2008ல் அவர் வலைப்பூ தொடங்கி எழுதிக் கொண்டிருந்தபோது, எனது தளத்தில் அவரைக்குறித்து பின்வருமாறு எழுதியிருந்தேன்.
கடந்த சிலநாட்களாக மின்னஞ்சல் வந்திருக்கிறதா என்று பார்க்கிறேனோ இல்லையோ? லதானந்த் அங்கிளின் பக்கங்கங்களை தவறாது வாசித்து விடுகிறேன். வலையுலகுக்கு வந்து இன்னமும் முழுமையாக ஒரு மாதம் கூட ஆகவில்லை. என்னை அவரது பரமரசிகன் ஆக்கிவிட்டார், அங்கிள் எல்லா மேட்டரிலும் செம விளாசு விளாசுகிறார், சண்டை போடுகிறார், கொஞ்சுகிறார், கோபப்படுகிறார், நிறைய சாப்பிடுகிறார், ஜோக் அடிக்கிறார், அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார். மிக சுலபமாக இளைஞர்களை கவர்ந்துவிடும் ஒரு ஆளுமை லதானந்த் அங்கிள். ம்... வலையுலகில் எல்லாப் பெருசுகளுமே இவரைப் போல இருந்துவிட்டிருந்தால் யாருக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. வலைப்பதிவர்களில் எப்போதுமே நான் சந்திக்க விரும்பும் ஒரு பதிவர் போர்பறை அசுரன். இப்போது லதானந்த் அங்கிளையும் சந்தித்துப் பேச வேண்டுமென்ற கொலைவெறி வந்திருக்கிறது.
இதை வாசித்துவிட்டு, கைப்பேசியில் தொடர்பு கொண்டார். முதல் பேச்சிலேயே மிக நெருக்கமாக அவரை உணரமுடிந்தது. அவரோடு பேசியவர்களுக்கு தெரியும். உரையாடல் என்பது அவரைப் பொறுத்தவரை ஒன் வே டிராஃபிக். தொண்ணூறு சதவிகிதம் அவர்தான் பேசுவார். மீதி பத்து சதவிகிதம் கூட நாம் ‘ம்’ கொட்டியதாகதான் இருக்கும். அவரோடு ஒரே ஒருமுறை பேசியவர்கள் கூட சுலபமாக சொல்லிவிடலாம். லதானந்த் ஒரு வெள்ளந்தியான மனிதர்.
பொதுவாக இரவுகளில் நீண்டநேரம் பேசுவார். முன்னிரவில் தொடங்கி, பின்னிரவு வரை ஏதாவது பேசிக்கொண்டிருப்பார். வீட்டில் இருப்பவர்கள் எரிச்சல் படுவார்கள். ஒரு பெரிய ஆபிஸரோடு பேசிக்கொண்டிருக்கிறேன் என்று சமாளிப்பேன். என்ன ஆபிஸர் என்று கேட்டால், சிட்டிக்கு கமிஷனர் மாதிரி, அவர் காட்டுக்கு கமிஷனர் என்று சொல்லி வைப்பேன்.
ஒருமுறை ஏதோ பணி தொடர்பாக சென்னைக்கு வந்திருந்தார். சந்திக்கலாமா என்று கேட்டு, தான் தங்கியிருந்த விடுதியின் பெயரை சொன்னார். சென்ட்ரல் ரயில் நிலையத்தை ஒட்டி, வால்டாக்ஸ் சாலையில் இருந்த விடுதியில் அவரை நானும், பாலா அண்ணாவும் சந்தித்தோம். பாலா அண்ணாவுக்கு ஒரு பழக்கம். வலையுலக நண்பர்கள் யாரிடம் பழகுவதாக இருந்தாலும், அவர்களது உண்மையான பெயரை கேட்டுத் தெரிந்துக் கொள்வார். பெரும்பாலும் அப்பெயரிட்டுதான் அழைப்பார். லதானந்த் அவரது உண்மைப்பெயரை சொல்ல மறுத்ததால் பாலாண்ணாவுக்கு அவர் மீது கோபம்.
அதன்பிறகு எப்போதெல்லாம் சென்னை வருகிறாரோ, அப்போதெல்லாம் சந்திப்பார். ஒருமுறை அசோக்நகரில் ஏதோ ஒரு பாரில் ஜ்யோவ்ராம் உள்ளிட்ட நண்பர்களோடு பேசியதாக நினைவு. இன்னொரு முறை நானும், அதிஷாவும் அவரை ரயிலேற்றிவிட சென்ட்ரலுக்குப் போயிருந்தோம். அன்ரிசர்வ்ட் பெட்டியில் முட்டி, மோதி உட்காரும் சீட்டினை வென்று எடுத்தார். பெரும்பாலும் வண்டலூர் வனத்துறை மாளிகையில் தங்குவார் என்பதால், நகரம் தாண்டிப்போய் அவரை சந்திப்பது எங்களுக்கு கொஞ்சம் சிரமம். சந்திக்க முடியாத சந்தர்ப்பங்களில் உடனே கோபித்துக் கொள்வார். ஆனால் மறுநாளே இணைய அரட்டைப் பெட்டியில் வந்து வழக்கமான ‘குஜால்’ மூடில் உரையாடுவார்.
என்னையும், அதிஷாவையும் காட்டுலாவுக்கு வருமாறு தொடர்ச்சியாக அழைத்துக் கொண்டிருந்தார். பணி நெருக்கடி காரணமாக இருவருமே ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று நாட்கள் விடுப்பு எடுக்க முடியாததால் அவரது அழைப்பை ஏற்றுக்கொள்ள இயலாத சூழல். இதற்காகவும் ஒரு முறை கோபித்துக் கொண்டார். இன்னொரு முறை குடும்பத்தோடு ஊட்டிக்கு வாருங்கள் என்று அழைத்தார். குழந்தை மிக சிறியவளாக இருக்கிறாள், பெரிய பயணத்துக்கு அழைத்துவர அச்சமாக இருக்கிறது என்று மறுத்தேன். அதற்கும் கோபித்துக் கொண்டார்.
அடிக்கடி கோபித்துக் கொள்வது குழந்தை மனம். லதானந்த் குழந்தை மனதுக்காரர்.
செம்மொழி மாநாடு கோவையில் நடந்தபோது, வருகிறீர்களா என்று கேட்டார். ஆமாம், பணிநிமித்தம் வருகிறேன் என்றபோது, வீட்டுக்கு கட்டாயம் வரவேண்டும் என்று கட்டளையிட்டார். பத்திரிகையாளர்களின் பயணத்திட்டத்தை செய்தி மக்கள் தொடர்புத்துறை ஏற்பாடு செய்திருந்ததால், அங்கே அப்படி, இப்படி நகரமுடியவில்லை. சென்னை வந்தபோது தொலைபேசி மன்னிப்பு கேட்டேன். அப்போதும் கோபித்துக் கொண்டார். பின்னர் விசாரித்துப் பார்த்ததில் கோவைக்கு வந்து செல்லும், எந்த நண்பருமே அவரை பார்க்காமல் திரும்பினால் இப்படித்தான் செல்லமாக கோபித்துக் கொள்வார் என்று தெரிந்துகொள்ள முடிந்தது.
இப்படி கோபித்து, கோபித்து விளையாடுவதுதான் அவரது குணம். ஏதாவது குறும்பாக விளையாடிக் கொண்டே இருப்பார். ஐம்பதை கடந்தவர் என்பது அவரது பேச்சில் தெரியவே தெரியாது.
சமீபத்தில் அவருக்கு இதய அறுவைச்சிகிச்சை நடந்ததாக கேள்விப்பட்டேன். வழக்கமான விருமாண்டி மீசையில்லாமல் சஞ்சய் திருமணத்துக்கு வந்திருந்தார். என்ன சார், சிங்கத்தைப் போய் இப்படி சிரைச்சி விட்டுட்டாங்களே என்று விளையாட்டாக கேட்டேன். உடலும் கொஞ்சம் உள்வாங்கியிருந்தது. ’மசுருதானே, வளர்த்துடலாம் லக்கி’ என்றார்.
சில நாட்களுக்கு முன்பாக சென்னை வந்திருப்பதாகவும், எங்கேயாவது சந்திக்கலாம் என்றும் சொல்லியிருந்தார். அப்போது தோழர் அதிஷாவுக்கு ‘காலில் ஆணி’ (இந்தச் சொல்லில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்கிறது)பிரச்சினை தொடர்பாக, அலைச்சலில் இருந்தோம். சந்திக்க முடியவில்லை. வழக்கம் போல லதானந்துக்கு கோபம்.
நேற்று இரவு திடீரென இறங்கியது அந்தச் செய்தி. சென்னை நண்பர்கள் கலந்துப் பேசி சனிக்கிழமை மாலை ஒரு அஞ்சலிக் கூட்டத்துக்கு கூட ஏற்பாடு செய்துவிட்டோம். நல்லவேளையாக இன்று காலை அந்த கூட்டம் ‘கேன்சல்’ என்கிற மகிழ்ச்சிக்குரிய செய்தி கிடைத்திருக்கிறது. நேற்றிரவு முழுக்க இருந்த கடுமையான மன உளைச்சல் இன்று தீர்ந்ததில் நிம்மதி. லதானந்த் இம்மாதிரி விளையாடியது குறித்து எந்த கோபமுமில்லை. இப்படி விளையாடுமளவுக்கு அவருக்கு ‘தில்’ இருப்பது குறித்துதான் ஆச்சரியமும், வியப்பும். குழந்தையின் சுபாவம் விளையாடுவதுதான். லதானந்த் விளையாடியிருக்கிறார். இதில் கோபப்படவோ, கண்டிக்கவோ எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அவரை கொஞ்சத்தான் தோன்றுகிறது. கவியரசர் கண்ணதாசன் கூட இதுமாதிரி செத்து, செத்து விளையாடியதாக வனவாசத்தில் எழுதியிருந்ததாக ஞாபகம்.
அப்புறம் இன்னொன்று சொல்ல மறந்துவிட்டேனே?
நேற்று இரவு கிடைத்த அந்த ‘டுபாக்கூர்’ அதிர்ச்சிச் செய்தியை பாலாண்ணாவோடு பகிர்ந்துக் கொண்டபோது, அதிர்ந்துப் போய் பேசிக்கொண்டிருந்தார். அந்தப் பேச்சின் இறுதியாக ‘குறுகுறுப்பு’ தாங்காமல் கேட்டார். “இப்பவாவது சொல்லுய்யா. அவரோட உண்மையான பேரு என்னா?”
எனக்கு இப்பவும் நிஜமாகவே அவரது பெயர் தெரியாது.