16 மே, 2013

கலைஞரின் காதல்

‘‘கடவுளைப் போலத்தான் காதலும்! உண்டா இல்லையா என்பதை எந்த தர்க்கமும் முடிவு செய்ய முடியாது’’ என்று என் மகள் கனிமொழி, ஜூனியர் விகடனில் எழுதியதைப் படித்துப் பார்த்துக் கொண்டும், என் பேரன்களும் பேத்திகளும் சாதி பேதச் சுழல்களைத் தாண்டி நின்று காதல் திருமணங்கள் செய்து கொண்டதை வாழ்த்திக் கொண்டும் கொள்ளுப்பேரன், கொள்ளுப் பேத்திகளைக் கொஞ்சிக் கொண்டும் இருக்கின்ற இந்த வயதில் நீயும் கொஞ்சம் காதல் படிக்கட்டுகளில் ஏறிடுக என்றால் இது ஒரு வேடிக்கைதானே! ‘இதில் என்னய்யா வேடிக்கை இருக்கிறது?’ என்று புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் ‘முதியோர் காதல்’ புத்தகம் வீட்டு நூலகத்திலிருந்து எட்டிப்பார்த்துச் சிரிக்கிறது. அதுவும் ஓர் அழகின் சிரிப்புதானே!

வயது எண்பதை நெருங்கிக் கொண்டிருக்கிற நெல்சன் மண்டேலா, ஒரு நடுத்தர வயது மங்கையைக் காதலித்துக் கட்டித்தழுவும் படங்கள் ஏடுகளை அலங்கரிக்கும் இந்தக் காலத்தில், நான் காதலைப் பற்றி ஒரு கட்டுரைதானே எழுதுகிறேன். எனவே, என் கொள்ளுப் பேரர்களும் பேத்திகளும் கோபித்துக் கொள்ளமாட்டார்கள்.

‘‘காதல் வர்ணனைகளைக் காட்டாற்று வெள்ளமெனப் பொழிந்து தள்ளிய இந்தப் பேனா, இப்போது மிகச் சாதாரண நடையில் சில செய்திகளைச் சொல்லப் போகிறது.’’

இப்படிச் சுருக்கமாக என் காதல் (தோல்வியுற்ற) கதை ‘நெஞ்சுக்கு நீதி’ சுயசரிதையில் முதல் பாகம் 74-வது பக்கத்தில் சுட்டிக்காட்டப்படுகிறது.அந்தக் காதல் நடந்த நாட்களையும் அது தோல்வியுற்ற காரணத்தையும் நினைத்துச் சுவைக்கும் வயது இப்போது எனக்கு! அதனால் அந்தக் காதல் படிக்கட்டுகளில் என் நினைவுக் கால்களால் சற்று நடந்து திரும்புகிறேன். ஆம்; அன்று எழுதாததை அல்லது எழுத விட்டுப் போனதை, இன்று எழுதுகிறேன். எழுதக்கூச்சப் படும் இளமைப்பருவம் பறந்துவிட்டதால் இந்த முதுமைக்கு ஏற்பட்ட துணிச்சல். வெட்கம் மறந்து விட்ட நிலையில் எழுதிடத் தூண்டுகிறது என்னை; அதனால் எழுதுகிறேன்.

கொடி ஊர்வலங்கள், கூட்டங்களில் முழக்கங்கள், கொள்கை பரப்பிட நாடகங்கள் என்று கோடை வெப்பத்தில் தகித்துக் கொண்டிருந்த நான், இடையிடையே திருவாரூர் உயர்நிலைப் பள்ளியின் வகுப்பறைகளுக்கும் சென்று திரும்பிக் கொண்டி ருந்த பள்ளிப்பருவ காலமது. அப்போதுதான் அவளிடம் நானும், என்னிடம் அவளும் மனத்தை பறி கொடுத்த நிகழ்ச்சி நடந்தது. அவள் பெயர்... அவள் பெயர்... உண்மைப் பெயரைச் சொல்ல வேண்டாம்... ஏனென்றால் அவள் இன்னும் உயிரோடு இருக்கிறாள். குறிப்பாக, சாந்தா என்று ஓர் அடையாளப் பெயர் வைத்துக் கொள்வோமே! சாந்தா என்பதில் ஓர் எழுத்து மாறினால் அவள் உண்மைப் பெயர். கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் என்று பரிசுப் போட்டி வைக்க விரும்பவில்லை. அந்த சாந்தா என்னுடன் அதே பள்ளியில் தான் படித்துக் கொண்டிருந்தாள். ஒரு வகையில் தூரத்து உறவும்கூட! நல்ல உறவில்தானே பொல்லாத பகையும் முளைத்துத் தொலைக்கும். எங்கள் இரு வீட்டாருக்கும் பேச்சுவார்த்தைகள் கூட இல்லாத அளவுக்கு செமப்பகை! அந்தப் பகை நடுவே, எங்களுக்குள் பனிப்புகை நடுவே புகுந்த கதிர்போல காதல் தோன்றிவிட்டது. அவள் பள்ளிக்குப் புறப்படும் நேரம் பார்த்து நானும் புறப்படுவேன். ஆரூரின் அகன்ற சாலைகளில் அவள் ஒரு பக்கம் போவாள். நான் இன்னொரு பக்கமாகத் தொடர்ந்து நடப்பேன். அவள் திரும்பிப் பார்க்கிறாளா என்று நான் அவள் பின்னால் நடப்பதும் உண்டு. நான் திரும்பிப் பார்ப்பதை அவள் கடைக்கண்ணால் கண்டிட அவள் என் பின்னால் நடப்பதும் உண்டு.

மாலையில் பள்ளி முடிந்ததும் அவள், தட்டச்சு கற்றுக் கொள்ள கமலாலயக் குளக்கரையில் இருந்த ஒரு ‘டைப் ரைட்டிங்’ நிலையத்துக்குச் செல்வாள். நானும் தட்டச்சு கற்றுக் கொள்வதில் ஆர்வம் கொண்டிருப்பதாக என் வீட்டில் பொய்யுரைத்து மாதம் இரண்டு ரூபாய் சம்பளத்தை அந்த நிலையத்தில் வீணாக்கிக் கொண்டிருந்தேன். அவள் தட்டச்சு பயிற்சி முடித்துப் புறப்பட்டவுடன் நானும் புறப்பட்டு விடுவேன். என் தட்டச்சுப் பயிற்சியில் ஆங்கில எழுத்துக்களான ‘எல்-ஓ-வி-இ’ என்பதைத் தவிர வேறு எதையும் நான் கற்றுக் கொள்ளவில்லை. அந்த எழுத்துக்களை மட்டுமே தட்டச்சுப் பொறிக்குப் பதிலாக என் இதயத்தில் அடித்துப் பழகி, பதிய வைத்துக் கொண்டு சில நாட்கள் பைத்தியமாகத் திரிந்தேன்.

‘கண்ணொடு கண் நோக்கும் காதல்’ பிறகு கடிதக்காதலாக மாறியது. திருவாரூரில் நான் தங்கிப் படித்துக் கொண்டிருந்த வீட்டில் ஒரு சிறுவனும் சிறுமியும் என் அன்புக்குப் பாத்திரமானவர்கள். காலை எழுந்தவுடன் அவர்களுக்குப் படிப்பு சொல்லிக் கொடுப்பேன். சரியாகப் படிக்கச் சொல்லி அவர்களைக் கண்டிப்பதும் உண்டு. அந்தச் சிறுவனை மட்டும் காதைத் திருகித் தண்டிப்பதும் உண்டு. நான் தங்கிப் படித்த அந்த வீட்டுக்கு அருகில் அதே தெருவில்தான் என் சாந்தாவின் வீடும் இருந்தது. அவள் வீட்டுக் கொல்லைப்புறமும் என் பள்ளி நண்பன் ஒருவன் வீட்டுத் தெருவாசல் பகுதிகளும் எங்கள் விழிக்கணைகள் பாயும் காதல் களங்களாக இருந்தன. சில நாட்களில் என்னிடம் பாடம் பயின்று கொண்டிருந்த அந்தச் சிறுமி எங்களுக்கிடையே ‘தூதி’ ஆகி விட்டாள். ஒரு நாள் சந்தித்தே தீருவது என்று எங்கள் கடிதங்கள் உறுதிமுழக்கமிட்டன. அதன்படி அந்தி மாலை நேரத்தில் அவள் அம்மன் கோயிலுக்குப்போய் அர்ச்சனை செய்துவிட்டு, தட்டுடன் திரும்பும்போது அந்தக் குறுகலான சந்தில் உள்ள ‘வீரனார் கோயில்’ முன்பு, அரைகுறை இருட்டில் அருகருகே சந்தித்துவிட்டோம். அந்த ‘வீரனார்’ அறிய மறக்கமாட்டேன் என்று கையடித்துச் சத்தியம் செய்தாள். மனசாட்சி அறையக் கைவிடமாட்டேன் என்று நானும் உறுதி அளித்தேன். உடனே பிரிந்து விட்டோம்; அச்சம் எங்களை ஓங்கி ஓங்கி உதைத்ததால்!

சாந்தாவுக்கு மாப்பிள்ளை தேட அவசரத் திட்டம் வகுக்கப் பெற்றது. அவளோ கடைசிவரை போராடி இருக்கிறாள் எனக்காக. அதற்குள் அந்த வீட்டில் நடக்கும் அமளி என் வீட்டுக்கதவுகளைத் தட்டிவிட்டது. என்னிடம் கேட்டார்கள். ஆமாம் என்றேன். பகையை மறந்து சாந்தாவையே எனக்குப் பெண்கேட்க என் தந்தையும் தாயும் முதற்கட்டமாக என் உறவினர்களை அனுப்பினார்கள். அதற்குக் கிடைத்த பதில் என்ன?

‘‘அவன் கட்சி கட்சி என்று உருப்படாமல் அலைந்து கொண்டிருக்கிறான். அவனுக்கா பெண் கொடுக்க முடியும்? அப்படியே கொடுப்பதாக இருந்தாலும், அவன் சுயமரியாதைக் கல்யாணமல்லவா செய்து கொள்ள வேண்டுமென்பான். சரி, பெண் கொடுக்கிறோம். புரோகிதத் திருமணம் செய்து கொள்ளச் சம்மதிப்பானா?’’

பதில், பயங்கரமான கேள்விகளாக வெடித்தெழுந்தன. அந்தக் கேள்விகள் வடிவத்து நிபந்தனைகளை என்னால் ஏற்றுக்கொள்ள முடியுமா? எத்தனை எத்தனை சுயமரியாதைத் திருமணங்களை நான் முன்னின்றும் நானே சென்று வாழ்த்தியும் நடத்தி வைத்திருக்கிறேன். புரோகிதத் திருமணமென்றால் முடியாது என்று மறுத்தேன். அதற்கிடையே அவள் கடிதம் வந்தது கண்ணீரால் எழுதப்பட்டு! ‘‘காதலா? கொள்கையா?’’ இதுதான் அந்தக் கடிதத்தின் கருப்பொருள்.

‘‘ஊருக்குத்தான் உபதேசம்.

உனக்கும் எனக்கும்

இல்லையடியென்று கூறுவது

எத்தனின் செயல் அல்லவா?’’

என்ற கருத்தமைந்த பதிலை கண்டிப்பான பதிலை அவளுக்கு எழுதினேன். அவள் தனது பிடிவாதத்தினால் பெற்றோரை இணங்க வைப்பாள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அவளே இணங்கி விட்டாள் - அவர்கள் பார்த்த மாப்பிள்ளைக்குக் கழுத்தை நீட்ட!

ஏன். அவள்தான் அந்தக் கொள்கையை விட்டுக் கொடுத்திருக்கக் கூடாதா? இல்லை, நான்தான் என் கொள்கையை விட்டுக் கொடுத்திருக்கக்கூடாதா? அவளுக்குத்தான் ‘வீரனார்’ கோயில் சத்தியம் என்ன ஆயிற்று? எனக்குத்தான் நான் மனசாட்சிப்படி வழங்கிய உறுதி எங்கே யோயிற்று? எப்படியோ இங்கே காதல் ஒரு பின்னடைவை எதிர்கொள்ள நேரிட்டு விட்டது.

அதன் பின்னர் சில நாட்களில் ஒரு திகில் செய்தி& என்னை அதிர்ச்சியில் ஆழ்த்திய செய்தி. எனை விடுத்து வேறொருவனை மணந்த சாந்தா விதவையாகி விட்டாள்! அவள் வீட்டுக்கும் என் வீட்டுக்கும் தொடர்ந்து இருந்துவந்த பகை, அவளுக்கு ஏற்பட்ட அந்தச் சோகத்திற்குப் பிறகு மெல்ல மெல்ல அகன்று & இருவீட்டார் உறவிலும் ஒரு மறுமலர்ச்சி தோன்றியது. அந்த நேரத்தில் என் வேண்டுகோள் ஏற்கப்பட்டு, சாந்தாவின் மறுமணத்திற்கு அவளது வீட்டார் சம்மதம் தெரிவித்தார்கள். அவளுக்கு மறுவாழ்வு அளிக்க வந்தவனுக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவித்தேன். அவனையும் வாழ்த்தினேன். அன்று என் விருப்பப்படி சீர்திருத்தத் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளாமல் எங்களைப் பிரித்த அவளது பெற்றோர், சீர்திருத்தத்திலும் தீவிர சீர்திருத்தமான விதவைத் திருமணத்திற்கே ஒப்புதல் அளித்தார்கள் என்பது ஒரு விந்தையே!

அவள் இப்போது எங்கேயோ இருக்கிறாள் - எப்போதோ பார்த்த ஞாபகம் - எழுபதை நெருங்கிக் கொண்டிருக்கும் வயதுடையாள். ஆனாலும், இளமையில் நான் ரசித்த அந்தக் குண்டு குண்டான கெண்டை விழிகள் இன்றும் என் நினைவை விட்டு அகலுவதில்லை. அந்தக் கண்கள் மீது நான் கொண்ட காதல் அப்படியே மாறாமல் இருக்க வேண்டும் என்பதற்காக; இப்போது நான் அவளைப் பார்க்க விரும்பவில்லை.

(நன்றி : கலைஞரின் காதல் படிக்கட்டுகள், ஜூனியர் விகடன், 15-01-1997 இதழ்)

13 மே, 2013

'பாம்பே டாக்கீஸ்' : வயசு நூறு!


மே 3, 1913. பாம்பேவின் காரனேஷன் சினிமாட்டோகிராப் அரங்கில் ‘ராஜா ஹரிச்சந்திரா’ திரையிடப்படுகிறது. தாதாசாகேப் பால்கே தயாரித்து இயக்கியிருந்தார். மராத்தி படம் என்று விளம்பரப்படுத்தப்பட்டாலும், மவுனப்படத்துக்கு மொழி ஏது. பொய்யே அறியாத அரிச்சந்திரனின் கதை இந்தியர்கள் யாவருக்கும் மனப்பாடம் என்பதால் திரையில் நகர்ந்த காட்சிகளோடு ஒன்றிப் போனார்கள். படம் முடிந்ததும் அழுகை, ஆனந்தம் என்று வரையறையில்லாத உணர்வுகளோடு திரும்பினார்கள். ஒரே ஒரு பிரிண்டு போடப்பட்டு திரையிடப்பட்ட ‘ஹரிச்சந்திரா’ வெறும் சினிமா அல்ல. இந்திய சினிமா வரலாற்றின் தொடக்கம்.

1895ல் லூமியர் சகோதரர்களால் ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப்பட்ட சினிமா அடுத்த ஆண்டே இந்தியாவுக்கும் வந்துவிட்டது. தொடர்ந்து ஹீராலால் சென் இயக்கிய குறும்படமான ‘பாரசீக மலர்’ 1898ல் வெளியானது. தாதாசாகேப் டார்னேவின் ‘ஸ்ரீ புண்டாலிக்’ மே 18, 1912லேயே அதே பாம்பே காரனேஷன் சினிமாட்டோகிராப் அரங்கில் திரையிடப்பட்டது. ஆனால் இந்தியாவின் முதல் சினிமா என்கிற கவுரவம் அதற்கு மறுக்கப்பட்டது. ஏனெனில் பிரபலமான ஒரு மராத்திய நாடகத்தை கேமிராவில் பதிவு செய்து, அப்படியே திரையிட்டிருந்தார்கள். எனவேதான் சினிமாவுக்கென்றே திட்டமிடப்பட்டு, படமாக்கப்பட்ட ‘ஹரிச்சந்திரா’, இந்தியாவின் முதல் சினிமா என்கிற பெருமையை பெறுகிறது. சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், பெண்கள் யாரும் அப்போது சினிமாவில் நடிக்கத் தயாராக இல்லை. எனவே ஹரிச்சந்திராவின் மனைவியாக கூட ஒரு ஆணே, பெண் வேடம் போட்டு நடிக்க வேண்டியிருந்தது.
                                                   raja
ஆரம்பத்தில் சினிமாவை ஒரு பொருட்டாக மேல்தட்டு வர்க்கம் நினைக்கவில்லை. நாடகம்தான் கலை. சினிமா வெறும் பொழுதுபோக்கு என்று நிராகரித்தார்கள். பணம் செலவழித்து நாடகம் பார்க்க முடியாத, அந்த கலைவடிவை முழுமையாக உள்வாங்கிக் கொள்ள முடியாத பாட்டாளி வர்க்கம்தான் சினிமாவின் எளிமையிலும், கவர்ச்சியிலும் மயங்கிப்போய் அதற்கு கை கொடுத்தது.

ஆனால் காலச்சக்கரத்தின் சுழற்சி சினிமாவுக்கு ஆதரவாகவே அமைந்தது. சினிமா பேச ஆரம்பித்த பிறகு நாடகங்களுக்கு மவுசு குறைந்தது. சினிமா வெறும் கலையாக மட்டும் வளராமல் மக்களிடையே பிரச்சாரம் செய்யக்கூடிய ஊடகமாகவும் வளர்ந்துவிட்டதால், ஆரம்பத்தில் அதை புறக்கணித்தவர்களும் கட்சிமாறி வந்து சினிமாவை ஆக்கிரமிக்கத் தொடங்கினார்கள். குறிப்பாக 1940ல் தொடங்கி 1960 வரை இந்தியாவில் கோலோச்சிய நெம்பர் ஒன் துறையாக சினிமா பரிணமித்தது. இன்று இந்திய சினிமாவில் ஹிந்தி, மராத்தி, பெங்காலி, போஜ்புரி, அஸ்ஸாமி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், கொங்கணி, ஒரியா, சிந்தி, பஞ்சாபி, துளு, படுகா, நேபாளி என்று எண்ணற்ற மொழிகளில் வருடத்துக்கு ஆயிரக்கணக்கான திரைப்படங்கள் வெளிவருகின்றன. உலகளவில் சினிமாவை தங்கள் வாழ்வின் அங்கமாக கொண்டாடும் சமூகத்தை வேறெங்கும் காணமுடியாது.

alamara
இப்படிப்பட்ட இந்திய சினிமாவுக்கு கடந்துப்போன மே 3 அன்றுதான் நூற்றாண்டு நிறைவு. சினிமாவின் நூற்றாண்டை எப்படிக் கொண்டாடுவது. கொண்டாட்டம் என்றாலே, நமக்கு திருவிழாதான். சினிமாக்காரனுக்கு சினிமா எடுப்பதுதானே திருவிழா. எனவே இந்திய சினிமா நூற்றாண்டை கவுரவிக்கும் முகமாக ‘பாம்பே டாக்கீஸ்’ திரைப்படம் வெளியானது.


நம்மூர் சினிமா மீது அயல்நாட்டு விமர்சகர்கள் சில கடுமையான விமர்சனங்களை முன்வைக்கிறார்கள். டவுன்லோடு சிந்தனை கொண்ட நம்மூர் விமர்சகர்களும், அறிவுஜீவிகளும் அவற்றின் மீது எவ்வித ஆராய்ச்சியோ, அலசலோ செய்யாமல் அதே விமர்சனங்களை தாங்கள் கண்டுபிடித்தது மாதிரி அப்படியே வழிமொழிகிறார்கள்.

அவற்றில் சில முக்கியமான விமர்சனங்கள் :

காலாவதி ஆகிப்போன ஆதிகால புராணங்களையே, இந்தியர்கள் இன்னமும் வேறு வேறு வடிவங்களில் சினிமா ஆக்கிக்கொண்டு இருக்கிறார்கள். புதிய சமகால கதைகளை உருவாக்கும் திறன் இந்திய படைப்பாளிகளுக்கு இல்லை.

இந்திய சினிமாவில் பெண்களுக்கு தரப்படும் இடம் மோசமானது. காட்டு மிராண்டித்தனமானது. மார்புகளை குலுக்கி, தொடைகளை ஆட்டி, தொப்புளைக் காட்டும் கவர்ச்சிப் பதுமைகளாக மட்டுமே, இந்திய சினிமாக்களில் பெண்கள் இடம் பெறுகிறார்கள்.

இவர்களுக்கு சினிமாவின் வடிவமே தெரியாது. காட்சிகளால் சொல்ல வேண்டியவற்றை வசனங்களில் பக்கம் பக்கமாக ஒப்பிக்கிறார்கள். சினிமா என்பது காட்சி வடிவம் என்பதே, இந்திய சினிமா இயக்குனர்களுக்கு தெரியாது.

ஒரு ஹீரோ. ஒரு ஹீரோயின். ஒரு வில்லன். அம்மா. தங்கை. அப்பா. நாலு சண்டை. ஆறு பாட்டு. இவ்வளவுதான் இந்திய சினிமா. அரைத்த மாவையே நூறு ஆண்டுகளாக திருப்பித் திருப்பி அரைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்களே நட்சத்திரங்களை உருவாக்கி அவர்களுக்கு கோயில் கட்டி தீபாரதனை காட்டுகிறார்கள். சினிமாவுக்காக கதை என்பது போய், நட்சத்திரங்களுக்காக கதை விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தப் பட்டியலை நீட்டித்துக்கொண்டே போகலாம். குறைந்தபட்சம் நூறு பாயிண்டுகளாகவது தேறும். நூறு ஆண்டு சினிமா அல்லவா.

bombaytalkies8
நூற்றாண்டை கொண்டாடுவதோடு இல்லாமல், இந்த விமர்சனங்களுக்கும் பதில் தரவேண்டுமென்ற வெறி பாம்பே டாக்கீஸாருக்கு இருக்கிறது. எனவேதான் எதுவெல்லாம் இந்திய சினிமா என்று பொதுப்புத்தியில் பதிந்துப் போயிருக்கிறதோ, அதுவெல்லாம் இல்லாமல் ‘பாம்பே டாக்கீஸ்’ எடுத்திருக்கிறார்கள். இந்திய சினிமாவின் தற்காலப் போக்கினை தீர்மானிக்கக்குடிய நடிகர்களும், கலைஞர்களும் பங்களித்திருக்கிறார்கள்.


முக்கியமாக ‘பாம்பே டாக்கீஸ்’ வழக்கமான வடிவிலான ஒரே முழுநீளக்கதை அல்ல. நான்கு இயக்குனர்கள் தனித்தனியாக எடுத்துள்ள நான்கு சிறுகதைகள். கரண் ஜோஹர், திபாகர் பானர்ஜி, ஸோயா அக்தர், அனுராக் காஷ்யப் என்று இந்தியாவின் டாப் இயக்குனர்கள் தலா அரைமணி நேர குறும்படமாக எடுத்த நாலு படங்கள்தான் ஒட்டுமொத்தமாக ‘பாம்பே டாக்கீஸ்’

bombaytalkies6
கரண் ஜோஹரின் படம் ஓரினச்சேர்க்கை உறவை பற்றி எந்த நெருடலும் இல்லாமல் இயல்பாகப் பேசுகிறது. கோவலன் கண்ணகி கதைதான். மாதவியோடு குஜால் செய்த கோவலனை கண்ணகி ஏற்றுக் கொண்டாளா, இல்லையா? இந்தப் படத்தில் கோவலன் இன்னொரு ஆணோடு, கொஞ்சம் ‘லவ்’ ஆகிவிடுகிறான். உடனடியாக அருவருப்பாக உணர்ந்தாலும், உலகப் போக்கை உணர்ந்த நாயகி, “இதெல்லாம் இந்தக் காலத்தில் சகஜம்தான்” என்று இயல்பாகிறாள். ஓரினச் சேர்க்கையாளர்களை சைக்கோக்கள் மாதிரியும், காமவெறி மிருகங்களாகவும் இதுவரை சித்தரித்த இந்திய சினிமா, இந்த அரைமணி நேர குறும்படத்தில் அவர்களும் இயல்பானவர்களே. சொல்லப்போனால் வாழ்க்கையை ரசித்து வாழ்பவர்கள் என்கிற பிம்பத்தை அழுத்தமாக பதிவு செய்கிறது. இரண்டு ஆண்களுக்கு இடையே அமர்க்களமான, அழுத்தமான லிப்-டூ-லிப் முத்தக்காட்சியும் உண்டு.


திபாகர் பானர்ஜியின் படம் தோல்வியடைந்த ஒரு நடிகனின் ஒரு நாள் வாழ்வை சித்தரிக்கிறது. அவனது குழந்தைக்கு தினமும் ஒரு கதை சொல்ல வேண்டும். முந்தைய நாள் சொல்வதற்கு அவனிடம் கதை எதுவுமில்லை. அன்று அவனுக்கு ஒரு சினிமாவில் ஒரே ஒரு காட்சியில் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது. வசனமற்ற பாத்திரம். ஓரிரு நொடி ஃப்ரேமில் வந்துப்போகும் பாத்திரம். ஆனாலும் சினிமாவில் நடித்துவிட்டான். அன்று இரவு அவன் குழந்தையிடம் சொல்ல கதை கிடைத்துவிட்டது. தான் சினிமாவில் நடித்த கதையை திரைக்கதை வசனத்தோடு மிகைப்படுத்தி சிறப்பாக சொல்லி அசத்துகிறான். திரையில் பாத்திரங்கள் பேசும் வசனங்களில், ஒரு கதை நேரடியாக சொல்லப்படுகிறது. பின்னணிக் காட்சிகளில் நிறைய ஹைக்கூ கதைகள் மறைமுகமாக சொல்லப்படுகின்றன. பார்வையாளனே தனக்கேற்றாற் வகையில் அக்கதைகளை உருவாக்கிக்கொள்ளலாம் என்பது இப்படத்தின் சிறப்பம்சம்.

bombaytalkies4
ஸோயா அக்தரின் படம் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த சிறுவனின் ஆசையை காட்சிப்படுத்துகிறது. மகன் என்னவோ ஆகி, நிறைய சம்பாதிக்க வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு நடுத்தர வர்க்கத்து அப்பாவின் கனவும். குழந்தைக்கு என்று ஆசையோ, கனவோ இருக்கக்கூடுமென்பது கூட, அவர்களுக்குத் தெரியாது. இந்திய நடுத்தர வர்க்கத்தை மறைமுகமாக கேலி செய்வதோடு, சுடும் யதார்த்தத்தை, சூப் போட்டு கொடுக்கிறார்கள். பையனுக்கு நடனக்கலையில்தான் ஆசை. அப்பாவோ அவனை வலுக்கட்டாயமாக விளையாட்டுகளில் ஈடுபடுத்தி, உடல் வலிமை இருந்தால்தான் பைலட் ஆக முடியும் என்கிறார். தன்னுடைய கனவை ரகசியமாக பையன் எப்படி தற்காலிகமாக நனவாக்கிக் கொள்கிறான் என்பதோடு படம் முடிகிறது.


bombaytalkies3
அனுராக் காஷ்யப் இயக்கிய படம் தான், இந்திய சினிமா நூற்றாண்டுக்கு நிஜமான ட்ரிப்யூட். நம் சினிமாவின் ஸ்டார் வேல்யூ என்னவென்பதை மிகைப்படுத்தாமல், யதார்த்தமாக காட்சிப்படுத்துகிறார். வாரணாசியில் வசிக்கும் பெருசு ஒருவருக்கு ஓர் ஆசை. குலாப் ஜாமூன் மாதிரி ஒரு ஸ்வீட்டை ஜாடியில் அடைத்து வைத்திருக்கிறார். இதில் பாதியை அமிதாப் பச்சன் கடிக்க வேண்டும். மீதியை தான் சாப்பிட வேண்டும் என்கிற உயரிய 2020 இந்திய வல்லரசுக் கனவு. இப்பவோ, அப்பவோ என்றிருக்கும் அப்பாவின் இந்த ஆசையை நிறைவேற்றினால், இன்னும் சில ஆண்டுகள் கூடுதலாக வாழ்வார் என்று மகனுக்கு நம்பிக்கை. குலாப் ஜாமூன் ஜாடியோடு, மும்பைக்கு ரயில் ஏறுகிறான். அமிதாப்பை பார்த்தானா. குலாப் ஜாமூனை கடித்தாரா என்பதை லேசான நகைச்சுவை மற்றும் அழுத்தமான உணர்வுகளாக காட்சிப்படுத்துகிறார் காஷ்யப்.


தனித்தனி இயக்குனர்கள், தனித்தனி நடிகர்கள், தனித்தனி தொழில்நுட்பக் கலைஞர்கள் தனித் தனியாக நான்கு படங்களை இயக்கியிருந்தாலும், ஒட்டுமொத்தமாகப் பார்க்கப்போனால், தொழில்நுட்பத் தரத்தில், ஒரே மாதிரியாக, சர்வதேசத் தரத்தோடே படங்கள் அமைந்திருக்கிறது. நான்குக்கும் இசையமைப்பாளர் மட்டும் பொதுவானவர். அமித் திரிவேதி. மேலை நாட்டு இசையும், சாஸ்திரிய சங்கீதமாக சரிபாதியாக பங்குபோட்டு, தமிழ் திரையிசையில் கோலோச்சிய காலத்தில், நம்மூர் தெம்மாங்கையும், தாலாட்டையும், ஒப்பாரியையும் திரையிசை வடிவத்துக்கு கொண்டு வந்து, ஒப்பற்ற சாதனை செய்தவர் இசைஞானி இளையராஜா. கிட்டத்தட்ட அதே மாதிரி சாதனையை அமித் திரிவேதி இந்தியில் செய்துக் கொண்டிருக்கிறார். வடஇந்திய நாட்டுப்புற இசைக்கலைக்கு திரையில் உயிரூட்டிக் கொண்டிருக்கிறார்.
                                               bombaytalkies2
உள்ளடக்கம், தொழில்நுட்பத் தரத்தில் உலகின் எந்தவொரு சினிமாத்துறைக்கும், எங்களால் சவால் விட முடியுமென்று ‘பாம்பே டாக்கீஸ்’ மூலமாக இந்திய சினிமா அறைகூவல் விட்டிருக்கிறது.

ஆனால் நாங்கள் ஏன் அச்சுபிச்சுவென்று படமெடுக்கிறோம் என்கிற கேள்விக்கும் படத்துக்கு ‘எண்ட்’ கார்ட் போட்டுவிட்டு போனஸாக விடையளிக்கிறார்கள். இந்திய சினிமா நூற்றாண்டை கொண்டாட ஒரு ரசிகனுக்கு அழைப்பு வருகிறது. பாம்பே டாக்கீஸ் என்கிற அரங்குக்கு போகிறான். ஆயிரம் இருக்கைகள் இருக்கும் அரங்கில் அவன் மட்டும் படம் பார்க்கிறான். இந்திய சினிமாவின் மைல் கற்களாக அமைந்த படங்களின் காட்சிகள் ஒரே பாடலில் மாண்டேஜ் காட்சிகளாக ஒளிபரப்பாகிறது. மேலும் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரில் தொடங்கி, நண்டு சிண்டு நட்சத்திரங்கள் வரை அவன் ஒருவனுக்காகவே, ஒட்டுமொத்தமாக விண்ணிலிருந்து மண்ணிறங்கி நடனம் ஆடுகிறார்கள். இந்த பாடலுக்கு வட இந்திய அரங்குகளில் எழுந்து நின்று தலைக்கு மேல் கையை தூக்கி தட்டுகிறார்கள் ரசிகர்கள். விசில் சத்தம் விண்ணைப் பிளக்கிறது. தங்கள் அபிமான நட்சத்திரம் தோன்றும்போது, ஒவ்வொரு ரசிகனும் கண்களில் நீர்க்கசிய ஓவென்று கத்துகிறான். “இதுதான் இந்திய சினிமா”வென்று கண்ணடிக்கிறார்கள் பாம்பே டாக்கீஸார்.

             end
 (நன்றி : cinemobita.com)

9 மே, 2013

காயத்ரி

டைக்கண் பார்வை மட்டுமே காயத்ரி தினமும் எனக்கு தரும் பரிசு. ‘சாரதா இன்ஸ்டிட்யூட் ஆஃப் காமர்ஸில்இருவரும் டைப்பிங் பழகிக் கொண்டிருந்தோம் (இப்போதெல்லாம் டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட் எங்காவது இருக்கிறதா?). அவளை அசத்த வேண்டும் என்பதற்காகவே காட்டுத்தனமாக கைவலிக்க அசுரவேகத்தில் டைப் அடிப்பேன். அடிக்கடி கீ, ரிப்பனில் சிக்கிக்கொள்ளும். படபடவென்று வேகமாக எழும் சப்தத்தில் இன்ஸ்டிட்யூட்டே திரும்பிப் பார்க்கும். அவளும் பார்ப்பாள்.

கொஞ்சம் குண்டாக ஆனால் க்யூட்டாக இருப்பாள். நானோ அப்போது ஒரு முப்பத்தி ரெண்டு கிலோ இருந்திருப்பேன். அவளுக்கு தம்பி மாதிரி தோற்றம்தான். காதலுக்குதான் கண்ணில்லையே. தனுஷ் என்பவர் ஹீரோவாகி சோனியா அகர்வால், நயன்தாரா போன்ற சூப்பர் ஃபிகர்களோடும் சாயாசிங் போன்ற சுமார் ஃபிகர்களோடும் ஜோடியாக நடித்தபிறகுதான், என்னைப்போன்ற கொத்தவரங்காய்களுக்கு காதல் ஒன்றும் எட்டாக்கனி அல்ல என்கிற தன்னம்பிக்கையே ஏற்பட்டது. க்ளாஸ் முடிந்து கிளம்பும்போது சைக்கிளில் கொஞ்சம் நெருக்கமாகவே ஃபாலோவுவேன். அடிக்கடி ஓரக்கண்ணால் பார்த்து, லேசாக சிரிப்பாள். போதாதா? அப்போதெல்லாம் காலை ஒன்பது மணிக்கே மடிப்பாக்கம் ஜிலோவென்று இருக்கும். கட்டழகுக் கன்னி தனியாகப் போகிறாளே என்கிற பதைபதைப்பில் பாடிகார்டானேன். ஏதேனும் அசம்பாவிதம் நடந்திருந்தாலும் எதிர்கொள்ளக்கூடிய பாடி கண்டிஷன் இல்லையென்றாலும், ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கை. கிட்டத்தட்ட ஓராண்டு இப்படியேதான் முரளி டைப் லவ்வு.

சண்டே டெஸ்ட்டின் போது ஒவ்வொரு முறையும் ஸ்பீட் மற்றும் நில் மிஸ்டேக்கில் பேட்ச் பர்ஸ்ட் வருவது நான்தான். காயத்ரி எவ்வளவோ முயற்சித்தும் ஐந்து ஸ்பெல்லிங் மிஸ்டேக்காவது செய்துவிடுவாள். இன்ஸ்ட்ரக்டரிடம் என் காதுபடவே சொல்வாள். “கிருஷ்ணாவை ஒருவாட்டியாவது ஜெயிச்சிடுவேன்”

என்னுடைய அண்ணன்தான் அப்போது இன்ஸ்டிட்யூட்டில் எனக்கு இன்ஸ்ட்ரக்டர். காயத்ரிக்கும்தான். என்னுடைய வளர்சிதை மாற்றங்களை உணர்ந்துக் கொண்டவர், ஒரு நாள் நேரடியாக கேட்டுவிட்டார்.

“காயத்ரியை லவ் பண்ணுறியாடா?”

“இல்லை” என்று சொன்னால், அவர் ரோஜாப்பூவோடு கிளம்பிவிடுவாரோ என்கிற அச்சத்தில் “ஆமாம்” என்று சொல்லிவிட்டேன்.

“சித்தப்பா கிட்டே சொல்ல மாட்டேன். ஆனா பாரு. அந்தப் பொண்ணு +2 முடிச்சிட்டு பி.எஸ்.சி., படிக்கப் போவுதாம். டிகிரிக்கு அப்புறமா அமெரிக்காவெல்லாம் போயி படிக்கப் போவுதாம். உன்னோட கண்டிஷன் என்னான்னு யோசி...”


படிக்கிற பொண்ணுங்க, படிக்காத தேவாங்குங்க என்று சமூகம் இரண்டு வர்க்கங்களாக பிளவுப்பட்டிருந்த யதார்த்தம் நெஞ்சை சுட்டது. “உன்னோட இப்போதைய கண்டிஷன் என்னா?” என்கிற அண்ணனின் கேள்வி, பாரதிராஜாவின் படத்தில் வருவதைப் போல இரண்டு கன்னங்களிலும் மாறி மாறி அறைந்தது. ஏனெனில் +1ல் அரையாண்டுத் தேர்வு மேத்ஸ் பேப்பரில் 200க்கு 1 மார்க் எடுத்து, காஞ்சிபுர மாவட்ட அளவில் சாதனை புரிந்திருந்தேன். 0 போடுவது செண்டிமெண்டலாக தனக்குப் பிடிக்காது என்பதாலேயே 1 போட்டிருக்கிறேன் என்று தன்னுடைய பெருந்தன்மையை இருபத்தியெட்டு பேர் மத்தியில் பறைசாற்றியிருந்தார் மேத்ஸ் மாஸ்டர். நாம்தான் காதல்வசப்பட்டு விட்டோமே. ஃபிகரை கணக்கு பண்ணுவோமா. இல்லை ஸ்கூலில் கணக்கு போடுவோமா?

எனவே, பி.எஸ்.சி. படிக்கப் போகும் பெண்ணை கரெக்ட் செய்ய வேண்டுமானால், நான் அட்லீஸ்ட் பி.காம் பாஸ் செய்ய வேண்டும். அதற்கு முன்பாக +2 பாஸ் செய்தால்தான் காலேஜில் சீட்டு என்று முட்டாள்தனமான சம்பிரதாயம் இந்தியாவில் இருக்கிறது.

+2 பொதுத்தேர்வுக்கு முன்பாகவே அக்டோபரிலோ, செப்டம்பரிலோ டைப்ரைட்டிங் ஜூனியர் க்ரேட் தேர்வு நடந்தது. பல்லாவரம் ஸ்கூலில்தான் சென்டர். எங்கள் இன்ஸ்டிட்யூட் கேர்ள்ஸ் பர்ஸ்ட் பேட்ச். பாய்ஸ் செகண்ட் பேட்ச். தேர்வு முடிந்து வந்த காயத்ரி வாழ்க்கையில் முதன்முறையாக என்னிடம் வாய்திறந்துப் பேசினாள். “ஆல் த பெஸ்ட் கிருஷ்ணா”. கையை வேறு கொடுத்து ஷேக் ஹேண்ட் செய்தாள். மெத்துமெத்துவென்றிருந்தது அவளது விரல்கள். முதன்முறையாக ஒரு தேவதையோடு கைகுலுக்குகிறேன். ப்ரீஸரில் வைத்தது மாதிரி ஜில்லிட்டுப் போய்விட்டேன். கேஸ் பலூன் மாதிரி ஆகிவிட்டது உடம்பு. அடுத்த பத்து நிமிடத்தில் தேர்வு. எங்கிருந்து டைப்புவது. விரல்கள் நகரவேயில்லை. தட்டுத் தடுமாறி அடித்து முடித்தபோது, அசரீரியாக காயத்ரியின் குரல் கேட்டது. “கிருஷ்ணாவை ஒருவாட்டியாவது ஜெயிச்சிடுவேன்”

ரிசல்ட் வந்தபோது அதுதான் நடந்தது. காயத்ரி பர்ஸ்ட் க்ளாஸில் பாஸ் செய்திருந்தாள். வீக்லி டெஸ்ட்டுகளில் கூட தோல்வியே காணாத கிருஷ்ணா செகண்ட் க்ளாஸ். அதே இன்ஸ்ட்டிட்யூட்டில் சீனியர் க்ரேடுக்கு பழகத் தொடங்கினேன். படிப்பு பாழாகிவிடக் கூடாது என்று காயத்ரி நின்றுவிட்டாள். அடி மேல் அடியாக அடுத்து ப்ளஸ் டூவிலும் நமக்கு மேத்ஸ் ஊத்திக் கொண்டது. காயத்ரி எப்படியும் நல்ல மார்க்கில் பாஸ் செய்திருப்பாள். பி.எஸ்.சி சேர்ந்திருப்பாள். அமெரிக்காவுக்கோ, பிரிட்டனுக்கோ போயிருப்பாள். பி.எச்.டி. வாங்கியிருப்பாள். கல்யாணம் ஆகியிருக்கும். குழந்தை பிறந்திருக்கும். ஒருவேளை பையனுக்கு கிருஷ்ணா என்று பெயர் வைத்திருந்தாலும் வைத்திருக்கலாம்.


அதையெல்லாம் விடுங்க. ரிசல்ட் நேரத்தில் “பொண்ணுங்க. எப்படியெல்லாம் படிக்கிறாங்க. பசங்க வேஸ்ட்டு” என்று தமிழகத்தில் மாமாங்கம், மாமாங்கமாக மாமாக்கள் சொல்லி வருகிறார்கள். பசங்க ஏன் ஊத்திக்கிறாங்கன்னு பசங்களுக்குதானே தெரியும். தமிழக வரலாற்றில் ஆணினத்துக்கு நிரந்தரமாக படிந்துவிட்ட இந்த +2 கறையை, இம்முறை முற்றிலுமாக துடைத்தெறிந்திருக்கிறார்கள் நம் தம்பிகள். காயத்ரிகளை பழிவாங்கிவிட்ட மனநிறைவு ஏற்படுகிறது. இன்றிரவு நிம்மதியாக தூங்குவேன்.

7 மே, 2013

வாழ்த்துகள் தலைவரே


2006 வாக்கில் வலைப்பூவில் எழுத ஆரம்பித்து, அதன் மூலம் முதன்முதலாக தொலைபேசியில் பேசியவர் அவர்தான். முன்பாக மெயிலில் உரையாடியிருந்தோம்.

உங்க எழுத்துலே சுஜாதா வாசனை இருக்கு

சரிங்க. மாத்திக்கறேன்

எதுக்கு மாத்திக்கணும்.. அப்படியே இருக்கட்டுமே?

சுஜாதா வாசனை இருக்கிறதாவென்று தெரியாது. ஆனாலும் அவர் சொன்னதால் அப்படியே இருத்திக் கொண்டேன். தன்னை குறும்பட இயக்குனர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். குறும்படங்களுக்காக தனியாக ஒரு வெப்சைட் நடத்துகிறேன் என்றார். ‘நாளைய இயக்குனருக்குவெகுகாலம் முந்திய காலம் என்பதால், இதற்கெல்லாம் தனியாக வெப்சைட்டா என்று ஆச்சரியப்பட்டேன். அந்த வெப்சைட்டில் அவர் இயக்கியஆக்ஸிடெண்ட்டோடு வேறு சிலரின் படங்களும் ஏற்றப்பட்டிருந்தது.

கதை சொல்லிக்கிட்டிருக்கேன் தலைவரே. புரொட்யூஸர் கிடைச்சதுமே படம்தான்அடிக்கடி சொல்வார். “பாம்புகூட படம் எடுத்துடிச்சி. நீங்க சீக்கிரமா எடுங்க தலைவரேஎன்று சிலமுறை கலாய்த்திருக்கிறேன். அப்போது ஒரு கார்ப்பரேட் சினிமா நிறுவனத்தில் சீனியர் கண்டெண்ட் எக்ஸிக்யூடிவ்வாக இருந்தேன். “எங்க ஆபிஸ்லே மொத்தமா பத்து படம் எடுக்கப் போறாங்க. நீங்களும் ட்ரை பண்ணலாமில்லே?” என்றேன். “எங்க சித்தப்பாதான் உங்க சேர்மேன். தெரியுமா?” என்று ஆச்சரியப்படுத்தினார். அங்கே கதை சொன்னாரா என்று தெரியவில்லை.

சில நாட்களில் அவரும் வலைப்பூ எழுத வந்தார். சிறுகதை, சினிமாவென்று மசாலாதான். சக போட்டியாளர் என்பதால் நண்பர் என்றும் பார்க்காமல் பின்னூட்டங்களில் பின்னி பெடல் எடுத்துவிடுவேன். பயங்கர சண்டை நடக்கும். சில பேர் விலக்கிவிட முயற்சிப்பார்கள். பல பேர் தூண்டிவிட்டு குளிர் காய்வார்கள். யாருக்குமே தெரியாது. அவரும் நானும் ஏற்கனவே நண்பர்கள் என்று. அவருடைய கருத்துகளை நானோ, என்னுடைய கருத்துகளை அவரோ அப்படியே ஏற்றுக் கொள்வதில்லை. நண்பர்களாக இருக்க ஒத்த கருத்து இருந்தே ஆகவேண்டுமா என்ன?

பதிவுகளில் எழுதியதையெல்லாம் தொகுத்து வரிசையாக புத்தகங்களாக வெளியிட ஆரம்பித்தார். அவர் புத்தகங்களை வெளியிடவே புதியதாக பதிப்பகங்களும் தொடங்கப்பட்டன. அவரது சிறுகதைத் தொகுப்புக்கு விமர்சனக்கூட்டம் நடத்தினார்.

நீங்க பேசணும் தலைவரே

இதுமாதிரி புக்கு பத்தியெல்லாம் இதுவரைக்கும் பேசினதில்லை தலைவரே

அதனாலே என்ன.. எனக்கு நீங்க பேசுனா சந்தோஷமா இருக்கும்

முதன்முதலாக புத்தக விமர்சனத்தை மேடையில் செய்தது அவருக்காகதான். அதற்குப் பிறகு நான்கைந்து சான்ஸ் கிடைத்துவிட்டது. நல்ல ராசியான ஆள் அவர்.

அழிக்கப் பிறந்தவன்தொடர்கதையாக என்னுடைய வலைத்தளத்தில் வெளியிட்டு வந்தேன். அதை படித்தவர் உலகநாதனிடம் பேசியிருக்கிறார். உலகநாதனும், அவரும் இணைந்துதான் அதை புத்தகமாக கொண்டுவந்தார்கள். முன்பே வேறு சில நண்பர்களுக்கும் இதேமாதிரி உதவியிருக்கிறார். பொதுவாக நட்பு வட்டத்தில் இருக்கும் எல்லோருடைய சுக துக்கங்களுக்கும் முன்வரிசையில் வந்து நிற்கும் குணம் கொண்டவர். எவ்வளவு யோசித்துப் பார்த்தாலும் அவரை வெறுப்பதற்கு ஒரு காரணம் யாருக்கும் கிடைக்கவே கிடைக்காது. அவர் மீது எதற்காகவாவது கோபம் வந்தாலும், நேரில் அவர் முகத்தை பார்த்ததுமே சிரிப்பு வந்துவிடும். ஒருமாதிரி காமெடியான முகம் கொண்டவர். எப்போதும் புன்னகையோடே “வாங்க தலைவரே” என்று எதிர்கொண்டு கட்டிக் கொள்வார் (தொப்பைதான் கொஞ்சம் இடிக்கும்).

சாண் ஏறினால் முழம் சறுக்குவது சினிமாத் தொழிலின் பண்பு. ஆனால் சோர்வில்லாமல் பல்லாண்டுகளாக சறுக்கி, ஏறி, சறுக்கி, ஏறி இன்று ஒருவழியாக சிகரத்தை எட்டிவிட்டார். நண்பர்களின் வெற்றி, நம்முடைய வெற்றி. ‘தொட்டால் தொடரும்’ வெள்ளிவிழா காண வாழ்த்துகள் தலைவரே. ஆனா, படம் மொக்கையா வந்தா எந்த தயவுதாட்சண்யமும் பார்க்க மாட்டோம்.

6 மே, 2013

‘துளு’ சினிமாவின் மறுமலர்ச்சி!


பாறையில் விதைக்கப்பட்ட விதை முளைத்து மரம் ஆனால் சாதனைதானே? கன்னட சினிமாவே கால்காணி நிலத்தை வைத்துக்கொண்டு தத்தக்கா… பித்தக்கா… என்று தவழ்ந்துக் கொண்டிருக்கிறது. அந்த குட்டியூண்டு இண்டஸ்ட்ரிக்குள்ளும் அமீபா சைஸில் உருவான இன்னொரு இண்டஸ்ட்ரி முளைத்து வருவது அதிசயம். அவ்வாறு வீறுகொண்டு எழுந்துக் கொண்டிருப்பது ‘துளு’ சினிமா. தென் கர்நாடகாவிலும், கேரளாவின் சில இடங்களிலும் திராவிட மொழியான ‘துளு’ இன்னமும் வாழ்கிறது. மங்களூர், உடுப்பி, காசர்கோடு பகுதிகளில் துளு பேசுபவர்கள் கணிசமாக இருக்கிறார்கள்.

இந்திய சினிமாவுக்கு வயது நூறு என்றாலும் துளு சினிமா இன்னும் இளைஞன்தான். நாற்பத்தி இரண்டு வயதுதான் ஆகிறது. 1971ல் வெளிவந்த ‘என்ன தங்காடி’தான் துளுவில் வெளிவந்த முதல் திரைப்படம். பத்து, பதினைந்து தியேட்டர்களில் ஒரு படத்தை திரையிட முடிந்தாலே இன்றும் அது சாதனைதான். வருடத்துக்கு ஒன்று, இரண்டு திரைப்படங்கள் வந்தாலே ஆச்சரியம். இன்னும் மொத்தமாக நாற்பது படங்கள் கூட வரவில்லை. கன்னட சினிமாவில் பணிபுரிபவர்கள் பெத்த மனசு வைத்து அவ்வப்போது துளுவிலும் பங்காற்றுகிறார்கள் (தகவலுக்காக : உதயம் NH4 திரைப்படத்தின் நாயகி அஷ்ரிதா கூட துளுதான்).

இருந்தும் சில குறிப்பிடத்தக்க மைல்கற்களை துளு சினிமா எட்டியிருக்கிறது. இம்மொழியில் தயாரிக்கப்பட்ட ‘செப்டம்பர் 8’ இருபத்தி நான்கு மணி நேரத்தில் மொத்தமாக தயார் செய்யப்பட்டு உலகசாதனை படைத்தது. ஆசிய திரைப்படவிழாவான ஓசியன் சினிஃபேனில் ‘சுடா’ என்கிற துளு திரைப்படம், சிறந்த இந்திய திரைப்படத்துக்கான விருதை வென்றிருக்கிறது. ’பங்காரு பட்லர்’ என்கிற திரைப்படம் நிறைய தேசிய மற்றும் சர்வதேச விருதுகளை குவித்திருக்கிறது.
                               
மிகச்சிறுபான்மை மொழியான தங்கள் மொழியிலும் படங்களை எடுத்து ஆத்மதிருப்தி பட்டுக்கொண்டாலும், என்னதான் விருதுகளை குவித்தாலும் மற்ற மொழிப்படங்களை மாதிரி வணிகரீதியாக காசு பார்க்க முடியவில்லையே என்று துளுக்காரர்களுக்கு நீண்டநாள் ஏக்கம் இருந்தது. 2011ல் வெளிவந்த ‘ஓரியார்டோரி அசல்’ அந்த ஏக்கத்தை தீர்த்து வைத்தது. பெரிய ரிஸ்க் எடுத்து ஒரு கோடியில் தயாரிக்கப்பட்ட அந்த திரைப்படம் ஒன்றரை கோடிக்கும் மேலாக வசூலித்து, துளுவில் படமெடுத்தால் துண்டைப்போட்டுக் கொண்டுதான் போகவேண்டும் என்கிற நிலையை மாற்றியமைத்திருக்கிறது. ‘துளுவின் வெற்றிகரமான முதல் சினிமா’ என்று அங்கிருக்கும் விமர்சகர்கள்(!) கொண்டாடி தீர்த்துவிட்டார்கள். பெங்களூர், மும்பை மாதிரி பெருநகரங்களிலும், இப்படம் வசூலில் சக்கைப்போடு போட்டது. விருது வாங்குவதற்கும், பெயர் பெருவதற்கும்தான் துளு சினிமா என்கிற நிலை இனியில்லை. துளுவர்கள் மட்டுமின்றி கன்னடர்கள், மலையாளர்கள், கொங்கணிகளும் இப்படத்தின் வெற்றியில் மகிழ்ந்தார்கள். ஆயிரம் மாச்சரியங்கள் இருந்தாலும் நம் பங்காளிக்கு ஒரு கவுரவம் என்றால் நமக்கும் மகிழ்ச்சிதானே?

இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக ‘ஓரியார்டோரி அசல்’ நாடகமாக மேடையில் ஏறியபோது துளுவர்கள் எப்படிப்பட்ட பரவசத்தை அடைந்தார்கள் என்பதை வார்த்தைகளில் வர்ணிக்க முடியாது. அந்த நாடகத்தை எழுதி இயக்கிய விஜயகுமார் கோடியால்பெய்ல் ஓவர்நைட் நட்சத்திரமாக மின்னினார். நாடகத்துக்கு கிடைத்த ஆதரவைக் காட்டிலும், அது சினிமாவாக எடுக்கப்பட்டால் பன்மடங்கு கிடைக்கும் என்று அவர் எண்ணினார். தயாரிப்பாளர்கள் அப்படி எண்ணவேண்டுமே?

director
இத்தனை ஆண்டுகளாக ஸ்க்ரிப்ட்டை புள்ளைத்தாய்ச்சி மாதிரி சுமந்துக்கொண்டு ஒவ்வொரு தயாரிப்பாளரின் வீட்டு வாசலாய் அலைந்ததுதான் மிச்சம். பணத்தைக் கொண்டு போய் கிணற்றில் போடச் சொல்கிறாயா? என்று விரட்டி அடித்தார்கள். கலைச்சேவைக்கு காசு செலவழிக்க எல்லாருக்குமா மனமிருக்கும். விஜயகுமார் சோர்ந்துவிடவில்லை. சிறுகச்சிறுக சேர்க்கும் டி.என்.எஸ்.சி. பேங்க் சிட்டுக்குருவியாய் கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்த்தார். நிறைய கடன் வாங்கினார். (அவருடைய படத்தைப் பாருங்கள், டொக்கு விழுந்துப்போய் பரிதாபமாக இருக்கிறார்). ஒரு கோடி ரூபாய் சேர்ந்ததும், தில்லாக பூஜையும் போட்டுவிட்டார். கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு எல்லாமே அவர்தான். ஸ்டார்ட், கட் சொல்லத் தெரியாது என்பதால் இயக்கத்தை மட்டும் ராஜசேகர் என்பவரிடம் கொடுத்துவிட்டார்.


கதை நடப்பதாக சொல்லப்படும் கோடியால்பெய்ல் பகுதியிலேயே படப்பிடிப்பு நடந்தது. ‘ரியாலிட்டி வேண்டும். எனவே நோ செட்டிங்ஸ்’ என்று அவர் சொன்னாலும், செட்டிங்ஸ் போடவும் ஆர்ட் டைரக்டருக்கு பணம் கொடுக்கவும் அவரிடம் காசு இல்லை என்பதுதான் உண்மை. படத்தின் ஹீரோ சின்னத்திரையில் ஃபேமஸான லிங்கா ஷெட்டி. ஹீரோயின் ரம்யா பர்ணா. கொடுத்த காசுக்கு மேலேயே நடிக்கத் தயாராக இருந்தார்கள். துளு நாடகத்துறையைச் சேர்ந்த நடிகர்கள் பலரும் விஜயகுமாருக்கு கைகொடுக்க முன்வந்தார்கள். நவீன் படில், அரவிந்த் போலார், ராஜேஷ் பந்த்வால் போன்றோர் கிட்டத்தட்ட ஃப்ரீயாகவே நடித்தார்கள் என்று தகவல். கன்னட சினிமா ஆட்களான ரேகாதாஸ், லட்சுமிதேவி, சத்யஜித், ரேமண்ட் டிசவுசா போன்றவர்களும் நடிக்க ஒப்புக்கொண்டார்கள். கன்னடத்தில் பிரபலமான இசையமைப்பாளரான குருகிரண் கவுரவ வேடத்தில் தோன்றினார்.

thulu2
துளு நாடகங்களுக்கு மறுமலர்ச்சி தந்த ‘ஓரியார்டோரி அசல்’, துளு சினிமாவுக்கும் மறுமலர்ச்சி ஏற்படுத்தும் என்று எல்லோருக்கும் நம்பிக்கை. கடவுள் மீது பாரத்தைப் போட்டுவிட்டு படமெடுத்த விஜயகுமாருக்கு, படம் வெளியானபின்பு நல்ல அறுவடை. கடன்காரர்களுக்கு என்னென்ன சாக்கு சொல்லவேண்டும் என்று திரைக்கதை எழுதிக்கொண்டிருந்தவருக்கு, அதற்கெல்லாம் அவசியமே படாமல் பணம் கொட்டோ கொட்டுவென்று கொட்டியது. ஐம்பது லட்ச ரூபாய்க்கும் மேலே லாபமாம். இன்னமும் தினமும் தன் கையை தானே கிள்ளிப் பார்த்து, தான் வாழ்வது கனவுலகில் இல்லை என்று உறுதிப்படுத்திக் கொள்கிறார் விஜயகுமார்.


படத்தின் கதை ரொம்ப சிம்பிள். வீட்டு ஓனருக்கும், வாடகைக்கு குடியிருப்பவர்களுக்குமான பிரச்சினைகள். ஒரே காம்பவுண்டில் பல வீடுகள் வசிக்கும் முறையை ‘வட்டாரம்’ என்போம் இல்லையா (திருச்சியில் ‘ஸ்டோர்’ என்பார்களாமே?), அம்மாதிரி வட்டார வீடு ஒன்றில் நடக்கும் தினப்படி சம்பவங்கள்தான் கதை. முழுக்க முழுக்க விழுந்து விழுந்து சிரிக்கவைக்கும் நகைச்சுவை. வாடகைக்கு வசிக்கும் மூன்று குடும்பங்கள். அதில் ஒரு பையன் வீட்டு ஓனரின் பெண்ணையே எப்படியோ உஷார் செய்துவிடுகிறான். சில பல குழப்படிகளுக்கு பிறகு சுபம்.

thulu3
துளுவர்களின் ஏற்றம், தாழ்வு என்று அனைத்தையுமே மறைமுகமாக இப்படம் சுட்டிக் காட்டுகிறது. அம்மொழியை பேசுபவர்கள் இன்று சந்திக்கக்கூடிய சவால்கள் என்ன என்னவென்று அடையாளம் காட்டுகிறது. தங்களைப் பற்றிய கண்ணாடியாக இப்படம் அமைந்திருப்பதால், வெறிகொண்டு வெற்றியடைய வைத்திருக்கிறார்கள் துளுவர்கள். இப்படத்தை தொடர்ந்து துளுவில் மூன்று, நான்கு படங்கள் வந்துவிட்டன. நிறைய படங்கள் தயாரிப்பிலும் இருக்கிறது. இப்போதைய துளு படங்களின் டிரெண்ட் காமெடிதான். இந்த வெற்றி கர்நாடகாவில் பேசப்படும் மற்றைய சிறுபான்மை மொழிகளான கொடவா, பேரி போன்ற மொழிகளிலும் சினிமா எடுக்க தெம்பு கொடுத்திருக்கிறது.


சிறுகுழந்தைகள் கூட்டாஞ்சோறு விளையாடுவது மாதிரி படமெடுக்கிறார்கள். சுவைத்துப் பார்த்து, குறைகளை மறைத்து அவர்களது மனம் மலர பாராட்டலாம்.
                                     thulumovie1

(நன்றி : cinemobita.com)