15 டிசம்பர், 2011

அழிக்கப் பிறந்தவன் - 1

யக்குனர் ஷங்கர் கமிஷனருக்காக காத்துக் கொண்டிருந்தார். கமிஷனர், முதல்வருக்கு புதுவருட வாழ்த்து சொல்ல கோட்டைக்கு போயிருப்பதாக சொன்னார்கள். ப்ளூ ஜீன்ஸும், கட்டம்போட்ட அரைக்கை சட்டையும் அணிந்திருந்தார். கைகளை மடக்கிக் கட்டிக்கொண்ட நிலையில், ஒரு கையை மட்டும் உயர்த்தி நகம் கடித்துக் கொண்டிருந்தார்.
பத்தொன்பது வருட திரையுலக வாழ்க்கையில் இப்படிப்பட்ட நெருக்கடியை அவர் சந்திப்பது அனேகமாக இது மூன்றாவது முறை. ஆயினும் இது ரொம்ப வித்தியாசமானது. இயல்பிலேயே கூல் ஆனவரான ஷங்கரை இவ்வளவு கோபமாகவும், டென்ஷனாகவும் அவரது உதவியாளர்கள் படப்பிடிப்புத் தளம் தவிர்த்து வேறெங்கும் கண்டதில்லை. தங்கள் இயக்குனரின் பரிதவிப்பைக் கவலையோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள். வழக்கமாக புதுவருட தினத்தை ஷங்கர் தனது குடும்பத்துக்காக முழுமையாக ஒதுக்கிவிடுவார். இன்றோ போலிஸ் கமிஷனரைப் பார்க்க வந்திருந்தார்.
வெளியே மீடியா குவிந்துக் கிடந்தது. இவர்களுக்கு மட்டும் எப்படித்தான் மூக்கில் வேர்த்து விடுகிறதோ தெரியவில்லை.
எதுக்கு சார் ஷங்கர் வந்திருக்கார்?”
ஏதாவது பர்சனல் பிராப்ளமா?”
அவரோட படம் வெளிவருவதுலே ஏதாவது அரசியல் சிக்கலா?”
புரொட்யூஸரோட ஏதாவது சம்பளப் பாக்கி விஷயமா பிரச்சினையா?”
ஷங்கரின் பி.ஆர்..வுக்கு பதில் சொல்லி மாளவில்லை. கையை உயர்த்தி, சுவிசேஷ தூதர் பாணியில், சமாதானப்படுத்தும் விதமாக, திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தார்.
எல்லாரும் வெயிட் பண்ணுங்க பாஸ் ப்ளீஸ். கமிஷனரைப் பார்த்ததும் ஷங்கர் சார் உங்களை வந்து முதல்லே பார்ப்பார். உங்க கேள்விக்கெல்லாம் நிச்சயம் விடை கொடுப்பார்
தம் அடிக்க பி.ஆர்..வை தனியாக அழைத்துச் சென்று அவர் மட்டும் நைசாக பிட்டை போட்டார்.
சார். மேட்டரை மட்டும் எக்ஸாக்டா ஒன்லைனில் சொல்லிடுங்க. போன்லே சொல்லி பிளாஷ் நியூஸ் ஓட்டிடுவேன். ஷங்கர் சார் படம் வேற பொங்கலுக்கு ரிலீஸ் ஆவுதில்லே? படத்துக்கு சரியான ஹைஃப் கிரியேட் பண்ணித் தந்துடலாம்
அவர் பிரபலமான தமிழ்சினிமா.காம் இணையத்தளத்தின் செய்தியாளர் அந்தணன். பத்திரிகையாளர் மட்டுமல்ல, சினிமாத் துறையைச் சேர்ந்தவர். ஒரு படத்தை தயாரித்த தயாரிப்பாளரும் கூட என்பதால் பி.ஆர்..க்கு எக்கச்சக்க தர்ம சங்கடம்.
வேறு வழியில்லாமல் அவரிடம் மட்டும் காதில் கிசுகிசுப்பாக சொன்னார்.
வர்ற பதினாலாம் ஆம் தேதிக்கி நண்பன் ரிலீஸ்னு பக்காவா ஷெட்யூல் பண்ணிட்டோம் சார். தமிழ்நாட்லே மட்டும் ஐநூறுக்கும் மேல தியேட்டர்லே ரிலீஸ் ஆவுது. தெலுங்கெல்லாம் சேர்த்தோமுன்னா, வேர்ல்டு ஃபுல்லா ஆயிரத்தை தாண்டும். ஆனா ரிலீஸுக்கு பதினைஞ்சி நாளுக்கு முன்னயே படத்தோட மாஸ்டர் டிவிடி பஜாருக்கு வந்துட்டதா ஒரு நியூஸ். அது சம்பந்தமாதான் சார் கமிஷனரைப் பார்க்க வந்திருக்கார். மேட்டரை நான் சொன்னேன்னு வெளியே லீக் பண்ணிடாதீங்க. சாரே வெளியே வந்து சொல்றமாதிரி இருக்கட்டுமே?”
வகையா மாட்டிக்கிட்டிச்சி ஸ்கூப் நியூஸ்,’ துள்ளலாக பறந்த அந்தணன், போனை எடுத்து யாருக்கோ ஒன் லைன் மேட்டரை மட்டும் நறுக்கென்று சொன்னார். “ஷங்கர் மீட்டிங் முடிஞ்சதுமே வெலாவரியா ஆஃபிஸுக்கே வந்து மீதியை சொல்றேன். ஃப்ளாஷ் ஓட்டிடுங்க
அடுத்த ஐந்து நிமிடத்தில் அங்கு குழுமியிருந்த எல்லா பத்திரிகையாளர்களின் செல்போனும் சிணுங்கத் தொடங்கியது.
நண்பன் திருட்டு டிவிடி வந்துடிச்சாம். தமிழ் சினிமா டாட் காமில் போட்டிருக்கான். ஷங்கர் கமிஷனர் ஆபிஸுக்கு அதுக்குதான் வந்திருப்பாரு. ஒருவேளை விஜய்யும் புகார் கொடுக்க வரலாம். ரெடியா இருங்க
விஜய் ஹீரோ என்பதால், இந்தப் பிரச்சினைக்கு அரசியல் சாயமும் பூசி டபுள் சென்சேஷனல் ஆக்கலாம். பத்திரிகையாளர்களுக்கு குஷியோ குஷி.
சன் நியூஸ் கேமிராமேன், ஷங்கரைஎக்ஸ்க்ளூசிவ் பைட்எடுக்க நல்ல லொக்கேஷனாக தேட ஆரம்பித்தார். தமிழ் பேசவே தெரியாத அந்த தமிழ் தொகுப்பாளினி, ஷங்கரிடம் என்ன பேசுவதென்று மைக்கை நீட்டிவைத்துக் கொண்டு, ‘ரிகர்சல்’ செய்துக் கொண்டிருந்தாள்.. “விஜய் சார் வந்தார்னா, ஒரு ஆட்டோகிராஃப் பர்சனலா வாங்கி வெச்சுக்கணும், ஹாட்டின் படம் போட்டிருந்த, ரோஸ் கலர் குட்டி ஆட்டோகிராஃப் டயரியை எடுத்து ஜீன்ஸ் பின்பாக்கெட்டில் சொருகிக் கொண்டாள்.
ஜீன்ஸ் படம் ரிலீஸ் ஆனபோதுதான் இந்த திருட்டு வீடியோ சமாச்சாரத்தினால் படத்தின் வசூல் எந்தளவுக்கு பாதிக்கப்படுகிறது என்பதை முழுமையாக உணர்ந்தார் ஷங்கர். முன்னதாக அவர் எடுத்திருந்த ஜெண்டில்மேன், காதலன், இந்தியன் படங்களுக்கு இவ்வளவு தொந்தரவில்லை. அப்போதெல்லாம் விசிடி பிளேயரும் அவ்வளவாக புழக்கத்துக்கு வரவில்லை. ‘நண்பன்படத்தை ரொம்பவும் நம்பிக் கொண்டிருக்கிறார் ஷங்கர். ஏனெனில் ஜெண்டில்மேன், காதலன், இந்தியன், முதல்வன், அந்நியன் என்றுன்னில் முடியும் படங்கள் அவரை கைவிட்டதேயில்லை. நச்சென்று இப்படி டைட்டில் பிடித்தால் பட்டி தொட்டியெல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட்டுதான்.
படம் இங்கே வெளிவந்து ஹிட் ஆகிவிட்டது என்கிற செய்தி கிடைத்ததுமே, எப்படியோ மலேசியாவிலேயோ, சிங்கப்பூரிலோ படத்துக்கு ஒரு மாஸ்டர் சிடி ரெடி செய்துவிடுகிறார்கள். குருவிகள் மூலமாக இங்கே வந்துவிடுகிறது. ஏர்போர்ட் செக்கிங்கில் மாட்டிக் கொண்டாலும், மால் கீல் வெட்டி எப்படியாவது வெளியே கொண்டு வந்து விடுகிறார்கள்.
மண்ணடியிலோ அல்லது பாண்டிச்சேரியிலோ பல்லாயிரக் கணக்கில் காப்பி போடுகிறார்கள்பர்மா பஜாரில் இருந்து தமிழகம் முழுக்க சில்லறை விசிடி வியாபாரிகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது. திருட்டு விசிடி வந்துவிட்டது என்பது போலிஸைத் தவிர பொதுமக்கள் எல்லோருக்கும் தெரிந்து விடுகிறது. சினிமா இண்டஸ்ட்ரி என்பதுமாதிரி திருட்டு டிவிடி இண்டஸ்ட்ரியும் இப்போது பெரியதாக நிறுவப்பட்டிருக்கிறது. திருட்டு டிவிடி விற்பனையை நம்பியும் ஆயிரக்கணக்கானவர்கள் வாழத் தொடங்கி இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் லட்சக்கணக்கானவர்களின் வயிற்றில் அடித்து வாழ்கிறார்கள். புரொடக்ஷன் கம்பெனி ஆபிஸ் பாய் தொடங்கி, தியேட்டரில் பைக் டோக்கன் போடும் பையன் வரை திருட்டு டிவிடியால் பாதிக்கப்படுகிறான்.
ஜீன்ஸுக்கு பிறகு முதல்வன். படம் வெளியாகி வெற்றிகரமாக தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருந்த நேரத்தில், சாலைகளில் ஓடிக்கொண்டிருந்த ஆம்னி பஸ் டிவியிலும் முதல்வன் ஓடிக்கொண்டிருக்கிறான் என்பதை கேள்விப்பட்டதும் வெறுத்துப்போனார் ஷங்கர். அப்போதெல்லாம் தனது படத்தை திருட்டு வீடியோ ஆட்களிடமிருந்து பாதுகாக்க கராத்தே ஹூசைனியை ஒப்பந்தத்துக்கு நியமித்திருந்தார். ஆதாரப்பூர்வமாக ஹூசைனி பிடித்துக் கொடுத்த ஆட்கள் மீது போலிஸில் சரியான நடவடிக்கை இல்லை. விசாரித்ததில் தெரியவந்த அரசியல் குறுக்கீடுகளும், பின்னணியும் ஷங்கருக்கு பெரிய அயர்ச்சியைத் தந்தது. போதாதற்கு அந்த தூங்காநகரத்தின் கேபிள் டிவிகளிலும், பத்தாவது நாளிலேயே முதல்வன் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருந்தான்.
பாய்ஸ் படமெடுத்தபோது, டிரைலரிலேயே ஷங்கர் இந்தப் பிரச்சினையைத் தொட்டிருந்தார். தனது படங்களை திருட்டு விசிடியில் பார்க்க முடியாது. பார்த்தாலும் படம் பார்த்த முழுமையான நிறைவு கிடைக்காது என்பதாக டிரைலரில் சவால் விட்டிருந்தார். ரசிகர்கள் தியேட்டரில் பார்க்க வேண்டும் என்பதற்காகவே திரையில் பிரம்மாண்டங்களை உருவாக்க, ஒவ்வொரு காட்சிக்கும் மூளையைக் கசக்கி மெனக்கெடத் தொடங்கினார். அந்நியன், சிவாஜி, எந்திரன். இப்போது ஓரளவுக்கு ரசிகர்களுக்கு விளங்கி விட்டது. ஷங்கர் படமென்றால் பெரிய ஸ்கீரினில் பார்த்தால்தான் திருப்தி தரும். டிவியில் கேமிரா பிரிண்ட் பார்த்தால் வேலைக்கு ஆகாது.
ஆனால் இந்த நண்பனின் கதை வேறு. ஒரு பெரிய படத்தை ரிலீஸுக்கு முன்பாகவே பார்த்துவிடும்த்ரில்ரசிகர்களுக்கு கிடைத்து விடும். முதன் முதலாக ஷங்கர் - விஜய் காம்பினேஷன். பாட்டெல்லாம் ஏற்கனவே சூப்பர்ஹிட். இந்தியில் பெரிய ஹிட் அடித்த த்ரீ இடியட்ஸை தமிழுக்கு கொண்டு வந்திருக்கிறார். அமீர்கான் உருவாக்கியதைவிட பிரம்மாண்டமாக எடுத்திருக்கிறார் என்று இண்டஸ்ட்ரியே மூக்கில் விரல் வைக்கிறது. ரஜினி ரஷ் பார்த்துவிட்டு ஷங்கரையும், விஜய்யையும் கட்டிப் பிடித்துக் கொண்டாராம். ரசிகர்களிடம் ஏற்பட்டிருக்கும் இவ்வளவு பெரிய எதிர்ப்பார்ப்பை எப்படி எதிர்கொள்வது என்று ஷங்கருக்கே டென்ஷன்.
நிலைமை இப்படி இருக்கையில் பட ரிலீஸுக்கு இரண்டு வாரம் முன்பு திருட்டு டிவிடி வந்துவிடுகிறது என்பதால் ஏற்படும் விளைவுகள் கற்பனைக்கு எட்டாதது. பதினைந்து நாள் என்பது இன்றைய தேதியில் மிக நீண்ட அவகாசம். குறைந்தபட்சம் பதினைந்து லட்சம் பேராவது ரிலீஸுக்கு முன்பே படத்தைப் பார்த்துவிடுவார்கள்.
பதினைந்து ரூபாய் டிவிடியில் படம் பார்த்தவர்கள், நூற்றி ஐம்பது ரூபாய் செலவு செய்து தியேட்டருக்கு வரவே போவதில்லை. இதனால் ஓபனிங் கலெக்ஷன் கடுமையாகப் பாதிக்கப்படும். படம் நன்றாக இருந்தாலும், இது சரியில்லை, அது நொட்டை என்று விமர்சனப் பிடுங்கிகள்  இண்டர்நெட்டிலும், பிளாக்குகளிலும் விமர்சனம் எழுதிவிடுவார்கள். மவுத் டாக் வழியாகவே படத்தின் கதை, காட்சியமைப்புகள் எல்லாருக்கும் பரவிவிடும். படத்தை பெரிய விலை கொடுத்து ஏரியா வாங்கிய விநியோகஸ்தர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எம்.ஜி.க்கு எடுத்த தியேட்டரெல்லாம் அம்போதான். இவ்வளவு கோடிகளை கொட்டி நல்ல படத்தை எடுத்தும் தயாரிப்பாளருக்கு இப்போது நிம்மதியில்லை. எத்தனையோ பேரின் வாழ்வை சிதைக்கப் போகிறது இந்தப் படத்தின் திருட்டு டிவிடி.
அதுவும் இல்லாமல் ஷங்கருக்கும் இந்தப் படம் மிகப் பெரிய கவுரவப் பிரச்சினை. அமீர்கானிடம் இருந்து தமிழுக்கு உரிமை வாங்கியதில் தொடங்கிய சிக்கல், விஜய் நடிப்பதில் தொடர்ந்து, படப்பிடிப்பு முடிந்து இன்று படத்தின் ரிலீஸ் வரைக்கும் கூட தொடர்ந்துக் கொண்டேயிருக்கும் என்று அவர் கனவிலும் நினைத்ததில்லை. இவ்வளவு மன உளைச்சலை இதற்கு முந்தைய அவரது படங்கள் எதுவும் தந்ததில்லை.
நீண்ட வரிசையில் நின்று முதல்வரை சந்தித்துவிட்டு வந்த சென்னை மாநகர காவல் ஆணையாளர் கொஞ்சம் சோர்வாகவே காணப்பட்டார். கண்ணாடியைக் கழற்றி, நெற்றி வியர்வையைத் துடைத்துக் கொண்டார். ஷங்கர் வந்திருக்கிறார் என்றதும் கொஞ்சம் குஷி வந்தது.
உங்களை ரொம்ப நாளா பார்க்கணும்னு ஆசை ஷங்கர். எனக்கு உங்க படங்கள்னா ரொம்பப் பிடிக்கும். ஜெண்டில்மேன்லே ஒரு போலிஸ் கேரக்டர் சரண்ராஜுக்கு செதுக்கியிருப்பீங்களே? என்னை ரொம்ப இன்ஸ்பையர் பண்ண கேரக்டர் அது. பழனியிலே மொட்டை போட்டுப்பாரு பாருங்க. கண்கள்லே ஒரு வெறி தெரியும். பிரில்லியண்ட் பெர்ஃபாமன்ஸ். ஒவ்வொரு போலிஸ்காரனுக்கும் இந்த வெறி நிச்சயமாக இருக்கணும்
கமிஷனரின் முரட்டு மீசைக்குப் பின்னால் இப்படியொரு வெள்ளந்தியான சினிமாரசிக மனோபாவம் இருக்கும் என்பதை ஷங்கரே எதிர்ப்பார்க்கவில்லை. சன்னமாக புன்னகைத்துக் கொண்டே, வழக்கமான ஆரம்பப் பேச்சுக்கான சம்பிரதாயங்களை முடித்துக் கொண்டார்.
சார், நான் வந்த விஷயமே வேற. வர்ற பொங்கலுக்கு என்னோட புதுப்படத்தை ரிலீஸ் பண்றேன். ரிலீஸுக்கு இன்னும் ரெண்டு வாரம் இருக்கு. ஆனால் நேத்தே பர்மா பஜாருக்கு படத்தோட டி.வி.டி. புழக்கத்துக்கு வந்துட்டதா கேள்விப்பட்டேன். ஒரு அனானிமஸ் போன் கால் வந்தப்போ தான் எங்களுக்கே விஷயம் தெரிஞ்சது.
மண்ணடியிலே பிரிண்ட் போட்டுக்கிட்டிருந்த ஒருத்தனை என்னோட அசிஸ்டண்ட்ஸ் கையும் களவுமா, ரிஸ்க் எடுத்து புடிச்சி போலிஸ்லே கொடுத்திருக்காங்க.
எழுவது, எம்பது கோடி ரூவாய் செலவு பண்ணி புரொட்யூஸர் எடுத்திருக்கார் சார். நூத்தி ஐம்பது, இருநூறு கோடி வியாபாரம் நடக்கப் போற படமிது. நானூறு, ஐநூறு பேர் சேர்ந்து ரொம்ப ஹார்ட் ஒர்க் பண்ணி எடுத்திருக்கோம். பத்து மாசத்துக்கும் மேலா மனசுலேயும், உடம்புலேயும் சுமந்திருக்கோம். சுகப்பிரசவம் ஆக இன்னும் பதினைஞ்சே நாளிருக்கறப்போ, சம்பந்தமில்லாத எவனோ அபார்ஷன் பண்ணி எங்க குழந்தையை வெளியே எடுத்துட்டான்னா எங்க மனசெல்லாம் என்ன பாடுபடும்?” உணர்ச்சிவசப்பட்டு பேசிக்கொண்டே போனார் ஷங்கர். அவரது படத்துக்கு கூட இவ்வளவு கவனமெடுத்து நீண்டடயலாக்அமைக்கமாட்டார்.
கூல் ஷங்கர் கூல்சொன்ன கமிஷனர், கண்ணாடி தம்பளர் எடுத்து தண்ணீர் குடித்து, தன்னை கூலாக்கிக் கொண்டார்.
 “உங்க ஆவேசம் புரியுது. ஆக்சுவலா இந்த மார்க்கெட் நீங்களோ, நானோ நினைக்கிறதை விட ரொம்ப பெருசு. இது வெறும் பர்மா பஜார் மேட்டர்னு சுருக்கிடாதீங்க. நாம கொஞ்சமும் நெனைச்சேப் பார்க்க முடியாத பெரிய ஆளுங்க சிலர் கூட இந்த பிசினஸில் இருக்காங்க. ஆனாலும் நீங்க கவலைப் படாதீங்க. உங்க விஷயத்தை நானே பர்சனலா கேர் எடுத்துப் பார்த்துக்கறேன். இதுக்கு மேலே ஒரே ஒரு டிவிடி கூட வெளியே போகாதமாதிரி இம்மீடியட் ஆக்சன்ஸ் எடுக்கறேன்வெளியே காத்துக்கிட்டிருக்கற மீடியா கிட்டே மட்டும் இந்த விஷயத்தை தயவு செஞ்சி சொல்லிடாதீங்க. மேட்டர் லீக் ஆச்சின்னா, எங்க ஒர்க்குக்கு தேவையில்லாத டிஸ்டர்பன்ஸ் வரும். உங்கப் படத்துக்கும் கெட்ட பேரு. ஹீரோ விஜயாமே? கட்சி கிட்சியெல்லாம் ஆரம்பிக்கப் போறதா சொல்றாங்க. பெரிய இடங்களிலேருந்து அழுத்தமும் வரும்
இந்த விஷயத்தில் போலிஸை நம்புவதைத் தவிர இப்போதைக்கு வேறு வழியுமில்லை ஷங்கருக்கு. கமிஷனரிடம் இறுக்கமாக கை குலுக்கி விடைப்பெற்றார். வெளியே காத்திருந்த நிருபர்களிடம் சிரித்தவாறே பேசினார்.
திருட்டு டிவிடியா? அப்படின்னா என்னங்க? இன்னும் படமே சென்சார் ஆகலை சார். அதுக்குள்ளே எப்படி திருட்டு டிவிடி வரும்? ஒருவேளை எங்க யூனிட்டோடவே உட்கார்ந்து திருட்டு டிவிடி கேமிராமேனும் படம் புடிச்சிருந்தாருன்னா மட்டும்தான் இது சாத்தியம்.” ஜோக் அடித்தார் ஷங்கர்.
கமிஷனர் என்னோட நீண்டநாள் நண்பர். முதல் படத்துலேருந்தே என் படங்களோட ரெகுலர் ரசிகர். புதுவருட வாழ்த்துகளை பரிமாறிக்கொள்ள அவரோட அலுவலகத்துக்கு நட்பு நிமித்தமா வந்தேன். சினிமா பத்தியும் பேசினோம். யாரு கண்டா? என்னோட அடுத்த படத்துலே அவரே கூட ஹீரோவா நடிக்கலாம். நீங்க நினைக்கிற மாதிரி பிரச்சினையோ இல்லைன்னா ஸ்கூப் நியூஸ் எதுவுமோ எங்க சந்திப்புக்கு பின்னாடி நிச்சயமா இல்லை. எல்லோருக்கும் ஹேப்பி நியூ இயர்
ஏற்கனவே நியூஸை தெரியாத்தனமாகலீக்செய்துவிட்ட பி.ஆர்.. திருதிருவென முழித்துக் கொண்டிருந்தார். தலையை சொறிந்து கொண்டார்.

(தொடரும் - 1)

14 டிசம்பர், 2011

இதுதான் புரட்சி!

மக்கள் மந்தைகளல்ல என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார்கள். நாம் வாழும் சமகாலத்தில், என் தலைமுறைவுக்கு இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் மக்கள் தன்னிச்சையாக திரள்வதைக் காணுவது இதுதான் முதன்முறை. தங்கள் வாழ்வாதாரத்துக்கான உரிமையை வேண்டி, நியாயமான முறையில் கேரள எல்லையில் திரண்டுக் கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை லட்சங்களை தாண்டிக் கொண்டிருக்கிறது.

பொதுவாக கூட்டம் கூட்ட வேண்டுமானால் ஏதேனும் ஒரு அரசியல் கட்சியாலோ, சாதி சங்கத்தாலோ, மதத்தின் பெயராலோ, இன்னபிற கருமாந்திரங்களின் அடிப்படையிலோதான் முடியுமென்ற என்னுடைய மூடநம்பிக்கையை தகர்த்து எறிந்திருக்கிறார்கள் மேற்கு தமிழகத் தமிழர்கள். எந்தவொரு அமைப்பின் (பிரதிபலன் நாடும்) ஆதரவினையோ, வன்முறைத் தூண்டுதலையோ துச்சமாக தூக்கியெறிந்திருக்கிறார்கள்.

ஃபேஸ்புக்கில் தினமும் நான்கு ஸ்டேட்டஸ்கள் போட்டாலே போராளி ஆகிவிடுவதற்கான தகுதி நமக்கு இப்போது கிடைத்துவிடுகிறது. இத்தகைய போராளிகளுக்கு ஊடகவெளிச்சம், பொருளாதார உதவிகள் என்று எட்டுத்திக்கிலும் ஆதரவும் கிடைக்கிறது. கடற்கரைக்கு மெழுகுவர்த்தி ஏந்திப்போவதுதான் போராட்டத்தின் உச்சக்கட்ட உபாயம் என்கிற அசட்டு மாயையை அனாயசமாக உடைத்தெறிந்திருக்கிறார்கள். கோடிகளை கொட்டி ஊழலுக்கு எதிராக நடைபெறும் உண்ணாவிரதங்களின் அபத்தத்தை தங்கள் நேர்மையான போராட்ட முறையால் அம்பலப்படுத்தி இருக்கிறார்கள். இதுவரை சட்டத்துக்கோ, மத்திய மாநில அரசுகளுக்கோ எந்த மரியாதையும் தராத கேரள அரசின் முதல்வர் இறங்கிவந்து அறிக்கை கொடுத்திருப்பதைக் காணும்போது, இப்பிரச்சினை மட்டுமின்றி நம்முடைய எல்லாப் பிரச்சினைகளுக்குமான தீர்வு நமக்கு நீதிமன்றங்களிடமோ, அரசுகளிடமோ இல்லை. மக்களிடம்தான் இருக்கிறது என்று தோன்றுகிறது.

முல்லைப் பெரியாறுக்காக திரளுபவர்களுக்கு ஃபேஸ்புக் தெரியாது. மெழுகுவர்த்தியை மின்தடை நேரத்தில் வெளிச்சத்துக்காக மட்டுமே பயன்படுத்துவார்கள். ‘முற்றுகை’ எனும் மனிதக்குலத்தின் மரபார்ந்த போராட்டமுறையைதான் கையில் எடுத்திருக்கிறார்கள். இங்கே திரளுபவர்கள் விவசாயிகள் என்பதாக பிம்பம் ஏற்படுத்தப்படுகிறது. சென்னையில் சாஃப்ட்வேர் துறையில் பணியாற்றும் தேனிக்காரர்கள் கூட விடுப்பு எடுத்துக்கொண்டு செல்கிறார்கள்.

மக்கள் திரளை கட்டுப்படுத்த முடியாத நிலையில்தான் அரசு இருக்கிறது. எத்தனை பேரை கைது செய்ய முடியும்? முதல் நாள் இருநூறு பேர் வந்தார்கள். அடுத்த நாள் ஆயிரம். அதற்கு அடுத்த நாள் பத்தாயிரம். பத்து நாட்களில் லட்சத்துக்கும் மேற்பட்டோர். வேண்டுமென்றே அப்பகுதிகளில் பெட்ரோல் தட்டுப்பாட்டினை ஏற்படுத்தியும் கூட, வாகனங்களை கைவிட்டு கால்நடையாகவே செல்கிறார்கள். மாட்டு வண்டி கட்டி கூட்டமாக செல்கிறார்கள்.

காவல்துறையினரின் தடைகளை மாட்டு மந்தைகளை அனுப்பி கலைத்து, வழி ஏற்படுத்தி சென்றுக்கொண்டே இருக்கிறார்கள். “தயவுசெய்து திரும்பிப் போங்கள். எல்லையில் கேரள காவலர்கள் துப்பாக்கி வைத்துக் கொண்டு காத்திருக்கிறார்கள்” என்று காவல்துறை அச்சமூட்டியும் திரளும் மக்களை திரும்பப் போக வைக்க முடியவில்லை. ‘ஷூட்டிங் ஆர்டர்’ வைத்துக்கொண்டு கேரள போலிஸ் காத்திருக்கிறது என்கிற வதந்தியை யாரும் நம்பத் தயாரில்லை.

அரசுகளுக்கு, அதிகாரங்களுக்கு, அரசியல்வாதிகளுக்கு, நீதிமன்றங்களுக்கு, ஊடக சாம்ராஜ்யங்களுக்கு சாமானிய மக்கள் தந்திருக்கும் எச்சரிக்கை மணிதான் முல்லைப்பெரியாறு முற்றுகை. ‘இனியும் நாங்கள் கிள்ளுக் கீரைகளல்ல’ என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லியிருக்கிறார்கள். ‘தெலுங்கானா போராளிகளுக்கு எவ்விதத்திலும் நாங்கள் சளைத்தவர்களல்ல’ என்று தமிழர்கள் எடுத்துக் காட்டியிருக்கிறார்கள். சாதாரண குடிமக்களை பாதிக்கும் பிரச்சினைகளில் இம்மாதிரி இனியும் மக்கள் அணிதிரள்வதாக இருந்தால் அமைப்புகளோ, கட்சிகளோ, ஏன் அரசுகளோ கூட தேவையில்லை என்று நினைக்கிறேன்.

மக்கள்தான் மகேசர்கள். மக்கள்தான் நம் இறுதி நம்பிக்கை. மக்கள்தான் எல்லாம். நேற்று கூடங்குளத்துக்காக திரண்டார்கள். இன்று முல்லைப்பெரியாறுக்காக திரள்கிறார்கள். நாளை ஒரு பொதுப்பிரச்சினை என்றால் மாநிலம் முழுக்க திரள்வார்கள். இந்தப் பொறி பரவும். நாடு முழுக்க வெடிக்கும். மக்களின் நிஜமான பிரச்சினைகளை முன்வைத்து அரசு நடத்த இந்தியப் பேரரசை கோரும். அடிபணிந்தால் அரசுகள் நீடிக்கும். இல்லையேல் மக்களே தங்களுக்கு தாங்களே மகுடம் சூட்டிக் கொள்வார்கள்.