20 செப்டம்பர், 2011

ஈரான் – மர்ஜானே சத்ரபி

‘ஈரான்’ – உடனே உங்களுக்கு என்ன நினைவுக்கு வரும்?

1. மத அடிப்படைவாதம்
2. பல லட்சம் பேரை பலிகொண்ட நீண்டகால ஈரான் – ஈராக் கொடூர யுத்தம்
3. கோமேனி
4. சல்மான் ருஷ்டிக்கு தூக்குத்தண்டனை
5. சில உன்னத உலகத் திரைப்படங்கள்

சரியா?

இன்னும் யோசித்தால் மேலும் ஐந்து விஷயங்களை அதிகபட்சமாக உடனடியாக சேர்க்க முடியும் என்று தோன்றுகிறது. நமக்கும் இவற்றைத் தவிர வேறொன்றும் புதியதாக இதுவரை நினைவுக்கு வந்ததில்லை. ஈரான் பற்றியும், ஈரானியர்கள் பற்றியும் இந்தியர்களுக்கு இருக்கும் பொதுவான ஒரு மதிப்பீட்டை மீளாய்வு செய்யவைக்கிறது இரு புத்தகங்கள். பெர்சேபோலிஸ் என்ற பெயரில் பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்டவை தமிழில் ‘விடியல்’ வெளியீடாக விடிந்திருக்கிறது.

1969ல் பிறந்த மர்ஜானே சத்ரபி என்ற பெண் குழந்தைப் பருவத்தில் தான் கண்ட ஈரானை எழுத்தாகவும், சித்திரமாகவும் சிரத்தையுடன் வடித்திருக்கிறார். ‘சித்திரமா?’ என்று ஆச்சரியப் படுவீர்களே? ஆம். ஓவியரான மர்ஜி (இப்படி சொல்லுறது ஈஸியா இருக்கில்லே?) காமிக்ஸ் வடிவில் தன் வாழ்க்கையை பதிவு செய்திருக்கிறார். வெகுசீரியஸான காமிக்ஸ். குழந்தைகளுக்கானது அல்ல. குழந்தைகளும் படிக்கலாம். தப்பில்லை. ஆங்காங்கே நகைச்சுவைக்கும் பஞ்சமில்லை. முதல் நூலை பிரித்ததுமே பல ஆச்சரியங்கள் புதையலாய் புதைந்திருக்கிறது. கண்டுகளித்து, வாசித்து உணருங்கள். தீவிரவாசிப்பாளர்கள் நிச்சயம் வாசிக்க வேண்டிய புத்தகங்கள்.

மர்ஜி டெஹ்ரானில் பிரெஞ்சுப் பள்ளியில் தன் ஆரம்பக்கல்வியை தொடங்கியவர். பொதுவுடைமை சித்தாந்தங்களில் நன்கு பரிச்சயம் கொண்ட பாரம்பரியத்தில் பிறந்தவர். இஸ்லாம் புரட்சி ஈரானில் ஏற்பட்டபோது மர்ஜிக்கு பத்து வயது இருக்கலாம். திடீர் திடீர் கட்டுப்பாடுகள். பெரும்பாலானவை பெண்ணடிமைத் தனத்தின் உச்சம். சட்டம் அபத்தக் களஞ்சியம்.

ஈரான் கொடுங்கோல் மன்னராட்சி, ஏகாதிபத்திய அடக்குமுறை, சர்வாதிகார அட்டூழியங்கள் என்று மாறி மாறி ஆட்சிமாற்றங்கள கண்ட நாடு. துரதிருஷ்டவசமாக ஒரு ஆட்சியில் கூட மக்கள் நிம்மதியாய், சுதந்திரமாய் உணர்ந்ததில்லை. இப்படியிருந்த நிலையில் தொடங்கிய ஈரான் – ஈராக் யுத்தம் பல பேரின் வாழ்க்கை வரைபடத்தை புரட்டிப் போட்டது. எண்ணற்றவர்கள் அகதிகளாயினர். திக்கற்றவர்கள் தியாகிகளாயினர். அதாவது உயிரை இழந்தனர். இறைவனின் கருணை கொஞ்சூண்டு மிச்சமிருந்தது போலிருக்கிறது. இன்றும் ஈரான் மிஞ்சியிருக்கிறது.

இந்தப் போருக்குப் பின்னணியில் மேற்கத்திய நாடுகளின் குறுக்குசால் விளையாட்டு இருந்தது. இருநாடுகளும் பலத்த அழிவுக்குப் பின்னரே இதை உணர்ந்தன. ஈராக் இஸ்ரேலுக்கு பாலஸ்தீனிய பிரச்சினையில் அச்சுறுத்தலாக இருந்தது. ஈரான் மத்திய கிழக்கு ஆசியாவிலேயே இராணுவபலம் மிகுந்த நாடாக வலிமைபெற்று திகழ்ந்தது. எட்டாண்டு கால தொடர்போரின் விளைவால் இருநாடுகளிலும் பெருமளவு இராணுவ மற்றும் பொருளாதார‌ வலிமை குன்றியது. குழம்பிய எண்ணெய்க் குட்டையில் மீன் பிடித்தது அமெரிக்காவும், பிரிட்டனும்.

இரு நூல் முழுவதுமே சொல்லப்பட்டிருப்பது மர்ஜியின் வாழ்க்கை என்றாலும், இதன் மூலமாக கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகால ஈரானையும் நாம் தெளிவாக அறிந்துகொள்ள முடிகிறது. ஈரானியர்கள் கிட்டத்தட்ட இந்தியர்கள். ஆனால் திறமையானவர்கள். மேற்கத்திய நாடுகளை சேர்ந்தவர்களால் பலமாக எள்ளல் செய்யப்படுபவர்கள். இந்தியர்களைப் போலவே ஆதிக்க எதிர்ப்பு மனப்பான்மையோடு, குறிப்பாக அமெரிக்க எதிர்ப்பு மனப்பான்மையோடே பிறக்கிறார்கள். ஆட்சிக்கு வருபவர்கள் மட்டும் மக்குகளாக இருக்கிறார்கள். மாய்க்கன்களாக இருக்கிறார்கள். கூமூட்டைகளாக இருக்கிறார்கள். மதவெறியர்களாக மனிதாபிமானம் கிஞ்சித்துமற்ற காட்டுமிராண்டிகள் ஈரானின் ஆட்சிக்கட்டிலை தொடர்ந்து அலங்கரிக்கிறார்கள். மக்களையும், நாட்டின் வளர்ச்சியையும் அலங்கோலப் படுத்துகிறார்கள்.

அகதியாய் வாழ்வது எவ்வளவு அவலம் என்பதற்கு மர்ஜியின் வாழ்க்கையே சாட்சி. விமானங்கள் வீசும் வெடிகுண்டுகளுக்கிடையே ஏது பள்ளியும் கல்வியும்? கல்வி கற்க ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவுக்கு பயணிக்கிறாள். ஈழத்தமிழர்களின் அவலம் இக்கட்டங்களை வாசிக்கும்போது இயல்பாகவே நினைவுக்கு வருவதை தவிர்க்க இயலவில்லை.

ஐரோப்பியர்களால் தன் மண் கேவலப்படுத்தப்படும் போது மனதுக்குள் குமுறுகிறாள். அடக்கமுடியாத நேரங்களில் அடங்க மறுத்து பொங்கியெழுகிறாள். கன்னியாஸ்திரிகள் மடத்தில் தங்கியிருந்தபோது ஒரு நாள்.

மதர் சுப்பீரியர் : ஈரானியர்களைப் பற்றிச் சொல்லப்படுவது சரியாக இருக்கிறது. அவர்களுக்கு நாகரிகமே தெரியாது.

மர்ஜி : உங்களைப் பற்றி சொல்லப்படுவதும் உண்மைதான். கன்னியாஸ்தீரிகளாக ஆவதற்கு முன்பு நீங்கள் எல்லோரும் வேசியாக இருந்தீர்கள்.

இப்படி வாதிடும்போது மர்ஜிக்கு பதினைந்து அல்லது பதினாறு வயதிருக்கலாம். இவ்வளவு வாயாடியான பெண் ஒரு இடத்தில் நீடிக்க முடியுமா? வீடு வீடாக மாறி எப்படியோ பள்ளிக் கல்வியை முடிக்கிறாள்.

ஈரானிய கலாச்சாரத்தை ஒட்டியும் வாழ முடியவில்லை. ஈர்க்கும் ஐரோப்பிய கலாச்சாரத்தின் பால் முழுவதுமாக விழவும் முடியவில்லை. தடுமாறுகிறாள் மர்ஜி. காதல் வசப்படுகிறாள். நிராகரிக்கப் படுகிறாள். காதலிக்கப் படுகிறாள். போதை வசமாகிறாள். தெருத்தெருவாய் அலைகிறாள். வெறுத்துப் போய் ஈரானுக்கு திரும்புகிறாள்.

இப்படி போகிறது அவளது வாழ்க்கை. ஈரானுக்கு திரும்பியவள் உருக்குலைந்த நாட்டையும், மக்களையும் கண்டு மனம் வெதும்புகிறாள். சோர்ந்து சுருண்டு விடுகிறாள். மீண்டும் பல்கலையில் சேர்ந்து பட்டம் பயில்கிறாள். காதலிக்கிறாள். திருமணம் செய்துகொள்கிறாள். விவாகரத்து செய்கிறாள். பிரான்சுக்கு பறக்கிறாள்.

ஒரே நேர்க்கோட்டில் அமையாதது தான் மர்ஜியின் வாழ்க்கை. அவளது வாழ்க்கையை ஒட்டியே நாட்டின் நடப்பையும் வழிகாட்டி போல சொல்லிக்கொண்டே வருவது நல்ல யுத்தி. சுவாரஸ்யமான திருப்பங்களுக்கு இருநூல்களிலும் பஞ்சமேயில்லை. பக்கத்துக்கு பக்கம் சுவாரஸ்யம். வாசிக்க வாசிக்க பேரின்பம். சித்திரங்களை திரும்ப திரும்ப காண கண் கோடி வேண்டும்.

மர்ஜானே சத்ரபியின் ஓவியங்கள் தத்ரூபமாக இருப்பதோடு சூழலின் உணர்வை அச்சுஅசலாக பிரதிபலிக்கிறது. தமிழில் அற்புதமாக எஸ்.பாலச்சந்திரன் மொழிமாற்றம் செய்திருக்கிறார். ஒரு முழுநீளத் திரைப்படம் பார்ப்பது போன்ற உணர்வை இந்த இரு தொடர்நூல்களும் நமக்கு ஏற்படுத்துகிறது.

நூல்கள் :

1. ஈரான் – ஒரு குழந்தைப் பருவத்தின் கதை (154 பக்கம்)
2. ஈரான் – திரும்பும் காலம் (188 பக்கம்)

நூலாசிரியர் : மர்ஜானே சத்ரபி

தமிழில் : எஸ்.பாலச்சந்திரன்

விலை : நூலொன்றுக்கு தலா ரூ. 100/-

வெளியீடு : விடியல் பதிப்பகம்,
11, பெரியார் நகர், மசக்காளிபாளையம் (வடக்கு)
கோயம்புத்தூர் – 641 015. தொலைபேசி : 0422-2576772

19 செப்டம்பர், 2011

எங்கேயும் எப்போதும்

முதல் காட்சியே க்ளைமேக்ஸாக வைக்க இயக்குனருக்கு பயங்கர தில் இருக்க வேண்டும். அங்காடித்தெரு இயக்குனருக்கு பிறகு இந்த தில் எம்.சரவணனுக்கு வாய்த்திருக்கிறது. இதுமாதிரியான நான்லீனியர் படங்களுக்கு திரைக்கதை சுவாரஸ்யமாக அமையாவிட்டால் மொத்தமும் போச்சு. சென்னையிலிருந்து திருச்சிக்கு ஒரு தனியார் பேருந்து கிளம்புகிறது. திருச்சியிலிருந்து சென்னைக்கு அரசுப்பேருந்து கிளம்புகிறது. நான்கு மணிநேரத்தில் இரண்டு சந்தித்துக் கொள்ளும்போது... ஒன்லைனர் இவ்வளவுதான்.

இடையிடையே பேருந்துகளின் பயணத்தை ஒரு த்ரில்லர் படத்துக்கான எஃபெக்ட்டோடு காட்சிப்படுத்தியிருப்பதில் இயக்குனரோடு கேமிராமேன், இசையமைப்பாளர், எடிட்டர், சிஜி கலைஞர் என்று அனைவரும் கைகோர்த்து அசத்தியிருக்கிறார்கள்.

இரண்டு காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படமென்றாலும் கிளைக்கதைகளாக விரியும் ஒருவரி குட்டிக்கதைகள் சுவாரஸ்யம். மனைவி ஏழுமாத கர்ப்பிணியாக இருந்தபோது துபாய்க்கு போன கணவன், செம ஃபிகரை பிராக்கெட் போடும் இளைஞன், புதுமனைவியை பிரிய மனமில்லாமல் கூடவே வரும் மாப்பிள்ளை என்று படம் முழுக்க சுவாரஸ்யமாக சித்தரிக்கப்பட்ட பாத்திரங்கள் பல.

இயக்குனர் இந்தக் கதையை எழுதுவதற்கு முன்பாக பல பஸ் ஸ்டேண்டுகளிலேயே தேவுடு காத்திருப்பார் போல. பூ, பழம் விற்பவரில் தொடங்கி, கண்டக்டர், டிரைவர் வரை பல பாத்திரங்களை உண்மைக்கு வெகு அருகாக சித்தரிக்க முடிந்திருக்கிறது. குறிப்பாக திருச்சி அரசுப்பேருந்து கண்டக்டர் சொல்லும் வசனம். “தம்பி. நாலு சீட்டு தள்ளி வுட்டு உட்கார்ந்துக்கப்பா”.

திருச்சியிலிருந்து சென்னைக்கு வரும் பெண்ணின் காதல் இயல்பாக பூ மலர்வது மாதிரி மலர்கிறது என்றால்.. திருச்சியில் அரசூர் பையன் மீதான நர்ஸின் காதல் அடாவடி ரகம். கிட்டத்தட்ட மவுனராகம் கார்த்திக்கின் கேரக்டர் அஞ்சலிக்கு. ஆக்‌ஷன், ரொமான்ஸ் ஹீரோவாக ஃபார்ம் ஆகிவிட்ட ஜெய்யின் அண்டர்ப்ளே ஆச்சரியம்.

15-பி பஸ்ஸில் ஏற்றிவிட மட்டுமே ‘அசைன்’ செய்யப்படும் ஷ்ரவன் கடைசியில் ஆபிஸ் லீவு போட்டுவிட்டு நாள் முழுக்க பஸ்களிலும், ஷேர் ஆட்டோக்களிலும் அனன்யாவோடு சுற்றுவது கொஞ்சம் லாஜிக் மீறலாகத் தெரிந்தாலும் இண்டரெஸ்டிங்காக இருப்பதால் மன்னித்து விடலாம்.

தொண்ணூறு சதவிகிதம் ‘ஃபீல்குட்’ மூவியாக பயணப்படும் ‘எங்கேயும் எப்போதும்’ கடைசி இருபது நிமிடங்களில் கலங்க வைக்கிறது. குறிப்பாக ‘அப்பா போன் எடுங்கப்பா’ ரிங்டோன் ஒலிக்கும்போது, இடிஅமீன் படம் பார்த்தால் கூட கண்ணைக் கசக்கிக் கொள்வார். படத்தின் இறுதியில் ரசிகனுக்கு கிடைப்பது நெஞ்சு முழுக்க தாங்க முடியாத சோகம்தான்.

படம் பார்த்தவர்கள் ’வீச்சு’ தாங்கமுடியாமல் நேராக டாஸ்மாக்குக்கு ஓடுவதுதான் இயக்குனருக்கு கிடைத்திருக்கும் வெற்றி.

சாந்தி தியேட்டர் அருகேயிருந்த டாஸ்மாக்கில் கிரவுடு தாங்காமல், எக்ஸ்பிரஸ் மாலுக்கு எதிரே மூத்திரச்சந்துக்கு அருகாமையில் அமைந்திருக்கும் டாஸ்மாக்குக்கு ஓடி (நேரம் இரவு 9.50 – டாஸ்மாக் மூடும் நேரம் சரியாக 10.00) அங்கும் குடிமகன்களின் பயங்கரவாத குடிவெறி கூட்டம் காரணமாக சரக்கு வாங்க முடியாமல், மை பாருக்குச் சென்று.. கிங்ஃபிஷர், ஹேவார்ட்ஸ் உள்ளிட்ட ரெகுலர் பிராண்டுகளில் சூப்பர் ஸ்ட்ராங்க் பீர் கிடைக்காமல், டென் தவுசண்ட் சூப்பர் ஸ்ட்ராங்க் என்கிற ஏடாகூட சாராயநெடியோடு கூடிய பாடாவதி சரக்கினை உள்தள்ளி, தலையெழுத்தேவென்று எண்பது ரூபாய் பீருக்கு நூற்றி ஐம்பது ரூபாய் கொடுத்து, டபுள் போதையாகி, செயினாக நாலைந்து தம்மடித்து, மாணிக்சந்தை வாயில் கொட்டி குதப்பியவாறே ஃபீல் செய்து பேசிக்கொண்டிருந்தபோது, தோழர் நரேன் சொன்னார், “தலைவா. நம்மளுக்கெல்லாம் மங்காத்தாதான் ரைட்டு”.

17 செப்டம்பர், 2011

பெரியாரைச் சந்தித்தேன்!

எனது பள்ளி நாட்களில் ஒருநாள். வகுப்பு ஆசிரியர் மாணவர்களிடையே ஒரு அறிவிப்பை வெளியிட்டார். ‘இன்று நமது ஊருக்கு விஜயம் செய்திருக்கும் திரு.ஈ.வெ.ராமசாமி பெரியார் அவர்களை மாணவர்கள் அனைவரும் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இன்று மாலை இரண்டு மணிக்கு பள்ளி மாணவர்கள் அனைவரும் வரிசையாக ஒழுங்கு காத்து அவர் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். அவரைப் பார்த்துவிட்டு அங்கிருந்து அனைவரும் அவரவர் வீட்டுக்குச் செல்லலாம்’ என்பதே அந்த அறிவிப்பு.

மாணவர்களிடையே ஒரு சந்தோஷ சலசலப்பு. அது பெரியாரை பார்க்கப் போவதால் அல்ல! மதியம் சீக்கிரமே வீட்டுக்குப் போகப் போகிறோமே என்கிற இன்ப அதிர்ச்சி! ஆறாம் வகுப்பு மாணவர்களான எங்களுக்கு அப்போது பெரியார் பற்றியெல்லாம் எதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனாலும் அவரைச் சந்திக்கிறவரை யார் இந்த பெரியார் என்கிற கேள்வி எனக்குள் சஸ்பென்ஸாகவே இருந்தது.

சுமார் முன்னூறு மாணவர்கள் வரிசையாக கிளம்பினோம். ஊர் ஜனங்கள் எல்லோரும் எங்களின் இந்த திடீர் அணிவகுப்பைப் பார்த்து அவர்களுக்குள் ‘எங்க போறாங்க இந்தப் பசங்க?’ என்று கேட்டுக் கொண்டார்கள். ஒருசிலர் எங்களிடமே கேட்டுத் தெரிந்து கொண்டார்கள். எங்களின் மூலமாக அன்றைக்கு பெரியார் நமது ஊருக்கு வந்திருக்கிறார் என்கிற விபரம் எல்லோருக்கும் தெரிந்த விஷயமானது.

ஒரு ரைஸ்மில் உரிமையாளருக்குச் சொந்தமான பங்களா ஒன்றில் பெரியார் தங்க வைக்கப்பட்டிருந்தார். வரிசையாக, அமைதியாக செல்லும் மாணவர்கள் அவருக்கு வணக்கம் சொல்ல, அவர் பதில் வணக்கம் சொல்லி சிரித்த முகத்தோடு ஒருசில மாணவர்களிடம் பேச்சுக் கொடுத்து அனுப்பி வைத்தார்.

எனக்கு அவரைப் பார்த்ததும் என் செல்லமுத்து தாத்தா நினைவுக்கு வந்தார். வெள்ளைத்தாடியும் அருகில் கைத்தடியுமாக அச்சு அசலாக அப்படியே என் தாத்தாவைப் பார்ப்பதுபோலவே உணர்ந்தேன். என்னை குழந்தை முதலே தன் தோளில் தூக்கிவைத்துக் கொண்டாடிய செல்லமுத்து தாத்தா சில மாதங்களுக்கு முன்புதான் இறந்திருந்தார். அவரது நினைவுகள் என்னை சில நிமிடங்கள் தடுமாற வைத்தன.

எல்லா மாணவர்களும் பெரியாரை நோக்கி இருகரம் கூப்பி வணக்கம் சொல்லிவிட்டு நகர எனக்கு மட்டும் அவரை ஒருதடவையாவது தொட்டுப் பார்க்க வேண்டும் என்கிற ஆசை வந்தது. அவரை நெருங்கும்போது சட்டென எனது வலது கையை கைகுலுக்கும் தோரணையில் நீட்டினேன். பெரியாரும் அதை ரசித்தபடியே எனது கைகளைப் பற்றிக் கொண்டு,

‘’உங்க பேரு என்ன தம்பி?’’ என்றார்.

நான் சொன்னேன்.

‘’நல்லா படிக்கணும்’’ என்று என் கன்னத்தைத் தட்டிக் கொடுத்து அனுப்பி வைத்தார்.

பன்னிரெண்டு வயது சிறுவனான என்னைப் பார்த்து மரியாதையோடு ‘உங்க’ பேரு என்ன தம்பி என்று அவர் கேட்டது எனக்கு அப்போது மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. என் வாழ்க்கையில் என்னை முதன்முதலாக இப்படி ’உங்க’ சேர்த்து அழைத்த மாமனிதர் பெரியார். அந்த மாதம் முழுதும் பலரிடமும் இந்தச் சம்பவத்தை நான் சொல்லிச்சொல்லி மாய்ந்து போனேன்.

அதன்பிறகுதான் கொஞ்சம் கொஞ்சமாக செல்லமுத்து தாத்தா மாதிரியே இருந்த பெரியாரின் மதிப்பும் மரியாதையும் எனக்குத் தெரியவந்தது. பள்ளிப் படிப்பு முடிந்து பல்வேறு வகையான நூல்களைப் படிக்கிற போது பெரியாரின் எழுத்துக்களுக்கு முக்கியத்துவம் தந்து படிக்க ஆரம்பித்தேன். அவர் மீது எனக்கிருந்த மரியாதை மென்மேலும் கூடிப்போயிற்று.
அவரது தீவிரமான தொண்டனாக செயல்படாவிட்டாலும் முடிந்தவரை அவரது கருத்துக்களுக்கும் எண்ணங்களுக்கும் மதிப்புக் கொடுப்பனாகவே இருந்து வந்திருக்கிறேன்.

பல்வேறு காலகட்டங்களில் தனது கருத்துக்களை துணிச்சலாகவும் புதுமையாகவும் சொல்லி வந்த அந்த பெரியார் என்கிற வடிவம் ஆழமாக என மனதில் பதிந்து போயிருக்கிறது. அவரது மரணத்திற்குப் பின்னால் அவரைப் போல கருத்துக்களைச் சொல்ல யார் இருக்கிறார்கள் என்கிற கேள்வி எனக்குள் இன்றைக்கும் இருக்கிற ஒன்று.

இன்றைய இளைய சமுதாயத்திற்கு பெரியார் என்கிற பெயரே ஓல்டு ஃபேஷன் நேம் என்று ஆகிவிட்ட நிலையில் –
இன்னொரு பெரியார் நமக்குக் கிடைப்பாரா என்கிற கேள்விக்கு விடை கிடைக்குமா என்ன?

சல்லிக்காசு பெறாத நான் சாவதற்குள், இந்த மில்லியன் டாலர் கேள்விக்கு விடை கிடைக்குமா?


கட்டுரையாளர் : கல்யாண், புதிய தலைமுறை வார இதழில் துணை ஆசிரியராகப் பணிபுரிகிறார். ஆசிரியர் மாலனின் திசைகள் மூலமாக பத்திரிகையுலகுக்கு அறிமுகமானவர். மணிவண்ணன் உள்ளிட்ட பிரபல இயக்குனர்களிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர். இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரின் கதை இலாகா மெம்பர். ஏராளமான கவிதைகள், சிறுகதைகள் எழுதியிருக்கிறார். தலா ஒரு சிறுகதைத் தொகுப்பும், கவிதைத் தொகுப்பும் வெளியிட்டிருக்கிறார். ரோஜா திரைப்படம் வெளிவருவதற்கு முன்பாக இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானை பேட்டி கண்டு, இந்தியா டுடேவில் எழுதியவர். இணையத்திலும் சில ஆண்டுகளாக உலா வருகிறார்.

இவரது வலைப்பக்கம் : http://kalyanje.blogspot.com

15 செப்டம்பர், 2011

பேரறிஞர் அண்ணா


வங்கக் கடலோரம் துயில் கொண்டிருக்கும்
தங்கத் தலைவனின் நூற்றி மூன்றாவது பிறந்தநாள் இன்று.

“இந்தியா ஒரு துணைக்கண்டம். இது ஒரு தனி நாடு, ஒரே நிர்வாகத்தால் ஆளப்பட வேண்டிய நாடு என்று யாரும் வாதம் புரியமுடியாது. ஐரோப்பா 32 நாடுகளாக பிரிக்கப்பட்டிருப்பதைப் போல இந்திய துணைக்கண்டமும் தனித்தனி நாடுகளாக நிர்வகிக்கப்பட வேண்டும். ஆரிய ஆதிக்கத்தின் காரணத்தாலே தான் இந்தியா என்ற பெயரில் இக்கண்டம் தனியொரு நாடாக இருக்கிறது. ஆரிய ஆதிக்கம் மற்ற இனத்தவரின் நல்வாழ்வை நசுக்கியிருக்கிறது. பல்வேறு தேசிய இனங்கள் கட்டாயமாக ஒரே நாடாக வாழவேண்டுமென்று திணிக்கப்படுகிறார்கள். இதனால் புரட்சிகளையும், குழப்பங்களையும் தவிர்க்க இயலாது.

குழப்பங்களையும், போராட்டங்களையும் தவிர்க்க வேண்டுமானால் இனவாரியாக இக்கண்டம் தனித்தனி நாடாக பிரிக்கப்பட வேண்டும். அசோகர், கனிஷ்கர், சமுத்திரகுப்தர் போன்ற பேரரசர்களின் காலத்தில் கூட ‘இந்தியா' என்ற பெயரில் ஒரே நாடாக இக்கண்டம் இருந்ததில்லை. இந்திய துணைக்கண்டம் பல்வேறு நாடுகளாக பிரிக்கப்பட்டால் ஒவ்வொரு நாடும் தனக்கிருக்கும் வளங்களை கொண்டு பொருளாதாரரீதியாக இலகுவாக முன்னேற முடியும். ஒவ்வொரு இனத்துக்கும் ஒவ்வொரு தனி நாடிருந்தால் எல்லா இனமுமே சமமான முன்னேற்றத்தை பெற இயலும். சமத்துவம் மலரும். ஒரு இனத்தின் ஆதிக்கத்தில் இன்னொரு இனம் வாழவேண்டிய நிலை இருந்தால் வன்முறை தான் மிஞ்சும். வன்முறைகளிலிருந்து மக்களை காக்க பிரிவினை அவசியப்படுகிறது.”

1940ஆம் ஆண்டு திருச்சியில் நடந்த சுயமரியாதை மாநாட்டில் பேரறிஞர் அண்ணா துரை பேசியதின் சாராம்சம் இது. விருப்பு வெறுப்பின்றி இதை வாசித்துப் பார்த்தோமானால் 71 ஆண்டுகளுக்கு முன்பாக அண்ணாவுக்கு இருந்த தீர்க்கதரிசனத்தை உணரலாம்.


காஞ்சீபுரம் நடராஜன் அண்ணாதுரை 1909ஆம் ஆண்டு காஞ்சிபுரத்திலே ஒரு கீழ்நடுத்தர குடும்பம் ஒன்றில் பிறந்தவர். காஞ்சிபுரம் பச்சையப்பன் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தவர் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பட்டம் பெற்றார். மாணவராக இருந்த காலத்திலேயே ஆங்கிலம் மற்றும் தமிழில் அவருக்கு அபார புலமை இருந்தது. நவயுவன், பாலபாரதி ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியராக இருந்தார். ஆங்கிலத்தில் வெளிவந்த ஜஸ்டிஸ் என்ற நாளிதழின் துணையாசிரியாக பணிபுரிந்த அனுபவமும் அவருக்குண்டு. தந்தை பெரியாரின் விடுதலை பத்திரிகையில் பட்டை தீட்டப்பட்டப் போது தான் வைரமாய் மின்னினார் பேரறிஞர் அண்ணா.

அண்ணாதுரைக்கு திருப்புமுனை தந்தது திருப்பூர். 1934ஆம் ஆண்டு தந்தை பெரியாரை அவர் சந்தித்தது இங்கே தான். பெரியாரை சந்தித்தபின் தனது பேச்சாற்றல், எழுத்தாற்றல் அனைத்தையும் சுயமரியாதை இயக்கத்திற்கு காணிக்கையாக்கினார். நூல்கள் வாசிப்பிலே பெரும் ஆர்வம் கொண்டிருந்த பேரறிஞர் அண்ணா, வீட்டுக்கு ஒரு நூலகம் அவசியம் இருக்கவேண்டுமென தமிழர்களை வற்புறுத்தினார். தமிழர்களுக்கு வாசிப்புப் பழக்கம் குறைவு என்று குறைபட்டுக் கொண்டவர் எழுதியதைப் பாருங்கள்.

“இந்த நாட்டிலே நம்மவர் வீடு கட்டுவர், அதிலே பல அறைகளும் அமைப்பர். மாட்டுக்கொட்டகை ஒரு பால், பொக்கிஷ அறை ஒருபால், சமையலறை மற்றொருபால். மற்றெதை மறக்கினும் ஆண்டவனுக்குப் பூசை செய்ய அறை அமைக்க மட்டும் மறவார். ஆனால் அறிவூட்டும் ஏடுகள் நிறைந்த படிப்பறையைப் பற்றிய பகற்கனவும் காணார். படிப்பறை மிகவும் முக்கியமானது. அவசியமானது. அலட்சியப்படுத்தக் கூடியதன்று. ஆயினும் அது அவர்தம் சிந்தனையில் தோன்றாது”

அறிஞர் அண்ணாவின் எழுத்துலக ஆளுமை அப்போது சினிமாவுக்கு பரவியது. திராவிட சிந்தனை கொண்ட எழுத்தாளர்கள் சினிமாவில் கொடிகட்டிப் பறக்க அச்சாரம் போட்டவர் அறிஞர் அண்ணா. அறிஞர் அண்ணாவுக்கு முன்பான தமிழ் சினிமாவில் “அவா வருவா, இவா ஊதுவா” என்ற அளவிலேயே தமிழ் இருந்தது. அறிஞர் அண்ணாவின் ஓர் இரவு, வேலைக்காரி திரைப்படங்கள் பெரியளவில் வெற்றி கண்டன. மேடைத்தமிழை சினிமாவுக்கும் கொண்டு சென்ற பெருமை அறிஞர் அண்ணாவையே சாரும். இவரைப் பின் தொடர்ந்து நுழைந்த திராவிட சிந்தனையாளர்கள் இயல்புத்தமிழையும் பிற்பாடு சினிமாவுக்கு கொண்டு வந்தார்கள்.

எழுத்து, பேச்சு என்று அலுவலக அறைக்குள் மட்டுமே தமிழர்களுக்கான அண்ணாவின் சேவை நின்றுவிடவில்லை. அதையும் தாண்டி விலைவாசி உயர்வு எதிர்ப்பு மறியல் போராட்டம், மும்முனைப் போராட்டம், கட்டாய இந்தி பதினேழாவது மொழிப் பிரிவு சட்ட நகல் எரிப்புப் போராட்டம் என பல போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்றவர் அண்ணா.

1949ஆம் ஆண்டு திராவிடர் கழக தலைவர் தந்தை பெரியாரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடின் காரணமாக தி.மு.கழகத்தை தொடங்கினார். கழகம் தொடங்கி பதினெட்டாவது ஆண்டில் 1967ல் தமிழகத்தின் ஆட்சிப்பீடத்தை அலங்கரித்தது. அப்போது இந்தியாவிலேயே காங்கிரஸ் ஆளாத மாநிலமாக தமிழகம் தான் இருந்தது. உலகளவில் ஒரு பிராந்திய கட்சி பொன்விழா கொண்டாடியும் மக்கள் மத்தியில் வலுவாக, செல்வாக்காக இருக்கிறதென்றால் அது அறிஞர் அண்ணா தொடங்கிய திராவிட முன்னேற்றக் கழகம் மட்டுமே.

1967ஆம் ஆண்டிலிருந்து 69ஆம் ஆண்டுவரை மிகக்குறுகிய காலம் மட்டுமே முதலமைச்சராக அறிஞர் அண்ணா இருந்தார். இதற்குள்ளாகவே மதராஸ் மாகாணம் என்ற பெயரை தமிழ்நாடு என்று பெயர்மாற்றி அழகுத்தமிழை அரசாட்சி ஏற்றினார். இரண்டாம் உலகத் தமிழ்மாநாட்டை உலகம் வியக்குமளவுக்கு சிறப்பாக சென்னையில் நடத்திக் காட்டினார். கலப்புத் திருமணத்திற்கு இந்தியாவிலேயே முதன்முறையாக சட்ட அங்கீகாரம் அளித்தார். தென்னாட்டு பெர்னாட்ஷா என்று பேராசிரியர் கல்கியால் புகழப்பட்டார்.

பிப்ரவரி 2, 1969ல் மறைந்த பேரறிஞர் அண்ணாவின் மறைவுக்கு ஒன்றரை கோடி பேர் சென்னையில் கூடினார்கள். உலகளவில் ஒருவரின் மறைவுக்கு மிக அதிகமான பேர் கூடியதாக கின்னஸ் சாதனை புத்தகத்தில் அறிஞர் அண்ணாவின் இறுதி ஊர்வலம் பதிவாகியிருக்கிறது. தமிழ் வளர, தமிழர் தம் வாழ்வுயர காலமெல்லாம் பாடுபட்ட தலைவனின் இறுதி ஊர்வலத்துக்கு இவ்வளவு பேர் திரண்டதில் ஆச்சரியமென்ன இருக்க முடியும்?

அகில இந்திய வானொலியில் தலைவர் கலைஞர் கதறிய உலகப்புகழ் பெற்ற “அண்ணா, எம் இதய மன்னா” கவிதாஞ்சலியை இங்கே கேட்கவும்.

பேரறிஞர் அண்ணா சுமாராக ஓவியமும் வரைவார். அவரது ஓவியங்களில் சில :




14 செப்டம்பர், 2011

லெட்டர் டூ தி எடிட்டர்

அன்புள்ள ஆசிரியருக்கு,

என் சொந்த மாநிலமான தமிழ்நாட்டில் அவ்வப்போது நடைபெறும் சாதிக்கலவரங்கள் அச்சமூட்டுகின்றன.

இதுபோல ஏதாவது சாதிக்கலவரங்கள் ஏற்படும் போதெல்லாம் மாநிலத்தை ஆளும் திராவிடக் கட்சிகள் தெருப்பெயரிலிருந்து சாதியை எடுத்து தற்காலிகமாக பிரச்சினையை திசை திருப்புகிறது. தெருவுக்கும், ஊருக்கும் சாதிப்பெயரை வைத்ததே இந்த திராவிடக் கட்சிகள்தான்.

தெருவுக்கும், ஊருக்கும் மட்டுமல்ல. பேருந்து நிலையத்துக்கும், ரயில் நிலையத்துக்கும், ஏன் விமான நிலையத்துக்கும் கூட சாதித்தலைவர்களின் பெயரை வைத்து ஓட்டு வாங்குவதே இவர்களுக்கு பிழைப்பாகப் போய்விட்டது. தெருவுக்கு தெரு சாதித்தலைவர்களுக்கு சிலை வைத்து, போலிஸ் பாதுகாப்பு போட்டு அரசியல்வாதிகளே கலவரத்தை தங்கள் சுயநலத்துக்காக உருவாக்குகிறார்கள். நம் நாட்டில் ஊழல், சாதிப்பிரிவினை, லஞ்சம் என்று எல்லா கேடுகளுக்கும் அரசியலும், கேடுகெட்ட அரசியல் வியாதிகளுமே காரணம்.

உலகில் எங்காவது நடக்குமா இந்த அநியாயம்? அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் சாதிப்பெயரில் தெருக்கள் உண்டா? சாதித்தலைவர்களுக்கு சிலைகள்தான் உண்டா?

சாதி வேண்டாம், சாதி வேண்டாம் என்று சொல்லிக்கொண்டே பள்ளியில் குழந்தைகளை சேர்க்கும்போது கூட, என்ன சாதி என்று கேட்டு எழுதி வாங்கிக் கொள்கிறார்கள். பிஞ்சு மனங்களின் மனதில் நஞ்சை விதைக்கிறார்கள். ஏனென்றால் சாதி மூலமாக இடஒதுக்கீடு போன்ற சலுகைகள் கொடுத்து, அப்பாவி மக்களின் ஓட்டுகளை வெட்கமில்லாமல் வாங்குகிறார்கள்.

சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடினான் பாரதி. அவன் வாக்கு பொய்த்துப்போனது இந்த அரசியல்வாதிகளால். சாதி இல்லாத இந்தியா எப்போது சாத்தியமாகுமோ, அதை என் வாழ்நாளில் என்று காணமுடியுமோவென்று ஏங்கித் தவிக்கிறேன்.

அன்புடன்
யுவகிருஷ்ணா
yuvakrishna.iyer@gmail.com