இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடத்திய தமிழினக் காவலர்களின் பேரப்பிள்ளைகள் மட்டும் ஆங்கிலம், இந்தியெல்லாம் படிக்கிறார்களே? அப்பாவி மக்கள் மட்டும் இந்தியும், இங்கிலீஷும் படிக்காமல் டப்பிங் படங்களை பார்த்து வாழ்க்கையைத் தொலைக்க வேண்டுமா?
ஐம்பது ஆண்டுகளாக பலரும் பலமுறை இதற்கெல்லாம் விளக்கமாகப் பதில் அளித்தும் புதுசு புதுசாக, தினுசு தினுசாக மொழிப்போராளிகள் கிளம்பி வந்துக்கொண்டே இருக்கிறார்கள்.
‘இந்தி எதிர்ப்பு’ என்கிற சொல்லே தவறு. ‘இந்தித்திணிப்பு எதிர்ப்பு’ என்பதுதான் சரி. ஏன் இந்தித்திணிப்பை எதிர்க்க வேண்டும். ஏனெனில் நம்மூர் முனுசாமியின் பிள்ளைகளுக்கு தமிழ் தவிர்த்து ஆங்கிலம் என்கிற ஒரே ஒரு மொழியை கூடுதலாக கற்கவே ‘ததிங்கிணத்தோம்’ போட வேண்டியிருக்கிறது. பத்தாங்கிளாஸில் இங்கிலீஷில் பார்டரில் பாஸ் செய்பவர்கள்தான் நம்மூரில் அதிகம். அப்படியிருக்க கூடுதல் சுமையாக இந்தியும் கட்டாயமெனில் பொதுத்தேர்வுகளில் தோல்வியைத் தழுவுபவர்களின் சதவிகிதம் கூடுதலாகும். பட்டம் படிக்கும் கூட்டம் சுத்தமாக குறையும்.
வட இந்தியாவில் பெரும்பான்மையானோருக்கு தாய்மொழி இந்தி என்பதால் அவர்கள் இந்தி படிக்கிறார்கள். எதிர்காலத்தில் நீங்கள் தமிழகத்தில் பணியாற்ற வேண்டியிருக்கும். எனவே நீங்கள் தமிழும் படித்து பாஸ் செய்யவேண்டும் என்று கட்டாயப்படுத்தினால் அவர்கள் ஒத்துக்கொள்வார்களா?
கோடைவிடுமுறையைக் கூட விட்டு வைக்காமல் கோச்சிங் சென்டர்களுக்குப் போகும் நகர்ப்புற குழந்தைகள் வேறு. சத்துணவு கிடைக்கிறதே என்று பள்ளிகளுக்கு அனுப்பப்படும் கிராமப்புற பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த குழந்தைகள் வேறு. கூலிவேலை செய்யும் பெற்றோரின் குழந்தைகளும், வங்கியில் பணிபுரியும் பெற்றோரின் குழந்தைகளும் வேறு வேறு. இந்த வர்க்க வேறுபாட்டின் இடைவெளி அவ்வளவு சீக்கிரமாக சுருங்கிடப்போவதில்லை. கல்வி மட்டுமே கரைசேர்க்கும் கலங்கரை விளக்கம். இரு வர்க்கத்தினரின் குடும்பச்சூழலுக்கும் மலைக்கும், மடுவுக்குமான வித்தியாசமுண்டு. இந்த அடிப்படையை புரிந்துக்கொள்ள முடிந்தால், “ஸ்கூல்லே இந்தி கத்துக் கொடுத்திருந்தா நான் டெல்லி போயி புடுங்கியிருப்பேன்” என்று யாரும் பேசமாட்டார்கள்.
மொழி என்பது அறிவல்ல. தகவல் பரிமாற்றத்துக்கான ஊடகம். அறிவுச்செல்வத்தை கைபற்றியவன் இந்தியென்ன, சிந்தியைக்கூட தேவை ஏற்பட்டால் சுலபமாக கற்றுக்கொள்வான். அறிவு வளர தாய்மொழிக்கல்விதான் சிறந்தது என்று கல்வியாளர்கள் பலகாலமாக கூவிக்கொண்டிருக்கிறார்கள். இதற்கு சமகால உதாரணமாக தாய்மொழி கல்வி வழக்கத்தில் இருக்கும் நாடுகள் தொழில்ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் முன்னேறியிருப்பதை கைகாட்டுகிறார்கள். ஆங்கிலமே அறியாத சீனர்கள் கணினித்துறையில் கண்ணில் விரலைவிட்டு ஆட்டுகிறார்கள்.
இந்தியை பிரைவேட்டாக படிப்பதை யாரும் தடுக்கவில்லை. மாணவர்கள் பொதுத்தேர்வுகளில் தன்னுடைய தனிப்பட்ட தேர்வாக மொழிப்பாடமாக இந்தியையோ, சமஸ்கிருதத்தையோ, பிரெஞ்சையோ எடுத்துக்கொள்வதற்கும் யாரும் தடைவிதிக்கவில்லை. எனவே இங்கு வேறு மொழிக்குத் தடை என்பதைப்போல யாரும் பாசிஸ்ட்டுகளாக செயல்படவில்லை.
‘மொழித்திணிப்பு’ என்பதைதான் ஏற்க மறுக்கிறார்கள். நூற்றி பத்து டிகிரி வெயில் அடிக்கிறது. தொடர் மின்வெட்டு வேறு. ஏ.சி.யுமில்லை. ஃபேனுமில்லை. நீங்கள் கட்டாயமாக கம்பளி போர்த்துக்கொண்டுதான் தூங்கவேண்டும் என்று மத்திய அரசு வற்புறுத்தினால் ஏற்றுக்கொள்ள முடியுமா? இல்லை. பரவாயில்லை. நான் கம்பளி போட்டுக்கொண்டுதான் தூங்குவேன் என்று நீங்கள் விருப்பப்பட்டால் அதை யாரும் இங்கே தடுக்கவில்லை.
மொழிப்போர் புரிந்து இந்தியைத் தடுத்த தமிழினத் தலைவர்களின் சந்ததியினர் மட்டும் இந்தி கற்றுக் கொள்கிறார்களே என்று தங்களுடைய அறிவுமந்தத்தை அடிக்கடி காட்டுகிறார்கள் சிலர். தமிழினத் தலைவர்கள் பத்து தலைமுறைக்கு சொத்து சேர்த்து வைத்திருக்கிறார்கள். அவர்களுடைய குழந்தைகள் பள்ளிக்கூடத்துக்கே போகவில்லையென்றால் கூட அவர்களுக்குப் பிரச்சினையில்லை. நமக்கெல்லாம் அப்படியா. பட்டம் பெற்றால் மட்டும் போதாது. மேற்பட்டம் பெறவேண்டும். தொழில்தொடர்பான குறுங்கால பயிற்சிகளை பெறவேண்டும் என்று வேலைச்சந்தையில் எத்தனை எத்தனை எதிர்ப்பார்ப்புகள். குறைந்தபட்ச கல்வியறிவினை பெறவேண்டிய நிலையில் இருக்கும் சமூகம் மொழித்திணிப்பால், போதிய அறிவினைப் பெறமுடியாமல் போனால் யாருக்கு இழப்பு. பணக்கொழுப்பால் தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கும் நகர்ப்புற பெற்றோரான நாம், நம் அறிவீனத்தால் கிராமப்புறங்களில் கல்விக்கு அரசையே சார்ந்திருக்கும் குழந்தைகளின் எதிர்காலத்தோடு விளையாடுவது தவறு. அவர்களுக்காக சிந்திக்கும் சிந்தனையாளர்களின், செயற்பாட்டாளர்களின், கல்வியாளர்களின் கருத்துகளை போகிற போக்கில் கேலி பேசிவிட்டுச் செல்வது என்பது முட்டாள்த்தனம்.
இப்போது தமிழக அரசு தொடக்கப்பள்ளிகளில் ஆங்கில மீடியம் கொண்டுவருவதையும் இதே அடிப்படையில்தான் கல்வியாளர்கள் எதிர்க்கிறார்கள். அறிவில் வர்க்க வேறுபாடு கூடாது என்று சமச்சீர்க்கல்வி கொண்டுவரச்சொல்லி போராடிய கல்வியாளர்களின் முதல் கோரிக்கை தாய்மொழிக்கல்வியாகதான் இருந்தது. அரையும் குறையுமாக திமுக அரசால் கொண்டுவரப்பட்ட சமச்சீர்க்கல்வியே கூட அவர்களை முழுமையாக திருப்திபடுத்தவில்லை. ஆறாம் வகுப்பிலிருந்து ஆங்கில மீடியத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வசதி அரசுப்பள்ளிகள் பலவற்றிலும், அரசு உதவியோடு நடத்தப்படும் பள்ளிகளிலும் சமச்சீர்க்கல்வி முறையிலும் கூட இருக்கிறது.
விவரம் தெரியாத நம் மக்களுக்கு ஆங்கிலமோகம் அதிகம். ஆங்கிலத்தை அறிவாக நினைக்கிறார்கள். ஆங்கிலம் பேசுபவன் விவரமானவன் என்று நம்புகிறார்கள். பத்தாவதில் ஒழுங்காகப் படித்து நல்ல மதிப்பெண் பெற்ற மாணவனை கூட ப்ளஸ் ஒன் சேர்க்கும்போது ஆங்கில மீடியத்தில் சேர்த்து உருப்படாமல் போகவைக்கும் சாதனையை தொடர்ச்சியாக செய்துவருபவர்கள் நம் பெற்றோர். தொடக்கக்கல்வியிலேயே ஆங்கில மீடியம்தான் என்றால், விவரம் தெரியாத குழந்தைகளை அதில் சேர்த்து அவர்களது எதிர்காலத்தை தங்கள் அறியாமையால் நாசப்படுத்ததான் செய்வார்கள். வீட்டில் பேசும் மொழி தமிழாக இருக்க, பள்ளியில் ஆங்கிலத்தில் போதிக்கப்படும் கணிதத்தையும் அறிவியலையும் புரிந்துகொள்ள முடியாமல் சிரமப்படுவார்கள். ஆங்கிலத்தின் அடிப்படைகளை பள்ளியில் ஒரு மாணவன் அறிந்துக்கொள்வதற்கான வாய்ப்பாக ஏற்கனவே ஆங்கிலம் மொழிப்பாடமாக இருப்பதே போதுமானது இல்லையா?
தாய்மொழிக்கல்வி என்பது தாய்ப்பால் மாதிரி. வேற்றுமொழிக்கல்வி புட்டிப்பால் மாதிரி. வேற்றுமொழிக்கல்வியில் படிக்கும் குழந்தைகள் தங்கள் பாடங்களை புரிந்துகொள்கிறார்களா என்பது கவனமாக கண்காணிக்கப்பட வேண்டும். நகர்ப்புற பெற்றோருக்கு இது சாத்தியமே. போதுமான படிப்பறிவில்லாத பெற்றோருக்கு பிறந்த ஊரகப்பகுதி குழந்தைகளுக்கு இந்த கண்காணிப்புக்கான வாய்ப்பு கிட்டத்தட்ட இல்லை. எனவே அவர்களுக்கு தங்கள் பாடங்களின் அடிப்படையையே புரிந்துகொள்ள முடியாமல் படிப்பு கசக்க ஆரம்பித்துவிடும்.
நர்சரி கான்வெண்டுகளுக்கும், மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கும் அரசுப்பள்ளிகள் போட்டியை ஏற்படுத்தவேண்டும் என்கிற அதிமுக அரசின் ஆதங்கம் நியாயமானது. ஆனால் தனியார் பள்ளிகளின் அடிப்படை நோக்கம் பணமாக இருக்கிறது. அரசு பள்ளிகளை நடத்துவது மக்களுக்கான சேவை. வியாபாரிகளிடம் போய் உயரிய நோக்கத்தோடு சேவை செய்யும் அரசாங்கம் ஏன் போட்டியிட வேண்டும். வேண்டுமானால் தனியார் பள்ளிகளை விட சிறப்பான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளையும், சிறப்பான கல்விச்சூழலையும் குழந்தைகளுக்கு தந்து தனியாரின் ஆதிக்கத்தை மட்டுப்படுத்தலாம். அடம்பிடித்து ஆங்கில மீடியத்தை அதிமுக அரசு கொண்டுவருமேயானால், அது எதிர்கால தலைமுறையின் அறிவுவேரில் வெந்நீரை ஊற்றும் செயலாகவே முடியும்.
சீனர்கள் சீன மொழியில் தான் படிக்கிறார்கள் என்பது உன்மைதான் ஆனால் சீனா என்பது நாடு, தமிழ்நாடு என்பது நாடா?? மாநிலமா??
பதிலளிநீக்குஏண் கிராம புற மாணவன் ஆரம்பம் முதல் ஆங்கில வழியில் படித்தால் கூட அவனுக்கு ஆங்கிலம் வராதா?? தமிழ் தமிழ்னு வசனம் பேசுர யாரும் தங்கள் குழந்தைகளை B.A தமிழ் படிக்கவைத்து தமிழை வளர்க்க முன்வரவில்லையே ஏன்???
சீனர்கள் சீன மொழியில் தான் படிக்கிறார்கள் என்பது உன்மைதான் ஆனால் சீனா என்பது நாடு, தமிழ்நாடு என்பது நாடா?? மாநிலமா??
பதிலளிநீக்குஏண் கிராம புற மாணவன் ஆரம்பம் முதல் ஆங்கில வழியில் படித்தால் கூட அவனுக்கு ஆங்கிலம் வராதா?? தமிழ் தமிழ்னு வசனம் பேசுர யாரும் தங்கள் குழந்தைகளை B.A தமிழ் படிக்கவைத்து தமிழை வளர்க்க முன்வரவில்லையே ஏன்???
ஆங்கில மீடியம் என்பது ஒரு சாய்ஸா? அல்லது கட்டாயமா ? புட்டிப்பால் கொடுக்க விரும்பும் பெற்றோர்கள் கொடுத்து விட்டுப் போகட்டுமே?
பதிலளிநீக்குB.E , MBBS போன்ற படிப்புகள் தமிழில் இல்லை, அப்ப 12 வகுப்புவரை தமிழில் படித்தவன் மேற்படிப்புக்கு கஷ்டபட வேன்டிய நிலை தொடரதான் வேண்டுமா??
பதிலளிநீக்குவாழ்த்துக்கள், நல்ல கருத்து....நகரங்களில் ஆங்கில மோகம் பிடித்து கடன் வாங்கி பள்ளியில் சேர்க்கும் lower middle class இதன் மூலம் பயன் பெறுவார்கள் இல்லையா...மேலும் தொழிற்கல்வியில் ஆங்கில வழிப் பாடம் தானே இன்னும் இருக்கு...திமுக ஆட்ச்ச்யில் தொடங்கப்பட்ட தமிழ் வழி பொறியியல் படிப்பு நிலமை பரிதாபம்...ஆங்கிலம் அறிவல்ல மொழி என்பது படித்த பண்டிதர்களுக்கே இன்னும் புரியவில்லையே...நமது பிள்ளைகளை ஆங்கில வழி பள்ளியில் சேர்ப்பது ஒரு பெருமைக்குரிய விசயமாக நடுத்தர வர்க்கம் எண்ணுவதால் தான் கல்வி கூடங்கள் இன்று கொள்ளை கூடங்களாக மாறியுள்ளன...நீண்ட விவாதம் / விழிப்புணர்வு இது குறித்து தேவை...நன்றி...jokinjey
பதிலளிநீக்குஆங்கில வழி கல்வி கட்டாயம் என அரசு சொல்லவில்லையே?? விருப்ப பட்டசர்கள்தான் சேருவார்கள். இதில் அரசியல் ஆதாயம் தேடும் சிலர்தான் எதிர்கிறார்கள். தமிழ் வளர்க்க ஆசைபடும் இவர்கள் ஒரு நாள் முழுவதும் தமிழ் மட்டுமே பேச செய்வார்காளா?
பதிலளிநீக்குWhat should tamil children who live in Karnataka due parent's job should do ?
பதிலளிநீக்கு"மொழி என்பது அறிவல்ல. தகவல் பரிமாற்றத்துக்கான ஊடகம். அறிவுச்செல்வத்தை கைபற்றியவன் இந்தியென்ன, சிந்தியைக்கூட தேவை ஏற்பட்டால் சுலபமாக கற்றுக்கொள்வான்."
பதிலளிநீக்குஅற்புதமான கருத்து, யுவா சார்!
நன்றி!
சினிமா விரும்பி
http://cinemavirumbi.blogspot.in
தமிழகத்தில் எல்லோரும்
பதிலளிநீக்குமொழிப்பாடமாக தமிழை அவசியம் படித்தல் நலம். மேலும்
முதலிலிருந்தே அறிவியலையும் கணிதத்தையும் அனைவரும்
ஆங்கில வழியிலும், சரித்திர பூகோள பாடங்களை தமிழிலேயும்
படித்தால் தமிழறிவும் அழியாது. மேல் படிப்புகளில் நம் மாணவர்களின்
ஆங்கிலப்புலமையும் அவர்களை மேம்படுத்தும். இக்கருத்தை
ஏற்கனவே சிலர் தெரிவித்துள்ளனர். ஆங்கில வழியா? தமிழ் வழியா?
என வாதிடுபவர்கள் இரண்டுக்கும் இடையிலான இவ்வழியையும்
சிந்திக்கலாமே?
எதுக்கு வம்பு? மீடியம் என்ன என்பதை எப்போதும் போல் சாய்சாகவே வைத்துவிட்டால் பிரச்சினை இல்லைதானே?
பதிலளிநீக்கு\\தமிழினத் தலைவர்கள் பத்து தலைமுறைக்கு சொத்து சேர்த்து வைத்திருக்கிறார்கள். அவர்களுடைய குழந்தைகள் பள்ளிக்கூடத்துக்கே போகவில்லையென்றால் கூட அவர்களுக்குப் பிரச்சினையில்லை. நமக்கெல்லாம் அப்படியா.\\
பதிலளிநீக்குஅவசரப்பட்டு பொது தளங்களில் இந்த மாதிரி வார்த்தையை விடக்கூடாது பாஸ்.. அது நமக்கே ரிவிட் ஆயிடும்..
தமிழ் படித்தால் பி.எ. தமிழ் தான் படிக்கவேண்டும் என்பதல்ல, அப்துல் கலாம் உட்பட அறிஞர்கள் பலரும் ஆரம்ப கல்வியை தாய் மொழியில் படித்தவர்கள் தான். ஆரம்பக் கல்வியை தாய் மொழியில் படித்தால்தான் அடிப்படை பலமாக இருக்கும். சிந்திக்கும் திறனும் வளரும்.
பதிலளிநீக்குமேலும் தொடக்கப்பள்ளியில் ஆங்கில மீடியத்தை கொண்டுவந்தால் அனைத்து பெற்றோர்களும் ஆங்கில மீடியத்தையே விரும்புவார்கள். ஆனால் தற்போது உள்ள ஆசிரியர்களில் பெரும்பாலோர் தமிழ் மீடியத்தில் படித்தவர்கள் ஆகையால் ஆங்கில வழியில் அனைத்து பாடங்களையும் கற்பிப்பதில் அவர்களுக்கும் சிக்கல் ஏற்படும்.
* Amount of "knowledge material" available in languages differ. For example, most of the scholarly articles are in English. It may not be palatable (why not in *my* language?) - but that is the bitruth whether one likes it or not. While one can hope for translations - translations are not always available and not accurate in many cases.
பதிலளிநீக்கு* TN govt only optionally makes English medium available and so this can not be compared to Hindi situation (where there was an element of compulsion as you rightly noted).
* While "middle class" in "cities" can not decide for all, what is available to "middle class" should be available for all - even for the remote village folks. Let the people decide in which medium their kid should study. Who are we tell "humble village folks" what is good for them? And why do we think we have better judgement and they don't?
* On "private access" argument - it is costly to have private access. Why prevent people what they'll get from Govt. schools? I'd say even Hindi or any other language could be made available optionally (as a language subject). If someone thinks they can get better by studying another language, so be it. Why should it be available only for those who have money?
* There are stories, metaphors, concepts are sometimes specific to specific languages. Learning more languages is better and enriches life. What is the word for this in Tamil or English (if that exists at all!)? http://i.imgur.com/kRgaXcQ.jpg
//தமிழினத் தலைவர்கள் பத்து தலைமுறைக்கு சொத்து சேர்த்து வைத்திருக்கிறார்கள். //
பதிலளிநீக்குSUPER கட்சி பணியை மட்டுமே பார்த்து கொண்டு இருந்த தமிழினத் தலைவர் எப்படி பாத்து தலை முறைக்கு சொத்து சேர்த்தார்.....?
Please check Steel Baron Lakshmi Mittal's interview who did his schooling in Hindi Medium (his mother tongue). It all depends on one's determination to come up in life rather than doing school studies in English Medium.
பதிலளிநீக்குpl. meet a corporation school teacher or Headmaster,u will know the ground reality.I have visited many such schools.Many teachers have stated there is reduction in school strength as they r not having English medium section.Due to politics there is no Navodaya school in Tamil nadu. Even Pondicherry has Navodaya Schools.Learning English is not an herculian task.
பதிலளிநீக்குநல்ல பதிவு....எல்லோரும் போட்டிக்குத்தான் பதில் பேசுவார்கள்..உண்மையை யாராலும் மறுக்கமுடியாது...
பதிலளிநீக்கு------- இந்தியை பிரைவேட்டாக படிப்பதை யாரும் தடுக்கவில்லை. மாணவர்கள் பொதுத்தேர்வுகளில் தன்னுடைய தனிப்பட்ட தேர்வாக மொழிப்பாடமாக இந்தியையோ, சமஸ்கிருதத்தையோ, பிரெஞ்சையோ எடுத்துக்கொள்வதற்கும் யாரும் தடைவிதிக்கவில்லை. எனவே இங்கு வேறு மொழிக்குத் தடை என்பதைப்போல யாரும் பாசிஸ்ட்டுகளாக செயல்படவில்லை-------
பதிலளிநீக்குசட்ட ரீதியாகத் தடுக்கவில்லைதான். ஆனால், ஆரம்பக் காலங்களில் இந்தி படிப்போரைத் தேடித் தாக்கிய சம்பவங்கள் நடந்ததுண்டு. சுஜாதா கூட இதை மையமாக வைத்து ஒரு சிறு கதை எழுதி இருகிறார். மொழித் திணிப்பு எதிர்ப்பு என்று சொல்வதெல்லாம் சும்மா. ஆனால் உண்மையில் மொழித் திணிப்பு எதிர்ப்பாக இருந்திருந்தால் அது நன்றாக இருந்திருக்கும். மற்றபடி ஆங்கில வழிக் கல்வியை நானும் எதிர்க்கிறேன்.
பி. கு.: தாக்கியவர்கள் யார் என்று குழந்தை கூட சொல்லி விடும்.
தமிழ் தெய்வீகமானது . ஆனால் எவ்வளவு நன்றாக இங்கிலீஷ் பேசுகிறோமோ அவ்வளவு அதிக சம்பளம் கிடைக்கிறது. அதே போல் எல்லா உயர்கல்வி (BE. MBBS, IPS, IAS) இங்கிலீஷில் இருக்கும் போது , இங்கிலீஷ் மீடியம் ஆரம்ப கல்வியில் தவறு ஒன்றும் இல்லை. இங்கிலீஷ் தமிழ் இவற்றில் எதாவது ஒன்றை தேர்ந்தெடுக்கும் உரிமை மட்டும் மறுக்ககூடாது.
பதிலளிநீக்கு