2 மே, 2013

நெ.5, 2nd லைன் பீச்


எண்பதுகளில் இருந்த எல்லா இளைஞர்களையும் போலதான் சுந்தரும். ப்ளஸ் டூ முடித்திருந்தார். மேற்கொண்டு பட்டம் படிக்குமளவுக்கு வசதியில்லை. டைப்ரைட்டிங், ஷார்ட் ஹேண்ட் கற்றுவிட்டு அரசுப்பணியில் சேர்வதுதான் லட்சியம். அது நிறைவேறும் வரை தற்காலிகமாக எங்காவது வேலை பார்க்க வேண்டுமே? சென்னை அமைந்தகரையில் இருந்த ஒரு நிறுவனத்தில் ஸ்டெனோவாக பணிக்கு சேர்ந்தார். மிகக்குறைவான சம்பளம். இடுப்பை ஒடிக்கும் வேலை. மூன்று ஆண்டுகள் மாங்கு மாங்குவென்று டைப் அடித்தார்.

கூடுதல் சம்பளத்துக்கு வேறு ஒரு வேலை கிடைத்தது. ஒரு லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம். ஏற்றுமதி, இறக்குமதி தொடர்பான தொழில் என்பதால்  சென்னை துறைமுகத்துக்கு அருகில் இம்மாதிரி நிறைய நிறுவனங்கள் உண்டு. இயல்பிலேயே சுந்தருக்கு இருந்த சூட்டித்தனம் அந்த அலுவலகத்தில் எல்லோருக்கும் பிடித்துப் போனது. விரைவிலேயே அலுவலகத்தில் ‘ஆல்-இன்-ஆல்’ ஆனார். காலையில் முதலில் வந்து அலுவலகத்தை திறப்பதும் அவர்தான். இறுதியாக கதவை மூடிவிட்டுச் செல்வதும் அவர்தான். அம்பத்தூரில் வீடு. அம்மா கட்டிக் கொடுக்கும் சாப்பாட்டை எடுத்துக்கொண்டு ரயில் ஏறினார் என்றால் அலுவலகம்தான் அனைத்துமே. சுந்தர் இல்லாமல் அணுவும் அசையாது என்கிற நிலைமை அலுவலகத்தில். ஆபிஸ்பாய் வேலையில் தொடங்கி அதிகாரி வேலை வரைக்கும் அவரே இழுத்துப்போட்டு செய்தார். பலநாள் அலுவலகத்திலேயே தங்கி இரவுமுழுக்க வேலை பார்க்கவேண்டியும் வரும். லாஜிஸ்டிக்ஸ் தொழிலில் ஆதி முதல் அந்தம் வரை பிடிபட்டது. ஆங்கிலமும் வசப்பட்டது.

ஃபீல்டில் சுந்தரின் புகழ் பரவியது. போட்டி நிறுவனம் ஒன்று தன்னுடைய நிறுவனத்துக்கு அவரை உரிய கவுரவத்தோடு அழைத்தது. மேலாளராக போய் சேர்ந்த இடத்தில் அங்கு பணிபுரிபவர்களில் ஆறு பேர் நண்பர்கள் ஆனார்கள். உமாபதி, முனிரத்தினம், உதயகுமார், கருணாநிதி, கண்ணன், ரமேஷ். டீமாக அனைவரும் இணைந்து பணியாற்ற பணியில் அடையவேண்டிய உயரத்தை அடைந்தார்கள். ஒருகட்டத்தில் சுந்தருக்கு யோசனை வந்தது. ஏழு பேருமே திறமைசாலிகள். நாம் ஏன் இன்னொரு நிறுவனத்தில் சம்பளத்துக்கு வேலை பார்க்க வேண்டும், சொந்த நிறுவனம் ஆரம்பித்தால்?

அனைவருமே நடுத்தர வர்க்கம். கையில் இருந்த கொஞ்ச நஞ்ச சேமிப்புகளை முதலீடாக போட்டார்கள். முந்தைய பணியில் பிடிக்கப்பட்ட பி.எஃப். தொகையையும் முதலீடுக்கு பயன்படுத்திக் கொண்டார்கள். வாடகைக்கு இடம்பிடித்து ஒரு லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தை தொடங்கும்போதுதான் தெரிந்தது, லைசென்ஸ் வாங்குவது அவ்வளவு சுலபமல்ல. அதிலும் லைசென்ஸ் பெறுபவருக்கான குறைந்தபட்சத் தகுதி பட்டம். இவர்களில் ஒருவர்கூட பட்டதாரி அல்ல. தற்காலிகமாக வேறு ஒரு நிறுவனத்தின் சப் ஏஜெண்ட் போல நிறுவனத்தை தொடங்கினார்கள். அதாவது வேலை இவர்கள் பார்ப்பார்கள். வேலை பார்ப்பதற்கான லைசென்ஸ் அந்த நிறுவனத்துக்கு இருக்கும். ஒட்டுமொத்த வர்த்தகத்தில் ஒரு பர்சண்டேஜ் அந்நிறுவனத்துக்கு போகும்.

கம்பெனிக்கு என்ன பெயர் வைப்பது? பொதுவாக பெற்றோர் பெயரைதான் வைக்கிறார்கள். ஓர் எழுத்தாளரின் பெயரை வைத்தால் என்ன என்று சுந்தருக்கு யோசனை. ஆரம்பத்தில் சிறுபத்திரிகைகளில் கவிதை எழுதிக்கொண்டிருந்தவர் சுந்தர். ஒரு கட்டத்தில் இலக்கியச் செயல்பாடுகள் பணியை பாதிக்கிறது என்பதால் வாசிப்போடு நிறுத்திக்கொண்டார். அவருக்கு பிடித்த எழுத்தாளரான நகுலனின் பெயரையே நிறுவனத்துக்கும் சூட்டினார். நகுலன் லாஜிஸ்டிக்ஸ். வேறு எங்காவது ஓர் எழுத்தாளரின் பெயர் நிறுவனத்துக்கு சூட்டப்பட்டிருக்கிறதா என்று தெரியவில்லை. 2003ல் இந்நிறுவனம் இப்படித்தான் உருவானது.

ஏழு பேரும் முதலாளிகள் என்றாலும் தொழிலாளர்களும் அவர்களே. மாதாமாதம் சம்பளம் மட்டுமே எடுத்துக் கொள்வார்கள். வருடத்துக்கு ஒருமுறை கணக்குப் பார்த்து லாபத்தை பிரித்துக் கொள்வார்கள். கொஞ்சம் கொஞ்சமாக நிறுவனம் வளரத் தொடங்கியது. சொந்தமாக லைசென்ஸ் எடுக்க வேண்டும் என்பதற்காக அவர்களில் ஒருவரே பட்டம் படித்தார். நகுலன் லாஜிஸ்டிக்ஸ் அருகிலேயே லிங்குசெட்டித் தெருவில் இன்னொரு கிளை தொடங்கியது. சென்னை ஏர்போர்ட், தூத்துக்குடி, பெங்களூர், மும்பை என்று நிறைய கிளை அலுவலகங்களோடு வளரத் தொடங்கியது. இன்று லாஜிஸ்டிக்ஸ் துறையில் இயங்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்று நகுலன் லாஜிஸ்டிக்ஸ்.

இடப்பற்றாக்குறை காரணமாக சமீபத்தில் புது அலுவலகத்துக்கு இடம்பெயர்ந்தார்கள். முகவரி : நெ.5, 2nd லைன் பீச், சென்னை-1. துறைமுகம் அருகில் சுந்தர் முதலில் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்தார் இல்லையா? அதே முகவரிதான். இருபது வருடங்களுக்கு முன்பு எந்த முகவரியில் தொழிலாளியாக இரவும், பகலுமாக வேலை பார்த்தாரோ, இன்று அதே முகவரியில் முதலாளியாக தனி கேபினில் அமர்ந்திருக்கிறார்.

“திட்டமிட்டெல்லாம் இந்த இடத்தை தேர்ந்தெடுக்கவில்லை. யதேச்சையாக அமைந்த விஷயம்தான். ஆனால் இதே இடம் அமைந்தது எனக்கும் ஆச்சரியமாகதான் இருக்கிறது” என்கிறார் சுந்தர்.

படிப்பு என்பது பணம் சம்பாதிப்பதற்கான பாதை என்றொரு மாயை இருக்கிறது. பட்டம் கூட இல்லாமல் நிறுவனம் ஆரம்பித்த ஏழு பேர் இன்று பல நூறு பேருக்கு வேலை வழங்கும் நிலைக்கு உயர்ந்திருக்கிறார்கள். ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.

(நன்றி : புதிய தலைமுறை)

8 கருத்துகள்:

  1. பிரியத்துக்குரியவர்களின் வளர்ச்சியைக் காண்கிற போது மகிழ்ச்சியாகவும், நெகிழ்ச்சியாகவும் இருக்கிறது. நண்பன் யாத்ராவின் நிறுவனத்தின் பெயர் ‘யாத்ரா இன்டஸ்ட்ரீஸ்’. இலக்கியம் சார்ந்த தீவிர ஈடுபாட்டின் காரணமாகவே இப்பெயரை யாத்ரா என்கிற செந்தில்குமார் வைத்துள்ளான்.

    பதிலளிநீக்கு
  2. படிப்பு என்பது பணம் சம்பாதிப்பதற்கான பாதை என்றொரு மாயை இருக்கிறது. பட்டம் கூட இல்லாமல் நிறுவனம் ஆரம்பித்த ஏழு பேர் இன்று பல நூறு பேருக்கு வேலை வழங்கும் நிலைக்கு உயர்ந்திருக்கிறார்கள். ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.அருமை ...

    பதிலளிநீக்கு
  3. மங்கும் கோலாவும் போல..
    கலக்குங்க குருஜி :-)

    பதிலளிநீக்கு
  4. சூப்பர்

    + 2 என்றாலே வெற்றிதான்

    பதிலளிநீக்கு
  5. 'பட்டம் கூட இல்லாமல் நிறுவனம் ஆரம்பித்த ஏழு பேர் இன்று பல நூறு பேருக்கு வேலை வழங்கும் நிலைக்கு உயர்ந்திருக்கிறார்கள். ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.' - யுவகிருஷ்ணா
    அருமை

    பதிலளிநீக்கு