10 ஜனவரி, 2012

வால்கள்!


குறும்பு குத்தாட்டம் போடும் கும்மிகளை ஏன் ‘வாலு’ என்று அழைக்கிறார்கள் என்ற சந்தேகம் சிறுவயதில் இருந்தது. குரங்கு என்று நாகரீகமாக அழைக்கக் கூடாது என்ற நல்லெண்ணத்திலேயே ‘வாலு’ வந்தது என்று பிற்பாடுதான் தெரியவந்தது. நரிக்கும் வாலுண்டு, ஓநாய்க்கும் வாலுண்டு. ஏனோ தந்திரவாதிகளை வாலு என்று அழைக்காமல் ஓநாய் என்கிறார்கள். குரங்கு நல்ல விலங்கு என்பதாலோ?

ராஜேந்திரகுமார் என்றால் என்ன நினைவுக்கு வரும்? முதலில் நினைவுக்கு வருவது தொப்பி. அடுத்தது ‘ஙே’. இந்த ‘ஙே’ என்ற எழுத்தை தமிழில் எனக்குத் தெரிந்து பயன்படுத்தியவர் இவர் மட்டும்தான். ஒருவேளை சங்க இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம். ’ஙே’-வுக்கு அடுத்தது பேய்க்கதைகள். சிறுவயதில் அவரது நிறைய பேய்க்கதைகளை படித்து பயந்திருக்கிறேன். அப்புறமாக பேய்களோடு வசதியாக சம்மணம் போட்டு உட்கார்ந்துகொண்டு டிஃபன் சாப்பிடும் லெவலுக்கு பழகிப்போனது.

ராஜேந்திரகுமாரின் பேய்கள் பொதுவாக நல்ல பேய்கள். கெட்டவரை பழிவாங்குவதோடு சமர்த்தாக மரத்தில் தொங்க ஆரம்பித்துவிடும். டீனேஜுக்குள் நுழையும்போது அவரது சில எழுத்துக்கள் கிளுகிளுப்பும் ஊட்டியதுண்டு. விட்டலாச்சாரியா படங்களில் வருவதுபோல சில பேய்கள் இவரது கதைகளில் மனிதர்களோடு செக்ஸ் வைத்துக் கொண்டதும் கூட நினைவுக்கு வருகிறது.

மாலைமதி, குங்குமச்சிமிழ் மாதிரியான பத்திரிகைகளின் தீவிரவிசிறியான அம்மா மட்டுமே ராஜேந்திரகுமாரை ஒரு நகைச்சுவை எழுத்தாளர் என்று என்பார். அவர் குமுதத்தில் எழுதிய நகைச்சுவைத் தொடர் ‘வால்கள்’. மாணவியாக இருந்தபோது இடைவிடாமல் படித்ததாக அம்மா சொல்லுவார். வயிறுகுலுங்க சிரிக்க வைக்கும் தொடராம். ‘வால்கள்’ வந்தபோது அம்மாவுக்கு எட்டுவயசாம். அப்போன்னா ராஜேந்திரகுமாருக்கு என்ன வயசு இருக்கும்? தாத்தா வீட்டில் ’பொன்னியின் செல்வன்’ தவிர்த்து வேறு தொடர்கதைகளை ‘பைண்டு’ செய்து வைக்கும் வழக்கம் இல்லாததால் எனக்கு எதிர்ப்பார்ப்புகளை கிளப்பிய வால்களை நீண்டகாலமாக வாசிக்கும் வாய்ப்பே கிடைக்காமல் இருந்தது.

கிழக்குப் பதிப்பகத்தின் அதிரடிக் கண்காட்சி ஒன்றில் ‘வால்கள்’ கிடைத்தது ஆச்சரியமான ஒன்று. மே 2006லேயே வெளியிட்டிருக்கிறார்கள். எனக்கு எப்படி தெரியாமல் போயிற்று?

நூலை விடுங்கள். கிழக்கு தந்திருக்கும் முன்னுரை நல்ல சுவாரஸ்யம். ராஜேந்திரகுமாருக்கு வாசகர் வட்டம் பரவியதே வால்களுக்குப் பின்னர்தானாம். 1963ல் இது தொடராக வந்தபின்னர் ஏராளமான தொடர்கதைகள், சிறுகதைகளை எழுதி தமிழ்வார இதழ்களின் சூப்பர்ஸ்டாராக திகழ்ந்தாராம். இதே காலக்கட்டத்தில் ராஜேஷ்குமார் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்திருப்பார் என்று நினைக்கிறேன். திரைப்படத்துறையிலும் ராஜேந்திரகுமார் வெற்றிகண்டதாக முன்னுரையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. என்னென்ன படங்கள் என்று யாராவது பெருசுகள் பின்னூட்டத்தில் எடுத்துத்தந்தால் தேவலை.

மாவடிபுரம் லேடி சாமுவேல் நினைவு பெண்கள் உயர்நிலைப்பள்ளி. ஒன்பதாவது வகுப்பு ‘பி’ பிரிவைக் கண்டாலே மாவடிபுரத்துக்கு அலர்ஜி. அந்த ஊரின் வால்கள் மொத்தத்தையும் இந்த பிரிவிலேயே சிறை வைத்திருப்பார்கள். ஒவ்வொன்றும் ஒரு யமன். பள்ளி ஆசிரியைகளுக்கோ அந்த வகுப்புக்கு போகும் ஒவ்வொரு பீரியடும் சிம்ம சொப்பனம் தான். உள்ளே புகுந்ததுமே ‘பே’ என்று பேய்க்கத்து கத்தி அலறவைப்பார்கள். ஆசிரியைகள் ’ஙே’ என்று விழிக்க வேண்டியதுதான்.

லீடர் அணிலா, சினிமாநட்சத்திரத்தின் தங்கை பிரேமாதேவி, மைதிலி, வைதேகி, ரேவம்மா, போட்டோகிராபர் சோணாச்சலம்,சீதா, விஜயா, மிலிட்டரி புருஷன் அடிக்கடி கொஞ்சும் மரகதம் டீச்சர், தலைமையாசிரியை என்று நிறைய கேரக்டர்கள். வாலுகள் சமைக்கிறார்கள், படிக்கிறார்கள், பிக்னிக் போகிறார்கள், சினிமா பார்க்கிறார்கள், நூல் முழுக்க கலகலப்பு. ஆனால், நிச்சயமாக இது குழந்தைகள் இலக்கியம் அல்ல. ஆண்ட்டிகள் படித்தால் மலரும் நினைவுகள். ஸ்கூல் ஃபிகர்கள் படித்தால் நடப்பு வாழ்க்கை. ஆண்களுக்கோ டீனேஜ் பெண்களின் புது உலகம். இளமையாக சுவாரஸ்யமாகவே இருக்கிறது. நிச்சயம் வாசிக்கலாம். 1960 என்றாலே பிளாக் & ஒயிட்டில் அழுதுவடியும் படங்கள் நினைவுக்கு வருகிறது. ஃபிலிம் மட்டும் தான் கருப்புவெள்ளை, வாழ்க்கை அப்போதும் கலர்ஃபுல்லாகவே இருந்தது என்பதற்கு இந்நூல் நல்ல ஆதாரம்.

ஆனால், எனக்கு அம்மா சொன்னமாதிரி குலுங்க குலுங்க சிரிக்கவைக்கவில்லை. கிழக்கு பதிப்பகம் நூலின் முன்னுரையில் குறிப்பிட்டிருப்பது மாதிரி ஓரிரு இடங்களில் அதிகபட்சமாக புன்னகை வந்தது அவ்வளவுதான். கிழக்கு பதிப்பக நூல்கள் மீது பலரும், பலவிதமான விமர்சனங்களை வைப்பதுண்டு. என்னுடைய விமர்சனம் என்னவென்றால் இவர்கள் நகைச்சுவை என்று வகைப்படுத்தி பிரசுரிக்கும் நூல்கள் எனக்கு நகைச்சுவையை வரவழைப்பதில்லை, கிரேஸிமோகன் நூல்கள் மாதிரியான ஓரிரண்டு நீங்கலாக. மற்றபடி வெகுஜனவாசிப்புக்கான புதிய தளத்துக்கான கதவுகளை மிக விசாலமாகவே திறந்துவைத்திருக்கிறார்கள் கிழக்குப் பதிப்பகத்தார்.


நூலின் பெயர் : வால்கள்!

நூல் ஆசிரியர் : ராஜேந்திரகுமார்

விலை : ரூ.70/-

பக்கங்கள் : 96

வெளியீடு : கிழக்கு பதிப்பகம்,
177/103, முதல் தளம், அம்பாள்ஸ் பில்டிங், லாயிட்ஸ் ரோடு,
ராயப்பேட்டை, சென்னை - 600 014.
தொலைபேசி : 044-42009601
தொலைநகல் : 044-43009701

9 ஜனவரி, 2012

இரும்புக்கை மாயாவிக்கு வயது 40

‘முத்து காமிக்ஸ்’, ‘லயன் காமிக்ஸ்’, ‘திகில் காமிக்ஸ்’, ‘மினி லயன்’, ‘ஜூனியர் லயன்’, ‘காமிக்ஸ் கிளாசிக்ஸ்’ என்றெல்லாம் நம் சிறுவயது வாழ்க்கையை சுவாரஸ்யப்படுத்திய காமிக்ஸ்கள் எத்தனை... எத்தனை? இந்த காமிக்ஸ் பத்திரிகைகளுக்கெல்லாம் பிள்ளையார் சுழி போட்ட ‘முத்து காமிக்ஸ்’க்கு இந்த பொங்கலோடு வயது நாற்பது என்று சொன்னால் நம்புவதற்கு கொஞ்சம் சிரமம்தான். ஆனாலும் நம்பித்தான் ஆகவேண்டும்.

1972 பொங்கலுக்கு ‘முத்து காமிக்ஸ்’ வெளிவந்தபோது, அதோடு முதல் இதழ் கண்ட இன்னொரு பிரபலமான பத்திரிகை ‘துக்ளக்’!

இந்தியாவிலேயே தொடர்ச்சியாக நாற்பது ஆண்டுகளாக காமிக்ஸ் ஒரு இயக்கமாக வாழ்வது தமிழில் மட்டுமே நடந்துவரும் சாதனை.அந்த நாட்களை மகிழ்ச்சியோடு நினைவு கூர்கிறார் ‘முத்து காமிக்ஸின்’ நிறுவனர் சவுந்தரபாண்டியன்.

"ஐம்பதுகளில் இருந்தே எங்கள் குடும்பம் சிவகாசியில் அச்சு தொடர்பான தொழில்களில் ஈடுபட்டிருக்கிறது. ஐரோப்பாவில் இருந்து கலர் ஆப்செட் இயந்திரம் ஒன்றினை இறக்குமதி செய்வது எங்கள் திட்டமாக இருந்தது. நமக்கு புதியது என்பதால், அந்த இயந்திரத்தை இயக்குவதற்கு பயிற்சி தேவைப்பட்டது. அதற்காக 1967ல் சென்னைக்கு வந்தேன். நாகிரெட்டியின் வடபழனி அச்சகத்தில் அந்த இயந்திரம் இருந்தது. பயிற்சிக்காக இங்கே வந்தபோது துடிப்பான இளைஞனாக இருந்ததால் நாகிரெட்டிக்கு என்னை மிகவும் பிடித்துப் போனது. குழந்தைகளிடையே பிரபலமான ‘அம்புலிமாமா’ பத்திரிகையை நாகிரெட்டிதான் அச்சடித்து, வெளியிட்டு வந்தார்.

அங்கே அச்சடிக்கப்படும் பத்திரிகைகளை எல்லாம் ஆவலோடு வாசிப்பேன். ‘ஃபால்கன் காமிக்ஸ்’ என்று ஐரோப்பிய காமிக்ஸ்களை தமிழில் மொழிபெயர்த்து வெளியிடுவார்கள். அந்த காமிக்ஸ்க்கு பரிந்துரைக்கப்பட்ட ஒரு பாத்திரம் ‘இரும்புக்கை மாயாவி’. ஏனோ அவர்களுக்கு இவரைப் பிடிக்கவில்லை. மாறாக என்னை ரொம்பவும் கவர்ந்துவிட்டார் ‘மாயாவி’. பத்து மாத அச்சு இயந்திரப் பயிற்சி முடிந்து ஊருக்குப் போயும் மனம் முழுக்க ‘இரும்புக்கை மாயாவி’ நிறைந்திருந்தார். நாமே ஏன் ஒரு காமிக்ஸை தொடங்கக்கூடாது என்று நினைத்தேன்.

அடுத்த ஆண்டே லண்டனுக்கு பயணித்து ‘இரும்புக்கை மாயாவி’யை தமிழில் வெளியிடுவதற்கான உரிமைகளை பெற்றேன். தகுந்த காலநேரம் பார்த்து 1972 பொங்கலுக்கு ‘முத்து காமிக்ஸி’ன் முதல் இதழை கொண்டு வந்தேன். முதல் இதழை கையில் எடுத்துப் புரட்டிப் பார்க்கும்போது, என் முதல் குழந்தையை கையில் வாங்கியபோது கிடைத்த பரவசத்தை அடைந்தேன். விளையாட்டாக நாற்பது ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்போது அந்த கணத்தை நினைத்தாலும் சிலிர்க்கிறது..." பழைய நினைவுகளில் மூழ்கிப் போனார் சவுந்தர பாண்டியன்.

அப்பாவின் காமிக்ஸ் ஆர்வம் இவரது மகன் விஜயனுக்கும் தொற்றிக் கொண்டது. விளைவு, 1984ல் ‘லயன் காமிக்ஸ்’ அறிமுகம். ‘லயன் காமிக்ஸி’ன் ஆசிரியரானபோது விஜயனுக்கு வயது ஜஸ்ட் பதினேழுதான்.

‘முத்து காமிக்ஸ்’க்கு முகவரி ‘இரும்புக்கை மாயாவி’ என்றால், ‘லயன் காமிக்ஸ்’க்கு ஆரம்பக் காலத்தில் கை கொடுத்த ஹீரோ ‘சிலந்தி மனிதன் ஸ்பைடர்’. வாசகர்களிடையே பரபரப்பான வரவேற்பினை ‘லயன்’ பெற, அடுத்தடுத்து ஜீனியர், மினி லயன்கள் உருவாயின. ‘திகில் காமிக்ஸ்’ என்ற பெயரில் த்ரில்லர் காமிக்ஸ்களையும் வெளியிட்டார்கள். முத்து, லயன் காமிக்ஸ்களின் பழைய கதைகளை, புதிய வாசகர்களுக்கு தருவதற்கு ஏதுவாக ‘காமிக்ஸ் க்ளாசிக்ஸ்’ என்கிற புதிய காமிக்ஸ் பத்திரிகையும் தொடங்கப்பட்டது.

சவுந்தரபாண்டியனைத் தொடர்ந்து அவரது மகன்கள் விஜயன், பிரகாஷ் ஆகிய இருவரும் காமிக்ஸ் தொழிலில் ஈடுபட்டதைப் போலவே, இப்போது மூன்றாவது தலைமுறையாக விஜயனின் மகன் விக்ரமும் இதில் ஆர்வம் செலுத்துகிறார். இவர்களது குடும்பத்துக்கு காமிக்ஸ் என்பது பெரியதாக லாபம் தரும் தொழிலல்ல. ஆர்வத்தின் பேரிலேயே இத்தனை ஆண்டுகளாக தொடர்ச்சியாக இயங்கி வருகிறார்கள்.

இத்தனை ஆண்டு பயணத்தில் எத்தனையோ சாதனை மைல் கற்களை வாசகர்களின் ஆதரவோடு அனாயசமாக தாண்டியிருக்கிறார்கள். ஓராண்டுக்கு முன்பு இவர்கள் 860 பக்க அளவில் வெளியிட்ட ஒரே கதையான ‘இரத்தப் படலம்’ குறிப்பிடத்தக்கது. இந்திய அளவிலேயே இவ்வளவு பிரமாண்டமாக, அதிக பக்கங்கள் அளவில் காமிக்ஸ் வெளியிடப்பட்டது இதுவே முதன்முறை. 200 ரூபாய் விலையிருந்தாலும் ஆயிரத்து இருநூறு பிரதிகளுக்கு மேல் விற்று பெரும் சாதனை புரிந்தது. பெரிய எழுத்தாளர்களின் நாவல்களின் விற்பனைக்கே சவால் விடும் எண்ணிக்கை இது.

"இன்றும் காமிக்ஸ் என்பது சிறுபிள்ளை விளையாட்டாக இங்கே பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு அளவே இருக்கும் நாடான பிரான்ஸில் ஒரு காமிக்ஸ் வெளியிடப்பட்டால் நாலு லட்சம் பிரதிகள் வரை விற்பனையாகிறது. நாங்கள் அதிகபட்சம் ஒரு காமிக்ஸை முப்பத்தி இரண்டாயிரம் பிரதிகள் வரைதான் விற்றிருக்கிறோம். காமிக்ஸ் இங்கே எல்லோருக்குமான கலாசாரமாக உருவெடுக்கவில்லை. எங்களது ‘இரத்தப் படலம்’ போன்ற கதைகள் தரம் அடிப்படையில் எந்தவொரு இலக்கியத்துக்கும் குறைந்ததல்ல. நாற்பதைக் கடந்த வாசகர்கள் எங்களது கதைகளை இன்றும் ரசிக்கிறார்கள். காமிக்ஸ் என்பது சிறுவர்களுக்கான சமாச்சாரம் என்றில்லாமல், அனைவரும் வாசித்து மகிழ வேண்டியது என்பதை நாம் உணரவேண்டும்’’ என்று ஆதங்கப்படுகிறார் ‘லயன் காமிக்ஸ்’ ஆசிரியர் விஜயன்.

இந்த ஆண்டு முதல் இவர்களது காமிக்ஸ்கள் வடிவம், உத்தி அடிப்படையில் பெரும் மாற்றம் கொள்கிறது. இந்த பொங்கலுக்கு நூறு ரூபாய் விலையில் சூப்பர் ஹீரோக்கள் அசத்தும் அட்டகாசமாக ஒரு கலெக்ஷனை அறிமுகப்படுத்துகிறார்கள். சென்னை புத்தகக் காட்சியிலும் இவர்களது காமிக்ஸ் புத்தகங்கள் இடம்பெற ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

அவங்க ரெடி, நாம ரெடியா?

எழுதியவர் : அணில் :-)

நன்றி : தினகரன் வசந்தம் (08-01-2012 இதழ்)

7 ஜனவரி, 2012

எங்களின் ரோபோவே!

பெட்ரோல் விலை உயர்வு, பேருந்துக்கட்டணம் உயர்வு, பால்விலை உயர்வு, சமையல் எரிவாயு தட்டுப்பாடு... உயர்வு, தட்டுப்பாடு என்று சாதாரண மனிதனுக்கு பி.பி.ஐ எகிறவைக்கும் பிரச்சினைகள் ஏராளம்.. ஏராளம்.. இன்றைய ஐ.டி. கலாச்சார இளைஞர்கள் இதற்காகவெல்லாம் தெருவுக்கு வந்து போராடுகிறார்களோ இல்லையோ.. இணையத்தில் ஃபேஸ்புக்கிலோ, ட்விட்டரிலோ நாலுவரி கிண்டலாக எழுதிவிட்டு ‘ரிலாக்ஸ்’ ஆகத் தொடங்கிவிட்டார்கள்.



எவ்வளவு பெரிய பர்சனாலிட்டியாக இருந்தாலும் சரி. இந்த சமூகவலைத்தளத்தில் புழங்கும் ஆட்களிடம் மாட்டிக்கொண்டால் பஞ்சர்தான். கொஞ்சமாக போட்டோஷாப்பில் விளையாடத் தெரிந்தவர்களாக அவர்கள் இருந்துவிட்டால் கிழிஞ்சது கிருஷ்ணகிரி. வி.ஐ.பி.களின் முகத்தை மட்டும் வெட்டியெடுத்து, வேறு ஏதாவது ஒரு படத்தில் பொருத்தி நொடியில் உலகமெல்லாம் காண செய்துவிடுவார்கள்.

ஃபேஸ்புக்கில் இதுமாதிரி நக்கலடிக்கவென்றே நூற்றுக்கணக்கான க்ரூப்புகளை உருவாக்கி கும்மியடித்துக் கொண்டிருக்கிறார்கள். ‘கடுப்பேத்தறார் மை லார்ட்’ என்பது ஒரு க்ரூப்பின் பெயர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள், எந்த லெவலுக்கு இறங்கி அடிப்பார்கள் என்பதை.

இப்போது இவர்களிடம் ரொம்பவும் மாட்டிக் கொண்டு அவதிப்படுவது மன்மோகன்சிங்தான். ஏனோ அவரது முகத்தைப் பார்த்தாலே வெட்டி, எங்காவது ஒட்டியாகவேண்டும் என்று இவர்களுக்கு ‘கொலைவெறி’ ஏற்பட்டு விடுகிறது. சோனியா, கலைஞர், ஜெயலலிதா, விஜயகாந்த் என்று அன்றன்றைய அவர்களது அறிக்கைகள், செயல்பாடுகளை பொறுத்து, இவர்களது ‘கருத்துப்படம்’ அமையும்.






இணையத்தில் புழங்குபவர்களுக்கு என்றுமே ஃபேவரைட் ஆன ஆட்கள் சிலர் உண்டு. அவர்களில் முக்கியமானவர் டி.ராஜேந்தர். அவருக்குப் பிறகு ஜே.கே.ரித்தீஷ். சமீபகாலமாக தன்னைத்தானே ‘பவர்ஸ்டார்’ என்று அழைத்துக் கொள்ளும் நடிகர் (!) சீனிவாசன். இவர்களெல்லாம் எதைச் செய்தாலும் இவர்களுக்கு ஜோக்குதான். பவர் ஸ்டார் சீனிவாசனின் லத்திகா திரைப்படம் சமீபத்தில் 200 நாள் ஓடியதை இந்த சோசியல் நெட்வொர்க் ஆட்கள் திருவிழாவாக கொண்டாடிவருகிறார்கள்.

இவர்கள் கிராஃபிக்ஸ் செய்ய அவசியமே வைக்காதபடி சில அரசியல்வாதிகளுக்கு கிராபிக்ஸ் போஸ்டர்கள் ஒட்டப்படுவதுண்டு. குறிப்பாக மத்திய அமைச்சர் அழகிரிக்கு அவர்களது தொண்டர்கள் அழைக்கும் அடைமொழிகள், மூக்குப்பொடி போடாமலேயே நம்மை தும்மவைக்கும் லெவலுக்கு காரம் கொண்டவை. அதையெல்லாம் அப்படியே கேமிரா மொபைலில் சிறைபிடித்து, எந்த மாற்றமும் இல்லாமல் இணையத்தில் ஏற்றுகிறார்கள்.




ஏதோ காமெடிக்கோ, பொழுதுபோக்குக்கோ இதையெல்லாம் இவர்கள் செய்துக் கொண்டிருக்கிறார்கள் என்று மட்டும் நினைத்துவிடாதீர்கள். அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மீதான தங்களது கோபத்துக்கு வடிகாலாகவும் இணையத்தை இவர்கள் பயன்படுத்துகிறார்கள்.

எல்லை மீறாத வரை சரிதான்!

6 ஜனவரி, 2012

தினகரன் வெள்ளி மலர்

எண்பதுகளின் இறுதியும், தொண்ணூறுகளின் தொடக்கமும் கலந்த காலக்கட்டம் வெகுஜன வாசகர்களுக்கு பொற்காலமாக இருந்திருக்க வேண்டும். குமுதம், விகடன் இதழ்கள் முழுவீச்சோடு இயங்கிக் கொண்டிருந்த அக்காலக் கட்டத்தில் புதிய வார இதழ்கள் பலவும், புதுப்புது கான்செப்டுகளில் நல்ல சர்க்குலேஷனோடு சக்கைப்போடு போட்டுக் கொண்டிருந்தது.

எங்கள் வீட்டில் குமுதம்தான் மெயின் பத்திரிகை என்றாலும், வேறு சில பத்திரிகைகளையும் அவ்வப்போது அப்பா வாங்குவார். ‘கலைப்பூங்கா’ மாதிரி முழுமையான சினிமாப் பத்திரிகைகளை அப்போது வாசித்திருக்கிறேன். மாத இதழ் என்றாலும் ஒரு மாதம் ரஜினி ஸ்பெஷல், அடுத்த மாதம் கமல் ஸ்பெஷல் என்று கலக்கல் கட்டுரைகள், துல்லிய தகவல்களோடு நல்ல மிக்ஸிங்கில் எடிட் செய்யப்பட்ட புத்தகம் அது. குறிப்பாக அட்டைப்படம் கண்ணில் ஒத்திக் கொள்ளலாம் போல இருக்கும். அதே காலக்கட்டத்தில் ‘கலைப்பூங்கா’ மாதிரி ஒரு குறைந்தது ஒரு டஜன் சினிமாப் பத்திரிகைகளாவது நல்ல தரத்தோடு வந்துக் கொண்டிருந்ததாக நினைவு.

போகியை ஒட்டி பரணை சுத்தம் செய்யும்போது பழைய ‘பேசும்படம்’, ‘சினிமா எக்ஸ்பிரஸ்’ இதழ்களை காணமுடியும். பெரும்பாலும் அவை எண்பதுகளின் துவக்கத்தில் வந்த இதழ்களாக இருக்கும். அட்டைப்படத்திலேயே ஏதோ வெளிவரவிருக்கும் சினிமாப் படத்தின் விளம்பரம்தான் இடம்பெறும் (முத்து எங்கள் சொத்து என்கிற சொத்தைப்படத்தின் விளம்பரம் இடம்பெற்ற இதழ் இன்னும் நினைவில் மிச்சமிருக்கிறது).

யோசித்துப் பார்த்தால் வெகுஜன சினிமாப் பத்திரிகைகள் தரத்திலும், விற்பனை அடிப்படையிலும் 90களின் துவக்கத்தில் உச்சத்தில் இருந்திருக்கின்றன என்று புரிகிறது. ஆனால் இன்றைய நிலையில் நார்மல் பத்திரிகையே சினிமாப் பத்திரிகை லெவலுக்கு மாறிவிட்டதால், ‘பேசும் படம்’ மாதிரி ஒரு பத்திரிகைக்கு வாய்ப்பில்லையோ என்றும் நினைக்கத் தோன்றும். ‘சினிமா எக்ஸ்பிரஸ்’ வருகிறதுதான். ஆனால் பழைய தரம் இருப்பதாக தோன்றவில்லை. சினிக்கூத்து, வண்ணத்திரையெல்லாம் ’திரைச்சித்ரா’ லெவலுக்கு இறங்கிவிட்டதால் போட்டியில் சேர்த்துக்கொள்ள விருப்பமில்லை. காட்சிப்பிழை, படப்பெட்டி என்று புதியதாக சில மாத இதழ்கள் வரத் தொடங்கியிருக்கின்றன. அவை ‘ஒலக’ சினிமாவைப் பேசுவது என்பதால், தமிழ்நாட்டின் முன்னூத்தி சொச்சத்துக்கும் குறைவான அறிவுஜீவிகளுக்கான இதழ்களாக ஆகிப்போயிருக்கிறது.

என்னைப் போன்ற வெகுஜன சினிமா ரசிகனுக்கு என்று பிரத்யேகமாக சொல்லிக் கொள்ளும்படியாக ஒரு சினிமாப் பத்திரிகை கூட இல்லையென்பது சோகம்தான். முன்பெல்லாம் தினமலர் வாரமலரின் இருபக்க ‘துணுக்கு மூட்டை’ ஓரளவு திருப்திபடுத்தும். இப்போது து.மூ.வும் கச்சடாவாகி விட்டது.

சினிமாக்காரர்களுக்கு ஜால்ரா தட்டாமல் சினிமா குறித்த செய்திகள் மற்றும் அலசலோடு ஏதேனும் பத்திரிகை கிடைக்குமாவென்று தேடிக்கொண்டிருந்தவனுக்கு யதேச்சையாக சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமானது தினகரன் வெள்ளிமலர். நாளிதழோடு வரும் இணைப்புகள் பொதுவாக ’தலையெழுத்தே’ என்று தற்போது வந்துக்கொண்டிருக்க, வெள்ளி மலரில் மட்டும் ஏதோ சிரத்தையாக நடந்து வருவதை அறிய முடிந்தது. கொஞ்சம் கொஞ்சமாக தனக்கான வடிவத்தை தானே உருவாக்கி, இன்று ஒரு முழுமையான சினிமாப் பத்திரிகையாக உருவெடுத்திருக்கிறது வெள்ளி மலர். இதுதான் இப்போது தமிழின் நெ.1 சினிமா பத்திரிகை என்று தயங்காமல் சொல்லலாம். சந்தேகமிருப்பவர்கள் இன்றைய தினகரனை வாங்கி வெள்ளிமலர் வாசித்துப் பார்த்துக் கொள்ளலாம். இன்றைய வெள்ளிமலர் ஒரு பென்ச்மார்க் இஷ்யூ (2011 புத்தாண்டு இதழும் இதேமாதிரி ஒரு கிளாசிக்). வெள்ளிமலர் குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!


வெள்ளிமலரின் சிறப்பு என்னவென்றால் தமிழ் சினிமாவையும் தாண்டி மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி, ஹாலிவுட் சினிமாக்களையும், அங்கு பணியாற்றும் நடிகர்-நடிகைகள் மட்டுமின்றி இயக்குனர்கள் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்களையும் எளிய முறையில் தமிழுக்கு அறிமுகப்படுத்துவதுதான். தொடர்ச்சியாக இதை வாசித்து வருவதால், இன்று கன்னடத்தில் சுதீப்தான் சக்கைப்போடு போடும் ஹீரோ என்று தெரிகிறது. சிரஞ்சீவி குடும்பத்தில் பிரச்சினை, தில்லாலங்கடியை ரீமேக் செய்து சல்மான் நடிப்பது, மம்மூட்டியும் மோகன்லாலும் தொடர்ச்சியாக பல்பு வாங்குவது என்று எல்லா விஷயமுமே அத்துப்படியாகிறது. வெள்ளிமலர் தருவது வெறும் தகவல்களை மட்டுமல்ல. அத்தகவல்களின் பின்னணி, ஃப்ளாஷ்பேக் உள்ளிட்ட விஸ்தாரமான அலசல்களையும் கூட.

வெள்ளி மலரின் ஒரே குறையாக நான் கருதுவது, அதில் வாராவாரம் மூன்று பக்கங்களுக்கு வெளிவரும் ‘மேஷராசி நேயர்களே!’ டைப் ஜோசியம்தான். முழுமையான சினிமாப் பத்திரிகையாக மலர்ந்திருக்கும் மலருக்கு ‘ஜோசியம்’ சற்றும் பொருந்தவில்லை. சன் குழுமத்திலிருந்து அடுத்தடுத்து பக்தி, மகளிர் பத்திரிகைகள் வரவிருப்பதாக தெரிகிறது. வெள்ளி மலரை தனிப் பத்திரிகையாக கொண்டுவந்தால் ‘பேசும்பட’ காலத்திய பொற்காலம் மீண்டும் மலரும்.

5 ஜனவரி, 2012

தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்!

கம்மி பட்ஜெட்டில் மொக்கைப்படம் எடுத்துவிட்டு ரிலீஸ் செய்யமுடியாத இயக்குனரின் அவஸ்தையான மனநிலையில் இருந்து ஒருவழியாக நேற்று கேபிள்சங்கர், உலகநாதன் போன்ற சன்பிக்சர்ஸ், ரெட்ஜயண்ட் மாதிரி ஆட்களால் விடுதலை பெற்றிருக்கிறேன்.

“ரொம்ப மொக்கை-ன்னு காறித்துப்பி விடுவார்களோ?” என்கிற அடுத்த அவஸ்தை நேற்று இரவிலிருந்து... நல்லவேளையாக வாசித்த நண்பர்கள் பலரும் காலையில் இருந்து தொலைபேசி, கூகிள் ப்ளஸ், ட்விட்டர், ஃபேஸ்புக், லொட்டு லொசுக்குகளையெல்லாம் பயன்படுத்தி ஆறுதல் அளித்து வருகிறார்கள். மங்காத்தா லெவலுக்கு இல்லையென்றாலும், ‘அழிக்கப் பிறந்தவன்’ குறைந்தபட்சம் ‘காஞ்சனா’ அளவுக்கு ஹிட்டு என்பது நண்பர்களின் கருத்துகளில் இருந்து தெரிகிறது. நானே வாசித்தபோது கூட ‘ஓக்கே’ என்று தோன்றிவிட்டதை வெட்கத்தோடு ஒப்புக் கொள்கிறேன். இருந்தாலும் ‘ஆபாச நாவல்’ என்பதால், மதிப்பிற்குரியவர்களிடம் இதை பெருமையாக “என் முதல் நாவல்” என்று தெகிரியமாக சொல்லிக் கொடுக்க முடியவில்லையே என்கிற ஆதங்கமும் ஒருபுறம் இருக்கிறது.

எது எப்படியோ, ‘கமர்சியல் ஹிட்’ கொடுத்த புதுமுக இயக்குனர் மாதிரி மகிழ்ச்சியான ஒரு மனநிலைக்கு இப்போதுதான் வந்து சேர்ந்திருக்கிறேன். விலை, பக்கம் உள்ளிட்ட விவரங்கள் நேற்று மாலை புத்தகத்தை வெளியிடுவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்புதான் தெரிந்தது.

‘அழிக்கப் பிறந்தவன்’ - இன்று முதல் சென்னை புத்தகக் காட்சியில் டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் விற்பனைக்கு கிடைக்கும். ஸ்டால் எண் : 334.  தொடர்பு எண் : 9940446650.
விலை ரூ.50/- மட்டுமே (தள்ளுபடி 10% போக ரூ.45/-). பக்கங்கள் : 96.

இது மட்டுமல்ல. ‘உ’ பதிப்பகத்தின் மற்ற இரண்டு புதுவெளியீடுகளான கேபிள்சங்கரின் ‘தெர்மக்கோல் தேவதைகள்’ (தெர்ம-வா தெர்மா-வா?), உலகநாதனின் ‘நான் கெட்டவன்’ (எப்படித்தான் டைட்டில் புடிக்கிறாங்களோ?) ஆகியவற்றின் விற்பனை உரிமையையும் ‘டிஸ்கவரி புக் பேலஸ்’ நிறுவனமே எடுத்திருக்கிறது. ‘அழிக்கப் பிறந்தவன்’ விரைவில் இணையம் மூலமாகவும் விற்பனைக்கு கிடைக்குமென நம்புகிறேன்.

நான் எழுதிய நூல் என்பதால் வாங்கியே ஆகவேண்டுமென யாரையும் வற்புறுத்த மாட்டேன். முதல் அத்தியாயத்தை வாசித்துவிட்டு, பிடித்தவர்கள் வாங்கிக் கொள்ளலாம், மொக்கையென்று நினைப்பவர்கள் காறித்துப்பிவிட்டு கிளம்பிக்கொண்டே இருக்கலாம். ஆனால் கேபிள்சங்கர் மற்றும் உலகநாதனின் புத்தகங்களை கண்டிப்பாக வாங்கிவிடுங்கள் என்று மட்டும் கேட்டுக் கொள்கிறேன். எனக்காக பொருள் முதலீட்டையும், கடுமையான உடலுழைப்பையும் செலுத்திய நண்பர்கள் அவர்கள்.

ஹேப்பி ரீடிங் ஃபோல்க்ஸ்!