7 மே, 2013

வாழ்த்துகள் தலைவரே


2006 வாக்கில் வலைப்பூவில் எழுத ஆரம்பித்து, அதன் மூலம் முதன்முதலாக தொலைபேசியில் பேசியவர் அவர்தான். முன்பாக மெயிலில் உரையாடியிருந்தோம்.

உங்க எழுத்துலே சுஜாதா வாசனை இருக்கு

சரிங்க. மாத்திக்கறேன்

எதுக்கு மாத்திக்கணும்.. அப்படியே இருக்கட்டுமே?

சுஜாதா வாசனை இருக்கிறதாவென்று தெரியாது. ஆனாலும் அவர் சொன்னதால் அப்படியே இருத்திக் கொண்டேன். தன்னை குறும்பட இயக்குனர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். குறும்படங்களுக்காக தனியாக ஒரு வெப்சைட் நடத்துகிறேன் என்றார். ‘நாளைய இயக்குனருக்குவெகுகாலம் முந்திய காலம் என்பதால், இதற்கெல்லாம் தனியாக வெப்சைட்டா என்று ஆச்சரியப்பட்டேன். அந்த வெப்சைட்டில் அவர் இயக்கியஆக்ஸிடெண்ட்டோடு வேறு சிலரின் படங்களும் ஏற்றப்பட்டிருந்தது.

கதை சொல்லிக்கிட்டிருக்கேன் தலைவரே. புரொட்யூஸர் கிடைச்சதுமே படம்தான்அடிக்கடி சொல்வார். “பாம்புகூட படம் எடுத்துடிச்சி. நீங்க சீக்கிரமா எடுங்க தலைவரேஎன்று சிலமுறை கலாய்த்திருக்கிறேன். அப்போது ஒரு கார்ப்பரேட் சினிமா நிறுவனத்தில் சீனியர் கண்டெண்ட் எக்ஸிக்யூடிவ்வாக இருந்தேன். “எங்க ஆபிஸ்லே மொத்தமா பத்து படம் எடுக்கப் போறாங்க. நீங்களும் ட்ரை பண்ணலாமில்லே?” என்றேன். “எங்க சித்தப்பாதான் உங்க சேர்மேன். தெரியுமா?” என்று ஆச்சரியப்படுத்தினார். அங்கே கதை சொன்னாரா என்று தெரியவில்லை.

சில நாட்களில் அவரும் வலைப்பூ எழுத வந்தார். சிறுகதை, சினிமாவென்று மசாலாதான். சக போட்டியாளர் என்பதால் நண்பர் என்றும் பார்க்காமல் பின்னூட்டங்களில் பின்னி பெடல் எடுத்துவிடுவேன். பயங்கர சண்டை நடக்கும். சில பேர் விலக்கிவிட முயற்சிப்பார்கள். பல பேர் தூண்டிவிட்டு குளிர் காய்வார்கள். யாருக்குமே தெரியாது. அவரும் நானும் ஏற்கனவே நண்பர்கள் என்று. அவருடைய கருத்துகளை நானோ, என்னுடைய கருத்துகளை அவரோ அப்படியே ஏற்றுக் கொள்வதில்லை. நண்பர்களாக இருக்க ஒத்த கருத்து இருந்தே ஆகவேண்டுமா என்ன?

பதிவுகளில் எழுதியதையெல்லாம் தொகுத்து வரிசையாக புத்தகங்களாக வெளியிட ஆரம்பித்தார். அவர் புத்தகங்களை வெளியிடவே புதியதாக பதிப்பகங்களும் தொடங்கப்பட்டன. அவரது சிறுகதைத் தொகுப்புக்கு விமர்சனக்கூட்டம் நடத்தினார்.

நீங்க பேசணும் தலைவரே

இதுமாதிரி புக்கு பத்தியெல்லாம் இதுவரைக்கும் பேசினதில்லை தலைவரே

அதனாலே என்ன.. எனக்கு நீங்க பேசுனா சந்தோஷமா இருக்கும்

முதன்முதலாக புத்தக விமர்சனத்தை மேடையில் செய்தது அவருக்காகதான். அதற்குப் பிறகு நான்கைந்து சான்ஸ் கிடைத்துவிட்டது. நல்ல ராசியான ஆள் அவர்.

அழிக்கப் பிறந்தவன்தொடர்கதையாக என்னுடைய வலைத்தளத்தில் வெளியிட்டு வந்தேன். அதை படித்தவர் உலகநாதனிடம் பேசியிருக்கிறார். உலகநாதனும், அவரும் இணைந்துதான் அதை புத்தகமாக கொண்டுவந்தார்கள். முன்பே வேறு சில நண்பர்களுக்கும் இதேமாதிரி உதவியிருக்கிறார். பொதுவாக நட்பு வட்டத்தில் இருக்கும் எல்லோருடைய சுக துக்கங்களுக்கும் முன்வரிசையில் வந்து நிற்கும் குணம் கொண்டவர். எவ்வளவு யோசித்துப் பார்த்தாலும் அவரை வெறுப்பதற்கு ஒரு காரணம் யாருக்கும் கிடைக்கவே கிடைக்காது. அவர் மீது எதற்காகவாவது கோபம் வந்தாலும், நேரில் அவர் முகத்தை பார்த்ததுமே சிரிப்பு வந்துவிடும். ஒருமாதிரி காமெடியான முகம் கொண்டவர். எப்போதும் புன்னகையோடே “வாங்க தலைவரே” என்று எதிர்கொண்டு கட்டிக் கொள்வார் (தொப்பைதான் கொஞ்சம் இடிக்கும்).

சாண் ஏறினால் முழம் சறுக்குவது சினிமாத் தொழிலின் பண்பு. ஆனால் சோர்வில்லாமல் பல்லாண்டுகளாக சறுக்கி, ஏறி, சறுக்கி, ஏறி இன்று ஒருவழியாக சிகரத்தை எட்டிவிட்டார். நண்பர்களின் வெற்றி, நம்முடைய வெற்றி. ‘தொட்டால் தொடரும்’ வெள்ளிவிழா காண வாழ்த்துகள் தலைவரே. ஆனா, படம் மொக்கையா வந்தா எந்த தயவுதாட்சண்யமும் பார்க்க மாட்டோம்.

6 மே, 2013

‘துளு’ சினிமாவின் மறுமலர்ச்சி!


பாறையில் விதைக்கப்பட்ட விதை முளைத்து மரம் ஆனால் சாதனைதானே? கன்னட சினிமாவே கால்காணி நிலத்தை வைத்துக்கொண்டு தத்தக்கா… பித்தக்கா… என்று தவழ்ந்துக் கொண்டிருக்கிறது. அந்த குட்டியூண்டு இண்டஸ்ட்ரிக்குள்ளும் அமீபா சைஸில் உருவான இன்னொரு இண்டஸ்ட்ரி முளைத்து வருவது அதிசயம். அவ்வாறு வீறுகொண்டு எழுந்துக் கொண்டிருப்பது ‘துளு’ சினிமா. தென் கர்நாடகாவிலும், கேரளாவின் சில இடங்களிலும் திராவிட மொழியான ‘துளு’ இன்னமும் வாழ்கிறது. மங்களூர், உடுப்பி, காசர்கோடு பகுதிகளில் துளு பேசுபவர்கள் கணிசமாக இருக்கிறார்கள்.

இந்திய சினிமாவுக்கு வயது நூறு என்றாலும் துளு சினிமா இன்னும் இளைஞன்தான். நாற்பத்தி இரண்டு வயதுதான் ஆகிறது. 1971ல் வெளிவந்த ‘என்ன தங்காடி’தான் துளுவில் வெளிவந்த முதல் திரைப்படம். பத்து, பதினைந்து தியேட்டர்களில் ஒரு படத்தை திரையிட முடிந்தாலே இன்றும் அது சாதனைதான். வருடத்துக்கு ஒன்று, இரண்டு திரைப்படங்கள் வந்தாலே ஆச்சரியம். இன்னும் மொத்தமாக நாற்பது படங்கள் கூட வரவில்லை. கன்னட சினிமாவில் பணிபுரிபவர்கள் பெத்த மனசு வைத்து அவ்வப்போது துளுவிலும் பங்காற்றுகிறார்கள் (தகவலுக்காக : உதயம் NH4 திரைப்படத்தின் நாயகி அஷ்ரிதா கூட துளுதான்).

இருந்தும் சில குறிப்பிடத்தக்க மைல்கற்களை துளு சினிமா எட்டியிருக்கிறது. இம்மொழியில் தயாரிக்கப்பட்ட ‘செப்டம்பர் 8’ இருபத்தி நான்கு மணி நேரத்தில் மொத்தமாக தயார் செய்யப்பட்டு உலகசாதனை படைத்தது. ஆசிய திரைப்படவிழாவான ஓசியன் சினிஃபேனில் ‘சுடா’ என்கிற துளு திரைப்படம், சிறந்த இந்திய திரைப்படத்துக்கான விருதை வென்றிருக்கிறது. ’பங்காரு பட்லர்’ என்கிற திரைப்படம் நிறைய தேசிய மற்றும் சர்வதேச விருதுகளை குவித்திருக்கிறது.
                               
மிகச்சிறுபான்மை மொழியான தங்கள் மொழியிலும் படங்களை எடுத்து ஆத்மதிருப்தி பட்டுக்கொண்டாலும், என்னதான் விருதுகளை குவித்தாலும் மற்ற மொழிப்படங்களை மாதிரி வணிகரீதியாக காசு பார்க்க முடியவில்லையே என்று துளுக்காரர்களுக்கு நீண்டநாள் ஏக்கம் இருந்தது. 2011ல் வெளிவந்த ‘ஓரியார்டோரி அசல்’ அந்த ஏக்கத்தை தீர்த்து வைத்தது. பெரிய ரிஸ்க் எடுத்து ஒரு கோடியில் தயாரிக்கப்பட்ட அந்த திரைப்படம் ஒன்றரை கோடிக்கும் மேலாக வசூலித்து, துளுவில் படமெடுத்தால் துண்டைப்போட்டுக் கொண்டுதான் போகவேண்டும் என்கிற நிலையை மாற்றியமைத்திருக்கிறது. ‘துளுவின் வெற்றிகரமான முதல் சினிமா’ என்று அங்கிருக்கும் விமர்சகர்கள்(!) கொண்டாடி தீர்த்துவிட்டார்கள். பெங்களூர், மும்பை மாதிரி பெருநகரங்களிலும், இப்படம் வசூலில் சக்கைப்போடு போட்டது. விருது வாங்குவதற்கும், பெயர் பெருவதற்கும்தான் துளு சினிமா என்கிற நிலை இனியில்லை. துளுவர்கள் மட்டுமின்றி கன்னடர்கள், மலையாளர்கள், கொங்கணிகளும் இப்படத்தின் வெற்றியில் மகிழ்ந்தார்கள். ஆயிரம் மாச்சரியங்கள் இருந்தாலும் நம் பங்காளிக்கு ஒரு கவுரவம் என்றால் நமக்கும் மகிழ்ச்சிதானே?

இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக ‘ஓரியார்டோரி அசல்’ நாடகமாக மேடையில் ஏறியபோது துளுவர்கள் எப்படிப்பட்ட பரவசத்தை அடைந்தார்கள் என்பதை வார்த்தைகளில் வர்ணிக்க முடியாது. அந்த நாடகத்தை எழுதி இயக்கிய விஜயகுமார் கோடியால்பெய்ல் ஓவர்நைட் நட்சத்திரமாக மின்னினார். நாடகத்துக்கு கிடைத்த ஆதரவைக் காட்டிலும், அது சினிமாவாக எடுக்கப்பட்டால் பன்மடங்கு கிடைக்கும் என்று அவர் எண்ணினார். தயாரிப்பாளர்கள் அப்படி எண்ணவேண்டுமே?

director
இத்தனை ஆண்டுகளாக ஸ்க்ரிப்ட்டை புள்ளைத்தாய்ச்சி மாதிரி சுமந்துக்கொண்டு ஒவ்வொரு தயாரிப்பாளரின் வீட்டு வாசலாய் அலைந்ததுதான் மிச்சம். பணத்தைக் கொண்டு போய் கிணற்றில் போடச் சொல்கிறாயா? என்று விரட்டி அடித்தார்கள். கலைச்சேவைக்கு காசு செலவழிக்க எல்லாருக்குமா மனமிருக்கும். விஜயகுமார் சோர்ந்துவிடவில்லை. சிறுகச்சிறுக சேர்க்கும் டி.என்.எஸ்.சி. பேங்க் சிட்டுக்குருவியாய் கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்த்தார். நிறைய கடன் வாங்கினார். (அவருடைய படத்தைப் பாருங்கள், டொக்கு விழுந்துப்போய் பரிதாபமாக இருக்கிறார்). ஒரு கோடி ரூபாய் சேர்ந்ததும், தில்லாக பூஜையும் போட்டுவிட்டார். கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு எல்லாமே அவர்தான். ஸ்டார்ட், கட் சொல்லத் தெரியாது என்பதால் இயக்கத்தை மட்டும் ராஜசேகர் என்பவரிடம் கொடுத்துவிட்டார்.


கதை நடப்பதாக சொல்லப்படும் கோடியால்பெய்ல் பகுதியிலேயே படப்பிடிப்பு நடந்தது. ‘ரியாலிட்டி வேண்டும். எனவே நோ செட்டிங்ஸ்’ என்று அவர் சொன்னாலும், செட்டிங்ஸ் போடவும் ஆர்ட் டைரக்டருக்கு பணம் கொடுக்கவும் அவரிடம் காசு இல்லை என்பதுதான் உண்மை. படத்தின் ஹீரோ சின்னத்திரையில் ஃபேமஸான லிங்கா ஷெட்டி. ஹீரோயின் ரம்யா பர்ணா. கொடுத்த காசுக்கு மேலேயே நடிக்கத் தயாராக இருந்தார்கள். துளு நாடகத்துறையைச் சேர்ந்த நடிகர்கள் பலரும் விஜயகுமாருக்கு கைகொடுக்க முன்வந்தார்கள். நவீன் படில், அரவிந்த் போலார், ராஜேஷ் பந்த்வால் போன்றோர் கிட்டத்தட்ட ஃப்ரீயாகவே நடித்தார்கள் என்று தகவல். கன்னட சினிமா ஆட்களான ரேகாதாஸ், லட்சுமிதேவி, சத்யஜித், ரேமண்ட் டிசவுசா போன்றவர்களும் நடிக்க ஒப்புக்கொண்டார்கள். கன்னடத்தில் பிரபலமான இசையமைப்பாளரான குருகிரண் கவுரவ வேடத்தில் தோன்றினார்.

thulu2
துளு நாடகங்களுக்கு மறுமலர்ச்சி தந்த ‘ஓரியார்டோரி அசல்’, துளு சினிமாவுக்கும் மறுமலர்ச்சி ஏற்படுத்தும் என்று எல்லோருக்கும் நம்பிக்கை. கடவுள் மீது பாரத்தைப் போட்டுவிட்டு படமெடுத்த விஜயகுமாருக்கு, படம் வெளியானபின்பு நல்ல அறுவடை. கடன்காரர்களுக்கு என்னென்ன சாக்கு சொல்லவேண்டும் என்று திரைக்கதை எழுதிக்கொண்டிருந்தவருக்கு, அதற்கெல்லாம் அவசியமே படாமல் பணம் கொட்டோ கொட்டுவென்று கொட்டியது. ஐம்பது லட்ச ரூபாய்க்கும் மேலே லாபமாம். இன்னமும் தினமும் தன் கையை தானே கிள்ளிப் பார்த்து, தான் வாழ்வது கனவுலகில் இல்லை என்று உறுதிப்படுத்திக் கொள்கிறார் விஜயகுமார்.


படத்தின் கதை ரொம்ப சிம்பிள். வீட்டு ஓனருக்கும், வாடகைக்கு குடியிருப்பவர்களுக்குமான பிரச்சினைகள். ஒரே காம்பவுண்டில் பல வீடுகள் வசிக்கும் முறையை ‘வட்டாரம்’ என்போம் இல்லையா (திருச்சியில் ‘ஸ்டோர்’ என்பார்களாமே?), அம்மாதிரி வட்டார வீடு ஒன்றில் நடக்கும் தினப்படி சம்பவங்கள்தான் கதை. முழுக்க முழுக்க விழுந்து விழுந்து சிரிக்கவைக்கும் நகைச்சுவை. வாடகைக்கு வசிக்கும் மூன்று குடும்பங்கள். அதில் ஒரு பையன் வீட்டு ஓனரின் பெண்ணையே எப்படியோ உஷார் செய்துவிடுகிறான். சில பல குழப்படிகளுக்கு பிறகு சுபம்.

thulu3
துளுவர்களின் ஏற்றம், தாழ்வு என்று அனைத்தையுமே மறைமுகமாக இப்படம் சுட்டிக் காட்டுகிறது. அம்மொழியை பேசுபவர்கள் இன்று சந்திக்கக்கூடிய சவால்கள் என்ன என்னவென்று அடையாளம் காட்டுகிறது. தங்களைப் பற்றிய கண்ணாடியாக இப்படம் அமைந்திருப்பதால், வெறிகொண்டு வெற்றியடைய வைத்திருக்கிறார்கள் துளுவர்கள். இப்படத்தை தொடர்ந்து துளுவில் மூன்று, நான்கு படங்கள் வந்துவிட்டன. நிறைய படங்கள் தயாரிப்பிலும் இருக்கிறது. இப்போதைய துளு படங்களின் டிரெண்ட் காமெடிதான். இந்த வெற்றி கர்நாடகாவில் பேசப்படும் மற்றைய சிறுபான்மை மொழிகளான கொடவா, பேரி போன்ற மொழிகளிலும் சினிமா எடுக்க தெம்பு கொடுத்திருக்கிறது.


சிறுகுழந்தைகள் கூட்டாஞ்சோறு விளையாடுவது மாதிரி படமெடுக்கிறார்கள். சுவைத்துப் பார்த்து, குறைகளை மறைத்து அவர்களது மனம் மலர பாராட்டலாம்.
                                     thulumovie1

(நன்றி : cinemobita.com)

2 மே, 2013

நெ.5, 2nd லைன் பீச்


எண்பதுகளில் இருந்த எல்லா இளைஞர்களையும் போலதான் சுந்தரும். ப்ளஸ் டூ முடித்திருந்தார். மேற்கொண்டு பட்டம் படிக்குமளவுக்கு வசதியில்லை. டைப்ரைட்டிங், ஷார்ட் ஹேண்ட் கற்றுவிட்டு அரசுப்பணியில் சேர்வதுதான் லட்சியம். அது நிறைவேறும் வரை தற்காலிகமாக எங்காவது வேலை பார்க்க வேண்டுமே? சென்னை அமைந்தகரையில் இருந்த ஒரு நிறுவனத்தில் ஸ்டெனோவாக பணிக்கு சேர்ந்தார். மிகக்குறைவான சம்பளம். இடுப்பை ஒடிக்கும் வேலை. மூன்று ஆண்டுகள் மாங்கு மாங்குவென்று டைப் அடித்தார்.

கூடுதல் சம்பளத்துக்கு வேறு ஒரு வேலை கிடைத்தது. ஒரு லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம். ஏற்றுமதி, இறக்குமதி தொடர்பான தொழில் என்பதால்  சென்னை துறைமுகத்துக்கு அருகில் இம்மாதிரி நிறைய நிறுவனங்கள் உண்டு. இயல்பிலேயே சுந்தருக்கு இருந்த சூட்டித்தனம் அந்த அலுவலகத்தில் எல்லோருக்கும் பிடித்துப் போனது. விரைவிலேயே அலுவலகத்தில் ‘ஆல்-இன்-ஆல்’ ஆனார். காலையில் முதலில் வந்து அலுவலகத்தை திறப்பதும் அவர்தான். இறுதியாக கதவை மூடிவிட்டுச் செல்வதும் அவர்தான். அம்பத்தூரில் வீடு. அம்மா கட்டிக் கொடுக்கும் சாப்பாட்டை எடுத்துக்கொண்டு ரயில் ஏறினார் என்றால் அலுவலகம்தான் அனைத்துமே. சுந்தர் இல்லாமல் அணுவும் அசையாது என்கிற நிலைமை அலுவலகத்தில். ஆபிஸ்பாய் வேலையில் தொடங்கி அதிகாரி வேலை வரைக்கும் அவரே இழுத்துப்போட்டு செய்தார். பலநாள் அலுவலகத்திலேயே தங்கி இரவுமுழுக்க வேலை பார்க்கவேண்டியும் வரும். லாஜிஸ்டிக்ஸ் தொழிலில் ஆதி முதல் அந்தம் வரை பிடிபட்டது. ஆங்கிலமும் வசப்பட்டது.

ஃபீல்டில் சுந்தரின் புகழ் பரவியது. போட்டி நிறுவனம் ஒன்று தன்னுடைய நிறுவனத்துக்கு அவரை உரிய கவுரவத்தோடு அழைத்தது. மேலாளராக போய் சேர்ந்த இடத்தில் அங்கு பணிபுரிபவர்களில் ஆறு பேர் நண்பர்கள் ஆனார்கள். உமாபதி, முனிரத்தினம், உதயகுமார், கருணாநிதி, கண்ணன், ரமேஷ். டீமாக அனைவரும் இணைந்து பணியாற்ற பணியில் அடையவேண்டிய உயரத்தை அடைந்தார்கள். ஒருகட்டத்தில் சுந்தருக்கு யோசனை வந்தது. ஏழு பேருமே திறமைசாலிகள். நாம் ஏன் இன்னொரு நிறுவனத்தில் சம்பளத்துக்கு வேலை பார்க்க வேண்டும், சொந்த நிறுவனம் ஆரம்பித்தால்?

அனைவருமே நடுத்தர வர்க்கம். கையில் இருந்த கொஞ்ச நஞ்ச சேமிப்புகளை முதலீடாக போட்டார்கள். முந்தைய பணியில் பிடிக்கப்பட்ட பி.எஃப். தொகையையும் முதலீடுக்கு பயன்படுத்திக் கொண்டார்கள். வாடகைக்கு இடம்பிடித்து ஒரு லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தை தொடங்கும்போதுதான் தெரிந்தது, லைசென்ஸ் வாங்குவது அவ்வளவு சுலபமல்ல. அதிலும் லைசென்ஸ் பெறுபவருக்கான குறைந்தபட்சத் தகுதி பட்டம். இவர்களில் ஒருவர்கூட பட்டதாரி அல்ல. தற்காலிகமாக வேறு ஒரு நிறுவனத்தின் சப் ஏஜெண்ட் போல நிறுவனத்தை தொடங்கினார்கள். அதாவது வேலை இவர்கள் பார்ப்பார்கள். வேலை பார்ப்பதற்கான லைசென்ஸ் அந்த நிறுவனத்துக்கு இருக்கும். ஒட்டுமொத்த வர்த்தகத்தில் ஒரு பர்சண்டேஜ் அந்நிறுவனத்துக்கு போகும்.

கம்பெனிக்கு என்ன பெயர் வைப்பது? பொதுவாக பெற்றோர் பெயரைதான் வைக்கிறார்கள். ஓர் எழுத்தாளரின் பெயரை வைத்தால் என்ன என்று சுந்தருக்கு யோசனை. ஆரம்பத்தில் சிறுபத்திரிகைகளில் கவிதை எழுதிக்கொண்டிருந்தவர் சுந்தர். ஒரு கட்டத்தில் இலக்கியச் செயல்பாடுகள் பணியை பாதிக்கிறது என்பதால் வாசிப்போடு நிறுத்திக்கொண்டார். அவருக்கு பிடித்த எழுத்தாளரான நகுலனின் பெயரையே நிறுவனத்துக்கும் சூட்டினார். நகுலன் லாஜிஸ்டிக்ஸ். வேறு எங்காவது ஓர் எழுத்தாளரின் பெயர் நிறுவனத்துக்கு சூட்டப்பட்டிருக்கிறதா என்று தெரியவில்லை. 2003ல் இந்நிறுவனம் இப்படித்தான் உருவானது.

ஏழு பேரும் முதலாளிகள் என்றாலும் தொழிலாளர்களும் அவர்களே. மாதாமாதம் சம்பளம் மட்டுமே எடுத்துக் கொள்வார்கள். வருடத்துக்கு ஒருமுறை கணக்குப் பார்த்து லாபத்தை பிரித்துக் கொள்வார்கள். கொஞ்சம் கொஞ்சமாக நிறுவனம் வளரத் தொடங்கியது. சொந்தமாக லைசென்ஸ் எடுக்க வேண்டும் என்பதற்காக அவர்களில் ஒருவரே பட்டம் படித்தார். நகுலன் லாஜிஸ்டிக்ஸ் அருகிலேயே லிங்குசெட்டித் தெருவில் இன்னொரு கிளை தொடங்கியது. சென்னை ஏர்போர்ட், தூத்துக்குடி, பெங்களூர், மும்பை என்று நிறைய கிளை அலுவலகங்களோடு வளரத் தொடங்கியது. இன்று லாஜிஸ்டிக்ஸ் துறையில் இயங்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்று நகுலன் லாஜிஸ்டிக்ஸ்.

இடப்பற்றாக்குறை காரணமாக சமீபத்தில் புது அலுவலகத்துக்கு இடம்பெயர்ந்தார்கள். முகவரி : நெ.5, 2nd லைன் பீச், சென்னை-1. துறைமுகம் அருகில் சுந்தர் முதலில் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்தார் இல்லையா? அதே முகவரிதான். இருபது வருடங்களுக்கு முன்பு எந்த முகவரியில் தொழிலாளியாக இரவும், பகலுமாக வேலை பார்த்தாரோ, இன்று அதே முகவரியில் முதலாளியாக தனி கேபினில் அமர்ந்திருக்கிறார்.

“திட்டமிட்டெல்லாம் இந்த இடத்தை தேர்ந்தெடுக்கவில்லை. யதேச்சையாக அமைந்த விஷயம்தான். ஆனால் இதே இடம் அமைந்தது எனக்கும் ஆச்சரியமாகதான் இருக்கிறது” என்கிறார் சுந்தர்.

படிப்பு என்பது பணம் சம்பாதிப்பதற்கான பாதை என்றொரு மாயை இருக்கிறது. பட்டம் கூட இல்லாமல் நிறுவனம் ஆரம்பித்த ஏழு பேர் இன்று பல நூறு பேருக்கு வேலை வழங்கும் நிலைக்கு உயர்ந்திருக்கிறார்கள். ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.

(நன்றி : புதிய தலைமுறை)

30 ஏப்ரல், 2013

பலே ‘பச்சன்’

bachchanசந்தேகமே வேண்டாம். சுதீப், கர்நாடகாவின் அஜித். அடித்துப் பிடித்து வாழ்க்கையில் முன்னுக்கு வந்ததில் மட்டுமல்ல, வள்ளல் குணத்திலும் அச்சு அசலாக அஜித். கன்னட சினிமாவின் பாரம்பரிய குடும்ப நடிகர்கள் பிரபுத்துவ மனப்பான்மையோடு இண்டஸ்ட்ரியை அணுக, சூப்பர் ஸ்டாராக இருந்தாலும், மிகச்சாதாரண தொழிலாளியாகவே தன்னை முன்வைக்கிறார். கன்னட சினிமா அடுத்தக் கட்டத்துக்கு நகரவேண்டும் என்கிற லட்சியத்தில் உழைப்பவர். சற்றும் சுயநலமில்லாதவர் என்று இவரது எதிரிகள் கூட ஒப்புக் கொள்கிறார்கள். நாற்பது வயதுதான் ஆகிறது. பதினாறு வருடங்களில் அசுரவேகத்தில் ஐம்பது படங்களை தாண்டிவிட்டார்.

அடிப்படையில் மெக்கானிக்கல் என்ஜினியர். அப்பா ஹோட்டல் நடத்தி வந்தார். கிரிக்கெட் வீரர் ஆகவேண்டும் என்பதுதான் சுதீப்பின் சிறுவயது லட்சியம். ராகுல் ட்ராவிட்டின் நண்பர். பிஸினஸ்மேனான அப்பாவுக்கு கிரிக்கெட் என்றால் வேப்பங்காய். கிரிக்கெட்டுக்கு அடுத்து சுதீப்புக்கு ரொம்பவும் பிடித்தது சினிமா. எனவே சினிமாவில் நுழைகிறேன் என்று அடம்பிடித்தார். சுதீப் அம்மா செல்லம். அம்மாவும் அப்பாவை வற்புறுத்த ‘எக்கேடாவது கெட்டுத் தொலை’ என்று தண்ணீர் தெளித்து விட்டார்.

ஆரம்பத்தில் டிவி சீரியலில் நடிக்கத்தான் சான்ஸ் கிடைத்தது. உதயா டிவியில் ஒளிபரப்பான ‘பிரேமதா காதம்பரி’ சீரியல் மூலம் இல்லத்தரசிகளிடம் நல்ல பெயர். இந்த பெயரை பயன்படுத்தி பெரிய திரைக்குள் நுழைய எடுத்த முயற்சிகள் ஆரம்பத்தில் படுதோல்வி. அவருக்கு வாய்ப்பு கிடைத்த இரண்டு படங்களும் பாதியிலேயே பொட்டிக்குள் முடங்கின. சற்றும் மனந்தளராத விக்கிரமாதித்தனாய் முட்டி மோதி முயற்சித்துக் கொண்டே இருந்தார். ’தயவ்வா’ படத்தில் ஒரு துண்டு வேடம். இரண்டு ஆண்டுகள் கழித்துதான் 1999ல் அடுத்த வேடம் கிடைத்தது. இதுவும் துண்டு கேரக்டர்தான். படத்தின் பெயர் ‘ப்ரத்யார்த்தா’. சின்ன கேரக்டராக இருந்தாலும் சுதீப்பின் ஆர்வமும், அலட்டல் இல்லாத குணமும், அசராத உழைப்பும் இயக்குனர் சுனில்குமார் தேசாயை கவர்ந்தது. அவர் அடுத்து இயக்கிய ‘ஸ்பர்ஷா’வில் சுதீப்தான் ஹீரோ.
                                   sudeep1
ஸ்பர்ஷாவைத் தொடர்ந்து சுதீப் நடித்த ‘ஹூச்சா’ அவரை எங்கோ கொண்டு சென்றது. ’சீயான்’ விக்ரம் என்று இங்கே சொல்வதைப் போல, கர்னாடகாவில் ‘கிச்சா’ சுதீப் என்பார்கள். அதாவது சேதுதான் ‘ஹூச்சா’வாக ரீமேக் ஆனது. அவ்வாண்டு சிறந்த நடிகருக்கான பிலிம்ஃபேர் விருதும் சுதீப்புக்கு கிடைத்தது.

அப்படியே பிடித்துவிட்டார் இந்த ரூட்டை. வாலி, சிப்பிக்குள் முத்து, தில் என்று சரமாரியாக தமிழ்பட ரீமேக்குகளில் நடித்து ஹிட்டு ஹிட்டென ஹிட்டடித்தார். முதன்முதலாக அவர் தயாரித்து இயக்கிய படமும் நம்மூர் ஆட்டோகிராப்தான். தெலுங்கு, மலையாளத்தில் ஹிட்டடித்த படங்களை ரீமேக் செய்வதாக இருந்தால், முதலில் சுதீப்பின் கால்ஷீட் இருக்கிறதா என்று பார்த்துக் கொள்கிறார்கள் அந்த ஊர் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும். உச்சமாக தமிழில் செம கல்லா கட்டிய ‘சிங்கம்’ படத்தின் உரிமையை வாங்கி ‘கெம்பே கவுடா’வாக நடித்து இயக்கினார் சுதீப். கர்நாடகா சினிமாவின் வசூல் எல்லை பரப்பளவை ஒரே படத்தில் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு விரிவாக்கினார்.

sudeep
ராம்கோபால் வர்மாவுக்கு சுதீப்பின் உயரம் மற்றும் கூர்மையான கண்கள் மீது காதல். இந்திக்கு அழைத்துச் சென்றார். அங்கு சொல்லிக் கொள்ளும்படியான வெற்றி இல்லையென்றாலும், ராம்கோபால் வர்மாவின் தீவிர ரசிகரான ராஜமலிவுக்கு சுதீப் மீது மரியாதை பிறந்தது. தெலுங்கில் ‘ஈகா’வாகவும், தமிழில் ‘நான் ஈ’யாகவும் ராஜமவுலியின் இயக்கத்தில் வெளிவந்த படம் தென்னிந்தியாவின் சிறந்த நடிகர்கள் வரிசையில் சுதீப்பை நிலைநிறுத்தியது. தற்காலிகமாக கன்னட சினிமாவை மறந்தார். 2011ல் வெளிவந்த விஷ்ணுவர்த்தனாவுக்கு பிறகு, சிலமாதங்களுக்கு முன்பு வெளிவந்த ‘வரதநாயக்கா’வில் கவுரவ வேடத்தில் நடித்திருந்தார். சுதீப் ஹீரோவாக இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ஒரு படம் என்பதே ‘பச்சனின்’ தனிச்சிறப்பு.


உகாதி போனஸாக கன்னடர்களுக்கு கிடைத்த ‘பச்சன்’ கோடி, கோடியாக குவித்துக் கொண்டிருக்கிறது. முதன்முதலாக ஒரு கன்னடப்படம் இருநூறு தியேட்டர்களில் வெளியாகிறது. ஓவர்சீஸிலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது பச்சன். இயக்குனர் சஷாங்கின் முந்தைய படங்களான மொக்கின மனசு, கிருஷ்ணன் லவ் ஸ்டோரி ஆகியவை சொல்லிக்கொள்ளும்படியான ஹிட் தானென்றாலும், பச்சன் யாருமே எதிர்ப்பார்க்காத பம்பர் ஹிட். சுதீப்பின் மேஜிக் இது என்று சாண்டல்வுட்டே திருவிழாக்கால மகிழ்ச்சியில் கொண்டாடி தீர்த்துக் கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் ஹீரோயினாக நடிக்க நயன்தாராவைதான் அணுகினார்கள். கன்னட சினிமா பட்ஜெட் நயனுக்கு ஒத்துவரவில்லை. பொன் வைக்கும் இடத்தில் பூ வைப்பதை போல பாவனா. அதனால் ஒன்றும் நஷ்டமில்லை.

சுதீப் ஒரு தொழிலதிபர். மக்களுக்கு சேவை செய்யவேண்டுமென வாழ்கிற நாயகி பாவனாவின் மீது தீவிரக்காதல். சுரங்க சுரண்டல் மாஃபியா ஒருவனால் பாவனாவுக்கு பிரச்சினை. இப்படியாக சாதாரணமாக போகும் பழிவாங்கும் கதைதான். ஆனால் சுவாரஸ்யமான ட்விஸ்ட்டுகள், எதிர்ப்பார்க்க முடியாத திருப்பங்கள், பரபரவென நகரும் திரைக்கதை என்று சஷாங்கின் திறமையான இயக்கம் இப்படத்தை மாஸ் எண்டெர்டெயினராக மாற்றியிருக்கிறது.
                                 sudeep2
ரீமேக் உரிமையை வாங்க இந்தி, தெலுங்கு, தமிழ் என்று போட்டாபோட்டி. கர்நாடக அரசியலையே கலைத்துப்போட்ட ‘பெல்லாரி’ சுரங்க சுரண்டல் தனிமனிதன் ஒருவனை எப்படி பாதிக்கிறது என்பதுதான் களம். சஸ்பென்ஸ் த்ரில்லராக அடுத்து என்னவோ என்று கைகளைப் பிசைந்துக்கொண்டே படம் பார்க்கும் ரசிகனுக்கு ‘வீக்’கான க்ளைமேக்ஸை அமைத்திருப்பதுதான் படத்தின் பெரிய மைனஸ் பாயிண்ட். இந்திப்படமான ‘அக்னிபத்’தின் லேசான பாதிப்பு திரைக்கதையில் இருப்பதாலோ என்னவோதான் அமிதாப் பச்சனுக்கு ட்ரிப்யூட் செய்யும் விதமாக ‘பச்சன்’ என்று டைட்டில் வைத்திருக்கிறார்களோ என்னவோ.

முதல்வார வசூலே எட்டு கோடியை எட்டிவிட்டது. விமர்சகர்களும், ரசிகர்களும் ஒரே குரலில் பேசுவது குறிஞ்சி பூப்பதைப் போல அதிசயம்தான். ‘பச்சன்’ விஷயத்தில் அந்த அற்புதம் நிகழ்ந்தேறி இருக்கிறது. ஒட்டுமொத்தமாக இதுவரை வந்த சுதீப்பின் படங்களில் இதுதான் பெஸ்ட் என்று ஊரே குலவையிடுகிறது.

(நன்றி : cinemobita.com)

23 ஏப்ரல், 2013

காந்தியத்துக்கு ஜே!


ஏப்ரல் வந்தாச்சி. கோடை வந்தாலே நம்மிடம் சகமனிதர்கள் யாரும் பேசுவதில்லை. குரைக்கிறார்கள். நாமும் பதிலுக்கு குரைத்துத் தொலைக்க வேண்டியிருக்கிறது. யாரை சொல்லியும் குற்றமில்லை. சூரிய பகவானின் அக்னிவிளையாடல். கேஷுவல் என்றால் டைட்டாக ஜீன்ஸும், டீ-ஷர்ட்டும் (பெண்களும் கூடத்தான்), ஃபார்மல் என்றால் முழுக்கைச் சட்டையை முரட்டுப் பேண்டில் இன் செய்து, பெல்ட் மாட்டி, ஷாக்ஸ் அணிந்து மேலே ஷூவும் சொருகிக் கொள்வதால் விளையும் எரிச்சலான விளைவு இது. வியர்வை கசகசக்கும் கோடைகாலத்தில் சினேகபாவம் மனிதர்களிடம் குறைவதில் ஆச்சரியம் ஏதுமில்லைதான். ஒயிட் & ஒயிட்டில் வேட்டி-சட்டையை யூனிஃபார்ம் ஆக்கிக்கொண்ட அரசியல்வாதிகளை பாருங்கள். சட்டசபையில் காவலர்களால் வெளியேற்றப்படும் நேரத்திலும் கூட கூலாக சிரிக்கிறார்கள். Dress does the matter.

மகாத்மா காந்தியின் டிரெஸ் கோட் என்பது வெறும் அரசியல் காரணங்களை மட்டும் உள்ளடக்கியது அல்ல. இந்தியா போன்ற வெப்பமண்டல நாட்டுக்கு இயல்பாகவே பொருந்தும் உடை கதர்தான். கதர் அணிவதற்கு வரலாற்று, பொருளாதார, அரசியல், சமூக, உளவியல் மற்றும் கலாச்சார நியாயங்கள் ஏராளம் நம்மிடம் உண்டு. காதிபவன்களில் கதர் கிடைக்கிறது. கோஆப்டெக்ஸ் கடைகளிலும் ஆண், பெண் இருபாலருக்கும் அருமையான கைத்தறி உடைகள் கிடைக்கிறது. ஆனாலும் குளிர்நாடுகளில் வெள்ளைக்காரர்கள் அணியும் உடைதான் ஃபேஷன் என்று நம்புவதால் கைத்தறியை கைவிட்டுவிட்டோம். கைத்தறி உடையை அணிவதற்கு நமக்கிருக்கும் மனத்தடை நீங்கும் பட்சத்தில் உடை விஷயத்தில் கோடையை எதிர்கொள்வது சுலபம்.

திடீரென்று எப்படி கைத்தறிக்கு மாறமுடியும், வேறு மார்க்கமில்லையா என்று கேட்பவர்களுக்கு கீழ்க்கண்ட டிப்ஸ்கள் உதவக்கூடும் :

· இறுக்கமில்லாத ஆடைகளை அணியுங்கள். காற்று சுலபமாக உங்கள் உடலுக்குள் ஊடுருவட்டும்.

· முழுக்கை சட்டைகளை கோடை முடியும் வரை தவிர்க்கலாம்.

· டீஷர்ட்டாக இருந்தால் காலர் வைக்காத ஓபன்-நெக் சர்ட்டை தேர்ந்தெடுப்பது நல்லது.

· ஜீன்ஸ் வேண்டவே வேண்டாம். பெண்களும் கொஞ்சநாட்களுக்கு லெகின்ஸை தவிர்க்கலாம்.

· லெதர் ஜாக்கெட் மாதிரியான உடைகளை மறந்துவிடுங்கள். சிந்தெடிக் மெட்டீரியல் உடைகளையும் தவிருங்கள்.

· பெண்களை பொறுத்தவரை காட்டன் சல்வார் கமீஸ்தான் கோடைக்கு பொருத்தமான உடை.

· பார்க்க கொஞ்சம் சுமாராகதான் இருக்கும். இருந்தாலும் ஆண்கள் ஜிப்பா முயற்சிக்கலாம்.

· காட்டன் பெர்முடாஸ், ஷார்ட்ஸ் போன்றவை கோடைவிடுமுறையில் வீட்டில் லூட்டி அடிக்கும் வாண்டுகளுக்கு பொருத்தமானவை.

இந்த கோடையிலிருந்தாவது யாரை பார்த்தாலும் குரைக்காமல், புன்னகைக்க முயற்சிப்போம்.

(நன்றி : புதிய தலைமுறை)