றும் முன்னேற்ற மையம் சார்பாக உள்ளாட்சி பெண் பிரதிநிதிகளுக்கும், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கும் அவ்வப்போது விழிப்புணர்வு முகாம் நடத்தி வருகிறார்.
தன்னுடைய வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு ரத்ததானம் குறித்து அடிக்கடி அறிவுறுத்துகிறார். மாணவ மாணவியருக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்பதற்காக கணவரோடு சேர்ந்து, தன்னுடைய உடலையும் கோவை மருத்துவக் கல்லூரிக்கு தானமாக தந்திருக்கிறார்.
திறம்பட செயல்படும் இவரைப்பற்றி மாவட்ட ஆட்சியர் மற்றவர்களிடம் விசாரித்துப் பார்த்திருக்கிறார். அப்போதுதான் சாந்திபாபுவின் கல்வி பின்புலம் தெரிய வந்திருக்கிறது. கற்ற கல்வி வீணாகக்கூடாது என்று அறிவுறுத்திய மாவட்ட ஆட்சியர், விரிவுரையாளர் பணியையும் தொடரவேண்டும் என்று சாந்திபாபுவைக் கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து கருமத்தம்பட்டியிலுள்ள தமிழ்நாடு பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராக பணிக்குச் சேர்ந்தார். இளங்கலை கம்ப்யூட்டர் அறிவியல் மாணவர்களுக்கு 'டேட்டா மைனிங்' பாடம் நடத்தி வருகிறார்.
குடும்பத்தலைவி, பஞ்சாயத்து யூனியன் தலைவி, கல்லூரி விரிவுரையாளர், மகளிர் சுய உதவிக்குழுக்களின் ஆலோசகர் – இத்தனை பொறுப்புகளையும் எப்படி சமாளிக்கிறீர்கள் சாந்தி?
"இது மட்டுமல்ல. டேட்டா மைனிங் துறையில் பி.எச்.டி. முடித்து டாக்டர் பட்டமும் பெற இருக்கிறேன். காலையில்தானே கல்லூரி? மாலை சும்மாதானே இருக்கிறது. மாலை மட்டுமல்ல. சனி, ஞாயிறு வாரயிறுதிகளும் எனக்கு விடுமுறைதான். இவ்வளவு நேரம் கிடைக்கிறதே? இந்தப் பணிகளை செய்ய இது போதாதா? உண்மையை சொல்ல வேண்டுமானால் எனக்கு இன்னும் கூட நிறைய நேரம் மீதமிருக்கிறது" என்று சொல்லி சிரிக்கிறார்.
சாந்தி – பாபு தம்பதியினருக்கு இரண்டு வயதில் கலைநிதி என்று ஒரு மகன் உண்டு. திருமணம் ஆகி எட்டு வருடங்கள் ஆகிவிட்டாலும் இன்னமும் கூட்டுக் குடும்பம்தான். சாந்திபாபுவின் வெற்றி ரகசியம் இப்போது புரிகிறதா? கணவரின் - புகுந்த வீட்டின் ஆதரவு இருந்தால், எந்த மருமகளும் ஊருக்கே தலைவி ஆகலாம்.
(நன்றி : புதிய தலைமுறை)