5 செப்டம்பர், 2012

வாலிபன் சுற்றும் உலகம்


யார் யாரோ எம்.ஜி.ஆர் படம் எடுத்திருக்கிறேன் என்று பெருமை அடித்துக் கொள்ளும் காலம் இது. எம்.ஜி.ஆர் படத்தை எம்.ஜி.ஆரின் ரசிகனால் மட்டுமே எடுக்க முடியும். ஒரு ரசிகர் எடுத்திருக்கிறார். ‘புரட்சித்தலைவரின் பாணியில் எடுக்கப்பட்ட புதிய படம்’ என்று விளம்பரப்படுத்தியிருக்கிறார்கள்.

ஒரு ஊரில் ஒரு அப்பா, ஒரு அம்மா. அவர்களுக்கு இரண்டு மகன்கள். ஒரு மகள். ‘தாயிற் சிறந்த கோயிலுமில்லை, தந்தை சொல் மிக்க மந்திரமில்லை’ என்கிற பூவை செங்குட்டுவனின் பாட்டு அவர்களது குடும்பப்பாட்டு. அப்பாவாக நடிப்பவர் எம்.ஜி.ஆர் பாணி உடை அணிந்திருக்கிறார். முகம் மட்டும் ஓ.ஏ.கே தேவர் மாதிரியிருக்கிறது. கொஞ்சம் கருப்பு. அப்பாவின் பெயர் கோபாலன். அம்மா பெயர் சத்யா. மகன்களின் பெயர் ராமன், சந்திரன்.

‘நின்னுக்கோரீஈஈ வரண்ணும்’ என்று கவுண்டமணியிடம் பாட்டு கற்றுக் கொண்டவர் டாக்டராக நடித்திருக்கிறார். அவர் ஏதோ ஒரு ஃபார்முலாவை கண்டுபிடிக்கிறார். நம்பியார் அந்த ஃபார்முலாவை வெளிநாடுகளுக்கு விற்று கோடி, கோடியாய் சம்பாதிக்க திட்டமிடுகிறார்.
மாறாக கோபாலனோ அது இந்திய மக்களுக்கு உதவவேண்டும். இந்திய அரசிடம்தான் ஃபார்முலாவை ஒப்படைக்க வேண்டும் என்று போராடுகிறார். தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதை உணர்ந்த டாக்டர், அந்த ஃபார்முலாவை மறைத்து வைத்திருக்கும் மேப்பை வரைந்து ஒரு நெக்லஸ் டாலரில் மறைத்து கோபாலனிடம் கொடுத்துவிடுகிறார். விஷயம் தெரியாத நம்பியார் ஆட்கள் டாக்டரை கொலை செய்துவிட்டு, ஃபார்முலாவை தேடி அலைகிறார்கள். டாக்டரை கொன்றது கோபாலன்தான் என்று போலிஸ் தேடுகிறது. ஃபார்முலா கோபாலனிடம்தான் இருக்கும் என்று நம்பியார் ஆட்களும் தேடுகிறார்கள். கோபாலன் தப்பிக்கும் போது அவரது குடும்பம் மூன்றாக பிரிகிறது.

இங்கேதான்டைட்டில்போடுகிறார்கள்.

டைட்டில் முடிந்ததுமே புரட்சித்தலைவர் மாதிரியே உடை, மேக்கப் போட்டிருக்கும் சந்திரன்வெற்றி, வெற்றி, வெற்றிஎன்று முழங்கிக்கொண்டே வந்து தன் தாயிடம் ஆசிபெறுகிறார். சந்திரன் தன் தாயோடு வளர்ந்துவாத்யார்ஆகிறார். கோபாலனுடன் அவரது மகள் மலேசியாவில் இருக்கிறார். ராமன், விசுவாசமான வேலைக்காரனுடன் வளர்ந்து டாக்டர் ஆகிறார். ஆனால் ராமனும், சந்திரனும் டபுள் ஆக்ஷன் புரட்சித்தலைவர் இல்லை என்பது பெரிய குறை. சந்திரன் மட்டும்தான் புரட்சித்தலைவராக நடித்திருக்கிறார். குடும்பம் எப்படி சேர்கிறது, ஃபார்முலாவின் கதி என்ன ஆனது என்று கதறக்கதற படமெடுத்து ராவடி செய்திருக்கிறார் இயக்குனர் .ஆர்.லலிதசாமி.

ஹீரோ எம்.ஜி.ஆர்.சிவா லாங்ஷாட்டில் தலைவர் மாதிரிதான் இருக்கிறார். ஆனால் க்ளோஸப்பில் பார்க்கும்போது தாங்கமுடியவில்லை. படம் பார்க்கும் மக்கள் திலகத்தின் ரசிகன் ஒவ்வொருவனும் இந்தக் காட்சிகளில் ரத்தக் கண்ணீர் வடிக்கிறான். ‘லுக்தான் ஒருமாதிரி இருக்கிறதே தவிர நடனம், பாட்டு, மேனரிசம் ஆகியவற்றில் குறைவைக்கவில்லை ஹீரோ. குறிப்பாக ஒரு காட்சியில் கருப்பு பேண்ட், சிகப்புச் சட்டை, கூலிங் க்ளாஸ் அணிந்து வரும்போது நாமே சிலிர்ப்படைந்துவிட்டோம். பழைய எம்.ஜி.ஆருக்கும், புது எம்.ஜி.ஆருக்குமான வித்தியாசம் என்னவென்றால் புதியவர் செல்போன் உபயோகிக்கிறார்.

போஸ்டரில் லதா படத்தைப் பார்த்து அவர்தான் ஹீரோயினோ என்று கலவரமடைந்து இருந்தோம். நல்லவேளையாக அவர் புரட்சித்தலைவரின் அம்மாவாக நடித்திருக்கிறார். சீரியல் அம்மாக்களின் நடிப்பை விஞ்சும் வகையில் சிறந்த நடிப்பு.

படத்தின் ஆரம்பத்தில் வரும் நம்பியார் படம் முழுக்க வராமல், அவரது மகன் அசோகன்தான் மெயின் வில்லன். அசோகன் தோன்றும் காட்சியில் எல்லாம் ரெண்டு உருட்டுக் கட்டைகள் இடமும், வலதுமாக ஜெயமாலினி பாணி டிரெஸ்ஸிங்கில் கிளுகிளுப்பூட்டுகிறார்கள். அசோகனின் அடியாட்கள் அந்த காலத்திலிருந்தே இன்னமும் படு முட்டாள்களாகதான் இருக்கிறார்கள்.

கலைஞரை எதிர்த்துபஞ்ச்டயலாக்குகளும் உண்டு. “ஊருக்குப் பிரச்சினைன்னா மேலிடத்துக்கு கடிதம்தான் எழுதுவே. உன் பொண்ணுக்கு ஏதாவதுன்னா நேராவே போயிடுவியா?” என்று புரட்சித்தலைவரின் அண்ணன் டாக்டர் ராமன், சக டாக்டரிடம் கேட்கிறார். சக டாக்டருக்கு தலையில் முடி இல்லை. கருப்புக்கண்ணாடி போட்டிருக்கிறார்.

புரட்சித்தலைவர் படங்களுக்கேயான பிரத்யேக கச்சாப் பொருட்களான அம்மா பாசம், தங்கை பாசம், பெரியவர்களுக்கு மரியாதை, அநியாயத்தை கண்டு ஆக்ரோஷமாக கொந்தளிப்பது, ஊருக்கு உழைப்பது, காதல், செக்ஸ் என்று அனைத்தையுமே கனக்கச்சிதமாக கைக்கொண்டுள்ளார் இயக்குனர். சண்டைக்காட்சிகள் சிறப்பு.

குறிப்பாக தங்கையை புரட்சித்தலைவர் மலேசியாவில் கண்டுகொள்ளும் காட்சி அபாரம்.

நீ எந்த ஊரும்மா?”

தமிழ்நாடு

உன் அப்பா

கோபாலன்

உன் அம்மா

சத்யா

உன் அண்ணன்?”

ராமன், சந்திரன்

தங்கச்சீஈஈஈஈஈஈ

நீங்க?”

நான்தாம்மா உன்னோட ரெண்டாவது அண்ணன் சந்திரன்

அண்ணாஆஆஆஆ

தங்கச்சீஈஈஈஈஈஈ

இப்படியான உருக்கமான, புதுமையான காட்சிகள் படம்நெடுக ஏராளமாக உண்டு. அம்மாவைப் பிரிந்த மகனும், மகளும் நீண்டகாலம் கழித்து காணும் காட்சி. அப்பாவைப் பிரிந்த மகன் அவரை காணும் காட்சி. கணவனும், மனைவியும் இணையும் காட்சி என்று நிறைய சொல்லலாம்.

இசை எம்.எஸ்.விஸ்வநாதன். டி.எம்.எஸ், எம்.எஸ்.வி., எஸ்.பி.பி.யெல்லாம் பாடியிருக்கிறார்கள். ‘உன்னை நான் சந்தித்தேன்பாட்டைத் தவிர்த்து மத்ததெல்லாம் டப்பா. பின்னணி இசை படு கோராமை. முத்தமிழ் பாடலின் லிரிக்ஸ் ஓக்கே. ‘உன் விழி முதல் தமிழ். உன் மொழி இரண்டாம் தமிழ். உன் இடை மூன்றாம் தமிழ். உன் நடை முத்தமிழ்என்று போகிறது. வாலி, காமகோடியான் இருவரும் பாடல்களை எழுதியிருக்கிறார்கள்.

படத்தின் மிகப்பெரிய ஆறுதல் ஹீரோயின் மீனாட்சி. ஃபேஸ்கட் அடிப்படையில் சுமாரான ஃபிகர் என்றாலும், சரியான திம்சுக்கட்டை. முதுகு 70 எம்.எம்.மாக இருப்பதில் ஆச்சரியமில்லை. இவருக்கு தொப்பையும் சினிமாஸ்கோப். படத்தில் மொத்தமே மூன்றோ, நாலோ காட்சிகள்தான். ஆனால் பாடல்காட்சிகள் அதிகம். ஒரு அருவிப் பாடலில் முழங்காலுக்கு மேலே பாவாடையை தூக்குகிறார். இடுப்புக்கு மேலே கச்சிதமாக உடலைக் கவ்விய மேலாடை அணிந்து, பயங்கர ஆட்டு ஆட்டி நடனமாடுகிறார். இவரது கவர்ச்சியில் மயங்கி காதல்வசப்பட்ட தலைவரும் வாய்ப்பை பயன்படுத்தி செம தடவு தடவியிருக்கிறார்.

எம்.ஜி.ஆர் ஃபார்முலா எல்லாம் பக்காதான். ஆனால் சிரத்தையே இல்லாமல் சீரியஸாக எடுத்து ஸ்பூஃப் மாதிரி ஆக்கிவிட்டார்கள். பட்ஜெட் சிக்கனம் அநியாயம். மலேசியா காட்சிகளை எல்லாம் உள்ளூர் ஸ்டுடியோவில் படம் எடுத்துவிட்டு, மலேசியா என்று ஸ்லைட் போடுவதெல்லாம் கொடூரம். சீரியஸாகவே சந்தானம் மாதிரி ஹீரோவை வைத்து ஒரு எம்.ஜி.ஆர் ஃபார்முலா படமெடுத்தால் நிச்சயமாக சூப்பர்ஹிட் ஆகும். இந்தப்படம் படுமொக்கை என்றாலும், ஹார்ட்கோர் வாத்யார் ரசிகர்களுக்கு மட்டும் பரிந்துரைக்கிறோம்.

க்ளைமேக்ஸில் முதல்வராக புரட்சித்தலைவி வருகிறார். ஒரிஜினல் புரட்சித்தலைவி மட்டும் இந்தப் படத்தை பார்த்தாரென்றால் படமெடுத்த இயக்குனர், தயாரிப்பாளர், ஹீரோ, ஹீரோயின், கேமிராமேன், எடிட்டர், லைட் பாய்ஸ், ஆபிஸ் பாய்ஸ் என்று யூனிட்டில் இருந்த அத்தனை பேர்மீதும் அவதூறு வழக்கு தொடுத்துவிடுவார்.

1 செப்டம்பர், 2012

முகமூடி சோடாமூடி


பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் மை பிலவ்ட் மிஷ்கின் சார்.

அடுத்த முறையிலிருந்து உங்கள் படங்கள் பேசட்டும்.

31 ஆகஸ்ட், 2012

ஸ்ரீதேவி விஜயம்


ஆர்.பாலகிருஷ்ணன் என்கிற சுத்தபத்தமான பெயரை சொன்னால் யாருக்கும் தெரியாது. பால்கி என்றால் போதும். விளம்பர ஏஜென்ஸிகளின் வட்டாரத்தில் அவ்வளவு பிரபலம். லிண்டாஸ் விளம்பர நிறுவனத்தின் தலைவர். ‘கறை நல்லது’ என்கிற கருத்துக்கு சொந்தக்காரர் என்றால்தான் இந்தியாவுக்கே இவரை தெரியும்.

இளையராஜாவின் வெறிபிடித்த ரசிகர். இளையராஜாவின் இசையால்தான் இவருக்கு சினிமா என்கிற துறையே பிடித்தது. சினிமாவில் எழுபதுகளை கட்டி ஆண்டவர்கள் அனைவரும் பால்கிக்கு ஆண்டவர்கள். அவ்வகையில்தான் அமிதாப். திடீரென்று ஒருநாள் இரவில் பால்கி இயக்குனர் ஆனார். அவரது ஆண்டவர்களில் ஒருவரான அமிதாப் பச்சன் ஹீரோ. படம் ‘சீனி கம்’. இரண்டு ஆண்டுகள் கழித்து இன்னொரு படம் எடுத்தார். இதிலும் அமிதாப்தான் ஹீரோ. படம் ‘பா’. இரண்டு படத்துக்குமே இளையராஜாதான் இசை.

அடுத்தது என்ன என்கிற கேள்வி எழுந்தபோது ஒரு படம் தயாரிக்கப் போகிறேன், நான் இயக்கப் போவதில்லை என்றார். சில நாட்கள் கழித்து தான் தயாரிக்கும் படத்தை இயக்கப் போகிறவர் கவுரி ஷிண்டே என்று அறிவித்தார். கவுரி யாருமில்லை பால்கியின் திருமதிதான்.

கவுரி படமெடுப்பது பெரிய சாதனையோ, உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் நிகழ்வோ இல்லை. அவரது படத்தில் ஸ்ரீதேவி கதாநாயகியாக நடிக்கப் போகிறார் என்பதுதான் குறிப்பிடத்தக்க நிகழ்வாக இதை மாற்றியிருக்கிறது. நம் விருதுநகரைச் சேர்ந்த ஸ்ரீதேவி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என்று இந்திய மொழிகளை ஒரு கலக்கு கலக்கினார், இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஸ்டார் என்பதெல்லாம் ஏற்கனவே தெரிந்த விஷயம்தான். 96ல் அணில்கபூரின் அண்ணனை திருமணம் செய்துக் கொண்டார். 97ல் திரைப்படங்களில் நடிப்பதற்கு முழுக்கு போட்டார். கிட்டத்தட்ட பதினாறு வருடங்கள் கழித்து நடிக்க வருகிறார் என்பதால்தான் கவுரியின் திரையுலகப் பிரவேசம் இங்கே முக்கியத்துவம் பெறுகிறது.
படத்தின் பெயர் இங்கிலீஷ் விங்கிலீஷ். அமெரிக்காவுக்கு ஒரு குடும்பம் குடிபெயர்கிறது. குடும்பத் தலைவியான ஸ்ரீதேவிக்கு இங்கிலீஷ் தெரியாது. குடும்பத்தில் குழந்தைகள், கணவர் எல்லோரும் இதற்காக அவரை கிண்டலடிப்பது வழக்கம். அமெரிக்க குடியுரிமை அதிகாரிகூட “தப்பும் தவறுமாக ஆங்கிலம் பேசி, எங்கள் நாட்டில் என்ன செய்யப் போகிறாய்?” என்று கேட்கிறார். ஸ்ரீதேவி எப்படி இங்கிலீஷ் கற்றுக் கொள்கிறார் என்பதுதான் மீதி கதை. முழுக்க முழுக்க நகைச்சுவையை இழைத்து, என்.ஆர்.ஐ குடும்பங்கள் காட்டும் பகட்டினைப் பற்றிய பகடிதான் இங்கிலீஷ் விங்கிலீஷ்.

கடந்த ஆகஸ்ட் 13 அன்று இப்படத்தின் ட்ரைலர் மும்பையில் வெளியிடப்பட்டது. அன்றுதான் ஸ்ரீதேவியின் 50வது பிறந்தநாளும் கூட. ஒரே வாரத்தில் யூட்யூப் தளத்தில் பத்து லட்சத்துக்கும் மேற்பட்டோர் ட்ரைலரை பார்த்து ரசித்திருக்கிறார்கள். படம் ஷ்யூர் ஹிட், குறிப்பாக வெளிநாடுகளில் வசூல் அள்ளோ அள்ளுவென்று அள்ளும் என்று பேசிக்கொள்கிறார்கள். ஸ்ரீதேவிக்காகவும், பால்கிக்காகவும் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க அமிதாப் ஒப்புக் கொண்டாராம். இந்திப்படவுலகில் அமிதாப்பின் cameo role, படங்களுக்கு பெரிய ஓபனிங்கை பெற்றுத் தருவதாக ஒரு செண்டிமெண்ட். சமீபத்தில் கூட போல் பச்சன், நூறு கோடி அள்ளியதற்கு அவர் ஒரு பாடலில் தோன்றியதும் ஒரு காரணம் என்கிறார்கள்.
படம் தமிழ் மற்றும் தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வரும் என்று தெரிகிறது. தமிழ், தெலுங்கு ரசிகர்கள் தங்கள் மொழியில் கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீதேவியை ரசிக்கப் போகிறார்கள். குறிப்பாக இப்படத்தின் தமிழ் வெர்ஷன் அக்டோபரிலோ, நவம்பரிலோ (அனேகமாக தீபாவளிக்கு கூட இருக்கலாம்) வெளியாகும்போது பரபரப்பு பற்றிக்கொள்ளப் போகிறது. ஏனெனில் இந்தியில் அமிதாப் நடிக்கும் ரோலில் தமிழில் தோன்றப் போகிறவர் அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார். இதற்காக தயாரிப்பாளர் அளிக்க முன்வந்த சம்பளப் பணம் வேண்டாமென்று மறுத்திருக்கிறார் தல. மேலும் போக்குவரத்து, உடை, உதவியாளர் பேட்டா, என்று அவருக்கான இதரச் செலவுகள் அனைத்தையும் தன்னுடைய சொந்த செலவிலேயே செய்துக் கொண்டிருக்கிறார். மூத்த கலைஞரான ஸ்ரீதேவிக்கு செய்யும் மரியாதையாக இதை ‘தல’ எடுத்துக் கொண்டாராம்.


துக்கடா (மொழி அரசியல் ஆர்வமில்லாதவர்கள் வாசிக்க வேண்டாம்) :

படத்தின் ட்ரைலரைப் பார்த்தேன். அமெரிக்க குடியுரிமை அதிகாரியிடம் ஸ்ரீதேவி சொல்கிறார். “எனக்கு ஆங்கிலம் சரியாக வராது”

அதிகாரி கேட்கிறார் “ஆங்கிலம் தெரியாமல் எங்கள் நாட்டில் எப்படி இருப்பாய்?”


அதிகாரியோடு பணியாற்றும் இந்தியர் ஒருவர் உடனே சொல்கிறார். “இந்தி தெரியாமலேயே நீ எங்கள் நாட்டுக்கு வரலாம்”


இந்த காட்சி ட்ரைலரில் ஓடும்போது வட இந்திய திரையரங்குகளில் க்ளாப்ஸ் எகிறுகிறதாம். வட இந்தியர்களின் மொழிப்பற்றை நாம் பாராட்டுகிறோம். அதே நேரம் இதே கருத்தை எழுபது/எண்பது வருடங்களாக தம் மொழிக்காக திராவிட இயக்கம் இங்கே முன்வைத்துப் போராடிக் கொண்டிருக்கிறது. இவ்வாறு மொழிக்காக போராடியவர்களை ரவுடிகள் என்று இந்தியாவின் பிரதமரே கூட விமர்சித்திருக்கிறார். “இந்தி தெரியாதா? நீ எப்படி இந்தியன் ஆவாய்?” என்கிற வட இந்தியர்களின் அகம்பாவமான கேள்வியை இதுவரை கோடிமுறையாவது தென்னிந்தியர்கள் எதிர்கொண்டிருக்கிறார்கள்.


இந்திக்காரர்கள் தங்களை பெருந்தன்மையான இந்தியர்களாக இன்று உலக அரங்கில் காட்டிக்கொள்ள முயற்சிக்கிறார்கள். அந்த குடியுரிமை அலுவலகக் காட்சி ‘இந்தி’யப் பெருந்தன்மையைதான் வலியுறுத்துகிறது. உண்மையில் நாம்தான் பெருந்தன்மையாளர்கள். தமிழ் தெரியாமலேயே தமிழ்நாட்டில் தொழில்நடத்தி, பரம்பரை பரம்பரையாக பிழைப்பு நடத்த இந்திக்காரர்களை அனுமதித்திருக்கிறோம்.
இங்கே வாழ்பவர்கள் தமிழ்தான் கற்கவேண்டும், தமிழ்தான் பேசவேண்டும் என்று நாம் நம் மொழியை திணித்ததில்லை. இந்தியாவின் பிராந்திய மக்களுக்கு இருக்கும் இந்த பெருந்தன்மையை, இந்தி பேசும் மெஜாரிட்டியினர் மதிக்கவேண்டும். கற்றுக்கொள்ள வேண்டும்.

30 ஆகஸ்ட், 2012

பிரா விற்பனையாளனின் காதல்


பர்ஹாத் ஓர் எலிஜிபிள் பேச்சுலர். அம்மா கோண்டு. பார்ஸி சமுதாயத்தைச் சேர்ந்த அவனுக்கு கல்யாணம் தள்ளிக்கொண்டே போகிறது. காரணம் அவனது வேலை. மும்பையில் பெண்கள் உள்ளாடை விற்கும் பெரிய கடை ஒன்றில் விற்பனையாளனாக பணிபுரிகிறான். பெண் பார்க்கச் செல்லும் இடங்களில் எல்லாம் ‘பிரா, ஜட்டி விற்பவன்’ என்கிற இவனது பணியை கிண்டல் செய்கிறார்கள். பர்ஹாத்துக்கு தன் பணி மீது உயர்ந்த அபிப்ராயம் இருக்கிறது. உள்ளாடை பயன்படுத்தாத பெண்ணே இல்லை என்கிறபோது, அதை விற்பது எவ்வளவு கவுரவமான பணி என்கிறான். ஒரு பெண்ணை பார்த்ததுமே அவளது ‘சைஸ்’ என்ன என்பதை அளக்காமலேயே ‘பளிச்’சென்று சொல்லக்கூடிய நிபுணத்துவத்தைப் பெற்ற ‘கில்லி’ அவன். ‘அண்டர் வேர்ல்ட்’ என்கிற பெயரில் பெண்களுக்கான பிரத்யேக உள்ளாடை வணிகவளாகத்தை உருவாக்குவது அவனது கனவு. பையனுக்கு கல்யாணம் ஆகி பேரக்குழந்தைகளை பார்க்க முடியவில்லையே என்று அவனது அம்மாவுக்கும், அம்மாவின் அம்மாவுக்கும் ஆதங்கம்.

கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட ஒரு காலை வேளை. தான் பணிபுரியும் கடையில் அலங்காரத்துக்காக வைக்கப்பட்டிருக்கும் பொம்மைக்கு (பெண் பொம்மை) ஜட்டியும், பிராவும் மாட்டிவிட்டுக் கொண்டிருக்கிறான். கடைக்கு வெளியே ஒரு தேவதை கொஞ்சம் வெட்கமாகவும், கொஞ்சம் அருவருப்போடும், கொஞ்சம் காமெடியாகவும் இவனைப் பார்க்கிறாள். அவள் ஷெரீன். தன்னை ஒருத்தி ஒரு மாதிரியாக பார்ப்பதை பர்ஹாத்தும் கவனித்து விடுகிறான். பார்த்ததுமே புரிந்துவிட்டது. தனக்காக படைக்கப்பட்டவள் இவள்தான். அவனது மூளைக்குள் எண்டாக்ரீன் வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது. ஹார்மோன்கள் தறிகெட்டு அலைந்தன.

கடைக்குள் நுழைகிறாள் ஷெரீன். பர்ஹாத் எதிர்கொள்கிறான்.

“எனக்கு பிரேசியர் வேண்டும்”

“ஏகப்பட்ட மாடல்கள் இருக்கின்றன.
நிறைய வண்ணங்களில். ஃப்ளோரசண்ட் கூட இருக்கிறது. பார்க்கிறீர்களா?”

“இல்லை. சாதாரணமான வெள்ளை ப்ராவே போதும்”

“உங்கள் சைஸ்?”

கொஞ்சம் வெட்கத்தோடும், பீதியோடும் “38”

“இல்லை. 36தான் உங்களுக்கு சரியாக இருக்கும். 38 கொஞ்சம் லூஸ்”


“மிஸ்டர். என்னுடைய அளவு எனக்குத் தெரியும். நான் கேட்டதை கொடுங்கள்”


பற்றிக்கொண்டது காதல். வாழ்க்கையில் முதன்முறையாக காதலை உணர்கிறான் பர்ஹாத். இந்தப் பரவசம் அவனது உடலெங்கும் பெய்யென பெய்யும் மழையாய் சோவென அடிக்க, காதல் காலராவில் அவதிப்படுகிறான்.


இதற்கிடையே அவனுடைய அம்மா பார்ஸி சங்கத்தின் மேட்ரிமோனியல் சேவையை நாடியிருக்கிறாள். நம்மூர் கல்யாண மாலை மாதிரி ஒரு சுயம்வரத்துக்கு பர்ஹாத் செல்கிறான். அங்கே நடைபெறும் ஏகப்பட்ட கலாட்டாக்களுக்கு இடையே ஷெரீனை மீண்டும் காண்கிறான். கொஞ்சம் தைரியமாகவே அவளிடம் போன் நம்பர் கேட்கிறான்.

“உங்களுடைய நம்பர் என்ன?”

“38” சொல்லிவிட்டு குறும்பாக சிரிக்கிறாள்.

அப்புறம் என்ன பையனுக்கு வந்த காதல் காலரா பெண்ணுக்கும் தொற்றிக் கொள்கிறது. பார்ஸி சங்கத்தில் அவள் செயலராகப் பணிபுரிகிறாள். பர்ஹாத்தை விட வசதியான குடும்பம். பையனுக்கும், பெண்ணுக்கும் பிடித்துவிட்டது. அடுத்து கல்யாணம்தான் எனும்போது ஒரு பெரிய சிக்கல்.

பர்ஹாத்தின் அம்மாவுக்கு பெண்ணை சில காரணங்களால் பிடிக்கவில்லை. அம்மாவின் செல்லக் குழந்தையான பர்ஹாத் தாய்க்கும், காதலிக்கும் இடையே அல்லாடுகிறான். இப்படிப்பட்ட சூழலில் ஒரு முக்கியமான விஷயத்துக்காக ஷெரீன் இவனை அழைக்க செல்போனில் முயற்சிக்கிறாள். அப்போது அம்மாவிடம் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் பர்ஹாத் கோபமாக போனை எடுத்து, “எப்பவும் கொஞ்சிக்கிட்டிருக்கணுமா” என்பது மாதிரி கேட்டு போனை தூக்கிப்போட்டு உடைக்கிறான். இயல்பிலேயே இனியவன் என்பதால்தான் ஷெரீனுக்கு இவன் மீது காதல் பிறந்தது. மாறாக முதன்முதலாக அவனது கோபத்தை உணர்ந்தவள் தனது காதலை துறக்கிறாள். பிற்பாடு எவ்வளவு கெஞ்சியும் மீண்டும் பர்ஹாத்தை காதலிக்க ஷெரீன் துணியவில்லை. இதற்கிடையே பர்ஹாத்தின் அம்மா அவனுக்கு வேறு பெரிய இடங்களில் பெண் பார்க்க ஆரம்பிக்கிறாள்.

க்ளைமேக்ஸ்.

பர்ஹாத் கடைசியாக ஷெரீனுக்கு ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்புகிறான். டிசம்பர் 31 இரவு 9 மணிக்கு தயாராக இரு. நாம் நியூ இயர் பார்ட்டிக்கு செல்கிறோம். நீ வர மறுத்தால் நம்முடைய காதல் முடிந்தது என்று நினைத்துக் கொள்கிறேன். இடைபட்ட ’பசலை’ நாட்களில் பர்ஹாத்துடனான தன்னுடைய தினங்களை ஷெரீன் நினைத்துப் பார்க்கிறாள். தன் வாழ்க்கையிலேயே மிக மகிழ்ச்சியான தினங்கள் அவைதான் என்று உணர்கிறாள். பர்ஹாத்துடன் வாழ்ந்தால் மட்டுமே அது வாழ்க்கை என்பதை உணர்ந்த ஷெரீன் பார்ட்டிக்கு தயார் ஆகிறாள்.

வீட்டிலிருந்து கிளம்பிக் கொண்டிருந்த பர்ஹாத்துக்கு பெரிய அதிர்ச்சி. ‘பையன்’ பார்க்க பெண்வீட்டாரை அழைத்திருக்கிறாள் அம்மா. 9 மணிக்கு செல்லாவிட்டால் ஷெரீன் இனி வாழ்நாள் முழுக்க தன்னை மன்னிக்கவே மாட்டாள். டென்ஷன்.

நயமாக தன்னைப் பார்க்க வந்த பெண்ணிடம் தான் காதல்வசப்பட்டிருப்பதை எடுத்துச் சொல்கிறான். அம்மாவிடமும் தன் காதலின் வீச்சு எவ்வளவு புனிதமானது என்பதை விளக்குகிறான். ஷெரீன் வீட்டுக்கு மிகச்சரியாக ஒன்பது மணிக்குச் செல்கிறான். அவளது வீட்டு வாசலில் நடக்கும் நியூ இயர் கலாட்டாவில் போலிஸ் இவனை அள்ளிப்போட்டுக் கொண்டு செல்கிறது. பர்ஹாத் வருவான் என்று காத்திருக்கும் ஷெரீன் பதட்டமடைகிறாள். நேரம் போய்க்கொண்டே இருக்கிறது. 9.00, 10.00, 11.00, 12.00

புதுவருடம் பிறக்கிறது. பர்ஹாத் வரவேயில்லை. இனி அவன் தன் வாழ்க்கையில் வரவே மாட்டான் என்று நினைக்கிறாள் ஷெரீன். காதலர்கள் இணைந்தார்களா என்பதை நீங்கள் ஏதேனும் திரையரங்கின் வண்ணத்திரையில்தான் காணவேண்டும்.

இதுவரை நீங்கள் பார்த்த, கேட்ட பிழியப் பிழிய காதல் திரைப்படங்களையும், கதைகளையும் கொஞ்சம் நினைவுறுத்திப் பாருங்கள். ரோமியோ ஜூலியட், அம்பிகாபதி அமராவதி, ஏக் துஜே கலியே, அன்பே வா, அலைகள் ஓய்வதில்லை, காதலுக்கு மரியாதை, வைகாசி பொறந்தாச்சி, காதல் கோட்டை, விண்ணைத் தாண்டி வருவாயா... இதெல்லாம் சட்டென்று நினைவுக்கு வரலாம். இந்த எந்த படைப்புகளுக்கும் ஒப்பானது பர்ஹாத் ஷெரீனின் காதல். ஒரே ஒரு வித்தியாசம்தான். நீங்கள் இதுவரை பார்த்த ‘காதல்’களின் காதலர்கள் வயது அதிகபட்சம் இருபதுகளின் இறுதியில் இருக்கும்.
Shirin Farhad Ki Toh Nikal Padi படத்தில் பையனின் வயது 45. பெண்ணுக்கு வயது 40+. வயது ஒரு மேட்டரே இல்லை என்பதை படம் பார்க்கும்போது உணர்வீர்கள். விண்ணைத்தாண்டி வருவாயாவில் சிம்பு என்னென்ன செய்வாரோ அது அத்தனையையும் பர்ஹாத் என்கிற பொமான் இரானி செய்கிறார். இடுப்பொடிய நடனம் ஆடுகிறார். நொடிக்கொரு முறை காதலியை நினைத்து சிலிர்க்கிறார். திரிஷா செய்கிற அத்தனையையும் ஷெரீன் என்கிற ஃபராகான் செய்கிறார். முகம் சிவந்து வெட்கப்படுகிறார். காதலனை தன் பின்னாலேயே ஹட்ச் நாய்க்குட்டி மாதிரி அலைய விடுகிறார்.

படத்தில் நாயகன் நாயகியை நினைத்தும், நாயகி நாயகனை நினைத்தும் காதலை கொட்டோ கொட்டுவென்று கொட்டி பாடல் காட்சிகள். டூயட்டுகள். அதிலும் ஒரு டூயட்டில் இந்தி சினிமாவின் புகழ்பெற்ற காதல் திரைப்படங்களான ஹம் ஆப்கே ஹைன் கோன், ஜப் வி மெட் மாதிரி படங்களில் இடம்பெற்ற காட்சிகளை உல்டா அடித்து பயங்கர கலாட்டா.

காதலுக்கு வயது ஒரு பொருட்டேயில்லை. காதல் எப்பவும் காதல்தான். படம் பார்க்கும்போது நம் அம்மா-அப்பா, சித்தப்பா-சித்தி, மாமா-அத்தை, பக்கத்து வீட்டு அங்கிள் - ஆண்ட்டி என்று அத்தனை பேரின் காதலையும், நாம் ரகசியமாக எட்டி நின்று பார்ப்பது மாதிரி ஃபீலிங். இரண்டு மணி நேர திரைப்படத்தில் இரண்டு நிமிடத்துக்கு ஒரு முறையாவது நீங்கள் வாய்விட்டு சிரிப்பீர்கள். காதல் என்பது வேடிக்கை பார்ப்பவர்களுக்கு நகைச்சுவையும்தான்.

ஹீரோ-ஹீரோயின் வயதானவர்கள் என்பது தவிர்த்து, ஒரு காதல் படத்தில் இருக்கவேண்டிய அத்தனை அம்சங்களும் படத்தில் உண்டு. லேசான செக்ஸ் கூட. காதல் படங்களுக்கு அவசியமான வஸ்துவான மழை அவ்வப்போது தூறி, காதல் சிற்றாறாய் ஓடுகிறது. படம் பார்ப்பவர்களின் மனம் கரைகிறது.

படத்தில் நடிகர்கள் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு ஆப்ட்டாக இருக்கிறது. இசை பிரமாதம். எடிட்டிங் நறுக். மிகக்குறைவான கேரக்டர்களை வைத்து, சிக்கனமான பட்ஜெட்டில் சிறப்பான கதை, திரைக்கதை அமைத்து ‘ரிச்’சாக எடுத்திருக்கிறார்கள். இப்படியெல்லாம் நாம் இப்படத்தை விமர்சிக்க வேண்டியதே இல்லை. படம் பார்ப்பவர்களே அதையெல்லாம் உணர்ந்துக் கொள்வார்கள்.

இந்தி சினிமா உள்ளடக்க ரீதியில் சர்வதேசத் தரத்தை எட்டியிருப்பதற்கு இப்படம் நல்ல உதாரணம். இப்படம் பார்க்கும்போது காட்டப்பட்ட சில ட்ரைலர்கள் மேலும் சில உதாரணங்களாய் எனக்குப் பட்டது. அதில் ஒன்று ஸ்ரீதேவி மீண்டும் நடிக்கும் படம் ஒன்று. அமெரிக்காவுக்கு ஒரு இந்தி குடும்பம் இடம் பெயர்கிறது. குடும்பத் தலைவியான ஸ்ரீதேவிக்கு மட்டும் ஆங்கிலம் சரியாக வராது. அதனால் அவர் அங்கே படும் பாடு. ஒரு என்.ஆர்.ஐ குடும்பத்தலைவி ஆங்கிலம் கற்றுக் கொள்வது என்று ஒரு ஒன்லைன். இன்னொரு படம் சக்கரவியூக். மாவோயிஸ்ட்டுகளை குறித்த விரிவான திரைப்படம். இன்னொன்று ராஸ்-3 (3டி) லேசான போர்னோ கலந்த திகில் படம். இப்படி ஏகப்பட்ட genreகளில் இந்தியில் நிறைய படங்கள் வந்துக்கொண்டிருக்கின்றன. அவர்களது இண்டஸ்ட்ரி ஆரோக்கியமாக இருப்பதையே இது காட்டுகிறது.

மாறாக நம் கோலிவுட்டை நினைத்துப் பாருங்கள். தெரியாத்தனமாக ‘ஓக்கே ஓக்கே’ ஹிட் அடித்துவிட்டது என்று நகைச்சுவைத் துணுக்குத் தோரணங்களை கட்டிக் கொண்டிருக்கிறார்கள் நம்மூர் இயக்குனர்கள். இல்லாவிட்டால் சைக்கோ த்ரில்லர். இந்தியிலும், தெலுங்கிலும், மலையாளத்திலும் வெரைட்டியாக பிரியாணி போட்டுக் கொண்டிருக்க, நாம் வடுமாங்காய் வைத்து தயிர்ச்சாதம் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம்.

Shirin Farhad Ki Toh Nikal Padi மாதிரி ஒரு படத்தை நம்மூரில் எடுக்க முடியாதா? இங்கே இப்படிப்பட்ட படத்தில் நடிக்க பொமன் இரானி, ஃபராகான் மாதிரி  ’ஸ்டார்’ கலைஞர்கள் இல்லையா? சிறப்பாக படம்பிடிக்க தொழில்நுட்பக் கலைஞர்கள் இல்லையா? என்னதான் பிரச்சினை? உறுதியாக சொல்லலாம். இதே கதை, இங்கு ‘பிரபு அம்பிகா’ காம்பினேஷனில் எடுக்கப்பட்டிருந்தால் பரபரப்பான ஹிட் படம் ஆகியிருக்கும். பிரச்சினை என்னவென்றால் ஏற்கனவே ஹிட் கொடுத்த இயக்குனர்கள் இன்னமும் தமக்கென்று ஒரு ‘டெம்ப்ளேட்’ அமைத்துக்கொண்டே இயங்குகிறார்கள். புது இயக்குனர்களும் சேஃபாக அதே டெம்ப்ளேட்டில்தான் சிந்திக்கிறார்கள். அதை உடைத்து சிந்தனையை பரவலாக்க அவர்கள் தயார் இல்லை. குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டுவதே அவர்களுக்கு பாதுகாப்பானதாக இருக்கிறது. அவ்வப்போது அங்காடித்தெரு, மதுபானக்கடை, அட்டக்கத்தி மாதிரி ஒரு சில வித்தியாச முயற்சிகள் அத்திப்பூத்தாற்போல ஒரு ஒளிக்கீற்றாக தென்படுவதை தவிர்த்து, கோலிவுட் ஜிலோவென்று இருளாகத்தான் இருக்கிறது.