16 ஜனவரி, 2012

நடுநிசி அழகிகள்!

போன மாசத்தில் ஒரு நாள் அதிகாலை ஏழேமுக்கால் மணிக்கு, லுங்கி கட்டிக்கொண்டு லைட்டான மேக்கப்பில் சத்யன் டீ ஸ்டால் வாசலில் இருந்த பொட்டீக்கடையில் குமுதம் வாங்கப் போயிருந்தேன். ஒரு கிங்ஸ் வாங்கி வாயில் பொருத்தினேன். காலைக்கடனுக்கான உந்துதலுக்கு சிகரெட்தான் ஒரே கதி. தினத்தந்தியைப் புரட்டிக் கொண்டிருந்த அண்ணாச்சி பப்ளிக் கக்கூசில் க்யூவுக்கு நிற்கும் அவசரத்தோடு சொன்னார்.
“தம்பி.. ஒரு நிமிஷம் நில்லுய்யா! மேட்டர் கேள்விப்பட்டியா?” - அண்ணாச்சி சரியான சரக்கு வண்டி. முந்தைய நைட்டு அடித்த ஓல்டு மாங்க் கப்பு கப்பென்று அசுகந்தமாய் தேநீர்க்கடை முழுக்க பரவியது. டீ குடித்துக் கொண்டிருந்த சிலர் வாந்தி வரும் முகபாவத்தை காட்டினார்கள்.
“சொல்லுங்கண்ணே!” தனியார் டிவி ஒன்றுக்கு செல்போன் டவர் பிரச்சினைக்கு போட்டோவோடு பேட்டி கொடுத்ததிலிருந்து  (அந்தப் பேட்டியால் வேறு பிரயோசனமில்லை. இன்னும் ஏகப்பட்ட டவர்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியில் தொடர்ந்து நிறுவப்படுகிறது என்பது வேறு விஷயம்) எங்கள் ஊரில் நிஜமாகவே நான் ஒரு செலிபிரிட்டி. எந்த பொதுப்பிரச்சினையாக இருந்தாலும் ட்ராபிக் ராமசாமியிடம் சொல்லுவது போல சிலபேர் என்னிடம் சொல்கிறார்கள். அண்ணாச்சியும் இப்போது அப்படித்தான் ஏதோ ஒரு மேட்டரை ஆரம்பிக்கிறார்.
“நம்ம ஊரு ரொம்ப கெட்டுப்போச்சி தம்பி. நட்டநடு நைட்டுலே என்னென்னவோ அசிங்கமெல்லாம் நடக்குது.. சொல்லவே ஆபாசமா இருக்குது” காதல் பட தண்டபாணி தோற்றத்தில் இருந்த அண்ணாச்சி, வெட்கப்பட்டுக்கொண்டே சொன்னபோதும், அந்த காட்சி காண சகிக்கக்கூடியதாக இல்லை.
இருப்பினும், ஆஹா. ’மேட்டர்’ நழுவி டீயில் விழுதே. டி.வி.யில் இன்னொரு பேட்டிக்கு சான்ஸு இருக்கே நமக்கு.
“என்னாச்சுண்ணே!”
“நம்ப குளம் வத்திப் போச்சுல்லே. வத்திப் போனது இந்த பொறுக்கி பயலுவளுக்கும், மொள்ளமாறிப் பயலுவளுக்கும் நல்லா வசதியாப் போச்சி”
எங்கள் ஊர் பேருந்து நிலையத்துக்கு அருகில் குளம் என்ற பெயரில் ஒரு மட்டமான குட்டை உண்டு. சோழர் காலத்தில் ஈஸ்வரர் கோயில் குளமாக இருந்தது மட்டுமே அக்குளத்துக்கு எஞ்சி நிற்கும் பழம் பெருமை. குளத்தைச் சுற்றி குடியிருப்புகள் ஏற்பட்டு, கழிவுகள் அசால்ட்டாக குளத்துக்கு திருப்பி விடப்படுவதால் அது குளமா இல்லை கூவமா என்று குடியிருப்புச் சங்கங்களால் பட்டிமன்றம் வருடாவருடம் நடத்தப்பட்டு வருகிறது.
பல ஏக்கர் பரப்பளவு வாய்ந்தது என்பதால், அதை ஆட்டை போட்டு துட்டாக்கிவிடலாம் என்ற ஆசை லோக்கல் அரசியல்வாதிகளுக்கு இருக்கிறது. எனவே தற்காலிகமாக குப்பை கொட்டி குப்பை மேடாக்கி மடக்கிப் போடும் திட்டத்தோடு இருக்கிறார்கள். மழைக்காலங்களில் மட்டும் மழைநீர் தூய்மையாக பொழிந்து, குளத்தில் தேங்கி ஓரிருநாட்களில் முன்பை விட மோசமாக அசுத்தமாகிவிடும்.
அக்டோபர் தொடங்கி ஏப்ரல் வரை கருமையான நீர் குளத்தை அலங்கரிக்கும். எருமைகளுக்கு இக்காலக்கட்டம் கொண்டாட்டமானது. பச்சையான ஆகாயத்தாமரை இலைகளை கருப்பாக எங்காவது பார்த்திருக்கிறீர்களா? எங்கள் ஊர்க்குளத்தில் மழைக்காலத்தில் பார்க்கலாம். இப்படிப்பட்ட கொடூரக்குளத்தை நம்பியும் விறால் மீன்கள் வளருகிறது என்பது இயற்கைக்கே சவால் விடும் அதிசயம். மீன்பாடி வண்டியில் மூட்டை மூட்டையாக பிடித்துக் கொண்டு போய் லம்பாக சம்பாதிக்கிறார்கள் எங்கள் ஊர் பார்ட் டைம் மீனவர்கள்.
ஊரிலிருக்கும் தன்னிகரில்லா தெருநாய்களின் வேடந்தாங்கலும் இந்த குளமே. நாள் முழுக்க தெருக்களில் போவோர் வருவோரை கடித்து வைத்துவிட்டு (நாய் ஊசி போடும் டாக்டர் செல்வமணியே தன் பினாமியான நர்ஸை வைத்து இந்நாய்களை வளர்ப்பதாக ஒரு தகவல்), இரவுகளில் ‘இன்னபிற’ மேட்டர்களுக்காக நாய்கள் மாநாடு இங்கே தினமும் நடக்கும்.
இத்தகைய வரலாற்று, சமகாலச் சிறப்புகள் வாய்தத குளத்தைப் பற்றிதான் நம்ம அண்ணாச்சி என்னிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
105 டிகிரி வெயிலில் சாக்கடைநீரும் கூட வற்றிப்போக, குப்பைமேடான குளத்துக்கு இடையில் கான்க்ரீட் கொட்டி பசங்க சில பேர் போனமாசம் கிரிக்கெட் பிட்ச் அமைத்து விளையாடி வருகிறார்கள். உண்மையிலேயே நல்ல பசங்க. அந்தப் பசங்களைதான் இவர் பொறுக்கிப் பசங்க என்கிறாரோ என்று சந்தேகம் வந்தது.
மேலும் சரக்கு வண்டி அண்ணாச்சி தொடர்ந்தார்.
“நேத்து நைட்டு சுமாரா பண்ணிரண்டரை, ஒரு மணி இருக்கும். நாய்ங்க ரொம்ப மோசமா ஊளையிட்டிக்கிட்டிருந்திச்சி. திடீர்னு எல்லாமே சைலண்ட் ஆயிட்டதாலே தூக்கம் களைஞ்சிப்போயி வெளியே வந்தேன்”
இந்த நாய்கள் ஊளையிடல் பற்றி கொஞ்சமாவது இடைசெருகியே ஆகவேண்டும். குளிர்காலமான கார்த்திகை மாதத்தில் துணைதேட ஊளையிடுகின்றன. இரவுகளிலும் அனல் வீசும் மே, ஜூன் மாதங்களில் ஊளையிட காரணமேயில்லையே என்று நீங்கள் நினைக்கலாம். தின்ற குப்பை ஜீரணமாகாமல் ஊளையிடுகின்றன என்பது என்னுடைய அறிவியல் கண்டுப்பிடிப்பு.
கடையை விட்டு பேசிக்கொண்டே வெளிவந்தோம். வெளியே வந்த அண்ணாச்சி கண்டினியூகிறார்.
“அதுக்கு முன்னாடி லைட்டா ஆட்டோ சத்தம் ‘டுபுக்கு டுபுக்கு’ன்னு கேட்டுச்சி. குளத்துக்கு நடுவுலே பசங்க கிரிக்கெட் ஆட பிச்சி போட்டிருக்கானுங்க இல்லே. அங்கன ஒரு ஷேர் ஆட்டோ நின்னுட்டு இருந்திச்சி. நாலு தடிப்பயலுக எறங்கி பிஸ்கட் பாக்கெட்டை பிரிச்சி நாய்ங்களுக்கு போட்டு சைலண்டு ஆக்கிட்டிருந்தானுங்க” மேட்டர் சூடுபிடித்தது.
“ம்.. ஒருவேளை தண்ணியடிக்க வந்திருப்பானுங்களோ” - ‘உம்’ கொட்டுவதற்குப் பதிலாக சும்மா அண்ணாச்சியை தூண்டிவிட்டேன்.
“அப்படி வந்திருந்தானுங்கன்னா நானும் போயி ஒரு பெக் அடிச்சிருக்க மாட்டேனா? பின்னாடியே ஒரு பொண்ணு எறங்கிச்சிப்பா. ஃபுல் மேக்கப்பு. இருட்டுலே கூட நல்லா முகம் தெரிஞ்சது. ஒரு மாதிரி பொண்ணுதான். அப்புறமென்ன நடக்கக்கூடாத அசிங்கமெல்லாம் நடந்தது. எல்லா கருமத்தையும் தூரமா ஒளிஞ்சி நின்னு பார்த்தேன்” – இத்தனை வயசானாலும் அண்ணாச்சிக்கு அறிவே இல்லை. பிட்டுப்படம் பார்ப்பது போல இதையெல்லாம் ஆர்வத்தோடு பார்த்துத் தொலைத்திருக்கிறார்.
“நெஜமாவா அண்ணாச்சி? நம்ம ஊருப்பசங்க பொண்ணு மேட்டர்லே எல்லாம் இவ்ளோ மோசமில்லையே? யாராவது வெளியூரு ஆளுங்களா இருக்கும்”
“அட நீ ஒண்ணு. அந்தப் பசங்க நம்ம ரூட்லே ஆட்டோ ஓட்டுற பசங்கதான். முகத்தைப் பார்த்தா எனக்கு தெரியாதா என்ன?”
“அப்புறம் என்னாச்சி?”
“தைரியத்தை வரவழைச்சிக்கிட்டு கடைசி வீட்டு கதவைத் தட்டி அந்த அம்மாவை கூப்பிட்டுக்கிட்டு போயி நியாயம் கேட்டேன்” - அண்ணாச்சி குறிப்பிடும் கடைசி வீட்டம்மா கிட்டத்தட்ட சொர்ணாக்கா மாதிரி இருப்பார். அவர் வீட்டு கதவைத்தட்டி கூப்பிடதான் அண்ணாச்சிக்கு தைரியம் தேவைப்பட்டதே தவிர, பொறுக்கிப்பசங்களிடம் போயி நியாயம் கேட்க தேவையான தில்லு அவரிடமே இருந்தது.
“நல்ல வேளை செஞ்சீங்க!”
“அடப்போப்பா. அவனுங்க அந்தம்மாவை நாங்க இன்னா உன் கைய புடிச்சா இழுத்தோம்னு சொல்லி பிரச்சினை பண்ணிட்டானுங்க. என்ன பண்ணுறதுன்னே தெரியலை. இந்தப் பிரச்சினை நமக்கு தினம் தினம் தொடரும் போலிருக்கு” என்றார்.
“கவலைப்படாதீங்க அண்ணாச்சி. தலைவரு கிட்டே சொல்லி ஏதாவது நடவடிக்கை எடுக்கலாம். இல்லேன்னா போலிஸுக்கு போவலாம்” என்றேன். தலைவர் என்றால் பஞ்சாயத்துத் தலைவர். அவர்தான் எங்க ஊரு நாட்டாமை. பார்ப்பதற்கு நட்சத்திர ஆமை மாதிரி இருப்பார்.
 ண்ணாச்சி சொன்னதை கேட்டதிலிருந்து ஒரு க்யூர்யாஸிட்டி (தமிழ்லே மிகச்சரியான வார்த்தை குறுகுறுப்பா?) ஏற்பட்டது. கையும், காண்டமுமாக பசங்களை சம்பந்தப்பட்ட குஜிலியோடு பிடிக்க வேண்டுமென்று. சில வழக்கமான அலுவலகப் பணிகள் சுமையைக் கூட்ட அப்போதைக்கு இதை மறந்துப்போனேன்.
ஆனாலும் பராபரியாக குளத்துக்குள் இரவுகளில் நடக்கும் கும்மாங்குத்து பற்றி தினமும் நிறைய செய்திகள் வந்துக் கொண்டிருந்தன. குட்டையில் எஞ்சியிருக்கும் தண்ணீரில் குஜிலியோடு பசங்க ஜலக்கிரீடை செய்வதாகவும், காலையில் போய் பார்த்தால் நிறைய நிரோத்து (எந்த பிராண்டாக இருந்தாலும் நம்ம ஆளுகளுக்கு அது நிரோத் தான்) விழுந்து கிடப்பதாகவும், சரக்கு பாட்டில்கள் உடைந்து சிதறிக் கிடப்பதாகவும் ஆளாளுக்கு தெருவில் பேசிக் கொண்டிருந்தார்கள். இதுமாதிரி ஏதாவது விஷயம் சொல்பவர்களிடம் ‘நியூஸ் சோர்ஸ்’ என்னவென்று கேட்டபோது, எல்லோருமே அண்ணாச்சியையே கைகாட்டினார்கள்.
போனவாரத்தில் ஒருநாள் முரளியை துணைக்கு அழைத்துக் கொண்டேன். முரளி என்னுடைய பாடிகார்ட்-கம்-நண்பன். பாடிகார்ட் என்று ஒரு கெத்துக்கு சொன்னாலும் அவனுடைய பாடி கோழி பாடி. ஆனாலும் வாய் உதாரில் பெரிய ரவுடி போல பில்டப் கொடுக்கக்கூடிய சாமர்த்தியம் கொண்டவன். ஏற்கனவே இதே குளத்தில் நள்ளிரவில் பேய்கள் குளிப்பதாக பரவிய மர்ம வதந்தியை அவனுடைய உதவியால் கட்டுடைத்து, ஊருக்கு பகுத்தறிவு சேவை செய்த புண்ணியம் நமக்குண்டு.
இரவுகளில் யாரோ தண்ணீரை மொண்டு மொண்டு குளிப்பது போல சத்தம் வந்தது உண்மைதான். முரளியின் உதவியோடு புலன்விசாரணை செய்ததில் வெறிநாய்கள் வெறிதீர குளத்தில் உருண்டு, புரண்டு விளையாடியதால் ஏற்பட்ட சத்தம் அது என்பதை போதிய தரவுகளோடு பொதுமக்களுக்கு நிரூபித்தேன்.
அன்று இரவு பதினோரு, பதினொன்றரை மணியளவில் மனிதன் க்ளைமேக்ஸ் ரஜினி கணக்காக காஸ்ட்யூம்ஸ், கேன்வாஸ் ஷூ எல்லாம் அணிந்தேன். அச்சந்தர்ப்பத்துக்கு பொருத்தமில்லாத பாலுமகேந்திரா பாணி தொப்பி ஒன்றும் ஸ்டைலுக்கு அணிந்துகொண்டேன். இடையில் ஒரு பாதுகாப்புக்காக காய்கறி வெட்டும் கத்தி ஒன்றை இடுப்பில் மறைத்து வைத்துக் கொண்டேன். அப்பாவின் அந்தக்காலத்து பெரிய டார்ச்சையும் எடுத்துக் கொண்டேன். முரளிக்கு வழக்கமாக நான் கொடுக்கும் சிக்னலை கொடுத்தேன். ஏதோ ஆந்தை அலறுகிறது என்று நினைத்து புரண்டு படுத்திருக்கிறான் அந்த மூதேவி. இவனுகளை வைத்துக்கொண்டு புல்லு கூட புடுங்கமுடியாது என்று புலம்பியபடியே கதவைத்தட்டி எழுப்பி அழைத்துச் சென்றேன்.
நக்சல்பாரிகளுக்காக ஆதரவாக களமிறங்கும் பழங்குடியினர் கெட்டப்பில் அவன் இருந்தான். மிகச்சரியாக சொல்லவேண்டுமானால் மருதுபாண்டி, வெள்ளைத்துரை மாதிரி கட்டம் போட்ட ப்ளூ லுங்கி கட்டிக்கொண்டு, வெற்றுடம்பில் சிகப்பு பார்டர் போட்ட கருப்பு பெட்ஷீட் போர்த்தியிருந்தான். விருமாண்டி பசுபதி மாதிரி நெற்றியில் அடர்த்தியான விபூதிப்பட்டை வேறு. பட்டைக்கு நடுவில் பெரிய குங்குமப்பொட்டு. கையில் ஒரு டெர்ரர் லுக்குக்காக கோல் ஒன்றும் வைத்திருந்தான். அவனைப் பார்க்க எனக்கே கொஞ்சம் பயமாகதான் இருந்தது.
குளத்தை நெருங்கும்போது தூரத்தில் சிகரெட் நெருப்பு இரண்டு மூன்று தெரிந்தது. அவர்களிடம் போய் என்ன பேசப்போகிறோம் என்ற திட்டம் எதுவுமில்லை என்றாலும், ஏதோ ஒரு ஆர்வத்தில், அசட்டுத் துணிச்சலில் இருவரும் பயணித்தோம். அதாவது பூனைநடை நடந்தோம். ஏற்கனவே இதே மாதிரி விவகாரத்தை (குஜிலி மேட்டர் அல்ல, வெறும் தண்ணி மேட்டர்) போலிஸ் ப்ரெண்ட்ஸ் துணையோடு சுமூகமாக தீர்த்துவைத்த அனுபவமும் எங்களுக்குண்டு.
அருகில் நெருங்கியபோது கசமுசா சத்தம் எழுந்தது. நான்கைந்து பயல்கள் அவசரமாக எழுந்து நின்றார்கள். ஆட்டோ எதையும் காணவில்லை. இரண்டு மூன்று பைக்குகள் மட்டுமே.
“அட நம்ம அண்ணண்டா” - நான் பத்தாவது படித்துக் கொண்டிருந்தபோது பிறந்த பயல் ஒருத்தன் ஒரு கையில் பீர்பாட்டிலோடும், மறுகையில் சிகரெட்டோடுமாக சொன்னான்.
முரளி குரல் கொடுத்தான். “ஏண்டா ஊடுங்க இருக்குற எடத்துலே இதுமாதிரி குட்சிட்டு கும்மாளம் போட்டா வெளங்குமா? உங்க அப்பன் ஆயியெல்லாம் கேக்க மாட்டாங்களாடா?”
“இல்லேண்ணா. இன்னிக்கு மட்டும்தான். ஊர்லே இருந்து ப்ரெண்ட்ஸ் வந்திருந்தாங்க. பார்ட்டி கொடுக்கறோம். நீயும் கொஞ்சம் சாப்பிடுண்ணா” - தாகமாக இருந்தாலும், சின்ன பயல்களிடம் வாங்கி குடிக்க மனசு ஒப்பவில்லை. வாழ்த்து(?) சொல்லிவிட்டு நடையைக் கட்டினோம்.
இதெல்லாம் சரக்கு அண்ணாச்சி கிளப்பிவிட்ட வதந்தியாகதான் இருக்க வேண்டும். ஆனாலும் சாட்சிக்கு கடைசி வீட்டு அம்மாவை வேறு அலிபியாக சேர்த்திருக்கிறாரே என்று குழப்பமாக இருந்தது. கடைசி வீட்டு அம்மாவும் கூட அவ்வப்போது சரக்கு சாப்பிடுவதை ஹாபியாக கொண்டிருக்கிறார் என்பதால் அவரது சாட்சியும் நம்புவதற்கில்லை என்று என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டேன்.
 ன்று காலை பைக்கில் வந்துக்கொண்டிருந்தேன்.
தெருமுனை சர்ச் அருகில் சரக்கு அண்ணாச்சி கை காட்டி வண்டியை நிறுத்தினார்.

“ஹேப்பி நியூ இயர் அண்ணாச்சி!”
“அத வுடுப்பா. விஷயம் தெரியுமா? நேத்து நைட்டு அந்த ஷேர் ஆட்டோ பசங்களுக்கும் அந்தப் பொண்ணுக்கும் துட்டு மேட்டருலே செம தகராறு. ஒரே சத்தம். அக்கம் பக்கம் யாரும் தூங்க முடியல”
“இல்லியே அண்ணாச்சி. வெசாரிச்சி பார்த்ததுலே எப்பனாச்சுக்கும் சில பசங்க தண்ணி அடிக்கிறானுங்க. மத்த கலாட்டா ஏதுமில்லைன்னு சொல்றாங்களே?”
“அப்ப நானென்ன பொய்யா சொல்றேன். வேணும்னா கடைசி வூட்டு அம்மாவை கேட்டுப் பாறேன்! நேத்து அவங்களும்தான் பாத்தாங்க!”
ஷேர் ஆட்டோ அழகி குழப்பம் மறுபடியும் மனசை ஆக்கிரமிக்கிறது.
(நன்றி : சூரிய கதிர் - பொங்கல் 2012 இதழ்)

14 ஜனவரி, 2012

பிசினஸ்மேன்

தொண்ணூத்தி மூன்றிலோ, நான்கிலோ டங்கலின் காட் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடும்போது சொன்னார்கள். இனிமேல் இந்தியாவில் பணம் மழையாக கொட்டப் போகிறது. ஏழைகளை அருங்காட்சியகத்தில்தான் பார்க்கமுடியுமென. கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்குப் பிறகு பார்த்தோமானால் அந்த கூற்றில் பாதி மெய்யாகியிருக்கிறது. இந்தியாவில் பணம் மழையாக கொட்டிக் கொண்டிருக்கிறது. ஆனால் ஏழைகள் மறைந்துவிடவில்லை. மாறாக சாமர்த்தியம் இருப்பவன் எழுநூறு தலைமுறைக்கும் சொத்து சேர்த்துக் கொள்ளலாம், சாமர்த்தியமற்றவன் தூக்கு போட்டு சாகலாம் என்கிற நிலை உருவாகியிருக்கிறது. இச்சூழலை மிகச்சரியாக பிரதிபலித்து கடந்த ஆண்டு தமிழில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த படம் மங்காத்தா. இவ்வாண்டு தெலுங்கில் பிசினஸ்மேன்.

பிசினஸ்மேனுக்கு சரி/தவறு இரண்டுக்குமே அர்த்தம் தெரியாது. வாழத்தேவையான எதையும் செய்யலாம் என்பதே அவன் வேதம். இந்த நாட்டில் ஏராளமாக பணம் இருக்கிறது. அதை அரசியல்வாதிகள் கொள்ளை அடிக்கிறார்கள். கார்ப்பரேட்கள் கொள்ளை அடிக்கிறார்கள். ரவுடிகளும் ஏன் கொஞ்சம் அடித்துக்கொள்ளக் கூடாது? காலத்துக்கும் எவன் எவனுக்கோ அடியாளாக வேலைபார்த்து அஞ்சுக்கும், பத்துக்கும் அல்லாட அவனுக்கென்ன தலையெழுத்தா? ரவுடியிஸத்தை கார்ப்பரேட் ஸ்டைலில் நாடு முழுக்க கிளை அமைத்து விரிவுபடுத்துவதுதான் பிசினஸ்மேனின் பிசினஸ். கேட்கவே டெர்ரராக இருக்கும் இக்கதை முழுக்க முழுக்க ஒரு நகைச்சுவைப் படம் என்று சொன்னால் நம்புவதற்கு கொஞ்சம் சிரமமாகதானிருக்கும். ‘தடி எடுப்பவன் தான் தண்டல்காரனாக முடியும்’ என்பதோடு, நீயும் தடியெடு, இல்லாவிட்டால் தண்டம் கட்டு என்கிற படுமோசமான மேசெஜ் தான் படத்தின் ஒன்லைன்.

மூன்று மாதத்துக்கு முன்புதான் ஒரு ’தூக்குடு’ என்றொரு பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்திருக்கிறார் மகேஷ்பாபு. அந்த எனர்ஜி லெவல் கொஞ்சமும் குறையாமல் அடுத்தப் படத்திலும் அதே பிக்கப்போடு வேலைபார்த்து, முந்தைய ஹிட்டை மிஞ்சும் இன்னொரு ஹிட்டடிக்க இந்தியாவிலேயே இன்று வேறு நடிகர் இல்லை. முதல் காட்சியிலிருந்து கடைசி காட்சி வரை திரை முழுக்க பிரின்ஸ் ராஜ்யம்தான். ஆக்டிங், ஆக்‌ஷன், டேன்ஸ், ஸ்க்ரீன் ப்ரெசன்ஸ் என்று எல்லாப் பக்கமும் சிக்ஸர் அடிக்கும் மாஸ் ஹீரோ அனேகமாக இன்று இவர் ஒருவர்தான். தன்னை முழுக்க இயக்குனரிடம் ஒப்புக் கொடுத்துவிடுவதால், பூரிஜெகன்நாத் மாதிரி மாஸ் டைரக்டர்கள் கமர்சியலில் ‘எதை’ வேண்டுமானாலும் பரிசோதித்து பார்த்துக் கொள்ள முடிகிறது. தெலுங்குப் படங்கள் இன்று கமர்ஷியலில் தொட்டிருக்கும் உச்சம் மிகக்குறுகிய காலத்தில் நிகழ்ந்திருக்கும் சாதனை.

காஜல் அகர்வால் நாட்டுக்கட்டையாக இல்லாமல் இருந்தாலும், கைக்கு வாட்டமான அடக்கமான சைஸில் இருக்கிறார். பெரிய முண்டக்கண்களை தவிர்த்து செக்ஸியான அம்சங்கள் ஏதும் சொல்லிக் கொள்ளும்படி இவரிடம் இல்லை. ஆனாலும் லிப்-லாக்குக்கென்றே அவரது உதடுகள் உருவானவையோ என்னவோ தெரியவில்லை. உலகின் மிக கவர்ச்சிகரமான உதடுகள் கொண்டவர்களை பட்டியலிட்டால், காஜலை மிஸ் செய்யவே முடியாது. வெட்கப்பட்டுக் கொண்டே லிப்-டூ-லிப் அடித்தார் மகேஷ்பாபு என்று படித்தேன். படத்தில் பார்க்கும்போது அப்படி தெரியவில்லை. ஸ்ட்ராங் டீப் கிஸ்.

ஹீரோ-டைரக்டரின் போக்கிரி காம்பினேஷன் பிரசித்தி பெற்றது என்பதால், கிட்டத்தட்ட அதே பாணி ஸ்க்ரீன்ப்ளே, டைரக்‌ஷன். பரபரவென்று ஓடும் திரைக்கதையில் ஒரு காட்சியை கூட மிஸ் செய்யமுடியவில்லை. படம் முழுக்க விரவியிருக்கும் ‘பஞ்ச்’களுக்கு விசிலடித்து விசிலடித்தே தம்மு தீருகிறது.

யோசித்துப் பார்த்தால் உருப்படியாக ஒன்றுமே இல்லாத படம். ஆனால் ஏதோ ஒரு விஷயம் திரும்பத் திரும்ப பார்க்கத் தூண்டுகிறது. பூரிஜெகன்நாத்தின் மேஜிக்கே இதுதான்.

அழிக்கப் பிறந்தவன் - சில விமர்சனங்கள்

இளமை ததும்பும் சுவாரசியமான எழுத்து நடையால், இணையத்தில் வசீகரித்து வரும் இவரது 'அழிக்கப்பிறந்தவன்' என்ற நாவலை, புத்தகக் காட்சிக்கு சென்று திரும்பும் பதிவர்களிடம் பார்க்க முடிகிறது. 'திருட்டு விசிடி'யை மையமாகக் கொண்ட விறுவிறு கதை, 'படுவேகமான த்ரில்லர் வகையறா' நாவல் என சக பதிவர்கள் சான்று கொடுத்து வருகின்றனர்.


- விகடன்.காம்


--------------------------------------------------


புத்தகத்தை படிக்கும்போது என்னை மிகவும் ஈர்த்த விஷயம் பர்மாபஜாரைப் பற்றியும், அங்கு நிகழும் வியாபாரத்தைப் பற்றியும் விரவிக் கிடக்கும் தகவல்கள். க்ரே மார்க்கெட்டின் டான் வாப்பா, மீன் பிடித்தல், மருந்து வியாபாரம், போலிஸ் விசாரணை என்று சென்னையின் மறுபக்கத்தை நுணுக்கமாக விவரித்த விதம் மிக அருமை


- நல்லவன்



--------------------------------------------------


கதையின் நடை நம்மை உள்ளிழுத்துக்கொள்ள பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. விலைமாது வரும் காட்சிகளிலும் அத்துமீறாமல் அடுத்த காட்சிக்குத்தாவும் சந்தர்ப்பங்களில் கதையின் போக்கில் நம்மை கவனப்படுத்தி விளையாடுகிறார் யுவா. மிகச் சாதாரணமான வார்த்தைகள். சம்பவங்களின் அனாயாசமான வேகம்.! ஏதோ ஒரு இடத்தில் இது உண்மையிலேயே நடந்துகொண்டிருக்கிறதோ என்று எண்ணவைக்கும் காட்சிக்கோர்வைகள் என நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு ஜேம்ஸ் ஹார்ட்லி சேஸ் நாவலைப் படித்த உணர்வு எழுந்தது.


- சுரேகா


--------------------------------------------------

சுஜாதா நாவலின் போதுதான் இந்த அவஸ்தைகளை அனுபவித்திருக்கிறேன். அதன் பிறகு யுவகிருஷ்ணாவின் நாவலைப் படித்த பிறகுதான் அந்த அவஸ்தையை மீண்டும் அனுபவித்தேன். இந்த நாவலை திரைக்கதையாக அமைத்தால், "மங்காத்தா" போல் நல்ல வெற்றி படமாக அமையும் வாய்ப்பு இருக்கிறது.


--------------------------------------------------

விறுவிறுப்பான மசாலா படத்தைப் பார்த்த திருப்தி. பரபரவென போயிற்று.


--------------------------------------------------

ஹாலிவுட் இயக்குனர்களான மார்ட்டின் ஸ்கார்சீஸ், கை ரிட்சி, படங்களில் பார்ப்பது போல ஒரு இருள்/நிழல் உலகத்தை நம் கண் முன்னே மிகத் துல்லியமாகக கொண்டுவந்து நிறுத்தியிருக்கின்றார். ஒருவரின் நிழலில் இன்னொருவர் உருவாவதும்... வளர்ந்தபின் வளர்த்தவர் மேலேயே பாய்வதும் ஆகிய நிழல் உலகின் 'Survival of the Fittest ' கொள்கைகளை மிக சிறப்பாகவே சொல்லியிருக்கின்றார்.


--------------------------------------------------

பர்மா பஜாரின் திருட்டு VCD தொழிலுக்கு பின்னால் மறைந்திருக்கும் மர்ம முடிச்சுக்களை அவிழ்க்கும் இந்த கதை சிறந்த திரைக்கதையாகவும் இருப்பது தனி சிறப்பு. இயக்குனர் ஷங்கரையும் அவரது நண்பன் படத்தையும் மையமாக வைத்து கதை சொன்ன விதம் அருமை. ஷங்கரே கூட இதை படமாக எடுக்க களம் உள்ள நாவல்.


--------------------------------------------------

ஒரு ஒண்ணரை முதல் இரண்டு மணி நேரத்திரைப்படத்துக்கான களம் மற்றும் பாத்திரங்கள் கச்சிதமாய் இருக்கும் இந்நாவலை டீட்டெயிலிங்கில் பிராமதப்படுத்தும் ஒரு நல்ல இயக்குநரும் (கே.வி.ஆனந்த் போல), ஒரு நல்ல குழுவும் சேர்ந்தால் என்றேனும் ஒருநாள் முழுநீளத்திரைப்படமாக பட்டையைக் கிளப்பக்கூடும். 


--------------------------------------------------

சென்னை பர்மா பஜார் தான் கதைக்களம். அங்கே நடக்கும் தொழில், அங்கே நிகழும் சம்பவங்கள், தாதாக்கள், ஒருவரை ஒருவர் முந்தும் தன்மை, திருட்டு வி.சி.டி இவற்றை மையமாக கொண்டு கதை செல்கின்றது. விறுவிறுப்பிற்கு பஞ்சமே இல்லை. தொடர் கொலைகள் அதை யார் செய்தார்கள் என்ற கேள்வியுடன் பயணிக்கின்றது. படு வேகம். விவரணைகள் கதைக்குள் ஒன்ற செய்கின்றது. டீடெய்லிங் தான் ஆச்சரியப்பட வைக்கின்றது, எல்லா தகவல்களையும் விரல்நுனியில் வைத்துள்ளார். 


--------------------------------------------------

 Get the book ,you can not keep it down without completing. As reader I want to enhance the experience of the book. AZHIKKAP PIRANDHAVAN MAPIA : CLICK HERE!


- முத்துவேல் சிவராமன்
--------------------------------------------------

கொஞ்சமும் ஏமாற்றாத த்ரில்லர். நடை அமர்க்களம். விறுவிறுப்பான அக்மார்க் லோக்கல் மசாலா.

- நரேன்

--------------------------------------------------

செம விறுவிறுப்பான திரில்லர் நாவல்..! ஏக் தம்மில் இரவோடு இரவாகப் படித்து முடித்தேன். அவசியம் படியுங்கள். நிச்சயமாக உங்களுக்கும் பிடிக்கும்.

- உண்மைத் தமிழன்

--------------------------------------------------

 கதை விறுவிறுப்பாக இருக்கிறது.. ஃபில்டர் & டுபாக்கோ பர்ஃபெக்ட்லி மேட்சுடு சிகரெட்டைப்போல...

- மணிஜி

--------------------------------------------------

சினிமா பின்னணியில் அமைந்த தடதடக்கும் கிரைம் த்ரில்லர். காரம் கொஞ்சம் தூக்கலான அருமையான மசாலாப் படம் பார்த்த உணர்வு.


--------------------------------------------------

செம்ம சேஸிங் த்ரில்லர்.. கே.வி ஆனந்த் தோத்தாரு போங்க. சேஸிங் கண்ணுக்குள்ள விரியுது


--------------------------------------------------

ஜெட் வேகம். ஒரிரு லாஜிக் ஓட்டைகளும் படிக்கும் போது தெரியவில்லை, படித்து முடித்த பின்னர்தான் தோன்றுகிறது. அத்தனை வேகம்.


--------------------------------------------------

‘அழிக்கப் பிறந்தவன்’ - சென்னையில் டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் விற்பனைக்கு கிடைக்கும். தொடர்பு எண் : 9940446650.
விலை ரூ.50/- மட்டுமே. பக்கங்கள் : 96.
ஆன்லைனில் வாங்க...

13 ஜனவரி, 2012

டேபிள் டென்னிஸ்!


வயதுக்கும், மனதுக்கும் ஏற்ப ஒவ்வொருவரும் ஒவ்வொரு விளையாட்டை ஒவ்வொரு காலக்கட்டத்திலும் விளையாடிக் கொண்டேயிருக்கிறோம். சில நேரங்களில் கிரிக்கெட். பல நேரங்களில் ஓட்டப்பந்தயம். கேரம்போர்ட், செஸ், செக்ஸ்.. எந்த விளையாட்டு விளையாடினாலும் போங்கு ஆட்டம் ஆடுபவர்களும் இருக்கவே செய்வார்கள்.

48 வயது. உடல் ஒத்துழைத்திருந்தால் டென்னிஸ் விளையாடியிருப்பார் கோபிகிருஷ்ணன். அதிவேகமாக மனம் ஒத்துழைத்ததால் டேபிள் டென்னிஸ் ஆடியிருக்கிறார். டென்னிஸை விட டேபிள் டென்னிஸுக்கு வேகமாக இயங்க வேண்டும். ஆனால் டென்னிஸ் போல இங்கும் அங்குமாக ஓடியாடி உழைப்பை பெருமளவில் கொட்ட வேண்டியதில்லை. பெண்ணாக பிறந்திருந்தால் கோபிகிருஷ்ணனை காதலித்திருக்கலாம். இரண்டு நாட்களாக சிந்தையெல்லாம் விஸ்வரூபமெடுத்து கொன்று கொண்டிருக்கிறார். காதலும், காமமுமாக பொழுது இப்போதெல்லாம் பரவசமாயிருக்கிறது.

அத்தியாயத் தலைப்புகளாக கேம் பாயிண்டுகள். ஒவ்வொரு அத்தியாயமும் இவ்வளவு நீளம், இவ்வளவு அகலம் என்றெல்லாம் எந்த வரையறையும் இல்லை. போன அத்தியாயத்துக்கும் அடுத்த அத்தியாயத்துக்குமான தொடர்ச்சிகள் எதுவுமில்லை. புத்தகத்தில் எந்தப் பக்கத்தை வேண்டுமானாலும் புரட்டி எந்த அத்தியாயத்தை வேண்டுமானாலும் முன்பின்னாக நகர்ந்து வாசித்துக் கொள்ளலாம். குறுநாவல் என்று சொல்லப்பட்டாலும் நாவல், குறுநாவல், சிறுகதைத் தொகுப்பு, சுயசரிதை என்றெல்லாம் எப்படியுமே வகைப்படுத்த இயலாத வினோத வடிவம். சாருநிவேதிதாவின் ராஸலீலாவுக்கு இந்நூலை முன்னோடியாக எடுத்துக் கொள்ளலாம், சாரு ஒத்துக்கொள்ளா விட்டாலும் கூட.

என்னுரையிலேயே தெளிவாக சொல்லிவிடுகிறார். படைப்பில் இருக்கும் (கவனிக்கவும் நாவலில் அல்ல, படைப்பில்) சம்பவங்கள் அனைத்துமே மனப்பதிவுகளாகக் கொள்ளப்பட வேண்டும் என்பது அவரது வேண்டுகோள். டேபிள் டென்னிஸ் ஒரு உளவியல் ஆவணமென்பதாலேயே பிரசுரிக்கப்பட வேண்டியதற்கான நியாயத்தைப் பெறுகிறது என்று justify செய்கிறார்.

சரி. டேபிள் டென்னிஸின் கதைதான் என்ன?

கோபிகிருஷ்ணனுக்கே இந்தக் கேள்விக்கு விடை தெரியாது. நாற்பத்தெட்டு பக்க (எழுதும்போது அவர் வயசும் 48) நோட்டுப் புத்தக அளவில் இருக்கும் புத்தகத்தில் எழுத்துக்கு எழுத்து, வரிக்கு வரி, பக்கத்துக்குப் பக்கம் காதலும், காமமும், இவற்றால் விளையும் பரவசமும். பண்பாடு, கலாச்சார கந்தாயங்களால் காயடிக்கப்பட்டவர்களுக்கு - பாலியல் வாய்ப்புகள் தாராளமாக கிடைத்தாலும் பாலியல் வறட்சியில் வாடுபவர்களுக்கு - டேபிள் டென்னிஸின் Erotica கிளர்ச்சியை ஏற்படுத்தலாம் என்று அனுமானித்திருக்கிறார். ’...ச்சீ’ என்று வெட்கப்படுபவர்களோ அல்லது பாலுறவைப் பாவம் என்று நம்பும் மனநோயாளிகளோ இந்தப் பக்கமே வராதீர்கள் என்று ஆரம்பத்திலேயே துரத்தியடித்தும் விடுகிறார்.

“நடுவில் உருவி விட்டுக்கொண்டு வர இயலாது தோழரே” - முதல் ஷாட்டிலேயே பாயிண்ட் அடித்துவிட்டு பிறகு ஆற அமர செட்டில் ஆகிவிட்டு விளையாடுகிறார். வாசகனையும் விளையாட்டுக்கு சேர்த்துக் கொள்கிறார். இங்கே ஆசிரியனுக்கும், வாசகனுக்கும் பாயிண்ட் ட்யூஸ். நூல் முழுக்க விரவியிருக்கும் ஆங்கில வார்த்தைகளுக்கு அர்த்தம் தேட பக்கத்தில் டிக்‌ஷனரியை வைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

”என்ன கடினமான உழைப்பானாலும் அழகியின் கேசமும் மார்பகங்களும் ஒரு இதம்தான்” இதுபோல அழகியல் வர்ணனைகள் வாசிக்கும்போதே மனதுக்கு இதம். வாசகனின் கற்பனை ரெக்கை கட்டி ஜெட்விமான வேகத்தில் வானுக்கு பறக்க அவகாசமும் கிடைக்கிறது. “இடுப்புக்கு கீழே நீ ஒரு புரட்சிக்காரிதான்” பாலுணர்வை நயமாக, அலுங்காமல், குலுங்காமல் பகிர்ந்து கொள்கிறார்.

“இழவுச் சாமியார் ஒரு கொழுத்த பன்றி. ருத்திராசக் கொட்டைகள் அவரது கொட்டைகளைவிட மிகச் சிறியவை. முருகர் வியாபாரம். நல்ல லாபம். வேல் வேல் வெற்றி வேல்” - நகைக்கவும் சில தருணங்கள். “ஐயங்கார் : மனைவியுடன் படுப்பது சிற்றின்பம். பிற பெண்களுடன் படுப்பது பேரின்பம்”

“ஆயுத பூசை. குங்குமம் இடப்பட்ட குறி அவசரகதியில் நுழைந்தது உள்ளே. உச்சக்கட்ட சிலிர்ப்பின் போது கற்பூரம் ஏற்றி வழிகாட்டினாள் எங்க பேட்டை அம்மன். அம்மனுக்குத்தான் எத்தனை வாளிப்பான உடம்பு! ஓரிரவு படுக்கைத் தோழியாக இருக்க இசை. குறி கேட்கிறது. அவிழ்த்துவிடு. இறுக்கம் தாளமுடியவில்லை. திருக்கரங்களைப் படரவிடு” - இவ்வளவு இயல்பாக, அசூயை கொல்லும் வார்த்தைகள் இல்லாமல் காமத்தை எழுதமுடியுமா என்று ஆச்சரியப்பட புத்தகம் நெடுகிலும் காமம் குலுக்கப்பட்ட ஷாம்பெயின் பாட்டிலாக பொங்கி வழிகிறது. இன்னொரு சின்ன உதாரணம். “அவளுக்கு என்ன ஆகிவிட்டது இன்றிரவு? தலையில் இருந்த பூச்சரத்தை எடுத்துக் குறிக்குச் சுற்றிவிட்டாள். மணம் பிரமாதம்”.

”Black Knight அரை போத்தலில் அருமையான போதை”. சூழலை எப்போதும் கொண்டாட்டமாக வைத்திருப்பவர்கள் தான் இதுமாதிரி வரிகளை எழுதமுடியும். “தங்கள் Panties சாம்பல் நிறம்தானே என்றேன் தணிந்த குரலில். இடது கன்னத்தில் உள்ளங்கையை வைத்து முகத்தை தள்ளினார். வலது கன்னத்திலும் கையை வையுங்கள்; பிரான் அப்படித்தானே உபதேசித்திருக்கிறார் என்றேன்” கிறிஸ்தவ தேவதை ஒருவருடனான கிருஷ்ணனின் அனுபவம். காமமும், காதலும் ஒரு கொடியில் பூத்த இருமலர்களே.

“என் காதலிகூடக் காலையில் கக்கூஸுக்குத்தான் போகிறாள்” - புனிதமயமாக்கப்பட்டு தேவதைகளால் ஆசீர்வதிக்கப்பட்ட காதலை இதைவிட அழகாக கட்டுடைக்கமுடியுமா?

”ஒரு schic எப்படிக் கவிதைகள் எழுதமுடியும் என்று கேட்டார். என்னைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள், நானே ஒரு paranoid schic என்றேன். இல்லை, நீங்கள் விளையாடுகிறீர்கள், ஒரு மனநோயாளியால் இவ்வளவு தெளிவாக விவாதிக்க முடியாது என்றார். 1974ல் 45 நாட்களும் 1980-ல் 10 நாட்களும் மனநலக் காப்பக நரகத்தில் சிகிச்சை பெற்றேன் என்று சொன்னேன்” - ஒரு மனநோயாளியாக் இருப்பது எவ்வளவு பெரிய பேறு. கோபிகிருஷ்ணனுக்கு வாய்த்திருக்கிறது. வாய்க்கப்படாதவர்கள் பூமியில் வாழும்போதே வாழ்நாள் முழுக்க நரகத்தில் உழல்கிறார்கள். நூலை வாசித்த கணத்தில் இருந்து பருத்த முலைகளும், சிகப்பு யோனிகளும் மனசெல்லாம் நிறைகிறது.


நூல் : டேபிள் டென்னிஸ்
பக்கங்கள் : 48
விலை : ரூ.15
பதிப்பகம் : தமிழினி, 342, டி.டி.கே சாலை, ராயப்பேட்டை, சென்னை-14.

12 ஜனவரி, 2012

தமிழ் சினிமாவில் என்னதான் பிரச்சினை?

“பிழைப்போமா, அழிவோமா தெரியாது. வாழ்ந்தோம் என மட்டுமாவது பதிவு செய்ய விரும்புகிறோம்” – ‘பாலை’ என்கிற திரைப்படத்தை இயக்கிய செந்தமிழன், சில நாட்களுக்கு முன்பாக ஃபேஸ்புக்கில் இதை சொன்னார்.

“தமிழகத்தின் சரிபாதி பகுதிகளில் எங்கள் படத்தைத் திரையிட ஒரு அரங்கு கூட கிடைக்கவில்லை. இன்றைக்கு தமிழகத்தில் உள்ள ஆயிரத்து இருநூறு திரையரங்குகளில் பாதிக்கு மேற்பட்டவையை ஒரு சில படங்கள் மட்டுமே ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு அரங்கத்துக்கும் இலட்சக் கணக்கில் பணம் கொடுக்கப்பட்டு, அந்த அரங்களில் வேறு படங்கள் திரையிடப் படாமல் பார்த்துக் கொள்கின்றன” என்றும் செந்தமிழன் ஃபேஸ்புக்கில் குற்றம் சாட்டுகிறார்.

என்னதான் நடக்கிறது?

ஒரு திரைப்படம் தயாரிப்பு, விநியோகம், வெளியீடு என்ற மூன்று கட்டங்களை தாண்டி ரசிகர்களின் பார்வைக்கு வருகிறது. பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக இந்த மூன்று கட்டங்களும் வெவ்வேறு நிறுவனங்களால், மனிதர்களால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. தயாரிப்பாளர்கள் படங்களை தயாரிப்பார்கள். விநியோகஸ்தர்கள் அப்படங்களை வாங்குவார்கள். திரையரங்குகள் விநியோகஸ்தர்களிடமிருந்து படங்களை வாங்கி திரையிடும். சமீபகாலமாக சினிமாவில் அசுரத்தனமாக வளர்ந்துவரும் ‘கார்ப்பரேட் கலாச்சாரம்’ இந்த நடைமுறையை முற்றிலுமாக மாற்றி வருகிறது. மூன்று துறைகளையுமே ஒருங்கிணைத்து, ஒரே குடையின் கீழ் செயல்பாட்டுக்குக் கொண்டு வருவதால், பெரிய நிறுவனங்கள் தயாரிக்கும் படங்கள் அல்லது பெரிய நட்சத்திரங்கள் நடிக்கும் படங்கள் மட்டுமே ரசிகர்களை சென்றடையும் நிலை ஏற்பட்டிருக்கிறது என்று சினிமா வட்டாரங்களில் வருத்தத்தோடு பேசிக் கொள்கிறார்கள்.

முன்பெல்லாம் தீபாவளிக்கு பத்து, பதினைந்து படங்கள் வெளியாகும் அவற்றில் நான்கைந்து படங்களாவது பெரும் வெற்றி பெறும். தீபாவளியைப் போலவே பொங்கல், கோடைவிடுமுறையை குறிவைத்தும் ஏராளமான படங்கள் வெளிவரும். ஒரு படத்தைத் தயாரித்தாலேயே, அதன் தகுதிக்கேற்ப விலை கிடைக்கும். வெளியிட்ட பின்பு, ரசிகர்களின் ஆதரவைப் பொறுத்து விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்குகளுக்கும் லாபம் கிடைக்கும். திரைப்படத்துறையில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வருடம் முழுக்க வேலை கிடைத்தே கொண்டு இருக்கும்.

ஆனால் கடந்த தீபாவளிக்கு வெளியானது இரண்டே இரண்டு படங்கள்தான். அவையும் பெரிய நிறுவனங்கள் தயாரித்து, வெளியிட்டவை என்று இந்தப் போக்குக்கு உதாரணமும் காட்டுகிறார்கள். இதற்கேற்ப தணிக்கை செய்யப்பட்டு, தியேட்டர் கிடைக்காததால் திரையிடப்பட முடியாமல் சுமார் முப்பது தமிழ் திரைப்படங்கள் பெட்டிக்குள் முடங்கிக் கிடக்கின்றன. தமிழ்த் திரையுலகில் முன்னெப்போதும் இதுபோன்ற ஒரு நிலை இருந்ததே இல்லை.

பெரிய நிறுவனங்கள் பெரிய நடிகர்களையும், பெரிய இயக்குனர்களையும் வைத்து மட்டுமே படம் தயாரிக்க முனைகின்றன. புதுமுக நடிகர்களையோ, இயக்குனர்களையோ. புதிய கதைக்கருக்களையோ அறிமுகப்படுத்தி ‘ரிஸ்க்’ எடுப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் புதிய திறமைகள் வெளிச்சத்துக்கு வருவதில் கடுமையான சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இதே நிலை தொடருமானால் புதிய திறமைகள், இன்னும் அப்பட்டமாகச் சொன்னால் இளைஞர்கள் தமிழ் திரையுலகில் நுழைய இயலாமல் அதன் இரும்புக் கதவுகள் பூட்டப்பட்டுவிடும்.

சில மாதங்களுக்கு முன்பாக வெளியிடப்பட்ட திரைப்படம் ‘வெங்காயம்’. பகுத்தறிவுக் கருத்துகளை மிகத் தைரியமாக, சமரசமின்றி முன்வைத்த திரைப்படம் சங்ககிரி ராஜ்குமார் என்கிற இளைஞர் இயக்கிய இப்படத்தை, தமிழ் திரைப்படவுலகின் பெரிய இயக்குனர்கள் மனதாரப் பாராட்டியிருந்தார்கள்.

மிகக்குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் என்பதால் வெளியிட மிகவும் சிரமப்பட வேண்டியதாயிற்று. சொற்ப அரங்குகளில் போதிய விளம்பரச் செலவுகள் செய்யப்பட முடியாமல் ‘வெங்காயம்’ வெளியானது. திரைப்படத்தைப் பார்த்த ரசிகர்களின் விமர்சனத்தைக் கேட்ட மக்கள் இப்படத்தைக் காண ஆர்வம் காட்டினார்கள். துரதிருஷ்டவசமாக இதற்குள் ஒருவாரம் முடிந்து, பெரிய படம் ஒன்று வெளியாக ஏதுவாக எல்லா தியேட்டர்களிலும் ‘வெங்காயம்’ எடுக்கப்பட்டு விட்டது. நல்ல படம் என்பதால் இப்படத்தை மறுவெளியீடு செய்ய, இயக்குனர் சேரன் தாமாகவே முன்வந்து முயற்சிகள் எடுத்தும், இன்னும் வெங்காயத்துக்கு விடிவு கிடைக்கவில்லை.

“படம் எடுப்பது பெரிய விஷயமல்ல. அதை மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதுதான் முக்கியம். சிறு பட்ஜெட் படங்கள் போதிய விளம்பரம் இல்லாமல் போய்தான் மக்களைச் சென்று சேரமுடியவில்லை” என்று இந்த நிலைக்கு சமீபத்தில் ஒரு ஆடியோ வெளியீடு விழாவில் விளக்கம் சொன்னார் நடிகரும், இயக்குனரும், தயாரிப்பாளருமான அர்ஜூன்.

‘சினிமா வியாபாரம்’ என்கிற புத்தகத்தை எழுதியவரும், சினிமாத் துறையில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி வருபவருமான சங்கர் நாராயண், “கலை என்று சொல்லுவதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். இங்கே சினிமாவும் ஒரு வியாபாரம் என்பதை முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டும். நஷ்டப்பட்டு கலை வளர்க்க இங்கு யாரும் தயாரில்லை” என்கிறார்.

“காலத்துக்கேற்ப எல்லாத் தொழிலுமே தத்தம் வடிவத்தை மாற்றிக் கொள்கின்றன. சினிமாவும் அவ்வாறு மாறுவது இயல்பானதுதான். படத்துக்கு பட்ஜெட் ஒரு கோடி ரூபாய் என்றால், விளம்பரத்துக்கு ஐம்பது லட்சமாவது செலவு செய்தாக வேண்டும். நல்ல படமெடுத்திருக்கிறோம், நிச்சயம் ஓடும் என்கிற குருட்டு நம்பிக்கையில், விளம்பரத்தில் சிக்கனம் காட்டிவிட்டால் தியேட்டர்கள் நஷ்டத்துக்கு ‘நல்ல படத்தை’ ஓட்ட முடியாது.

குப்பைப் படத்துக்கு நல்ல பப்ளிசிட்டி கொடுத்தாலும், அது ஓடாது. சமீபத்தில் பெரிய நடிகர்கள், இயக்குனர்கள் பங்கேற்று வெளிவந்த சில தோல்விப்படங்களையே இதற்கு உதாரணம். நல்ல படம், நல்ல பப்ளிசிட்டி என்பதுதான் இனி வெற்றிப்படத்துக்கான சூத்திரம். படத்துக்கு பட்ஜெட் போடும்போதே, விளம்பரத்துக்கும் பெரும் பங்கு ஒதுக்க வேண்டும்” என்று படமெடுப்பவர்களுக்கு ‘ஐடியா’ கொடுக்கிறார் சங்கர் நாராயண். இவர் தியேட்டர் நடத்தியிருக்கிறார். விநியோகம் செய்திருக்கிறார். இணை இயக்குனராகவும் பணியாற்றியிருக்கிறார். நடிகரும் கூட.

“விளம்பரம், பிரம்மாண்ட தயாரிப்பு என்றெல்லாம் இருந்தாலும் கூட பெரிய படங்களுக்கும் சில நேரங்களில் சிக்கல் ஏற்படுவதுண்டு. தொடர்ச்சியாக தோல்விப் படங்களைத் தந்தவர்களுக்கு தியேட்டர் கிடைப்பதில் சிரமம் ஏற்படும். நடிகர் விஜய்யின் காவலன் திரைப்படத்துக்கு இம்மாதிரி சிக்கல் ஏற்பட்டது. இப்போது சிம்புவின் ‘ஒஸ்தி’ படத்துக்கும் இதே பிரச்சினை ஏற்பட்டது. சிறுபடங்களுக்கு மட்டும் தியேட்டர் ஆதரவு இல்லை என்று சொல்வது நிஜமல்ல. தியேட்டர் நடத்துவதின் சிரமம் தியேட்டரை நடத்துபவர்களுக்குதான் தெரியும். எத்தனை திரையரங்கு உரிமையாளர்கள் தியேட்டரை இடித்துவிட்டு கல்யாண மண்டபமோ, ஷாப்பிங் காம்ப்ளக்ஸோ கட்டுகிறார்கள் என்று உங்களுக்கெல்லாம் தெரியும்தானே?” என்கிறார் பெயர் வெளியிட விரும்பாத திரையரங்கு நிர்வாகி ஒருவர்.

இந்தப் பிரச்சினையை அலசும்போது ஒருமாதிரியாக தமிழ் திரையுலகை இருள் கவிழ்ந்திருப்பதைப் போன்ற தோற்றம்தான் தெரிகிறது. ஆனாலும் ஒரு சில வெளிச்சக் கீற்றுகளும் இல்லாமல் இல்லை.

ஓராண்டுக்கு முன்பு இயக்குனர் பிரபு சாலமன் இயக்கிய ‘மைனா’ பெரும் வணிக வெற்றி கண்ட சிறு முதலீட்டுப் படம். தரமான படமாக எடுத்ததால், பெரிய நிறுவனம் ஒன்று தானே முன்வந்து இப்படத்தை நன்கு விளம்பரப்படுத்தி, நிறைய திரையரங்குகளில் திரையிட்டு பிரம்மாண்டமான வெற்றியை கண்டது. நல்ல படம் எடுத்தால் மட்டும் போதாது, அதை நல்ல முறையில் வியாபாரமும் செய்தால் வெற்றி நிச்சயம் என்பதற்கு ‘மைனா’ ஓர் எடுத்துக்காட்டு.

சாட்டிலைட் டிவிக்களை நிர்வகிக்கும் நிறுவனங்களே சினிமா நிறுவனங்களாகவும் உருவெடுத்து வருவது சமகாலப் போக்கு. இப்போது விமர்சனத்துக்குள்ளாகும் ‘பெரிய நிறுவனங்கள்’ பெரும்பாலும் இவைதான். இவர்களது டிவிக்களுக்கு புதிய படங்களைப் பெறுவதில் ஏற்பட்ட பிரச்சினைகளைத் தொடர்ந்தே, இந்த தொழிலுக்குள் இவர்களும் நுழைய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இந்நிறுவனங்களே தமிழகத்தின் பெரும்பாலான திரையரங்குகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து வைத்திருக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால், தரமற்ற படங்களை இந்நிறுவனங்கள் நினைத்தாலும் ஓடவைக்க முடியாது என்பதுதான் உண்மை.

பெரிய நிறுவனங்களுக்கான பிரச்சினைகளே வேறு. பட்ஜெட்டில் பாதியை பெரிய ஹீரோவுக்கோ, பெரிய இயக்குனருக்கோ ஒதுக்கியாக வேண்டியிருக்கிறது. ஹீரோக்களுக்கே பதினைந்து கோடி, இருபது கோடி கொட்டியழுதுவிட்டு, படத்துக்கும் பிரம்மாண்டமாக செலவிட்டுவிட்டு, நிறைய திரையரங்குகளில் வெளியிட்டால்தான் கையைக் கடிக்காமலாவது பார்த்துக்கொள்ள முடியும்.
பிழைப்புக்கே வழியில்லை என்று பட்ஜெட் பட இயக்குனர்கள் புலம்பிக் கொண்டிருக்கும் இதே தமிழ் சினிமாவில்தான், இன்று இந்தியாவிலேயே அதிக வசூலை ஈட்டிய எந்திரனும் வெளிவந்திருக்கிறது. நன்கு திட்டமிடப்பட்ட சினிமா, வசூலை வாரிக்குவிக்கும் என்பதுதான் எளிய சூத்திரம். இது எந்திரனுக்கும் பொருந்தும், மைனாவுக்கும் பொருந்தும்

சிறிய படங்களுக்கு அரங்குகள் கிடைக்காத பிரச்சினை என்பதற்கு பெரிய பட்ஜெட் படங்கள் மட்டுமே காரணம் என்றில்லை. அதுவும் ஒரு காரணம் மட்டுமே. சினிமாத் தொழில் மாறிக் கொண்டிருக்கிறது என்கிற யதார்த்தத்தை சிறு முதலீட்டில் படமெடுக்கும் தயாரிப்பாளர்கள் முதலில் உணரவேண்டும்.

(நன்றி : புதிய தலைமுறை)