15 மே, 2014

முதலாளித்துவத்தை எப்படி புரிந்துகொள்வது?

இது நடந்து பத்து, பன்னிரெண்டு வருடங்கள் இருக்கும். அப்போது சகோதரியின் திருமணத்துக்காக நிறைய கடன் வாங்கியிருந்தேன். சம்பளத்தின் பெரும்பகுதி அலுவலகத்தில் வாங்கிய லோனில் கழிந்துக் கொண்டிருந்தது. வெளியே வட்டிக்கு வாங்கிய கடன், நகை அடகு வைத்தது என்று கழுத்து நெறிபட்டுக் கொண்டிருந்தது. எனவே கூடுதலாக சம்பாதிக்கும் பொருட்டு, வலிந்து நானாக ‘ஓவர்டைம்’ செய்துக் கொண்டிருந்தேன். எட்டு மணி நேர வேலைக்கு போக மீதி நேரம் செய்யும் வேலையெல்லாம் ஓ.டி.யில் ஒன்றரை மடங்கு கூடுதல் சம்பளமாக கிடைக்கும். தொடர்ச்சியாக முப்பத்தியாறு மணி நேரமெல்லாம் கண்விழித்து ஓ.டி. செய்திருக்கிறேன்.

ரொம்ப அலுப்பாக இருந்த ஒரு நாளில் இரவு ஒன்பது மணிக்கு கிளம்பலாம் என்று முடிவெடுத்தேன். எம்.டி. அவரது அறைக்கு அழைத்தார். எம்.டி., பிரெசிடெண்ட், சேர்மேன் என்று இன்று நிறைய பெயர்கள் சொல்லி அழைத்தாலும் முதலாளி முதலாளிதான். ஒரு பெரிய ஃபைலை கையில் கொடுத்தார். “நாளைக்கு காலையிலே பத்தரை மணிக்கு பிரசண்டேஷன். எல்லாத்தையும் ரெடி பண்ணிடு”. புரட்டிப் பார்த்த எனக்கு உலகமே தலைகீழானது. ஒரு வார உழைப்பை கோரும் வேலையை ஒரே இரவில் முடித்தாக வேண்டும்.

நேராக ஒர்க் ஸ்டேஷனுக்கு வந்தேன். இலக்கில்லாமல் கீபோர்டுகளை தட்டினேன். இது ஒரு எளியவழி. ஒரு வேலையை எப்படி தொடங்குவது என்று தெரியாவிட்டால், இம்மாதிரி கன்னாபின்னாவென்று கீபோர்டை தட்டிப் பாருங்கள். எங்கோ ஒரு பொறி கிளம்பி, வேலையை எளிதாக முடிக்க ‘ஐடியா’ தோன்றும்.

அன்று பொறியோ, நெருப்போ கிளம்பவில்லை. “...............பசங்க. தூங்கவே விட மாட்டானுங்க”, என்று முதலாளியின் அம்மாவுடைய கற்பை கேள்விக்குள்ளாக்கும் அந்த வசைச்சொல்லை சத்தமாக சொல்லிவிட்டு, பக்கத்து டேபிளில் அமர்ந்திருந்த சக ஊழியரைப் பார்த்தேன். திகில் படத்தில் வரும் ஹீரோயின் மாதிரி விழிபிதுங்க, முடியெல்லாம் நட்டுக்கொள்ள பீதியாக காட்சியளித்தார். சட்டென்று திரும்பிப் பார்த்தால் எம்.டி. நின்றுக் கொண்டிருந்தார்.

எப்படி ’ரியாக்ட்’ செய்வதென்று தெரியவில்லை. ஒன்றும் பேசாமல் அலுவலகத்தில் இருந்து ஓட்டமும், நடையுமாக கிளம்பினேன். கீழே தேநீர்க்கடைக்கு போய் என் எதிர்காலத்தை சிந்திக்க ஆரம்பித்தேன். கடன் பட்டார் நெஞ்சம் எப்படி கலங்குமென்று அன்றுதான் அனுபவப்பூர்வமாக உணர்ந்தேன். தேநீரின் இனிப்பும், புகைமூட்டமுமான அச்சூழலில் “எது நடந்தாலும் நன்மைக்கே” என்கிற கீதையின் உபதேசத்தை ஏற்றுக்கொண்டு அலுவலகப்படி ஏறினேன். பக்கத்து சீட்டு ஊழியர், “எம்.டி. நாலஞ்சி வாட்டி போனில் கூப்பிட்டாரு” என்றார். அடிவயிற்றில் மீண்டும் அச்சப்பந்து எழுந்தது.

அமைதியாக போய் அவர் முன்பாக நின்றேன்.

“கிச்சு கண்ணா வாடா” அன்பொழுக அழைத்தார். சுனாமியை எதிர்ப்பார்த்துச் சென்றவனுக்கு ஆனந்த அதிர்ச்சி.

“சாப்பிட்டாச்சா? வேலை ரொம்ப டைட்டா இருக்கோ? ஒருவாரமா முகத்துலேயே டென்ஷன் தெரியுது. பிரச்சினையில்லை. உதவிக்கு ப்ரீலான்ஸுக்கு யாராவது கிடைக்கிறாங்களான்னு பாரு”

“ஓக்கே சார்”

“பீர் அடிக்கிறியா? கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகும்” சொல்லிவிட்டு “ராஜா... ராஜா...” என்று ஆபிஸ்பையனை அழைத்தார்.

“அதெல்லாம் வேணாம் சார். வேலை நிறைய இருக்கு”

ராஜா வந்தான். “ஆபிஸ்லே எல்லாருக்கும் என்னென்ன வேணும்னு கேட்டு நல்ல ஃபுட் வாங்கிட்டு வா” என்று சொல்லி, நான்கைந்து ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அவனிடம் கொடுத்தார். டேபிள் டிராயரை திறந்தார். எதையோ எடுத்து என்னவோ கிறுக்கினார். கிழித்து என்னிடம் தந்தார். செக். என்னுடைய ஒரு மாத சம்பளம் அதில் எழுதப்பட்டிருந்தது.

“முன்னாடியே கொடுக்கணும்னு நெனைச்சேன். மறந்தே போயிட்டேன். ஹார்ட் ஒர்க்கர்ஸை எப்பவுமே நம்ம கம்பெனி நல்லா கவனிக்கும். உங்கிட்டே செல்போன் இல்லை இல்லையா. நல்ல போன் ஒண்ணு வாங்கிட்டு பில்லை அக்கவுண்ட்ஸில் கொடுத்துடு. செட்டில் பண்ணிடறேன்” என்றார்.

சில நிமிட நேரத்துக்கு முந்தைய என் செய்கைக்கு வெட்கப்பட்டுக் கொண்டு, வேதனைப்பட்டுக் கொண்டு குற்றவுணர்ச்சியோடு நகர்ந்தேன். “ச்சே... நம்ம முதலாளியைப் போய் அப்படி பேசிட்டோமே....”. அன்றிரவு எந்திரன் சிட்டி ரோபோ மாதிரி அசுரவேகத்தில் அனாயசமாக வேலை பார்த்தேன்.

அப்போதைக்கு என்னை ‘ஹேப்பி’ செய்த எம்.டி. அடுத்த இரு மாதங்களில் கொஞ்சம் கொஞ்சமாக அவரது ‘கெத்’தை காட்ட ஆரம்பித்தார். எவ்வளவுதான் பர்ஃபெக்டாக வேலை செய்தாலும், அதில் ஏதோ ஒரு குறையை கண்டுபிடித்து எல்லார் முன்பாகவும் கத்துவார். ஆனால் தனிமையில் பேசும்போது லீவே போடாமல் அலுவலகத்துக்கு வரும் என் சின்சியாரிட்டியை பாராட்டுவார். நேரம் காலம் பார்க்காமல் உழைப்புக்கு தயாராக இருக்கும் என்னுடைய தன்மையை கொண்டாடுவார். அந்த ஆண்டு சம்பள உயர்வு, ஓபி அடிப்பவர்களுக்கு எல்லாம் ஓஹோவென்று விழ எனக்கு பெயருக்கு ஏதோ ஒரு சொற்பத்தொகைதான் போடப்பட்டது.

இதுதான் முதலாளித்துவம்.

இதே மாதிரி –ஆனால்- வெவ்வேறான அனுபவம் பல்வேறு நிறுவனங்களிலும் எனக்கு கிடைத்திருக்கிறது. கம்யூனிஸ்ட்டுகள் லட்சக்கணக்கான பக்கங்களில் முதலாளித்துவத்தை தியரிட்டிக்கலாக விளக்குகிறார்கள். ஆனால் உங்களுக்கு இம்மாதிரி கிடைக்கும் தனிப்பட்ட அனுபவங்களில்தான் முதலாளித்துவத்தின் முழுவீச்சை உணரமுடியும். எனக்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள் என்கிற நம்பிக்கையை ஒரு நிறுவனம் ஏற்படுத்தியிருந்தது. காண்ட்ராக்ட் காலம் முடிந்த நிலையில் ஒப்பந்தத்தை அவர்கள் நீட்டிக்கவில்லை. அந்நிலையில் ஒரு சிறு உதவிக்காக வைஸ் பிரெசிடெண்டுக்கு அனுப்பியிருந்த மடலுக்கு எப்படி பதில் வந்தது தெரியுமா. “நீங்கள் எங்கள் ஊழியராக இல்லாதபோது நாங்கள் ஏன் உங்களுக்கு உதவ வேண்டும்?”

“சாப்பிட்டீர்களா?” என்று விசாரித்த முதலாளிகள் மட்டுமே எனக்கு வாய்த்திருக்கிறார்கள். “தூங்கினீர்களா?” என்று இதுவரை யாருமே கேட்டதில்லை. அப்படி கேட்ட முதலாளி யாருக்காவது வாய்த்திருக்கிறார்களா? – இந்த கேள்விக்கான பதிலை சொல்ல சிந்திக்கும்போதுபோது, மேலதிகமாக உங்கள் நினைவுக்கு வரும் சம்பவங்களின் அடிப்படையில் உங்களுக்கு ஓரளவுக்கு ‘முதலாளித்துவம்’ புரிபடலாம்.

உங்களை இரண்டே இரண்டு கேட்டகிரியில்தான் அடைக்க முடியும். ஒன்று நீங்கள் கம்யூனிஸ்டாக இருப்பீர்கள் (அது உங்களுக்கே தெரியாமல் இருக்கலாம்). அல்லது நீங்கள் முதலாளியாக இருப்பீர்கள் (அதுவும் உங்களுக்கே தெரியாமல் இருக்கலாம்). உலகமயமாக்கல் மிக புத்திசாலித்தனமாக இந்த இருவர்க்க நேரெதிர் வேறுபாட்டினை நாமே அறியாதவகையில் ஏராளமான அடுக்குகளை இடையில் ஏற்படுத்தி உருவாக்கியிருக்கிறது. இதுவரை நாம் அறிந்ததிலேயே வெகு சிறப்பான நரித்தந்திர சோசியல் என்ஜினியரிங் கட்டுமானம் உலகமயமாக்கல்தான். மனிதவள மேலாண்மை என்கிற சொல்லைவிட பெரிய ஏமாற்றுவேலையோ, புரட்டோ வேறு எதுவுமில்லை. முழுக்க முழுக்க முதலாளிகளின் நிர்வாக வசதிகளுக்காக ஏற்படுத்தப்பட்ட ஏற்பாடுகள் இவை.

முதலாளிகள் முதலாளிகளாக இருப்பதற்கு அவர்களுடைய தர்மப்படி சில நியாயமான காரணங்கள் இருக்கலாம். ஒருவேளை நான் முதலாளியாக மாறினால் அது எனக்கும் புரிபடலாம்.

12 மே, 2014

தாய்வாசம்

ஓவியங்கள்: ம.செ.,

மூணு வயசுக் குழந்தைகிட்டே உங்களுக்கு ஏன் இவ்வளவு வன்மம் மன்னி?'' - பாரதி, ஆச்சரியத்துடன் கேட்டாள்.
''ஆமாண்டியம்மா... ஷைலு எனக்குச் சக்களத்தி. அவ மேலே எனக்குப் பொறாமை. போடி... வேலையப் பார்த்துக்கிட்டு. உனக்கு ரெஸ்ட் கொடுக்காம எப்போ பார்த்தாலும் 'பாரதிம்மா... பாரதிம்மா...’னு ஓடிவந்து மடியிலே படுத்துக்கிட்டுத் தொல்லை கொடுக்குறாளேனு உன் மேல கரிசனப்பட்டா... வன்மமாம், வன்மம்!'' - அலுத்துக்கொண்டே சொன்னாள் புஷ்பவல்லி.
டி.வி. சீரியல்களில் வரும் பெண்கள் மாதிரி புஷ்பவல்லி அப்படியொன்றும் கொடுமைக்காரி கிடையாது. அவளுடைய நாத்தனார் பாரதி, 10 ஆண்டுகள் கழித்து கர்ப்பமாக இருக்கிறாள். அதனால் 'எப்போதும் பெட் ரெஸ்ட்டிலேயே இருக்க வேண்டும்’ என்று மருத்துவர் சொல்லிவிட்டார். கணவரின் செல்லமான தங்கச்சி, தலைப் பிரசவத்துக்காக பிறந்த வீட்டுக்கு வந்திருக்கிறாள். நியாயமான அண்ணியாக, பாரதியை
பூ போல்தான் தாங்குகிறாள் புஷ்பவல்லி. இருந்தாலும் இப்படி ஒரு கெட்ட பெயர்.
''பார்த்தீம்மா... எங்க இருக்கே?'' - மழலைக் குரலில் கொஞ்சிக்கொண்டே, வாத்து மாதிரி வித்தியாசமாக நடந்து வந்தாள் ஷைலு. எதிர் ஃப்ளாட் குழந்தை. ஜீன்ஸ் பாவாடையும், பிரௌன் கலர் டாப்ஸும் அணிந்துகொண்டு அமர்க்களமாக இருந்தாள். போன விஜயதசமிக்குத்தான் பிரி.கே.ஜி-யில் சேர்ந்தாள்.
சில மாதங்களுக்கு முன் அறிமுகமான பாரதி, அவளுக்கு உயிர். இத்தனை காலமாக, குழந்தை வரம் வேண்டி கோயில் கோயிலாக அரசமரத்தைச் சுற்றி, இதற்காகப் பல லட்சங்களை டாக்டர்களுக்கு அழுத பாரதிக்கும், தன்னை 'அம்மா’ என்று அழைக்கும் ஷைலு என்றால் கொள்ள ஆசை.
''வந்துட்டா உன் வளர்ப்பு மக. அம்மாவும் பொண்ணும் ராத்திரி தூங்குற வரைக்கும்
கொஞ்சிக்கிட்டே இருங்க!'' - தலையைத் தினுசாக நொடித்துக்கொண்டு சமையல் அறைக்கு நகர்ந்தாள் புஷ்பவல்லி. எப்போதும் மென்சோகமாக வளையவரும் பாரதி, ஷைலுவைக் கண்ட பிறகுதான் கொஞ்சம் பிரகாசமாக இருக்கிறாள் என்பதில் அவளுக்கும் உள்ளூர மகிழ்ச்சிதான்.
''ஷைலு பாப்பா... பாரதி அம்மா எங்கே இருக்கேன் சொல்லு?'' என்று அறைக்குள் மறைந்துகொண்டு கொஞ்சலாகக் குரல் கொடுத்தாள் பாரதி.
''தோ...'' - கதவுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டிருந்த பாரதியைக் கண்டுபிடித்ததும் பரவசமாகக் கத்தினாள் ஷைலு. குழந்தையை ஆசையாக வாரி அணைத்து, உச்சிமுகர்ந்து எச்சில்பட முத்தங்கள் கொடுத்தாள் பாரதி.
''பாப்பா... இன்னைக்கு ஸ்கூல்ல என்னலாம் நடந்துச்சு? அம்மாகிட்ட சொல்லு பார்க்கலாம்!''
''ம்ம்ம்... ராகுல் என்னை அடிச்சான். நான் அவனைக் கடிச்சேன்!'' - ஷைலு சொல்லச் சொல்ல, ஆசையாகக் கேட்டுக்கொண்டிருந்தாள் பாரதி. தன் வயிற்றில் பெறாத பிள்ளை ஒன்று, தன்னை 'அம்மா’ என்று அழைக்கிறது. இந்தக் கொடுப்பினை எத்தனை பேருக்குக் கிடைக்கும். எந்த ஜென்மத்தில் என்ன புண்ணியம் செய்தேனோ என்று நெகிழ்ந்துபோயிருந்தாள்.
''ரொம்பத் தொல்லை கொடுக்கிறாளா மேடம்?'' - கதவைத் திறந்துகொண்டு நுழைந்தான் ஆசிப். ''அப்பா...'' என்று அலறிக்கொண்டே ஷைலு ஓட்டமாக ஓடிவந்து ஆசிப் தோள் மீது பாய்ந்து ஒட்டிக்கொண்டாள்.
''சேச்சே... இல்லைங்க சார். ரொம்பச் சமத்தா நடந்துக்கிறா. எனக்கும் போர் அடிக்காம டைம்பாஸ் ஆகுது!'' - சொல்லிக்கொண்டே டி.வி. சத்தத்தை ரிமோட் மூலம் கட்டுப்படுத்தினாள் பாரதி.
''ஷைலு... டைம் டென். அப்பா இப்போ சாப்பிட்டுத் தூங்கினாதானே, காலையில கரெக்ட் டயத்துக்கு ஆபீஸ் போக முடியும்?'' - குழந்தையின் நெற்றியில் முத்தமிட்டாவாறே சொன்னான் ஆசிப்.
''வாங்க ஆசிப் சார். சாப்பிடுறீங்களா?'' - டைனிங் டேபிளில் சாப்பிட்டுக்கொண்டிருந்த சீனிவாசன் கேட்டார். பாரதியின் அண்ணன்.
''இல்லைங்க. அம்மா செஞ்சு வெச்சிருப்பாங்க. என்னோட சேர்ந்துதான் அவங்களும் வாப்பாவும் சாப்பிடுவாங்க!''
பன்னாட்டு நிறுவனம் ஒன்றின் ஆடிட்டர் ஆசிப். மாற்று மதத்துப் பெண்ணைக் காதலித்து மணம் புரிந்தவன். ஆரம்பத்தில் காதலுக்கு எதிர்ப்பு இருந்தாலும், அதிர்ஷ்டவசமாக இரு வீட்டாரும் இவர்களது அன்பின் தீவிரத்தைப் புரிந்துக்கொண்டு கல்யாணத்துக்கு ஒப்புக்கொண்டனர். உலகத்தின் ஒட்டுமொத்த மகிழ்ச்சியையும் ஆசிப்புக்குக் கொடுத்த அல்லாவின் கருணை, திடீரென்று ஒருநாள் தீர்ந்துவிட்டது. ஷைலு பிறந்த சில மாதங்களிலேயே மஞ்சள் காமாலை தாக்கி இறந்துவிட்டாள் அவனது மனைவி சபிதா.
புஷ்பவல்லி, தன் கணவருக்குப் பார்த்துப் பார்த்துப் பரிமாறிக்கொண்டிருந்தாள்.
''சார்... கேட்கிறேன்னு தப்பா நினைச்சுக்கக் கூடாது. உங்க பர்சனல்தான். ஆனாலும் ஏதோ கேட்கணும்னு தோணுச்சு. வயசுல மூத்தவ. உங்களைத் தம்பியா நினைச்சு சொல்றேன்!'' - புஷ்பவல்லி பீடிகையோடு ஆரம்பித்தாள்.
சீனிவாசன், லேசான பதற்றத்தோடு மனைவியை ஏறிட்டார்.
''சொல்லுங்க மேடம். உங்களை நான் என் குடும்பத்துல ஒருத்தவங்களாத்தான் பார்க்கிறேன். எங்க அம்மா, அப்பாவை சொந்தப் பொண்ணு மாதிரி கவனிச்சுக்கிறீங்க. ஷைலுவும் உங்க வீட்லயேதான் இருக்கா. நீங்க சொல்லி நான் தப்பா எடுத்துப்பேனா?''
''உங்களுக்கு ரொம்பச் சின்ன வயசுதான். மிஞ்சிப்போனா 30 இருக்குமா? உங்களுக்காக இல்லேன்னாலும் குழந்தைக்காகவாவது இன்னொரு கல்யாணம் பண்ணிக்கலாம் இல்லையா... உங்க மதத்துல இது சகஜம்தானே? தாய்ப்பாசத்துக்காக ஷைலு ஏங்குறதைப் பார்த்தா, சமயத்துலே எனக்கே அடிவயித்தைப் பொரட்டறது...''
''என்ன மன்னி நீங்க..?'' - பாரதி பதற்றப்பட்டாள்.
''அவங்க சொல்றதுல தப்பு ஒண்ணு இல்லீங்க!'' - பாரதியைப் பார்த்துச் சொன்ன ஆசிப் தொடர்ந்தான்.
''சபிதாவும் நானும் காலேஜ் படிக்கிறப்பவே காதலிக்க ஆரம்பிச்சிட்டோம். மலையாளத்துப் பொண்ணு. வேற மதம்னு சொல்லி பிரச்னை வரும்னு தெரியும். இருந்தாலும் அவங்க குடும்பத்துல என்னை ஓரளவாவது ஏத்துக்கணுமேனு மலையாளம் கத்துக்கிட்டேன்!
அல்லா கருணையாலே எல்லாம் நல்லபடியா முடிஞ்சு மூணு வருஷம் சந்தோஷமா வாழ்ந்தோம். அந்த வாழ்க்கை போதும்னு அல்லா முடிவு செஞ்சிட்டாரு போல. கடவுளோட தீர்ப்புக்குக் காரணம் இல்லாமலா இருக்கும்? என்னை நிக்காஹ் பண்ணிக்கச் சொல்லி ஃப்ரெண்ட்ஸ் மட்டுமில்ல, வீட்லயும் வற்புறுத்திட்டுத்தான் இருக்காங்க. ஷைலுவுக்குனு சாக்கு சொல்லி பண்ணிக்கிட்டாலும், என்னைக் கட்டிக்கிட்டு வரப்போற பொண்ணோட முழு மனசா வாழ முடியுமானு தெரியலை. அப்படி அரைகுறையா வாழ்றது இன்னொரு பொண்ணுக்குச் செய்ற துரோகம் இல்லையா?
மனசு முழுக்க சபிதா நிறைஞ்சிருக்கா. அவ எனக்குக் கொடுத்துட்டுப் போன பரிசா ஷைலு பொறந்திருக்கா. அம்மா முகம்கூடக் குழந்தைக்கு சரியா ரிஜிஸ்டர் ஆகலை. தாய்ப்பால் மறக்கிறதுக்கு முன்னாடியே சபிதா போய்ச் சேர்ந்துட்டா. அதை நெனைச்சாத்தான் ரொம்ப வருத்தமா இருக்கு.
என்ன... 10, 15 வருஷத்துக்குக் கொஞ்சம் கஷ்டமா இருக்கும். அதுக்குள்ள ஷைலு வளர்ந்துடுவா. அவளை நல்லாப் படிக்கவெச்சு, நல்ல இடத்துலே கட்டிக்கொடுத்திட்டேன்னா இறைவன் கொடுத்த என் வாழ்க்கையும் ஒருவழியா நிறைவாயிடும்!'' - விழியோர ஈரத்தோடு பொறுமையாகச் சொல்லி முடித்தான் ஆசிப்.
அறையில் சகிக்க இயலாத மௌனம் சூழ்ந்தது. என்ன புரிந்ததோ தெரியவில்லை, சேட்டைக்கார ஷைலுவும் அமைதியாக அப்பாவின் முகத்தைப் பார்த்தவாறே அமர்ந்திருந்தாள்.
பாரதியின் காதில் ஏதேதோ குரல்கள் வகைதொகை இல்லாமல் ஒலிக்கத் தொடங்கின.
'சரிங்க... நான் இப்போ ஒரு சார்ட் போடுறேன். இந்தச் சார்ட்ல சொன்ன மாதிரி டிரீட்மென்ட் எடுத்துக்கலாம்!’
'நங்கநல்லூர் ஆஞ்சநேயருக்கு 101 வடைமாலை சாத்துறேன்னு வேண்டிக்க!’
'மென்சஸ் ஆனதுல இருந்து சரியா 12-ம் நாள்ல ஸ்கேன் எடுத்து எக் சரியா வளர்ந்திருக்கான்னு பார்க்கணும். சரியா வளர்ந்து இருந்தா நோ ப்ராப்ளம். இல்லேன்னா அதுக்கு ஏத்த மாதிரி டிரீட்மென்டை மாத்திக்கணும்!’
'புட்லூரு புள்ளத்தாச்சி அம்மனைப் பார்த்து வளையல் போடுங்க. மூணாம் மாசம் ரிசல்ட் நிச்சயம்!’
'எக் ஃபார்ம் ஆகுறதுல கொஞ்சம் பிராப்ளம் இருந்தது. அதை மருந்து மூலமா சரிபண்ணிடலாம்!’
'இன்னுமா விசேஷம் இல்லை. எங்க ஓரகத்திப் பொண்ணுக்குக் கல்யாணம் ஆன மொத மாசமே நின்னுருச்சு!’
'இப்போ எல்லாம் சரியாத்தான் இருக்கு. ஏன் பிரெக்னன்ஸி ஆவலைனு தெரியலை. நூத்துலே
15  பர்சென்ட் பேருக்கு ஏன் இன்ஃபெர்ட்டிலிட்டினு காரணமே கண்டுபிடிக்க முடியாது!’
'குலதெய்வக் கோயிலுக்குப் பொங்கல் வெக்கிறதா வேண்டிக்கிட்டீங்களா?’
'ஸாரி. ஐ திங்க் பிராப்ளம் வித் யுவர் சைடு மிஸ்டர் சங்கர். தப்பா எடுத்துக்க மாட்டீங்களே? ஒரு கவுன்ட்டிங் எடுத்துப் பார்த்துடலாமா? நான் சொல்ற லேப்ல ரிப்போர்ட் எடுத்துடுங்க. அப்படியே டெஸ்டிஸையும் ஸ்கேன் பண்ணணும்!’
'ஐயப்பன் கோயில் ஜோசியர்கிட்டே ஜோசியம் பார்த்தீங்களா?’
'உங்க கவுன்ட்டிங்ஸ் பக்கா. பாரதிக்கு ஒரு ஹெச்.எஸ்.ஜி. டெஸ்ட் பண்ணிப் பார்த்துடலாமா?’
'கருமாரியம்மன் கோயிலுக்குப் போயிட்டு வாங்க. எலுமிச்சம்பழம் கொடுப்பாங்க. வெறும் வயித்துல சாப்பிட்டா அப்படியே நிக்குமாம்!’
'ரெண்டு டியூப்லயும் ப்ராப்ளம்னு நினைக்கிறேன். அடுத்த வாரம் அட்மிட் பண்ணுங்க. லேப்ராஸ்கோபி பண்ணி சரிபண்ணிடலாம்!’
'இதுக்கெல்லாம் சித்தவைத்தியம்தான் கரெக்ட். டாக்டர் ஜமுனா எனக்குத் தெரிஞ்சவங்கதான். போய்ப் பார்க்கிறீங்களா?’
'லேப்ராஸ்கோபில சரியாகலை. டயக்னஸ்டிக் சென்டருக்கு எழுதித் தர்றேன். டயக்னஸ்டிக் பண்ணா, சான்ஸ் இருக்கு!’
'மாசத்துக்கு ஒரு முறை மலைவேம்பு அரைச்சுக் குடுங்க!’
'டயக்னஸ்டிக் பண்ணதுல ஒரு டியூப் ப்ளாக் கிளியர் ஆயிருச்சு. ஸோ, இனி பிரெக்னன்ஸிக்கு நிறைய சான்ஸ் இருக்கு!’
'ஷாலினி டாக்டரை பாருங்க. கைராசி டாக்டர்!’
'இன்னும் மூணு மாசம் பார்ப்போம். அப்புறமா ஐ.யூ.ஐ. பண்ணிப் பார்க்கலாம்!’
'நான் கல்யாணத்துக்கு வரலை. யாராவது எத்தனை குழந்தைனு கேட்டுர்றாங்க!’
'ஆறு மாசத்துக்கு ரெகுலரா ஐ.யூ.ஐ. பண்ணிப் பார்க்கலாம். உங்க ஸ்பெர்ம்ஸை எடுத்து கான்சன்ட்ரேட் பண்ணி உங்க ஒய்ஃபோட எக்ல இன்ஜெக்ட் பண்ணிடுவோம். கண்டிப்பா சக்சஸ் ஆகும். இதுவும் சரிப்படலைன்னா டெஸ்ட் டியூப்...’
'எனக்குத்தான் பிராப்ளம்ங்கிற மாதிரி டாக்டர் சொல்றாங்களே... நீங்க வேற கல்யாணம் பண்ணிக்கிறீங்களா?’
'என்னன்னே புரியலை. இதுவரை என் பேஷன்ட்கள்ல யாருக்கும் மூணு முறைக்கும் மேலே ஐ.யூ.ஐ. பண்ணதில்லை’
ஐயோ... இடைவிடாமல் காதில் ஒலித்துக்கொண்டிருக்கும் இந்தக் குரல்களை எல்லாம் யாராவது ஆஃப் செய்து தொலையுங்களேன் என்றிருந்தது பாரதிக்கு.
த்து ஆண்டுகளில் எவ்வளவு வேதனை, எவ்வளவு சோதனை, எவ்வளவு செலவு, எவ்வளவு மருத்துவர்கள், எவ்வளவு அறிவுரைகள். எல்லாத் துயரங்களையும் கடந்து, இருளில் நம்பிக்கையாக வெளிச்சக் கீற்று கொடுத்தது அவளது கர்ப்பம். ஆனால், அந்த வெளிச்சமும் தொலைந்து சூன்யத்தில் நிற்பதுபோல் ஆகிவிட்டதே இப்போது! மார்பு, சுமையாகக் கனத்தது பாரதிக்கு. இருபுறமும் விண்விண்னென்று வலி.
அவளது கணவன் சங்கர், கால் மணி நேரத்துக்கு ஒரு முறை போன் செய்து ஆறுதல் சொல்லிக்கொண்டே இருந்தான். பாவம், அவன் சோகத்தை மறைத்துக்கொண்டு பாரதியைத் தேற்றுகிறான்!
'நமக்கு அப்படி என்ன வயசு ஆயிடுத்து? 40-க்கு மேலகூடக் குழந்தைப் பெத்துக்கிறவா இப்போலாம் சகஜம்... தெரியுமா?’ - ஒவ்வொரு முறை போனில் பேசும்போதும், மறக்காமல் திருவாசகமாக இதைச் சொல்ல சங்கர் மறப்பதே இல்லை.
ஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகிவந்து, மூன்று நாட்கள்தான் ஆகின்றன. பிரசவத்துக்கு முன்பே டாக்டர் சொல்லியிருந்தார், 'ரொம்ப கிரிட்டிக்கல். மேக்ஸிமம் டிரை பண்றோம். அனேகமா தாய், சேய் ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தரைத்தான் காப்பாத்த முடியும்னு தோணுது. குழந்தை உயிரோடு பிறந்தாலும் தீவிரமான கண்காணிப்பில் இருக்கணும்.’
குழந்தை, உயிரோடுதான் பிறந்தது. ஆண் குழந்தை. உருவத்தில் அச்சு அசல் சங்கரை அப்படியே உரித்து வைத்திருந்தது. பாரதியின் நிறம். கை, காலெல்லாம் நல்ல நீளம். முயல் குட்டி மாதிரி முழித்துப் பார்த்தது.
''பாரதி... பையன் பொறந்திருக்கான் பாரு. கண்ணை நல்லாத் திறந்து பாரு!'' - முழு மயக்கத்தில் இருந்தாலும், கறுப்பாக, தாட்டியாக இருந்த நர்ஸின் குரல் வெகுதூரத்தில் இருந்து அளக்க முடியாத ஆழத்தில் கேட்டது பாரதிக்கு. சிரமப்பட்டுப் பாதிக் கண்களைத் திறந்தாள்.
''என் குழந்தை. என் வயிற்றில் வளர்ந்த மகன். என் ரத்தம்...'' - உடலும் உள்ளமும் சிலிர்த்தன பாரதிக்கு. கடைசியாக மகனைப் பார்த்தது அப்போதுதான். இன்குபேட்டரில் வைத்து குழந்தையைப் பாதுகாக்கிறார்கள் என்று சொன்னார்கள். சுவாசிக்கத் திணறுகிறானாம். உயிர் பிழைக்க 50 சதவிகிதம்தான் வாய்ப்பாம். அவ்வப்போது, யாராவது நர்ஸ் வந்து தாய்ப்பாலை மட்டும் ஒரு கண்ணாடிக் குடுவையில் பெற்றுச் செல்வாள். இரண்டு நாட்கள். அதற்குள்ளாகச் சில லட்சங்கள் கரைந்த நிலையில், திடீரென்று 'குழந்தை இறந்துவிட்டது’ என்றார்கள். தவமாய்த் தவம் இருந்து கிடைத்த செல்வம்; மலடி என்ற அவலச்சொல் போக்கியவன்; பூமிக்கு வந்த சுவடுகூட இல்லாமல் மறைந்துபோனானே? ஆண்டவா... என் துக்கத்துக்கு முடிவே இல்லையா?
புஷ்பவல்லிக்கு, நாத்தனாரின் துயரத்தைச் சகித்துக்கொள்ளவே முடியவில்லை. பாரதிக்கு ஒரு பிள்ளை இல்லை என்பதுதான் அவர்களது குடும்பத்தில் இருந்த ஒரே சங்கடம். அதுவும் தீரப்போகிறது என்பதில் எல்லோரையும்விடப் புஷ்பவல்லிக்குத்தான் அதிக சந்தோஷம். சில நாட்கள்கூட நீடிக்காத மகிழ்ச்சியாக இது போய்விட்டதே என்று மாய்ந்துபோனாள். பாரதியைவிட மனரீதியாக இவள்தான் அதிகமாகப் பாதிக்கப்பட்டாள். நான்கைந்து நாட்களாகச் சமைக்கக்கூட மறந்து, பிரமை பிடித்ததுபோல அமர்ந்திருந்தாள்.
''பார்த்தீம்மா... எங்க இருக்கே?'' - பள்ளிவிட்டு வழக்கமான குதூகலத்தோடு ஷைலு கத்திக்கொண்டே வீட்டுக்குள் நுழைந்தாள்.
உளவியல் சமநிலை பாதிக்கப்பட்டிருந்த புஷ்பவல்லிக்கு என்ன செய்கிறோம், ஏது செய்கிறோம் என்று புரியவில்லை. ஷைலுவை இழுத்து முதுகில் நாலு சாத்துச் சாத்தினாள். பேய் மாதிரி கத்தத் தொடங்கினாள்.
''சனியனே... அவ என்ன உன்னைப் பெத்தெடுத்துப் பால் கொடுத்தவளா..? மகராசி, உன் தொல்லை இல்லாம உன் அம்மா போய்ச் சேர்ந்துட்டா. பெத்த புள்ளையைப் பறிகொடுத்து நிக்குறா என் பாரதி. இனிமே அவளை அம்மா, அம்மானு சொல்லி அவளை உயிரோட கொல்லாத'' - என்ன பேசுகிறோம், ஏது பேசுகிறோம், யாரிடம் பேசுகிறோம், எந்தக் கோபத்தை யார் மீது காட்டுகிறோம், எதுவுமே அவளுக்குப் புரியவில்லை. அப்படியே குலுங்கிக் குலுங்கி அழத் தொடங்கினாள்.
குழந்தைக்கும் எதுவும் புரியவில்லை. முதலில் மலங்க மலங்க விழித்தாள். எதிர்வீட்டு ஆன்ட்டி கொஞ்சம் முறைப்பாகத்தான் பேசுவாள். ஆனாலும் இப்படி அடித்து, கோபமாகக் கத்துவாள் என்றெல்லாம் அவள் நினைத்துக்கூடப் பார்த்தது இல்லை. வீறிட்டு அழத் தொடங்கினாள். சத்தம் கேட்டு ஹாலுக்கு வந்த பாரதி, திகைத்தாள். ஒரு பக்கம் புஷ்பவல்லி அழுதுகொண்டிருக்கிறாள்; இன்னொரு பக்கம் ஷைலுவும் அழுதுகொண்டிருக்கிறது.
''என்னடா ஷைலு... ஏன் அழுவுற. நீ நல்ல குட்டியாச்சே?' - குழந்தையைச் சமாதானப் படுத்தும்விதமாக வாரி அள்ளிக்கொண்டு கேட்டாள்.
பாரதியைக் கண்டதுமே எதற்காக அழுகிறோம் என்பது ஷைலுவுக்கும் மறந்துவிட்டது. தன்னுடைய அழுகைக்கு ஏதாவது காரணம் கற்பிக்கவேண்டுமே என்பதற்காக, ''பால்... பால்...'' என்று அழுகைக்கு நடுவே நடுங்கிக்கொண்டே உச்சரித்தாள்.
பள்ளிவிட்டு வீட்டுக்கு வந்ததுமே, ஷைலுவுக்கு அவளது பாட்டி பால் காய்ச்சிக் கொடுப்பாள். சில நாட்களாக நேராக பாரதியைத் தேடி அவள் இங்கே வந்துவிடுவதால், புஷ்பவல்லிதான் காய்ச்சிக் கொடுப்பது வழக்கம். 'குழந்தை பால் கேட்டு, புஷ்பவல்லி மறுத்ததுதான் இத்தனை களேபரம் போலிருக்கிறது’ என்று நினைத்துக்கொண்டாள் பாரதி.
''மன்னி... நம்ம கஷ்டம் நமக்கு. குழந்தைக்கு என்ன தெரியும்? ப்ளீஸ், அவளுக்குக் கொஞ்சம் பால் காய்ச்சிக் குடுங்களேன்!''
எதுவும் பேசாமல் முகத்தைத் துடைத்துக் கொண்டு எழுந்தாள் புஷ்பவல்லி. மொத்தமாக அழுது தீர்த்துவிட்டதால் ஓரளவுக்கு இப்போது மனம் தெளிந்திருந்தது. கோபம் கண்ணை மறைக்க, சின்னக்குழந்தையைப் போட்டு அடித்துவிட்டதை எண்ணி குற்ற உணர்வு கொண்டாள். ஃப்ரிட்ஜைத் திறந்தாள். ப்ரீஸரில் பால் இல்லை.
''பாரதி... வீட்ல பால் இல்லை. கடைக்குப் போய் வாங்கிட்டு வந்துடுறேன். குழந்தையைக் கொஞ்சம் சமாதானப்படுத்தும்மா!'' - சொல்லிவிட்டு, செருப்பை மாட்டிக்கொண்டு கிளம்பினாள்.
ஷைலுவின் கேவல் அடங்கவே இல்லை. ''பால்ம்மா... பால்ம்மா...'' என்று சொல்லிக்கொண்டே அழுதாள். மூச்சு முட்டுவதைப் போல இழுத்து இழுத்துப் பெரிதாகச் சத்தம் வருமாறு மூச்சு விட்டாள். எப்படி இவளை சமாதானப்படுத்துவது?
பாரதிக்குத் தாங்கவில்லை. குழந்தையைத் தூக்கிக்கொண்டு அறைக்குள் நுழைந்தாள். ஏதோ வேகத்தில் அனிச்சையாக நைட்டியை விலக்கி, தன் மார்புக்காம்புகளை ஷைலுவின் வாயில் திணித்தாள். என்ன ஏதுவென்று புரியாமல் திணறிய ஷைலுவுக்கு, சட்டென்று பாரதியின் நோக்கம் பிடிபட்டது. அழுகையை நிறுத்தியது. முட்டி முட்டிப் பால் குடிக்கத் தொடங்கியது. பாரதியின் மார்புக் கனம் குறைந்தது. வலி நீங்கியது. ஆதுரமாகக் குழந்தையின் தலையைத் தடவ ஆரம்பித்தாள். ஷைலு, தன்னுடைய நினைவுகளில் புதைந்துபோன தாய்வாசத்தை மீண்டும் சுவாசிக்கத் தொடங்கினாள்!

(நன்றி : ஆனந்த விகடன் 07 மே, 2014)

8 மே, 2014

தேர்தல் முடிவுகள்

நன்கு நினைவு தெரிந்தபிறகு முதலில் வந்த தேர்தல் முடிவுகள் எண்பத்தி ஒன்பதாம் ஆண்டு. தேதி கூட நினைவிருக்கிறது. ஜனவரி இருபத்தி இரண்டு. அன்று காலை சூளைமேட்டில் இருந்த பெரியப்பா ஒருவரின் வீட்டுக்கு சென்றிருந்தோம். தீவிரமான திமுக எதிர்ப்பாளர். “காங்கிரஸ்தாண்டா வரப்போகுது” என்று வெறுப்பேற்றினார். “கடவுளே நினைச்சாலும் கலைஞர் வர்றதை தடுக்க முடியாது” என்று சவால் விட்டேன்.

சித்தி வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தோம். முன்னணிச் செய்திகள் வர ஆரம்பித்திருந்தன. ஆங்காங்கே இருவண்ணக் கொடியோடு திமுக தொண்டர்கள் மகிழ்ச்சியாக இனிப்பு வழங்கிக் கொண்டிருந்தார்கள். ‘திமுக ஆட்சி அமைக்கிறது’ என்று மாலைமலரிலோ, மாலைமுரசிலோ தலைப்பிட்டு சிறப்பு பதிப்பு கடைகளில் தொங்கியது. தார் சாலைகளில் உதயசூரியன் சின்னத்தை பெயிண்டால் வரைந்து, திமுக அமோக வெற்றி என்று எழுதிக் கொண்டிருந்தார்கள்.

தொண்ணூற்றி ஒன்றாம் ஆண்டு முடிவுகள் தலைகீழ். ஒரு ஞாயிற்றுக்கிழமை ரிசல்ட் வந்ததாக நினைவு. அன்று நல்ல வெயில் அடித்தது. பதினோரு மணிக்கு மேலே வந்த தகவல்கள் சிலாக்கியமாக இல்லை. பானையில் இருந்து தண்ணீரை மொண்டு திரும்பத் திரும்ப குடித்துக்கொண்டே இருந்தேன். அவ்வளவு வயிற்றெரிச்சல். DMK LEADER M.KARUNANIDHI TRAILS IN HARBOUR CONSTITUENCY என்று தொலைக்காட்சியில் திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டே இருந்தார்கள். “கட்சி காலி. இனிமே அவ்வளவுதான்” என்று கட்சிப்பெருசு ஒருவர் புலம்பிக் கொண்டே இருந்தார்.

தொண்ணூற்றி ஆறாம் ஆண்டு முடிவுகள் குறித்து பெரிய எதிர்ப்பார்ப்பு இல்லை. அதிமுக படுதோல்வி அடையுமென்று ஏற்கனவே தெரிந்திருந்தது. ஆனால் அக்கட்சியின் தலைவியே தோற்றுவிட்டார் என்பது திமுகவினருக்கு கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்திய ஆனந்தம். மதியம் நண்பர்களோடு அறிவாலயத்தில் குழுமியிருந்தோம். பாராளுமன்றத் தேர்தலில் எல்லா தொகுதியுமே திமுக கூட்டணிக்கு. மைக்கில் ஒவ்வொரு தொகுதியாக அறிவித்துக் கொண்டிருந்தார்கள். ‘மதுரையில் மட்டும் சுப்பிரமணியசாமி கொஞ்சம் லீடிங்கில் இருக்கான்’ என்று மைக்கில் அறிவிப்பாளர் சொன்னதுமே, கூடியிருந்த தொண்டர்கள் கொந்தளித்தார்கள். சற்று நேரத்திலேயே அறிவிப்பு வந்தது. “தமாகாவோட ராம்பாபுதான் மதுரையில் லீடிங்”. ஆபிஸ் ரூமுக்கு போய் “தாம்பரம் என்ன நிலவரம்?” என்று திரும்பத் திரும்ப விசாரித்துக் கொண்டிருந்தேன். “இன்னும் செய்தி எதுவும் வரலைப்பா” என்று சலித்துக்கொண்டே சொன்னார்கள். எல்லா தொகுதி முடிவுகளும் தெரிந்து மறுநாள் விடிகாலைதான் தாம்பரம் முடிவு தெரிந்தது. அபாரமான வாக்கு வித்தியாசத்தில் (தொண்ணூறு ஆயிரம் என்று நினைவு) அண்ணன் மீ.அ.வைத்தியலிங்கம் வெற்றி கண்டிருந்தார். கண்டிப்பா மினிஸ்ட்ரி என்று ஆனந்தப்பட்டுக் கொண்டிருந்தோம். கலைஞர் ஏமாற்றி விட்டார்.

இரண்டாயிரத்து ஒன்று தேர்தல் முடிவுகளைதான் இன்னமும் ஜீரணிக்க முடியவில்லை. தமிழக மக்களுக்கு என்னதான் வளைத்து வளைத்து நன்மை செய்தாலும் நன்றி மறப்பார்கள் என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லிக் காட்டிய தேர்தல் முடிவுகள்.

இரண்டாயிரத்து ஆறு பற்றி பெருசாக சொல்லிக்கொள்ள ஏதுமில்லை. கட்சி மீதிருந்த தீவிரமான அபிமானத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பித்திருந்த தொடக்கக் காலம். ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பத்தி இரண்டுக்கு பிறகு, மெஜாரிட்டி இல்லாத முதல் ஆட்சி. இரண்டாயிரத்து பதினொன்று முடிவுகள் கிட்டத்தட்ட இரண்டாயிரத்து ஒன்றையே மீண்டும் பிரதிபலித்தது.

தொண்ணூற்றி ஆறுக்கு பிறகு தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தலும், சட்டமன்றத் தேர்தலும் ஒன்றாக நடந்ததே இல்லை. எனவே இரண்டரை மூன்று வருடத்துக்கு ஒருமுறை இங்கே தேர்தல் திருவிழா. இடையில் போனஸாக உள்ளாட்சித் தேர்தல் வேறு.

எப்போதுமே தேர்தல் முடிந்து கிட்டத்தட்ட இருபது நாட்கள் முடிவுக்காக காத்திருந்ததாக நினைவேயில்லை. இந்த தேர்தலில்தான் இப்படியொரு நீண்ட டென்ஷன். இந்த இடைவெளியில் என்ன எழுதுவது என்று தெரியாமல் பத்திரிகைகள் குழம்பிப்போய் நாடி ஜோசியம் பார்த்து கவர் ஸ்டோரி எழுதுகிறார்கள். மத்தியில் யார் பிரதமர் என்று தமிழகத்தின் பிரபலமான ஜோதிடர்களை விட்டு கணிக்கவைத்து ஒரு பத்திரிகை போஸ்டர் ஒட்டுகிறது. என்ன செய்வது பொழைப்பை பார்க்கணுமில்லே?

கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு ப்ளாக்கில் நாம் எழுதியிருந்த கணிப்பு அப்படியே உல்டா ஆனது. ஆனால் முன்பாக இரண்டாயிரத்து ஒன்பது, இரண்டாயிரத்து ஆறு தேர்தல்களில் நம்முடைய கணிப்பு துல்லியமாக இருந்தது.

இந்த தேர்தல் எளிதாக கணிக்க முடியாத தேர்தல். திமுக அதிமுகவுக்கு மாற்றாக எண்பத்தி ஒன்பது தவிர்த்து கடந்த நாற்பத்தியேழு ஆண்டுகளில் பலமான மூன்றாவது சக்தி எழுந்ததாக தெரியவில்லை.

பாராளுமன்றத் தேர்தல் அறிவிப்புக்கு சில மாதங்கள் முன்பாகவே ‘ஜெயலலிதாதான் பிரதமர்’ என்று அதிமுகவினர் ஆரம்பித்துவிட்ட பஜனைக்கு மக்களிடம் நல்ல ரெஸ்பான்ஸ் இருந்தது. உண்மையில் அதிமுக முப்பத்தி ஐந்து இடங்களை மிக சுலபமாக வெல்லக்கூடிய நிலையும் இருந்தது. கொஞ்சம் மெனக்கெட்டால் நாற்பதுக்கு நாற்பதை அள்ளியிருக்கலாம். ஏனெனில் கடந்த சட்டமன்றத் தோல்வி அதிர்ச்சியிலிருந்து திமுக அப்போதும் மீண்டிருக்கவில்லை. இந்த நிலைமையை அதிமுக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றுதான் இப்போது தோன்றுகிறது.

இம்முறை திமுகவின் ஒரே நம்பிக்கை நட்சத்திரம் ஸ்டாலின்தான். உழைப்புக்கு அஞ்சாத அவரது பிரச்சார அணுகுமுறையால் கட்சி தாண்டிய இமேஜை மக்களிடம் பெற்றிருக்கிறார். அடுத்த சட்டமன்றத் தேர்தலில் இவரை முதல்வர் பதவிக்கு திமுக முன்னிறுத்துமானால் பழைய பிரும்மாண்ட வெற்றிகளை மீண்டும் ருசிக்க முடியும். ஆனால் திமுகவின் பழைய தலைகள் சிலரின் முகத்தை பார்த்தாலே ‘கட் ப்ளாஷ்பேக்கில்’ மக்கள் டென்ஷன் ஆகிறார்கள். ஸ்டாலின் தன்னந்தனியராக கட்சியை மீண்டும் களத்தில் கம்பீரமாக நிறுத்தியிருப்பதுதான் இத்தேர்தலில் திமுகவுக்கு கிடைத்திருக்கும் போனஸ்.

திமுக கிடையாது. அதிமுக சேர்த்துக்கொள்ளவில்லை. எதிர்ப்பார்த்த மாதிரி கூட்டணி அமைக்க முடியவில்லை என்று பாஜக ஆரம்பத்தில் தடுமாறினாலும், தேர்தலுக்கு சில நாட்கள் முன்பாக வலுவான ஒரு கூட்டணியை அமைத்து அசத்தியது. கிளியும் பூனையுமாக இருந்த பாமகவையும், தேமுதிகவையும் ஒரே அணியில் நிறுத்தியது மாபெரும் சாதனை. நமோ அலை இருக்கிறதோ, இல்லையோ தமிழகத்தில் ஏதாவது ஒரு கட்சியோடு கூட்டணி அமைத்து வெற்றி காண்பதற்காகவே பிறப்பெடுத்த கட்சிகள் அத்தனையையும் ஓரணியில் சேர்த்ததின் மூலம் இத்தேர்தலில் குறிப்பிடத்தக்க அதிர்வுகளை பாஜக ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழகத்தில் காங்கிரஸைப் பொறுத்தவரை இத்தேர்தலில் பிளாக் ஹார்ஸ் என்றே கருதுகிறேன். திராவிடக் கட்சிகள் மீது சலிப்பு; பாஜக மீது வெறுப்பு என்றிருக்கும் கணிசமான தமிழக வாக்காளர்களுக்கு ‘கை’யே கலங்கரை விளக்கம். ஆம் ஆத்மி பற்றிய அறிதல் மிகக்குறைவாக இருக்கும் மாநிலத்தில் இதுவொன்றும் அதிசயமான நிகழ்வல்ல. சில அற்புதங்களையும், ஆச்சரியங்களையும் காங்கிரஸ் இங்கே நடத்திக்காட்ட வாய்ப்பிருக்கிறது. கை வராவிட்டால் ஆண்டுக்கு நூறு நாள் வேலை திட்டம் செயல்படுத்தப்படாது என்று கிராமங்களில் செய்யப்பட்ட அண்டர்கரெண்ட் பிரச்சாரத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸ்.

இடதுசாரிகளுக்கு இந்திய அளவில் தமிழகம் இப்போது சரியான பாதையை காட்டுமென்று தோன்றுகிறது. ஆயிரத்தி தொள்ளாயிரத்தி அறுபத்தி இரண்டில் சீனப்போரின் போது ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கட்சி உடைந்து பல துண்டுகளாக சிதறியது. ஐம்பத்தி இரண்டு ஆண்டுகள் கழிந்த நிலையில் இப்போது கொள்கையளவில் வேறுபாடுகள் இல்லாத நிலையில் ஏன் இத்தனை கட்சிகளாக பிரிந்திருக்க வேண்டும் என்றே தெரியவில்லை. அதிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசியக்கட்சி அந்தஸ்தை கூட இழந்துவிடும் என்கிற நிலையில் வெகுஜன பொதுவுடைமைக் கட்சிகள் ஒரே கட்சியாக வலுவாக உருவெடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. தமிழகத்தில் அவர்கள் பெறப்போகும் வாக்கு எதிர்காலத்தில் இந்திய அளவில் பல்வேறு தாக்கத்தை பொதுவுடைமைக் கட்சிகளிடம் ஏற்படுத்தும் என்று எதிர்ப்பார்க்கலாம்.

தேர்தலுக்கு பிறகு பல்வேறு மாவட்டங்களில் இருக்கும் நண்பர்களிடம் பேசி உணர்ந்ததில், நாற்பது தொகுதிகளில்...

அதிமுக பதினெட்டிலிருந்து இருபத்தைந்து இடங்களுக்குள் பெறலாம்.

திமுக கூட்டணி பத்திலிருந்து பதினைந்து இடங்கள் பெறலாம்.

பாஜக கூட்டணி மூன்றிலிருந்து எட்டு இடங்கள் பெறலாம்.

காங்கிரஸ் ஒன்றிலிருந்து மூன்று தொகுதிகள் வெல்லலாம்.

என்கிற கணிப்பு ஏற்பட்டிருக்கிறது.

நூற்றி நாற்பத்தி நான்கு உத்தரவு அதிமுகவுக்கு கடைசி இரண்டு நாட்களில் கை கொடுத்தது. பவர்ப்ளேவில் போடப்பட்ட எல்லா பந்துகளையும் சிக்ஸருக்கு விரட்டியிருக்கிறார் ஜெயலலிதா. இல்லாவிட்டால் திமுக கூட்டணி இன்னும் கூடுதலாக சில தொகுதிகள் வென்றிருக்க முடியும்.

பாஜக கூட்டணிக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கும் பட்சத்தில் அதிமுகவுக்கு எண்ணிக்கை குறையும்.

பாண்டிச்சேரி, கன்னியாகுமரி, தேனி ஆகிய தொகுதிகள் ‘கை’க்கு சாதகமாக இருக்கின்றன. தேனியில் திமுக, அதிமுக, மதிமுக என்று திராவிடக் கட்சிகள் மூன்றுமே சமபலத்தில் மோதுவதால் போட்டியின்றி காங்கிரஸ் முன்னணிக்கு வந்திருக்கிறது.

இத்தேர்தலில் குறிப்பிடத்தக்க லாபம் பெறப்போகும் கட்சிகள் பாமகவும், மதிமுகவும் என்று தோன்றுகிறது. அடித்துப் பிடித்து பதினான்கு தொகுதிகள் பெற்றிருந்தாலும், மாநிலம் முழுக்க அலைந்து திரிந்து பிரச்சாரம் செய்திருந்தாலும் கேப்டனுக்கு ஒன்றும் சொல்லிக்கொள்ளும்படி தேறப்போவதில்லை.

டெல்லியில் ஆட்சியமைக்க தமிழகத்தை பிடித்து யாரும் தொங்கவேண்டிய கட்டாயம் தேர்தல் முடிவுகளில் தெரியாது என்று யூகிக்க தோன்றுகிறது.

அடுத்த சட்டமன்றத் தேர்தலில் ஸ்டாலின்தான் முதல்வர் என்கிற எண்ணம் திமுகவினரிடம் மட்டுமின்றி, பொதுமக்களிடமும் வலுவாக ஏற்பட்டிருக்கிறது.

மே பதினாறு வரை பொறுப்போம்.

6 மே, 2014

புரட்சி படும் பாடு

சில மாதங்களுக்கு முன்பாக நடந்த புரட்சிகர கூட்டம் ஒன்றுக்கு சென்றிருந்தேன். புரட்சிகரமாக பேசிக்கொண்டிருந்த தோழர், முத்தாய்ப்பாக ஒரு புரட்சிகர கருத்தினை முன்வைத்தார். புரட்சிகர கூட்டம் அப்படியே மூக்கின் மேல் விரல் வைத்து புரட்சிகரமாக அதிசயித்தது.

“ஆதிசங்கரர் ஒரு கம்யூனிஸ்ட்”

இதை சொன்னதோடு மட்டுமில்லாமல் தன் கூற்றுக்கான புரட்சிகர ஆதாரங்களையும் அசைக்க முடியாத தர்க்க திறனோடு எடுத்துவைத்து பேசினார். இந்த தகவல் மக்கள் சீனத்தை எட்டி, அங்கே ஆதிசங்கரர் குறித்த புரட்சிகர ஆராய்ச்சிகள் பல்கலைக்கழகங்களில் நடந்து வருவதாக தகவல்.

மார்க்ஸ், லெனின், மாவோ படங்களையடுத்து ஆதிசங்கரரின் படத்தையும் சேர்த்து அச்சிட்டு தொலைக்கவேண்டுமோ என்று புரட்சிகரத் தோழர்கள் பகீர் ஆகிக்கொண்டிருந்த நிலையில், தோழர் ஆறுதலாய் இன்னொரு கூடுதல் கருத்தையும் சொன்னார். “ஆதிசங்கரர் கம்யூனிஸ்ட்டு என்பதற்காக சங்கரமடம் பொதுவுடைமைப் பாதையில் புரட்சிகரமாக செயல்படுவதாக அர்த்தமில்லை. அது பார்ப்பன பாசிஸ வதைக்கூடம் என்பதில் எனக்கு எந்த சந்தேகமுமில்லை”

புரட்சிகர தோழரை புரட்சிகர பெருமையோடு பார்த்து புரட்சிகரமாக மெய்சிலிர்த்தேன். புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி, புரட்சித்தமிழன், புரட்சிக்கலைஞர், புரட்சிதாசன், புரட்சிவெறியன், புரட்சிநேசன் என்று தமிழ்நாட்டில் புரட்சி தண்ணீர் பட்ட பாடாகிவிட்டாலும் இன்னமும் புரட்சி வருமென்ற நம்பிக்கை நமக்கு இல்லாமல் போய்விடவில்லை.

அதே புரட்சிகர தோழரின் அடுத்த புரட்சிகர கூட்டம் போன வாரம் நடந்தது. புரட்சிகர வேட்கையோடு குழுமியிருந்தோம். புரட்சிகர மைக்கை பிடித்த தோழர் புரட்சிகர ஆவேசத்தோடு புரட்சிகர கருத்துகளை தொடர்ச்சியாக புரட்சியாக முழங்கிக் கொண்டே இருந்தார். இந்த புரட்சிகர கூட்டத்திலும் ஒரு புரட்சிகர பிரகடனத்தை அறிவித்தார்.

“புரட்சி வராதுன்னு தெரியும். ஆனாலும் புரட்சி வரும்னு சொல்லி நாம மக்களை திரட்டி போராடிக்கிட்டு இல்லையா? அதுமாதிரிதான் இதுவும்....”

இந்த புரட்சிக் கூட்டத்திலாவது புரட்சிக்கான தேதியை அறிவிப்பார் என்கிற புரட்சிகர எதிர்ப்பார்ப்பில் புரட்சிகரமாக கூடியிருந்த தோழர்கள் சிலருக்கு இந்த புரட்சிகர அறிவிப்பு புரட்சிகர அதிருப்தியை தோற்றுவித்தது. உடனடியாக புரட்சிகர வெளிநடப்பு செய்து, அருகிலிருந்த தோழர் டீக்கடையில் (நாயர்கள் பெரும்பாலும் தோழர்கள்தான்) புரட்சிகர தேநீரும், புரட்சிகர சிகரெட்டும் அடித்தவாறே அடுத்தக்கட்ட புரட்சிகர நடவடிக்கைகளை புரட்சிகரமாக ஆலோசித்தார்கள்.

ஒரு தோழர் முன்வைத்த புரட்சிகர யோசனைதான் ஹைலைட்.

“பேசாம புரட்சித்தலைவியோட இயக்கத்துலே இணைஞ்சிடலாமா?”

2 மே, 2014

மணப்பெண் போல வெட்கம்!

தென்சென்னை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் வேட்பாளர் ஜே.சி.நந்தகோபாலை அணுகினோம். “ஆளே இல்லாம அவஸ்தை பட்டுக்கிட்டிருந்தேன் சார். தாராளமா வாங்க” என்று நம் கையைப்பிடித்துக்கொண்டு பெருந்தன்மையோடு ஒப்புக்கொண்டார். எவ்வளவு நாளைக்குதான் வாக்குச்சாவடிகளின் வெளியே வெயிலில் நின்றுக்கொண்டு கழுகு மாதிரி அலைவது. பூத்தில் ஏஜெண்டாக அமர்ந்து, வாக்குப்பதிவை கவனித்தால் என்ன. தேர்தலுக்கு முந்தைய நாள் திடீர் ஐடியா. நந்தகோபாலின் அனுமதிப்படிவம் கிடைத்தவுடனேயே ஏஜெண்டாக ஒரு வாக்குச்சாவடியில் அமர்ந்தோம்.


  • அதிகாலை ஆறு மணிக்கே வரச்சொல்லியிருந்தார்கள். ஐந்து ஐம்பத்தி ஒன்பது மணிக்கே அங்கிருந்தோம். கட்சியின் ஏஜெண்டுகள் எல்லாம் சாவகாசமாக ஏழு மணிக்கு மேல்தான் வந்தார்கள். வாக்குப்பதிவை தொடங்குவதற்கு முன்பாக ஏஜெண்டுகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரம் எப்படி செயல்படும். எண்ணும்போது எப்படி எண்ணப்படும் என்று இயந்திரத்தில் செயல்முறை விளக்கம் செய்துக் காட்டினார்கள். ‘கண்ட்ரோல் பேனல்’ எனப்படும் இயந்திரத்தில் வாக்குகள் எண்ணிக்கையை எண்ணக்கூடிய பொத்தான்களை அரக்கு கொண்டு ‘சீல்’ வைத்தார்கள். “இனிமேல் வாக்கு மட்டும் பதியப்படும். இதில் வேறெதையும் செய்யமுடியாது” என்று அதிகாரி உறுதியளித்தபிறகு வாக்குப்பதிவு தொடங்கியது.
  • வேட்பாளர் பெயருக்கு அருகில் இருக்கும் நீலக்கலர் பொத்தானை அழுத்தியதுமே ‘கீய்ங்’ என்று நீண்ட சப்தம் எழுகிறது. அவ்வளவுதான் வாக்குப்பதிவு. வாக்களிப்பது என்றால் என்னவோ, ஏதோவென்று ஆவலோடு வந்த முதன்முறை வாக்காளர்களுக்கு இம்முறை ‘சப்’பென்று இருக்கிறது. “அவ்வளவுதானா.. முடிஞ்சிடிச்சா?” என்று சந்தேகமாக ஒன்றுக்கு இருமுறை கேட்டுவிட்டு அதிருப்தியோடு கிளம்புகிறார்கள்.
  • ஃபுல் மேக்கப்பில் வந்த இளம்பெண் ஒருவர், “நெயில் பாலிஷை டிஸ்டர்ப் பண்ணாமே ‘மை’ வைங்க” என்று கேட்டுக்கொண்டார். குறும்புக்கார தேர்தல் அதிகாரி வேண்டுமென்றே அவரது விரலில் நீளமாக மையை இழுத்துவிட, “என்னங்க, இப்படி பண்ணிட்டீங்க. வீட்டுக்குப் போய் அழிச்சிடலாமா. நெயில்பாலிஷ் ரிமூவரை யூஸ் பண்ணா போயிடுமா?” என்று புலம்பிக்கொண்டே வாக்களித்து விட்டுச் சென்றார்.
  • பொதுவாக கணவர் வாக்களிக்கும் வேட்பாளருக்கு, மனைவி வாக்களிப்பதில்லை போலிருக்கிறது. தம்பதிசமேதரராய் வாக்களிக்க வரும் வாக்காளர்கள் சண்டை போட்டுக்கொண்டேதான் வீடு திரும்புகிறார்கள்.
  • அம்மா, அப்பாவோடு வாக்களிக்க வரும் குட்டீஸ், தங்கள் விரல்களிலும் ‘மை’ வைக்க வேண்டும். தாங்களும் பொத்தானை அமுக்க அனுமதிக்க வேண்டும் என்று வாக்குச் சாவடியில் திடீர் கு(ட்)டியுரிமை பிரச்சினையைக் கிளப்புகிறார்கள். அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைப்பதற்குள் தேர்தல் அதிகாரிகளுக்கு போதும், போதுமென்று ஆகிவிடுகிறது.
  • பலமுறை வாக்களித்தவர்களுக்கு கூட இன்னமும் வாக்களிக்கும்போது பதட்டம் ஏற்படுகிறது. பூத் ஸ்லிப்பை உரிய அதிகாரிகளிடம் காட்டாமல் பூத் ஏஜெண்டு, முதன்மை அதிகாரி, வீடியோ எடுக்கும் கல்லூரி மாணவர்கள் என்று ஒவ்வொருவரிடமாக திருவிளையாடல் தருமி மாதிரி காட்டிக்கொண்டே நுழைகிறார்கள்.
  • இருபது வயது இளம்பெண் ஒருவர் சிரித்துக்கொண்டே வந்தார். வாக்களித்து முடித்ததும் நாணத்தால் முகத்தை மூடிக்கொண்டு குலுங்கி குலுங்கி சிரித்தார். வெளியில் இருந்து அவரது தோழிகள் கலாய்த்துக் கொண்டிருக்க, கட்டுக்கடங்காத வெட்கம் பூத்து புது மணப்பெண் மாதிரி ஓடினார்.
  • இன்னொரு இளம்பெண் ஒருவருக்கு அவருக்கு பதிலாக வேறு ஏதோ ஒரு ஆயாவின் போட்டோ வந்துவிட்டது. “நான் நாப்பது வருஷத்துக்கு அப்புறம் எப்படியிருப்பேன்னு உங்க எலெக்‌ஷன் கமிஷன் கிராஃபிக்ஸ் பண்ணி போட்டோ போட்டிருக்காங்க” என்று கோபத்தோடு சொல்லிக்கொண்டே, வாக்களித்துவிட்டுச் சென்றார். பட்டியலில் போட்டோ மாற்றம், பெயர் மாற்றம் என்று ஏகப்பட்ட குளறுபடிகள். ஒரு தெருமுழுக்க இருந்த வாக்காளர்களுக்கு கணவர் பெயர்/தந்தை பெயர் பகுதியில் ஒரே ஒருவரின் பெயரே இடம்பெற்றிருந்தது. “இதனாலே வீட்டுலே பெரிய பிரச்சினைங்க” என்று அவர் மூக்கால் அழுதுக்கொண்டே புகார் சொல்லிவிட்டு வாக்களித்தார். வாக்காளர் அட்டை இருக்கிறது, ஆனால் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை மாதிரி ஏகப்பட்ட புகார்கள்.
  • எண்பத்தேழு வயது வாக்காளர் ஒருவர் தள்ளாடியபடியே வந்து மனைவியின் உதவியோடு (அவருக்கும் தள்ளாட்டம்தான்) வாக்களித்தார். “ஐம்பத்தி ஏழுலே இருந்து ஓட்டு போடறேன். வாக்குச்சீட்டில் முத்திரை குத்தி நாலா மடிச்சி பெட்டியில் போடற முறையிலே இருக்குற திருப்தி இந்த மெஷின் போலிங்க்லே இல்லை” என்று குறைபட்டுக் கொண்டார்.
  • கட்சி வேறுபாடு காரணமாக ஆரம்பத்தில் இறுக்கமாக இருக்கும் பூத் ஏஜெண்டுகள், கொஞ்சம் கொஞ்சமாக ரிலாக்ஸ் ஆகி, ஒருவருக்கொருவர் ஜாலியாக கமெண்டு அடித்து சிரித்துப் பேசிக்கொள்கிறார்கள். தங்களுக்கு தெரிந்த வாக்காளர் உள்ளே நுழையும்போது ‘சலாம்’ வைத்துவிட்டு, “இது எங்க ஓட்டு” என்று பக்கத்திலிருப்பவரிடம் பெருமையாக சொல்லிக் கொள்கிறார்கள். “நீங்க சுயேச்சை ஏஜெண்டா. பாவம். உங்களை யாரும் பெருசா கவனிக்க மாட்டாங்க. கவலைப்படாதீங்க. எங்களுக்கெல்லாம் பிரியாணி வரும். எல்லாரும் ‘ஷேர்’ பண்ணி சாப்பிடலாம்” என்று நம்மை ஆறுதல்படுத்தினார் மனிதாபிமானமிக்க ஏஜெண்டு ஒருவர். தேசியக்கட்சியின் ஏஜெண்டைப் பார்த்து, மாநிலக் கட்சியின் ஏஜெண்டு சவால் விட்டுக் கொண்டிருந்தார். “இந்த மெஷின்லே மட்டும் உங்களுக்கு பத்து ஓட்டு விழுந்துடட்டும். நான் ஒரு பக்க மீசையே எடுத்துக்கறேங்க”. சரியான இடைவெளிகளில் டிஃபன், கூல்டிரிங்க்ஸ், சாப்பாடு, டீ-யென்று தங்கள் பூத் ஏஜெண்டுகளையும், தேர்தல் அதிகாரிகளையும், போலிஸ்காரர்களையும் நல்ல விருந்தோம்பலோடு கவனித்துக் கொண்டார்கள் அரசியல் கட்சியினர்.
  • காலையில் கறாராக இருந்த பாதுகாப்புக்கு வந்திருந்த போலிஸார், மதியத்துக்குள் ஜாலியாகி விட்டார்கள். “உங்களுக்கெல்லாம் ஆறு மணிக்கே ட்யூட்டி முடிஞ்சிடும். மெஷினை எல்லாம் பாதுகாப்பா அனுப்பி, மே பதினாறாம் தேதி வரைக்கும் பாதுகாத்து, வாக்கு எண்ணிக்கை முடியறவரைக்கும் எங்களுக்கெல்லாம் டென்ஷன்தான். தேர்தல் நல்லா நடந்தா எல்லாரும், எல்லாருக்கும் நன்றி சொல்லுவாங்க. எங்களுக்கு மட்டும் இதுவரைக்கும் யாருமே தேங்க்ஸ் சொன்னதில்லை” என்றார் நம் பூத் வாசலில் நின்ற போலிஸ்காரர்.
  • மதியத்துக்கு மேல் கெடுபிடிகள் குறைய கருப்பு பேண்ட், வெள்ளைச்சட்டை யூனிஃபார்மில் கட்சிகளின் ‘அல்லக்ஸ் பாண்டியன்கள்’ களமிறங்கினார்கள். ஏன், எதற்கு என்று அவர்களுக்கே காரணம் தெரியாமல் ஆங்காங்கே மனம்போன போக்கில் சுற்றிக் கொண்டிருந்தார்கள். சும்மாவாச்சுக்கும் கையில் ஒரு நோட்பேடை வைத்துக்கொண்டு, ‘எவ்வளவு போலிங்?’ என்று சம்பந்தமில்லாதவர்களிடமெல்லாம் விசாரித்துக்கொண்டு, எதையோ கிறுக்கிக் கொண்டு நகர்ந்தார்கள். வாக்குச்சாவடிக்குள் நுழைந்து பூத் ஏஜெண்டுகளிடம் ‘பந்தா’ காட்டுவதற்காக, ரொம்ப அடிப்படையான விஷயங்களை (ஆளை பார்த்து உள்ளே விடுங்க, வெளியே வர்றப்போ டிக்ளரேஷன் ஃபார்ம் வாங்கிட்டு வாங்க) அறிவுறுத்திக் கொண்டிருந்தார்கள். ஓவராக லந்து செய்துக்கொண்டிருந்த ‘அல்லக்ஸ்’ ஒருவரை கழுத்தாமட்டையில் ஒரு போடு போட்டு வெளியே இழுத்துச் சென்றார் போலிஸ்காரர் ஒருவர்.
  • தென்சென்னை அதிமுக வேட்பாளர் டாக்டர் ஜெ.ஜெயவர்த்தன் பூத், பூத்தாக உள்ளே வந்து தேர்தல் எப்படி நடக்கிறது என்று கண்காணித்துக் கொண்டிருந்தார். கட்சி வேறுபாடு இல்லாமல் பூத் ஏஜெண்டுகள், தேர்தல் அதிகாரிகள் அனைவரையும் பார்த்து “எல்லாரும் சாப்பிட்டீங்களா? எங்க ஆளுங்க நல்லா கவனிச்சுக்கறாங்களா?” என்று விசாரித்தார். போலவே, திமுகவின் முன்னாள் சென்னை மேயரான மா.சுப்பிரமணியமும் ஒவ்வொரு பூத்துக்கும் நேரடி விசிட் அடித்துக் கொண்டிருந்தார்.
  • சரியாக ஆறு மணிக்கு வாக்குப்பதிவு முடிந்தது. நாமிருந்த வாக்குச்சாவடியில் ஐம்பத்தி ஐந்து சதவிகிதம்தான். “படிச்சவங்க அதிகம் வசிக்கிற பகுதியில்லே? அதனாலேதான் வாக்கு போடணும்னு இவ்வளவு விழிப்புணர்வு!” என்று சக ஏஜெண்ட் ஒருவர் கிண்டலாக கமெண்ட் அடித்தார். கண்ட்ரோல் மெஷினை இயக்க முடியாதவாறு அதிகாரிகள், ஏஜெண்டுகள் முன்னிலையில் ‘சீல்’ வைத்து, ஒழுங்காக தேர்தல் நடந்தது என்கிற உறுதிமொழிப்படிவம் வந்து எல்லா ஏஜெண்டுகளிடம் கையெழுத்து வாங்கினார்கள். ஒரு காப்பியை நமக்கும் தந்தார்கள். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தேர்தல் என்பது இவ்வளவுதான்.
    (நன்றி : புதிய தலைமுறை)