2 ஜனவரி, 2015

கோணல் பக்கங்கள் வெர்ஷன் 2015

தினகரன் இணைப்பிதழ்கள் முதன்மை ஆசிரியர் கே.என்.சிவராமன் ஃபேஸ்புக்கில் எழுதிய பதிவு :

தலைப்பை பார்த்ததும் அதிகப்படியாக தோன்றலாம். கோபமும் வரலாம்.

ஏனெனில் 'கோணல் பக்கங்கள்' என்னும் தலைப்பு சாரு நிவேதிதாவுக்கு சொந்தமானது. அவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் - பத்திகள் இந்த பொது தலைப்பின் கீழ்தான் மூன்று பாகங்களாக தொகுக்கப்பட்டிருக்கின்றன. மட்டுமல்ல, அவை விற்பனையிலும் இன்றுவரை சாதனை படைத்து வருகின்றன.

ஒருவகையில் இந்த 'கோ.ப'களை Trend Setter என்றும் குறிப்பிடலாம். காரணம், 2000க்கு பிறகான தமிழ் பத்தி / கட்டுரை எழுத்துக்களில் ஒரு மாற்றத்தை - பாய்ச்சலை ஏற்படுத்தியது இந்த மூன்று பாகங்கள்தான். எனவேதான் புது வாசகர்களின் ஆரம்பகால 'கைடாகவும்', அறிமுக எழுத்தாளர்களின் தமிழ் நடையை தீர்மானிக்கும் காரணியாகவும் இந்த மூன்று பாகங்களே விளங்குகின்றன.

அவ்வளவு ஏன், 'சாரு நிவேதிதா' என்று சொன்னதுமே நினைவுக்கு வருவது 'கோணல் பக்கங்கள்'தானே?

அப்படியிருக்க அந்த தலைப்பை யுவகிருஷ்ணாவின் புதிய கட்டுரை தொகுப்பான 'சரோஜாதேவி' குறித்த அறிமுகத்துக்கு பயன்படுத்துவது எந்த விதத்தில் நியாயம் என்று புருவத்தை உயர்த்துவம், சட்டையை பிடித்து கேள்வி கேட்க முற்படுவதும் இயல்புதான்.

இதற்கு ஒரே விடை, 45 கட்டுரைகள் அடங்கிய இந்த நூலை படித்துப் பாருங்கள் என்பதுதான்.

யெஸ்... 'கோணல் பக்கங்களை' வாசிக்கும்போது என்னவகையான வசீகரிப்பை உணர்ந்தீர்களோ அதை அப்படியே யுவகிருஷ்ணாவின் 'சரோஜாதேவி'யிலும் உணரலாம். அதே துள்ளல் நடை. நக்கல். நையாண்டி.

ஆனால் -

எந்த இடத்திலும் இவர் சாருவின் மொழியை, நடையை காப்பி அடிக்கவில்லை என்பது முக்கியம். அதாவது முழுக்க முழுக்க இது 'லக்கி' பாணி.

சாம்பிளுக்கு கேப்டன் டிவியில் ஒளிபரப்பாகும் 'சமையல் மந்திரம்' நிகழ்ச்சி தொடர்பான கட்டுரையை எடுத்து கொள்வோம். அதில் -

//சமையல் குறிப்பு முடிந்ததுமே ஆலோசனை நேரம். நேயர்கள் யாராவது சந்தேகம் கேட்கிறார்கள். அந்த கடிதத்தை நிகழ்ச்சி பார்க்கும் நாமே கூச்சப்படும் வகையிலான குரலில் கொஞ்சிக் கொஞ்சி தொகுப்பாளர் படிப்பார். டாக்டரும் அசால்டாக, சிவராஜ் சித்தவைத்தியரை மிஞ்சும் வகையில் பதில் சொல்வார். இம்மாதிரி நிகழ்ச்சிகளில் கேட்கப்படும் கேள்விகள் ஒரே மாதிரியாகதான் அலுப்பூட்டும். ‘இருபது வருட கைவேலை, ரொம்ப சிறுத்திடிச்சி’, ‘கல்யாணம் முடிஞ்சி எட்டு மாசமாவது, இதுவரைக்கும் ஒண்ணுமே முடியலை’ ரேஞ்சு சந்தேகங்கள்தான்.

கேள்வியைப் படித்துக் கொண்டிருக்கும்போதே டாக்டர் குறுக்கிட்டு ஏதாவது கமெண்டு சொல்வார். “மெட்ரோ வாட்டர் பைப் மாதிரி யூஸ் பண்ணுவார் போலிருக்கே?” என்று டாக்டர் ஒரு போடு போட, கிரிஜா ஸ்ரீயோ ஒரு படி மேலே போய் “ஆமாம். அப்படித்தான் நானும் நினைக்கிறேன்” என்று புகுந்து விளையாடுகிறார். “இவருக்கு இன்னேரம் கைரேகையெல்லாம் அழிஞ்சிட்டிருக்கும்னு நெனைக்கிறேன்” என்று டாக்டர் சீரியஸாக கமெண்ட் செய்ய, “பின்னே.. கொஞ்ச நஞ்ச உழைப்பா” என்று டாக்டரையே காலி செய்கிறார் கிரிஜா.//

என்று நக்கல் அடித்துவிட்டு இப்படி முடித்திருக்கிறார்... //நிகழ்ச்சிக்கு பிரமாதமான வரவேற்பு இருப்பதால், நிகழ்ச்சி நேரத்தை கொஞ்சம் ‘நீட்டிக்க’ சொல்லி நிறைய நேயர்கள் கேட்கிறார்கள். கேப்டன்தான் மனசு வைக்கணும்//

இணையதளத்தில் சக்கை போடு போட்ட 'சவிதா பாபி' காமிக்ஸ் மற்றும் 'நேஹா ஆண்ட்டி' ஆகிய இரு 'ஏ'டாகூடமான கதைகள் / தளங்கள் குறித்தும் தனித்தனி கட்டுரை எழுதியவர் -

பெரிதும் வாசிக்கப்பட்ட 'மாலதி டீச்சர்' குறித்து எழுதாதது வருத்தமளிக்கிறது

'விர்ச்சுவல் விபச்சாரம்' கட்டுரை இணையத்தில் நடக்கும் மோசடி தொடர்பானது. சபலப் பேர்வழிகளை குறி வைத்து எப்படி சாட்டிங் மூலம் பணம் பறிக்கிறார்கள் என்று விவரித்திருக்கிறார்.

'Undie Party', ஐரோப்பிய நாடுகளில் நடக்கும் கூத்தை சிரிக்க சிரிக்க சொல்கிறது. எப்படி என்கிறீர்களா?

//Undie Party என்பது என்ன?

இந்த பார்ட்டியில் கலந்துகொள்ளும் முதல் நூறு பேருக்கு தேசிகுவல் இலவசமாக ஆடைகளை அளிக்கும். அவர்கள் அறிவிக்கும் தேதியில், அறிவிக்கும் கடைக்கு வந்து திருப்பதி க்யூ மாதிரி வரிசையாக நிற்கவேண்டும். First come, First gift அடிப்படையில் பார்ட்டி நடக்கும். பார்ட்டியில் கலந்துகொள்ள ஒரே ஒரு நிபந்தனை உண்டு. ஆணாக இருப்பின் ஜட்டியோ அல்லது ட்ரவுசரோ மட்டுமே அணிந்து வரவேண்டும். பெண்களுக்கு கொஞ்சம் கூடுதல் சலுகை உண்டு. கீழாடையோடு, மார்க்கச்சையும் அணிந்து வரலாம்.

100 பேருக்குதான் இலவச ஆடை தரமுடியுமென்றாலும் தங்களுக்கும் 'டோக்கன்' (நம்மூர் இலவச டிவிக்கு கொடுப்பது மாதிரி கொடுக்கிறார்கள்) கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்று ஆயிரக்கணக்கில் மக்கள் 'ஆய் டிரெஸ்' போட்டுக்கொண்டு குவிந்துவிட Undie party நடந்த நகரங்களில் எல்லாம் திருவிழாக்கோலம் தானாம். பற்களை கிடுகிடுக்க வைக்கும் ஐரோப்பா குளிரிலும் அனல் பறக்கிறதாம். பார்ட்டியில் பங்குபெற ஐநூறு பேர் வந்தால்.. பார்வையாளர்கள் பத்தாயிரக் கணக்கில் குவிகிறார்களாம். ஆபிஸுக்கு லீவ் போட்டுவிட்டெல்லாம் நிறைய பேர் வந்து விடுவதால், விரைவில் அரசு பொதுவிடுமுறையாக Undie party தினம் அறிவிக்கப்படலாம்.//

இதே அதகளம்தான் -

'சரோஜாதேவி', 'போட்டுத் தாக்கு', 'சன்னி லியோன்', 'பிட்டு பார்த்தது ஒரு குற்றமா?', 'இந்தக் காதலுக்கு எத்தனை கோணம்?', 'பிரதி ஞாயிறு 9.00 மணி முதல் 10.30 வரை', 'தன்வி வியாஸ்', 'No Bra day', 'உலகின் முதல் அஜால் குஜால் 3டி படம்', 'ஹோல்டன்', 'அமலாபால்', 'நடுநிசி அழகிகள்', 'The Dirty Picture', 'இரண்டு முக்கிய செய்திகள்', 'தோழர் ஷகீலா', 'irony', 'பெண் ஏன் அழகாக இருக்கிறாள்?', 'அநாகரிகம்', 'நமீதா இட்லி ரெடி', 'சிலுக்கலூர்பேட்டை!', 'Hisss', 'என் கூட விளையாடேன்!', 'நிக்கி லீ!', 'அஜால் குஜால் டிவி', 'அடிக்கடி தொலையும் 'அந்த' மேட்டர்!', 'நல்லசிவம் செத்துட்டான் சதாசிவம் பொழைச்சிட்டான்!', 'முதல் பாவம்', 'மீசை!', 'ஷகீரா!', 'காண்டம்... காண்டம்...', 'ஒன்பது - ஒன்பது - ஒன்பது', 'ஆன்மீகம்', 'மிஸ் கிளாமர் வேர்ல்டு', 'வாணிகபூர்', 'எங்க சின்ன ராசா', 'கிராவிட்டி', 'தியேட்டர்லோ நல்குரு (தெலுங்கு)', 'கலகலப்பு', 'ஒரு கல் ஒரு கண்ணாடி', 'காஜல் அகர்வால்'

ஆகிய கட்டுரைகளிலும்.

மொத்தத்தில் பாலியல் சார்ந்த விவகாரங்களை அங்கதத்துடன் அனைத்து கட்டுரைகளிலும் யுவ கிருஷ்ணா பதிவு செய்திருக்கிறார். ஒருவகையில் இது நம் மரபின் நீட்சிதான். எப்படி கூத்துக்கலையில் கட்டியங்காரன் தீடீரென்று தோன்றி ஒரு சொல் அல்லது வாக்கியம் வழியாக ஆதிக்கத்தை கேள்வி கேட்டு நக்கல் செய்வானோ -

அப்படித்தான் இந்த நூல் முழுவதும் நையாண்டியுடன் இன்றைய உலகை எதிர்கொண்டிருக்கிறார்.

அதாவது, இந்தியாவில் உலகமயமாக்கல் அறிமுப்படுத்தப்பட்ட பிறகு பிறந்தவர்களின் உலகப் பார்வையை புரிந்து கொள்ள உதவியிருக்கிறார்.

சொல்வதற்கில்லை நாளை எழுத வரும் எழுத்தாளனுக்கு கோனார் நோட்ஸாக இந்த நூல் அமையலாம். அதனாலேயே இந்த பதிவுக்கு தலைப்பாக 'கோணல் பக்கங்கள் வெர்ஷன் 2015' என பெயர் வைத்திருக்கிறேன்.

வாழ்த்துகள் யுவ கிருஷ்ணா, நாளைய வாசகர்களையும், எழுத்தாளர்களையும் உருவாக்கப் போவதற்கு.

நூல் : சரோஜா தேவி,
வெளியீடு : உயிர்மை பதிப்பகம்
விலை : ரூ.100 / -

ஜனவரி 3, 2015 அன்று மாலை 5.30 மணிக்கு இந்த நூல் வெளியிடப்படுகிறது. இடம் : சென்னை புக்பாயிண்ட் அரங்கம்.



ஆன்லைன் மூலமாக நூலினை வாங்க...

29 டிசம்பர், 2014

ஓவர் முற்போக்கு ஒடம்புக்கு நல்லதில்லை

 இன்னமும் ‘மாதொருபாகன்’ வாசிக்கவில்லை.

எனவேதான் அந்த நூல் மதவெறியர்களால் எரிக்கப்பட்டது என்று கேள்விப்பட்டபோது கோபம் வந்தது. ஒருவேளை முன்பே வாசித்திருந்தால் கோபப்பட்டிருக்க வாய்ப்பேயில்லை. ‘மாதொருபாகன்’ நாவலுக்கும், எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்களுக்கும் ஆதரவான இயக்கங்களில் பங்குகொள்ள தயாராக இருப்பதாக சில நண்பர்களிடம் ஒப்புக்கொண்டிருந்தேன். என்னுடைய ஆதரவை முற்றிலுமாக ‘வாபஸ்’ வாங்கிக் கொள்கிறேன்.

நண்பர் ஒருவர் அந்நாவலின் 'objectionable content' என்னவென்பதை முகநூலில் இட்டிருந்தார். சற்றுமுன்புதான் அதை பார்த்தேன். அந்த இரு பக்கங்களையும் வாசித்தபோது திருச்செங்கோடுவாழ் நண்பர்களுக்கு எவ்வளவு கோபமும், வன்மமும் ஏற்படும் என்பதை புரிந்துக்கொள்ள முடிகிறது. மடிப்பாக்கத்தில் இப்படியொரு ‘தேர்த்திருவிழா’ நடந்தது என்று ஏதேனும் ஒரு படைப்பாளி, தன் கருத்துச் சுதந்திரத்தின் வாயிலாக புனைந்திருந்தாலும் எனக்கும் இப்படிதான் இருந்திருக்கும்.

ஆதாரமில்லாமல் வாய்வழியாக சொல்லப்படுகிற ஒரு கதையை, இலக்கியத்தின் ஏதோ ஒரு வடிவில் பதிவு செய்யப்படும்போது அது வரலாறாக நம்பப்பட்டு விடுகிற ஆபத்து இருக்கிறது. புராண இதிகாசப் பாத்திரங்களையே கூட மக்கள் அப்படிதான் நம்பி தொலைத்துக்கொண்டு நம் கழுத்தை அறுக்கிறார்கள் இல்லையா? இன்னமும் ராமர்பாலம் இருக்கிறது, அதை ராமரின் ப்ளான்படி குரங்குகள் போட்டது என்று எந்த லாஜிக்கும் இல்லாமல் மத்திய அரசேகூட நம்புகிறதுதானே?
ஏதோ காரணங்களால் குழந்தைப்பேறு தள்ளிப்போகும் அல்லது நிரந்தரமாக குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத பெண்களை ‘மலடி’ என்று இழிவுப்படுத்துவதைவிட மோசமான இழிவுப்படுத்துதலை ‘மாதொருபாகன்’ செய்திருக்கிறது. பெண்ணியவாதிகள், எப்படி இந்த நாவலை ஆதரித்து பேசுகிறார்கள் என்றெல்லாம் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. அவர்களும் இன்னமும் என்னைப்போலவே நாவலை வாசித்திருக்க வாய்ப்பு இருந்திருக்காது.

இப்படியொரு ‘கூட்டுக்கலவி’ சித்தரிப்பு, அந்த நாவலுக்கு அவசியமாக வேண்டுமென்கிற கட்டாயம் இருக்கும் பட்சத்தில் ஏதோ ஒரு கற்பனையூரில் நடைபெறுவதாக எழுதியிருக்கலாம். அப்படியும்கூட குழந்தை இல்லாத பெண்களுக்கு இப்படியொரு வாய்ப்பினை கொடுத்தார்கள் என்பதற்கு ஏதேனும் ஆதாரம் தேவை. ஆதாரமற்ற அவதூறுகளை முற்போக்கின் பெயரால் ஆதரிக்க முடியாது. ‘தேவடியா பையா’ என்று திட்டினால் முற்போக்காளனாக இருந்தாலும், அவனுக்கும் கோபம் வருவதுதானே யதார்த்தம்?

“எல்லா விஷயங்களுக்கும் எழுத்துப்பூர்வமான ஆதாரத்தை வழங்க முடியாது” என்கிறார் பெருமாள் முருகன். இது தட்டிக் கழிக்கும் பொறுப்பற்ற பதில்.

வரலாற்று ஆய்வறிஞரான அ.கா.பெருமாள், தியோடர் பாஸ்கரன் போன்றவர்கள் சில தகவல்களை சொன்னார்கள் என்றும் அவர் சொல்கிறார். ஆதாரப்பூர்வமாக அவர்கள் ஏதேனும் சொன்னார்களா, அல்லது வாய்வழி வார்த்தையாக பரப்பப்பட்ட தகவல்களா என்று தெரியவில்லை.

மேலும் இந்த தேர்த்திருவிழா சித்தரிப்புகளுக்கு வாய்வழியாக சொன்னவர்கள்தான் ஆதாரம், அவர்களை அறிமுகப்படுத்தினால் பாதுகாப்பு இருக்காது என்றும் சொல்கிறார். வாய்வழி வார்த்தைகள் எப்படி வரலாறு ஆகும்?

அதுவுமின்றி 2011ல் வெளியான நாவலுக்கு ஏன் 2014ல் போராட்டம் என்பது புரியவில்லை. மூன்று ஆண்டுகளாக இதை திருச்செங்கோடுகாரர்களோ, ஜாதிய அமைப்புகளிலோ அல்லது இந்து அமைப்புகளிலோ ஒருவர்கூடவா வாசித்ததில்லை. எங்கோ லாஜிக் ‘லைட்டாக’ உதைப்பது போலதான் இருக்கிறது. ‘மாதொருபாகன்’ நாவலின் இருகோண முடிவு தனித்தனியாக இரண்டு நாவலாக ‘ஆலவாயன்’, ‘அர்த்தநாரி’ என்று இப்போது காலச்சுவடு வெளியிடப் போகிறதே, அதற்கான டிரைலரா இது?

17 டிசம்பர், 2014

இந்தியாவின் முதல் பெண் வக்கீல்

நாடு சுதந்திரம் வாங்கியதிலிருந்து எத்தனையோ ‘முதல்’ பட்டியலிட்டிருக்கிறோம். இந்தியாவின் முதல் பெண் வக்கீல் யார் என்பதை மட்டும் யாரும் கண்டுகொண்டதாக தெரியவில்லை. இதற்குப் பின்னணியில் ஓர் ‘அரசியல் உள்குத்து’ இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்களேன். ஆனால் நமக்கு அப்படியான எந்த நிர்ப்பந்தமும் இல்லை.

பம்பாய் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற முதல் பெண்.

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்த முதல் பெண்.

பிரிட்டன் பல்கலைக்கழகத்தில் படித்த முதல் இந்தியர்.

உலக சட்ட வல்லுனர்களின் மெக்காவான சரித்திரப் பாரம்பரியம் பெற்ற லண்டனின் ‘லிங்கன்ஸ் இன்’ வளாகத்தில் இவரது மார்பளவு சிலை இரு ஆண்டுகளுக்கு முன்பாக நிறுவப்பட்டிருக்கிறது.

இவ்வளவு சரித்திரப் பிரசித்தி பெற்றவரின் பெயர் ஏன் இந்தியாவில் அவ்வளவாக உச்சரிக்கப்படுவதில்லை. இவரைப் பற்றி ஏன் நாம் முன்பே அறிந்திருக்கவில்லை. அதுதான் முதல் பாராவிலேயே சொல்லிவிட்டோமே. ‘அரசியல் உள்குத்து’.

அதற்குள் நுழைய வேண்டாம். சொராப்ஜி யாரென்று மட்டும் சிறுகுறிப்பாக தெரிந்து வைத்துக் கொள்வோம்.

‘Indian calling : The Memoirs of Cornelia Sorabji’ என்கிற நூல் 1934ல் வெளியிடப்பட்டது (2001ல் ஆக்ஸ்போர்டால் மீண்டும் வெளியிடப்பட்டிருக்கிறது). ஆசியப் பெண்களின் நிலை பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் எப்படி இருந்தது என்பதற்கான துல்லியமான சரித்திர ஆதாரமாக இந்நூல் விளங்குகிறது. தன் வரலாறு கூறும் இந்நூலில் பெண் என்கிற ஒரே ஒரு காரணத்தால் தான் சந்திக்க நேர்ந்த தடைகளை, அவற்றை உடைத்தெறிந்த சாதனைகளை பதிவு செய்திருக்கிறார் சொராப்ஜி.

கிறிஸ்துவ பார்ஸி கலப்புக் குடும்பத்தில் 1866ல் பிறந்தவர் சொராப்ஜி (மகாத்மா காந்தியைவிட மூன்று வயது மூத்தவர்). 1954ல் அவர் மறைந்தபோது கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளை பொதுவாழ்க்கைக்காக செலவழித்திருந்தார்.

அப்பா சொராப்ஜி கர்சேட்ஜி பார்ஸி. அம்மா பிரான்ஸினா போர்ட், வெள்ளை தம்பதியினரால் தத்தெடுத்து வளர்க்கப்பட்ட இந்தியர். கிட்டத்தட்ட நூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இந்தியப் பெண்களுக்கு கல்வியெல்லாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத சுதந்திரம். வெகுசில பெண்களுக்கு மட்டும் அதிகபட்சமாக வீட்டிலேயே எழுதப் படிக்க கற்றுத் தருவார்கள்.

இந்நிலை மாற போராடியவர் பிரான்ஸினா. புனே நகரில் பெண்களுக்கான பிரத்யேகப் பள்ளிகளை நிறுவியவர் அவர். ஊரார் குழந்தைகள் எல்லாம் நல்ல கல்வி கற்கவேண்டும் என்று நினைத்தவர், சொந்த மகளை எப்படி வளர்த்திருப்பார்? சொராப்ஜியின் வாழ்க்கை அவரது அம்மாவால் திட்டமிடப்பட்டது.

அவரது பெற்றோர் இருவருமே படித்தவர்கள் என்பதால் வீட்டிலும், பள்ளியிலும் மாறி மாறி கல்வி போதிக்கப்பட்டது. பம்பாய் பல்கலைக்கழகத்தில் பட்டம் படிக்க விண்ணப்பித்தபோது, ஒரு பெண்ணால் பட்டம் பெறமுடியுமா என்று நாடே ஆச்சரியத்தில் வாயைப் பிளந்தது. ‘கலி முத்திடிச்சி’ என்று தலையில் அடித்துக் கொண்டார்கள் அன்றைய ஆண்கள். வெற்றிகரமாக பட்டப்படிப்பை அங்கே முடித்தார்.

கூட படித்த பிரிட்டிஷ் நண்பர்களின் ஆலோசனைபடி மேற்படிப்பாக ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பித்தார். அதுவரை ஆண்களே கூட நாடு கடந்து படித்ததில்லை. பெண்களை சட்டநிபுணர்களாக ஏற்றுக்கொள்ள பிரிட்டிஷ் அரசே கூட தயங்கிய காலம் அது. எனவே எந்த கல்விச்சலுகையோ, மற்றவர்களுக்கு கிடைக்கக்கூடிய ஸ்காலர்ஷிப்பையோ தரமுடியாது என்றுகூறி இவரை தட்டி கழிக்க முயற்சித்தார்கள். நண்பர்கள் பணம் திரட்டி கொடுத்து சொராப்ஜியை சாமர்வில்லே கல்லூரியில் இளநிலை சட்டம் படிக்க வைத்தார்கள் (1889 – 1892).

பார் கவுன்சிலுக்கு விண்ணப்பித்தார். ஆரம்பத்தில் பிரிட்டிஷ் அதிகாரிகள் இவரை சட்ட வல்லுனராக பணியாற்ற அனுமதிக்க தயங்கினார்கள். ஏனெனில் இந்தியாவில் ‘பர்தானஸின்’ (purdahnashins) என்கிற கொடுமையான வழக்கம் நடைமுறையில் இருந்தது. அதாவது பெண்கள், அந்நிய ஆண்களுக்கு மத்தியில் பணியாற்ற மத ரீதியான தடை இருந்தது.

அப்படி இருக்கையில் சொராப்ஜி எப்படி ‘பாரிஸ்டர்’ ஆக பணியாற்ற முடியும் என்றே பிரிட்டிஷ் அதிகாரிகள் கேள்வி எழுப்பினார்கள். ‘அதெல்லாம் என்னுடைய கவலை. நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று உறுதியளித்த சொராப்ஜி, முறையாக தேர்வு எழுதி பார் கவுன்சிலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு (இப்போது அவர் சிலை நிறுவப்பட்டிருக்கும் அதே லிங்கன்’ஸ் இன் தான்) சட்டப் பயிற்சி பெற்றார்.

1894ல் இந்தியாவுக்கு திரும்பினார். அவரால் வீட்டுக்குள்ளேயே இருந்து சட்ட ஆலோசனைதான் வழங்க முடிந்ததே தவிர கோர்ட்டுக்கு போய் வாதாட முடியவில்லை. சில வழக்குகளுக்கு வக்கீல் நோட்டிஸ் வழங்குவது மாதிரி நடைமுறைகளை அவரால் செய்ய முடிந்ததே தவிர, கட்சிக்காரர்களுக்காக நேரடியாக நீதிபதி முன்பாக வாதாட முடியவில்லை.

இந்நிலை விரைவில் மாறும் என்கிற நம்பிக்கையில் 1897ல் பம்பாய் பல்கலைக்கழகத்தில் LLB தேர்வும், 1899ல் அலகாபாத் நீதிமன்றத்தில் ப்ளீடர்ஸ் தேர்வும் எழுதி முடித்தார். ஆனாலும் அவர் இருபத்தாறு ஆண்டுகள் கழித்து 1924ல்தான் பாரிஸ்டராக நீதிமன்றத்தில் நுழைய முடிந்தது. இந்த கால்நூற்றாண்டு காலம் மொத்தமும் பெண்கள், ஆண்களுக்கு இணையாக பணியாற்ற கூடிய உரிமைக்காக அரசிடம் தொடர்ச்சியாக போராடிக்கொண்டே இருந்திருக்கிறார். சமூகத்திலும் இப்பிரச்சினை குறித்த விழிப்புணர்வை உணர்வாக தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்த வண்ணம் இருந்தார்.

பாரிஸ்டராக கோர்ட்டில் நுழைய முடியவில்லையே தவிர சட்டப்பணிகளை செய்துக்கொண்டுதான் இருந்திருக்கிறார். சட்ட ஆலோசகராக பலருக்கும் அவரால் உதவ முடிந்திருக்கிறது. சுமார் 600 கிளையண்டுகளுக்கு (பெரும்பாலும் பெண்கள்) அவர் சட்டரீதியாக உதவியிருக்கிறார். பலரிடம் ஃபீஸ் கூட வாங்கவில்லை.

1924ல் பெண் வக்கீல்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், கொல்கத்தாவில் பணியாற்றினார். ஆனாலும் ஒரு பெண் வக்கீல் நீதிமன்றத்துக்கு வந்து வாதாடுவதா என்கிற ஆணாதிக்க சூழலில் அவரால் முழுமையாக பணி செய்யமுடியவில்லை. 1929ல் பணி ஓய்வு பெற்று லண்டனுக்கு குடியேறினார்.

வக்கீல் தொழிலில் அவருக்கு பெரிய மனநிறைவு இல்லையென்றாலும், இந்தியப் பெண் வக்கீல் சமூகத்துக்கு கோர்ட்டுகளின் கதவை திறந்துவைத்த பெருமையோடு திருப்திபட்டுக் கொண்டார்.

தன்னுடைய அனுபவங்களையும், அப்போதிருந்த சமூக சூழலையும் தொடர்ச்சியாக எழுதி நூலாக வெளியிட்டு வந்திருக்கிறார். 1902ல் தொடங்கி 1934 வரை பத்துக்கும் மேற்பட்ட நூல்கள் வெளிவந்திருக்கிறது. நூல்களின் தலைப்புகளை பாருங்கள். இந்தியாவுக்கு எவ்வளவு முக்கியமானவர் இவர் என்பது தெரியும்.

Love and life behind the purdah (சிறுகதைகள், 1902)

Sun babies : studies in the child life of india (1904)

Between the twilights : Being studies of India women by one of themselves (1908)

Social relations : England and India (1908)

Indian tales of great ones among men, women and bird people (1916)

The purdahnashin (1917)

Therefore (தன் பெற்றோரை பற்றிய நினைவுகள், 1924)

Gold mohur : Time to remember (நாடகம், 1930)

Indian calling (1934), India recalled (1936) –சுயசரிதையின் இரு பாகங்கள்.

இது தவிர்த்து Queen mary’s book of India நூலுக்கு பிரபல எழுத்தாளர்கள் டி.எஸ்.எலியட், தோரத்தி சாயர்ஸ் ஆகியோரோடு இணைந்து பணியாற்றியிருக்கிறார்.

(நன்றி : தினகரன் வசந்தம்)

15 டிசம்பர், 2014

ஒடுக்கப்படுவது யார்?

பொதுவாக ஜெயமோகனை முற்றிலுமாக புறக்கணிக்க முடியாது.

ஏனெனில் அவர் பத்து பொய்களை எழுதும்போது இடையிடையே ஓரிரண்டு உண்மைகளை லாவகமாக செருகிவிடுவார். சாருநிவேதிதா அப்படியல்ல. சொன்னால் முழுக்க உண்மையை சொல்வார். அல்லது நூறு சதவிகிதம் பொய்யை மட்டுமே சொல்வார். எனவேதான் சாருவை சுலபமாக மறுத்துவிட முடியும். ஜெயமோகனை அவ்வாறு மறுக்க அச்சப்படும் குழப்பம் தோன்றும்.

உதாரணத்துக்கு, ‘அண்ணாதுரை போன்றவர்கள் வீட்டில் கூட தெலுங்கு பேசினார்கள்’ என்று பாரதிதாசன் கட்டுரையில் பதிவு செய்திருக்கிறார் என்று ஒரு போடு போட்டுவிடுவார். எந்த கட்டுரையில் என்று அவருக்கு எதிர்கருத்து சொல்பவர்கள் தேடித்தேடி தாவூ தீர்ந்துவிடுவார்கள். அந்த கட்டுரை எதுவென்று அவர்கள் கண்டுபிடிப்பதற்கு முன்பாகவே வாழ்க்கையே முடிந்துவிடும். இதுபோன்ற அப்பட்டமான அவதூறுகளை முன்வைக்கும்போது தரவுகளை சரியாக வைக்கவேண்டும் என்பது ஒரு விமர்சகனுக்கான குறைந்தபட்ச அளவுகோல். ஜெயமோகனை ஒரு சமூகவிமர்சன அறிவுஜீவியாக, ‘நிஜமான’ அறிவுஜீவிகள் தமிழ்ச்சூழலில் ஏற்றுக் கொள்வதில்லை என்பதால், அவரிடம் இந்த அளவுகோல்களை எல்லாம் எதிர்ப்பார்க்க முடியாது.

யாரேனும் மிகச்சரியாக ஜெயமோகனை துணிச்சலோடு சரியான தரவுகளோடு மறுக்கும்போதும் விஷ்ணுபுரமே அலறும். “பார்த்தீங்களா அநியாயத்தை. ஆசான் ஓபனா பேசுன உண்மையை, மனசாட்சியே இல்லாம மறுக்கிறாங்க” என்கிற ஒரே ஒரு உண்மையைத் தூக்கிவைத்துக் கொண்டு கூத்தாடும்.

அப்படி ஆசானை ‘சுருக்’கென்று குத்தக்கூடிய எதிர்வினைகளை, ஆசானும் அசால்டாக, ‘பொருட்படுத்தத்தக்கதல்ல’ என்கிற ஒற்றை வார்த்தையில் கடந்துவிட்டுச் சென்றுவிடுவார். ஆசானின் லேட்டஸ்ட் பார்ப்பனச் சார்பு கட்டுரைக்கு ராஜன்குறையின் எதிர்வினையை அவர் கடந்துச் செல்லும் அழகே அழகு. ராஜன்குறை பொருட்படுத்தத்தக்க வாசகர் அல்ல என்றால் வேறு யார் ஆசானுக்கு பொருட்படுத்தத் தக்கவர்கள். அவருக்கு நித்தமும் ‘ஜால்ரா’ தட்டும் ரசிகக்குஞ்சு கூட்டமா?

பத்ரி சேஷாத்ரியின் ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ கட்டுரையிலிருந்து நான்கு முக்கியமான கருத்தாங்களை ஆசான் தொகுத்து மதிப்பீடு செய்கிறார். பத்ரி, இந்த அடிப்படையில்தான் கட்டுரை எழுதியிருக்கிறாரா என்று தெரியவில்லை. ஆனால், ஆசான் இப்படிதான் அதை பார்க்க விரும்புகிறார்.

ஒன்று : தமிழ் பிராமணர்கள் அதிகாரத்தில் இருந்து மெல்ல மெல்ல விரட்டி அடிக்கப்படுகிறார்கள்.

தமிழ் பார்ப்பனர்கள் நேரடி அரசியல் அதிகாரத்தில் அவ்வளவாக ஆர்வம் காட்டியதில்லை. சுதந்திரப் போராட்ட காலத்தில் படித்தவர்களாக பார்ப்பனர்கள்தான் பெரும்பான்மையாக இருந்தார்கள் என்பதால், அப்போராட்டங்களை அவர்கள்தான் இங்கே தலைமை தாங்கி நடத்த வேண்டிய நிலை இருந்தது. அவ்வகையில் உருவான தலைவர்கள் அதிகாரத்துக்கு வந்திருக்கிறார்கள்.

ஆனால், அரசர்கள் காலத்திலிருந்தே அதிகாரத்தில் இருக்கும் பொம்மையை ஆட்டுவிக்கும் வேலையை பின்னிருந்து செய்வதுதான் அவர்களது விருப்பமாக இருந்திருக்கிறது. எனவே, ஒவ்வொரு காலக்கட்டத்திலும் அதிகாரத்தை எது உறுதிசெய்கிறதோ, அந்த தளத்தை பார்ப்பனர்கள் கைப்பற்றுகிறார்கள். மறைமுகமாக ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.

இன்றைய சூழலில் நிதி தொடர்பான விஷயங்களே அதிகாரத்தை ஆட்சி செய்கிறது. எனவேதான் பார்ப்பனர்கள் எம்.பி.பி.எஸ்., படிப்பதைக் காட்டிலும், சி.ஏ., படிப்பதில் கூடுதல் ஆர்வம் காட்டுகிறார்கள். தகவல் தொழில்நுட்பத்துறை உலகளவில் நிதியின் விதியை தீர்மானிக்கும் துறையாக இருப்பதால் அந்த துறையை குறிவைத்து காய் நகர்த்துகிறார்கள்.

தேசியளவிலான இடஒதுக்கீட்டை ஒப்பிடுகையில் கூடுதலான இடப்பங்கீட்டினை பிற்படுத்தப்பட்டவர்களுக்கு தரும் வழக்கம் தமிழகத்தில் அரை நூற்றாண்டு காலமாக இருக்கிறது. எனவே முன்னெப்போதும் பார்ப்பனர்கள் சந்தித்திராத சவாலான சூழலை கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தளங்களில் இப்போது சந்திக்கிறார்கள். தமிழகம் நூற்றாண்டாக பேசிவரும் சமூகநீதி ஓரளவுக்கு வெற்றிகளை குவித்திருப்பதையே பத்ரியின் கட்டுரை எடுத்துக் காட்டுகிறது. ‘திராவிடத்தால் வீழ்ந்தோம்’ என்கிற குணாவின் பார்வைக்கு மிகச்சரியான நேர் எதிர்வினையை பத்ரி எழுதியிருக்கிறார்.

இரண்டு : தமிழ் பிராமணர்கள் சமூகத் தளத்தில் அவமதிக்கப்படுகிறார்கள்

பார்ப்பனர்கள் மட்டுமல்ல. சாதியை சுமப்பவர்கள், அதை பெருமையாக பேசுபவர்கள் அனைவருமே அவமதிக்கதான் படுவார்கள். பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதிகள் சமூகத்தளத்தில் சந்தித்திராத அவமானங்களையும், அடக்குமுறைகளையுமா பார்ப்பனர்கள் எதிர்கொண்டு வருகிறார்கள்?

தங்கள் சாதி அடையாளம், தங்களது ஆளுமையை தாண்டி துருத்திக்கொண்டு தெரியுமளவில் நடந்துக் கொள்பவர்கள் – பார்ப்பனர் பார்ப்பனரல்லாதோர் பாரபட்சமின்றி – இத்தகையை அவமானத்தை எதிர்கொண்டுதான் ஆகவேண்டும்.

இன்றைய சூழலில் சாதி என்பது சமூக அடையாளமாக ஒரு மனிதனுக்கு தெருவில் நடக்கும்போது எவ்விதமான பங்களிப்பையும் செய்ய இயலாத சூழலில் (ஆனால் அது அரசியல் அடையாளமாக மட்டும் பிற்படுத்தப்பட்டோருக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் உதவுகிறது. இது இயல்பானதுதான்… எஸ்.வி.சேகர் போன்றோர் பொருளாதார நிலையில் தாழ்ந்திருக்கும் பார்ப்பனர்களுக்கு இப்படியான அரசியல் அடையாளம் வேண்டும் என்கிற எண்ணம் கொண்டிருக்கிறார்கள், அவ்வகையில் வேண்டுமானால் நியாயமாக இருக்கலாம்) அதை முதுகில் சுமக்க நினைப்பது அறிவுடைமையான செயலே அல்ல.

அலுவலகச் சூழலிலோ அல்லது பல்வேறு தரப்பினர் பங்குகொள்ளும் தளங்களிலோ ‘நூல்’ மட்டுமே ஒரு குறிப்பிட்ட க்ரூப்பை இணைக்கிறது எனும்போது தனித்து விடப்படுபவர்கள் இத்தகைய எதிர்வினைகளை மேற்கொள்வது தவிர்க்க இயலாதது.

இதே சமூகத்தளத்தில் குழுவாக இணையும் பார்ப்பனர்கள் சமதர்மமா பேசிக்கொண்டிருக்கிறார்கள்? மற்ற சாதியினரை இழிவுபடுத்தும் நாசுக்கான மேனரிஸத்தை பார்ப்பனர்களிடம் உணரமுடியாதவர்களுக்கு நுண்ணுனர்வே இல்லையென்றுதான் பொருள்.

மூன்று : தமிழ் பிராமணர்கள் தங்கள் தனிப்பட்ட பண்பாட்டை தக்கவைத்துக்கொள்ள அனுமதிக்கப்படுவதில்லை.

வடிகட்டிய பொய். வருடாவருடம் நவராத்திரிக்கு கொலு வைப்பதை யார் தடுத்தார்கள்? ஹோமம், கீமம் என்று கோயிலுக்கு கோயில் இவர்கள் செய்யும் அட்டகாசத்தை எந்த போலிஸ் ஸ்டேஷனிலாவது தடை செய்திருக்கிறார்களா?

பார்ப்பனர்கள் அவர்களாகதான் பஞ்சகச்சத்தையும், மடிசாரையும் தங்கள் வசதி சார்ந்து துறந்தார்களே தவிர, டிராஃபிக் ராமசாமி மாதிரி யாரோ போய் இந்த எழவு பண்பாட்டையெல்லாம் தடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்துக்கு போய் தடையாணை பெறவில்லை.

‘குடுமி அறுக்கறான்’ ‘குடுமி அறுக்கறான்’ என்று இவர்களாக சும்மா கூப்பாடுதான் போட்டார்களே தவிர, அப்படியொரு சம்பவம் நடந்ததாக எங்கேயும் எஃப்.ஐ.ஆர். கூட போட்டதில்லை. இவர்களே குடுமியை சிரைத்து ரஜினி ஹேர்ஸ்டைலுக்கு மாறிவிட்டு, “அய்யய்யோ… எங்களை குடுமி வெக்க விடலை” என்று வேஷம் போடுவது யாரை ஏமாற்ற?

மூன்று : இந்நிலை காரணமாகதான் தமிழ்பிராமணர்கள் மெல்ல மெல்ல தமிழகத்தை விட்டு வெளியேறி வருகிறார்கள்.

வெளியேறி போய் துபாயில் ஒட்டகம் கழுவுகிறார்களா. கக்கூஸ் கழுவும் ஹவுஸ்கீப்பிங் வேலை செய்கிறார்களா. தொழிற்நிலையங்களில் இரும்படிக்கிறார்களா.

வற்றிய குளத்திலிருந்து வளமான குளத்துக்கு இடம்பெயரும் பறவைகளின் வேலையைதான் பார்ப்பனர்கள் பார்க்கிறார்கள். விவசாயத்தில் வருமானமில்லை என்றபோது, அந்தகாலத்தில் மன்னர்களிடம் தானமாக பெற்ற நிலங்களை நல்ல விலைக்கு விற்றார்கள். மயிலாப்பூருக்கும், நங்கநல்லூருக்கும் வந்து செட்டில் ஆனார்கள். ஆடிட்டராக, மருத்துவராக, என்ஜினியராக தங்கள் வாரிசுகளை தரமுயர்த்தினார்கள்.

வட ஆற்காடு, தென் ஆற்காடு மாவட்டங்களில் ஏக்கர் கணக்கில் நிலத்தை விலைக்கு விற்ற வன்னியனெல்லாம் இன்று சென்னைக்கு வந்து கல் உடைத்துக் கொண்டிருக்கிறான், கட்டிட வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான்.

பார்ப்பனர்களின் இடப்பெயர்வு என்பது அவர்களது வாழ்க்கையினை மேலும் செழிப்பு ஆக்கிக்கொள்ளதானே தவிர. மற்றவர்கள் அவர்களை விரட்டியடிக்கிறார்கள் என்பது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய். அக்ரஹாரங்கள் இன்று காலியாகிவிட்டது என்றால், வசதியான அப்பார்ட்மெண்டுகளுக்கு அவர்கள் இடம்பெயர்ந்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

ஓக்கே. ஆசானுக்கு வருவோம்.

‘முற்போக்கு பிராமணர்கள்’ படையாக கிளம்பி பார்ப்பனீயத்தை எதிர்க்கும் போக்கு ஆசானை நடுநடுங்க வைக்கிறது. ஏனெனில் இதற்கு ஓர் அண்மைக்கால வரலாறு இருக்கிறது. 1957ல் முதன்முதலாக சென்னை ரிப்பன் கோட்டையில் திமுக கொடியை ஏற்றியதற்கு காரணமாக இருந்தவர்கள் மயிலை, திருவல்லிக்கேணிவாழ் பார்ப்பனர்கள். தமிழகம் முழுக்கவே ஒரு தரப்பு பார்ப்பனர்களிடம் திராவிட இயக்கக் கருத்துகள் பெரும் அதிர்வை உண்டாக்கியது.

தங்களது சனாதன அடையாளங்களை அழித்துவிட்டு ‘தமிழன்’ என்கிற அடையாளத்தில் தங்களை இணைத்துக் கொண்ட முதல் தலைமுறையினர் இவர்கள். பெரியாரின் முற்போக்கு கருத்துகளை ஏற்றுக்கொண்டு தங்கள் வீட்டுப் பெண்களை வேலைக்குச் செல்ல அனுமதித்தவர்கள் இவர்கள். கலப்பு மணம் என்றால் தலை வாங்கும் குற்றமல்ல என்று தமிழகத்துக்கு பாடம் போதித்தவர்கள் இவர்கள்.

தேசிய அளவில் அம்பேத்கர், பிராந்திய அளவில் பெரியார் என்று பார்ப்பனீயத்தை அம்பலப்படுத்தி வந்த சூழலில் மனச்சாட்சி உள்ள பார்ப்பனர்கள் அவர்களை ஏற்றுக் கொண்டனர். திராவிட இயக்க ஆதரவாளர்களாகவும், மார்க்சிய சிந்தனை கொண்டவர்களாகவும் பார்ப்பனர்களில் ஒரு பிரிவினர் தங்களை சமூகநோக்கில் இணைத்துக் கொண்டனர்.

ஆசானுக்கு ‘நைட் மேர்’ ஆன திராவிடத்தையும், மார்க்சியத்தையும் அவர்கள் ஏற்றுக் கொண்டதாலேயே அவர்கள் ஆசானுக்கு பொருட்படுத்தத்தக்க இயலாதவர்களாக மாறிவிட்டார்கள். என்றைக்காக இருந்தாலும் ‘நீ பார்ப்பான் தானே?’ன்னு சொல்லி அவர்களை துரத்தியடிப்பார்கள். அப்போது வட்டத்தில் இணைத்துக் கொள்ளலாம் என்று ஆசைப்படுகிறார்.

ஆசான் இந்த விவகாரத்தில் ரொம்பவும் எதிர்ப்பார்ப்பது தலித்துகளின் குரலை. ஆசானின் பார்வையில் தலித்துகள் என்றால் காலச்சுவடின் செல்லப் பிள்ளைகள். ஸ்டாலின் ராஜாங்கம், ராஜ்கவுதமன், 2005க்கு முந்தைய ரவிக்குமார் போன்றவர்கள். இல்லையேல் ஆசானின் விஷ்ணுபுரத்தை ஏற்றுக்கொள்ளும் அவரது நண்பர்களான அலெக்ஸ் போன்றவர்கள்.

ஆசான், அப்படியே தன்னுடைய குரலுக்கு எத்தனை தலித்துகள் லைக் போட்டிருக்கிறார்கள், ஷேர் செய்திருக்கிறார்கள் என்பதையும் கணக்கெடுக்கலாம். ஹரன்பிரசன்னா, அராத்து போன்ற தலித்துகளின் ஆதரவுக்குரல் விண்ணையெட்டும் தலித் ஆதரவுக் கோஷத்தோடு ஒலித்திருப்பது அவருக்கு புரியும்.

‘திராவிடத்தை எப்பவுமே நாம மட்டும் திட்டிக்கிட்டிருந்தா மக்கள் நம்பமாட்டாங்க’ என்று பார்ப்பனீயம் ஸ்பெஷலாக சில தலித்களை அப்பாயிண்ட்மெண்ட் செய்திருக்கிறது. அம்மாதிரி ஆட்கள் பத்ரிக்கு ஏதேனும் எதிர்வினை செய்திருக்கிறார்களா என்று ஆசான், இணையத்தில் தேடியிருக்கிறார். பி.ஏ.கிருஷ்ணன், கல்யாணராமன் போன்ற இணைய தலித் போராளிகளிடமே கேட்டிருந்தால், ஸ்டாலின் ராஜாங்கம் போல எத்தனை தலித் அறிவுஜீவிகள் இருக்கிறார்கள் என்று பெரிய லிஸ்ட்டும், அவர்களுடைய திராவிடர்களை சந்தோஷமாக திட்டும், பெரியாரை அம்பலப்படுத்தும் எதிர்வினைகளுக்குமான லிங்கும் ஆசானுக்கு கிடைத்திருக்கும்.

தமிழக அரசியல் மைய நீரோட்டத்தில் விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம் என்று அரசியல் கட்சிகளின் வாயிலாக இணைந்திருக்கும் தலித்கள் இதைப் பற்றியெல்லாம் என்ன நினைக்கிறார்கள் என்பது நமக்கு தெரிந்து என்ன ஆகப்போகிறது? அவர்களெல்லாம் காலச்சுவடிலா கட்டுரை எழுதப்போகிறார்கள் அல்லது ஃபேஸ்புக்கில் எதிர்வினை ஆற்றப் போகிறார்களா. இல்லையேல் ஆசானே என்று விளித்து ஆசானுக்கு மெயில்தான் அனுப்பப் போகிறார்களா?

பார்ப்பனீயம் கருத்தியல்ரீதியாக அவமதித்ததும், அடக்குமுறைக்கு உள்ளாக்கியதும் பார்ப்பனரல்லாத பிற சாதிகளையும், பிற்படுத்தப்பட்டவர்களையும் மட்டுமல்ல. தாழ்த்தப்பட்டவர்களையும், பழங்குடியினரையும் சேர்த்துதான். குறிப்பாக தம் மீது சுமத்தப்பட்ட சாதிய இழிவு நீங்குவதற்காக மதமாற்ற முயற்சிகளில் ஈடுபடும் தாழ்த்தப்பட்டவர்களையும், பழங்குடியினரையும் பார்ப்பனீய ஒடுக்குமுறை இயந்திரம் எப்படி நடத்துகிறது என்பதை சேரிகளிலும், குப்பங்களிலும் வாழ்பவர்கள் அறிவார்கள். மதமாற்றம்தான் நாட்டின் பெரிய பிரச்சினை என்று கருதும் ஜெயமோகன்களுக்கு இந்த கோணமெல்லாம் எந்த காலத்திலும் கண்ணுக்கு படவே போவதில்லை.

ஆசான், சமூகப்பிரச்சினையை அணுகுவதெல்லாம் ‘நான்’ கண்ணாடியில்தான்.

‘நான் கேட்டதே இல்லை’ என்பார். சைதாப்பேட்டை மார்க்கெட்டில் மீன் விற்பவர், ஆசானுக்கு போன் செய்தா பேசுவார்?

‘தனிப்பேச்சுகளில் கூட’ என்பார். ஆசானுடைய விஷ்ணுபுர வாசகர் வட்டத்தில் எத்தனை தலித்கள் இருக்கிறார்கள். இவரிடம் வந்து தனிப்பட்ட முறையில் பேசி, பார்ப்பனீயத்தால் தாங்கள் எப்படியெல்லாம் ஒடுக்கப்பட்டிருக்கிறோம் என்று முறையிட.

கிறிஸ்டோபர் நோலன் எப்படி உலக சினிமா இயக்குனர் இல்லை என்பதை அஜிதன் வாயிலாக ஆசான் கண்டுபிடித்தாரோ, அதைப் போலவே சைதன்யா மூலமாகவே பெரியாரிய ஞானமரபு எப்படி பார்ப்பனர்களை பலியாடு ஆக்குகிறது என்பதையும் பார்வதிபுரத்தில் அமர்ந்தவாறே கண்டுபிடித்துவிட்டார்.

அப்புறம், திராவிட இயக்கத்தின் தோற்றமே வடுகர்களின் கசப்புதான் என்கிற ஆசானின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு முக்கியமானது. ‘நாம் தமிழர்’ இயக்கத்தின் கொள்கை விளக்கப் பாடத்தை எழுத ஆசானே இதன் வாயிலாக ஆகப்பெரும் தகுதி உடையவர் ஆகிறார்.

தமிழர் vs வடுகர் என்று நாம் பாட்டுக்கு மடை மாற்றிவிட்டு போனோமானால், பார்ப்பனரை இரு தரப்பும் கண்டுகொள்ள மாட்டார்கள் என்கிற இந்த பழைய டெக்னிக் இப்போதெல்லாம் ஒர்க்கவுட் ஆவதில்லை ஆசானே. தமிழ்நாட்டை வெறும் முன்னூறு ஆண்டுகள்தான் தமிழ் மன்னர்கள் ஆண்டார்கள் என்பதற்கு ஆசானிடம் என்ன தரவு இருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ போன்ற வடுகமன்னர்களை கூட தமிழர்கள் தமிழராக்கிக் கொண்டார்கள் என்பதற்கான தரவுகள் சினிமாவில் கூட வந்துவிட்டது. நாயக்கர்கள் உருவாக்கிய கோட்டை கொத்தளங்களை, கோயில்களை தமிழ் மன்னர்களுடைய சாதனைகளாகதான் தமிழர்கள் பார்க்கிறார்கள். ஆசான் ப்ளீஸ், ஜியோ பாலிடிக்ஸிலும் நீங்க ஸ்ட்ராங்க் ஆகணும். பிராந்திய மொழிரீதியான பிரிவினை 1956ல் உருவானது. அதற்கு முன்னாடி தென்னிந்தியாவே ‘திராவிடஸ்தான்’தான்.

பெரியாரும், அண்ணாவும், கலைஞரும் தமிழர் அல்ல என்று போகிறபோக்கில் சொல்லிக் கொண்டு போவது என்பது பார்ப்பனர்கள் திராவிடத்தை தோற்கடித்துவிடலாம் என்கிற நம்பிக்கையில் தூக்கிப்பிடித்த எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதாவையும் தமிழர் அல்ல என்கிற வாதத்துக்கு சப்பைக்கட்டுதான். கலைஞரை தமிழர் அல்ல என்றெல்லாம் டைப் செய்வதை, டைப் செய்யப்பட்ட கீபோர்டு கூட நம்பாது எனும்போது, அந்த அரதப்பழசான டெக்னிக்கு பதிலாக புதியதாக ஏதேனும் கண்டுபிடிக்கலாம்.

ஒரே ஒரு கட்டுரையில் ஜெயமோகனுக்குதான் எத்தனை வேஷம்?

தலித்குரலை அவர்தான் ஓங்கி ஒலிக்கிறார். அதே நேரம் பார்ப்பனர்கள் பாவம் என்கிற கரிசனமும் அவருக்குதான் இருக்கிறது. வடுகர் ஆதிக்கத்தை எதிர்க்கும் தனித்தமிழ் தேசியவாதியாக திராவிடத்தின் இருப்பை கேள்விக்கு உள்ளாக்குகிறார். இப்படியாக திரிசூலம் சிவாஜி மாதிரி த்ரிபிள் ஆக்டிங்கில் ஆசான் அசத்த, அரங்கசாமி மட்டும்தான் விசில் அடிக்கிறார்.

ஜெயமோகனின் வாதத்தில் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய அம்சம் இடைநிலை சாதிகள், தலித்கள் மீது செலுத்தக்கூடிய அடக்குமுறை குறித்தது. ஆனால் அதை பேசி சண்டை போட்டுக் கொள்ள வேண்டியது தலித்களும், அவர்கள் மீது அடக்குமுறை செய்யக்கூடிய இடைநிலை சாதிகளை சேர்ந்தவர்களும். இரு தரப்பையும் ஏகபோகமாக கருத்தியல்ரீதியாக அடக்குமுறை செய்யக்கூடிய பார்ப்பனீயமோ அல்லது அந்த பார்ப்பனீயத்துக்கு ஆபத்து வரும்போதெல்லாம் சப்பைக்கட்டு கட்டக்கூடிய ஜெயமோகனோ அல்ல.

பார்ப்பனர்கள் இடையிடையே தலித் ஆதரவு கொடி தூக்கிக் காட்டுவது என்பது, தங்களை சமூக அந்தஸ்துரீதியாக நெருங்கிக் கொண்டிருக்கும் பிற சாதியினரை மட்டுப்படுத்ததானே தவிர, தலித்கள் மீதான அக்கறையால் அல்ல. இம்மாதிரி ஆதரவுக்குரல் எழுப்பும் பார்ப்பனர்களை உற்றுநோக்கினால், அவர்களேதான் பத்ரி ஒலித்திருக்கும் ‘பார்ப்பனர்களை ஒடுக்குகிறார்கள்’ என்கிற புலம்பல்குரலுக்கும் சொந்தக்காரர்களாக இருப்பார்கள்.

‘பார்ப்பனர்களும் ஒடுக்கப்படுகிறார்கள், சாதிய இழிவுக்கு உள்ளாகிறார்கள்’ என்று பத்ரி சொல்வதையோ, அதை ஜெயமோகன் endorse செய்வதையோ ஒப்புக்கொள்ள முடியாது. சேரியில் வசிக்கும் ஒரு தலித் சொல்லட்டும். அப்போது திராவிட இயக்கம் தேவையா இல்லையா என்று பேச ஆரம்பிப்போம்.

பிற்படுத்தப்பட்டவர்களை மட்டுமல்ல. தாழ்த்தப்பட்டவர்களையும் பழங்குடியினரையும் கூட இங்கே திராவிடக் கவசம்தான் காக்கிறது என்றுதான் நம்புகிறோம். ஏனெனில் திராவிடக் கருத்தாக்கம் என்பது பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் இருவருக்கும் இணைந்தேதான் உருவானது. இந்தியாவின் எந்த மாநிலத்தையும் காட்டி தமிழகத்தில் SC/ST மக்களின் வளர்ச்சி என்பது விரைவாக இருப்பதற்கு அதுவே காரணம்.

எனவேதான் ஒற்றுமையை சீர்குலைக்கும் விதமாக பார்ப்பனர் vs பார்ப்பனரல்லாதோர் என்பதை பார்ப்பனர் vs பார்ப்பனரல்லாதோர் vs தலித் என்று முக்கோணமாக மாற்றம் செய்யும் முயற்சிகள் நடக்கிறது. பார்ப்பனரல்லாதோரில் தலித்களும், சிறுபான்மையினரும்கூட அடக்கம் என்பதுதான் திராவிடம். அந்த ‘திராவிடம்’ என்கிற சொல்லை அகற்றிவிட்டால், அவாளுக்கு எல்லாமே ஈஸி. ஏற்கனவே பார்ப்பன + தலித் கூட்டணியை சும்மாவாச்சுக்கும் உருவாக்கி, உ.பி.யில் தலித்களை முற்றிலுமாக முடக்கியாயிற்று. அங்கே இனி தலித்கள், பிற்படுத்தப்பட்டோருடன் இணைந்து பணியாற்ற முடியாமல் செய்தாயிற்று. அதே நிலையை தமிழகத்தில் ஏற்படுத்தலாம் என்பதுதான் அவர்களது திட்டம். பழ.நெடுமாறன், சீமான் போன்றவர்களை இந்த திட்டத்தில் இணைத்துக் கொண்டால் இன்னும் கொஞ்சம் சப்தமாக ‘திராவிடத்தால் வீழ்ந்தோம்’ கோஷத்தை ஒலிக்கலாம்.

ஜெயமோகனின் கட்டுரையில் இருப்பது அவரது ‘திராவிட அலர்ஜி’ மட்டுமேதானே தவிர, அது தலித் ஆதரவுக்குரலோ அல்லது தமிழக சமூக பண்பாட்டு ஆராய்ச்சியோ அல்ல.

9 டிசம்பர், 2014

சகுனியின் தாயம்

இதில் ரகசியம் எதுவுமில்லை. ‘கர்ணனின் கவசம்’ நூலின் என்னுரையிலேயே கே.என்.சிவராமன் குறிப்பிட்டு விட்டார். நரேனும், நானும் என்னவென்பதை. அதேதான். ‘சகுனியின் தாயம்’ தொடரிலும் எங்களுக்கு அதே வேஷம்தான்.

2013ஆம் ஆண்டின் இறுதிநாளில் முதல் அத்தியாயத்தை வாசித்தது ஏதோ நேற்று நடந்த போலிருக்கிறது. கிட்டத்தட்ட ஓராண்டுகள் நிறைவடையப் போகிறது. இவ்வாண்டின் தொடக்கத்தில் பொங்கல் இதழில் இருந்து குங்குமத்தில் இத்தொடர் வரத் தொடங்கியது என்று நினைவு. 49வது அத்தியாயத்தை சற்று முன்னர்தான் வாசித்தேன் (குங்குமம் வாசகர்கள் அடுத்த திங்கள் அன்று வாசிப்பார்கள்). 50வது அத்தியாயத்தோடு கதை முடிகிறது. ஒரு வருடமாகவா இந்த தாயத்தை உருட்டிக் கொண்டே இருந்திருக்கிறோம் என்று ஆச்சரியம் மேலிடுகிறது.

துரியோதன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, சகாதேவன் குறித்துக் கொடுத்த முகூர்த்தத்தில் சகுனியின் தாயம் உருள்கிறது. தொடரின் ஆரம்பம் இதுதான்.

ஸ்காட் வில்லியம்ஸ் என்கிற பன்னாட்டு தரகு முதலாளிக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை?

ஆலிஸின் மாய உலகம் போன்ற இடத்துக்குள் மகேஷ் ஏன் பிரவேசித்தான்?

யவனராணியும், இளமாறனும் புகார் நகருக்குள் ஏன் நுழைந்தார்கள்?

இப்படியாக மூன்று தளங்களில் தனித்தனியாக ‘சகுனியின் தாயம்’ பயணிக்கிறது. மூன்றுமே ஒன்றுக்கொன்று எவ்வகையிலும் தொடர்பில்லாதவை. ஆனால் மூன்றுக்கும் பொதுவான ஒரு புள்ளி உண்டு.
இந்நாவலின் தீம் முக்கியமானது. சமகாலத்து நடப்புகள் குறித்த கூர்மையான விமர்சனம் கொண்டது. அதாவது ஆடும், ஓநாயும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். தேவை ஏற்படும்போது ஆடு தன்னை ஓநாயாகவும், ஓநாய் தன்னை ஆடாகவும் மாற்றிக் கொள்கிறது. யார் இப்போது ஆடாக இருக்கிறோம், யார் ஓநாயாக இருக்கிறோம் என்று நம்மை நாமே ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ள வேண்டியதுதான்.

ஸ்காட் வில்லியம்ஸ் கதை சமகாலத்தில் நடப்பது. ஆரம்பத்தில் ‘ரெட் மார்க்கெட்’ கதை என்பதைப் போன்று பாவ்லா காட்டிவிட்டு நக்சல்பாரிகள், தர்மபுரி கலவரம் என்று தமிழகத்தின் வெகுஜனத் தளத்தில் அவ்வளவாக அறியப்படாத களத்துக்குள் புகுந்து பயணிக்கிறது. ஓர் அத்தியாயம் முழுக்கவே தமிழக நக்ஸல்பாரிகளின் வரலாற்றை எளிய அறிமுகமாக கொடுக்கிறது. போலவே தர்மபுரி கலவரத்தை அப்படியே இன்னொரு அத்தியாயம் படம் பிடித்துக் காட்டுகிறது. ஒரு பிரபலமான போலிஸ் அதிகாரியையும், மறைந்துவிட்ட சந்தன கடத்தல்காரர் ஒருவரையும் நினைவுபடுத்துகிற பாத்திரங்கள் இப்பகுதிக்கு சுவாரஸ்யம் சேர்க்கின்றன. ஒரு நக்ஸல்பாரி, வெகுஜன இதழில் தொடர் எழுதினால் அப்படியிருக்குமோ அப்படியிருக்கிறது இந்த பகுதி.

மகேஷின் கதை முழுக்க ஃபேண்டஸி. வாண்டுமாமா நடையில் எழுதப்பட்ட இந்த கதையில் ஹாரிபாட்டர், சூப்பர்மேன், ஸ்பைடர்மேன் என்று அத்துணை சூப்பர்ஹீரோக்களும் உள்ளே வருகிறார்கள். சிவராமனின் ஏரியாவான மேஜிக்கல் ரியலிஸம், போஸ்ட் மார்டனிஸம் எல்லாம் பயன்படுத்தப்பட்டிருக்கும் பகுதி இதுதான்.

மூன்றாவது சாண்டில்யனின் ஏரியா. அவருக்கான ட்ரிப்யூட்டாக ‘யவனராணியே’ வருகிறார். இளமாறனின் தினவெடுக்கும் தோள்கள், யவனராணியின் கவர்ச்சியான மார்புகள் என்று லாகிரி வஸ்துகள் ஏராளமாக தூவப்பட்டிருந்தாலும் பண்டைய தமிழகத்தின் அரசியல் சூழ்ச்சிகள் குறித்த சித்தரிப்புதான் இப்பகுதியை ஆக்கிரமிக்கிறது. சேர சோழ பாண்டிய மன்னர்களுக்கு இடையேயான முரண்கள், சீன குறுக்கீடு, யவனர்கள் ஆதிக்கம் என்று கலர்ஃபுல்லான போர்ஷன் இது.
முந்தைய ‘கர்ணனின் கவசம்’ நூலில், சமகால இலக்கிய பாணி டெக்னிக்குகளை பயன்படுத்தினார் சிவராமன். ‘சகுனியின் தாயம்’ வடிவரீதியிலான பரிசோதனை முயற்சி. மூன்று வெவ்வேறு மொழியை பயன்படுத்தி இருக்கிறார். கதையின் அந்தந்த பகுதிக்கு எந்தெந்த மொழி தேவையோ, கதையே அதை கோரி பெற்றுக் கொண்டது. இந்த வித்தியாசமான முயற்சியை குங்குமம் வாசகர்கள் ஏற்றுக் கொண்டார்கள். முழு நாவலாக வாசிக்கும்போது சுவாரஸ்யம் இன்னும் சில மடங்கு கூடுமே தவிர, குறையாது என்று உறுதியாக தோன்றுகிறது. தொடருக்கான ஹைலைட்டாக ராஜாவின் ஓவியங்கள் விளங்கின. அவை நூலாக்கம் பெறும்போதும் இணைக்கப்பட்டால் நல்லது.

நாவலின் முடிவு?

உலகம் அழியும் வரை சகுனியின் தாயம் உருட்டப்பட்டுக் கொண்டேதான் இருக்கும். எனவே இந்த கதைக்கும் ‘முற்றும்’ இல்லை.