“நீ யாரு?”
“யுவகிருஷ்ணா”
“அது உன் பேரு. நீ யாரு?”
“ஈ.எஸ்.எல்.சி., எஸ்.எஸ்.எல்.சி., ஹையர் செகண்டரி டூ அட்டெம்ப்ட்ஸ்”
“அதெல்லாம் உன் எஜுகேஷனல் குவாலிஃபிகேஷன். நீ யாரு?”
“சீனியர் சப் எடிட்டர் இன் எ லீடிங் டேமில் டெய்லி”
“அது உன் புரொஃபஷன். நீ யாரு?”
இப்படியே ‘நீ யாரு?’ என்று யாராவது தாலியறுத்துக் கொண்டிருந்தால், என்ன ஆகும்?
சித்தார்த்தன் இந்த கேள்விக்கு விடை தேடி போய்தான் புத்தர் ஆனார்.
நாம் விடை தேடி போவதாக இருந்தால் ஒன்று மெண்டல் ஆவோம், அல்லது புத்தன் ஆவோம். இரண்டுக்கும் இடையே மெல்லிய கோடுதான்.
மாஸ் மசாலா தாயகமான டோலிவுட்டில் இருந்து ‘எவடே சுப்பிரமணியம்’ மாதிரி தத்துவார்த்த விசாரணை கோரும் திரைப்படத்தை –அதுவும் பக்கா கமர்சியல் டெம்ப்ளேட்டில்- சத்தியமாக எதிர்ப்பார்க்கவில்லை. அதனால்தான் அங்கே இப்படத்தை நியூவேவ் சினிமா என்று விமர்சகர்கள் கொண்டாடுகிறார்கள். தெலுங்கில் சேகர் கம்முலாவுக்கு பாத்தியதைபட்ட இந்த ஏரியாவில் அறிமுக இயக்குனரான நாக் அஸ்வின் பிரமாதப்படுத்தி இருக்கிறார். கேரளாவில் ‘காட்ஸ் ஓன் கண்ட்ரி’, ‘பெங்களூர் டேஸ்’ போன்ற படங்கள் உருவாக்கிய ஆரோக்கியப் போக்கினை, தெலுங்கில் ‘எவ்வடே சுப்பிரமணியம்’ ஏற்படுத்தும் என்று நம்புகிறார்கள்.
சிறு வயதிலேயே படிப்புல் சூட்டிகை சுப்பு. டபுள் பிரமோஷன்களாக வாங்கி சீக்கிரமே பத்தாவது படிக்க வந்துவிடுகிறான். அங்கு அவனுக்கு அறிமுகமாகிறான் ரிஷி. தடாலடியாக எதையாவது செய்வது ரிஷியின் வழக்கம். டீச்சர் பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போதே அமீர்கான் ஸ்டைலில் சக மாணவியை பிரபோஸ் செய்வான். அச்சம், கோபம் மாதிரி உணர்வுகளுக்கு அவன் அகராதியில் அர்த்தமே இல்லை. யார் எதை கேட்டாலும் யோசிக்காமல் கொடுப்பான். எதிர்காலம் பற்றியோ, தன்னைச் சுற்றி நடப்பதைப் பற்றியோ எவ்வித பிரக்ஞையும் இல்லாதவன்.
சுப்புவுக்கு பிறந்தநாள். மிகச்சரியாக அதிகாலை 12.01 மணிக்கு ரிஷி வருகிறான். பிறந்தநாள் ட்ரீட் என்றுகூறி ஜாவா பைக்கில் எங்கோ அதிவேகமாக அழைத்துச் செல்கிறான். அது ஒரு சுடுகாடு. அங்கிருக்கும் அகோரி சாமியார், உங்களை அறிய நீங்கள் தூத் காசிக்கு வருவீர்கள் என்று குத்துமதிப்பாக ஏதோ ஜோஸியம் மாதிரி சொல்கிறார்.
வீட்டுக்கு திரும்பும் வழியில் பைக் ஆக்ஸிடெண்ட். ரிஷியோடு சேர்ந்து சுப்புவும் கெட்டுப் போகிறான் என்று புகார். ரிஷியை வேறு ஊருக்கு அழைத்துச் செல்கிறார்கள் அவனது பெற்றோர். அவனை மறந்துவிட்டு இவன் படிப்பில் கவனம் செலுத்துகிறான்.
ஐஐஎம்மில் பட்டம். பெரிய நிறுவனத்தில் லட்சங்கள் சம்பளம் வாங்கும் வேலை. ஒரு முக்கியமான அசைன்மெண்டை முடித்தால் அவன் வேலை பார்க்கும் நிறுவனம்தான் நெம்பர் ஒன். யாராலும் முடியாத வேலையை சுப்பு முடிக்கப் போகிறான். கிட்டத்தட்ட வேலை முடிந்த மாதிரிதான். முதலாளி, பரிசாக தன் மகளையும் நிறுவனத்தையும் சுப்புவுக்கு அளிக்க இருக்கிறார்.
பூஜைவேளையில் கரடி மாதிரி இப்போது திடீரென்று ரிஷி வருகிறான். நாம் இருவரும் தூத்காசிக்கு போகவேண்டும், மறந்துவிட்டாயா என்று கேட்கிறான். அதையெல்லாம் இன்னுமாடா நினைவில் வைத்திருக்கிறாய் என்று தலையில் அடித்துக் கொள்கிறான் சுப்பு. தன்னுடைய லட்சியத்தை எட்ட, ஒரு பெண்ணிடம் இருக்கும் பங்குகள் சுப்புவின் நிறுவனத்துக்கு தேவை. அதை அடையும் முயற்சியின் போது இருவருக்கும் பொதுவான நட்பாக ஆனந்தி அறிமுகமாகிறாள்.
ஒரு விபத்தில் ரிஷி திடீரென காலமாகிறான். தூத்காசி போவதுதான் அவனுடைய ஒரே ஆசை என்பதால் அவனுடைய அஸ்தியையாவது அங்கே கரைக்க வேண்டும். சுப்புவோடுதான் அங்கே போக ரிஷி ஆசைப்பட்டான். எனவே சுப்புவும் கூட வரவேண்டும் என்று ஆனந்தி வற்புறுத்துகிறாள். அவ்வாறு வருவதாக இருந்தால்தான் தன்னிடம் இருக்கும் பங்குகளை கொடுக்க முடியும் என்று டீலிங் பேசுகிறாள். அவளுடைய பங்குகள் கிடைத்தால்தான் நிறுவனம் நெம்பர் ஒன் ஆகும், நிறுவனத் தலைவருக்கு மருமகன் ஆக முடியும் என்பதால் ஆனந்தியோடு தூத்காசிக்கு கிளம்புகிறான் சுப்பு.
சுப்புவாக நானி. ‘நான் ஈ’ படத்தின் அசட்டு நானியல்ல. இந்தப் படத்தில் வருவது ஐஐஎம் அதுப்பு நானி. ஆனந்தியாக வரும் மாளவிகா நாயர் ஒரு சாடையில் சோனாக்ஷி மாதிரி இருக்கிறார். “ஐ லவ் யூன்னா லவ் யூதான். லைக் யூ இல்லை” எனும்போது அவர் முகத்தில் வெளிப்படும் காதலை என்னவென்று சொல்ல.
ரிஷியாக நடித்திருக்கும் விஜய் தேவேரெகொண்டா மிகக்குறைந்த காட்சிகள் வந்தாலும் நிறைவான நடிப்பு. “நான் என்ன செய்யமுடியும், நாம என்ன செய்யமுடியும்னு ஒவ்வொருத்தரா இன்னொருத்தரை நம்பிக்கிட்டிருந்தா யாருதாண்டா செய்யுறது?” என்று ஆவேசமும், அழுகையுமாக கொட்டும் இடத்தில் பின்னுகிறார். ஒரு குழந்தையின் மரணத்தில் அவர் தன்னை அறியும் தருணம் அட்டகாசம்.
இதுவரை சினிமாக்காரர்களின் கால்படாத பகுதிகளில் நடத்தப்பட்டிருக்கும் படப்பிடிப்பு அநியாய உழைப்பு. எவரெஸ்ட் கேம்பில் இருக்கும் நேபாளி இளைஞன் நானியைப் பார்த்து சொல்கிறான். “உனக்கு முன்பாகவே ஒரு சவுத் இண்டியன் இங்கே வந்து போட்டோ எடுத்துக்கொண்டு சென்றிருக்கிறார்”. யாரென்று நானி போட்டோ வாங்கிப் பார்க்கிறார். ‘ரஜினிகாந்த்’.
ஈரானும், பிரான்ஸும் இருக்கும் அதே உலகத்துக்குள்தான் சீமாந்திராவும், தெலுங்கானாவும் இருக்கிறது என்பதால் ‘எவடே சுப்பிரமணியம்’ படத்தையும் தாராளமாக உலகப்படம் எனலாம். Must watch movie!